Category: கட்டுரைகள்

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்) காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம்.

 

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்)

காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும்

மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம்.

பகுதி 01ல் ஆங்கில மருத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இக் கட்டுரையில் ஆயள்வேத மருத்துவம் பற்றியும், ஆயுள்வேத மருத்துவர்கள் பற்றியும் கூறலாமென நினைக்கின்றேன். 1970க்கு முன்னர் காரைநகரில் ஆயுள்வேத மருத்துவமே முன்னிலை பெற்றிருந்தது எனக் கூறினால் மிகையாகாது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பரம்பரை வைத்தியர்களும் அவர்களிடம் இம் மருத்துவத்தைப் பற்றி நன்கு கற்று சேவை செய்தவர்களும், பிற்காலத்தில் சேவையாற்றியவர்களுமேயாகும். பிற்காலத்தில் சேவையாற்றியவர்கள் தம் மருத்துவ பரம்பரையினரை வளர்த்தெடுக்காததன் விளைவே இன்று மருத்துவ பரம்பரையினர் காரைநகரில் அருகி வருவதற்கு காரணமாயிற்று. இருப்பினும் 1970க்கு முன்னர் காலத்திற்குக் காலம் பல மருத்துவர்கள் தோன்றிச் சிறந்த சேவையாற்றி மறைந்துள்ளனர். அவர்களைப் பற்றியும் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இக் கட்டுரை வரையப்படுகின்றது. அவர்கள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றேன்.

01. கே. வி.ஸ்வநாதன் – ஆயுள்வேத மருத்துவர்
இவர் கிறீன் மருத்துக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். யாழ்குடாநாட்டில் பிரசித்தி பெற்ற மருத்துவராக இருந்த காரணத்தினால் பலரும் இவரது மருத்துவ சேவையைப் பெற்றதாக அறியப்படுகின்றது. வசதி குறைந்தவர்களுக்கு இவர் இலவச மருத்துவ சேவையை வழங்கினார். காரைநகர் தபாற்கந்தோருக்கு அருகாமையில் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார். இக் காலப்பகுதியில் பிறப்பு, இறப்புப் பதிவாளராகவும் பணிபுரிந்தார். மேலும் இவர் 1905 ம் ஆண்டு கல்லினால் ஆன முதலாவது கட்டிடத்தை காரைநகர் திருஞானசம்பந்தர் ஆங்கில வித்தியாலயத்துக்கு (தற்போதைய இந்துக்கல்லூரி) கட்டிக் கொடுத்தார் என முன்னாள் அதிபரும் ஆசிரியருமான ளு.மு. சதாசிவம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய விபரங்களை வைத்துப் பார்க்கும் போது இவர் 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆயள்வேத மருத்துவ சேவையை ஆரம்பி;த்துவிட்டார் என எண்ணத் தோன்றுகின்றது.

02. சுப்பிரமணியம் இராசசேகரம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் வலந்தலை புதுவீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வராக 07-08-1928 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பித்து அங்கேயே 1943ம் ஆண்டு தமிழில் சிரேஷ்டபாடசாலைத் தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைந்து பின்னர் காரைநகர் இந்துக்கல்லூரில் சேர்ந்து ஆங்கிலத்தில் கற்று சிரேஷ்ட தராதரப்பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்தார். அதன்பின்னர் தந்தையின் பரம்பரைத் தொழிலான ஆயுள்வேதத்தை அவரிடமிருந்து கசடறக்கற்று தேர்ந்தார். அத்துடன் நின்றுவிடாது தந்தையின் வைத்தியத்துறைக்கு உதவியும் புரிந்தார். இத் தொழிலில் நாட்டம் கொண்ட இவர் வேறு ஏடுகளையும், நூல்களையும் கற்று வைத்திய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
இந் நிலையில் 1956ம் ஆண்டு தனது மைத்துனியான சிவபாக்கியம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர் எப்பொழுதும் மற்றவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் தன்மை கொண்டவர். தனது அரவணைப்பு முறையினாலும்; சிறந்த வைத்தியமுறையினாலும் வாடிக்கையாளர் பலரைத் தன்னகத்தே கவர்ந்து கொண்டார். இதன் காரணமாகத் தனது மருத்துவத் தொழிலைக் காலையில் தனது இல்லத்திலும், மாலையில் மேற்கு வீதியிலுள்ள ஆலடியிலும் நடாத்தித் தனது வைத்திய சேவையை விஸ்தரித்துக் கொண்டது மட்டுமல்லாது அவசர நோயாளர்களை இரவு பகல் எனப் பாராமல் அவர்களின் இல்லங்களுக்கு சென்றும் பார்வையிட்டுக் குணப்படுத்தினார். மேலும் பிறப்பு, இறப்பு பதிவுச்சேவையையும் செய்த இவர் பொதுமக்கள் நன்மை கருதி முற்றிலும் இலவசமாகவே செய்து கொடுத்தார். இதனால் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் இவரின் உதவி நாடி வந்தனர். 1966ம் ஆண்டு இவர் சமாதான நீதவான் பதவி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சித்தமருத்துவ சங்க செயற்குழு உறுப்பினாராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், இவர் பல்லாண்டு காலம் காரைநகர் கிராமசபை அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அச் சங்கத்தின் உபதலைவராகப் பலமுறை தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் நின்றுவி.டாது சைவமகாசபை, ஈழத்துச் சிதம்பரம் அன்னதான சபை போன்ற பல சபைகளிலும் அங்கத்தவராக இருந்துள்ளார்.
(நன்றி கலங்கரை சிறப்பு மலர்)

03. கந்தப்பர் ஞானப்பிரகாசம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் 1912ம் ஆண்டு சின்னத்தம்பி கந்தப்பருக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய வதிவிடம் பெரியமணல் பகுதியாகும். இவரை காரைநகர் மக்கள் பரியாரி கந்தப்பொடி என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் இவர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்குச் சென்று 2 வருடங்கள் கல்விபயின்று வந்து ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். தனது தந்தை ஆயுள்வேத வைத்தியத்தில் ஈடுபட்டதன் காரணத்தால் தானும் அத்தொழிலையே செய்ய விரும்பி இத்தொழிலில் நன்கு பண்டித்தியம் பெற்றவரும், காரைநகர் களபூமியைச் சேர்ந்தவருமான ஆயுள்வேத வைத்தியர் சின்னப்பர் (செட்டி சின்னப்பர்) அவர்களி;டம் சென்று ஆயுள்வேத நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். 1932ம் ஆண்டிலிருந்து மேற்படி தொழிலை ஆரம்பித்து நடாத்தத் தொடங்கினார். முதலில் சிறிய கொட்டிலில் இத் தொழிலை நடாத்தி வந்தார் என அறியப்படுகின்றது. சிறுபிள்ளை வைத்தியத்தில் கைதேர்ந்தவர் என்பதுடன் வாதம், சலரோகம் என்பவற்றைக் குணமாக்கும் வல்லமையையும் கொண்டிருந்தார் எனவும் அறிய வந்துள்ளது. அவசர நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக இரவு, பகல் என்று பாராமல் பல குறிச்சிகளுக்கும் சென்று சேவையாற்றினார்.

04. கனகரத்தினம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் யாழ்ப்பாணம் கைக்குளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காரைநகர் ஆயிலிப் பகுதியில் தங்கியிருந்து வைத்திய சேவையில் ஈடுபட்டார். இவரும் அனுபவம் மிக்க வைத்தியராக இருந்த காரணத்தினால் வேதர்அடைப்பு முதல் பலகாடு வரையில் வசித்த மக்கள் இவரின் மருத்துவசேவையைப் பெற்றனர்.

05. இராமுப்பிள்ளை வேலுப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். இவருடைய தகப்பனார் இராமுப்பிள்ளையும் ஆயுள்வேத மருத்துவராக இருந்த காரணத்தினால் இவ் வைத்திய நுணுக்கங்களை ஐயந்திரிபுறக் கற்றுக்கொள்ள வசதியாக இருந்தது. களபூமி பொன்னாவளைப் பகுதியில் இவ்வைத்தியத் துறை இருந்த காரணத்தினால் களபூமி மக்கள் இவரி;டம் சென்று தமக்கான சேவையைப் பெற்றனர் செங்கமாரி வைத்தியத்தைக் குணப்படுத்துவதில் இவர் வல்லவராகக் காணப்பட்டார் எனக் கேள்விப்பட்டேன்.

06. பரியாரி செல்லர் (ஆயுள்வேத வைத்தியர்)
இவருடைய இயற்பெயர் செல்லர் என்பதாகும். இதனால் மக்கள் இவரைப் பரியாரி செல்லர் எனச் செல்லமாக அழைத்தனர். இவர் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவாளராகவும் கடமையாற்றினார். இருந்தாலும் இவரைப் பரியாரி என்றே எம்மக்கள் அழைத்தனர். இவரால் கட்டுகளுக்குப் போடப்படும் சேர்வை தனித்துவமானது. சிரங்கிற்குப் பூசப்படும் கெந்தக எண்ணெய் இவரின் பாரம்பரியச் சொத்து எனக்; கூறப்படுகின்றது. இவ் விபரங்கள் யாவும் காரைமான்மியம் என்னும் நூலில் வெளிவந்துள்ளது.
(நன்றி காரைமான்மியம்)

07. தியானேஸ்வரன் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர். இளவயதினராகக் காணப்பட்டாலும் ஆயுள்;வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவர். வாதநோயைக் குணப்படுத்துபவர். இவர் தோப்புக்காடு உட்பட அண்டியுள்ள பிரதேச மக்களுக்கு வைத்திய சேவையை வழங்கியவர்.

08. சண்முகம் (முறிவு நெரிவு வைத்தியர்)
இவர் காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். காரைநகரில் 50 வருடங்களுக்கு முன்னர் இவரைத் தெரியாதவர்கள் மிகக்குறைவு என்றே கூற வேண்டும். நீண்ட தாடி வைத்திருந்தார். எல்லோருடனும் சுமூகமாகப் பழகும் தன்மை கொண்டவர.; கள்ளங்கபடமற்றவர். இவர் முறிவு, நெரிவு வைத்தியத்தில் கைதேர்ந்வராகக் காணப்பட்டார். ஆரம்பகாலங்களில் இவர் வீடுகளுக்குச் சென்றே முறிவு, நெரிவு வைத்தியத்தைச் செய்து வந்தார்.
காலம் செல்லச்செல்ல இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தமையினால் தனக்கென ஒர் நிரந்தர இடம்தேடி இறுதியில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கட்டிடத்தொகுதயில் ஒருபகுதியைப் பெற்று அங்கிருந்து தனது வைத்திய சேவையைத் தொடர்ந்தார். மூளாய், சுழிபுரம், சித்தங்கேணி, வட்டுக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்தும் காரைநகர், பொன்னாலை போன்ற இடங்களிலிருந்தும் பெரும்பாலோனோர் வந்து இவரிடம் சேவையைப் பெற்றனர்.

09. பேரம்பலம் (மாடுகளுக்கான வைத்தியர்)
இவர் காரைநகர் பாலாவோடையைச் சேர்ந்தவர். இவரை காரைநகர் மக்கள் மாட்டுப்பரிகாரியார் என்றே அழைப்பர். நோயுற்ற மாடுகளின் நோயை இனங்கண்டு அதற்கேற்றவாறு வைத்தியம் செய்யும் வல்லமை படைத்தவர். இதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

10. நாகலிங்கம் கந்தையா (பரிகாரி குஞ்சர); – (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களவிலிப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இயற்பெயரை விட பரிகாரி குஞ்சர் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டில் இருந்தே வைத்தியத்தொழிலை செய்து வந்தார். மருத்துக் குளிசைகளையும், சூரணங்களையும் நோயின் தன்மையறிந்து நோயாளர்களுக்கு கொடுத்து வந்தார். அத்துடன் நின்றுவி;டாது குழந்தைகளுக்கான மாதாளம்பழச்சாற்று எண்ணெய், கிரந்தி எண்ணெய் என்பனவற்றையும் வழங்கி வந்தார். இவருடைய சமூகத்தொண்டுகள் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். உதாரணமாக திருவிழாக்காலங்களில் செடில் காவடியாடுபவரை தனது திறமை மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், பொது இடங்களில் அமைதியை நிலைநாட்டல் போன்ற விடயங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.

11. சோமநாதர் முருகேசம்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் செம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர். ஆயுள்வேத வைத்தியம் பற்றிக் கற்பதற்காக இ;ந்தியா சென்று அங்குள்ள மற்றாஸ் பகுதியில் 3 வருடங்கள் கற்றுத்தேர்ந்தார். பின்னர் இலங்கை திரும்பி வந்து 1932 ல் குருநாகல் நகரப்பகுதியில் ஆரம்பித்து அங்;கு 25 வருடங்களுக்கும் மேலாக தனது சேவையைத் தொடர்ந்தார். பின்னர்1960ம் ஆண்டு அச்சேவையை முடிவுக்கு கொண்டுவந்து பரந்தன் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டார். அத்துடன் ஒறியன்ற் இன்சூரன்ஸ் முகவராகவும் செயற்பட்டார் என அறியப்படுகின்றது.

12. பரிகாரி சின்னப்பு (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் திக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். 1890-1944 காலப்பகுதியில் காரைநகர், வேலணை, ஊர்காவற்றுறை தீவுப்பகுதியில் பிரசித்திபெற்ற ஆயுள்வேத வைத்தியராகக் காணப்பட்டார். பத்திய முறைகளுடனும் பக்கவிளைவற்றதுமான வைத்திய முறையையே இவர் கையாண்டு வந்தார். பத்தியமுறையில் இருவகைகள் இருந்தது.
(அ) மருத்துடன் கூடிய பத்தியமுறை
(ஆ) மருந்து முடிந்தவுடன் வரும் விடுபத்திய முறை
இவர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் கோவிலுக்கு வடக்குப்புறமாகவுள்ள காணியில் சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்திருந்தார். மற்றையது அவரது திக்கரை வீட்டில் அமைந்திருந்தது. இரு இடங்களிலும் ஓலையால் வேயப்பட்ட கொட்டில்களிலேயை வைத்திய சேவையை நடாத்தி வந்தார். நடக்கமுடியாத நோயாளிகள் பல்லக்கிலேயே காவி வரப்பட்டனர். தூர இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் மாட்டுவண்டில்களிலேயே வருகை தந்தனர். காலை வேளைகளில் இவரது வீட்டுப்படலையில் மாட்டுவண்டில்கள் நிரையாக நிற்குமாம். பரியாரி சின்னப்பர் வெளியில் யாராவது நோயாளிகளைப் பார்க்க செல்வதானால் குதிரை வண்டியிலேயே செல்வாராம் இவர்.
1. பொதுப்பரியாரி
2. முறிவு, நெரிவு வைத்தியம்
3. சித்தப்பிரமை வைத்தியம் என்பனவற்றை குணப்படுத்துவதிலும் வல்லவராகக் காணப்பட்டார்.
இவரிடம் இவரது மகன் மயில்வாகனம் ஆயுள்வேத வைத்தியம் கற்றுக் கொண்டிருந்தவேளை துர்அதிஷ்டவசமாக மரணமடைந்தார் பின்னர்; தனது மருமகனான(மகளின் கணவர்) வேலாயுதர் காசிப்பிள்ளைக்கு ஆயுள்வேத நூணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். இன்னொருவரான கந்தப்பர் ஞானப்பிரகாசம் அவர்களும் இவரிடமே ஆயுள்வேத வைத்தியம் பற்றிக் கற்றறிந்தார் என வேறு தகவல்கள் மூலம் அறியப்படுகின்றது.
(நன்றி நினைவுமலர் காசிப்பிள்ளை அம்பிகைபாகன்)

13. வேலாயுதர் காசிப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர் – ஆசிரியர்)
இவர் காரைநகர் களபூமி பொன்னாவளை கிராமத்தைச் சேர்ந்தவர். வேலாயுதர் சின்னக்குட்டி தம்பதியினருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் இவர் நான்காவது மகனாவார். 1926ம் ஆண்டு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்ட பொழுது கோவளத்தைச் சேர்ந்த பேப்பர் முருகேசு சுவாமிகளால் ஆசிரயராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தவர் எனக் கூறப்படுகின்றது. மேலும் பரிகாரி சின்னப்பர் அவர்களின் மகளான அன்னம்மாவை திருமணம் செய்து இல்லறம் நடாத்தினார். புரிகாரி சின்னப்பர் தனது வாரிசை உருவாக்கும் வகையில் மகனான மயில்வாகனம் அவர்களுக்கு ஆயுள்வேத நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்த துர்அதி;ஸ்டமாக அவர் மரணமடைந்தார். அதனால் கவலையடைந்த பரிகாரி சின்னப்பர் தனது மருமகனான காசிப்பிள்ளை அவர்களுக்கு ஆயுள்வேத நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார் என அறியப்படுகின்றது. திரு.காசிப்பிள்ளை அவர்கள் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் ஆயுள்வேதத்தொழிலைச் செய்து வந்தவேளை 1946ம் ஆண்டு மரணமடைந்தார்.

14. மகப்பேற்று மருத்துவிச்சி சின்னம்மா
இவர் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகக் கொண்டவர். காரைநகரில் ஆங்கில வைத்தியம் விருத்தியடையாத காலத்தில மகப்பேற்று வைத்தியரும் இல்லாத நிலையில் அவ்வூர் மக்கள் அல்லற்ப்பட்ட வேளையில் மருத்துவிச்சி சின்னம்மா அவர்களே அம்மக்களுக்குக் கைகொடுத்து உதவினார் என்றால் மிகையாகாது. இப்பொழுது உள்ளவர்களைப் போல குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சென்று இவ் வேலைக்காகப் படித்து பட்டம் பெற்றவரல்லர். மாறாகத் தனது சொந்த அனுபவத்தைக் கொண்டே மருத்துவிச்சி வேலையைச் செய்து வந்தார். தூய தமிழில் கூறுவதாக இருந்தால் இவர் ஒரு படிக்காத மேதை என்;றே கூற வேண்டும். 1940 களின் முற்பகுதியிலேயே இத் தொழிலை ஆரம்பித்திருப்பார் போல் தெரிகிறது. 1960 நடுப்பகுதி வரை இவரது சேவை நீண்டு சென்றது. வேதரடைப்பு மற்றும் கோவளம் முதல் பலகாடு வரை இவரின் சேவை வியாபித்திருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ வேதனை ஆரம்பித்ததுமே எம்மவர்கள் மருத்துவிச்சி சின்னம்மாவுக்கே முதலில் ஆள் அனுப்புவார்கள் அங்கு சென்றவர்கள் சின்னம்மாவுக்கு தகவல் கொடுத்ததும் உடனேயே அவர்கள் சென்ற சைக்கிளிலோ அல்லது மாட்டுவண்டியிலோ ஏறி வந்துவிடுவார். அக் காலத்தில் வேறு போக்குவரத்துச்சேவை எதுவும் இருக்கவில்லை.
குறித்த வீட்டுக்கு வந்ததும் பிரசவ வேதனையால் அவதியுறும் பெண்ணின் சுகப் பிசவத்திற்கான வழிமுறைகளைக் கையாள்வார். இவரின் கனிவான பேச்சால் அனைவரையும் கவரும் தன்மை கொண்டவர். இவர் முன்னெடுத்த பிரசவங்களில் பெரும்பாலானவை சுகப்பிரசவங்களாகவே காணப்பட்டன. வசதிபடைத்தவர்களில் சிலர் கரைநகருக்கு வெளியேயுள்ள மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை போன்ற தனியார் வைத்தியசாலைகளை நாடினர்.
குழந்தை பிறந்ததும் மருத்துவிச்சி பின்வருமாறு பாடிக் குழந்தையை வாழ்த்துவார் இதனை மருத்துவிச்சி வாழ்த்து என்பர்.

மருத்துவிச்சி வாழ்த்து
அரிசிப் பொரியோடும் வந்தீரோ தம்பி
அரிசிமலை நாடுங் கண்டீரோ தம்பி
நெல்லுப்பொதியோடும் வந்தீரோ தம்பி
நெல்லுமலை நாடுங் கண்டீரோ தம்பி
மிளகுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
மிளகு மலைநாடுங் கண்டீரோ தங்கம்
இஞ்சிப்பொதியோடும் வந்தீரோ தங்கம்
இஞ்சிமலை நாடுங் கண்டீரோ தங்கம்
உள்ளிப்பொதியோடும் வந்தீரோ தம்பி
உள்ளி மலைநாடுங் கண்டீரோ தம்பி
மஞ்சள் பொதியோடும் வந்தீரோ தம்பி
மஞ்சள் மலைநாடுங் கண்டீரோ தம்பி
உப்புப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
உப்பு மலை நாடுங் கண்டீரோ தங்கம்
காசுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
காசுமலை நாடுங் கண்டீரோ தங்கம்
கோச்சிவாழ கொப்பர் வாழ
பேத்தி வாழ பேரன்வாழ
பூட்டி வாழ பூட்டன் வாழ
கொம்மான் வாழ மாமி வாழ
குஞ்சியாச்சி வாழ குஞ்சியப்பு வாழ
பெரியாச்சி வாழ பெரியப்பு வாழ
ஊர் வாழ தேசம் வாழ
குருவுக்கும் சிவனுக்கும் நல்ல பிள்ளையாயிரு அயலும் புடையும் வாழவேண்டும். அன்னமும் சுற்றமும் வாழ வேண்டும் ஆய்ச்சியும் அப்புவும் வாழ வேண்டும். அம்மானும் மாமியும் வாழவேண்டும்
இப்படிப் பாடி முடிந்ததும் பிறந்தது ஆண்குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட வெளியில் நிற்கும் ஒருவர் காத்திரமான தடி ஒன்றை எடுத்து சத்தம் எழுமாறு வீட்டுக்கூரையில் தட்டுவார். இது அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை அறிவிப்பதாகும். இதனையே அக் காலத்தில் அவன் கூரைதட்டிப் பிறந்தவன் எனக் கூறுவர் பெண் பிள்ளை பிறந்தால் அப்படித் தட்டுவதில்லை.

கொத்திப்பேய் கலைத்தல் நிகழ்வு
குழந்தை பிறந்து 5ம் நாள் மாலைப் பொழுதில் கொத்திப்பேய் கலைத்தல் நிகழ்வு நடைபெறும். அன்று சோறும் கறிகளும் சமைத்து குழந்தை பிரசவித்த பெண்ணின் அறையில் படைப்பர். அதைத் தொடர்ந்து மருத்துவிச்சி சூள் ஒன்றைக் கொளுத்தி தாய் மற்றும் குழந்தையைச் சுற்றி தாயும் பிள்ளையும் சுகம் சுகம் என்னும் பாடலைப் பாடி அவர்களை வாழ்த்தி விட்டு அறையின் மூலைமுடுக்கெல்லாம் சூளுடன் சுற்றி செத்தைக்க பத்தைக்க நில்லாதை கொத்தியாத்தை என்னும் பாடலைப் பாடிக் கொண்டு மருத்துவிச்சி வெளியேறுவார். பிரசவம் நடந்த அறையில் இருந்து பாய் தலையணை முதலியவற்றை சுருட்டிக்கொண்டு அத்துடன் கொத்தி படையல்களையும் மருத்துவிச்சி வெளியேறுவார். போகும் வழியில் கொத்திக்கு விருப்பமான பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று பாய், தலையணை முதலியவற்றை ஒரு பாழடைந்த தனியான இடத்தில் எறிந்துவிட்டுச் செல்வார். கொத்திக்குப் படைத்த உணவுகளையும் அவ்விடத்திலேயே விட்டுவிடடுச் செல்வார். கொத்திப்பேய் வந்து குழந்தையை தூக்கிச் சென்றுவிடுமென அக்காலமக்கள் நம்பியதனாலேயே இக்கொத்திப்பேய் அகற்றல் நிகழ்வு நடைபெறக் காரணமாயிற்று.
மேற்கூறிய இக் கஷ்டமான சேவையை புரிந்த மருத்துவிச்சி சின்னம்மாவை எம் சமூகம் மறப்பதற்கில்லை.
மேலும் களபூமி மதவடியில் முத்தி என்ற ஒருவரும் பழைய கண்டிப்பகுதியில் வேறொருவரும் இச் சேவையில் ஈடுபட்டார்கள் என அறியமுடிந்தாலும் அவர்கள் பற்றிய முழு விபரமும் கிடைக்கவில்லை.

15. குமாரவேலு கந்தையா (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களபூமி வழுப்போடையைச் சேர்ந்தவர். மேலதிக விபரம் கிடைக்கவில்லை.

16. இராமநாதர் முத்துகுமாரு (ஆயுள்வேத வைத்தியர்)

இவர் விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாக கொண்ட இராமநாதர் பொன்னுப்பிள்ளை தம்பதியினரின்மூத்த புதல்வர் ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி பிறந்தார். இவர் பாடசாலை கல்வியினை முடித்து விட்டு ஆயுள் வேத மருத்துவ கல்வியை , மருத்துவ துறையில் இருந்த பருத்தித்துறை பொன்னுச்சாமி செட்டியாரிடமும் பின் கந்தர்மடத்திலும் , காரைநகர் களபூமி சின்னப்பு பரியாரியிடமும் திறம்படக் கற்றார். அகில இலங்கை சித்த மருத்துவ சங்கத்தில் சித்த வைத்தியராக 1941ல்அங்கீகரிக்கப்பட்டார். மேலும் சித்த வைத்திய மருந்து தயாரிப்பதற்க்கான அனுமதிப் பத்திரமும் பெற்றிருந்தார்.

இவர் பொது வைத்தியம், விஷகட்டு வைத்தியம், குழந்தை வைத்தியம் மற்றும் வாத நோயை குணப்படுத்துவதில் மிகவும் கைதேர்ந்த சித்த மருத்துவராகவிளங்கினார்.

கைநாடி பிடித்து பார்த்தும் கண்ணை பார்த்தும் நோயினை இனங்கண்டு அதற்கேற்ற வைத்தியம் செய்வதில் வல்லுனர். அத்துடன் ஒருவர் நோய் வந்து படுக்கையில் இருக்கும் போது அவர்களின் கைநாடி பிடித்து பார்த்துஆயுளை மிக துல்லியமாக கணித்து சொல்லுவதிலும் திறமையானவராக இருந்தார்.

இவர் பேதி மருந்து தயாரித்தல் , கிரந்தி எண்ணெய், மாதளம்பழ சாறு எண்ணெய் , தாளங்காய் போன்ற பலஎண்ணெய்களை தனது வீட்டிலேயே தாயாரிப்பார்.

இவரது வீட்டில் மருத்துவ ஓலைச்சுவடிகள், அகத்தியர் சித்த வைத்திய மாத இதழ்கள், வைத்திய அகராதி, மற்றம்ஆயுள் வேத சித்த மருந்துகள் தாயாரிக்கும் உபகரணங்களும் சில மூலிகைகளும் நாட்டின் அசாதாரண சூழல்இடப்பெயர்வு வரை காணப்பட்டது. இவர் 1970 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 19ஆம் திகதி இறைவனடிசேர்ந்தார்.

17. வேலாயுதப்பிள்ளை சபாபதிப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)

இவர் காரைநகர் செம்பாடு பகுதியைச் சேர்ந்தவர். 1950 முற்பகுதிக்கு முன்னர் அப்பகுதி மக்களுக்கும் அயல் கிராம மக்களுக்கும் ஆயுள்வேத வைத்தியம் செய்து பிரபல்யம் பெற்றிருந்தார். கைநாடி பிடித்து பார்த்து ஏற்பட்ட நோய் இதுதான் என்பதை கூறுவதில் வல்லவராகக் காணப்பட்டதுடன், அதற்கேற்ற மருந்துகளையும் கொடுத்து சுகப்படுத்தினார் எனச் சொல்லப்படுகின்றது. மருந்துகளை வீட்டிலேயே தயாரித்ததாகவும் அதற்கான உரல் போன்ற தளபாடங்கள் அவரது வீட்டில் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் மூலம் அறிய வந்துள்ளது.

18. அண்ணவி கணபதி (பாம்புக்கடி வைத்தியர்)
இவர் காரைநகர் விக்காவிலைச் சேர்ந்தவர். மேலும் 1950 களில் இருந்து பலருக்குப் பாம்புக்கடி வைத்தியம் செய்திருக்கிறார். இவரைப் பற்றிய மேலதிக விபரம் எடுக்க முடியவில்லை.

 

மக்களினதும் ஆயுள்வேத மருத்துவர்களின் தேவைக்காகப் பாவிக்கப்பட்டதும், காரைநகரில் காணப்பட்டவையுமான மருத்துவக் குணங்கள் அடங்கிய மூலிகைகள், மரங்கள் பற்றிய விபரம்:

                                மூலிகைகள்:
1. அறுகம்புல்                                    2. துளசி
3. தூதுவளை                                     4. ஆவாரம் பூ
5. நெருஞ்சில்                                    6. முடக்கொத்தான்
7. சாறணை                                      8. குப்பைக்கீரை
9. திருநீற்றுப் பச்சிலை                10. கரு ஊமத்தை
11. மூக்கிரட்டை                              12. எருக்கு
13. காரை                                          14. கற்றாழை
15. கொவ்வை                                  16. சீந்தில்கொடி
17. கற்பூரவல்லி                               18. நாயுருவி
19. சிறுகீரை                                     20. சிறுகுறிஞ்சான
21. குப்பைமேனி                             22. வட்டத்துருத்திக்கீரை
23. கீழ்க்காய் நெல்லி                    24. பிரண்டை
25. கையான் தகரை                      26. மொசுமொசுக்கை
27. இக்கீரி                                         28. கஞ்சாங்கோரை
29. காஞ்சோன்றி                             30. தொட்டாற்சுருங்கி
31. தேங்காய்ப்பூக்கீரை                32. நீர்முள்ளி
33. முசுட்டை                                     34. வாதமடக்கி
35. விடத்தல் இலை                         36. பச்சைப்பயறு
37. பருத்தி                                          38. வெள்ளரி
39. கத்தரிக்காய                              40. பூசணி
41. பாவல்                                           42. கொத்தவரை
43. கண்டங்கத்தரிக்காய்              44. சுண்டைக்காய்
45. வெங்காயப்பூ                             46. நந்தியாவட்டை
47. புதினா கீரை                              48. தயிர்வளை
49. வெண்டி                                       50. கோரைக்கிழங்கு
51. காட்டாமணக்கு                         52. குரக்கன்
53. நாகதாளி
இன்னும் சில இருக்கலாம்.

 

                மருத்துவகுணமுள்ள மரங்கள்:
1. ஆடாதோடை                                          2. பனை
3. எலுமிச்சை                                              4. நாவல்
5. கடம்பரம்                                                 6. மாதுளை
7. கருங்காலி                                               8. முள்முருக்கு
9. மரவள்ளி                                                 10. ஆலமரம்
11. நெல்லி                                                   12. முருங்கை
13. அகத்தி மரம்                                        14. வேம்பு
15. கருவேப்பிலை மரம்                          16. வாழை
17. அத்தி                                                      18. புளியமரம்
19. மாமரம்                                                  20. பப்பாளி மரம்
21. விளாமரம்                                             22. வில்வமரம்
23. கொய்யா மரம்                                    24. இலுப்பை மரம்
25. ஓதியமரம்                                             26. தென்னை
27. அரச மரம்                                              28. பூவரசு
29. இலந்தை மரம்                                      30. சண்டி
31. நொச்சி                                                   32. மாவிலங்கம் மரம்
33. கறிமுல்லை                                           34. குமிழ மரம்
35. செம்பரத்தை                                         36. ஆமணக்கு
37. சீதா பழம்
இன்னும் சில இருக்கலாம்.

 

மேற்குறிப்பிட்ட சில மரங்களின் பெயரடங்கிய இடங்கள் காரைநகரில் உள்ளன. அவையாவன:

1. இலுப்பையடி                       2. ஆலடி                 3. வேம்படி                      4. அரசடி
5. நாவலடிக்கேணி                6. கருங்காலி         7. ஆலங்கன்றடி            8. கள்ளித் தெரு
9. நாவற்கண்டி                       10. புளியடி            11. புளியங்குளம்           12. சந்தம்புளியடி
13. இலந்தைச்சாலை போன்றவையாகும்.

ஆரம்பகால ஆயுள்வேத வைத்தியர்கள் தத்தம் வாரிசுகளை உருவாக்கி மேற்படி வைத்தியத்தை வளர்த்தெடுத்தனர். பிற்காலத்தில் வந்தவர்கள் அவ்வாறு உருவாக்கத் தவறிவிட்டனர். அதன் விளைவாக இன்று காரைநகரில் ஆயுள்வேத மருத்துவம் நலிவடைந்து விட்டதென்றே கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மூலிகைகளும் மருத்துவ குணமுள்ள மரங்களும் அருகி வருகின்றன. இதற்குக் காரணம் புதுப்புது கட்டடங்கள் கட்டுபவர்களும் மூலிகைகள் பற்றி பட்டறிவு அற்றவர்களுமேயாகும்.

ஆயுள்வேத மருத்துவத்தை மேலோங்கச் செய்வது எம் ஒவ்வொருவரினதும் கடமை என்பதே எனது கருத்தாகும்.

தொகுத்தவர்:
தம்பையா நடராசா
கருங்காலி
காரைநகர்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- நமது வாழ்வும் வளமும் – பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

நமது வாழ்வும் வளமும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- காரைதீவு – பேராசிரியர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி

காரை தீவு

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்) காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவமும், மருத்துவர்களும் – பகுதி 1

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்)

காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும்

மருத்துவமும், மருத்துவர்களும்  – பகுதி 1

நாற்புறமும் கடலாற்சூழப்பட்டதும் வனப்புமிகு வயல்நிலங்களைத் தன்னகத்தே கொண்டதும் பக்தி மிகு வியாவில் ஐயனார் ஆலயத்தைமுதன்மையாகக் கொண்டு 39க்கு மேற்பட்ட ஆலயங்களையும் உள்ளடக்கிய காரைநகர் ஆரம்பத்தில் காரைதீவு என அழைக்கப்பட்டாலும் காராளர், கல்வியாளர்கள், கச்சிதமானவர்த்தகர்கள்,கடல் தொழிலாளர்கள்,  அரசியல் வாதிகளின் கடும் உழைப்பினால், பெருமுயற்சிகளினாலும் 12.09.1923ஆம் ஆண்டிலிருந்து காரைநகர் எனப் பெயர் பெறலாயிற்று.

இப்படி அமைந்த காரைநகரில் மருத்துவ உதவிகள் பெறுவது கடினமாக அமைந்திருந்தாலும் அக்காலப் பகுதியில் ஆயுள்வேத மருத்துவமே முன்னிலை பெற்றிருந்தது என்று கூறினால் மிகையாகாது. ஆங்கில வைத்தியம் காரைநகரில் பெருமளவு பிரபலம் பெறவில்லை என்றுதான் கூறவேண்டும். மாறாக அல்லின்வீதியும், பிரதான வீதியும் சந்திக்கும் சந்தியில் உள்ள தனியார்வீடொன்றில் டிஸ்பென்சறி என அழைக்கப்படும் சிறு வைத்திய சாலை ஒன்று அமைந்திருந்திருந்தது. இங்கு அப்போதிக்கரி எனும் உதவிவைத்தியர் ஒருவரும், மருந்து கலக்கி வழங்கும் ஓடலி என அழைக்கப்படுபவருமே கடமையில் இருந்தனர். இங்கு காய்ச்சல், தடிமல் போன்ற சிறு சிறு வருத்தங்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டன. அவசர நோயாளர்கள், ஆப்பறேசன் போன்றவற்றிற்கு யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். வசதி படைத்தவர்கள் மூளாய் ஆஸ்பத்திரி போன்ற தனியார் வைத்திய சாலைகளை நாடினர். 1970க்குப்பின் மாற்றங்கள் பலநிகழத் தொடங்கின.

காரைநகரில் ஆங்கில வைத்தியம் பெரிதளவு சோபிக்கா விட்டாலும் இம்மண்ணின் மைந்தர்கள் பலர் அப்போதிகரிகளாகவும் (உதவிவைத்தியர்களாகவும்) வைத்திய கலாநிதிகளாகளாகவும் தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் பல பாகங்களிலும் சேவையாற்றியதுடன் இன்னும் பலர் சிங்கப்பூர் மலேசியா மற்றும் ஆபிரிக்கநாடுகளிலும் சேவையாற்றி இளைப்பாறியுமுள்ளனர். அப்போதிகரியானவர் குறிப்பிட்ட சில வருடங்கள் சேவையின் பின் (ஆர் எம் பி) உதவி வைத்தியர் என அழைக்கப்பட்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் (RMP) கருங்காலி
  2. கந்தையா தில்லையம்பலம் (RMP) வாரிவளவு
  3. சுப்பிரமணியம் இளையதம்பி (RMP) வாரிவளவு
  4. கந்தையா சதாசிவம் (RMP) செம்பாடு
  5. அம்பலவாணர் கணபதிப்பிள்ளை (RMP) செம்பாடு
  6. கணபதிப்பிள்ளை பரஞ்சோதி (RMP) செம்பாடு
  7. முருகேசு குணரத்தினம் (RMP) செம்பாடு
  8. அம்பலவாணர் பரஞ்சோதி (RMP) வாரிவளவு
  9. வேலுப்பிள்ளை பொன்னையா (RMP) தங்கோடை
  10. ஆறுமுகம் சங்கரப்பிள்ளை (RMP) கள்ளித்தெரு
  11. சண்முகம் நடராசா (RMP) வேம்படி
  12. சுப்பிரமணியம் காசிநாதன் (RMP) வேம்படி
  13. முருகேசு மகேந்திரம் (RMP) வேம்படி
  14. இராமலிங்கம் சுப்பிரமணியம் (RMP) ஆயிலி
  15. விநாசித்தம்பி சிவப்பிரகாசம் (RMP) ஆயிலி
  16. விநாசித்தம்பி கனகசுந்தரம் (RMP) ஆயிலி
  17. சின்னத்தம்பி தர்மலிங்கம் (RMP) மணற்பிட்டி
  18. ஆறுமுகம் குமாரசாமி (RMP) பழைய கண்டி
  19. சுப்பிரமணியம் நடராசா (RMP) வலந்தலை
  20. சுப்பிரமணியம் சுவாமிநாதன் (RMP) வலந்தலை
  21. ஆறுமுகம் சண்முகம் (RMP) வலந்தலை
  22. இராசையா செல்வத்துரை (RMP) வலந்தலை
  23. தெண்டாயுதபிள்ளை ஜெகநாதபிள்ளை (RMP) வலந்தலை
  24. சின்னையா நாகேந்திரம் (RMP) வலந்தலை
  25. செல்லப்பா இராசரத்தினம் (RMP) மருதடி
  26. கனகசபை சுந்தரலிங்கம் (RMP) அறுகம்புலம்
  27. சிவப்பிரகாசம் சிவனந்தராசா (RMP) மணற்பிட்டி
  28. கந்தையா கனகேந்திரம் (RMP) சயம்புவீதி
  29. சுப்பையா (RMP) மாப்பாணவூரி
  30. சோமசுந்தரம் அருளையாபிள்ளை (RMP) மாப்பாணவூரி
  31. V. கனகசுந்தரம் (RMP) மாப்பாணவூரி
  32. வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம் (RMP) வேதர்அடைப்பு
  33. சின்னப்பு சின்னையா (RMP) சத்திரந்தை
  34. கே. எஸ் செல்வத்துரை (RMP) சத்திரந்தை
  35. கந்தையா நடராசா (RMP) சத்திரந்தை
  36. இராமநாதன் அம்பலவாணர் (RMP) பொன்னாவளை
  37. ஆறுமுகம் நகுலேஸ்வரி (RMP) பொன்னாவளை
  38. கார்த்திகேசு செந்தில்நாதன் (RMP) பொன்னாவளை
  39. கதிரவேலு சோமசுந்தரம் (RMP) கிளுவனை
  40. சங்கரப்பிள்ளை நாகம்மா (RMP) நந்தாவில்
  41. கனகசபை திருநாவுக்கரசு (RMP) விளானை
  42. ஆறுமுகம் சோமசுந்தரம் (RMP) விளானை
  43. ஆ. வே. மயில்வாகனம் (RMP) பாலாவோடை
  44. சுப்பிரமணியம் பற்குணராசா (RMP) பாலாவோடை
  45. சுப்பிரமணியம் மகேந்திரராசா (RMP) பாலாவோடை
  46. சண்முகம் கந்தையா (RMP) பலகாடு/பாலாவோடை
  47. சிற்றம்பலம் சுப்பிரமணியம் (RMP) களபூமி
  48. வேலுப்பிள்ளை அரியரத்தினம் (RMP) பலகாடு
  49. சின்னத்துரை தர்மலிங்கம் (RMP) வேம்படி
  50. முத்தையா தெய்வேந்திரராசா (RMP) மணற்காடு
  51. முருகேசு தம்பையா (RMP) பயிரிக்கூடல்
  52. கந்தையா ஏரம்பு (RMP) அறுகம்புலம்
  53. வேலுப்பிள்ளை ஏகாம்பரம் (RMP) புளியங்குளம்
  54. கந்தையா (RMP) செம்பாடு
  55. செல்லத்துரை தர்மலிங்கம் (RMP) வேதரடைப்பு

 

அடுத்து கலாநிதி (Doctor) பட்டம் பெற்றுக் காரைநகருக்கு வெளியே இலங்கையின் பல பாகங்களிலும் சேவையாற்றியவர்கள், சிங்கப்பூர் மலேசியா மற்றும் தென்னாபிரிக்க காடுகளிலும் சேவையாற்றியோர் விபரங்கள் கீழ தரப்பட்டுள்ளன.

1. டாக்டர் இலகநாதர் கனகசுந்தரம்  

இவர் காரைநகர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த இலகநாதர் ஆசிரியர் தம்பதிகளின் ஏக புத்திரனாவர். மேலும் காரைநகரில் புகழ்பூத்த பொன்னுடையார் பரம்பரையின் வழித்தோன்றலுமாவார். மேலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் புகழ்பூத்த மாணவர்களில் ஒருவருமாவார்.

அடுத்து மருத்துவக் கல்லூரியில் பயின்று எம்.பீ.பீ.எஸ் (MBBS) தேர்வில் முதலாம் பிரிவில் கற்றுத்தேறியபின் லண்டன் கேம்பிறிஜ் பல்கலைக்கழகம் சென்று கற்று அங்கு கலாநிதிப்பட்டமும் பெற்றார். அதன் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உடற்கூற்றியல் துணைப் பேராசிரியராகக் கடமைாற்றிய வேளை இவரைச் சூடான் பல்கலைக்கழகம் அழைத்துப் பேராசிரியர் பதவியை வழங்கியது. அதன் பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மருத்து பீடத் தலைவரானார். மேலும் இவர் உடற்கூற்றியல் பற்றிப் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒருமுருகபக்தனாவார். தான் பிறந்த கிராமமான கருங்காலியில் அமைந்திருக்கும் போசுட்டி முருகன் பால் கொண்ட அளவுகடந்த பக்தியினால் ஆண்டு தோறும் நடைபெறும் மஹோற்சவத்தின் 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழாவை இவரது குடும்பம் நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. மேலும் இவர் களபூமியை சேர்ந்த ரைம்ஸ் சங்கரப்பிள்ளை அவர்களின் மகளைத் திருமணம் செய்தார்.

2. வைத்திய கலாநிதி செல்வி நவமலர் கனகரட்ணம்

வர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த கந்தையா கனகரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வியாவார். மேலும் இவர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அதனால் கல்லூரி சமூகம் பெருமையுடன் பாராட்டியது. தனது மருத்துவப் படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கற்று 1966ஆம் ஆண்டு மருத்துவ மாணியும், அறுவைச்சிகிச்சைமாணியும் (MBBS) பட்டத்தைப் பெற்றார்.1968ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் முதல் நியமனத்தை பெற்றார். அதேநேரம் பொதுச் சுகாதாரப்பயிற்சி நெறியை நிறைவு செய்ததன் பின்னர் 1972ஆம் ஆண்டு முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் மாவட்ட அதிகாரியாகவும், அடுத்து 1986இல் மன்னார் மாவட்ட அதிகாரியாகவும் கடமையாற்றினார். பின்னர் சட்ட மருத்துவ ஆய்வுத்துறை பயிற்சி பெற்று யாழ்ப்பாண சட்டமருத்துவஅலுவராக (JMO) நியமனம் பெற்றுச் சேவையாற்றினார். மேலும் 1991ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றினார். மீண்டும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியாக நியமனம் பெற்றார். அங்கு சேவையாற்றியவேளை புற்று நோயாளர்களின் அவலத்தைப் போக்குமுகமாக அங்கு புற்று நோயாளர்கள் தங்கிய கட்டடங்களைத் திருத்தியும், புரைமைப்புச் செய்யவும் தன்னாலான முயற்சிகளை மேற் கொண்டது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்குப் புற்று நோய் வைத்தியரை நியமிக்கும் வரை மகரகம வைத்திய சாலையில் இருந்து 2 கிழமைக்குகொரு முறை வைத்தியர் ஒருவரை வரவழைத்துப் புற்று நோயாளர்களின் இன்னலைப் போக்கினார்.

3. டாக்டர் செல்லத்துரை ஆனைமுகன்

இவர் காரைநகர் செம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும் காரைநகர் ஆலடி பிரபலவர்த்தகர் செல்லத்துரை மற்றும் செல்லம்மா தம்பதிகளின் மகனாவார். தனது ஆரம்பகல்வியைத் தங்கோடை அமெரிக்க மிஷன் பாடசாலையில் கற்று பின்னர் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியிலும் கற்றுதேறினார். அதன் பின் மருத்துவக் கல்வியைக் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் பயின்றார். 1969இல் மருத்துவராக (MBBS)ப்பட்டம் பெற்று ராகம் வைத்தியசாலையில் சேவையாற்றினார். 1971ஆம் ஆண்டு நியூஸ்லாந்து சென்று அங்குள்ள மருத்துவக் கல்லுரியில் மகப்பேற்று மருத்துவம், பெண்கள் வைத்தியம் என்பவற்றில் சிறப்புச் சிகிச்சைப் பயிற்சி பெற்றார். பின்னர் நொட்டிங்காம் பெண்கள் மருத்துவ மனையிலும், நோத்காம்படன் மருத்துவ மனையிலும் பணிபுரிந்தார். 1976ஆம் ஆண்டு தை மாதம் எம். ஆர். சி. ஓ. ஜீ பரிட்சையில் சித்தியெய்தி அதற்கான பட்டத்தையும் பெற்றார். அதன்பின் 1977ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள சர்வகலாசாலையில் சேவையாற்றி அங்குள்ள பெண் வைத்திய, மகப் பேறு மருத்துவத்துள் காணப்படும் மாறுபாடுகளையும் கண்டறிந்த பின்னர் திரும்பவும் நியூஸ்லாந்து சென்று பாமஸ்ரன் வடக்கு வைத்திய சாலையில் சிறப்புச் சிகிச்சை மருத்துவராகவும் கடமையாற்றி உடல் நோய்காரமையாக 22 வருடங்களின் பின்னர் ஓய்வு பெற்றார்.

1988ஆம் ஆண்டு இங்கிலாந்தின் றோயல் கல்லூரி இவருக்கு எப். ஆர். சி. ஓ. ஜீ என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. 2003ஆம் ஆண்டில் இவர் மகப்பேறும் மகளிர் மருத்துவமும் என்னும் நூலை 637 பக்கத்தில் தமிழில் எழுதி வெளிட்டார். கனடாவிலும் இந்நூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது. கனடா போன்ற புலம் பெயர்து வாழும் தமிழ் மக்களுக்கு பயனனுள்ளதாகக் காணப்படுகின்றது.

4. டாக்டர் சம்பந்தன் என அழைக்கப்படும் நா. திருஞனசம்பந்தன்

இவரின் பூர்வீகம் காரைநகர் மாப்பாணவூரி ஆகும். இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலும் உயர்கல்வியைக் கல்கிசை சென். தோமஸ் கல்லுரியிலும் பயின்றார். அடுத்து பல்கலைக் கழகம் சென்று மருத்துவக்கல்வியைத் தொடர்ந்தார். 1943ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தினால் முதல் டாக்டர் பட்டம் சம்பந்தன் அவர்களுக்கே வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது. டாக்டராகப்பட்டம் பெற்று வெளியேறிய டாக்டர் சம்பந்தன் அவர்கள் மனித நேயஅடிப்படையில் ஏழைகளுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் சேவை புரிவதையே அடிபடை நோக்கமாகக் கொண்டிருந்தார். டாக்டர் பட்டம் பெற்ற பின் கொழும்பு போதான வைத்திய சாலையில் வைத்தியப் பணியில் இருந்து கடமையாற்றினார். அவ்வேளை விடுமுறையில் தனது சொந்த ஊரான காரைநகருக்கு சென்று கொண்டிருந்த போது மூளாயில் சிறிய கட்டிடங்களுடன் ஒரு ஆஸ்பத்திரி அமைந்திருப்பதை அவதானித்தார். தெருவோரமாக இரண்டு மூன்று மாட்டு வண்டில்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் கவனித்தார். கிராமச் சூழலில் வசதிகள் அற்ற நிலையில் இருந்த அவ் வைத்திய சாலையைப் பார்த்ததுமே இதுவே தனக்குச் சேவை யாற்ற உகந்த இடம் என எண்ணிக்கொண்டார்.

அதனால் அரசாங்க சேவையை உதறித் தள்ளிவிட்டு 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி மூளாய்கூட்டுறவு வைத்தியசாலையில் பணியை ஏற்றார். அப்பொழுது அவ் வைத்தியசாலையில் தலைமை டாக்டராக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சாக்கோ அவர்கள் இருந்தார்கள். இவர் ஓர் சிறந்த நிர்வாகி. சுத்தம் பேணுபவர். ஆஸ்பத்திரியில் வெற்றிலை பாக்கு உண்பவர்களை கண்டால் இவருக்கு சிம்ம சொர்ப்பணம். ஆனால் வைத்தியத்தில் சிறந்தவர். அக்காலத்தில் ஆஸ்பத்திரியில் மின்சாரம் இருக்கவில்லை. ஆனால் டாக்டர் சம்பந்தரும் டாக்டர் சாக்கோவும் சேர்ந்து பாரிய சத்திரசிகிச்சைகளைக்கூட பெற்றோமக்ஸ் வெளிச்சத்துல் செய்து வெற்றியும்கண்டனர். சத்திரசிகிச்சைக் கருவிகள் கிருமி நீக்கம் செய்வதற்கு இட்டலிப் பானையே பாவித்தனர் என அறியப் படுகின்றது.

1947ஆம் ஆண்டு சத்திரசிகிச்சை சிறப்புப்பட்டம் பெறுவதற்காக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்தினரின் உதவியுடன் இங்கிலாந்து சென்றார். அங்குள்ள எடின்பறோ மற்றும் கிளாஸ்கோ பல்கலைக்கழகங்களில் சத்திரசிகிச்சை நிபுணத்துவப்பட்டம் பெற்றார். பின்னர் சுவீடன் மற்றும் சுவிற்சலாந்த நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் மகப் பேறு தொடர்பான பட்டங்களைப் பெற்று இலங்கைக்குத் திரும்பி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையிலேயே தொடர்ந்து பணியாற்றினார். இவரும் டாக்டர் சாக்கோவும் சேர்ந்து ஆற்றிய பணி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல் அயல் கிராமங்களில் உள்ள மக்களின் மனங்களில் இடம் பிடிக்க வழிவகுத்தது. டாக்டர் சம்பத்தனின் வைத்திய சேவை பலரையும் ஈர்த்தது என்றே கூற வேண்டும். 1975ஆம் ஆண்டு வரை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சேவையாற்றினார்.

பின்னர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் தனியாக ஓர் நிறுவனத்தை ஆரம்பித்து மக்களுக்கான சேவையைத் தொடர்ந்தார்.

5. டாக்டர் ஆறுமுகம் செல்வரட்ணம் மனநலத்துறை வைத்தியர்

இவர் காரைநகர் மருதடியைச்சேர்ந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் மற்றும் காமாட்சி தம்பதிகளின் புதல்வராவர். தனது ஆரம்பக்கல்வியை மருதடி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியிலும், தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார். கல்வியை பொறுத்தளவில் இவருக்குத் தாய்மாமன் வழிகாட்டல் கூடவே இருந்தது. உயர்கல்வியை நிறைவு செய்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு மருத்துவக்கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அக்கல்வியை நிறைவு செய்து (MBBS) எம் பீ பீ எஸ் பட்டமும் பெற்றார். இரத்தினபுரி வைத்தியசாலையில் முன்னிலை பயிற்சியை முடித்து அம்பாறை அரசினர் வைத்திய சாலையில் டாக்டராகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கிருந்து இடமாற்றம் பெற்று அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் பணியாற்றினார்.

அவ்வேளை காரைநகர் மருதடியைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் பிரபல வர்த்தகருமான சங்கரப்பிள்ளை இரத்தினம் மற்றும் நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியான சரோஜினிதேவியைத் திருமணம் செய்தார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளை மேற்படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்து சென்றார். லண்டன் மாநகரில் உள்ள NHS Trust – Runwell Hospital மற்றும் Basildon and Thurrock University Hospital ஆகிய இடங்களில் தனது மேற் படிப்பை முடித்து M.R.C Psych (England) பட்டமும், மனநலத்துறை ஆலோசகருக்கான (Consultant Psychiatrist). தகமையும் பெற்று நாடு திரும்பினார். அதன் பின்பு மாத்துறை அரசினர் வைத்தியசாலை, மட்டக்களப்பு அரசினர் வைத்தியசாலை ஆகிய இடங்களில் மனநலத் துறை வைத்தியத்துறை நிபுணராகக் கடமையாற்றினார். அதன் பின் தெல்லிப்பழை அரசினர் வைத்திய சாலைக்கு இடமாற்றம் பெற்றார். அங்கிருந்து யாழ்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை அரசினர் வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் மனநல மருத்துவராகக் கடமையாற்றியதுடன் யாழ் மருத்துவபீட மனநலத்துறை விரிவுரையாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

யாழ்மாவட்டத்தில் ஏற்பட்ட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக மீண்டும் சேவைக்கு அமர்த்தப்பட்டு 2003ஆம் ஆண்டு மீண்டும் ஓய்வு பெற்றார்.

6. டாக்டர் திருநாவுக்கரசு தவமணி

இவர் காரைநகர் களபூமி விளானையைச் சேர்ந்த அப்போதிக்கரி கனகசபை திருநாவுக்கரசு மற்றும் செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாவர். தனது ஆரம்பக் கல்வியைக் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியசாலையிலும், உயர்கல்வியை இராமநாதன் கல்லூரி மற்றும் யாழ்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றார். இவர் இந்துமகளிர் கல்லூரியில் இருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வியை கற்பதற்குத் தெரிவானார். அங்கு மருத்துவக்கல்வியை நிறைவுசெய்து எம். பீ. பீ. எஸ் பட்டமும் பெற்றார். இவருக்கு அராலிதெற்கைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை (எஞ்சினியர்) அவர்களைப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். டாக்டரான இவர் களுத்துறை, ஏறாவூர், யாழ்ப்பாணம், காலி ஆகிய இடங்களில் இலங்கையில் சேவையாற்றினார். பின்னர் லண்டன், நைஜீரியா ஆகிய இடங்களில் பணியாற்றி பின்னர் அவுஸ்திரேலியா சென்று சிறிது காலம் பணியாற்றி இப்பொழுது அங்கேயே வசித்துவருகின்றார்.

7. டாக்டர் கந்தையா கனகரட்ணம்

இவர் காரைநகர் களபூமியைச் சேர்ந்தவரும் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலையின் முன்னாள் அதிபருமான வெற்றிவேலு கந்தையா அவர்களின் மகனுமாவாவர். இவர் பல்கலைக் கழகம் சென்று மருத்துவத்துறையில் கற்று எம். பீ .பீ. எஸ் (MBBS) பட்டமும் பெற்றார். இலங்கையில் பல இடங்களில் சேவையாற்றினார் என அறிய வந்தாலும் இவரைப் பற்றிய முழுவிபரமும் கிடைக்கவில்லை. இவர் களபூமியை சேர்ந்த ரைம்ஸ் சங்கரப்பிள்ளை தம்பதிகளின் மகளைத் திருமணம் செய்தார்.

8. டாக்டர் பரமநாதர் சிவசோதி

இவர் தோல்வைத்திய நிபுணர் எனக் கேள்விப் பட்டாலும் இவர் பற்றிய முழுவிபரமும் கிடைக்கவில்லை.

9. டாக்டர் பொன்னம்பலம் பரமசாமி

இவர் காரைநகர் ஆலடியைச் சேர்ந்த பொன்னம்பலம் தம்பதிகளின் மகனாவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை ஆரம்பித்து மகப்பேற்று மருத்துவரானார். இவர் கொழும்பில் கடமையாற்றி இளைப்பாறிய பின்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையிலும் சேவையாற்றினார். முழுவிபரம் கிடைக்கவில்லை. மேலும் இவர் களபூமியை சேர்ந்த ரைம்ஸ் சங்கரப்பிள்ளை அவர்களின் மகளைத் திருமணம் செய்தார்.

10. டாக்டர் அம்பலவாணர் தாமோதரம்பிள்ளை

இவர் குருநாகல் பிரபல வர்த்தகர் அம்பலவாணர் தம்பதிகளின் மகனாவார். தனது உயர்கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், மருத்துவக் கல்வியை கொழும்பு பல்கலைக் கழகத்திலும் கற்று எம். பீ. பீ. எஸ் (MBBS) பட்டமும் பெற்றார். மாவத்தகமவில் DMO ஆகவும், கண்டியில் JMO வாகவும் சேவையாற்றியதுடன் மாத்தளை கொழும்பு ஆகிய இடங்களிலும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் பாணந்துறை பிறபலவர்த்தகர் முருகேசு தம்பதிகளின் மகளை திருமணம் செய்தார்.

11. டாக்டர் காசிப்பிள்ளை நடேசன்

இவர் காரைநகர் வேம்படியைச் சேர்ந்த அப்போதிக்கரி (RMP) சுப்பிரமணியம் காசிப்பிள்ளை தம்பதிகளின் மகனாவார். இவர் பற்றிய முழுவிபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

12. டாக்டர் கந்தையா சற்குரு

இவர் மருந்துக் கடை (யாழ்ப்பாணம்) உரிமையாளரான கந்தையா அவர்களின் மகனாவார்.

13. டாக்டர் சிந்தம்பரப்பிள்ளை கருணானந்தம்

இவர் கண்டி ராஜவீதி பிரபலவர்த்தகரும் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவருமான சிதம்பரப்பிள்ளை அவர்களின் சிரேஷ்ட புதல்வராவார். உயர்கல்வியை யாழ்ப்பாணம்  சென் ஜோன்ஸ் கல்லூரியிலும், மருத்துவக் கல்வியைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கற்றுத் தேறினார். மேலும் ஏறாவூர், சாவகச்சேரி போன்ற இடங்களில் சேவையாற்றினார்.

14. டாக்டர் பொன்னுத்துரை விக்கினேஸ்வரி 

இவர் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவரும், பதுளை முன்னாள் பிரபல வர்த்தகருமான கதிரவேலு பொன்னுத்துரை அவர்களின் மகளாவார். இவர் பல்கலைக்கழகம் சென்று மருத்துவக் கல்வியே பயின்று டாக்டரானார். மேலும் இவர் திருகோணமலை, கல்முனை வவுனியா போன்ற இடங்களில் சேவையாற்றியுள்ளார்.

15. டாக்டர் கனகரட்ணம் விஜயரட்ணம்

இவர் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவராவார். ஆரம்பக் கல்வியை வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையிலும் உயர்கல்வியைக் காரைநகர் யாழ்ரன் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு அக்கியூனஸ் கல்லூரியில் கற்றார். அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கு 1967ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு தெரிவானார். அங்கு மருத்துவக் கல்வியைக் கற்று எம். பீ. பீ. எஸ் பட்டமும் பெற்றார். தொடர்ந்து இலங்கையில் மாத்தறை, அடம்பன், பதுளை, பளை ஆகிய இடங்களில் சேவையாற்றிய பின் இலங்கைக்கு வெளியே நைஜீரியா, சிம்பாபே ஆகிய இடங்களில் பணியாற்றினார். பின்னர் 1986ஆம் ஆண்டு கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் வலந்தலை பெரிய மணலைச் சேர்ந்த பிரபல ஆயுள்வேத வைத்தியர் கந்தப்பொடி ஞாணப்பிரகாசம் அவர்களின் மகளான விமலநாயகியைத் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

16. டாக்டர் விநாசித்தம்பி சாரதாதேவி

இவர் வாரிவளவை வசிப்பிடமாகக் கொண்டவரும் முன்னாள் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை ஆசிரியருமான விநாசித்தம்பி ஆசிரியரின் மகளாவார். மேலதிக விபரம் கிடைக்கவில்லை.

17. டாக்டர் ஆறுமுகம் கணேசலிங்கம்

இவர் காரைநகர் வாரியந்தனையைச் சேர்ந்த மு. ஆறுமுகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். இவர் ஆரம்பக் கல்வியை வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலையில் பயின்றார். மேலும் இவர் பல்கலைக் கழகம் சென்று மருத்துவத்துறையில் பயின்று டாக்டராகி இலங்கையில் சிலகாலம் பணியாற்றிய பின்னர் நியூஸ்லாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் பணிபுரிந்தார்.

18. டாக்டர் சண்முகம் ஜெகதீஸ்வரி

இவர் டாக்டராகத் திருகோணமலையிலும் இலங்கையின் வேறு சில இடங்களிலும் கடமையாற்றியுள்ளார் என அறியப்படுகின்றது. இவர் காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

19. டாக்டர் முத்தையா கனகராசா

இவர் காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்தவராவர். மேலும் யாழ்ப்பாணம் உட்பட இலங்கை வேறு சில இடங்களிலும் சேவையாற்றியுள்ளார்.

20. டாக்டர் கணபதிப்பிள்ளை சிவபாக்கியம்

இவர் காரைநகர் பழையகண்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் கற்றுத் தேறினார் காரைநகர் வைத்திய சாலையில் பணியாற்றினார். இவரைப் பற்றிய ஏனைய விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

21. டாக்டர் அம்பலவாணர் வைத்திலிங்கம்

இவர் களபூமி பாலாவோடையைச் சேர்ந்த அம்பலவாணர் தம்பதிகளின் மகனும் களபூமி பாலாவோடையைச் சேர்ந்தவரும், இலங்கையில் பல பாகங்களிலும் வியாபார ஸ்தாபனங்களை நிறுவிய பிரபல வர்த்தகருமான ஏ. எஸ் சங்கரப்பிள்ளை அவர்களின் மருமகனுமாவார். யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஜே. எம். ஓ வாகவும் (JMO) கண்டி பெரியாஸ்பத்திரியில் (DMO) டி. எம். ஓ வாகவும் சேவையாற்றி இளைப்பாறியதாகவும் அறியப்படுகிறது.

22. டாக்டர் கணபதிப்பிள்ளை அம்பிகைபாகன்

இவர் மணற்பிட்டியைச் சேர்ந்தவரும், கண்டி தர்மராஜக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய வரும் மாணவர் தமிழ்வாசகம் என்னும் நூலை ஒரு சில வகுப்புக்களுக்காக எழுதி அரச அங்கீகாரம் பெற்று வெளியிட்டவருமான . திரு வே. கணபதிப்பிள்ளை அவர்களின் மகனாவார். இவர் மருத்துவக் கல்வியை கற்று டாக்டரானார். இவர் பணியாற்றிய இடங்கள், பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இருந்தும் இளைப்பாறிய பின் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சில காலம் பணியாற்றியுள்ளார். காரைநகர் களபூமி நந்தாவிலைச் சேர்ந்த அப்புக்காத்து சுப்பிரமணியம் தம்பதிகளின் மருமகனுமாவார்.

23. டாக்டர் சபாரத்தினம் சிவகுமாரன்

இவர் காரைநகர் வலந்தலையைச் சேர்ந்தவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியப் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதிபராகச் சேவையாற்றியவரும், எழுத்தாளருமான நமசிவாயம் சபாரத்தினம் மற்றும் லீலாவதி தம்பதியினருக்கு மகனாக 17-01-1946ஆம் திகதி பிறந்தார்.

மேலும் தனது உயர்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கற்று அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காகக் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். அங்கு பிரசித்தி பெற்ற பேராசிரியர் குமாரதாஸ் இராஜசூரிய மற்றும் டாக்டர் ஆர்.பி.ஐயவர்த்தனா போன்றோரிடம் திறம்படக் கற்றுத் தேறினார். பல்கலைக் கழகப் படிப்பை முடித்துக் கொண்ட சிவகுமாரன் அவர்கள் இங்கிலாந்து சென்று இக்கல்வியின் மூலம் மேலதிக தகமையைப் பெற்று இலங்கை திரும்பினார் வந்ததும் மன்னார் சென்று தனது பதவியை ஏற்றார். அங்கிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலையில் மருத்துவ ஆலோசராக (Consultant Physician) பதவியேற்றார். இவர் பதவி வகித்த காலத்தில் யாழ்பாணத்தில் கடுமையாகப் போர் நடந்து கொண்டிருந்தது. குண்டுகள் விழுந்து சிதறிய உடலங்களோடு உயிருள்ள மனிதர்களை ரக்ரர் வண்டிகளில் கொண்டுவந்து குவிக்க அத்தனை பேருக்கும் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர் கணேசரத்தினம், டாக்டர் ரவிராஜ், டாக்டர் சிவசூரியா, டாக்டர் கணேசமூர்த்தி தம்பதியர், டாக்டர் ஆனந்தராஜா ஆகியோருடன் டாக்டர் சபாரட்ணம் சிவகுமாரன் போன்றோர் மருந்து வசதிகள் இல்லா அக்காலத்தில் தத்தம் துறை சார்ந்து மக்களின் உயிர்க்காக்கப்பாடுபட்ட இவர்களின் சேவையையும் யாழ்வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கும் என்பது நிட்சயம்.

டாக்டர் சிவகுமாரன் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவர். தமிழ் நோயாளிகளும் சரி, சிங்கள நோயாளிகளும் சரி இவரைக் கடவுளாகவே மதித்தனர். இதற்குக் காரணங்கள் பலவுண்டு. இவர் தனது நெருங்கிய உறவினர்களாயினும் சரி, பாமர மக்களாயினும் சரி எல்லோரையும் சமமாகவே மதித்து இயன்றவரை அவர்களைத் திருபதிப்படுத்தும் வகையில் சேவையாற்றினார். வாரத்தில் எழுநாட்களும் வாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளைக் காலை மாலை சென்று பார்வையிடுவாராம். சில வேளைகளில் மூன்றாம் தரமும் சென்று பார்வையிடுவாராம்.

கம்பவாருதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் கம்பன் கழகத்தினர் டாக்டர் சபாரத்தினம் சிவகுமாரன் அவர்களுக்கு கழகம் சார்பில் மகர யாழ் விருதினை வழங்க முன்வந்த போது அவர் தான் ஓர் அரசாங்க ஊழியன் ஆகையால் விருது தேவையில்லையென முதலில் மறுத்துவிட்டாராம். பின்னர் எத்தனையோ நியாயங்களைக் கூறி ஒருவாறு சம்மதிக்க வைத்தார்களாம். விருதுவாங்கச் செல்லும் பொழுது அப் பொழுது வைத்தியசாலைப் பணிப்பாளராக இருந்த செல்வி நவமலர் கனரத்தினம் அவர்களையும் அழைத்துச் சென்று தனக்கு கிடைத்த மகரயாழ் விருதினையும் பணத்தையும் அம் மேடையில் வைத்தே பணிப்பாளரிடம் கையளித்தாராம். பின் கொழும்புக்கு மாற்றலாகிச் சென்று சிறந்த சேவையாற்றிப் பலரின் பாராட்டுக்களை ப் பெற்றதுடன் அங்கிருந்தே சேவையில் இருந்து இளைப்பாறினார்.

24.  டாக்டர் இந்திராணி கண்ணுத்துரை

இவர் வலந்தலையைச் சேர்ந்த இராசையா தம்பதிகளின் மகளாவார். இவர் 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி வேலணை அரசினர் மத்திய கல்லூரியிலும் பின்னர் நெல்லியடி அரசினர் மத்திய கல்லூரியிலும் கற்று தேறி அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான தகைமையைப் பெற்றுப் பல்கலைக்கழகம் சென்று கற்று கண் டாக்டரானார். அதன் பின் லண்டன் சென்று சில காலத்தின் பின் தாய்நாடு திரும்பியவர் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் சேவையாற்றினார். பின்னர் தனியார் வைத்தியசாலையிலும் சேவைபுரிந்தார் எனவும் அறியப்படுகின்றது.

25. டாக்டர் தியாகராசா சோமசுந்தரம்

இவர் வேம்படியைச் சேர்ந்த சிறாப்பர் முருகேசு தியாகராசா அவர்களின் மகனாவார். மேலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பின்னர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியிலும் கற்றார். அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காகக் கொழும்பு பல்கலைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு கற்றதன் பயனாக டாக்டரானார். அதைத் தொடர்ந்து இலங்கையில் குருநாகல், கொழும்பு, சாவகச்சேரி போன்ற பல இடங்களில் சேவையாற்றினார். பின்னர புருணை நியூஸ்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சேவையாற்றிய பின் அவுஸ்திரேலியாவிலேயே வசித்துவருகிறார்.

 

இக்கட்டுரையின் நோக்கம் பழையனவற்றைப் புதுப்பித்து இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தி வைப்பதாகும். அதனாலேயே காரைநகரில் 1970ஆம் ஆண்டுக்கு முன்னுள்ள மருத்துவமும் மருத்துவர்களும் என்ற தலைப்பில் 2 பகுதிகளாகப் பிரித்து பகுதி 1இல் ஆங்கில மருத்துவம் பற்றியும், பகுதி 2 ஆயுள் வேத மருத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன். முதலில் ஆங்கில மருத்துவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பு எவ்வளவோ முயன்றும் பலர் பற்றிய முழுத்தகவலும் கிடைக்கவில்லை. அவற்றைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளேன. இவர்கள் பற்றிய முழுவிபரங்கள் அறிந்தவர்கள் சரியான விபரங்களைத் தந்துதவினால் உதவியாக இருக்கும் என்பதுடன் கட்டுரையும் மறுசிரமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   தொகுத்தவர்
தம்பையா நடராசா
கருங்காலி
காரைநகர்.

பகுதி 2 – ஆயுள் வேத மருத்துவம் பற்றிய கட்டுரை விரைவில் வெளிவரும்.

வரலாற்று நூல்களில் நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் காரைதீவு – காரைநகர்

 

வரலாற்று நூல்களில் நூறு ஆண்டுகளை

நிறைவு செய்யும் காரைதீவு – காரைநகர்

எஸ். கே. சதாசிவம்

யாழ்ப்பாண நகரில் இருந்து காரைநகர் இருபத்திரண்டு கிலோ மீற்றர் தொலைவில் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இத் தீவின் வடக்கு மேற்குத் திசைகளில் ஆழம் கூடிய பாக்கு நீரிணையும் தெற்குத் திசையில் சிறிய ஆழமான ஊர்காவற்றுறை கடலும், கிழக்குத் திசையில் பொன்னாலை பரவைக் கடலும் எல்லையாக அமைந்துள்ளது. காரைநகரையும் குடா நாட்டையும் காரைநகர் பொன்னாலை தாம்போதி இணைக்கின்றது. 1870 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாம்போதி கட்டப்பட்ட பொழுது ஒன்பது பாலங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. 2008-2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருவழிப்பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்ட பொழுது மேலும் ஒரு பாலம் அமைக்கப்பட்டு பத்துப் பாலங்களைக் கொண்டதாக வீதி அமைக்கப்பட்டது.

காரைநகர் 2295 ஹெக்ரெயர் பரப்பளவினைக் கொண்டது. இப்பிரதேசம் 7.5 கிலோ மீற்றர் நீளத்தையும் 4.5 கிலோ மீற்றர் அகலத்தையும் உடையது.

இலங்கைத் தீவில் காரைநகர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த (Strategically Important) இடத்தில் அமைந்துள்ளமையால் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

காரைநகர் வரலாற்று ரீதியாக மிகவும் தொன்மை மிக்க ஊராகத் திகழ்ந்ததற்கு வரலாற்று நூல்களில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

காரைதீவு குமரி கண்டத்தின் ஒரு பகுதி

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்துமாகடலின் பெரும் பகுதி நிலப்பரப்பாய் இருந்தது என்பர். பழந்தமிழ் நூல்கள் அதனைக் குமரி கண்டம் எனக் குறிப்பிட்டன. கடல் கோள்களாலும், இயற்கை நிகழ்வுகளினாலும் குமரி மலை உட்பட, குமரி கண்டத்தின் பெரும் பகுதி கடலில் அமிழ்ந்து போயிற்று. இந்தியாவும் இலங்கையும் மற்றும் தீவுகள் சிலவும் அழியாது எஞ்சி நின்றமையை சிலப்பதிகாரம் கலித்தொகை ஆகிய பழைய நூல்களில் இருந்து அறியலாம்.

மேலும், ஸ்கொற் எலியெற் (Scott Elliot) என்னும் மேலை நாட்டு அறிஞர் எழுதியுள்ள மறைந்த குமரி கண்டம் (Lost Lemuria) எனும் நூலில் இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தார்.

வுரலாற்று ஆராய்ச்சியாளர்கள் காரைதீவைக் குமரிகண்டத்தின் சிதைந்த பாகம் என்றும் கூறுவர் என ஈழத்துச் சிதம்பர புராண ஆசிரியர் புலவர்மணி சோ. இளமுருகனார் குறிப்பிடுகின்றார்.

மேலே கூறப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்புடையதான கருத்துக்களை திரு. செ. இராசநாயகம் யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத்தீவே காரைதீவு
சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடும் மணிபல்;லவத்தீவு காரைதீவு என பல சான்றுக்களுடன் நிறுவுகின்றார் காரைநகர் தொன்மையும் வன்மையும் நூலாசிரியர் திரு. ச. ஆ. பாலேந்திரன்.
காரைநகர் மான்மியம் எழுதிய மகாவித்துவான். எவ். எக்ஸ். சி. நடராசாவும் இக்கருத்தையே கொண்டுள்ளார்.

வித்துவான் மு. இராகவையங்கார் தனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத்தீவு இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள காரைதீவையே மணிபல்லவத்தீவு என வரலாற்றுச் சான்று காட்டி நிறுவியுள்ளார்.

காரைநகர்
காரை என்று அழைக்கப்படும் முட்செடி வரண்ட பிரதேசத்திற்குரிய இயற்கைத் தாவரம். காரையில் பலவகை உண்டு. பெருங்காரை என்பதே காரைதீவு என்ற இடப்பெயருக்குக் காரணமான இயற்கைத் தாவரம்.

யாழ்ப்பாண வைபவமாலையில் அக்காலத்தில் காரைக்கால் முதலான பல இடங்களில் இருந்து பல குடிகள் வந்து வட்டுக்கோட்டையிலும், காரைதீவு முதலிய தீவுகளிலும் குடியேறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட கருத்துக்களின்படி காரைதீவில் வாழ்ந்த முதற் குடிமக்கள் காரைக்காலில் இருந்து வந்து குடியேறினவர்கள் என்றும், ஆதலினால் தான் காரைதீவு ஆயிற்று என்றும் கூறுபவர்கள் உளர் எனக் குறிப்பிடுகின்றார் மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா.

மேலும் வேளாளர்கள் அன்றி பிராமணர்களும் காரைதீவில் வந்து இறங்கி குடியேறினார்கள் என்றும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது என்கிறார் மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா.

கார்த்திகேயப் புலவர் (1819–1898) இயற்றிய திண்ணபுரத் திரிபந்தாதியின் காப்பிலும் காரைநகர் என்ற பெயர் உண்டு. கார்த்திகேயப் புலவர் இயற்றிய திருப்போசை வெண்பா வாழ்த்துரையில் தமிழ்ப்பண்டிதர் அரு. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் காரைநகர் வேதியனாங் காரத்திகேயப்புலவர் எனக்குறிப்பிடுகின்றார். 1887ல் தட்சிண கைலாச புராணம் பதிப்பித்த சிவசிதம்பர ஐயரால் காரைநகர் எனும் பெயர் உபயோகிக்கப்பட்டிருக்கின்றது.

வாணவாஸ் செல்லையா என்பவர் பாடிய பாடலிலும் காரைநகர் என்ற பெயர் காணப்படுகின்றது.

ஊராற் பெருத்தது ஊர்காவல் யாழ்ப்பாணம் ஊர்பருத்தி
சீராற் பெருத்தது சீதாரி மானிப்பாய் சேர் நவாலி
போரரற்பெரிய பெருத்ததும் கல்விப் பேருடனே
கராற் பெருத்தது காரைநகரெனக் கண்டிடுமே

எனக் காரைநகர் மான்மியத்தில் மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா குறிப்பிடுகின்றார்.

புத்த ஜாதகக் கதையில் அபித்த ஜாதகம் என்பதில் காரைதீபம் என்ற ஒரு தீவு குறிப்பிடப்பட்டுள்ளது. அசித்தன்எனும் பார்ப்பன முனிவன் வாரணாசியினின்று காவிரிப்பூம் பட்டணம் வந்து அங்கிருந்து வான் வழியாக காரைதீவிற்கு வந்தான். அங்கு குடிலமைத்துத் தவம் செய்து, காரை இலைகளை உறைப்பும், உப்பும் இன்றி அவித்து உண்டு வாழ்ந்தான் எனவும் அவன் அவ்வாறு காரை இலைகளைப் புசித்து உயிர் வாழ்ந்ததினால் அவ்வூர் காரைதீவு எனப் பெயர் பெற்றது என அந்த ஜாதகக் கதை குறிப்பிடுகின்றது என இடப்பெயர்கள் ஓர் ஆய்வு தீவகம் என்னும் நூலில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிடுகின்றார்

தீவகத்தில் பௌத்தத்தின் செல்வாக்கு நிலைத்திருந்ததற்கான இலக்கிய தொல்லியல் சான்றுகள் உள. மகாவம்சத்தில் மட்டுமன்றி மத்திய காலத்தில் எழுந்த பௌத்த மத வழிபாட்டு இடங்களின் தொகுப்பாகிய நம்பொத்தவில் காரைதீவை (காறதிவயின) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கந்தபுராணத்திலே (அண்டகோசப்படலம் 19 – 27) சப்த தீவுகள், சப்த கடல்கள் என்பன குறிப்பிடப்படுகின்றன. கந்தபுராணத்திற் காணப்படும் தீவுப் பெயர்கள் இந்த ஏழு தீவுப் பெயர்களுடன் வருமாறு இனங்காணப்பட்டுள்ளன. (டானியல் ஜோன் 1875 – 34 – 35).
சாகம் – காரைதீவு

1922 ஆம் ஆண்டு காரைநகருக்கு வருகை தந்த சேர். பொன். இராமநாதன் ஊர் மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்பில் மகிழ்ந்து இது தீவு அல்ல காரைநகர் என்ற பெயர் வழங்கப்படல் வேண்டும்; எனக் கூறிச் சென்றார்.
மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா எழுதிய காரைநகர் மான்மியம் என்னும் நூலில் 12.09.1923 தொட்டு ஆட்சியாளரின் அங்கீகாரத்துடன் காரைநகர் என்ற நாமம் வழங்கப்பட்டு வருகின்றது என்று குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைதீவும், மட்டக்களப்பில் ஒரு காரைதீவும், யாழ்ப்பாணத்தில் ஒரு காரைதீவுமாக மூன்று காரைதீவுகள் இருந்தமை அரச பரிபாலன பணிகளில் இடர்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் மேற்குறித்த மூன்று காரைதீவுகளின் சமூக, பொருளாதார மற்றும் குடிப் புள்ளியியற் பண்புகளைக் கருத்திற்கு எடுத்த போது நகரத்திற்குரிய பண்புகள் அதிகம் காணப்படும் தீவகத்திலுள்ள காரைதீவு கொண்டிருந்தமையால் 12.09.1923 ஆம் ஆண்டு காரைநகர் என்ற பெயரினை வர்த்தமானியில் பிரசுரித்ததன் மூலம் இப்பெயர் வழக்கில் வரலாயிற்று என தீவகம் தொன்மையும் மேன்மையும் என்னும் நூலில் பேராசிரியர் கா. குகபாலன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

காரைநகரின் தொன்மை மிகு இடங்கள்

1. சத்திரந்தை:- சத்திரந்தையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைக்கப் பெற்ற சான்றுக்கள் பெருங்கற் காலத்திற்குரியன என்பதைக் காட்டுகின்றது. இச்சான்றுக்கள் மூலம் மக்கள் ஆரம்ப காலத்தில் இவ்விடத்தில் குடியேறியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

2. வேரப்பிட்டி, வேரைக்குளம், களபூமி ஆகிய இடங்கள் தொல்பொருள் பெறுமானம் மிக்க இடங்களாகவும் வரலாற்றினைக் கூறும் இடங்களாகவும் காணப்படுகின்றது.

3. ஐயனார் கோவில்:- காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தை அரசாண்ட குளக்கோட்டு மகாராசா காரை நாட்டில் வியாவிலில் எழுநிலைக் கோபுரங்களைக் கொண்ட பெரிய கோயிலைக் கட்டினார். ஐயனார் கோவிலை இடிக்க வந்த போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் ஐயனாரினால் தண்டிக்கப்பட்டனர். ஒல்லாந்தர் வியாவில் ஐயனார் கோவிலை இடித்து அந்தக் கல்லினால் கடற்கோட்டையை கட்டினர் என ஈழத்துச் சிதம்பர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாவில் ஐயனார் கோவில் பற்றி மேற்சொல்லப்பட்ட கருத்துக்கள் காரைநகர் மான்மியத்திலும் காணப்படுகின்றது.

4. இராசாவின் தோட்டம்:- அரசர்கள் வாழ்ந்த இடம். வெடியரசன் யாழ்ப்பாணத்துக் கரையோரங்களிலும் விசேடமாகத் தீவுப்பற்றுக்களிலும் அரசாட்சி செலுத்தி வந்தவன். காரைதீவில் இவன் இராசதானி இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக அங்கு தென்மேல் மூலையில் உள்ள இராசாவின் தோட்டம் என்ற பெயர் அமைந்து கிடக்கின்றது

ஓப்பற்ற நீதித்தன்மை வாய்ந்த அரசினை நிறுத்தி வட இலங்கையிற் சில ஊர்களை ஆட்சி செய்த சேது மகாராசாவின் மகன் குளக்கோட்டு மகாராசாவினது சிறப்புடைய இலக்குமி நிலைத்திருந்த இராச மாளிகை இப்போது சிதைவடைந்து காணப்படுகின்றது. அந்த அரண்மனை அமைந்த பெரிய மாளிகை கட்டப்பட்ட நிலப்பகுதியை சிறப்பமைந்த இராசாவின் தோட்டம் என்று அவ்விடத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த பெரியோர்கள் வரலாற்றைச் சொல்வார்கள்’என்று ஈழத்துச் சிதம்பர புராணம் கூறுகின்றது.

வரலாற்றில் காலத்துக்குக் காலம் பல்வேறு அரசுகளின் இராசதானியாக இராசாவின் தோட்டம் அமைந்திருந்தது என்பதை அறிய முடிகின்றது. இராசாவின் தோட்டப்பகுதி தற்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பிரதேசமாக உள்ளது.

5. திண்ணபுரம்:- ‘இற்றைக்கு இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் துளுவ நாட்டில் வசித்த தினகரன் எனும் பெயருடைய ஆரியப் பிராமணர் இலங்கையில் பல தலங்களையும் தரிசித்து துர்வாச முனிவர் வாசம் செய்த துர்வாசகிரிக்குச் (தூம்பில்) சமீபமாக இருந்த போது வீட்டுத் திண்ணைகளில் போயிருந்து பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தார். அன்றியும் கவி பாடியும் வந்தார். அதனால் தினகரன் எனும் அப்பிராமணருக்கு திண்ணைக்கவ எனும் பெயர் வழங்குவதாயிற்று. இப்பொழுதும் அவர் வசித்து வந்த இடத்திற்குத் தினகரன்பிட்டி திண்ணைக்களி (திண்ணைக்கவி என்பது மருவி) என்னும் பெயர்கள் வழங்குகின்றன. இவ்விடத்தில் வைரவர் கோவிலும், ஒரு பழைய ஆலமரமும் இருக்கின்றது. இந்த ஆலமரம் தினகரன் எனும் பிராமணரால் உண்டாக்கப் பெற்றது என ஈழத்துச் சிதம்பரம் என்னும் நூலில் சிவசிறி க. கணபதீஸ்வரக் குருக்கள் குறிப்பிடுகின்றார்.

6. கோவளம்:- கி.பி. 1348 இல் உரோமாபுரிக் கத்தோலிக்க சபைத் தலைவராகிய போப் அவர்கள் சீனதேயச் சக்கரவர்த்தியிடம் அனுப்பிய தானாபத்தியத் தலைவனாகிய யோன் டி மேரினொல்லி (John De Marignolli) என்பவன் போகும் வழியிற் கோவளத்தில் இறங்கி அவனாற் சப’ என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாண நாட்டரசியைக் காணச்சென்றதாக’ யாழ்ப்பாணச் சரித்திரத்திற் திரு. செ. இராசநாயகம் குறிப்பிடுகின்றார்.

7. யானைப்பாலம் – களபூமித் துறைமுகம்: – காரைநகர் துறைமுகம்
ஹமன் ஹில் கோட்டை HAMMENHIEL FORT
காரைநகர் துறைமுகம் இலங்கைத் தீவின் வர்த்தக நடவடிக்கைகளில் மேலாண்மை பெற்றிருந்தது.
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே காணப்படுகின்ற நீரேரிப்பகுதி பாக்கு நீரிணையோடு சந்திக்கும் மேற்குப் புற மேட்டு நிலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஹமன் ஹில் கோட்டை அமைந்துள்ளமையால் போரியல் வரலாற்றில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தது.

உலகு காவல முதலி:- உலகு காவல முதலி சோழ நாட்டில் இராச துரோகக் குற்றத்துக்குத் தப்பியோடி யாழ்ப்பாணம் வந்து காரைதீவிலே தன் குடும்பத்தோடு வாழ்ந்தவன். யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் எளிதில் பிடித்தமைக்கு அனுகூலியாக இருந்தவன்.

கனகசபைப் பிள்ளை:- 1780 ஆம் ஆண்டு காரைக்காலில் இருந்து கனகசபைப் பிள்ளை எனும் வேளாண் பிரபு காரைதீவிலே குடியேறினார். நிலம் வாங்கிச் சத்திரம்; கட்டி பிள்ளை மடம் எனப் பெயரிட்டார். ஒல்லாந்தர் அவரைத் தமது மந்திரிகளுள் ஒருவராக்கி வண்ணார்பண்ணையில் ஒரு மாளிகையும் நிலமும் கொடுத்தார்கள். கனகசபைப் பிள்ளையின் விவேகம், நேர்மை, பரோபகாரம், நற்குணம் என்பனவற்றைக் கண்டு ஒல்லாந்தர் மிக்க மதிப்பு வழங்கினர். அதனைக் கண்டு சகியாத மற்றத் தமிழ் மந்திரிகள் அவருக்கும் ஒல்லாந்தருக்கும் பேதமுண்டாக்கி காரைக்காலுக்கு மீளும்படி செய்தார்கள். ‘எம்மீது குற்றம் சிறிதும் இல்லாது இருக்கவும் ஆராயாது ஊரை விட்டு நீங்கும்படி தீர்த்த ஒல்லாந்தரும் என்னைப் போல் மனம் வருந்தி அரசைப் பறி கொடுத்து நீங்கும் காலம் சமீபித்தது. அதற்கு அறிகுறியாக இன்று செல்கின்றேன் என்று கூறி தோணியேறிய எட்டாம் நாள் ஒல்லாந்தர் அரசு இழந்தனர்’. யாழ்பாணச் சரித்திரம் என்னும் நூலில் திரு.அ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.

காரைநகரில் நூற்றாண்டுகளைக் கடந்த சமூக ஸ்தாபனங்கள்
1. 1855 ஆம் ஆண்டு காரைநகருக்கு வருகை தந்த அமெரிக்கன் இலங்கை மிஷனரிமார் ஆரம்பித்த ஏழு பாடசாலைகளில் 5 பாடசாலைகள் இன்றும் கல்விப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன.

2. 1869 ஆம் ஆண்டு காரைநகர் பொன்னாலை தாம்போதி அமைக்கப்பட்டதன் மூலம் காரைநகர் மக்கள் பொருளாதார, சமூக பண்பாட்டு ரீதியில் மேல்நிலை அடைய சந்தர்ப்பம் கிட்டியது.

3. 1888 ஆம் ஆண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட காரை இந்து ஆங்கில வித்தியாசாலை கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.

4. 1889 ஆம் ஆண்டு ஸ்ரீமான் சி. சுப்பிரமணியபிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுப்பிரமணிய வித்தியாசாலை கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.

5. 1908 ஆம் ஆண்டு காரைதீவிற்கும், ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பாதை சேவை (Ferry Service) ஆரம்பிக்கப்பட்டது.

6. 1915 ஆம் ஆண்டு சைவ மகா சபை ஆரம்பிக்கப்பட்டது. பாரத தேசத்தின் தேசபிதா மகாத்மாகாந்தி உட்பட பல பெரியார்கள் சைவமகா சபைக்கு வருகை தந்தார்கள்.

7. 1916 ஆம் ஆண்டு கோவளம் வெளிச்சவீடு கட்டப்பட்டது.

8. 1923 ஆம் ஆண்டு ஆலங்கன்றடி சுடலையில் அமைந்துள்ள எண்கோண மண்டபம் கட்டப்பட்டது. நூறு ஆண்டு காலமாக பல சுழல் காற்றுக்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

9. 1924ஆம் ஆண்டு முதன்முதலில் காரைநகரில் இருந்துகலிகால தீபம் என்னும் பத்திரிகையை வித்துவான் மு. சபாரத்தின ஐயர் மணற்காட்டு அம்மன் கோவில் சூழலில் அமைந்திருந்த தனது மணிவாசக அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டார்

யாழ் குடாநாட்டு கிராமங்களில் காரைநகர் நீண்டதோர் வரலாற்று பெருமை மிக்க கிராமம் கிராம மக்கள் சைவ சமயத்துக்கும் தமிழிக்கும் முக்கியத்துவம் வழங்கி வருவதால் சிவபூமி என்று அழைக்கப்படுகின்றது. கிராம மக்கள் தம் வாழ்வின் ஒவ்வொர் அசைவிலும் பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிப்பதோடு தமக்கென தனியானதொரு சம்பிரதாய பழக்க வழக்கங்களுடன் வாழப்பழக்கப்பட்டவர்கள்.

தாம், தமது உறவு, தமது ஊர் எனும் மாறாப்பற்று உறுதியுடன் தம் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்களை 1980களில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை ஆட்கொள்ள ஆரம்பித்தது. 1980களின் நடுப்பகுதியில் கிராமத்தின் தெற்கு தென் மேற்கு பகுதிகளில் ஆரம்பித்த இடப்பெயர்வு 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கிராமத்து மக்களில் 99மூ இடப்பெயர்வுக்கு உள்ளாக்கியது

1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி மக்கள் மீள குடியமர ஆரம்பித்த போதும் வெளியேற்றமும் உள் வருகையும் இன்று வரை தொடர்கின்றது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை போர் என்பனவற்றின் விளைவாக ஏற்பட்ட மக்களின் இடப்பெயர்வு கிராமத்தின் வாழ்வின் அனைத்து படி நிலைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி சென்றுள்ளது.

1991ம் ஆண்டுக்கு முன்னரான குடித்தொகையை ஏற்படுத்தல் மக்கள் மத்தியில் பண்புசார் வாழ்க்கை பண்புகளை வளர்த்தல் என்பனவற்றை இன்று நம் கிராமம் வேண்டி நிற்கின்றது. இவ் உன்னத பயணத்தில் அனைவரும் பரிசுத்தமான பங்களிப்பை வழங்கல் காலத்தின் கட்டாயம்.

 

மயானங்கள்

 

 

மயானங்கள்

எஸ். கே. சதாசிவம்

1. சாம்பலோடை மயானம்மயான மண்டபம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

காரைநகர் கிராமசபையின் முதலாவது தலைவர் திரு. சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களால் எண்கோண வடிவில் இம்மண்டபம் 1922இல் கட்டப்பட்டது. திரு. கணபதிப்பிள்ளை தனது பரம்பரையின் ஏழு முதற் குடிமக்களின் முதற் பெயரை மண்டபத்தின் மரச்சட்டத்தில் பொறித்து வைத்துள்ளார். இம்மடம் இயற்கை நிகழ்வுகளால் பழுதடையாது பாதுகாப்பாக இன்றுவரை உள்ளது. நமது கிராமத்தின் தொல்லியல் அடையாளத்தின் சின்னமாக விளங்கும் இம்மண்டபத்தை உள்ளவாறு புனரமைத்துப் பேணுதல் கிராமத்தின் வரலாற்றை உறுதி செய்ய உதவும். இம்மயானம் சாம்பலோடை மயானம் மொட்டையர் சுடலை என்று அழைக்கப்படுகின்றது இப்பகுதிக்கு அன்றைய காலகட்டத்தில் திருவாலங்காடு என்று அழைக்கப்பட்டதாக செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

1960 களில் இம்மண்டபத்தின் புனரமைப்புப் பணிகளும் இன்று மயான வளாகத்தில் காணப்படுகின்ற ஆல், அரசு, மருத மரங்கள் நாட்டப்பட்டமையும் சம்பந்தர் கண்டியைச் சேர்ந்த திரு. நல்லதம்பி கனகநாயகம் அவர்களால் மருதடி இடைப்பிட்டி ஆகிய குறிச்சிகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அண்மைக் காலங்களில் காரைநகர் பிரதேச சபை இம்மயானத்தைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

 

 

 

2. ஆலங்கன்றடி மயானம்

இம்மயானத்தில் அழிந்த நிலையில் காணப்படுகின்ற மண்டபம் மலாய் நாட்டில் அரச பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. அம்பலவாணர் கந்தையா (குயிலர்) அவர்களால் கட்டப்பட்டது. இவர் வாழ்ந்த காலம் 1901 – 1968. தற்போது பாவனையில் உள்ள மடம் தங்கொட்டுவ பிரபல வர்த்தகர் திரு. இராமலிங்கம் மார்க்கண்டு அவர்களால் 1980 களில் கட்டப்பட்டது. இம்மயானத்தில் அமைந்துள்ள எரிகொட்டகை திரு. கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் ஞாபகார்த்தமாக 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

 

 

3. நீலகிரி மயானம்

காரைநகர் கடற்படை தளத்தின் பாதுகாப்பிற்காகக் காணிகள் சுவீகரிக்கப்பட்ட பொழுது நீலகிரி மயானமும் உள்ளடக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் நீலகிரி மயானம் மீண்டும் புதிய இடத்தில் செயற்பட ஆரம்பித்தது. இம்மயானத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் வியாவில் ஐயனார் தேவஸ்தான அறங்காவலர் முன்னின்று செயற்பட்டார். இராமுப்பிள்ளை மண்டபம் அன்னாரின் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. காரை நலன்புரிச் சங்கம் – லண்டன் இம்மயான அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்கியது.

 

 

 

4. தில்லை மயானம்

1920 களின் பிற்பகுதியில் தில்லை மயானம் பாவனைக்கு வந்ததாக களபூமியில் வாழ்கின்ற சிரேஸ்ட பிரஜைகள் தெரிவிக்கின்றனர். தில்லை செடிகள் நிறைந்து காணப்பட்டமையால் தில்லை சுடலை என அழைக்கப்படுகின்றது. திரு. தி. மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் இளைப்பாறு மண்டபம், கிணறு, வரவேற்பு வளைவு என்பன 2003 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. காரை நலன்புரிச் சங்கம் – லண்டன் நிதி உதவியுடன் எரிகொட்டகை அமைத்து தகன மேடை, கிணறு என்பன அபிவிருத்தி செய்யப்பட்டது. மயானத்தின் எல்லைகள் எல்லைப்படுத்தப்பட்டு அத்திவாரம் இட்டு கட்டப்பட்டது.

 

 

காரைநகரில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

 

காரைநகரில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

 

இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை

எஸ்.கே.சதாசிவம்

இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ள “இலகடி வளவு” என்று அழைக்கப்படும் காணி சிதம்பரம் சிவபுரி மடத்தின் ஆதனம். 1936 ஆம் ஆண்டு சிதம்பரம் சிவபுரி மட ஆதீனத்தின் இலங்கைப் பிரதிநிதி தம்பிரான் அடிகளால் 99 வருடக் குத்தகை அடிப்படையில் பாடசாலை நடாத்துவதற்காக வழங்கப்பட்டது. சைவ பரிபாலன சபையின் தலைவர் நியாயதுரந்தர் திரு. தி. முத்துச்சாமிப்பிள்ளை அவர்களால் வருடந்தோறும் காணி வாடகையாக ரூபா.10/= செலுத்தப்பட்டது. இப்பாடசாலையானது 1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரால் காரைநகர் கிழக்கு (இலகடி) இந்து தமிழ்க்கலவன் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

“இக்காலப்பகுதியில் திரு. ஏ. கனகசபை காரை இந்து ஆங்கில வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். அப்போது பாடசாலையின் வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த Feeding School சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுடன் இலகடியில் கோவிலுக்குச் சொந்தமான காணியில் Feeding School இயங்க ஆவன செய்தார். மேலும் உள்ளுர் வாசிகளின் உதவியுடன் தேவையான கட்டிடங்களை அமைப்பதற்கு ஆவன செய்தார்” என Your Country and Your College எனும் நூலில் திரு ஆசைப்பிள்ளை அரசரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சயம்பு மலரில் “அந்த நாள் ஞாபகம்” எனும் தலைப்பிலான கட்டுரையில் பழைய மாணவன் திரு. ந. செல்லையா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ் 3 ஆம் வகுப்புச் சித்தியடைந்த பிள்ளைகளைத்தான் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்க முடியும். ஆகவே தமிழ்ச் சைவப் பாடசாலைகள் இல்லாததை உணர்ந்த பெரியார் எங்கள் ஆங்கிலப் பாடசாலை Feeding School மாணவர்களுக்கு ஒரு சைவ தமிழ் தேர்ச்சிப் பாடசாலை ஆரம்பிக்க திட்டமிட்டார். தமிழ் பாடசாலை கீற்றுக் கொட்டிலில் அம்பலச் சட்டம்பியார் தலைமையில் ஆரம்பமானது. சயம்பர் ஆரம்பித்த தமிழ் ஆங்கிலப் பாடசாலை தான் பின் இலகடிக்கு மாற்றப்பட்டு நல்லதம்பி மாஸ்டர் தலைமையில் சிறப்புப் பெற்றது.” இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் இயங்கியது.

26.03.1936 ஆம் ஆண்டு இந்து சாதனப் பத்திரிகையில் இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை பெற்றோர் தினக் கொண்டாட்டம் தொடர்பாக பின்வரும் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. காரைநகர் இந்துக் கல்லூரி ஆதாரப் பாடசாலை பெற்றோர் தினக் கொண்டாட்டம் 21.03.1936 சனிக்கிழமை பி. ப. 6.00 மணிக்கு இந்து ஆங்கில வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அத்தருணம் திரு. சி. செல்லையா அவர்கள் தலைமை வகித்தனர். முதலில் இரு மாணவிகள் வந்தனப் பாட்டுப் பாடினர். இரண்டாவதாக தலைமை ஆசிரியர் அவர்களால் பாடசாலை அறிக்கை வாசிக்கப்பட்டது. மூன்றாவதாக மாணவர்கள் பாட்டு, சம்பாஷனை, நடித்தல், மதப் பிரசங்கம், கோலாட்டம் முதலிய அப்பியாசங்களைச் செய்து காட்டி சபையோரை மகிழ்வித்தனர். நான்காவதாக தலைவர் அவர்களால் மாணவர்களுக்குப் பரிசில் வழங்கப்பட்டது. பின் இந்து ஆங்கிலப் பாடசாலை தலைமை ஆசிரியர் திரு.ஏ.கனகசபை B.A அவர்கள் பெற்றோரும் பாடசாலையும் எனும் விடயமாகவும் பிரம்மஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்கள் சமயக் கல்வி எனும் விடயமாகவும் பிரம்மஸ்ரீ ச. நவநிதி கிருஸ்ணபாரதி அவர்கள் மகாத்மா காந்தி அடிகள் எனும் விடயமாகவும் சிறந்த உபநியாசங்கள் செய்த பின் தலைவர் குறிப்புரை கூறினார். தiமை ஆசிரியர் கூறிய வந்தனோ உபசாரத்தோடு கூட்டம் இரவு 9.00 மணியளவில் இனிது நிறைவேறியது.

சைவ பரிபாலன சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய இப்பாடசாலையில் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள் நடைபெற்றன. 6 ஆம் வகுப்பிற்கான கல்வி கற்பதற்கு மாணவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சென்றனர். இக்காலப்பகுதியில் இந்தப் பாடசாலை காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாகக் கருதப்பட்டது. காரைநகர் இந்துக் கல்லூரி நிர்வாகம் இப்பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களும் உதவிகளும் வழங்கி வந்தது. 1960 களின் முற்பகுதியில் பாடசாலை அதிபர் வசிப்பதற்காக இல்லம் அமைப்பதற்கு சைவ பரிபாலன சபை அனுமதி வழங்கியது.

திரு. க. நல்லதம்பி அவர்களின் சேவைக் காலத்தில் அவரது முயற்சியால் காரைநகர் வர்த்தகர்களின் நிதி உதவி மூலம் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது. 1960 இல் தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட போது இப்பாடசாலை அரசுடைமை- யாக்கப்பட்டது. திரு. க. நல்லதம்பி 1936 முதல் 1963 வரை 27 ஆண்டு காலம் தொடர்ச்சியாகச் சேவையாற்றி மீண்டும் 1966 முதல் 1970 வரை அதிபராகக் கடமையாற்றினார். இப்பாடசாலையில் சராசரி 150 மாணவர்கள் கல்வி கற்றனர். 4 முதல் 5 வரையிலான ஆசிரியர்கள் சேவையில் இருந்தனர். திரு. க. நல்லதம்பியைத் தொடர்ந்து திருவாளர்கள் சுப்பிரமணியம், ஜெகசோதி,. க.தில்லையம்பலம், நடராசா, திருமதி.த.துரைராசா ஆகியோர் கடமையாற்றினர்.

1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது இப்பாடசாலை இடம்பெயர்ந்து கொத்தணி அமைப்புப் பாடசாலைகளுடன் இணைந்து 1991 ஆம் ஆண்டு மே 10ந் திகதியில் இருந்து பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து வட்டு திருஞான சம்பந்தர் வித்தியாசாலையிலும் இயங்கியது. 1993 ஆம் ஆண்டு கல்வித் திணைக்களம் பாடசாலைகள் தனித்தனிக் காலை நேரப் பாடசாலைகளாக இயங்க வேண்டும் என எதிர்பார்த்தது. போதியளவு மாணவர் இன்மை, பொருத்தமான இடம் கிடைக்காமை, மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கான சூழல் நிலவிய காரணங்களாலும் 1994 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அதிபர் திருமதி. த. துரைராசா ஓய்வு பெற்றமையாலும் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலையில் கடமை புரிந்த அதிபர்கள்

இல.         பெயர்                                                          காலம்
01        திரு. க. நல்லதம்பி
02        திரு. சுப்பிரமணியம்
03        திரு. க. நல்லதம்பி
04        திரு. ஜெகசோதி
05        திரு. க. தில்லையம்பலம்
06        திரு. நடராசா
07        திரு. க. தில்லையம்பலம்
08        திருமதி. த. துரைராசா                                03..10.1994

03..10.1994 முதல் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

 

காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

எஸ்.கே.சதாசிவம்

1855 ஆம் ஆண்டு அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை காரைநகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தெல்லிப்பளையில் அமெரிக்கன் மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தராதரமுள்ள ஆசிரியர் திரு. நாத்தான்வேல் இப்பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து திருமதி.முத்தம்மா ஜேக்கப் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் ஊரி, பிட்டியோலை, வேரப்பிட்டி போன்ற தூர இடங்களிலிருந்தும் சடையாளிப் பாடசாலைக்கு அண்மைய சூழலில் வாழ்ந்த மாணவர்களும் இப்பாடசாலையில் கல்வி கற்பதற்காக இணைந்து கொண்டார்கள்.

1938 ஆம் ஆண்டு திரு. போல் ஜோனா தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பாலர் வகுப்பு முதல் சிரேஸ்ட பாடசாலை தராதர வகுப்புக்கள் வரை நடைபெற்றது. 250 க்கும் – 300 க்கும் இடைப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். மாணவர்கள் கலை, இலக்கியம், நடனம், நாட்டியம் போன்ற தமிழர் பண்பாட்டுக் கலைகளைக் கற்பதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். இது தொடர்பான விழாக்கள் பாடசாலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு. போல் ஜோனா பெற்றோர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த அதேவேளை பெற்றோர்கள் சில தீர்மானங்களை மேற்கொள்வதில் அவர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தினார்.

1946 ஆம் ஆண்டு அளவெட்டியைச் சேர்ந்த திரு. சிதம்பரப்பிள்ளை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 6 ஆம் வகுப்பு வரை கற்கும் பாடசாலையாக பாடசாலை மாற்றமடைந்தது. மீண்டும் சிறிது காலத்தின் பின் திரு. போல் ஜோனா அதிபராக நியமிக்கப்பட்டார். பாடசாலையின் தரத்தை உயர்த்துவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக 9 ஆம் வகுப்பு வரை பாடசாலையில் வகுப்புக்கள் நடைபெறலாயின. நெசவுப் பாடம் பாடசாலையில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். உயர் கல்வி கற்க முடியாத மாணவர்கள் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்தது.

1960 களில் ஆங்கிலப் பாடசாலைகளில் கற்க வேண்டும் என்ற மனோபாவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் காணப்பட்டது. இதனால் 6 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுச் சென்றனர். 1 முதல் 5 வகுப்பு வரையிலான ஆரம்ப பாடசாலையாக இப்பாடசாலை மாற்றம் பெற்றது. 1962 ஆம் ஆண்டு மிஷனரி பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட பொழுது அரசாங்கப் பாடசாலையானது. 1971 இல் திரு. போல் ஜோனா ஓய்வு பெற்றமையைத் தொடர்ந்து திரு வைத்திலிங்கம் பதில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார்.
1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமதி. பாக்கியம் ஐயம்பிள்ளை பதில் அதிபராக நியமிக்கப்பட்டு 1975 இல் நிரந்தர நியமனம் பெற்றார். நீண்ட காலத்திற்குப் பின்னர் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றனர். பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கு பற்றி வெற்றியீட்டினர். பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி என்பன கிரமமாக நடைபெற்றது. ஆசிரியர் பற்றாக்குறையின் மத்தியிலும் மாணவர்களுடைய கல்வி செயற்பாடுகள் சிறப்பாக அமைந்தது.

1991 இன் ஆரம்பத்தில் 53 மாணவர்கள் கல்வி கற்றனர். போர்ச்சுழல் நிலவியமையினால் 1991 மார்ச் இறுதிப்பகுதியில் பாடசாலை வளாகத்தைக் கைவிட்டனர். 1991 ஏப்ரல் முதல் வாரத்தில் விமானக்குண்டு வீச்சினால் பாடசாலை முற்றாக அழிந்து போயிற்று.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆந் திகதியில் இருந்து காரைநகர் பாடசாலைகள், கொத்தணி அமைப்புப் பாடசாலைகள் என இணைந்து இயங்கிய போது சிறிது காலம் வட்டு இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் பிரப்பன்குளம் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கலாநிதி. ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலய கனிஸ்ட பிரிவுடன் சேர்ந்து இயங்கியது.; 1993 ஆம் ஆண்டு கல்வித் திணைக்களம் பாடசாலைகள் தனித்தனிக் காலை நேரப் பாடசாலைகளாக இயங்க வேண்டும் என எதிர்பார்த்தது. போதியளவு மாணவர் இன்மை, பொருத்தமான இடம் கிடைக்காமை, மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கான சூழல் நிலவிய காரணங்களாலும் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் திருமதி. பா. ஐயம்பிள்ளை ஓய்வு பெற்றமையாலும் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. காரைநகரில் பாடசாலை இயங்கிய போது பேணப்பட்ட ஆவணங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இயங்கியபோது பேணப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கிய ஊர்காவற்றுறை கோட்டக் கல்வி அலுவலகத்தில் அதிபர் திருமதி. பா. ஐயம்பிள்ளை கையளித்தார்.

கடந்த காலங்களில் காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, அயற் பாடசாலைகளில் அன்றும் இன்றும் உள்ள மாணவர் எண்ணிக்கை என்பன அறிக்கையிடப்பட்டதுடன், பாடசாலையின் அண்மிய சூழலில் மீள் குடியேற்றம் நடைபெறாமை போன்ற காரணங்களை நியாயப்படுத்தி காரைநகர் கல்விக் கோட்டத்தை காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் கட்டுவதற்கான முன்மொழிவுகள் கல்வித் திணைக்களத்திற்கு 2015 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் எழுத்து மூலமான ஒப்புதலும் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இடையூறுகள் விளைவிக்கப்பட்டமையினால் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் தொடரவில்லை. காரைநகர் கிராமத்தின் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் நூற்றாண்டு வரலாற்று பெருமை மிக்க பாடசாலை கைவிடப்பட்ட நிலையில் அழிவுற்று வருவதைத் தற்போது காணக்கூடியதாக உள்ளது.

காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலையில் கடமை புரிந்த அதிபர்கள்

இல.                            பெயர்                                                                                    காலம்
01                    திரு. நாத்தான்வேல்                                                                   1919 – 1938
02                    திரு. போல் யோனா                                                                   1938 – 1946
03                    திரு. சிதம்பரப்பிள்ளை                                                    1946 – சிறிது காலம்
04                    திரு. போல் யோனா                                                                    1946 – 1971
05                    திரு, வைத்திலிங்கம்                                                                   1971 – 1972
06                    திருமதி. பா. ஐயம்பிள்ளை                                                 1973 – 14.03.1994

14.03.1994 இல் இருந்து பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

ஒரு மான் குட்டி துள்ளியது! ஒரு மயில் குஞ்சு ஆடியது! இல்லை! ஒரு பம்பரம் சுழன்றது! பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம் மின்னியது!

 

ஒரு மான் குட்டி துள்ளியது! ஒரு மயில் குஞ்சு ஆடியது! இல்லை! ஒரு பம்பரம் சுழன்றது! பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம் மின்னியது!

மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள் தான் நியூட்டனை எழுப்பியது. துர்க்கா அன்று ஆடிய ஆட்டம் தான் என்னை உசுப்பியது. வியாக்ரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவனின் நடனத்தைக் காண ஆசைப்பட்டனர். அவர்களுக்காக என் பெருமான் இல்லை எம் பெருமான் நிகழ்த்திக்காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனம். ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம். அங்கேயும் நீ ஆடினாய். திருஆலங்காட்டில் ரத்தினசபையில் ஊர்த்துவத் தாண்டவமாடினான். மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய். நெல்லையில் தாமிர சபை குற்றாலத்தில் சித்திர சபை. சிவன் ஆடிய இந்த ஜந்து சபைகளிலும் நீங்கள் ஆடி அவன் அருளைப்பெற அந்த ஆடவல்லானை இறைஞ்சுகிறேன். கழலோடு திருவிரலால் கரணம் செய்து கனவின் கண் திருவுருவம் தான் காட்டும்மே எழிலாரும் தோள் வீசித்தான் ஆடும்மே என்று அப்பர் சுவாமிகள் பாடுவதைப்போல அழகாக இருந்தது உங்கள் நடனம். தலையிலிருந்து பாதம் வரை அழகிய அசைவுகளையும் தாளத்தின் மிகநுணுக்கமான அளவைகளையும் கைகள் விரல்களின் அழகான முத்திரைகளையும் பாதஜால வித்தைகளையும் இசை அதன் தாள மெல்லின வல்லினங்களையும் நீங்கள் அபிநயம் செய்தது. ஆகா! சபாஸ்! எனக்கு எல்லாமே கேள்வி ஞானம் தான். கம்பராமாயணத்தில் மிதிலைக்காட்சிப் படலத்தில் கம்பரும் இதையே சொல்கிறார். கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமும் செல்ல மனம் வழி பாவமும் பாவ வழி ரசமும் சேர. கை முத்திரைகள் வழி கண் செல்லும் கண்கள் செல்லும் வழி மனம் செல்லும் மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். உள்மனத்தின் உந்துதல் தான் ஊக்கம்! ஆசைப்படுவது. அதை அடையமுடியுமென்று அழுத்தமாக நம்புவது. அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை மாறாத ஊக்கத்துடன் உழைப்பது. இதனால் வெற்றித் தேவதையின் மாலை உங்கள் கழுத்தை அலங்கரிக்க கண்டேன். அடிக்கற்கள் இல்லாமல் கோபுரங்கள் இல்லை. ஆணிவேர் இல்லாமல் மரங்கள் இல்லை. ஏற்றப்பட்ட விளக்கை விட ஏற்றிவைத்த தீக்குச்சியே உயர்வானது என அப்துல் ரகுமான் அழகாகச் சொல்வார். இந்த தருணத்தில் உங்கள் குருவை ஆராதிக்கின்றேன். ஒரு வைரத்தை செம்மையாக பட்டைதீட்டி இருக்கிறார். மனதை அமைதிப்படுத்தி மகிழ்வித்த ஒரு நடனம். சியாமா! கலையோடு கூடிய பெயர். சியாமா சாஸ்திரிகள்……..!!!

என் வாழ்வில் ஏதாவது அதிசயம் நிகழுமா? நீயே அதிசயமாக மாறிவிடு என்றான் நிக். துர்க்கா உங்கள் வாழ்வில் இது அதிசயம் அல்ல புது அத்தியாயம். தெய்வத்தை ஆனந்தப்படுத்தி அவரது பாதகமலங்களை அடைய எளிய வழி இசை நடனம் போன்ற வேறு சாதனமேதுமில்லை என்பது ஆன்மீக கணக்கீடு. யார் வேண்டுமானாலும் ஒரு காரியத்தை ஆரம்பித்து விடலாம் என்னைப் போல. ஆனால் தொடர்ந்து உழைப்பவனால் மட்டுமே அதை செம்மையாக செய்து முடிக்க முடியும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரி துர்க்கா. கனவு காண்பதற்கு தெரிந்த எந்த ஒரு இளைஞன் அல்லது யுவதிக்கும் செழிப்பு வந்தே தீரும். துர்க்கா நீயும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

புல்லாங்குழல் வயலின் மிருதங்கம் பிரத்தியேகமாக தைக்கப்பட்ட வண்ணப்பட்டு ஆடைகள். சிலை ஒன்று ஆடியதைப் பார்த்தேன். வண்ண வண்ண மேலாடை……ஆ ஆ ஆ ஆ ஆ . வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும் பைங்கிளி மான் கூட்டம் மயங்க தாவி தாவித்தான் வந்தாள். விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா. முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ. தலை சிறந்த கலை விளங்க நடை புரியும் பதுமையோ புதுமையோ. சதங்கைகள் தழுவிய பதங்களில் பலவித ஜதி ஸவரம் வருமோ. குரல் வழி வரும் அணிமொழியொரு சரச பாஷையோ. சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ. ஆடல் கலையே தேவன் வந்தது.

மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள். திரண்ட இருட்டை திரட்டியடிக்க தீக்குச்சி ஒன்று கிழித்தாள். நடந்து போகும் மேகம் பறித்து நட்சத்திரங்கள் துடைத்தாள் துர்க்கா. வுpண்ணும் மண்ணும் வெற்றியின் இலக்கு. எல்லாத் திசையும் திறந்து கிடக்கு. இனிவரும் காலம் உனக்கு.

கற்பூர வாசனையும் கமலப் பூ வாசனையும் அற்புதமாய் மணக்கின்ற அரும் தமிழால் வாழ்த்துகின்றேன். இன்னும் பல மேடைகளில் திங்களும் ஆட சூலமும் ஆட திரிசடை மேல் ஒரு கங்கையும் ஆட……..

அன்புடன்
கணபதிப்பிள்ளை ரஞ்சன்.

பிரிட்டிஸ் மன்னரது வானியற் கழக உறுப்பினர் (Fellow of the Royal Astronomical Society) அல்லின் ஏபிரகாம் அமரத்துவம் அடைந்து நூறாவது ஆண்டு

 

பிரிட்டிஸ் மன்னரது வானியற் கழக உறுப்பினர்

(Fellow of the Royal Astronomical Society)

அல்லின் ஏபிரகாம் அமரத்துவம் அடைந்து நூறாவது ஆண்டு

                                                                        எஸ். கே. சதாசிவம்

1910 களில் 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஹேலீஸ் வால்வெள்ளியின் வரவினை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. விஞ்ஞானிகளும் வானியலாளர்களும் வால்வெள்ளியின் வரவை அவதானிக்கவும், விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளவும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறு உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் மின்சாரமோ அன்றி வேறு எந்த நவீன வசதிகளோ அற்ற காரைதீவில் தனிமனித வானியலாளாரான அல்லின் ஏபிரகாம் 3.5 Inch அளவுடைய தூரதர்சியுடன் (Telescope) பனைமரங்களுக்கிடையில் பரண் அமைத்து தன் மாணாக்கரின் துணையுடன் வால்வெள்ளியின் வருகையைக் கணிப்பதற்காகக் காத்திருந்தார். மேற்குலகின் வானியலாளர்கள் போல நவீன விஞ்ஞான கருவிகளையோ அல்லது வசதி மிக்க ஆய்வு கூட வசதிகளையோ அல்லின் ஏபிரகாம் பெற்றிருக்கவில்லை. ஏனைய வானியலாளர்கள் போல் அன்றி தினசரி இரவும் மாசற்ற வானத்தை அவதானிக்கும் அனுகூலத்தை அல்லின் ஏபிரகாம் பெற்றிருந்தார்.

வால்வெள்ளி பூமியில் மோதும், பூமியில் வாழ்பவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வால்வெள்ளியின் வால் உலகை மாசடையச் செய்யும் என்று பத்திரிகைகள் உணர்ச்சியையும், ஆவலையும் கிளறக்கூடிய செய்திகளை வெளியிட்டன. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என விஞ்ஞான பூர்வமான நியாயங்களுடன் அல்லின் ஏபிரகாம் மறுதலித்தார். அல்லின் ஏபிரகாம் மக்கள் மத்தியில் நிலவிய மனக்கலக்கங்களை நீக்கி, வால்வெள்ளியின் வருகையை எதிர்கொள்ள தயார்படுத்தினார்.

1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட “The Ceylon Observer” பத்திரிகைச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி காரைநகர் ஆங்கில வித்தியாசாலையில் 500 பேர் பிரசன்னமாகவிருந்த கூட்டத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியின் பேராசிரியர் அல்லின் ஏபிரகாம் ஹேலீஸ் வால்வெள்ளியின் வருகை பற்றி விரிவுரை நடாத்தினார். வரைபடங்களின் துணையுடன் ஆற்றிய விரிவுரை பங்குதாரரின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. காரைநகர் மக்களுக்கு ஹேலீஸ் வால்வெள்ளி வரவு தொடர்பான பிந்திய தகவல்களை வழங்கி மக்களை அறிவு மயப்படுத்தினார்.

1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் ஹேலீஸ் வால்வெள்ளியை வெற்றுக்கண்களால் பார்க்கலாம் என அல்லின் ஏபிரகாம் வரவுரைத்தார். 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி காரைதீவில் வெற்றுக்கண்களால் அல்லின் ஏபிரகாம் முதன் முதலாகக் கண்ணுற்றார்.

1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி காட்டூம், 19 ஆம் திகதி பம்பாய் கோடைக்கானல், 25ஆம் திகதி இங்கிலாந்து ஆகிய இடங்களில் ஹேலீஸ் வால்வெள்ளியைப் பார்வையிடலாம் என கொழும்பு பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.

அல்லின் ஏபிரகாம் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அவதான நிலையங்களின் கணிப்புக்களையும் உடனுக்குடன் அறிந்திருந்தார். இந்த நாடுகளில் முன்னணியில் இருந்த வானியல் மேதைகளுடன் தொடர்பில் இருந்தார். இந்தியாவின் கோடைக்கானலில் அமைந்திருந்த அவதான நிலையத்துடன் நெருக்கமான உறவைப் பேணினார்.

1909 ஆம் ஆண்டு யூன் மாதம் 11 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் வானியல் அவதான நிலையத்தில் பணியாற்றிய பிரித்தானியரான திரு.அலெக்ஸ் ஜோய்சிலின் பாம்போட் என்பவர் பிரிட்டிஸ் மன்னரது வானியற் கழக உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அல்லின் ஏபிரகாம் பிரிட்டிஸ் மன்னரது வானியற் கழக உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். (Fellow of the Royal Astronomical Society) அல்லின் ஏபிரகாம் பிரிட்டிஸ் மன்னரது வானியற் கழகத்தின் இலங்கையின் முதலாவது உறுப்பினரும், ஆசிய நாட்டின் எட்டாவது உறுப்பினர் என்னும் பெருமைக்கு உரியவர்.

காரைநகர் மணற்காட்டுப் பகுதியில் வாழ்ந்த பிரம்மஸ்ரீ. கா. சி. மகேசசர்மா என்னும் அந்தணர் அல்லின் ஏபிரகாமின் மாணவனாக இருந்தார். அவரின் உதவி பஞ்சாங்கங்களையும், கோள் கணிப்புக்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தது. பின்னாளில் பிரம்மஸ்ரீ. கா. சி. மகேசசர்மா வானசாஸ்திர துறையை முயன்று கற்று கிரகணம் ஒன்று நிகழும் என்பதை முன்னதாகவே கணித்துத் தெரிவித்து அவ்வாறே நிகழ்ந்தமையால் பிரிட்டிஸ் மன்னரது வானியற் கழகத்தின் (F.R.A.S) மகிமை அங்கத்துவம் பெற்றுக் கொண்டார்.

வானசாஸ்திரத்தில் இயல்பாகவே ஈர்க்கப்பட்ட அல்லின் ஏபிரகாம் காரைதீவில் இருந்தே விண்மீன்களையும், கோள்களையும் ஆய்வு செய்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் ‘மிலைனி’ சஞ்சிகையிலும், உதயதாரகை பத்திரிகையிலும் வானசாஸ்திரம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார்.

யாழ்ப்பாணக் கல்லூரியில் இருபத்தொரு ஆண்டுகள் வானசாஸ்திரம், கணிதம், தமிழ் ஆகியவற்றின் பேராசிரியராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கி அதிபர்களுக்குப் பக்கபலமாகச் செயலாற்றினார். கல்விமான்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறிது காலம் தமது ஆசிரியர் பதவிகளில் நின்று விலகியிருந்தார்.

காரைதீவில் அநேக ஆரம்ப தமிழ்ப்பள்ளிக்கூடங்களை அமெரிக்க மிஷனரிமார்களைக் கொண்டு தொடக்கி வைத்தார். “மதுவிலக்கு கும்மி” பாடி உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் காரைதீவில் இருந்த அனைத்து மதுக்கடைகளையும் மூடும்படி செய்தார். உலகப் புகழ் பெற்ற கல்விமானாக இருந்த வேளையிலும் கிராமத்தில் கிராமத்தவனாக வாழ்ந்து சாதாரண மக்களுடன் உறவும் அவர் தம் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளும் பண்பு மிக்கவராக வாழ்ந்தார்.

அல்லின் ஏபிரகாம் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தைத் தேடிக் கொண்டார். சைவத் திருமுறைகளை தம் தேனினும் இனிய குரலில் பக்தியுடனும், பண்புடனும் பாடும் ஆற்றல் பெற்றவர்.

சிறு வயதில் தன் பெற்றோரை இழந்த அம்பலவாணர் தன் சிறிய தந்தையாரின் அரவணைப்பில் வாழ்ந்தார். இளமையின் சுமை அன்னாரை கிறிஸ்தவ மதத்தைத் தழுவ நிர்ப்பந்தித்தது. அல்லின் ஏபிரகாம் எனப் பெயர் பெற்றார். மதமாற்றம் தந்த கல்வி வாய்ப்புக்கள் அல்லின் ஏபிரகாமை புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. செல்வத்தினதும், செல்வாக்கினதும் தலையீடு இன்றித் தன் முயற்சியால் சாதனை படைத்தார். வசதிகளும், வாய்ப்புக்களும் குறைந்த காரைதீவில் வாழ்ந்திருந்த போதும் கால் பதித்த அத்தனை முயற்சிகளிலும் வெற்றியாளனாகத் திகழ்ந்தார். விஞ்ஞானத் துறையில் ஈழத்தமிழர்களின் முதல் வழிகாட்டி அல்லின் ஏபிரகாம்.

சர்வதேசப் புகழ் பெற்ற வானசாஸ்த்திர விற்பன்னர் அல்லின் ஏபிரகாம் 1922 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆந் திகதி தமது ஐம்பத்தேழாவது வயதில் மரணத்திரையால் மறைக்கப்பட்டார்.

 

வியன்தகு வித்தகர் ஐயாத்துரை வர்ணகுலசிங்கம் (அமரர்.A.V.குலசிங்கம்)

 

வியன்தகு வித்தகர் ஐயாத்துரை வர்ணகுலசிங்கம்

(அமரர்.A.V.குலசிங்கம்)

எஸ். கே. சதாசிவம்

திரு.A.V.குலசிங்கம் தன் வாழ்நாளில் கால் பதித்த அனைத்து முயற்சியாண்மையிலும் முதல்வராக விளங்கியவர். ஆசிரியர், அரசியல் வாதி, பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், விவசாயி ஆகிய தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக ஆற்றக் கூடிய பன்முக ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார். இத்தகையதோர் திறமைசாலி காரைநகரில் ஆடம்பரமின்றி, சாமானியனாக வாழ்ந்து தனது எண்பத்து எட்டாவது வயதில் இவ்வுலகில் இருந்து விடை பெற்றுச் சென்றார்.

1890ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11ந் திகதி காரைநகரில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை அயலில் இயங்கிய களபூமி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று, மலாய் நாட்டில் பணியாற்றிய தந்தையிடம் சென்று கல்வியைத் தொடர்ந்து எழுதுவினைஞராகப் பணியாற்றினார்.

எழுதுவினைஞர் பணியில் மனநிறைவு காணாது தாயகம் திரும்பினார். காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலையில் ஸ்தாபகர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களுடன் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் பிரியாவிடை நிகழ்வு    திரு. A.V.குலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

 

1947 ஆம் ஆண்டு சுப்பிரமணிய வித்தியாசாலையில் நடைபெற்ற பெற்றோர்  தின விழாவின் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட  திரு.A.V. குலசிங்கம் அவர்களுடன் பாடசாலை ஆசிரியர்களும் முகாமைத்துவக் குழுவினரும், மாணவர்களும் சேர்ந்து எடுக்கப்பட்ட படம்

ஆசிரியத் தொழிலைக் கைவிட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். நொத்தாரிசு, வழக்கறிஞர் பரீட்சையில் சித்தி அடைந்து தொழில் பார்த்து, அதிலும் விருப்பமில்லாமல் கொழும்பு சென்று சட்டம் பயின்று வழக்குரைஞர் (அத்துவக்காத்து Advocate) பரீட்சையில் 1926ல் சித்தி பெற்றார்.

சட்டக் கல்லூரியில் மாணவனாக இருந்த பொழுது “Ceylonese”, “Morning Star”, “Times of Ceylon” ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். திரு.குலசிங்கத்தின் சுதந்திரமான, ஆழமான கருத்துக்கள், அழகான மொழி நடை கொழும்பு வாழ் அறிவார்ந்த குழாமின் அங்கீகாரத்தைப் பெற்றது. எழுத்தாளர் எனும் பெருங் கீர்த்தி பெற்றுக் கொண்டார். திரு.குலசிங்கத்தின் ஆங்கிலப் புலமை, எழுத்தாற்றலை அறிந்த “Ceylon Observer”  பத்திரிகை தனது முதல் ஆசிரியராகப் பணியாற்ற அழைத்தது.

ஹிலாரி ஜான்ஸ்  “Daily News” பத்திரிகையில் தான் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் சிந்தனையைத் தூண்ட யாழ்ப்பாண சுருட்டினைப் பற்ற வைத்து மேலும் கீழுமாக அறையில் நடந்து கொண்டு ஆசிரியர் தலையங்கத்தை திரு.A.V.குலசிங்கம் சொல்ல தான் எழுதுவது தன் பணிகளில் ஒன்று’ எனக் குறிப்பிடுகின்றார்.

பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றும் போது இலங்கைக்கு வருகை தந்த இந்திய காங்கிரஸ் தலைவர் ஒருவருடனான பேட்டியின் பின் இந்தியாவிற்கான சுதந்திரம் தொடர்பாக தீவிரமான கருத்துக்களைத் தாங்கிய ஆசிரிய தலையங்கத்தை எழுதினார்.

கொழும்பில் வாழ்ந்த அதிகாரம் மிக்கவர்கள் இவ்வாசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக திரு.D.R.விஜயவர்தனா அவர்களுக்கு தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்தனர். திரு. விஜயவர்தனா திரு. குலசிங்கம் அவர்களை அணுகி இவ்வாறான விடயங்களில் கருத்துத் தெரிவிக்கும் போது கூடியளவு அடக்கமாக எழுதுவது நல்லது என்று ஆலோசனை வழங்கினார். திரு.குலசிங்கம் தன்னுடைய நிலைப்பாடு சரியானது எனத் தெரிவித்து பத்திரிகை ஆசிரியர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். பத்திரிகை ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தில் குறுக்கீடு செய்வதனை விரும்பாது ஆசிரியர் பதவியின்றும் விலகிக் கொண்டமை திரு. குலசிங்கத்தின் துணிவுடமைக்கும் கொள்கைப் பிடிப்பிற்கும் எடுத்துக்காட்டாகும்.

தொடர்ந்து “இந்து சாதனம்” ஆங்கில இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்து சாதன பத்திரிகை ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் ஆரம்பித்து வைத்த உயர்ந்த பாரம்பரியத்தை பேணி வந்தார். இந்து சாதனத்தை ஒரு அரசியல் ஆயுதமாக உருவாக்கிய பெருமைக்குரியவர் திரு.A.V.குலசிங்கம். அந்நியர் ஆட்சி முடிவுக்கு வரும் வேளையில் மாற்றத்துக்கு உள்ளாகி வரும் அரசியலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பதனை சிறந்த முறையில் வழிப்படுத்தினார். சுதந்திரப் பத்திரிகையிலும் (Free Press) ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி ஆணித்தரமாக, சிந்திக்க வைக்க கூடிய வகையில் சிறந்த முறையில் எழுதினார்.

கொழும்பு, கண்டி, களுத்துறை நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி சிறிது காலத்தில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டார். அரை நூற்றாண்டுக்கு மேலாக யாழ். குடாநாட்டு நீதிமன்றங்களில் முன்னணி சிவில் வழக்குரைஞராகத் திகழ்ந்தார். திரு.A.V. குலசிங்கம் அவர்களின் வழக்குரைஞர் தொழில் நுட்பங்களை அவருடன் பணியாற்றிய இளநிலை சட்டத்தரணி பின்வருமாறு விபரிக்கின்றார். “திரு. குலசிங்கம் அவர்களுடன் வழக்கை ஆயத்தம் பண்ணுவது ஒரு சிறந்த அனுபவம். குறித்த வழக்கினை ஆழமாக ஆராய்ந்து அவற்றை உப பிரிவுகளாக்கி சட்ட விதிகளையும், சாட்சியங்களையும் எழுதுவார். இலகுவான மொழியில் தன் வழக்கை எடுத்துரைப்பார். தன்னுடைய கட்சிக்காரருக்குச் சாதகமான ஒப்புதல்களை பெறக்கூடியவாறு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வார். தமக்கு மாறாக இருக்கக்கூடிய விடயங்களையும் பகிரங்கமாக நீதிமன்றுக்குச் சொல்லி தமது கட்சிக்காரரின் கோரிக்கையை சட்ட ஆதாரத்துடன் வாதிடுவார். சாட்சிக்காரர்களையும் எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளையும் கௌரவமாக நடத்துபவர். வழக்குகளுடன் தொடர்புபடாத விடயங்களைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதில்லை”.

சட்டத்தரணிகள் பேணிப் பாதுகாக்க வேண்டிய பண்பாடு, பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்தார். அன்னாரின் மேன்மை மிக்க பணியினால் அனைத்து நீதிபதிகளும் கௌரவப்படுத்தும் தகுதியைப் பெற்றிருந்தார்.

முடிக்குரிய வழக்கறிஞராக (Crown Advocate) பணியாற்றினார். அரசினால் வழங்கப்பட்ட மாவட்ட நீதிபதி பதவியை ஏற்கவில்லை.

அரசியல் கொள்கைகளை கற்று நாட்டின் நலத்தை கருத்தில் கொள்ளும் அதேவேளை சிறுபான்மை இனம், மொழி என்பனவற்றின் நிலையை ஆராய்ந்து ஏற்ற கொள்கையை வகுத்து உளத்தூய்மையுடன் அரசியலில் ஈடுபட்டார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். 1944களில் கட்சியின் இணைச் செயலாளராகப் பதவி வகித்தார்.

திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத்துடன் இணைந்து டொனமூர் திட்டத்திற்கும் தொடர்ந்து வந்த சோல்பரி திட்டத்திற்கும் எதிரான மனுக்கள், கடிதங்களை எழுதினார். ‘சுதந்திர பத்திரிகையில்’ எழுதி எதிர்ப்பை வெளியிட்டார். 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதனால் அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த போது அதில் பங்குபற்ற மறுத்து விட்டார்.

1947 பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். வடஇலங்கையில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் அலை வீசிய போதும் ஊர்காவற்றுறையில் சாதகமாக அமையவில்லை. 1947 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறைத் தேர்தல் முடிவுகள்

 

பதியப்பட்ட தேருநர் – 33,045

 

வேட்பாளரின் பெயர்      இடப்பட்ட சின்னம்             வாக்குகளின் தொகை

ஏ. தம்பிஐயா                                 தராசு                                           5,552

ஏ. வி. குலசிங்கம்                          கை                                              5,230

கே. அம்பலவாணர்                     குடை                                            3,701

வை. துரைசாமி                      துவிச்சக்கரவண்டி                         2,438

ஜே. சி. அமரசிங்கம்                  விளக்கு                                             981

 

Source Results of Parlimentary General election in Ceylon.

 

திரு. அல்பிரட் தம்பிஐயா 322 வாக்குகளால் வெற்றி பெற்றார். திரு.A.V. குலசிங்கம் மக்களிடையே மதிப்பினைப் பெற்றிருந்தும் தேர்தல் ஒழுங்குமுறை சிறப்பானதாக அமையாமையே தோல்விக்குக் காரணமாயிற்று என அரசியல் அவதானிகள் அன்று கருத்துத் தெரிவித்திருந்தனர். இவரது ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனங்கள் காரைதீவில் இருந்து ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பாதைச் சேவை இல்லாமையால் கடலை கடக்க முடியாததால் பெருமளவு வாக்குகளை இழந்தார். காரைநகர் முழுமையாக திரு.குலசிங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பொழுதும் ஒரு பகுதியினர் சேர். வைத்திலிங்கம் துரைச்சாமியை ஆதரித்தனர்.

திரு. அல்பிரட் தம்பிஐயா பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டமையை எதிர்த்து தேர்தல் வழக்கொன்றை திரு.A.V. குலசிங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தன் வழக்கை தானே நீதிமன்றத்தில் பேசினார். அன்றைய காலகட்டத்தில் சட்ட மேதை எனக் கருதப்பட்ட திரு.H.V. பெரேரா இராணி அப்புக்காத்து (Queen Counsel) எதிர்த் தரப்பில் ஆஜரானார். திரு A.V. குலசிங்கம் வழக்கில் வெற்றி பெற்றார். அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை திரு அல்பிரட் தம்பிஐயா ஆதரித்தமையால் அரசாங்கம் அவசர அவசரமாக  Election Petition Appeal Act No.1 of 1948 எனும் சட்ட விதிகளை அமுல்படுத்தியமையால் தேர்தல்  வழக்கில் வெற்றி பெற்றும் திரு. குலசிங்கம் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.

“விவசாயம் தான் என்னுடைய முதல் காதலி.” விவசாயத்திற்கு செலவு செய்வதற்காகவே தான் மன்றுக்கு வருவதாகவும் தமது சீடருக்குச் சொல்லுவார். காக்கிக் காற்சட்டையுடன், ஓலைத் தொப்பி அணிந்து வெறும் மேனியராய் உழவு இயந்திரத்தால் வயலைத் தானே உழுவார். உருத்திரபுரம் பகுதியில் 150 ஏக்கர் வயல் காணியின் உரிமையாளராக இருந்தார்.

நாட்டு மக்கள் விவசாயிகளாக இருக்க வேண்டும். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என பத்திரிகைகளில் எழுதிய இலட்சிய கருத்துக்களை தன் குடும்பத்தினருடன் இணைந்து முன் உதாரணமாக வாழ்வில் பயணித்தவர் திரு. குலசிங்கம்.

அமரர் குலசிங்கம் அவர்களின் வாழ்வு ஒரு திறந்த புத்தகம். அமரர். குலசிங்கம் வாழ்வில் ஆற்றிய பணிகள் அத்தனையிலும் சிங்கமாகவே வாழ்ந்தார் என்றால் மிகையாகாது.

 

 

 

 

 

 

07.06.2021 திங்கட்கிழமை வைகாசி பரணி பேப்பர் சுவாமிகள் குருபூசை தினம்!

 

07.06.2021 திங்கட்கிழமை வைகாசி பரணி

பேப்பர் சுவாமிகள் குருபூசை தினம்

 

பேப்பர் சுவாமிகள்
(எஸ்.கே.சதாசிவம்)

பேப்பர் சுவாமிகள் என மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற இவர் வீரவாகு வேலுப்பிள்ளை முருகேசு (V.V.முருகேசு) எனும் இயற்பெயர் கொண்டவர். 1900 ஆம் ஆண்டு தங்கோடையில் பிறந்தவர். சுவாமிஜி முதலில் இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். மனைவி இறந்ததும் துறவறத்தை மேற்கொண்டவர்.

கடல் வழியாகப் பயணிக்கும் மரக்கலங்களுக்கு ஒளி பாய்ச்சி கரைகாட்டும் வெளிச்ச வீட்டுக்கு (கோவளம்) அருகே இருந்து மானிடப்பிறவி எனும் பெருங்கடற் துயரில் இருந்து கரையேறி மானிடர் தம் வாழ்வில் ஈடேற்றம் பெற முருகேசு சுவாமிகள் 1940 “ஆலவாய்
ஆச்சிரமம்” ஆரம்பித்தார். வெளிச்ச வீட்டு பங்களாவில் முதலில் இருந்து விட்டு 1944 ஆம் ஆண்டளவில் மால் போட்டார். தனித்திரு, பசித்திரு, விழித்திரு எனும் ஞான நிலையில் எட்டு வருடங்கள் இருந்த பொழுது ஆச்சிரமத்தைத் தொடங்கினார். ஆச்சிரமம் தொடங்க முன்பு வட இந்தியாவில் இருந்து இலங்கை வரையுமான சிவபூமியின் கண் யாத்திரை செய்தவர். பரத கண்ட யாத்திரையின் போது இந்தியப் பெருந்தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார்.

வெளிச்ச வீட்டு வளவில் பர்ணசாலை அமைந்து இருத்தல் பொருத்தமானது ஆகாது எனக் கருதிய சுவாமிஜி 1970 களில் வெளிச்ச வீட்டு ஆச்சிரமத்தைக் கைவிட்டு நண்டுப்பாளி எனும் குறிச்சியில் கொல்லங்கலட்டி வளவில் ஆச்சிரமத்தை ஸ்தாபித்தார்.

திருஞான சம்பந்த சுவாமிகள் திருவீழிமிழலையில் வீற்றிருந்து இறைவன் புகழ் பாடி பதியங்கள் பாடியவர். பேப்பர் சுவாமிகள் வாழ்ந்த ஆச்சிரமத்திலும் திருவீழி மரம் இருந்தது. திருவீழி மரத்தின் கீழ் இருந்து சுவாமிகள் ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அவரின் கலந்துரையாடல்கள், சிந்தனைகள் யாவும் இம்மரத்தின் கீழே நடைபெற்றது. இம்மரத்தின் கீழ் அமர்ந்து செயற்படுவதன் மூலம் ஆன்மீக இன்பத்தை அனுபவித்தார். ஆன்மீக உள் உணர்வுகள் வெளிப்படுவதற்கு இம்மர நிழல் சுவாமிகளுக்கு உந்துசக்தியாக அமைந்தது.

கடல் அலைகள் தாலாட்டும் இயற்கை எழில் மிக்க அமைதியான சூழலில் ஆச்சிரமம் அமைத்து தவ வாழ்வு வாழ்ந்த ஞானி பேப்பர் சுவாமிகள் தன்னை நாடி வருபவர்களின் எண்ண ஓட்டங்களைச் சொல்லும் வல்லமை மிக்க ஞானம் கைவரப் பெற்றவர். தன் முன் அமர்ந்து இருப்பவரின் சிந்தனையில் உள்ளவற்றை எடுத்துச் சொல்லி அவர் தம் மனத்தில் குடி கொண்டிருக்கும் சஞ்சலத்தில் இருந்து விடுபடும் வழியைக் காட்டுவார்.

சுவாமிஜி இயற்றிய “வள்ளி கும்மி” எனும் நூலில் முப்பொருள் விளக்கம், சைவ நாற் பாத நெறிகள் குரு தத்துவம், ஆலய வழிபாட்டின் முக்கியத்துவம் ஆகியன பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தன் ஆச்சிரமத்தில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை சுவாமிஜி பாடியுள்ளார். நன்னெறி போதிக்கும் கருத்துக்கள் சுவாமிஜின் பாடல்களில் பொதிந்து காணப்படுகின்றது. சமய குரவர் நால்வர் இல்லையேல் சைவசமயம் இல்லையென்று சிறப்பித்துக் கூறியுள்ளார். இது தவிர குறிப்புக்கள் Sayings என ஏராளம் உண்டு. தனது சரித்திரத்தை சுவாமிஜி ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குத் தூய்மையான மனமும், களங்கமில்லா பக்தியும் தேவை என்பதைத் தமது நூல்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

உடற் பிணியால் வருந்தியவரின் நோய்களை நீக்கிய மருத்துவராகவும் சுவாமிகள் திகழ்ந்தார். காரைநகரில் வாழ்ந்த மக்கள் மட்டுமன்றி வெளியூர்களிலும் இருந்து ஏராளமான மக்கள் சுவாமிகளைத் தரிசிப்பதற்கு வருகை தந்தனர். சுவாமிகள் சைவ ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீற்றைத் தவிர வேறு விபூதி பாவிப்பதில்லை. ஞானசம்பந்தர் வழியிலே சுவாமிஜி திருநீற்றின் பெருமையை வளர்த்தவராவர். சைவ சமயப் பண்பாட்டின்படி வேட்டி கட்டினால் அன்றி விபூதி வழங்குவதில்லை. நோயறிந்து திருநீறு போடுதல், வேப்பம் குழையினால் பார்வை பார்த்தல், சமுத்திர தீர்த்தம் ஆடுதல், பிரசாதம் கொடுத்தல் போனற் பல்வேறு முறைகளைக் கையாண்டு தன்னை நாடி வருபவர்களின் நோய்களை நீக்கினார். சுவாமிகளின் ஆச்சிரமம் ஆன்ம விடுதலைக்கு வழி காட்டும் நிலையமாக இருந்ததோடு உடற்பிணி போக்கும் “தெய்வீக வைத்திய ஆலயமாகவும்” திகழ்ந்தது.

பாரத தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர் திரு. J.C.குமரப்பா நோயுற்ற வேளை சுவாமிகளின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து ஆசி பெற்றுக் குணமாகியவர். திரு. குமரப்பா நோயின் நிமித்தம் தனியான குடிசையில் வசிக்க வேண்டிய தேவை இருந்தமையால் தனியான குடிசையில் வசித்தார். அவர் வாழ்ந்த குடிசை ஆச்சிரமத்திற்கு அயலில் இருந்தது.
அக்குடிசைக்கு குமரப்பா குடிசை (Kumarappa Cottage) என அழைக்கப்பட்டது.

சுவாமிகள் தவ வாழ்வின் முற்பகுதியில் வெளிச்ச வீட்டு பங்களாவில் அன்னதானம், பூசை முதலியவற்றை நடாத்தி வந்தார். மாதந்தோறும் பௌர்ணமியில் இயந்திர பூசை, விசேட பூசையாக நடைபெறும். பௌர்ணமி கூடும் நேரத்தில் சமுத்திர தீர்த்தம் ஆடி விட்டு இயந்திர பூசை நடாத்தி நைவேத்தியம் வைப்பார். குரு பூசை தினங்கள், சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவம்பா, தைப்பொங்கல், வருடப்பிறப்பு போனற் திருநாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

பல அடியார்கள் விசேட தினங்களில் ஆச்சிரமத்திற்கு வருகை தந்து சுவாமிகளுடன் இணைந்து சென்று சமுர்த்திர தீர்த்தத்தில் தீர்த்தமாடி வருவார்கள். நோயாளிகளின் பிணிகளை நீக்கும் தீர்த்தமாகவும், விதவையர்களுக்கு விரத பலன்களைக் கொடுக்கும் விசேட தீர்த்தமாகவும், ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு அவர்களின் மனங்களைக் கழுவும் விசேட தீர்த்தமாகவும் இப்புனித தீர்த்தம் அமைந்திருந்தது.

வெளிச்ச வீட்டு பங்களாவில் அன்னதானம் நடக்கும் காலத்தில் இறை பூசையுடன் கோ பூசையும் தவறாது நடைபெறும். அடியார்கள் அனைவரும் உணவு அருந்துவதற்கு முன்பு இலையில் இருந்து ஒரு பிடி அன்னம் பசுவிற்கு வழங்கி விட்டே உணவு அருந்துவார்கள் சுவாமிஜி ஆச்சிரமத்தில் பசுக்கள் வளர்ப்பதில் அக்கறை செலுத்தினார். ஆச்சிரம அபிஷேகத்திற்குப் பால் கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் பசுவைக் கும்பிட்டவர் அன்றன்று செய்யும் பாவங்கள் அன்றன்றே தீரும் என்று சுவாமிஜி கூறியருளினார். அபிஷேகத்திற்கும் நெய்வேத்தியத்திற்கும் பால் தரும் பசுக்கள் கண்ட இடங்களில் மேயக்கூடாது. ஆச்சிரமத்திற்குள்ளேயே அவற்றை வைத்து வளர்ப்பது சுவாமிஜி இன் வழக்கம். 1970 களில் கொல்லங்கலட்டியை ஆச்சிரமத்திற்காகத் தெரிவு செய்தமை பசுக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கு அமைந்திருந்தமையே காரணமாகும். பட்டிப் பொங்கல் திருநாளில் எல்லா பசுக்களிற்கும் அர்ச்சனை, தூப, தீப ஆராதனை நடைபெறும். மாட்டுக் கொட்டகையில் மாட்டுப் பொங்கல் நடைபெற்று பசுக்களுக்கு நெய்வேத்தியம் படைக்கப்படும்.

சுவாமிஜி சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லவர். சமஸ்கிருதம் எழுதிப் படிக்காமல் இயற்கையாகவே உணர்ந்தவர். சைவ சமயப் பிள்ளைகள் சைவ சமய சூழலில் கற்க வேண்டும் என விரும்பினார். அன்றைய கால கட்ட த்தில் காரைநகர் சிறார்கள் கல்வி கற்பதற்கு முனைப்புடன் செயற்பட்டார். தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை, களபூமி சுந்தரமூர்த்திநாயனார் ஆகிய பாடசாலைகளை அப்பகுதி மக்களின் ஆதரவுடன் ஆரம்பித்து வைப்பதில் இணைந்து செயற்பட்டார். பாடசாலைக்குச் செல்லாமல் மாடு மேய்த்துக் கொண்டு திரிந்த சிறுவர்களை அழைத்து பாடம் கற்பித்தார். ஆச்சிரமத்தில் தொண்டு செய்யும் சிறுவர்களுக்கும், ஆச்சிரமத்தில் படிக்கும் சிறுவர்களுக்கும் திருக்குறள் சொல்லிக் கொடுத்து மனனம் செய்விப்பது சுவாமிஜிஇன் வழக்கம். மனனம் செய்து ஒப்புவிக்கும் சிறுவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி ஊக்குவித்தார். ஆன்மீக ஈடேற்றத்திற்கான ஆன்மீகக் கல்வியை வழங்கியதோடு ஆன்மீக வழிகாட்டலையும் செய்து வாழ்விற்கு ஆதாரமான ஆங்கிலக் கல்வியையும் புகட்டினார்.

சுவாமிஜி ஆரம்ப காலத்தில் வெளிச்ச வீட்டு பங்களாவிற்கு அருகில் வசித்து வந்தார். அங்கே அவர் ஆண் பிள்ளைகளுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை இலவசமாகக் கற்பித்தார். சுவாமிகளிடம் ஆங்கிலம், கணிதம் பயின்ற இளைஞர்கள் பிற்காலத்தில் அப்பாடங்களைக் கற்பிக்கும் திறமை மிக்க ஆசான்களாகத் திகழ்ந்தார்கள். ஒரு நாள் ஆச்சிரமத்தில் உணவுப் பொருட்கள் இல்லாமையை சுவாமிகளிடம் தெரிவிக்கத் தயங்கி நின்ற மாணவர்களைப் பார்த்து சுவாமிகள் உணவுப் பொருட்கள் பாதி வழிக்கு வந்து விட்டது உணவைச் சமைப்பதற்கான பாத்திரங்களைத் தயார் செய்யுமாறு கூறினார். சிறிது நேரத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரின் வாகனம் ஆச்சிரமத்திற்குத் தேவையான சமையல் பொருட்களுடன் வந்து சேர்ந்தது. சுவாமிகளின் அருட்பேற்றை ஏற்கனவே உணர்ந்திருந்த மாணவர்கள் இச்சம்பவத்தின் பின் மேலும் பயபக்தியுடன் நடக்கலாயினர்.

ஆச்சிரமத்தில் அதிக எண்ணிக்கையான தோசைகள் சுட வேண்டி இருந்தமையால் அடுப்பின் வெப்பத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தோசை சுடுபவர் ஈரப்பசுமை மிக்க துணியை நெஞ்சில் கட்டிக் கொண்டு தோசை சுடுவது வழக்கம் என அன்றைய காலத்தில் சுவாமிகளிடம் கணிதம், ஆங்கிலம் கற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் தாவரவியல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் விஞ்ஞான பாட செயலமர்விற்கு யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வருகை தந்த போது பேப்பர் சுவாமிகளைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பேப்பர் சுவாமிகளைத் தரிசித்த பின் கலந்து கொண்ட ஆசிரியருடன் பின்வருமாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார். சுவாமிகள் தான் அறிந்திராத பல பத்திரிகைகள் பற்றி தன்னிடம் வினவியதாகவும் மேலும் பல முக்கியமான உலக விடயங்களைப் பற்றி தன்னிடம் தெரிவித்தமை தன்னை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதாகவும் உங்கள் கிராமத்தில் மிகப் பெறுமதியான சுவாமிகள் வாழ்ந்து கொண்டு இருப்பதையிட்டு நீங்கள் பெருமை அடைய
வேண்டும் எனக் குறிப்பிட்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார்.

திரு. ஆ.தியாகராசா அவர்கள் காலையில் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று சுவாமிகளுக்குரிய கடிதங்களைப் பெற்று வந்து சுவாமிகளிடம் கையளித்த பின்னரே பாடசாலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

பாரத தேசத்தின் தேச பிதா மகாத்மா காந்திஜி பாரத தேசத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுவாமிஜி இன் அருளாசி வலுச்சேர்த்தது. பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மகாராணியை காந்திஜி சந்திக்கச் செல்லும்பொழுது சுவாமிஜி தன் கையினால் காந்திக்கு திருநீற்று காப்பிட்டு விபூதியுடன் (நெற்றியில்) போனால் தான் வெற்றி கிட்டும் எனத் தெரிவித்து சுவாமிஜி திருநீற்று காப்பிட்டு வழியனுப்பினார். மகாத்மா காந்தியின் மரணத்தை எதிர்வு கூறி தபாலட்டை ஒன்றில் காந்திக்குக் காலம் நன்றாயில்லை. (கவனம்! கவனம்! கவனம்!) Caution! Caution! Caution! என்று எழுதி Dr.J.C.குமரப்பாவிற்கு நடுத்தெருவைச் சேர்ந்த விதானையார் ந.அருளையா மூலம் தபாலில் சேர்ப்பித்தார். தபாலட்டை கிடைத்த சில தினங்களில் விநாயகராம் கோட்சேயினால் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். காந்திஜி இன் இறுதிக் கிரியைகளில் சுவாமிஜியும் கலந்து கொண்டார். சுவாமிஜி அனுப்பிய தபாலட்டை (Post Card) இந்தியாவிலுள்ள அருங்காட்சியகம் (Museum) ஒன்றில் பேணப்படுவதாக செய்திகள் இருந்த போதிலும் உறுதி செய்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் இந்தியாவின் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய திரு.V.V. கிரி தனது பதவிக் காலத்தில் பேப்பர் சுவாமிகளின் தரிசனத்திற்காக வருகை தந்தார். இவர் இந்திராகாந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பணியாற்றியவர். பேப்பர் சுவாமிகளுக்குச் சமஸ்கிருத மொழியில் இருந்த ஆர்வத்தை அறிந்த காஷ்மீர் முதலமைச்சர் சுவாமிகளுக்கு ஒரு தொகுதி சமஸ்கிருத நூல்களை அன்பளிப்புச் செய்தார். யாழ்ப்பாணத்தின் சட்டத்தரணிகள், கல்விமான்கள், அரச அதிகாரிகள் என பல தரப்பட்ட மனிதர்கள் சஞ்சலம் மிக்க வேளைகளில் சுவாமிகளைத் தரிசிப்பது வழமை.

சுவாமிகளின் செழுமையும், புலமையும் மிக்க ஆங்கில எழுத்தாற்றல் அறிவு சார்ந்த சமூகத்தின் மத்தியிலும் அரசியல் வாதிகளின் மத்தியிலும் சுவாமிஜிக்கு உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் அன்றைய உலக விவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளை எழுதினார்.

சுவாமிகள் நயினாதீவு நாகபூசணி அம்பாளை குல தெய்வமாக வணங்கியவர். அடிக்கடி நயினாதீவு சென்று அம்பாளை வழிபடும் வழக்கத்தை வழக்கமாகக் கொண்டவர். கோவளத் துறையிலிருந்து கட்டு மரங்களில் ஏறி நயினாதீவுக்கு அடியார் கூட்டத்துடன்
சுவாமிஜி செல்வார். அம்பாளைப் பூசிக்கும் நாகபாம்பினை தன்னுடன் வரும் மக்களுக்கு சுவாமிஜி காட்டியிருக்கின்றார். பௌர்ணமி காலத்தில் நயினாதீவில் சந்திர பூசையை சுவாமிஜி தொடக்கி வைத்தார்.

சுவாமிஜி இன் ஆச்சிரமத்திற்கு அப்பால் அமைந்துள்ள பிரதேசத்தில் இருந்து கடற்றொழில் செய்பவர்கள் மாலையில் தரையில் இருந்து தொழிலுக்காகக் கடலை நோக்கி நகர்வது வழமை. சுவாமிஜி சாயங்கால பூசை நேர சங்கு ஊதும் பொழுது கடற்றொழிலாளரும் படகில் ஏறி கோயிலுக்கு நேராக வருகை தந்து “அரோகரா” “அரோகரா” என்று அம்பாளை வணங்கித் தம் தொழிலுக்கு இடையூறும் உயிராபாத்தும் வராமல் காக்கும்படி அருள் கேட்டுப் படகிற்குச் செல்வது வழக்கம்.

தான் பத்து வயது சிறுவனாக இருந்த போது தந்தையாருடன் பேப்பர் சுவாமிகளின் வெளிச்ச வீட்டு ஆச்சிரமத்திற்குச் சென்றிருக்கின்றேன். அமைதியான சூழலில் இருந்த ஆச்சிரமம் நினைவில் இருக்கின்ற பொழுதும் எழுதுவதற்காக எதுவும் ஞாபகத்தில் இல்லை.

தன் இறுதிக் காலத்தில் நண்டுப்பாளி கொல்லங்கலட்டி எனும் வளவில் அமைந்திருந்த பர்ணசாலையில் தவ வாழ்வு வாழ்ந்து சமாதியாயினார். சுவாமிஜி சமாதி கூடிய காலத்திற்கு 1976க்கு முன்பு சில காலமாகவே மோன நிலை இருக்கத் தொடங்கி விட்டார். ஒரு சில வசனங்கள் தேவையான பொழுதில் மாத்திரம் கதைப்பார். மற்றப்படி மோன நிலையே. 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் பிரதோஷ காலத்திலேயே சுவாமிஜி பூரண சமாதி நிலை கூடினார்.

பேப்பர் சுவாமிகள் சமாதி அடைந்த பின்னர் 1990 வரை சுவாமிகளின் சமாதியைத் தரிசிக்க வருகை தருகின்ற வலிகாமத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள் பேப்பர் சுவாமிகளின் சமாதி காரைநகரிற்குப் பெரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் சக்தி உடையது எனக் கூறினார்.

வளமான நண்டுப்பாளி காடு மண்டிக் கிடக்கின்றது. கைவிடப்பட்ட வீடுகள், ஒற்றையடிப் பாதையூடாக சுவாமியின் சமாதிக்குச் சென்று அடையலாம். மழை காலத்தில் நீர் நிரம்பிப் பாய்ந்து ஓடும் அறுமனா ஓடை ஒரு புறம், மறுபுறம் அமைதியான கடல், தென்னந்தோப்புக்கள், வயல்கள் சூழ்ந்த அமைவிடத்தில் தாமரைத் தடாகத்தைத் தன்னகத்தே கொண்ட கொல்லங்கலட்டி வளவில் சுவாமிஜி இன் சமாதி அமைந்துள்ளது. தரிசிப்பவர் மனத்தை தன்பால் ஈர்க்கும் வல்லமை கொண்டது சமாதியும் சமாதியின் அமைவிடமும். ஞானியர் சித்த வரிசையில் நமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்தவர் வரிசையில் பேப்பர் சுவாமிகள் முதன்மையானவர்.

சமய, இலக்கிய, பொதுப் பணிகள் ஆற்றி மக்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் வித்துவான் மு. சபாரத்தினம் அவர்களை பெருமைப்படுத்திய லண்டன் தொலைக்காட்சி.

 

சமய, இலக்கிய, பொதுப் பணிகள் ஆற்றி மக்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் வித்துவான் மு. சபாரத்தினம் அவர்களை பெருமைப்படுத்திய லண்டன் தொலைக்காட்சி.

“வித்துவான்” எனக் கூறியதும் நம் அனைவரதும் மனக்கண் முன் தோன்றுபவர் வெள்ளை உடையணிந்து கம்பீரமான தோற்றத்திற்கும், கணீரென்ற குரலுக்கும், புன்முறுவல் பூத்த முகத்திற்கும், மடைதிறந்த வெள்ளம்போன்ற பேச்சாற்றலிற்கும் சொந்தக்காரரான “சைவமணி” “சிந்தாந்தச்செம்மல்” “செஞ்சொல்வாரிதி” அமரர் வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களேயாகும்.

சமய, இலக்கிய, சமூகப் பணிகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து அவற்றின் வளர்ச்சியை முன்னெடுக்க அயராது உழைத்த உத்தமரான வித்துவான் மு.சபாரத்தினம் அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவிலே ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் புகழ்பெற்று விளங்கியவர். பாமர மக்கள் மனங்களிலும் பசுமரத்து ஆணிபோல பதியும் வகையில் சமயக் கருத்துகளை முன்வைத்து சொற்பொழிவாற்றி பெருவரவேற்பினைப் பெற்ற முதன்மைப் பேச்சாளர்களுள் ஒருவராக விளங்கியவர். தமது உன்னதமான ஆசிரியப் பணியின் ஊடாக தாம் பணிபுரிந்த கல்லூரிகளின் சமூகத்தின் மத்தியில் மிகுந்த பாராட்டிற்கும் மதிப்பிற்கும் உரியவராக விளங்கினார். குறித்த பாடசாலைகளின் சமய, ஒழுக்க விழுமியங்களையும் தமிழ் அறிவினையும் மேம்படுத்துவதில் வித்துவான் அவர்களது அளப்பரிய பங்களிப்பு பாடசாலைகளின் வரலாற்றில் பதிவாக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரியில் பணியாற்றி 1984இல் ஓய்வுபெற்றபோது கல்விமான்கள், வர்த்தகப் பெருமக்கள், சமய, கலை, கலாசார, நிறுவனங்கள், பொது மக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து வித்துவான் அவர்களிற்கு எடுத்த பெரு விழாவானது அவரது மகத்தான மக்கள் நலன் சார்ந்த பணிகளிற்கு எடுத்துக்காட்டாக அமைவதாகும்.. தமது சமூகப் பணிகள் ஊடாக காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது தாம் வாழ்ந்து வந்த சாவகச்சேரி மக்கள் மத்தியிலும் பெரு மதிப்பையும், அன்பையும் பெற்று விளங்குபவர். சிறந்த கல்விப் பாரம்பரியத்திலிருந்து வந்த வித்துவான் அவர்களிடத்தில் காணப்பட்ட சமய, சமூக உணர்வு இவரது பிள்ளைகளிடத்திலும் இருக்கத் தவறவில்லை. கனடாவில் வதியும் இவரது புதல்வனான திரு.பாலச்சந்திரன் அவர்கள் தமது தந்தை வழியில் சமய, பொதுப் பணியில் அயராது ஈடுபட்டு வருபவர். லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் பாமுகம் (FaTV) தொலைக்காட்சி வித்துவான் அவர்களை நினைவுகூரும் வகையில் அன்னாரது பணிகள் குறித்து திரு.பாலச்சந்திரன் அவர்களை அண்மையில் நேர்காணல் செய்திருந்தது. இத்தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் சாந்தினி அவர்கள் சிறப்பான முறையில் இந்நேர்காணலை செய்திருந்தார். இந்நேர்காணலின் காணொளிப் பதிவினை கீழே பார்வையிடலாம்.

காத்திரமான கல்விப் பணியாற்றிய பெருந்தகை கணபதிப்பிள்ளை கார்த்திகேசு நடராஜா அமரர் திரு. K. K. நடராஜா – இலங்கை கல்வி நிர்வாக சேவை

 

காத்திரமான கல்விப் பணியாற்றிய பெருந்தகை

கணபதிப்பிள்ளை கார்த்திகேசு நடராஜா

அமரர் திரு. K. K. நடராஜா – இலங்கை கல்வி நிர்வாக சேவை

திரு. திருமதி. கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் புதல்வர் திரு. K. K. நடராஜா தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார். உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று விஞ்ஞானமானி பாடநெறி கல்வியை லண்டன் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்து விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றார்.

கோவளம் வெளிச்ச வீட்டுக்கு அருகே ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த திரு. V. V. முருகேசு சுவாமிகளின் (பேப்பர் சுவாமிகள்) மாணவர்களில் ஒருவராவார். விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் ஆச்சிரமத்தில் கற்பிக்கப்பட்டது. திரு. K. K. நடராஜா கணித பாட வகுப்புக்களில் அதிகளவில் கலந்து கொள்ளாமலே பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற பொழுது சுவாமிகள் திரு. K. K. நடராஜாவை சாணக்கியன் என்று அழைத்தார். திரு. K. K. நடராஜா சுவாமிகளின் தீர்க்கதரிசனமான செய்திகளை நேரில் பார்த்தவர். சுவாமிகளிடம் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் பின் நாளில் கல்வியில் புலமை மிக்கவர்களாகவும், உயர் பதவிகளையும் வகித்தனர்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பணியை ஆரம்பித்து நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியரகக் கடமையாற்றினார். இயல்பாகவே கணித ஆற்றல் மிக்க திரு. K. K. நடராஜா திறன் மிகு கற்பித்தல் நுணுக்கங்களைக் கையாண்டு வெற்றி கரமாக கற்பித்தமையால் மாணவர் மனங்களில் இடம்பிடித்தார்.

திரு. K. K. நடராஜா காரைநகர் இந்துக்கல்லூரியின் அதிபராக 1974 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நியமிக்கப்பட்டார். கல்லூரியின் பெயரை மாற்றுவதாலோ அன்றி கல்லூரியின் தரத்தை மாற்றுவதாலோ அன்றி உற்சாகம் மிக்க சேவையினால் (Enthusiastic Service) யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பாடசாலைகளின் கல்வித் தரத்திற்கு இணையாக பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்தி பாடசாலைக்கு அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தார். அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் உழைப்பு கற்பித்தல் பெறுபேறுகளை வலுவுள்ளதாக்கியது.

திரு. K. K. நடராஜா அதிபராகப் பதவியேற்று வருகை தந்த போது க. பொ. த. உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்கள் தாங்கள் வேறு பாடசாலையில் கற்க விரும்புவதாகவும் விடுகைப் பத்திரங்களைத் தந்துதவுமாறும் வேண்டி நின்றனர். மாணவர்களிடம் உங்கள் பாடங்களுக்கான ஆசிரியர்களை வரவழைப்பேன். தொடர்ந்து பாடசாலையில் கற்குமாறு அறிவுரை வழங்கினார். இம்மாணவர்களுக்கான வகுப்புக்களை காலை 6.00 மணிக்கு தானே ஆரம்பித்து நடாத்தினார். அன்றைய காலகட்டத்தில் வழங்கப்பட்ட விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் பொருத்தமான ஆசிரியர்களை கல்லூரிக்கு நியமிக்க ஆவன செய்தார். யாழ்.நகரில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்பித்த பிரபல்யமான ஆசிரியர்களுக்கு காரைநகர் இந்துக் கல்லூரியில் நியமனம் பெற ஆவன செய்தார். பாடசாலையில் இருந்து விலகிச் செல்ல விரும்பிய மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுச் சென்றனர்.

வலிகாமம், ஊர்காவற்றுறை போன்ற இடங்களில் இருந்து க. பொ. த உ. த. விஞ்ஞான பிரிவில் கல்வி கற்பதற்கு மாணவர்கள் வருகை தந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்றனர். நீண்ட காலமாக காரைநகர் இந்துக் கல்லூரியில் உயர்தர விஞ்ஞான பிரிவு இயங்கிய பொழுதும். திரு. K. K. நடராஜா அவர்களின் சேவைக் காலத்தில் இருந்து தான் விஞ்ஞான பிரிவில் இருந்து மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுச் சென்றனர் எனக் கருதலாம். மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு மாணவர்கள் தெரிவாகினர். விஞ்ஞான பீடத்திற்கு அதிக எண்ணிக்கையான மாணவர்கள் அனுமதி பெற்றுச் சென்றனர். பல்கலைக் கழக அனுமதியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தி அமுல் படுத்திய அன்றைய கால கட்டத்தில் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றுச் சென்றமை மெச்சத் தக்கதாகும்.

க. பொ. த. உ. த. விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற மாணவர்களின் கல்வியைச் செழுமைப்படுத்தி வலுவூட்டுவதற்காக பாடசாலைக்கு அண்மிய சூழலில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான விஞ்ஞான கணித ஆசிரியர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள ஆவன செய்தார்.

திரு. K. K. நடராஜா வெற்றிகரமான அதிபராகப் பணியாற்றியமைக்கான பண்புகளைக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற தன் மகனை காரைநகர் இந்துக் கல்லூரியில் சேர்த்தார். அலுவலகத்தில் அமர்ந்திராது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கவனித்தார். ஆசிரியர்கள் ஓய்வு பெறுமிடத்து அந்த வகுப்புகளிற்கான பாடங்களைக் கற்பித்தார். க. பொ. த. சா. த. பரீட்சை அண்மிய காலப்பகுதியில் மாலை நேர மேலதிக வகுப்புக்களைப் பரீட்சையை இலக்காக வைத்துப் பாட ஆசிரியர்களால் நடாத்துவித்தார்.

க. பொ. த. சா. த. மாணவர்களை அவதானித்து க. பொ. த. உ. தரத்தில் கற்க வேண்டிய பாட நெறியைத் தெரிவு செய்து தன்னகத்தே வைத்திருப்பார். மாணவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் உளச்சார்பு என்பனவற்றை கருத்திற் கொண்டு மாணவர்கள் உயர்தரத்தில் தெரிவு செய்ய வேண்டிய பாடநெறிக்கான ஆலோசனையை வழங்குவார். மாணவர்களின் நடத்தை தொடர்பாக கண்டிப்புடன் செயற்பட்டார். பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து வந்தார் திரு. K. K. நடராஜா. மாணவர்கள் பண்புசார் கல்வியைப் பெற்று சமூகத்தின் நற்பிரஜைகளாக வாழ வேண்டும் எனும் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர்.

கல்லூரியின் நிருவாகக் கட்டிடம், மாதிரி விஞ்ஞான ஆய்வு கூடம் என்பன கட்டப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்டத்தில் யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் செலவாகியது போக எஞ்சிய நிதி திறைசேரிக்குத் திரும்பிச் செல்லாது எஞ்சிய நிதியினை பெற்று குறுகிய காலத்திற்குள் நடராஜா மண்டபத்திற்கு மேற்குப் பக்கமாக அமைந்துள்ள வகுப்பறைத் தொகுதி, விளையாட்டு மைதான மதிற்சுவர் என்பன அமைக்கப்பட்டன. இப்பணிகளை உரிய காலத்தில் உரிய முறைப்படி நிறைவேற்றியமைக்காக 1 ABC  பாடசாலைகளின் அதிபர்கள் கூட்டத்தில் யாழ். மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு. மகதந்திலாலா அவர்களால் திரு. K. K. நடராஜா பாராட்டப்பட்டார்.

ஆசிரியர்களின் சிநேக பூர்வமான உறவினைக் கொண்டிருந்தார். ஆசிரியர் குழாம், கல்வித் திணைக்களம், சமூகம் திரு. K. K. நடராஜாவின் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கின. பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. தியாகராஜாவின் சேவையை கல்லூரியின் வளர்ச்சிக்காக உச்ச அளவில் பெற்றுக் கொண்டார்.

ஈழதேச அரசியலாளர்களால் 3 வருடங்களும் 3 மாதங்களும் அதிபராகப் பெரும் பணியாற்றிய திரு. K. K. நடராஜா அனலை தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்தினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அறிந்த பின் அனலை தீவிற்கான இடமாற்றத்தினை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு வேறுபடுத்தினர். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி அபிவிருத்திப் பணிகளில் பின்நாளில் அரசியலாளர்களும் அதிபரும் இணைந்து பயணித்தனர்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அதிபராகவும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி அதிபராகவும், சுழிபுரம் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் 11 வருடங்களும் 4 மாதங்களும் திரு. K. K. நடராஜா கடமையாற்றினார். திரு. K. K. நடராஜாவை காரைநகர் இந்துக் கல்லூரியில் அவரது சேவைக்காலம் முழுவதும் இடையூறு விளைவிக்காமல் கடமையாற்ற அனுமதித்து இருப்பின் காரைநகர் இந்துக் கல்லூரியின் கல்வி வளர்ச்சி நகரப் பாடசாலைகளுக்கு இணையாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

விசேட தரம் I (Special Post Grade – I) பதவி உயர்வு பெற்று இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலராக ஓய்வு பெற்றார்.

தனது குறுகிய பதவிக் காலத்தில் செயல் ஊக்கம் மிக்க சேவையினால் (Dynamic Service) கல்வி உலகில் காரைநகர் இந்துக் கல்லூரிக்கு அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள் வரிசையில் திரு. K. K. நடராஜா இடம்பெறுகின்றார்.

திரு. K. K. நடராஜா தனது உறவினரான ஸ்ரீமான் சுப்பிரமணியபிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுப்பிரமணிய வித்தியாசாலையின் வளர்ச்சியில் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கினார். 1970 களில் திரு. கு. இராசையாவுடன் இணைந்து அரசின் நிதி உதவியுடன் வகுப்பறைத் தொகுதி ஒன்றினை கட்டுவித்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் தரம் தொடர்பான தேவையை நிறைவு செய்ய ஆரம்பப் பாடசாலை ஒன்று தேவைப்பட்ட பொழுது சுப்பிரமணிய வித்தியாசாலையை காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாக மாற்ற ஆவன செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. தியாகராஜாவின் ஆலோசகர் குழாமில் இடம்பெற்றிருந்தார். சமூக நலன் பேணும் பல்வேறு அமைப்புக்களில் இணைந்து சமூகப்பணியாற்றினார்.

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான திருப்பணிச் சபை, மாணிக்கவாசகர் அன்னதான சபை, காரைநகர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ஆகிய அமைப்புக்களின் தலைவராகவும், பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணிச் சபையிலும் அங்கம் வகித்தார்.

ஆசிரியராக, அதிபராக, சமூக சேவகனாக, சமயத் தொண்டனாக எல்லாப் பணிநிலைகளிலும் வெற்றிகரமாகப் பயணித்தவர் திரு. K. K. நடராஜா.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

எஸ். கே. சதாசிவம்

 

 

 

 

காரைநகரின் அபிவிருத்தியில் மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் பங்களிப்பு

 

காரைநகரின் அபிவிருத்தியில் மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் பங்களிப்பு

எஸ். கே. சதாசிவம் 

காரைநகர் புதுறோட்டை சேர்ந்த Mr. Arulyah Barnabas  அவர்களின் தலைமையில் The Karai Union Of Malaya 1919ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  ஸ்தாபிக்கப்பட்டு Societies of Enactment F.M.S Gazette No.2390 of 2nd June 1920  பதிவுசெய்யப்பட்டது காரை யூனியன் ஓவ் மலாயா 100வது ஆண்டினை நிறைவு செய்வதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.

1855ம் ஆண்டளவில் காரைநகருக்கு வருகை தந்த அமெரிக்க மிஷனரிமாரால் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன் மிஷன் ஆங்கில பாடசாலை (சாமி பள்ளிக்கூடம்) சயம்பு உபாத்தியாயரின் காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்று ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மலேசியா நாட்டிற்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள பயணமானார்கள். காரைநகரில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற அறிவு சார் சமூகத்தின் முன்னோடிகள் இவர்கள்.

யாழ்ப்பாண துறைமுகங்களில் இருந்து பாய் கப்பல்கள் மூலம் நாகபட்டினம் சென்று அங்கிருந்து நீராவிக் கப்பல்கள் மூலம் மலாயாவுக்குச் சென்றனர். ஆரம்பக் காலங்களில் சென்றவர்கள் தங்கள் உறவினர்களையும், ஊரவர்களையும் அங்கு அழைப்பதில் ஆர்வம் காட்டினர். முதலில் சென்றவர்கள் தங்களுக்குப் பின்னர் வருகை தருபவர்களுக்கு ஆதரவு காட்டி வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

அங்கு சென்றவர்களின் மொழித் தேர்ச்சி, இயலுமைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றன. அரச சேவையிலும் இறப்பர் தோட்டங்களிலும் இலிகிதர்களாகவும், மொழி பெயர்ப்பாளர்களாகவும் பணியாற்றினர். மேலும் சிலர் தொழில் நுட்பக் கல்வியைக் கற்று நில அளவையாளர்களாகவும், புகையிரதப் பகுதி, பொது வேலைப் பகுதிகளில் தொழில் நுட்ப அலுவலர்களாகப் பணியாற்றினர். இத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் துறைசார் திணைக்களங்களில் உயர் பதவிகளை வகித்தனர். நம் ஊரவர்களில் அரச பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றபொழுது மலேசியா நாட்டில் ஐஅpநசயைட ளுநசஎiஉந அநனயட வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

அரச சேவையில் பணியாற்றிய பின்னர் ஓய்வூதியம் பெற்று தமது பூர்வீக மண்ணுக்குத் திரும்பினர். ஆங்கிலம் கற்று, ஆங்கிலேயரின் கீழ் பணியாற்றி, ஆங்கிலேய வாழ்க்கை முறையில் வாழ்ந்திருந்தாலும் ஊர் திரும்பிய பின்னர் தமிழர் பண்பாட்டினையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பின்பற்றி வாழத் தலைப்பட்டனர். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சால்வை சட்;டை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தனர். தங்களுடன் சிங்கப்பூரில் பணியாற்றியவர்களுடன் தமிழில் உரையாடினர். ஓய்வூதியர்களின் பண்பு சார்

நடத்தையால் ஓய்வூதியர்களின் குடும்பத்தவர்களுக்கு சமூகத்தில் உயர் மதிப்பு இருந்தது. இலங்கையில் வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையான  Ceylon Daily News பத்திரிகையை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உரும்பிராய்க்கு அடுத்த படியாக அதிக எண்ணிக்கையான மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் காரைநகரில் வசித்தனர். ஓய்வூதியர்கள் காரைநகரில் ஊரவர்களாக, சாமானியர்களாக வாழ்ந்தனர். இதுவரை காலமும் விவசாயம் சார்ந்த சமூகமாகவும் அதன் வருமானமுமே காரைநகரின் பொருளாதாரமாகக் காணப்பட்டது. மலாய் நாட்டில் இருந்து வருகை தந்த ஓய்வூதியர்களின் ஓய்வூதியமும் அவர்களின் சேமிப்பும் காரைநகரை வந்தடைந்தது. ஓய்வூதியர்களின் வருகை சமூக மேம்பாட்டில் அவர்களின் பங்களிப்பு, பண உள்ளீடு என்பனவற்றின் காரணமாக யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய கிராமங்களை விட காரைநகர் சமூக பொருளாதார மேம்பாட்டில் விரைவான உயர்வு நிலையை அடைந்தது.

அன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையில் வர்த்தகம் செய்து பொருள் சம்பாதித்தவர்கள் ஏனைய வேலை வாய்ப்புக்கள் மூலம் செல்வம் தேடியவர்களை விட உயர்ந்த நிலையில் மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் இருந்தனர். இந்த நிலைமை தொடர்ந்து வந்த காலங்களில் மாற்றம் பெற்றது.

கிராமத்தில் வாழ்ந்த ஏனைய மக்களை விட வசதியான வாழ்க்கை வசதிகள் பெற்றிருந்தனர். வசதியான கல்வீடுகளைக் கட்டினர். தமது பிள்ளைகளுக்கு ஆங்கில மொழி மூலமான கல்வியை வழங்குவதில் ஆர்வம் காட்டினர். ஓய்வூதியர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்கள் சென்றனர். அரச சேவையில் உயர் பதவிகளைப் பெற்றனர். தங்கள் உறவினர்கள் நல்வாழ்வு பெற்றிட உதவிகள் வழங்கினர். கடன் அடிப்படையில் நிதி வழங்கும் ஸ்தாபனங்களை நடத்தினர். கடன் பெறுபவர்களுடன் மனச்சாட்சியுடன் நடந்து கொண்டனர். கடன் பெறுபவர்களை நம்பி தம் பெரும் பொருளை இழந்து இன்னல் உற்றவர்களும் உள்ளனர்.

ஓய்வூதியர்களிடத்தில் பொதுமைப் பண்புகள் காணப்பட்டன. அனைவரிடமும் சிநேகப் பூர்வமான உறவு முறை பேணினார்கள். மனித நேயமும் மனச்சாட்சியும் மிக்கவர்களாக வாழ்ந்தார்கள். காரைநகரில் வயல் நிலங்களில் விவசாயம் செய்து விவசாயிகளாக வாழ்ந்தனர். காரைநகரின் சமூக ஸ்தாபனங்களில் பொறுப்பான பதவிகளை வகித்து தாம் பெற்ற அறிவை அந்நிறுவன வளர்ச்சிக்குப் பயன்படுத்தினர். பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், ஆலய திருப்பணிச் சபைகள் போன்ற சபைகளிலும் பாடசாலை முகாமையாளர்களாகவும் பணியாற்றினர். மூளாய் வைத்தியசாலை இயக்குநர் சபை யாழ்ப்பாணத்தில் இயங்கிய மலாயர் இலங்கையர் சங்க நிர்வாகம் என்பனவற்றில் அங்கம் வகித்தனர். சமூக சேவையில் வெளிப்படைத் தன்மை உடையவர்களாக விளங்கியமையால் வெற்றி கண்டனர்.

ஓய்வூதியர்கள் உள்ளுர் அரசியலிலும் தேசிய அரசியலிலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். காரைநகரின் முதலாவது கிராம சபைத் தலைவராக மலாய் நாட்டிலிருந்து வருகை தந்தவர் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து வந்த காலங்களிலும் மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் கிராம சபைத் தலைவராகளாகவும், கிராம சபை உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர். தமிழ் தேசிய அரசியல் வாதிகளுடன் நெருக்கமான உறவினைப் பேணினர். தேர்தல்களில் வாக்களிப்பதில் வாக்காளர் மத்தியில் காத்திரமான செல்வாக்குச் செலுத்தக் கூடிய வல்லமை பெற்றிருந்தனர்.

காலப்போக்கில் மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது எவரும் இல்லை என்கின்ற நிலையை அடைந்துள்ளது. மலாய் நாட்டு ஓய்வூதியர்களின் வாழ்க்கை முறையை அறிந்தவர்கள், அவதானித்தவர்கள், அவர்களோடு பழகியவர்கள் மட்டுமே ஓய்வூதியர்களின் வாழ்வின் பண்புகளையும், பெறுமானங்களையும் அறிந்தவர்களாவர். மலாய் நாட்டு ஓய்வூதியர்கள் காரைநகர் கிராமத்தின் மேன்மைக்கு கால் நூற்றாண்டுக்கு மேல் வலுவான பங்களிப்பை வழங்கினர். மலாய் நாட்டு ஓய்வூதியர்கள், கிராமத்தவர்கள் இணைந்து ஆற்றிய பணிகளைப் பதிவிடல் இளைய தலைமுறையினருக்கு ஒரு திறவுகோலாக அமைந்ததில் ஐயமில்லை.

 

 

 

 

 

காரைநகரில் உள்ள மடங்கள்

காரைநகரில் உள்ள மடங்கள்

(எஸ்.கே.சதாசிவம்)

காரைநகரில் அண்ணளவாக 20 மடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எமது முன்னோர்களின் சமூக சிந்தனைக்கு சான்று பகரும் பண்பாட்டுச் சின்னங்கள் மடங்கள். தொல்லியல் பெறுமானம் மிக்க மடங்கள் அழிவடைந்தும், அழிவடையும் நிலையிலும் காணப்படுகின்றது, இம்மடங்களைப் பேணிப் பாதுகாத்தல் வரலாற்றுத் தேவையாகும்.

 

பிள்ளை மடம்

1780 இல் காரைக்காலில் இருந்து வருகை தந்து காரைதீவில் குடியேறிய கனகசபைபிள்ளை என்பவரால் காரைநகர் துறைமுகப் பகுதியில் இம்மடம் அமைக்கப்பட்டது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்தில் காரைநகர் துறைமுகம் முதன்மை நிலை பெற்றிருந்த காலப்பகுதியில் வர்த்தகப் பணிகளுக்காக இம்மடம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் நயினாதீவு நாகபூசணி அம்மனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களும் வழிப்போக்கர்களும் தங்கிச் செல்லும் இடமாக அமைந்தது. 1990 களில்  அரசின் தேவைக்காக இம்மடம் அமைந்திருந்த பகுதி சுவிகரிக்கப்பட்டது. இன்று பிள்ளை மடம் இல்லை. காரைநகரில் அமைந்துள்ள மடங்களில் பிள்ளை மடம் பழமை வாய்ந்தது.

 

வியாவில் மடம்

சைவ மகா சபையின் அனுசரணையுடன் 1923 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வியாவில் கடற்கரையில் ஒரு மடாலயம் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது. இம்மடாலயம் சம்பந்தமான வேலைகளை கருங்காலி, பலகாடு எனும் குறிச்சிகளில் உள்ளவர்கள் செய்ய சம்மதித்திருந்தனர். இம்மடாலயத்தில் ஒரு சைவ ஆசிரியரைக் குடியிருத்தவும், புத்தகசாலை நடாத்தவும் பிரசங்கம் முதலானவைகளை நடாத்தவும் சபையினர் எண்ணியிருந்தனர்.

 

 

 

சுப்பர் மடம்

ஸ்ரீமான் சி. சுப்பிரமணியபிள்ளை தீனாப்பிட்டி வயலின் மத்தியில் கிணறும், மடமும் கட்டினார். (1821 – 1902) இம்மடம் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் ஓய்வெடுக்கும் மடமாகவும், தாம் எடுத்து வரும் உணவை அருந்தும் இடமாகவும், சிறுதானியப் பயிர்ச்செய்கைக் காலங்களில் பயிர்களுக்குக் காவல் செய்பவர்கள் தங்குமிடமாகவும், கிணற்றில் குளிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் காத்திருக்கும் இடமாகவும் அமைந்திருந்தது.

 

 

 

சிவகாமி மடம்

மேற்கு வீதியில் இருந்து சுப்பிரமணியம் வீதி வழியே செல்லும் பொழுது வயல் பிரதேசம் ஆரம்பிக்க முன் கொட்டையடி என அழைக்கப்படும் பிரதேசத்தில் இம்மடம் அமைந்திருந்தது. இவ் அயலில் வாழ்ந்த திரு. இராமநாதன் வீரகத்தி அம்பலவாணர் என்பவர் தனது முதல் மனைவி பிரசவத்தின் போது மரணமடைந்தமையால் மனைவியின் நினைவாக இந்த மடத்தைக் கட்டினார். பனையோலையினால் வேயப்பட்ட 20 X 15 அளவு விஸ்தீரணமுள்ள மடம். வுழிப்போக்கர்கள் அதிகரித்த வெயில், மழை ஆகிய காலநிலைகளில் மடத்தில் தங்கிச் செல்வர். வயல் வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஒன்றுசேரும் இடமாகவும், இளைப்பாறும் இடமாகவும் இருந்தது. ஆரம்ப காலத்தில் ஆவூரோஞ்சி, சுமைதாங்கி என்பன கட்டப்பட்டிருந்தது. இம்மடம் 1920 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியது.

 

அக்காலத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவத்தின் போது இறந்தால் அவர்களின் நினைவாக சுமைதாங்கி கற்கள் அமைப்பது வழக்கம். அதாவது வயிற்றில் சுமையுடன் அவர்கள் இறந்தால் அதனைக் குறிக்கும் விதமாகவும் மற்றவர்கள் தங்கள் சுமையினை இறக்கி வைக்க உதவ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்வதுண்டு. தமது சுமைகளை மற்றொருவரின் உதவியின்றி இறக்கி வைக்கவும் திரும்ப தலையில் ஏற்றவும் இது மிகவும் உதவியாக இருந்தது.

 

அழிவடைந்த நிலையில் காணப்படும் சிவகாமி மடமும்

அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட சுமைதாங்கியும்

 

 

 

 

சங்கடப் படலை

சங்கடப் படலை

எஸ்.கே. சதாசிவம்

 

சுப்பிரமணிய வித்தியாசாலை, சங்கடப்படலை

தமிழ் மக்களின் பண்பாட்டு வரலாற்றுத் தடயங்கள் பேணிப் பாதுகாக்கப்படாமையால் அழிந்து போகும் நிலைமை காணப்படுகின்றது. நமது பண்பாட்டு வரலாற்றுத் தடயங்களையும் அரும்பொருட்களையும் பாதுகாப்பதன் மூலம் நமது இனம் நீண்ட வரலாற்றுப் பெருமை மிக்க இனம் என்பதற்கு உரிமை கோருவதற்குச் சாட்சியங்களாக அமையும்.

யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளில் காணப்படும் சங்கடப் படலை வாயிற் கட்டட அமைப்பாகும். சங்கடப்படலை என்பது கூரையுடன் கூடிய படலை அமைப்பாகும். படலையின் உட்புறமும் வெளிப்புறமும் திண்ணை அமைப்புடன் காணப்படும். சில சந்தர்ப்பங்களில் படலையின் வெளிப்புறத்தில் மாத்திரம் திண்ணை காணப்படும். வீதி வழியே நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இளைப்பாறி ஓய்வு எடுத்து தாகம் தீர்த்துச் செல்வதற்காக அமைக்கப்படுவது. முகம் தெரியாதவர்களையும் வரவேற்று உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பின் அடையாளங்கள் சங்கடப்படலைகள். சில சந்தர்ப்பங்களில் இவற்றோடு இணைந்து கால்நடைகள் நீர் அருந்துவதற்கும் தொட்டிகள் அமைக்கப்படும்.

பழைய காலத்தில் சாதி முறைமை குடி கொண்டிருந்த காலப்பகுதியில் வீட்டிற்கு உள் நுழைபவர்களை வரையறுக்கும் இடமாகவும் இருந்தமை அறியக் கூடியதாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் செல்வந்தர்களின் செல்வச் செழிப்பை வெளிக்காட்டுவதாகவும் அமைகின்றது.

மேலே காணப்படும் சங்கடப் படலை சுப்பிரமணிய வித்தியாசாலையின் ஸ்தாபகர் ஸ்ரீமான் சி. சுப்பிரமணியபிள்ளையின் மகன் திரு. சி. சு. கந்தப்பு அவர்களால் 1935 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இடப்பெயர்வு வரை காரைநகரின் பல குறிச்சிகளில் கூரை அமைப்புடன் பெறுமதி மிக்க வேலைப்பாடுகள் நிறைந்த இரும்பினாலான படலைகள் காணப்பட்டன. பேணிப் பாதுகாக்கப்படாமையினால் அழிவடைந்து செல்லும் நிலைமையில் உள்ளது. களபூமியில் இன்றும் இரண்டு வீடுகளில் கூரை அமைப்புடனான படலைகள் காணப்படுகின்றன.

காரைநகர் துறைமுகம் ஊடாக பயணிக்கும் பயணிகள் மாட்டு வண்டி தொடர் அணிகள் இளைப்பாறிச் செல்வதற்கான வசதியை காரைநகர் கிழக்கு வீதியில் விளானைப்பகுதியில் வாழ்ந்த திரு அம்பலவாணர் இராசரத்தினம் ஏற்பாடு செய்திருந்தார். இப்படலை அமைப்பு முழுமையான சங்கடப்படலை அமைப்பாகும்.

 

 

கால்நடைகள் நீர் அருந்துவதற்கான தண்ணீர் தொட்டி

 

 

 

ஆலடிக்கும் வேம்படிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள திரு. சு. பொன்னம்பலம் அவர்களின் வீட்டின் வாயிற்கதவு 1928 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.

 

 

 

காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

 

 

                     

                                     காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

                         காரைநகர் வடக்குப் பிரதேசம்

 எஸ்.கே.சதாசிவம்

 

திரு. ஆ. தியாகராசா அவர்கள் கல்லூரி அதிபராக பணியாற்றிய காலத்தில் இருந்து காரைநகருக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். தெரிவு செய்யப்பட்ட கிணறுகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட கால இடைவெளிகளில் நீரினைப் பெற்று நீரியல் ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்தை காரைநகர் வடக்குப் பிரதேசத்திற்கு 1976 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார். சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள செட்டியார் வயல் கிணற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு மேற்கு வீதிக்கு அண்மிய சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கியில் நீர் சேமிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. காலை 6.00 மணி முதல் 7.00 மணி, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகம் செய்யப்பட்டது. வலந்தலைச் சந்தியில் இருந்து ஆலடி வரையிலான பகுதியில் மேற்கு வீதியின் வடக்குப் பக்கத்தில் பிரதான சந்திகளில் அமைக்கப்பட்ட பைப்புகளில் (Stand Pipe) இருந்து மக்கள் நீரிணைப் பெற்றனர். பழையகண்டி சிவன் கோவில் வீதியில் அப்பர் கடை சந்தி வரைக்கும் குழாய் மூலம் நீர் பெறும் வசதி இருந்தது. கோடை காலங்களிலும், மழை வீழ்ச்சி குறைந்த காலங்களிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய நீர் விநியோகம் நடைபெற்றது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குழாய் மூலம் நீர் பெறக் கூடியதாக இருந்த வேளையிலும் வழமை போல் குடங்களில் நீர் அள்ளி வருவதனையும் தண்ணீர் வண்டில்களில் நீர் ஏற்றி வருவதனையும் கைவிடவில்லை. தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வழிகாட்டலுடன் காரைநகர் வடக்கு கிராம சபையினால் நீர் விநியோக செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இடப்பெயர்வு வரை நீர் விநியோகம் நடைபெற்று வந்தது.

சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள தண்ணீர் தாங்கி

 

 

செட்டியார் வயல் கிணறும் இயந்திர அறையும் – Pump House

 

 

ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

திரு. தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் இந்து கலாச்சார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மேற்படி குடிநீர் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கினார்.   தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வழிகாட்டலுடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு சிவகாமி அம்மன் கோவிலுக்கு அண்மிய பிரதேசத்தில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கியில் நீர் சேமிக்கப்பட்டு மாலை. 4.00 மணி முதல் 4.30 மணி வரை நீர் வழங்கப்படுகின்றது. வேதரடைப்பு, சிவகாமி அம்மன் கோவிலடி, பொன்னம்பலம் வீதி, வெடியரசன் வீதி, தங்கோடை, செம்பாடு ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் பயரிக்கூடல், மணற்காட்டு அம்மன் கோவில் பிரதேசத்திற்கும் நீர் வழங்கல் விஸ்தரிக்கப்பட்டது. தற்போதும் இயங்கு நிலையில் உள்ளது.

 

 சிவகாமி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து வழங்கப்படும் குழாய் மூலமான குடிநீர் விநியோகத்திற்கான தண்ணீர் தாங்கி

 

 

தோப்புக்காட்டு கிராமத்திற்கான குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

தோப்புக்காட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் 1972 இல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. விமல் அமரசேகரா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தம்பன் வயல் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கான கிணறும் தண்ணீர்த் தாங்கியும் அமைக்கப்பட்டது. Times சங்கரப்பிள்ளை அவர்களால் இச்செயற்றிட்டத்திற்கான காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அரசாங்கமும் சீனோர் நிறுவனத்தில் பணியாற்றியவர்களும் இணைந்து இக்குடிநீர் விநியோகத்தினைச் செயற்படுத்தினர். குடிநீர் விநியோகத்திற்கான சில வேலைத் திட்டங்கள் சிரமதான அடிப்படையில் நடைபெற்றது. துறைமுகப் பகுதியில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக இச்செயற்றிட்டம் நின்று போய் விட்டது.

 

தோப்புக்காட்டு கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கான

தண்ணீர் தாங்கியும் கிணறும்

 

 

தோப்புக்காட்டு கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கான இயந்திர அறை (Pump House)

 

 

 

 

வியாவில் ஐயனார் தேவஸ்தான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

 

வியாவில் ஐயனார் தேவஸ்தான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்திற்கான நிதியினை லண்டன் வர்த்தகர் திரு. நட்டுவானி வழங்கினார். இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக சேவையாகும். வருடம் முழுவதும் வயலில் அமைந்துள்ள தண்ணீர்த்தாங்கி சூழலிலும், வியாவில் ஐயனார் தேவஸ்தான சூழலிலும் கால்நடைகள் நீர் அருந்துவதற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வியாவில் சைவ வித்தியாசாலைக்கும் நீர் வழங்கப்படுகின்றது. குடிநீர் தட்டுப்பாடான காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஐயனார் தேவஸ்தான சூழலில் குழாய் மூலம் குடிநீர் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

 

வியாவில் ஐயனார் தேவஸ்தான குடிநீர் விநியோகத்திற்கான தண்ணீர் தாங்கி

 

 

 

 

ADB/AFB/GOSL நிதி உதவியுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி

 

 

 

 

 

 

 

அமுதசுரபியாக விளங்கும் பனையின்பெருமையும் காரைநகர் மக்களும்

 

 

அமுதசுரபியாக விளங்கும் பனையின்பெருமையும்

காரைநகர் மக்களும்

இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த காலத்திலும், அதன் பின்னரும் இலங்கையில் இறக்குமதிகள் குறைந்து உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரிசி கோதுமைமா சீனி போன்றன பங்கீட்டு முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. உள்ளுரில் அரிசி, நெல் என்பன விலையேற்றம் கண்டன, பணப்புழக்கமும் குறைந்தே காணப்பட்டது. அதுமட்டுமன்றி மக்கள் வெளிநாட்டுப் பொருட்களில் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதனால் பல பெரியோர்களும் குழுக்களும் முனைந்து அதிக கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த பெருமுயற்சி எடுத்ததன் பயனாக மக்கள் பனம் பொருட்களுக்குப் புத்துயிர் கொடுக்க ஆரம்பித்தனர். இதற்குக் காரைநகர் மக்களும் இயைந்து செயற்படத் தொடங்கினர்.

இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினரால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறக்குறைய 42,000 ஏக்கர் நிலப்பரப்பில் 77,00,000 பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் வலிகாமம் மேற்குப் பகுதி 22,05,388 பனைகளுடன் 1ம் இடத்திலும், தீவுப்பகுதி 13,69,284 பனைகளுடன் 2ம் இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிடப்படுள்ளது. இவற்றை உற்றுநோக்கும் போது காரைநகரில் குறைந்தது 300,000 பனைகளாவது இருந்திருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகின்றது. அவற்றில் புதிய வீடுகளுக்கான கூரைகள் அமைப்பதற்கும், வீடுகள் கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் இருந்த பனைகளும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைகள் காரணமாகப் பாதுகாப்புக் கருதி காரைநகர் துறைமுகப்பகுதி, இராசாவின் தோட்டம், தோப்புக்காடு, நீலங்காடு பகுதியில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை என்பன அண்ணளவாக 8 – 10 வீதமாகும், வேரப்பிட்டி, கல்லந்தாழ்வு, கொத்தாசி அடைப்பு, ஊரி பிட்டியோலை, கொட்டைப் புலம் போன்ற கரையோரப்பகுதிகளில் மிக நெருக்கமாகவும், ஏனைய சில இடங்களில் அடர்த்தியாகவும் வேறு சில இடங்களில் பரவலாகவும் காணப்படுகின்றன.

பனைகள் கூட்டமாகக் காணப்படும் பகுதியை பனங்கூடல் என அழைக்கின்றோம்.பனை மரத்தைக் கற்பகதரு எனவும் அழைக்கின்றோம். இதற்குப் புற்பதி, தாலம் பெண்ணை, பொந்தி, காகக்கருப்பை கருங்குந்தி, செங்குந்தி, கட்டைச்சி பூமணத்தி, கங்கிநுங்கி, கொட்டைச்சி எனப்படுகின்ற மறுபெயர்களும் உள்ளன. இது போரசஸ் என்னும் தாவர இனத்தைச் சேர்ந்தது.

பனைகளில் ஆண் பனை,பெண் பனை என இரு இனங்கள் பற்றியே நாம் இதுவரை படித்தோம்.ஆனால் தமிழகத்தில் இருந்து வெளி வந்த 28.08.2019 தினகரன் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரையில் 34 விதமான பனைகள் இருப்பதாகக் கூறுகின்றது.

1    ஆண் பனை

2    பெண் பனை

3    தாளிப்பனை

4    கூந்தப்பனை

5    சாற்றுப்பனை

6    ஈச்சம்பனை

7    குமுதிப்பனை

8     ஆதம்பனை

9     திப்பிலிப்பனை

10    ஈழப்பனை

11    சீமைப்பனை

12    உடலற்பனை

13    கிச்சிலிப்பனை

14    குடைப்பனை

15    இளம்பனை

16    கூரைப்பனை

17    இடுக்குப்பனை

18    தாதம்பனை

19    காந்தம்பனை

20    பாக்குப்பனை

21    ஈரம்பனை

22    சீனப்பனை

23    குண்டுப்பனை

24    அலாம்பனை

25    கொண்டைப்பனை

26    ஏரிலைப்பனை

27    ஏசறுப்பனை

28    காட்டுப்பனை

29    கதலிப்பனை

30    வலியப்பனை

31    வாதப்பனை

32    அலகுப்பனை

33    நிலப்பனை

34    சனம்பனை

இப்பனைமரம் மனிதன் நாற்றுநட்டோ, நீர் இறைத்தோ பசளையிட்டோ வளர்வதில்லை, மாறாகப் பனைமரத்தில் இருந்து விழுந்த பனம் பழத்தை மாடுகள் நன்றாகச் சூப்பிகளியை உண்டபின் எஞ்சியிருந்த பனம் விதை மழைநீர் ஈரத்தில் தானாக முளைத்து வடலியாக வளர்ந்து பின்னர் குறிப்பிட்ட காலம் கடந்த பின் பனையாக உருவெடுக்கின்றது. இதன் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்தைப் பற்றியும் அதற்கான காலங்கள் பற்றியும் பார்ப்போம்.

  1. விதைப் பருவம்         – 22 நாள்
  2. முறிகிழங்கு               – 22 நாள் முதல் 3 மாதம் வரை
  3. நார்க்கிழங்கு            – 3 மாதம் முதல் 4 மாதம் வரை
  4. பீலிப்பருவம்              – 4 மாதம் முதல் 2 வருடம் வரை
  5. வடலிப்பருவம்           – 2 வருடம் முத 10 வருடம் வரை
  6. பனைப் பருவம்        – 10 வருடம் முதல் 45 வருடம் வரை

இப்பனைப் பருவத்தில் ஆண்டொன்றுக்கு 12 அங்குல வளர்ச்சி காணும், இதன் பின் செழிப்புற்று வைரம் பெறுகின்ற தெனக்கூறப்படுகின்றது.

பனைபற்றி ஆய்வு செய்த ரென்னற் என்பவரும், பேர்குசன் என்பவரும் பனை 801 விதமான பயன்களைத் தருமென்று கூறியிருக்கிறார்கள், பனையில் இருந்து கிடைக்கும் பயன்கள் இருவகைப்படும் ஒன்று உணவு வகை மற்றறையது பாவனைப் பொருட்களாகும்

உணவுப் பொருட்களாவன      பாவனைப் பொருட்களாவன

பனம் பழம்                                                                       பாய்

பனங்கிழங்கு                                                                தடுக்கு

பனாட்டு                                                                        களப்பாய்

பனங்கட்டி                                                                        சுளகு

பனங்கற்கண்டு                                                              விசிறி

பனங்காயப் பணியாரம்                                              பட்டை

பனஞ் சீனி                                                     நீர் இறைக்கும்  பெரியபட்டை

பனங்களி                                                                          பெட்டி

ஒடியற்பிட்டு                                                                     கடகம்

ஒடியற் கூழ்                                                                 புத்தகப்பை

புழுக்கொடியல்                                                      கொட்டப் பெட்டி

கருப்பட்டி                                                                ஏடுகள் (சுவடிகள்)

நுங்கு                                                                      வள்ளத்தலைப்பாகை

கள்ளு                                                                                     பிளா

பதநீர்                                                                                      உமல்

பூரான்                                                                                     ஓலை

சாராயம்                                                                         பனங்குருத்து

ஓடியல்                                                                         ஓலைக் குட்டான்

குரும்பை                                                                         கங்குமட்டை

                     பன்னாடை

                  ஊமல்

                       நெல்லுக்கூடை

                     மீன் பறி

                       திருகாணி

                       நீத்துப்பெட்டி

                     உறி

 

வேறு பொருட்கள்

பனை மரத்தில் இருந்து துலா, வீட்டுக் கூரைக்கான மரங்கள் தீராந்தி, சிலாகை மற்றும் மாட்டுத் தொழுவம் வண்டிலுக்கான மரம் மற்றும் இன்னோரன்ன பொருட்களும் செய்யப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை காரைநகர் மக்களிடையே பாவனையில் உள்ளன.

பனையானது  உணவு மற்றும் வீட்டுத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது அல்ல. இதற்கு விசேட ஆற்றல் உண்டு இதற்கு நிலத்தடி நீரைச் சேமித்து வைக்கும் ஆற்றலும் உண்டு. கிணற்றினை சுற்றி பனைமரங்கள் இருந்தால் அக் கிணறு இலகுவில் வற்றாது. வரட்சிக் காலங்களிலும் கூட குறைந்தளவு நீரைக் கொண்டு தாக்குப் பிடிக்கும் தன்மை பனை மரங்களுக்குண்டு. குறிப்பிட்ட இடத்தில் உள்ள நீர் மட்டத்தை பனை மரங்களே பாதுகாப்பதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். பழங்காலத்தில் வயல்களில் எல்லைகளில் பனை மரத்தை நாட்டியுள்ளனர். காரணத்துடன்தான் அப்படி செய்திருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து விழக்கூடிய பனம் பழம் மற்றும் இதர பொருட்கள் வயல்களுக்கு சிறந்த இயற்கைப் பசளைகளாகப் பயன் பட்டு வந்துள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த பனை ஆர்வலர் கடும் புயல் வந்தாலும் இலகுவில் சாயந்து விழாத மரம் பனையே என உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் காரணம் 3 வகையான வேர்த்தன்மை கொண்டதேயாகும் என்கிறார். வெளிப்புறவேர் மழை நீரை வேகமாக உள்ளே கொண்டு செல்லும். உள்வேர் மழை நீரைச் சேமித்து வைக்கும். நடுப் பகுதியில் உள்ள வேர் கிடைக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக்கு அனுப்பிவைக்கின்றது. பனை முக்கிய வேர் மண்ணிற்குள் 100 முதல் 150 அடிவரை செல்லும் தன்மை கொண்டது. பனை தமிழர்களின் நல் வாழ்வின் அடையாளம்.

 

(அ) நுங்கு

வைகாசிமாதம் முதல் ஆடிமாதம் வரை நுங்குக் காலமாகும். பாளைகள் வெளிவந்து குரும்பைகள் தோன்றும், அவை முற்றி நுங்குகளாகப் பரிணமிக்கின்றன, இது இருவகைப்படும் ஒன்று இளம் நுங்கு, மற்றையது கல் நுங்கு, இளம் நுங்கு வெட்டியவுடன் நீர்த்தன்மை நிறைத்தாக இருக்கும் பருகுவதற்கு இலகுவாகவும் இனிப்புத் தன்மை நிறைந்தாகவும் இருக்கும், கல்நுங்கு என்பது சற்று முற்றிய தன்மை கொண்ட தாகவும் இறுக்கத்தன்மை கொண்டிருப்பதனாலும் அதனைக் கைவிரலால் தோண்டியுண்பர், இது சற்று இனிப்புத்தன்மை குறைத்து காணப்படும் , நுங்கில் அதிகளவு வைற்றமின் B,C என்பனவும், இரும்புச்சத்து, கல்சியம் போன்றனவும் இருப்பதாகக் கூறப்படுகின்றன, உஷ்ணத்தினால் ஏற்படும். வேர்க்குரு இல்லாமல் போய்விடுமெனக் கேள்விப்பட்டிருக்கின்றேன், காரைநகரில் சிறுவர் முதல் பெரியோர் வரை இதனை விரும்பியுண்பர். இதனால் தான் பனை யோலை வெட்டும் பொழுது நுங்கினையும் வெட்டுமாறு கோருகின்றனர், ஊரில் கோவில்களில் நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது தேருக்கு சுற்றிவர நுங்குக் குலைகளைக் கட்டி அலங்கரிக்கின்றனர். நுங்கு குடித்தபின் எஞ்சும் கோம்பைகளைச் (கோழை) சிறுசிறு துண்டுகளாக அரிந்து ஆட்டுக்கடாக்களுக்கும் இளம்மாட்டுக் காளைகளுக்கும் உணவாகக் கொடுக்கின்றனர். இது அவற்றிற்கு சக்தியையும் வளர்ச்சியையும் கொடுக்கின்றது.

(ஆ) பனம் பழம்

நுங்குமுற்றி சீக்காயாகவும், அச்சீக்காய் முற்றி பனம் பழமாகவும் பரிணமிக்கின்றது . ஆவணி மாதம் முதல் ஐப்பசிமாதம் வரையான காலப்பகுதி பனம்பழக்காலமாகும். பனம் பழங்கள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 6 – 8 அங்குள விட்டமுள்ளனவாகவும், குலைகளாகவும், காட்சியளிக்கின்றன. நார்த்தன்மை பொருந்திய இப்பழங்களின் மேற்தோல் கறுப்பு நிறம் கொண்டவையாகும் அவை ஒரு விதையுடையனவாகவும், இருவிதைகள் கொண்டவை இருக்காலி எனவும், மூன்று விதைகள் கொண்டவை முக்காலி எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றினுள்ளே சுற்றிவர உள்ள பகுதிகள் தும்புகள் நிறைந்தனவாகவும் அத்தும்புகளிடையே களித்தன்மை கொண்ட பனம்பழத்தில் செம்மஞ்சள் நிறமுடைய திரவப் பொருள் காணப்படுகின்றது. இது பனங்களி எனப்படும், இதனை மாடுகள் எடுத்தவுடனையே தோலை நீக்கிவிட்டு, விதையை உறந்து உறிஞ்சிச் சாப்பிடுகின்றன. ஆனால் மனிதரோ அவ்வாறில்லாமல் இனிப்புத் தன்மை கொண்ட பழங்களாக எடுத்து நெருப்பிலிட்டு சுட்டு அதன் பின் அதனை நன்றாகக் கழுவி மேலுள்ள தோலை நீக்கி அதனை நன்றாகப் பிசைந்து உண்கின்றனர், 1950க்கு முன்னர் பெரும்பாலான காரைநகர் மக்களின் வீடுகளில் மதிய உணவாகப் பனம் பழமே இருந்தது என்று சொன்னால் மிகையாகாது ஒரு  விதையினை உறிஞ்சியுண்டால் ஒருநேரப் பசிதீரும் சாத்தியம் இருந்தது.

“மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூறி

இரந்தழைப்பார் யாருமுண்டோ” என்பதற்கிணங்க காரைநகர் மக்கள் பனம் பழகாலத்தில் அதிகாலையில் எழுத்து கடகங்களுடன் தத்தம் தோட்டங்களுக்குச் சென்று பனம் பழங்கள் பொறுக்கி வருவதைக் காணக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்ல வேறெந்த இடத்திலும் பனம் பழத்தைக் கண்டாலும் பொறுக்கிவரத்தவறுவதில்லை, இது எம்மக்களின் வழமையாக இருந்தது . பனம் பழத்தில் இனிப்புத்தன்மை கொண்டவை காறல் தன்மை கொண்டவை என இருவகை உண்டு இதைவிட வேறு தன்மைகள் கொண்டவையும் இருப்பதாக அறியப்படுகின்றது.

(இ) பனாட்டு

பனாட்டு தயாரிப்பதென்பது இலகுவான காரியமன்று. மேலும் எல்லோராலும் பொறுமையுடன் செய்யமுடியாது என்பதே உண்மை, பனாட்டுத் தயாரிப்பவர்கள் இனிப்புத்தன்மை கொண்ட பனம் பழங்களை மரத்தில் இருந்து விழுந்தவுடனேயே எடுத்துச் சேகரித்துவிடுவார்கள், பின்னர் , அப்பனம் பழங்களின் மேற்பகுதி முழுவதையும் நன்றாகக் கழுவிசுத்தம் செய்து கொள்வர்.

அடுத்து அதன் மேலுள்ள கறுப்புத்தோலை நீக்கிவிட்டுப் பழத்தை நன்றாகப் பிசைந்து களியை உறந்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் இடுவார்கள் பாத்திரத்தில் நிரம்பிய களியை பனங்களித் துண்டு எனக்கூறப்படும் துண்டின் உதவியுடன் வடித்தெடுப்பார்கள். வீட்டு முற்றத்தின் ஒருபகுதியில் நான்கு கம்பங்களை நாட்டிப்பந்தலிட்டு அதன் மேல் பாயைவிரித்து அப்பாயின்மேல் வடித்தெடுத்த களியை ஊற்றி நன்றாகப் பரவி அதில் உள்ள நீர்த்தன்மை நீங்கும் வரை ஏழெட்டு முறை பரவிக் காயவிடுவர் இரவில் குளிர்த்தன்மை ஏற்படுமெனக்கருதி பாயுடன் சுற்றி வீட்டுக்குள் வைப்பர். பனாட்டுக் காய்வதற்கு வெய்யில் படக்கூடிய பகுதியையே தேர்ந்தெடுப்பர். பனாட்டு நன்றாக காய்ந்து நீர்த் தன்மை முற்றாக நீங்கியதும். உழவாரை கொண்டு செதுக்கி எடுத்து அளவாக மடித்து இதற்கென இழைக்கப்பட்ட (பனாட்டுக் கூடை) கூடைகளில் அடுக்கிக் குசினியில் உள்ள பறனில் வைத்து விடுவர். மேற்கூறியவைகளைக் காரைநகர் சல்லை எனும் பகுதியில் வாழ்ந்த எனது பேத்தியார் பொன்னாத்தை என்பவர் வருடந்தோறும் செய்து வந்ததை நான் சிறுவனாக இருந்த பொழுது அவதானித்து வந்தேன். இவர் மட்டுமல்ல மேலும் பலர் பனாட்டுத்தயாரிப்பில் ஈடுபட்டார்கள் என அறிய முடித்தாலும் விபரங்களைத் திரட்ட முடியவில்லை.

பனாட்டு பெரும்பாலும் காலை உணவாகக் கொள்ளப்பட்டது. எனது பேத்தியோர் ஒரு துண்டுபனாட்டும் தேங்காய்ப்பூவும் தந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக்காலத்தில் ஒரு கூடை பனாட்டுக்கு ஒரு பரப்புக் காணி எழுதிக் கொடுத்தார்கள் எனக்கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதன் உண்மை தன்மையை ஸ்திரப்படுத்த முடியவில்லை. இருந்தும் அத்தகவல் உண்மையானால் அக்காலத்தவர் பனாட்டுக்கும், பனம் பொருட்களுக்கும் எவ்வளவு மதிப்புக்கொடுத்தார் என்பது புலனாகின்றது. அதியமான் என்னும் அரசன் கொடுத்த நெல்லிக்கனியை உண்ட ஒளவைப்பிராட்டி நீண்ட காலம் வாழ்ந்தது போல பனாட்டு மற்றும் பனம் பண்டங்களை உண்டவர்களும் நீண்ட காலம் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள் என்பதைச்  சரித்திரம் பறை சாற்றிவருவதை நீங்கள் அறிவீர்கள். இது காரைநகரைச் சார்ந்த முதியோர்களுக்கும் சாலப் பொருந்தும்.

 

(ஈ) கள்ளு , பதநீர்

தை மாதம் ஆனி மாதம் வரை கள்ளு மற்றும் பதனீர் இறக்கும் காலமாகும். கள் இறக்குபவர்கள் பனையில் இருந்து வெளிவரும் பாளைகளைத் தட்டிப்பதப்படுத்தி அவற்றைக் கயிற்றினால் வரிந்து கட்டி அவற்றில் மண்முட்டிகளை கட்டிவிடுவார்கள். அப்பாளையில் இருந்து ஒழுகும் கள்ளு கட்டப்பட்டமுட்டியில் ஒருங்கு சேரும் மரமேறுபவர்கள் அப்படிச் சேரும் கள்ளினை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சேர்த்து வருவார்கள். அப்படி பல பனைகளிலும் சேர்ந்து வந்த கள்ளினை மரத்தின் கீழேயே வைத்து விற்பனை செய்து வந்தனர். உடலுழைப்பின் பின் களைப்புற்று வருபவர்களும், நிரந்தரக்குடிகாரர்களும், மற்றும் இரகசியக் குடிகாரர்களும் அங்கேயே கள்ளினை அருந்திவந்தார்கள். மரத்தில் இருந்து இறக்கியவுடன் அக்கள்ளினைக் குடித்தால் இனிக்கும். நேரம் செல்லச் செல்ல அக்கள்ளின் தன்மை மாற்றம் அடையும். அது புளிக்கும். வெறித்தன்மையை ஏற்படுத்தும். கணைச்சூடு உள்ள சிறுவர்களுக்கும் அம்மை, சின்னமுத்து போன்ற வெப்பத்தினால் ஏற்படும் நோய்களுக்குமாக பெற்றோரும் மற்றோரும் உடன் கள்ளினை அதாவது மரத்தில் இருந்து இறக்கியவுடன் கள்ளினை வாங்கிச் சென்று அருந்தக் கொடுப்பார்கள். இதனால் சூடு தணிந்து நோய் நீங்கவழி பிறந்தது இரகசியக் குடிகாரர்களுக்கும், புதிதாகக் குடிப்பவர்களுக்கும் இது தேனாமிர்தமாய் இருந்தது. உழைத்துக்களைத்து வருபவர்கள் சற்று வித்தியாசமாகப் பழங்கள்ளையே விருப்புடன் பருகினர். இது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

நேரம் செல்லச் செல்ல அவர்கள் தன்னிலை மறந்து நடக்க முடியாதவர்களாய் மற்றவர்களின் உதவியுடனேயே வீடு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஒருவர் வெறியேறியவுடன் பாட்டிசைக்க ஆரம்பிப்பார். இன்னொருவர் அதற்கு எதிர்பாட்டிசைப்பார் இவர்களின் பாடல்களில் அதிகமாக நடராஜப்பத்து, பட்டினத்தார் பாடல்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. சிறுவர்களாக இருந்த எமக்கு அப்பொழுது அப்பாடல்களின் பொருள் விளங்கவில்லை காலங்கடந்து அவற்றை நினை விற் கொண்டு வரும்போது அவற்றின் பொருளைத் துல்லியமாக விளங்கிக்கொள்ள முடிந்தது. அவற்றில் ஒருபாடலை மட்டும் நடராஜப் பத்து என்னும் பகுதியில் இருந்து தருகின்றேன்.

 

காயா மரங்களிற பூ பிஞ்சறுத்தேனோ

கன்னியர்கள் பழிகொண்டெனோ

கடனென்று பொருள் பறித்தே வயிறெரித்தெனோ

கடுவழியில் முள்ளிட்டனோ

தாயாருடற்குள் வரவென்ன வினை செய்தனோ

தந்தபொருளிலை யென நான்

தானென்ற கோபமொடு கொலை களவு செய்தனோ

தபசிகளை யேசினேனோ

வாயார நின்று பலபொய் சொன்னனோ

ஈயாத லோபியேயானலுமென் பிழைகள்

எல்லாம் பொறுத்தருள்வாய்

ஈசனே சிவகாமிநேசனே எனையின்ற

தில்லைவாழ் நடராஜனே

இப்படியாகப் பல பாடல்களை அவர்கள் பாடுவார்கள்

கள்ளுக்கொட்டில்களில் சாத்தாவயல் பகுதியில் அமைந்திருந்த கள்ளுக்கொட்டில் பிரபல்யம் பெற்றதாக அமைந்திருந்தது. இது கருங்காலி கிராமத்தில் உள்ள கேசடைப் பகுதியூடாக வயல்களை ஊடறுத்துக் களபூமி சத்திரத்தைப் பகுதியின் ஊடாகக் காரைநகர் கிழக்கு வீதியைச் சென்றடையும் வீதியின் அருகே வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. வயல்களில் வேலை செய்துவிட்டு வருபவர்களும், வேறு இடங்களில் கூலிவேலை செய்துவிட்டு வருபவர்களும் இங்கு வந்து சுதந்திரமாகவும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமலும் கள்ளினை அருந்தவசதியாக இருந்தது இது போன்று வேறு பகுதிகளில் கள்ளுக் கொட்டில்கள் அமைந்திருந்தாலும் சாத்தாவயல் கள்ளுக்கொட்டில் முதன்மை பெற்றிருந்தாக அறியப்படுகின்றது. அங்கு பலர் கள் அருந்திய பின் சுவைக்காகப் பனங்கிழங்கு, கருவாடு போன்றனவற்றைக் கொண்டுவந்து காவோலையைக் கொழுத்தி அதில் வைத்துச் சுட்டுச் சுவைத்தனர்.

1970களில் இருந்து இந்நிலமையில் மாற்றம் ஏற்பட்டது – பனை அபிவிருத்திச் சபை  ஏற்படுத்தப்பட்டு கள்ளுக் கொட்டில்களுக்கு மூடுவிழா ஏற்படுத்தப்பட்டது, மாறாகக் கள்ளுத் தவறணை ஆரம்பிக்கப்பட்டது. கள் இறக்குபவர்கள் அனைவரும் தாம் இறக்கும் கள்ளினைக் கள்ளுத் தவறணைக்கே விற்கவேண்டு மென்ற கட்டாய நிலை ஏற்பட்டது. மாறாக வெளியில் விற்பது தடை செய்யப்பட்டது, கள்ளுக்குடிப்பவர்களும் தவறணைக்கே வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் உடன் கள்ளினைப் பெற விரும்புபவர்களுக்கும், இரகசியக் குடிகாரர்களுக்கும் திண்டாட்டம் ஏற்பட்டது.

அடுத்து பதநீர் பற்றிச் சிறிது ஆராய்வோம். காரைநகரில் பதநீர் இறக்குவது மிக மிகக்குறைவென்றே கூறலாம். கள்ளுவிற்பனையில் நாட்டம் கூடுதாக இருந்தமையினாலும் அதில் அதிக விற்பனையும், அதிக லாபம் கிடைத்தமையுமே காரணம் எனக் கூறலாம். இதுவும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலப்பகுதியியே இறக்கப்படுகின்றது. வடமகாணத்தில் வடமராட்சி, தென்மராட்சி, கீரிமலை, காங்கேசன்துறை, பொலிகண்டி, சண்டிலிப்பாய் சங்கானை போன்ற பிரதேசங்களில் பதநீர் கூடுதலாகச் சேகரிக்கப்படுகின்றது.

கள்ளு சேகரிப்பது போன்ற நடை இருந்தாலும் பதநீர் சேகரிப்பதில் சிறுவித்தியாசம் உண்டு, பதநீர் இறக்கும் முட்டியில் அளவாகச் சுண்ணாம்பு இட்டுவிட்டால் அது பதநீராக மாறுகின்றது. இது குடிப்பதற்கு இனிப்பாக இருக்கும்.

காரைநகரில் உள்ள வாரியந்தனைப் பகுதியில் சின்னமுருகர் கேணிக்கு தெற்குப் பக்கமாக வீதியோரத்தில் நிற்கும் ஒற்றைப் பனையிலும், மாவடியார் என அழைக்கப்படும். வாரியந்தனையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அவர்களின் வீட்டிலும் உள்ள பனனகளில் பதநீர் சேகரிப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சிறுபையனாக இருந்தபோது அங்கு அதனைச் சுவைத்தும் உள்ளேன். அதன் சுவையை இன்று நினைக்கும் போது நாவூறுகின்றது ஆண் பனைப் பதநீரைச் சோமபானம் என்றும், பெண்பனைப் பதநீரைச் சுரபானம் எனவும் அழைப்பதாக அறியப்படுகின்றது. பதநீரைக்காய்ச்சி பனங்கட்டி, கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு என்பவற்றைக் காரைநகர் தவிர்ந்த மேற்கூறிய இடங்களில் குடிசைக் கைத்தொழிலாகச் செய்து வருகின்றனர். இவற்றிற்கு உள்நாடு, வெளிநாடுகளில் நல்ல கிராக்கியுள்ளது. இதனால் கனடா, பிரித்தானியா, அவுஸ்திலேயா, சுவிஸ், ஜேர்மணி, பிரான்ஸ் போன்ற தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த வாழும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனார்.

1950 க்கு முற்பட்ட காலத்தில் பனங்கட்டியைச் சிறுதுண்டுகளாக வெட்டிச் சீனிக்குப் பதிலாகத் தேனீருடன் கடித்துக் குடித்தார்கள். இதனைவிட ஆடிக்கூழ், கொழுக்கட்டை போன்றனவற்றிகும் பனங்கட்டியைப்பாவித்தார்கள் காரைநகரில் ஆடிப்பிறப்பு நாளில் பச்சைஅரிசி, பாசிப்பருப்பு, பனங்கட்டி, தேங்காய்ப்பால், அளவான உப்புச் சேர்த்துப் பாற்கஞ்சி செய்வதையே

வழமையாகக் கொண்டுள்ளனர். பனங்கற்கண்டு ஒரு மருத்துவப் பொருளாகும். நாட்பட்ட இருமலாயினும் சரி ஆரம்பகால இருமலாக இருந்தாலும் சரி பனங்கற்கண்டு மூலம் நிவாரணம் கிடைக்கின்றது.

பதநீர் இறக்குபவர்களும், உற்பத்தியாளர்களும் அரசாங்கமும் ஒருங்கிணைந்து செயற் படுவார்களாயின் நாடு தன்னிறைவு பெறும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் அந்நியச் செலவாணியை மிச்சம்பிடிக்கலாம். வேலையில்லாத் திண்டாட்டம் குறைவடையும். பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் இறக்குமதித்தடை விதிக்கப்பட்டதனால் நாட்டில் உற்பத்தி பெருகியது  காரைநகர் மக்கள் உட்பட யாழ்ப்பாணத்தவர்கள் பலர் ஒட்டுசுட்டான், முத்தையன் கட்டுபோன்ற வன்னிப்பகுதிகளுக்கு சென்று காடுகளைக் களனியாக்கியது மட்டுமன்றி அங்கு நெல், மிளகாய், வெங்காயம் போன்றவற்றைப் பயிரிட்டு நாட்டு. உற்பத்தியைப் பெருக்கினார்கள். அதனால் பலர் செல்வந்தர்கள் ஆனார்கள். அதே போலப் பனம் பொருள் உற்பத்திகளைப் பெருக்குவார்களானால் யாழ்ப்பாண மக்கள் செல்வமும் பெருகும். உற்பத்திகளில் மிகக் குறைந்த செலவுடன் முன்னெடுக்கப்படும் உற்பத்தி பனம் பொருள் உற்பத்தி மட்டுமே.

(உ) பனங்கிழங்கு

பனங்கிழங்கு என்றதும் எமக்கெல்லாம் சத்திமுத்தப்புலவரே ஞாபகத்திற்கு வருகிறார் , இவரால் பாடப்பெற்ற ஒருபாடலில் பனங்கிழங்கினை உவமானமாகக் காட்டுகின்றார் .அப்பாடலின் ஒரு பகுதி வருமாறு

“நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படுபனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

இப்படியாக அவரது பாடல் தொடர்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் புலவர் நாராயின் சொண்டினை பனங்கிழங்கு பிளந்த மாதிரி என வர்ணிக்கின்றார். இப்பாடலை 6ம் வகுப்பில் படித்திருக்கிறேன் காரைநகர் மக்கள் தமது தோட்டங்களிலிருந்தும் வெளியில் இருந்தும் பொறுக்கிவந்த பனம் பழங்களில் தமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மீதியை ஓரிடத்தில் குவியலாகப் போட்டுவைப்பார்கள். தமது தேவைகள் முடிந்ததும் மீதமாகவுள்ள பனம் விதைகளையும் இக்குவியலுடன் சேர்த்து விடுவர். பின்னர் அங்கு குவியலாக்கப்பட்டிருக்கும் பனம் பழங்களில் உள்ள மேல் கறுப்பு தோலை நீக்கி விட்டு விதைகளை கொத்திப்பதப்படுத்தப்பட்ட மணற் பாங்கான நிலத்தில் உரிய முறை அடுக்கி அதன்மேல் மண் போட்டுப் பரவிப் பாத்திகட்டி மண்வெட்டியின் பின் பகுதியால் அணை போட்டு விடுவார்கள் ஐப்பசிமாத முற்பகுதியில் இதனைச் செய்வர்.

இதனைப் பனம்பாத்தி என அழைப்பர் அங்குவிதைகள் முளைவிடும்போது நிலத்தினுள்ளே செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டு கிழங்காக உருவாக்கின்றன. இவை பனங்கிழங்கு எனப்படும். இதன் நுனிப்பகுதி கூராகவும் அடிப்பகுதி கிட்டத்தட்ட ஒரு அங்குல விட்டமுடையதாகவும், ஒரு அடிவரை நீளமுடையதாகவும் காணப்படும். இக்கிழங்கின் வளர்ச்சி உரிய பருவம் அடைந்ததும் மார்கழி மாதத்தில் கிளறி எடுக்கப்பட்டு கிழங்கு வேறு ஊமல் வேறாகப் பிரத்தெடுப்பர். தமக்குத் தேவையான கிழங்குகளை எடுத்துவிட்டு மீதியைத் தமது பிள்ளைகளுக்கோ, சகோதரர்களுக்கோ பகிர்ந்தளிப்பர் காரணம் அன்று குடும்ப அன்னியோன்யம் சிறந்து விளங்கியது பிடுங்கி எடுக்கப்பட்டகிழங்குகளை இருவேறு பிரிவுகளாகப் பதப்படுத்துவர் ஒன்று புழுக்கொடியல், மற்றையது ஒடியல் ஆகும்.

1.புழுக் கொடியல்

பனம் பாத்தியில் இருந்து கிளறி எடுக்கப்பட்ட கிழங்கின் மேற்தோலை நீக்கிவிட்டு அக்கிழங்கின் நுனிப்பகுதியையும், தலைப்பகுதியையும் சிறிதளவு வெட்டி எறிந்துவிட்டு அதனைச்சுத்தம் செய்துவிட்டு நீர் நிரப்பிய கடாரம் போன்ற பாத்திரத்தில் கிழங்கின் அடிப்பாகம் கீழாகவும், நுனிப்பாகம் மேலாகவும் வரக் கூடியதாக இட்டு நன்றாக அவித்தெடுப்பர். அவிந்த கிழங்குகளை இரண்டாகப் பிளந்த பாய்களில் பரவிக் காயவிடுவர். இன்னும் சிலர் பிரித்தெடுத்த கிழங்குகளைப் பனை நாரில்குத்தி உயரமான மரங்களில் வெய்யிலில் படும்படியாக கட்டித்தொங்கவிடுவர். மேலும் சிலர் பனங்கிழங்குகளை விலைக்குவாங்கி மேற்கூறியவாறு பதப்படுத்துகின்றனர். அது நன்றாகக் காய்ந்த பின் புழுக்கொடியல் எனப்படுகின்றது. இவற்றை நீண்ட காலம் வைத்திருந்து உண்ணலாம். சிலர் இவற்றை உரலில் இட்டு இடித்து மாவாக்கி தேங்காய்ப்பூ, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கும், முதியோருக்கும்

உண்ணக் கொடுக்கின்றனர். இது சுவைமிக்க பண்டம் மாத்திரமல்ல சத்துக்களும் நிறைந்ததாகும்.

பலர் அவித்த கிழங்குகளைச்சிறு, சிறு துண்டுகளாக வெட்டிப்பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து உரலில் இட்டு இடித்துத் துவையலாக்கி உண்கின்றனர். மது அருந்து பவர்கள் சுவைக்காகப் பனங்கிளற்குகளையோ அல்லது புழுக்கொடியலைத்தான் விரும்புகிறார்கள்.

2.ஒடியல்

இதுவரை அவித்த கிழங்குகளின் பயன்கள் பற்றி ஆராய்ந்தோம். இனி அவிக்காத (ஒடியல்) கிழங்குகள் பற்றிச் சிறிது கவனிப்போம். பச்சைக் கிழங்குகளின் மேற்தோல்களை நீக்கிவிட்டு அவற்றை இரு கூறுகளாகப் பிரித்து அதன் இருமுனைகளையும் சிறிதளவு வெட்டிச் சுத்தம் செய்து பாய்களில் பரவிவிட்டு நன்றாகக் காயவிடுவர். அப்படி நன்றாகக் காயந்தவை ஒடியல்கள் எனப்படும். நன்றாகக் காய்ந்தபின் பைகளில் போட்டுக் கட்டி வைப்பார்கள். காரைநகர் மக்கள் அவ்வொடியல்களை எடுத்து உரலில் போட்டு இடித்து மாவாக்கி அதிலிருந்து பிட்டு, கூழ் என்பன தயாரிப்பார்கள. பிட்டு அவிக்க நினைப்பவரகள்; முதலில் ஒடியல்மாவை அளவாக எடுத்து தண்ணீர் விட்டுப் பிசைந்து ஊற வைப்பார்கள். சிறிது நேரம் செல்ல தெளிந்து வரும் நீரை வெளியேற்றுவார். இப்படியாக மூன்று அல்லது நான்குமுறை மாவைப் பிசைந்து நீரை வெளியேற்றிய பின் பனங்களித் துண்டில் போட்டு பிழிந்து எடுத்த மாவைச் சுளகில் போட்டு சாதாரணமாகப் பிட்டுக் குழைப்பதைப் போல் குழைத்தெடுத்து அதற்கு எள்ளு, தேங்காய்ப்பூ என்பன கலந்து அவித்தெடுப்பர். வேறு சிலர் கீரை, பயற்றங்காய் போன்றனவற்றைச் சேர்த்தும் அவிப்பர்.

ஒடியற்பிட்டை அன்றே உலர்த்தி வைப்பது நன்று. இல்லையேல் வைரம் ஏறி உலர்த்துவது கடினமாக இருக்கும். காரைநகரில் நீண்ட காலத்திற்கு முன்னர் இது பகலுணவாகவே கொள்ளப்பட்டது. பழைய பிட்டுக்கு மோர், மரவள்ளிக் கிழங்குக்கறி சேர்த்து உண்டால் ருசி மிகுந்ததாக இருக்கும். நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் இவை நாம் அடிக்கடி உண்ணும் உணவாக இருந்தது. சிலர் பிட்டு சூடாக இருக்கும் பொழுது நல்லெண்ணெயும் சேர்த்துச் சாப்பிட்டனர். உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒடியற்பிட்டை விரும்பி உண்டனர். இது அவர்களுக்குச் சக்தியையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

 

 

 

 

 

 

அடுத்து ஒடியற்கூழ் தயாரிக்கும் முறை பற்றிச் சிறிது ஆராய்வோம். ஒடியல்மா கூழ் தயாரிப்பதற்கும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இவை இரண்டு வகைப்படும். ஒன்று சைவக்கூழ். மற்றையது அசைவக்கூழ். கூழ் தயாரிக்கும் முறை பற்றி அக்காலப் பெண்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். இதனை அவர்கள் தத்தம் கணவன்மாரைக் கவர்ந்திழுப்பதற்கான வசியப் பொருளாகப் பாவித்தனர் என அறியக் கிடக்கின்றது. ஆனால் இக்காலப் பெண்கள் பலருக்குக் கூழ் தயாரிக்கும் முறை என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் காரைநகரில் தாய்மார் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு இவற்றை கற்பிப்பது மட்டுமன்றி நேரடியாக களத்தில் நின்று பரீட்சித்தும் வருகின்றனர். புலம்பெயர்ந்து சென்றாலும் இதுதொடர்வதனைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியைத் தருகின்றது.

எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் கூழ் தயாரிக்கும் முறை பற்றி அறிந்து கொள்வோம்.

அசைவக் கூழ் தயாரிப்பதற்குத்  தேவையான பொருட்களும் செய்முறையும்

ஒடியல் மா                                                                                              500 கிறாம்

மீன் பெரியது

இறால்                                                                                                       1 கிலோ

நண்டு                                                                                                     4 அல்லது 5

மரவள்ளிக்கிழங்கு                                                                               பெரியது

பயற்றங்காய்                                                                                        300 கிறாம்

பலாக் கொட்டை                                                                                  200 கிறாம்

காய்ந்த (வற்றல்) மிளகாய்                                                            15 அல்லது 20

புளி                                                                                                            75 கிறாம்

உப்பு தேவையான அளவு

 

செய்முறை:

ஒடியல் மாவை அரித்து தண்ணீரில் கரைத்து ஊறவிடவும் அதில் தெளிந்த நீரை வெளியேற்றவும், இப்படியாக மூன்று அல்லது நான்கு முறை நீரை வெளியேற்றவும். மாவில் உள்ள காறல் தன்மையை நீக்குவதற்காகவே இப்படிச் செய்யப்படுகின்றது. மீன் நண்டு, இறால், என்பவற்றைச் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோலை நீக்கிச் சிறு சிறு சீவல்களாக வெட்டி எடுக்கவும். பயற்றங்காய்களைக் கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பலாக்கொட்டைகளை தோலை நீக்கி நான்காகப் பிளந்து நீரில் போட்டு கழுவி வைக்கவும். மீனை ஒரு பாத்திரத்தில் இட்டு வேகவைத்து முள்ளை அகற்றிவிடவும். புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும். மிளகாயை அம்மியில் அரைத்து எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரை லீட்டர் தண்ணீர் விட்டு நண்டு, இறால், பயற்றங்காய், பலாக் கொட்டை ஆகியவற்றைப் போட்டு அது அவித்து அரைப்பதம் வெந்துவந்ததும் சீவல்களாக வெட்டப்பட்ட மரவள்ளிக்கிழங்கைப் அதில் போட்டு அவியவிடவும். கிழங்கு அவிந்ததும் கரைத்த புளி அரைத்த மிளகாய் என்பவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அவித்த மீனையும் அதனைத் தொடர்ந்து ஓடியல் மாவையும், அளவான உப்பையும் போட்டுக் கரைத்து விடவும். மாவெந்து தடிப்பான நிலைக்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். இதுவே கூழ் தயாரிப்பு முறையாகும்.

சைவக் கூழ் தயாரிக்க விரும்புபவர்கள் மேற்கூறிய தயாரிப்பு முறையில் மாமிசங்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாகப் பாசிப்பயறு, குத்துப்பயறு, கொடிப்பயறு ஆகியவற்றைச் சேர்த்துக் கூழ் தயாரிக்கலாம். கூழ் இறக்குவதற்குமுன் தேங்காய்ச் சொட்டுக்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டால் கூழ் சுவையாக இருக்கும். கூழ் குடிப்பதற்கு வடலி ஓலையில் பிளா செய்து கூழை அதில் ஊற்றிக் குடிப்பர். அன்று பிளாவில் குடித்த சுவையையும், ரசனையையும் இன்று நினைவில் கொண்டு வரும்போது, ஊரினைத் தங்கள் மனக்கண்முன் கொண்டு வந்து ஊர் நினைவில் புலம்பெயர் மக்கள் புலம்புவதையும் காணக்கூடியதாக உள்ளது. அந்நினைவை மறவாது புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் ஊர் ஒன்று கூடல்களில் கூழ் தயாரித்துக் குடித்து மகிழ்கின்றனர்.

(ஊ) பூரான்

பனம் பழங்களில் உள்ள ஒவ்வொரு விதைகளிலும் இருந்து பனங்களியை உறந்து எடுத்தபின் அதனைப் பனங்கொட்டை என்கிறார்கள். அப்பனம் விதைகள் புறச்சூழல் காரணிகளினால் முளை விடுவதற்கு தயாராகும் பொழுது அதன் முதற் கட்டத்தில் அவ்விதையினுள் இருக்கும் சத்துப் பொருள் திடமான ஒரு பதார்த்தமாக மாறுகின்றது. இதனையே பூரான் என்கிறார்கள். இதனை எம் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை கத்தி கொண்டு இரண்டாகப் பிளந்து அதற்குள் இருக்கும் பூரானை விரும்பி உண்கின்றனர்.

(எ) பனங்குருத்து

பனையின் வட்டில் உள்ளிருந்து வெளிப்படும் குருத்து விரியாத நிலையில் இருக்கும் பொழுது அதன் அடிப்பாகம் உண்பதற்கு சுவை மிகுந்ததாக இருக்கும். சற்று முற்றி விரிவடையக்கூடிய நிலையில் காணப்பட்டால் அவற்றில் இருந்து பெட்டி, கடகம், தண்ணீர் அள்ளும் பட்டை, நீற்றுப்பெட்டி, பாய், களப்பாய், தடுக்கு, நீர் இறைக்கும் பெரியபட்டை போன்ற மற்றும் இன்னோரன்ன கைப்பணிப் பொருட்களும் செய்யப்படுகின்றன. 1960ம் ஆண்டுக்கு முன்னர் பாடசாலைகளில் பன்னவேலை ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இதற்கெனப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுப் பன்ன வேலை கற்பித்தார்கள். வேறு சில இடங்களில் குடிசைக் கைத்தொழிலாக நடத்தப்பட்டு வந்தது. அக்காலத்தில் பிளாஸ்ரிக் பைகளோ வேறெந்தக் கொல்கலன்களோ இருக்கவில்லை. மாறாகப்பெட்டி கடகம், உமல்  போன்றனவே பாவனையில் இருந்தன. குழந்தைகளைப் படுக்க வைப்பதற்கான தடுக்கு, படுப்பதற்கான பாய்கள், சூட்டு மிதிக்கு பயன்படுத்தப்படும் களப்பாய் போன்றனவைகளும் இக்குருத்தோலைகளில் இருந்தே செய்யப்படுகின்றன. அதன் ஈர்க்குகளில் இருந்து சுளகு பின்னப்படுகிறது. நாக்குகளைச் சுத்தம் செய்வதற்கும் இந்த ஈர்க்கு பயன்பத்தப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

மேற்கூறிய பொருட்கள் காரைநகரில் சில இடங்களில் செய்யப்பட்டாலும் அவை தன்னிறைவைக் காணவில்லை. அனலைதீவு, எழுவதீவு என்பன நார்க்கடகத்திற்குப் பிரசித்திபெற்றிருந்தன. அவை ஊர்காவற்றுறை யாழ்ப்பாணச்சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டன. காரைநகர் கருங்காலியில் நன்னி ஆறுமுகம் என்பவர் நடமாட முடியாத நிலையில் இருந்தும் கூட பாய்கள், கடகங்கள், களப்பாய் போன்றன இழைப்பதில் வல்லவராகக் காணப்பட்டார். அவரின் மனைவி அப்பொருட்களைச் சந்தைப்படுத்தினார். மேலும் காரைநகர் இலங்கைப் போக்குவரத்துச்சாலை முகாமையாளராகக் கடமையாற்றி இளைபாறியவரானவரும், காரைநகர் இலந்தைச்சாலைப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவருமான செல்லையா கந்தசாமி அவர்களை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பனம் பொருட்களான பாய், கடகம், பெட்டி, ஓலைப்பைகள், இடியபத்தட்டு, நீற்றுப்பெட்டி, சுளகு, தேங்காய் துருவுவதற்கும், பிட்டு குழைப்பதற்குமான தட்டைப்பெட்டி என்பனவற்றை உற்பத்தி செய்வதாகவும், சில குறிச்சிகளில் பயிற்சி பெற்றவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் விலைக்கு வாங்கி எல்லாவற்றையும் கனடா, பிரிதானியா, மற்றும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும்; நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் கூறினார். இவர்களைப் போல இன்னும் பலர் இப்பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவார்களாயின் எமது காரைநகர்ப் பிரதேசம் செழிப்புறும் என்பதில் ஐயமில்லை. இவர்களை விட மேலும் பாலர் தத்தமது அன்றாடத்தேவை கருதிப் பாய், கடகம், பெட்டி, களப்பாய் போன்றனவற்றை இழைத்துப் பயன்படுத்துகின்றனர்.

குருத்தோலைகள் கொண்டு பழைய காலங்களில் (பேப்பர் கிடைக்காத காரணத்தினால்) ஒலைச் சுவடிகளை எழுதி வைத்தனர் என நூல்கள் வாயிலாகப் படித்திருக்கிறோம்.

அவற்றில் சிலவற்றைக் கறையான்கள் அரித்தாலும் பலவற்றை நூல்களாகப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் ஒருவிடயம் அன்றிலிருந்து இன்று வரை எம்முடன் தொடர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதுதான் அரிவரி படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கான அ,ஆ என்கின்ற உயிரெழுத்துக்களையும், க்,ங் என்கின்ற மெய் எழுத்துக்களையும் தாங்கி வருகின்ற ஏடாகும்.

 

(ஏ) ஓலை

 

குருத்து விரிந்து முற்றினால் ஓலை எனப்படுகின்றது. அவ்வோலைகளை வீடு வேய்வதற்கும்  வேலிகள் அடைப்பதற்கும் பாவிக்கப்படுகின்றன. காரைநகரில் இரண்டு வருடத்திற்கொருமுறை  ஓலை வெட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் காரைநகரில் கல்வீடுகள் மிக அரிதாகவே காணப்பட்டன. அந்நாட்களில் காரைநகர் மக்களிடையே பணப்புழக்கம் அரிதாகக் காணப்பட்டமையே இதற்குக் காரணமாக அமைந்தது. ஒருசில வீடுகள் சுண்ணாம்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு அதன் கூரைகள் ஓலைகளினால் வேயப்பெற்றிருந்தன. பல வீடுகள் மண்சுவர்கள் எழுப்பப்பட்டு கூரைகள், ஓலைகளினால் வேயப்பெற்றிருந்தன. அதனால் புதிய ஓலைகள் கொண்டு இரண்டு வருடத்திற்கொருமுறை வீடுகளை வேய்ந்தனர். வீடுகள் வேயமுன் பழைய ஓலைகளைக் கழற்றி எடுப்பர். வேலிகளையும் இரண்டு வருடத்திற்கொருமுறை அடைப்பதையும் வழக்கமகக் கொண்டிருந்தனர். வேலியில் இருக்கும் பழைய ஓலைகளையும் கழற்றி எடுப்பர். வேலி ஓலைகளுடன் இருக்கும் பனை மட்டைகளை வேட்டி எடுத்து விறகாகப் பாவித்தனர்.

பனையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதும் வேலி அடைக்க ஒதுக்கப்பட்டதுமான ஓலைகளை அன்றே மட்டையுடன் கவிழ்த்து மிதித்து விடுவர். வீடு வேய ஒதுக்கப்பட்ட ஓலைகளை நிமிர்த்தி மிதித்து விடுவர்.  மூன்று நாட்கள் சென்றதும் வேலி அடைக்க ஒதுக்கப்பட்ட ஓலைகள் கொண்டு வேலிகளை அடைத்து முடிப்பர். வீடுவேயும் ஓலைகளின் மட்டைகளைத் தனியாக எடுத்துவிட்டு வட்டமாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிக் கரம் போடுவார்கள். அதன் மேல் பச்சை மட்டைகளைக் கட்டாகக் கட்டிப் போடுவதுடன் வேறு பாரமான பொருட்களையும் போட்டு ஓலையைப் படியவிடுவர். ஒரு கிழமைக்குப் பின் அவ்வோலைகளினால் வீடுகளை வேய்வர். இதற்கெனச் சிறப்புப் பயிற்சி பெற்றவரினாலேயே வீடுகள் வேயப்படும். வீடுவேய்வதற்கும் வேலிகள் அடைப்பதற்கும் பனைமட்டையில் இருந்து உரித்தெடுக்கப்படும் நார்களே பாவிக்கப்படுகின்றன. இவை வைரம் மிக்கவையாகும். ஓலை வெட்டும் நாளிலும், வீடுவேயும் பொழுதும், வேலி அடைக்கின்ற நேரங்களிலும் மிக நெருங்கிய உறவினர்களே பெரும்பாலும் உதவிகள் செய்தனர். அக்காலத்தில் குடும்பங்களின் அந்நியோன்யம் பிரதிபலித்தது.

வீடுகளில் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஓலைகளையும், வேலிகளில் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஓலைகளையும் தத்தம் வயல்களுக்குப் பசளையாக்கினர். இந்த இயற்கைப் பசளை மூலம் நல்ல விளைச்சளையும் பெற்றனர்.

வடலியோலைகளை வெட்டி ஆடு, மாடுகளுக்கு உணவாக்கினர். மீனவர்களும் ஆடு வெட்டுபவர்களும் வடலியோலையிலேயே மீனகளையும், இறைச்சிகளையும் பொதியாகக் கட்டிக்கொடுத்தனர். இதனை ஒலைகுடலை என அழைப்பர். இதனாற் போலும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் தான் எழுதிய சிறுவர் செந்தமிழ் என்னும் நூலில் “ஆடு கதறியது” என்னும் தலைப்பில் எழுதப்பட்ட பாடற்பகுதியில் (36ம் பக்கம்) ஓலைக்குடலை பற்றி பின்வருமாறு பாடுகின்றார். (ஒருபகுதி மட்டும்)

“உன்றன் றசைஅரிந்தே ஓலைக்குடலை கட்டிச்

சென்று சென்று விற்றனரோ தின்று பசியாறினரோ” எனப் பாடியுள்ளார்.

                                 

(ஐ) பனை மட்டை

முன்னைய தலைமுறைகளில் எம்மூரில் வாழ்ந்த மக்கள் பனைமட்டை கொண்டு வீட்டுக் குசினிகளுக்கும், வீட்டு வேலிகளுக்கும் கோழிக் கூடுகளுக்கும் வரிச்சுக் கட்டினர். அதுமட்டுமன்றி கத்தரிப்படப்புகளுக்கும் பனை மட்டை கொண்டு வரிச்சுக் கட்டினர். படலைகளுக்குக் கூட பனை மட்டைகளைப் பாவித்தனர். பாவனைக்குதவாத பனை மட்டைகளை விறகாகவும் பாவித்தனர்.

                                                                        (ஒ) கங்குமட்டை

பனையில் ஓலையுடன் இணைந்து இருக்கும் போதே நன்கு முற்றி அதன் பச்சைத்தன்மை நீங்கி கலகலக்க ஆரம்பிக்கும் போது காவோலை எனப்படுகின்றது, பலத்த காற்றடிக்குபொழுது இது பனையில் இருந்து தானாகக் கழன்று விழுகின்றது. அப்பொழுது இதற்குப் பதிலாக இன்னோரு குருத்தோலை விரிந்து கொண்டிருக்கும். இதனால் போலும் எம்மவர்கள்.

“காவோலை விழக்குருத்தோலை சிரிக்கின்றது” எனும் வசனத்தைப் பாவிக்கத் தொடங்கினார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. இளைஞர்கள் முதியோரை எள்ளி நகையாடும் பொழுது முதியோர்கள் மேற்கூறிய வசனத்தைப் பாவிப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. காவோலைகளை ஓலை வேறு மட்டை வேறாக வெட்டியெடுத்து விறகாகப் பாவிக்கின்றனர்.

இப்பொழுது பாவனையில் இருக்கும் செருப்புக்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. இதற்குப் பதிலாக அக்காலக் காரைநகர் மக்கள் காவோலையுடன் இணைந்த கங்குகளை அளவாக வெட்டி நார்கொண்டு செருப்புச்செய்து பாவித்தனர். இதனால் இக்கீரி, நாகதாளி போன்ற முட்கள் அடங்கிய தாவரங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது.

பனையின் சிறப்புக்கூறும் குறள்கள், பாடல்கள் சில வருமாறு

திருவள்ளுவர் தான் இயற்றிய திருக்குறளின் அறத்துப்பாலில் 104வது குறளிலும், பொருட்பாலில் 433வது குறளிலும், இன்பத்துப்பாலில் 1282வது குறளிலும் பனைபற்றிச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.  பூவை அமுதன் என்பவரால் எளிய தெளிவு விளக்கத்துடன் தரப்பட்ட நீதிநூற்களஞ்சியம் என்னும் நூலில் அடங்கிய 100 செய்யுள்களில் 91வது செய்யுளில்

 

“உத்தமர் ஈயும் இடத்து ஓங்குபனை போல்வரே

மத்திமர் தாம் தெங்குதனை – முத்து அலரும்

ஆம். கமுகு போல்வர் அதமர் – அவர்களே

தேம் கதலியும் போல்வர் தேர்ந்து” எனக்கூறிப் பனை மரத்தின் அதி உச்சப்பெருமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இதுவரை அமுதசுரபியாகிய பனையின் பிரயோசனங்கள் பற்றி ஓரளவு கவனித்தீர்கள். இவற்றை எம் முன்னைய சந்ததியினர் முழுமையாக அனுபவித்து உடல் நலத்துடனும், சந்தோஷசத்துடனும் வாழ்ந்தார்கள். பனங்கிழங்கு, புழுக்கொடியல் என்பன நார்ச்சத்து நிறைந்தவையாகும். பனாட்டு, ஒடியற்பிட்டு என்பவற்றில் பல்வகைச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கூழ் மலச்சிக்கல், வாய்வு என்பனவற்றை நீக்குவதுடன் உடலுக்கு சக்தியையும் அளிக்க வல்லது. அத்துடன் உடலில் உள்ள கழிவுப் பொருட்களையும் நீக்க வல்லது. கள்ளு, பதநீர் போன்றவை கணைசூட்டையும் உஷணத்தினால் ஏற்படும் நோய்களையும் தணிக்கவல்லது. மேற்கூறிய பனம் பண்டங்களை உண்ட நம்முன்னோர் நீண்டகாலம் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள் என்பதைச் சரித்திரம் பறைசாற்றி வருகிறதென்பதை எல்லோரும் அறிவர்.

ஆனால் இன்றைய தமிழர் சமூகம் நாகரீகத்தின் வளர்ச்சியோ அன்றி இரசாயனப் பொருட்கள் கலந்த உணவுப் பண்டங்களின் கவர்ச்சி காரணமாகவோ பனம் பண்டங்களை ஏறெடுத்தும் பார்ப்பதாகத் தெரியவில்லை. எனவே இவ்விடயத்தை அலசி ஆராய்ந்து பார்த்து உண்மைத் தன்மையை உணருங்கள். பனம் பண்டங்களுக்கு முக்கியத்தவம் கொடுத்து அவற்றை சேமித்து வீடுகளில் களஞ்சியப்படுத்தி வைப்போமேயானல் எக்காலத்தும், எந்த இடர்வரினும் அவற்றைச்சமாளித்து கொள்ளவும், பஞ்சம் என்ற நிலையை இல்லாதொழிக்கவும், அதனால் எம்மைத் தற்காத்துக் கொள்ளவும் முடியும் அது மட்டுமல்ல அழிவுக்குட்பட்ட பனைகளை ஈடுசெய்யுமுகமாக உங்களாலியன்ற பனம் விதைகளை நாட்டி பனை உற்பத்தியைப் பெருக்குங்கள்.

காரைநகரை வளம் படுத்துவோம். நாமும் நலம்பெறுவோம். அதனால் நாடும் வாழும் தேசமும் வாழும் என்பதை மறவாதீர்கள்.

தமிழர் நம் வாழ்வுடனும் பண்பாட்டுடனும் பனை ஒன்றியுள்ளது என்பதே உண்மை.

 

தொகுத்தவர்

தம்பையா நடராசா

கருங்காலி

காரைநகர்.

 

கட்டுரைக்கு ஆதாரமாக அமைந்தவை

1.பனைவளம் – எழுதியவர் க.சி.குலரத்தினம்

மில்க்வைற் பொன்விழா வெளியீடு.

 

2.பனைச்செல்வம் – சு.மோகனதாஸ்

    வி.ஜீ. தங்கவேல் வெளியீடு:-

    வடக்கு கிழக்கு தால மூலவள அபிவிருத்தி  நிறுவனம்

 

3.நீதிநூற் களஞ்சியம் – பூவை அமுதன் தெளிவுரை

 

4.காணாமல் போகும் கற்பகதருக்கள் – உமை பற்குணரஞ்சன்

தாய்வீடு பத்திரிகை (கட்டுரை)

 

5.விக்கிபீடியா தகவல்

 

6.நேரில் கண்டதும் சுவைத்ததும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

வாரிவளவு நல்லியக்கச் சபை பொன் விழா

வாரிவளவு நல்லியக்கச் சபை

பொன் விழா

எஸ்.கே.சதாசிவம்.

1970ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் திகதி வாரிவளவு நல்லியக்கச்சபை உதயமாகியது.1990 வரை சித்திரை வருடப்பிறப்பு காலங்களில் வாரிவளவு நல்லியக்கச்சபை நிகழ்வுகள் கொடிகட்டி பறந்த காலம்.வலந்தலை துறைமுகம் பகுதியில் இருந்து மக்கள் பேரூந்துக்களில் வாரிவளவுக்கு வந்து சேர்வர்.களபுமி மக்கள் கேசடை வயல் வழி பாதை வழி வாரிவளவுக்கு வந்து சேர்வர்.இக் கால பகுதியை மக்கள் வாரிவளவு கொண்டாட்டத்திற்காக ஒதுக்கிக் கொள்வர்.முழுக் கிராமமும் வாரிவளவில் சங்கமிக்கும்.

மாதம் தோறும் பண்ணிசை போட்டிகள்,திருக்குறட்போட்டிகள், ஆத்திசுடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, போன்ற நீதி நுற் பாடற் போட்டிகள் நடைபெறும்.5ம் ஆண்டு புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சைகள், க.பொ.த.சாதாரண தர கணித / விஞ்ஞான முன்னோடி பரீட்சைகள் என்பன நடைபெறும்.

சித்திரை வருடப்பிறப்பு சிறப்பு நிகழ்வாக உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம்,துடுப்பாட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், நீச்சல் போட்டி என்பன நடைபெறும்.வாரிவளவு பிள்ளையார் கோவில் தெற்கு வீதியில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும்.வாரிவளவு பிள்ளையார் கோவில் வீதியில் தென் கிழக்கில் அமைந்துள்ள ஆலமரத்தின் கீழ் உள்ள அரங்கில் பேச்சு, பாட்டு, கலைநிகழ்வுகள் நடைபெறும்.போட்டிகள் யாவும் விறுவிறுப்பும் கலகலப்பும் நிறைந்தவை.

வருடம் முழுவதும் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பும் பாராட்டும் கலை நிகழ்வுகளுடன் புதுவருடத்திற்கு அண்மிய தினங்களில் நடைபெறும். விளையாட்டு போட்டிநிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள், பரீடசைகளில் வெற்றி பெற்றவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் சிறப்பு பேறு பெற்றவர்கள், பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள், பல்கலைக்கழக பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கப்படும்.சமூகத்திற்கு தொண்டாற்றிய கல்விமான்கள், பெரியோர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

வாரிவளவு நல்லியக்கச்சபை தன் பணிக்காலத்தில் காரைநகரில் பல்துறைசார் வல்லுனர்கள் உருவாக களம் அமைத்துக் கொடுத்தது.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவரையும் வருடம் முழுவதும் ஏதோ ஒரு நிகழ்வில் ஈடுபடுத்தி அனைவரும் சுறுசுறுப்புடன் இயங்க சுறுசுறுப்பாக இயங்கியவர் பட்டுமாமா.காரைநகரின் பொதுவாழ்வில் தனிமனித சாதனையாளர்கள் பலர் உள்ளனர்.இந்த தனிமனித சாதனையாளர்களுக்கு அமைதியான மக்கள் ஆதரவு இருந்தமையால் அவர்கள் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதில் காத்திரமான பங்களிப்பு வழங்கினர்.ஒரு குறிப்பிட்ட கால பகுதியில் மாணவர் சமூகத்தை, இளைஞர் சமூகத்தை உருவாக்குவதில் பட்டுமாமா சத்தம் இன்றி செயல்பட்டிருக்கின்றார்.

முகநுலில் பிரபல்யமான கேரளத்தின் பிரபல பாடகர் ரேஸ்மி சதீஸ் அவர்களின் மலையாள பாடல் தமிழில்

அன்றங்கே ஒருநாடுருந்ததே
அந் நாட்டில் ஆறுருந்ததே

என்ற பாடல் வரிகள் எமக்கு ஏற்புடையதாகும் வரை காத்திருத்தல் நன்றன்று.

 

varivalavu Pattu

 

 

 

150 ஆண்டுகளை அடைந்துள்ள பொன்னாலை தாம்போதி காரைநகர் மக்களின் வளமான வாழ்வுக்கு வழி தந்த வழி – (எஸ்.கே.சதாசிவம்)

150 ஆண்டுகளை அடைந்துள்ள பொன்னாலை தாம்போதி காரைநகர் மக்களின் வளமான வாழ்வுக்கு வழி தந்த வழி

எஸ்.கே.சதாசிவம்

காரைநகர் பொன்னாலை தாம்போதி அமைக்கப்பட்டதன் பயனாக காரைநகர் மக்கள் பொருளாதார, சமூக வலுவில் வலுவுள்ளவர்களாக மிளிர்வதற்கு வழி பிறந்தது. காரைநகர் துறைமுகத்தின் செயற்பாடுகள் தாம்போதி அமைக்கப்பட்டதன் பலனாக அதிகரித்துக் காணப்பட்டது. காரைநகர் மக்கள் வன்னிப் பிரதேசத்திற்கும்இ தென் இலங்கைக்கும், பூகோளத்தின் பல் தேசங்களையும் நோக்கி பசுமை தேடி நகரலாயினர். காரைநகரில் செயற்பட்ட அமெரிக்கன் மிசன் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் உயர் கல்விக்காக யாழ்ப்பாணக் கல்லூரியிலும், யாழ் குடாநாட்டின் ஏனைய பிரபல பாடசாலைகளிலும் இணைந்து கொண்டனர். ஆங்கிலக் கல்வியை கற்றோர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு அரசு அலுவலர்களாக பணியாற்ற புறப்பட்டுச் சென்றனர். வன்னிப் பிரதேசத்திற்கு விவசாயஇவர்த்தக முயற்சிகளுக்காகவும், தென்இலங்கைக்கு வர்த்தக முயற்சிகளுக்காகவும்,அரசபணிக்காகவும் பயணமாகினர்.


“Sir.W.துவைனம் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக பணியாற்றிய (1867-1884) காலப்பகுதியில் தீவையும் குடாநாட்டையும் இணைக்கும் 4 K.M நீளமான தாம்போதி கட்டப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியின் சயம்பு மண்டபத்தில் செதுக்கப்பட்டு பதிக்கப்பட்டு இருந்த நினைவுக் கல்லில்(Plaque) தாம்போதியின் ஆண்டு 1869 என குறிக்கப்பட்டுள்ளது.”

A 4 K M long causeway linking the island to the mainland was built during the period when Sir.W.Twynham was the Government Agent of Jaffna (1867-1884)An engraved stone plaque in the Sayambu hall ( Karainagar Hindu College ) gives the date of the bridge as 1869.
The Changing Character of The Identity issue for Tamils Page 12 Mr.V.Siva Subramanaimam

“காரைநகர் ஏழு கிலோ மீற்றர் நீளமும் நான்கு கிலோ மீற்றர் அகலமும் உடைய சிறிய தீவாக இருந்ததால் சனநெருக்கமுடையதுமானதால் 1869ம் ஆண்டு அப்போது இருந்த துவைந்துரையால் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் 4 மைல் தூரமுள்ள (Cause way)ரோட்டுப்பாலமும் அமைக்கப்பட்டு பொன்னாலைக் கடலூடாக யாழ்ப்பாணத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு சான்றாக அன்று ஸ்தாபிக்கப்பட்ட சயம்பு பாடசாலையில் உள்ள சயம்பு மண்டபத்தில் Sir W.Twynham என நினைவுப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.”

Your Country and your college பக்கம் 03 திரு ஆசைப்பிள்ளை அரசரத்தினம்

1977ம் ஆண்டு காலப்பகுதியில் காரைநகர் இந்துக்கல்லூரியில் நான் பணியாற்றிய போது மேலே குறிப்பிடப்பட்ட கல்லினைக் கண்டுள்ளேன். இக்காலப்பகுதியில் இக்கட்டிட தொகுதியில் நடைபெற்ற திருத்த வேலைகள் காரணமாக இக் கல் அகற்றப்பட்டு பேணப்பட்ட பொழுதிலும்; தொடர்ந்து வந்த ஆண்டுகளில் புதிய கட்டிட தொகுதிகள் அமைக்கப்பட்டமையால் தற்போது இக்கல்லினை காணமுடியவில்லை.

“இலங்கைத்தீவிற்கு கொழும்பு மைய புகையிரதப்பாதை தேயிலைத் தோட்டங்களுடன் வந்த பொழுது, இப்பாதை யாழ்ப்பாணம் வருவதை துவைனம் விரும்பவில்லை. யாழ்ப்பாணத் துறைமுகங்களை மையமாகக்கொண்ட உள்ளுர் வணிகம் கொழும்புத்துறைமுக வளர்ச்சி புகையிரதப்பாதையால் பாதிக்கப்படும் என்று அவர் கருதினார். மாற்றாக, உள்ளுர் துறைமுகங்கள் குறிப்பாக ஊராத்துறை பலப்பட்டு, இந்தியாவுடனான வணிகம் யாழ்ப்பாணத்திற்கூடாக தென்னிலங்கை செல்லவேண்டும் என்று அவர் சிந்தித்தார். அதன் விளைவே 1869 இல் தொடங்கி 1879 இல் முடிக்கப்பட்ட புன்னாலைப்பாலம்” “புன்னாலை என்பதே பழைய பெயர் பொன்னாலை அல்ல” 2500 ஆண்டுகால வரலாற்றில் காரைநகர் சயம்பு– 125ஆவது ஆண்டு மலர் 2013 பக்கம்.78 பேராசிரியர் .பொ.ரகுபதி.

“1878 இல் யாழ்ப்பாணத்தில் இஞ்சினியர் வேலையில் அமர்ந்திருந்த முதலியார் F.M ஆம்ஸ்றோங் Mudaliyar F.M.Armstrong அவர்கள் பொன்னாலைக் கடலுக்கூடாகக் கற்றெருவும் பாலங்களும் தொப்பிக் கட்டும் அமைத்துக் காரைதீவினைக் குடா நாட்டுடன் இணைத்தனர். இவர் செய்து முடித்த பொதுக் கட்டு வேலைகளில் இதனையே பெரும் பணியாக மக்கள் கருதினர்.” காரைநகர் மான்மியம் பக்கம் – 56 -வித்துவான் F.X.C நடராஜா

“1878 ஆம் ஆண்டு காரைநகர் – பொன்னாலை கற்பாதை அமைக்கப்பட்டதனால் அத்தீவில் வாழ்ந்து வந்த மக்கள் குடாநாட்டுடன் இலகுவாகத் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.” தீவகம் தொன்மையும் மேன்மையும் பக்கம் – 244 பேராசிரியர் கா.குகபாலன்

“குடாநாட்டில் அமைந்திருந்த பொன்னாலைக்கும் தீவுக்கும் இடையிலான தாம்போதி 1869ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டமை பழைய காலத்தில் காரைதீவு என அழைக்கப்பட்ட இடம் காரைநகர் என அழைக்கப்படுவதற்கு பெரும்பாலும் காரணமாக அமைந்திருக்கலாம்.அன்றைய ஆங்கிலேய அரசாங்க அதிபரான Sir.W.துவைனம் அவர்களின் பெரும் முயற்சியால் இத்தாம்போதி அமைக்கப்பட்டது.” செப்டம்பர் 2007 இல் வெளியிடப்பட்ட தமிழ் இணையம் பிரசுரம்.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் மாகாண ரீதியில் நடைபெற்று வந்த நிருவாக நடவடிக்கைகள் ஆண்டு தோறும் அறிக்கைகளாக தொகுக்கப்பட்டு (Administration Report)யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக ஆவணக் காப்பகத்தில் (Archives) பேணப்பட்டு வருகின்றது. 1869ம் ஆண்டு தொடக்கம் 1884ஆம் ஆண்டு வரையிலான நிருவாக அறிக்கைகளில் பொன்னாலை தாம்போதி தொடர்பாக பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் Sir.W.துவைனம் அவர்கள் தனது 1871ஆம் ஆண்டு அறிக்கையில் பொன்னாலை தாம்போதி தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“பொன்னாலை தாம்போதி கட்டப்படவேண்டியதன் அவசியத்தை முதன் முதலில் அரசுக்கு திரு.டைக் (Mr.Dyke)எடுத்துரைத்ததாகவும் தாம்போதியின் ஆரம்பகர்த்தா திரு.டைக்(Mr.Dyke) எனவும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு.ரசல் (Mr.Russel) தனது 1867ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டதாக குறிப்பிடுகின்றார்.

1867ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேன்மை தங்கிய தேசாதிபதி இங்கு வருகை தந்த போது பொன்னாலை தாம்போதி அமைப்பதால் ஏற்படும் உள்ளுர் நலன்கள் பற்றி அரசாங்க அதிபரால் எடுத்துரைக்கப்பட்டு மேன்மை தங்கிய தேசாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொது வேலைப் பகுதி பணிப்பாளர் வருகை தந்து தாம்போதி அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு மாகாண உதவியாளரிடம் மதிப்பீடு(Estimate) தயாரிக்குமாறு பணித்தார்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1868ம் ஆண்டு அறிக்கையில் அரசாங்க அதிபர் “திரு.H.S.O.ரசல் 1867ம் ஆண்டு மாகாணத்திற்கு அவசியமான வேலைத் திட்டங்களை முன் வைத்ததாகவும் அவற்றை நடைமுறை படுத்துவதில் கால தாமதங்கள் அல்லது காலத்தை பின் தள்ளுதல் நடைபெறுவதனால் உள்ளுர் மக்கள் துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அவற்றில் பொன்னாலை தாம்போதி வேலை திட்டமும் ஒன்றாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1878ஆம் ஆண்டு அறிக்கையில் “மேன்மை தங்கிய தேசாதிபதி Hon.A.Birch,Colonial Secretary Dr.Kynsey and Captain Hayne A.D.C ஆகியோருடன் ஐனவரி 11ஆம் திகதி வடமாகாணத்துக்கு வருகை தந்த போது ஐனவரி 16ஆம் திகதி பொன்னாலை தாம்போதியையும் பார்வையிட்டு சென்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

1883ஆம் ஆண்டு அறிக்கையில் திரு. துவைனம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “பொன்னாலை தாம்போதியில் காணப்பட்ட கற்கள், தார் (Metal) என்பன கடலினால் அரிக்கப்பட்டு ஒரு பக்கமாக ஒதுக்கப்பட்டமையால் வீதி முழுக்க உடைந்து காணப்படுகின்றது.எனது முன்னைய குறிப்புக்களில் இத்தாம்போதியில் நீரோட்டத்திற்க்;கு ஏற்ற வசதிகள் செய்யப்படல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளேன்.ஆரம்பத்தில் தாம்போதி முழுவதும் உறுதியான பொருட்களால்(Solid thorought) அமைக்கப்பட்டது, எனவும், 1880ஆம் ஆண்டு மேன்மை தங்கிய தேசாதிபதிக்கு கடற்தொழிலில் ஈடுபட்டுள்ள காரைநகர் மீனவர்களால் தங்களின் கடற்றொழில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுஇ என சுட்டிக் காட்டப்பட்டதைத் அடுத்து ஒரு சிறிய பாலம் அமைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் பெருமளவு உண்மை இருப்பதாக தான் நம்பவேண்டி இருப்பதால் 20அடி அகலமுள்ள ஆகக் குறைந்தது மூன்று Buckeled Plate Bridges கட்டப்பட்டு தாம்போதி அமைத்தல் மக்களின் நலன்களுக்கும், தாம்போதியின் பாதுகாப்புக்கும் அவசியம் என்பதை தான் முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார். சுழல் காற்று காலங்களில் பொன்னாலை தாம்போதி கடலினால் அள்ளிச் செல்வதை தடுப்பதற்கு வடக்குப் பக்கமாக பாதுகாப்பு சுவர் (Parapet Wall) அமைக்கப்படல் வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1884ஆம் ஆண்டு அறிக்கையில் திரு.துவைனம் அவர்கள் “அக்டோபர் 16ஆம் திகதி வீசிய சூறாவளிக் காற்றினால் பொன்னாலை தாம்போதி பெருமளவில் அள்ளிச் செல்லப்பட்டதால் தற்போது போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் உள்ளது. மீள அமைப்பதற்கான உத்தேச செலவீன மதிப்பீடு 100,000/= ஆகும். நீரோட்ட வசதிகள் அற்ற உறுதியான தாம்போதி (Solid Causeway Way) அமைக்கப்பட்டது தவறானது எனும் கருத்தினை எனது முன்னைய அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளேன். பலமான அலைகளை எதிர்கொள்ளும் பொன்னாலை தாம்போதி அதிகளவான நீரோட்ட வசதிகள் கொண்ட பாலங்களை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். அக்டோபர், டிசம்பர் மாத சூறாவளியின் தாக்கம் இக்கருத்திற்கு வலுச் சேர்ப்பதாகவும், உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது. பொன்னாலை தாம்போதி நீண்ட பாலங்களை (Long Bridge) உடையதாக அமையாவிடின் மீளக்கட்டுவதனை சிபார்சு செய்ய முடியாது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

“1884ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வீசிய சுறாவளிக் காற்றினால் பெரும் சேதம் ஏற்பட்டது.காற்றினாலும் மழையினாலும் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.வாழைத்தோட்டங்கள் அழிந்து போயின.வயல்கள், மக்கள் வாழும் குடியிருப்புக்கள் வெள்ளத்தால் நிரம்பியது. தபால் தந்தி சேவை பாதிக்கப்பட்டது. இதே ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி நாடு பூராகவும் வீசிய சுறாவளிக் காற்றினால் யாழ்ப்பாணத்தில் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டது.”பக்கம் 45

“1869ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் திகதி Sir W.C.துவைனம் வடமாகாண அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டடார்.” பக்கம் 33

“1878ம் ஆண்டு மே மாதம் ஆம்ஸ்றோங் முதலியார் யாழ்ப்பாண மாவட்ட பொறியிலாளராகவும் மேற்பார்வை அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.” பக்கம் – 40

ஆம்ஸ்றோங் தன் பணிக்காலத்தில் ஹஹமன்ஹீல் கோட்டையை திருத்தி அமைத்ததுடன் குடாநாட்டில் பல்வேறு கட்டுமானங்களையும் கட்டினார். ஆம்ஸ்றோங் ஆற்றிய பணிகளில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதும், பயனுறுதியுமான பணி பொன்னாலை தாம்போதியை அமைத்து வீதியால் காரைதீவையும் குடாநாட்டையும் இணைத்தமை அற்புதமானது. (Splendid) பக்கம் -230.

பக்கம் 45 பக்கம் 33 பக்கம் 40 பக்கம் 230 John H.Martin யாழ்பாணம் பற்றிய குறிப்புக்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட நூல்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், பிரித்தானியர் கால நிருவாக அறிக்கைள் என்பனவற்றை அவதானிக்கும் பொழுது 1869இல் உறுதியான பொருட்களால் தாம்போதி முழுவதும் (Solid Causeway)அமைக்கப்பட்டு, 1884ஆம் ஆண்டு சுறாவளிக்கு பின்னர் தற்போது புனரமைக்க முன்னர் அமைந்திருந்த தாம்போதியும் பாலங்களும் அமைக்கப்பட்டு இருக்கலாம் என கருத இடமுண்டு மேலும் இப்பணியில் திரு.துவைனம், திரு.ஆம்ஸ்றோங் ஆகியோரின் பங்களிப்பு இருந்தமையையும் இக்காலப்பகுதியில் இவ்விருவரும் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமையும் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

2008-2010 காலப்பகுதியில் பொன்னாலை தாம்போதி புனரமைக்கப்பட்டது. இதற்கு முற்பட்ட காலப்பகுதியில் அமைந்திருந்த தாம்போதி பாலங்கள் பற்றிய சில தகவல்கள்.பொன்னாலை தாம்போதி ஒருபாதையாக (Single Lane) அமைந்திருந்தது. ஒன்பது பாலங்களை கொண்டிருந்தது. முதலாம், இரண்டாம் பாலங்கள் அண்மிய தூரத்தில் அமைந்திருந்தது. “பாலங்கள் வளைவு (Arch) வடிவில் கட்டப்பட்டு இருந்தது. முருகைகற்கள் அளவுப் பிரமாணத்திற்கு (Blocks) சரிவக வடிவில் (Trapezium) வெட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று செருகப்பட்டு முகட்டில் வளைவு வடிவில் வைக்கப்பட்டு முடிவில் இறுதிக்கல்லினால் (Key Stone) பொருத்தப்பட்டது”.
திரு.மு. தில்லைநாதன் பொறியிலாளர் ஆலோசகர் 2008-2010 கட்டுமானம்.

பாலத்திற்கு வெளியே தாம்போதியில் இருவாகனங்கள் பயணிக்கக் கூடியதாக இருந்த போதிலும் பாலத்திற்கூடாக ஒருவாகனம் மாத்திரம் செல்லக் கூடியதாக இருந்தது. ஒரு வாகனம் பாலத்தைக் கடக்கும் போது எதிர்த் திசையில் இருந்து வரும் வாகனம் பாலத்திற்கு வெளியே தரித்து நிற்க வேண்டும். பாலப் பகுதி வளைவு வடிவில் அமைக்கப்பட்டு இருந்தமையால் தாம்போதியில் வரும் அதே வேகத்தில் வாகனத்தில் பாலத்தை கடக்க இயலாது. வாகனத்தின் வேகத்தைக் குறைத்;தே பாலத்தைக் கடக்க வேண்டும். பாலங்கள் உயரமாக கட்டப்பட்டு இருந்தமையால் அதன் கீழ்ப்பகுதி ஊடாக வள்ளங்கள், கட்டுமரங்கள் இருபக்கமும் போய் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது.

பாலங்களின் இருபக்கங்களிலும் பாதுகாப்பு சுவர்கள் (Safety Wall) அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்புச் சுவர்களில் அமர்ந்திருந்து தூண்டிலில் மீன் பிடிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தது. பாதுகாப்புச் சுவர்கள் இருந்த போதிலும் பாதுகாப்புச் சுவர்களை இடித்துத் தள்ளி கடலுக்குள் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் உண்டு.

“பழைய பாலங்கள் மாமுருகைக் கற்களால் கட்டப்பட்டு இருந்தது எனவும், சீமெந்து கம்பிகள் பாவிக்கப்படாமல் கற்கள் ஒன்றுடன் ஒன்று செருகப்பட்டு கட்டப்பட்டு இருந்தது எனவும், மாமுருகைக் கற்கள் கீரிமலையில் பொழியப்பட்டு மாட்டு வண்டில்களில் எடுத்து வரப்பட்டதாகவும் தங்கள் மூதாதையர்கள் தாம்போதி கட்டுமானப் பணிகளில் வேலை செய்ததாகவும் தமது பாட்டனார் மூலம் அறிந்து கொண்டதாக” தாம்போதி புனரமைக்கப்பட்ட போது தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றிய திரு செல்வரத்தினம் செல்வநாயகம் தெரிவித்தார்.

பொன்னாலை தாம்போதி 2008 – 2010 காலப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 420 ரூபா மில்லியன் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது. பொன்னாலை தாம்போதி யாழ்குடா நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது இருபாதை அகலமுடைய(Double Lane) இருவழிப்பாதையாகும். கடந்த காலங்களில் ஒன்பது பாலங்களை கொண்டு இருந்த தாம்போதியில் முதலாம் இரண்டாம் பாலப்பகுதியில் மேலும் ஒரு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் பத்து பாலங்களை உடைய தாம்போதியாக மாற்றம் பெற்றுள்ளது. தற்போதைய பாலங்கள் சதுர வடிவில் (Beam) அமைக்கப்பட்டுள்ளது. தாம்போதியின் தெற்குப் பக்கமாக தடுப்புச் சுவர்கள் (Retaining Wall) அமைக்கப்பட்டு தாம்போதி அகலமாக்கப்பட்டது. வடக்குப் பக்கமாக போர்த்தி சுவர்கள் (Jacket Wall) மூலம் புனரமைக்கப்பட்டது.

பொன்னாலையிலும் மண்ரோட்டுக்கு அண்மிய பகுதியிலும் காணப்படுகின்ற தொப்பிக் கட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதி தாம்போதியாக இருந்த போதிலும், தாம்போதி புனரமைக்கப்படும் பொழுது காரைநகர் இந்துக் கல்லூரி வரையிலான வீதி இருவழிப் பாதையாக புனரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணிகள் ஈரோவில் (Euroville) எனும் கட்டுமான நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. தாம்போதி புனரமைப்பு பணிகளின் போது வலந்தலை சந்தியில் அமைந்துள்ள தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தை தங்கள் கட்டுமானத் தேவைகளுக்கு பயன்படுத்தினர்.

1869 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் மக்கள் பரவைக் கடல் (நீர் வற்றுக் கடல்) ஊடாக நடந்து செல்வார்கள். காரைநகர் மக்கள் “வெள்ளைக் கடற்கரை” எனவும் அழைப்பர். சில காலங்களில் நீர் வெள்ளம் போல் பரந்து காணப்படும். ஆழம் குறைந்த இக்கடல் கோடை காலங்களில் வற்றி ஆங்காங்கே மணல் திடல்கள் காணப்படும்.

“தற்போதைய தாம்போதிக்கு தெற்குப் பக்கமாக 50-60 அடி தூரத்தில் நடந்து செல்லும் பாதையை அடையாளப்படுத்துவதற்காக 6 அடி உயரமான பாலைக் குற்றிகள் நடப்பட்டு இருந்ததாகவும் அவற்றை அடிபாட்டுக்கட்டை (அடிபாடு – போகும் வழியை அடையாளப்படுத்தம் கட்டை) என அழைப்பர் எனவும் அண்மைக் காலம் வரை இக் கட்டைகள் காணப்பட்டதாகவும் தற்போது இல்லாமற் போனாலும் இதனை அடையாளப்படுத்த முடியும்” என இப்பகுதிக்கு பரீட்சையமான இலகடியை சேர்ந்த சிரேஸ்ட்ட பிரசை திரு.முருகேசு விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

“தம்பாட்டிக்கும் அராலித் துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் அகலமாக காணப்படுகின்ற கடல் பகுதி வடக்கு நோக்கி வருகின்ற பொழுது புனல் வடிவத்தில் ஒடுங்கி பத்தி வடலி முனங்கு கழிக்கரை பகுதியில் 600 மீற்றர் அகலமான ஒடுங்கிய பகுதியாக காணப்படுகின்றது. அகண்ட பரப்பில் இருந்து வருகின்ற நீர் ஒடுங்கிய பாலங்களுக்கு ஊடாக செல்கின்ற பொழுது பாலங்களின் கீழ்பகுதி ஆழமாகின்றது. மேலும் பாலத்தின் கீழ் பகுதியில் சேரும் சுருதி நீரோட்டம் அதிகரித்த காலப்பகுதியில் அள்ளிச் செல்லப்படுவதால் பாலப் பகுதி ஆழமாகக் காணப்படுகின்றது எனவும் ஏனைய பகுதிகள் வைர நிலமாக (உறுதியான ) இருந்தமையால் தான் தாம்போதி அமைக்கப்பட முன்னர் மக்கள் கால் நடையாக செல்லக் கூடியதாக இருந்தது” என திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் தெரிவித்தார்.

பொன்னாலை தாம்போதியும் கடற்றொழிலும்
“கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தொழில் செய்யும் இடத்தை அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொரு பாலத்திற்கும் பெயர் இட்டு இருந்தார்கள். இறவி மதவு, மேடை மதவு (ஆழம் குறைந்த பாலம்) மாவடி மதவு (ஆழம் கூடிய தாழ்வான பாலம்) பொன்னாலையில் இருந்து வருகின்ற பொழுது முதலாம் பாலம் கழுவடிப்பாலம் (ஆழம் கூடிய பாலம்) என அழைக்கப்பட்டது. கடந்த காலங்களில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தை மாதம் முதல் புரட்டாதி மாதம் வரை இலுப்பைக் கடவை , மூன்றாம் பிட்டி ஆகிய இடங்களில் கடற்தொழிலில் ஈடுபடுவர். ஐப்பசி மாதத்தில் அங்கிருந்து புறப்பட்டு பண்ணைப்பாலம் ஊடாக ஆற்றுப்பாதை வழியாக கழுவடிவப்பாலம் ஊடாக சுழிபுரம் சவுக்கடி பகுதிக்குச் செல்வர். அங்கு பிடிக்கப்பட்டு பதனிடப்பட்ட கருவாட்டையும் தங்கள் 40 அடி நீளமான வள்ளங்களில் எடுத்து வந்து யாழ்ப்பாண பகுதியில் சந்தைப்படுத்துவர்” என காரைநகர் ஆலடியை பிறப்பிடமாகவும் தற்போது பொன்னாலையில் வசிப்பவருமான திரு. அம்பலம் சின்னையா தெரிவித்தார்.

“கழுவடிப்பாலத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியால் சென்ற கள்வர்கள் மீன்களை கொள்ளையிட்டுச் சென்ற போது கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த செல்லையா சாமியார் பின்வருமாறு பாடியதாக இலகடியைச் சேர்ந்த திரு. கார்த்திகேசு நவரத்தினராசா தெரிவித்தார்.

கள்வர்கள் கொள்ளையடி
கழுவடி பாலத்திலே
காரில் வந்து கடைகெட்ட வழுசல்கள்
கூடையில் கை ஓட்டி
கரும்திரளி மூன்றை கொள்ளை கொண்டு போயினர்”

பொன்னாலை தாம்போதிப்பகுதியில் பிடிபடும் (கயல் மீன்கள், கிளாக்கன்,கரும் திரளி, மழைக்காலங்களில் பிடிபடும் ஓரா மீன்கள்) கடல் உணவுகள் சுவைமிகுந்தவை எனும் மகிமையுடையவை. தற்போது கடலின் தெற்கு பகுதியில் அதிகளவான இறால் கூடுகள் அமைக்கப்பட்டதால் கடல் தொழிலிலுக்கு சாதகமற்ற தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. சிறிய மீன்கள் அழிந்து போகும் நிலைமை காணப்படுகின்றது.

“1970ம் ஆண்டு காலப்பகுதியில் இழுவை வலை மூலம் இறால் பிடிப்பதில் காரைநகர் கடல் தொழிலாளர்களுக்கும் பொன்னாலை பகுதி கடல் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக காரைநகர் பகுதி கடற்தொழிளார்கள் காரைநகரில் இருந்து செல்லுகின்ற பொழுது நான்காம் ஐந்தாம் பாலங்களுக்கு இடையில் காணப்படும் பத்தாம் கட்டையடி வரைக்கும், பொன்னாலை பகுதி கடற் தொழிலாளர்கள் பொன்னாலையில் இருந்து பத்தாம் கட்டையடி வரைக்கும் இறால் பிடிக்க உடன்பாடு எட்டப்பட்டது.”என இலகடியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலர் திரு.கைலாயபிள்ளை நாகராஜா தெரிவித்தார்.

காரைநகரில் இருந்து சிவகாமி அம்மன் கோவிலடி, காரைநகர் வட கிழக்கு பகுதிகளில் வசிக்கும் கடற்தொழிலாளர்களும், பொன்னாலை நிற்சாமம், சில்லாலை, பண்டதரிப்பு பகுதி கடற்தொழிலாளர்களும் வருடம் புராகவும் இரவு வேளைகளில் இறால் பிடிப்பதில் ஈடுபடுவர்.பொன்னாலை தாம்போதியில் இரவு வேளைகளில் கடற்தொழிலாளர்களின் பிரசன்னம் அதிகரித்து காணப்படும்.வீதியோரங்களில் துவிச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், சிலர் நித்திரை கொள்வர்.பிடிக்கப்பட்ட இறால் வகைப்படுத்தப்படும்.இதனால் இரவு வேளைகளில் தாம்போதியில் செல்லும் வாகனங்கள் மெதுவாக ஒலி எழுப்பி ஒளி பாச்சி செல்லும்.

“இங்கு பிடிக்கப்படும் இறால்கள் பொன்னாலை சந்தியில் அமைந்திருத்த இறால் கொள்வனவு செய்யும் முகவர்களால் கொள்வனவு செய்யப்படும்.இறால்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும்.கருவாடு ஆக்கப்படும் இறால்களும் பொதி செய்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும்.பொன்னாலை தாம்போதியில் இறால் பிடித்தல் அன்றைய கால கட்டத்தில் வருமானம் மிக்க தொழிலாக அமைந்திருந்தது.ஏனைய கடல் உணவுகளும் பொன்னாலை தாம்போதியில் அதிகளவு பிடிக்கப் படுவதனால் பொன்னாலை தாம்போதியை நம்பி கடல் தொழில் செய்த கடற்தொழிலாளர்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடியதாக இருந்தது.”என திரு செல்வரத்தினம் செல்வநாயகம் தெரிவித்தார்.

இரவு வேளைகளில் இறால் பிடிக்கும் தொழில் நின்று போய் உள்ளது.எங்களை சுற்றி உள்ள கடல் வளம் பறிபோய் கொண்டிருக்கின்றது.உரிய நியமங்கள் கடைப்பிடிக்காமையால் கடல் வளமும், கடல் வாழ் உயிரினங்களும் அழிக்கப்படுகின்றன.தலைமுறை தலைமுறையாக போசிக்கப்பட்டு வந்த கடல் தொழில் பற்றிய அறிவு இல்லாமல் போய் விட்டது.கடல் சார்ந்த வாழ்வு சுருங்கி விட்டது.இதனால் இன்று பொன்னாலை பகுதியில் கடற்தொழிலில் ஈடுபடுவது வருமானம் மிக்க தொழிலாக அமையவில்லை.

பழைய பாலத்தில் தடுப்புச் சுவர்களில் இருந்து தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் தொழில் வெகுவாக அருகிப் போய்விட்டது. பாலத்தில் பிடிக்கப்படும் கிளாக்கன் மீன்கள் பத்திய கறி சமைப்பதற்கு சிறந்தது. வலந்தலை சந்திக்கு அண்மிய பகுதியில் வாழ்ந்த மக்களில் பெண்கள் பலர் ஒன்று சேர்ந்து கீளிவலையின் துணையுடன் சிறிய மீன்கள் இறால், நண்டு பிடித்தல் நின்று போயிற்று. இவர்களால் பிடிக்கப்படும் கரும்திரளி சுவையானது. சமைக்கும் போது வாசனை தரும். இவர்கள் கடற்தொழிலை முடித்து திரும்பி வருவதை எதிர்பார்த்து பெண்கள் காத்திருப்பர்.

இது போன்று பொன்னாலைப்பகுதி பெண்கள் கயிறு இழுத்தல் மூலம் கடற்தொழிலில் ஈடுபடுவது நின்று போயிற்று கடந்த காலங்களில் மாரி காலங்களில் கடல் பெருக்கு எடுக்கும் கச்சான் காற்று காலத்தில் ஊரிப்பகுதிப் பாறைகளில் காணப்படுகின்ற ஓரா மீன்கள் தாம்போதி பகுதியில் வந்து அடையும் காலங்களில் நீருடன் தாம்போதிக்கு மேலாக மீன்கள் அடித்துச் செல்லப்படும் வேளைகளில் தடியால் மீன்களை அடித்துப் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தது.

தாம்போதியும் நிலமேடுகளும்

பொன்னாலைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நிலமேடுகள் காணப்படுகின்றன. பொன்னாலையில் இருந்து வரும்போது தாம்போதிக்கு வடக்குப் பக்கமாக நான்காம் பாலப்பகுதியில் நீள்சதுர வடிவில் காணப்படுகின்ற நிலமேடு துருத்திபிட்டி என அழைக்கப்படுகின்றது. இந்நிலப்பரப்பு சங்கானை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்டது. துருத்திப்பிட்டி காரைநகர் ஆலடியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை அரி என்பவருக்கு சொந்மானது. திரு அரி அவர்களின் குடும்பத்தவர்கள் உரிமைக்கான ஆவணத்தை ( உறுதி) தாங்கள் வைத்திருப்பதாக தெரிவித்தனர். காரைநகர் பொன்னாலைப் பகுதிகளில் வாழ்கின்ற சிரேஸ்ட்ட பிரசைகள் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.

 

துருத்திப்பிட்டி

 

1990க்கு முற்பட்ட காலங்களில் காரைநகரில் இருந்து நூற்றுக் கணக்கான மாடுகள் இளவாலை, மாதகல் மாதியப்பட்டி, பொன்னாலை போன்ற இடங்களுக்கு பராமரிப்புக்காக பொன்னாலை தாம்போதி வழியாக எடுத்துச் செல்லப்படுவது வழமை. பொன்னாலையில் பராமரிக்கப்படும் மாடுகள் துருத்திப் பிட்டியில் செழித்து வளரும் புற்களை மேய்வதற்காக கடல் வழியாக துருத்திப்பிட்டிக்கு செல்லும். இவ்விடத்தை மாட்டு இறக்கம், மாட்டு வாய்க்கால் என அழைப்பர். இப்பகுதி நிலம் வைரத்தன்மையாக இருப்பதனால் துருத்திப் பிட்டியில் சேரும் மாட்டு எரு வண்டில்கள் மூலம் ஏற்றி வரும் வழக்கம் இருந்தது. தற்போது இந்நிகழ்வுகள் இல்லாமல் போயிற்று.

“கடந்த காலங்களில் துருத்திப் பிட்டியில் கற்றாளை செடிகள் நிறைந்து காணப்பட்டதாகவும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பூக்கும் கற்றாளை பூக்களை கடற் தொழிலுக்குச் செல்பவர்கள் மீன்கள் இடும் கூடைகளில் கொழுவி வருவார்கள் எனவும் பூக்களை இறாலுடன் வறுத்து சாப்பிடுவது சுவைமிக்கதுடன் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது” எனவும் இலகடியை சேர்ந்த திரு முருகேசு பரமானந்தம் தெரிவித்தார்.

தாம்போதியின் தெற்குப் பக்கமாக காரைநகரில் இருந்த செல்கின்ற பொழுது முதலாம் இரண்டாம் பாலங்களுக்கு அண்மிய பகுதியில் காணப்படும் மணற்திட்டுக்கள் கண்ணாப்பிட்டி (கண்ணா பத்தை) என்று அழைக்கப்படுகின்றது. வருடம் முழுவதும் பச்சை நிறமாக காணப்படும் இச்செடிகளின் இலை நறுமணம் மிக்கது.

கண்ணாப்பிட்டி

 

பொன்னாலை தாம்போதி ஊடாக காரைநகருக்கான சேவைகள்

பொன்னாலை தாம்போதியின் தெற்குப் பக்கமாக நாட்டப்பட்டுள்ள தொலை தொடர்பு கம்பங்கள் ஊடாக காரைநகருக்கும் தீவகத்திற்குமான தொலை தொடர்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.1970ம் ஆண்டு காரைநகருக்கான மின்சாரம் வழங்கல் ஆரம்பமான பொழுது தாம்போதியின் வடக்குப் பகக்கமாக கம்பங்கள் நடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு 2018ம் ஆண்டில் இருந்து தெற்குப் பக்கமாக கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகின்றது.காரைநகருக்கான குடிநீர் விநியோக குழாய்கள் 2018ம் ஆண்டு தாம்போதியின் வடக்கு பக்கமாக நிறுவப்பட்டுள்ளது.

பொன்னாலை தாம்போதியும் கடல்வெளி மாற்றுப் பாதையும்

1983ஆம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலைத் தொடர்ந்து அசாதாரண நிலைமை காணப்பட்டது. 24ம் திகதி அதிகாலை சங்கானை சித்தன்கேணிப் பகுதிகளுக்கு சென்ற மக்கள் காரைநகருக்கு திரும்பி வருவதற்க்கு பிரதான வீதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளக வீதிகளால் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்;கு பின் புறம் அமைந்துள்ள பெரியவர் கோவிலடி சமாதிப்பகுதியில் அமைந்துள்ள கழிக்கரைப் பகுதியில் இறங்கி நேராக நடந்து சோனகன் பங்கிற்கு அண்மிய பகுதியில் பத்தி வடலி முனங்கு எனும் இடத்தில் கரையேறி காரைநகருக்கு வந்து சேர்ந்தனர்.

1991ம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து தொடர்சியாக வெளியேறிய மக்களை விட மேலும் சில மக்கள் காரைநகரில் தரித்து இருந்தனர். 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி காரைநகரில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கை காரணமாக பொன்னாலை தாம்போதி ஊடாக குடா நாட்டுக்கு செல்வது மதியம் 1.00 மணியுடன் தடைப்பட்டது. காரைநகரில் தங்கி இருந்து குடா நாட்டுக்குச் செல்ல விரும்பிய நூற்றுக்கணக்கான மக்கள் பத்தி வடலி முனங்குப் பகுதியில் கடலுக்குள் இறங்கி நேராக நடந்து பொன்னாலை கழிக்கரை பகுதியை சென்றடைந்தனர். இவ்வழியே வெளியேறியவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி வெளியேறினர். இப்பகுதியால் செல்லுகின்ற பொழுது ஆழங்குறைந்த நடைபாதையை சரியாக இனங்கண்டு நடத்தல் வேண்டும் .வடக்குப் பக்கத்தில் ஆழம்கூடிய ஆற்றுப்பகுதியும் தெற்கே காவாட்டியும் காணப்படுகின்றது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பொன்னாலை தாம்போதியும்

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் பொன்னாலை தாம்போதியில் காணப்பட்ட பாலங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டும், விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டுகளால் தகர்க்ப்பட்ட சம்பவங்களும் உண்டு 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் கண்ணாபிட்டியில் இருந்து இயக்கப்பட்ட தரைக் கண்ணிவெடியினை வெடிக்க வைத்த முயற்சி இலக்கை அடையவில்லை.

1985 ஆம் ஆண்டு காரைநகர் கடற்படை முகாம் மீதான தாக்குதலை தொடர்ந்து காரைநகரில் வாழ்ந்த மக்கள் காரைநகருக்கு உள்ளும், காரைநகருக்கு வெளியேயும் இடம் பெயரவும், பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயரவும் ஆரம்பித்தனர். 1991ம் ஆண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து சிறிது சிறிதாக இடம் பெயர ஆரம்பித்து மார்ச் மாத இறுதிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் பொன்னாலை தாம்போதி ஊடாக மக்கள் வெளியேறினர். தங்களிடமிருந்த துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் வண்டிகள், மாட்டு வண்டில்களில் பொன்னாலை தாம்போதியால் சாரை சாரையாக நடந்து சென்று குடாநாட்டை அடைந்தனர். தங்கள் குடும்பத்தினருடன் எடுத்துச் செல்லக்கூடிய உடமைகளுடனும்இ வளர்ப்புப் பிராணிகளுடனும் வெளியேறினர்.

மக்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சிந்தனை ஒன்றுடன் சேருமிடம் தெரியாத வெளியேற்றம் ஒன்றுக்கு உள்ளாயினர். பரம்பரையாக தம் மூதாதையர் வாழ்ந்த மண்ணில், தாம் வாழ்ந்த மண்ணில் வேரோடு பிடுங்கப்படுகின்றோம் என்பதனை விளங்கிக் கொள்ள மனதளவில் இம்மியளவும் இடம் இருக்கவில்லை.

1991ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி காரைநகரில் இருந்து இறுதியாக வெளியேறிய மக்களை 1996ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி காரைநகரில் மீளக் குடியமர்வதற்கு ஊர்காவற்றுறை வழியாக அரசினால் அழைத்து வரப்பட்டனர்.

ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் 1998ம் ஆண்டு நடுப்பகுதியில் பொன்னாலை தாம்போதி பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. காரைநகரில் இருந்து செல்லும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து குடாநாட்டிலிருந்து வருகை தந்த பயணிகளை பொன்னாலை சந்தியில் இருந்து ஏற்றி வரும். இக்காலப்பகுதியில் பொது மக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பொன்னாலை தாம்போதியில் 54 காவல் அரண்கள்; அமைந்திருந்தது எனவும் அன்றய காலகட்டத்தில் மீளக் குடியேறிய மக்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. 2000ம் ஆண்டில் பொன்னாலை தாம்போதி ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

1986ம் ஆண்டு ஏப்ரல் மாத பிற்பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இரண்டு போராளிக் குழுக்களுக்கிடையே மோதல் நடைபெற்றது. ஏப்ரல் 28ம்திகதி வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மோதலில் இறந்த போராளிகளின் பூதவுடல்களை காரைநகருக்கு எடுத்து வரவேண்டிய நிலை காரைநகரில் காணப்பட்டது. இதன் காரணமாக மறுதினம் 9 பூதவுடல்கள் காரைநகருக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் நின்றிருந்த 90 போராளிகளும் அழைத்துவரப்பட்டனர். பொன்னாலைச் சந்தியில் தரித்திருந்த போராளிக் குழுவிற்கும் காரைநகரில் தரித்திருந்த மற்றைய போராளிக் குழுவிற்கும் இடையில் நான்கு தினங்களாக தினம்தோறும் மூன்றுக்கு மேற்பட்ட சந்திப்புக்களை நடாத்திய சமூக ஆர்வலர்களின் முயற்சி வெற்றி அளிக்கவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் தாய்மார்கள் பொன்னாலை தாம்போதி ஊடாக கால்நடையாக சமாதான முயற்சிகளை மேற்கொண்டனர். மே மாதம்; 5ம் திகதி பெரும் எண்ணிக்கையான தாய்மார்கள், பொது மக்கள் பொன்னாலை தாம்போதி ஊடாக நடந்து சென்று பொன்னாலை சந்தியில் அமர்ந்தனர். இறுதியாக பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்களை பொறுப்பேற்றுஇ 90 போராளிகளையும் தத்தமது வீடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் அவலத்தை தந்த சம்பவம் காரைநகரில் நடைபெறாது இருப்பதற்கு பொன்னாலை தாம்போதி ஊடாக சோர்வின்றி மேற்கொண்ட பயணங்களே காரணமாகும்.

பொன்னாலைச் சந்தியும் அதன் முக்கியத்துவமும்

பொன்னாலை நாற் சந்தியில் இருந்து பிரிந்து செல்லும் பெருந் தெருக்கள் யாழ்ப்பாணம், வடமராட்ச்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளுக்கு காரைநகர் மக்கள் இலகுவில் சென்றடைய வழி செய்கின்றன . சட்டபூர்வமற்ற வழிகள் மூலம் காரைநகர் ஊடாக இலங்கைக்கு வருபவர்களை கண்காணிக்கவும், பாதுகாப்பிற்காகவும் 1980 இற்கு முற்பட்ட காலத்தில் பொன்னாலைச் சந்திப் பகுதியில் காவல்துறையின் சோதனை சாவடி அமைந்திருந்தது. தேவைப்படும் சந்தர்ப்பங்களிலும், சந்தேகத்திற்கு இடம் ஏற்படும் பொழுதும் பயணிகள் சோதனைக்கு உள்ளாவர், வாகனங்கள் நிறுத்திப் பரிசோதிக்கப்படும்.

பொன்னாலை தாம்போதி வரவேற்பு வளைவுக்கு அண்மையில் அமைந்துள்ள தொப்பி கட்டில் இருந்து பொன்னாலை சந்தியில் அமைந்துள்ள கடற்படைசோதனை சாவடிக்கு அண்மையில் அமைந்துள்ள தொப்பி கட்டு வரைக்கும் 03KM நீளமுடையது.பொன்னாலை சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தில் இருந்து வரவேற்பு வளைவு வரைக்கும் 3189M நீளமுடையது.வரவேற்ப்பு வளைவில் இருந்து 1175 மீர்ரரும் பொன்னாலை சுற்று வட்டத்தில் இருந்து 2014 மீர்ரரும் சந்திக்கும் இடம் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இடையிலான எல்லை பகுதி ஆகும்.கடல் காடு போன்ற இடங்களின் எல்லைகள் எல்லைபடுத்ப்தபடாத பகுதிகளாக கணிக்கப்படும். அவ்வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எல்லையாக துருத்திப்பிட்டியின் மேற்க்கு பக்கத்தின் இறுதி பகுதி எல்லையாக கணிக்கப்படுகிறது.இதன்படி காரைநகர் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லை நான்காம் ஐந்தாம் பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியாக கொள்ளலாம்.

1954ல் புங்குடுதீவுக்கும் வேலணை தீவிக்கும் இடையிலான தாம்போதியும்(வாணர் தாம்போதி), 1961ல் பண்ணைப் பாலமும் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன.இவ் இரு பாதைகளும் திறந்து வைக்கப்பட முன்னர் ஏனைய தீவுகளிற்கான போக்குவரத்தில் பொன்னாலை தாம்போதி முக்கிய பங்கினை வகித்தது.

காரைநகரிற்க்கு வரவேற்கும் வரவேற்பு வளைவு

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலரில் வெளியான கட்டுரை- மறைந்து போன துறைமுகப் பண்பாடு- காரைநகர் துறைமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளக்கம் – எஸ்.கே. சதாசிவம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலரில் வெளியான கட்டுரை 

மறைந்து போன துறைமுகப் பண்பாடு 

காரைநகர் துறைமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளக்கம்

எஸ்.கே. சதாசிவம்

                கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலம், இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் காலம் வட இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் காலம், ஜரோப்பிய அரசுகளின் காலம், பிரித்தானிய அரசுக் காலம் என அனைத்து ஆட்சியாளர்களின் காலப் பகுதிகளிலும் ஊர்காவற்றுறை, காரைநகர் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வாணிப நடவடிக்கைகளிலும், போரியல் வரலாற்றிலும் காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் அமைவிடமே அவை முக்கியத்துவம் பெறக் காரணமாயிற்று. வரலாற்று ரீதியாக காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்கள் பெற்றிருந்த சிறப்பினை வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தத்தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் காரைநகர் துறைமுகத்திலும் அதன் சுற்றாடலிலும் இடம் பெற்ற செயற்பாடுகளினால் காரைநகர் துறைமுகப்பகுதி உயிரோட்டமாக இருந்து காரைநகரின் பெருமைக்கு வலுச்சேர்த்தமையை மீட்டுப் பார்த்தலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நாட்டில் ஏற்பட்ட அமைதி இன்மை காரணமாக பொருளாதார வலுவை இழந்து, மக்களின் இருப்பை இழந்து, பொலிவிழந்து நிற்கும் துறைமுகமே காரைநகர் துறைமுகப் பகுதி.

வாணிப நடவடிக்கைகள்

இலங்கையும் இந்தியாவும் குடியேற்ற நாடுகளாக இருந்த காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கு தடை ஏதும் இருக்கவில்லை. காரைநகர் துறைமுகத்திற்கும் தமிழகம், தென்கிழக்காசியா (மலேசியா, யாவா) அரேபிய தேசங்கள், கொழும்பு, குயராத் ஆகிய இடங்களுக்கிடையில் வாணிப நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அதிகளவான சரக்குக் கப்பல்கள் காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களுக்கு வருகை தந்தன. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் வாணிப நடவடிக்கைகளில் ஊர்காவற்துறை துறைமுகம் இலங்கையில் வருமான அடிப்படையில் இரண்டாவது வருமானம் மிக்க துறைமுகமாக திகழ்ந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எனும் ஏற்பாட்டில் கொழும்புத் துறைமுகம் முதன்மைப்படுத்தப்பட்டது. இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை போன்ற துறைமுகங்கள் இதுவரை காலமும் பெற்றிருந்த முதன்மை நிலையை இழந்தன.

காரைநகர் துறைமுகத்துக்கு அண்மிய பகுதியில் சுங்கத்திணைக்களம், சுங்கத்திணைக்கள காவலர்      அலுவலகம், பண்டகசாலை என்பன அமைந்திருந்தன. தென்இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப-உணவுப் பொருட்கள், ஓடுகள், மட்பாண்டங்கள் என்பன காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைந்திருந்த பண்டகசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டது.

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதியில் அலுப்பாந்தி துறைமுகப்பகுதிவரை வள்ளங்கள் செல்லக்கூடிய கப்பற்பாதை அமைந்திருந்தமையும் குடாநாட்டிற்கான கடற்வழிப் போக்குவரத்தில் காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்கள் முக்கியத்துவம் பெறக்காரணம்

ஆயிற்று. காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களில் இறக்கப்பட்ட பொருட்கள் கடல் வழியாக யாழ்ப்பாண அலுப்பாந்தி துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புகையிரதம் மூலம் தென்னிலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தமிழர் பிரதேசங்களில் இருந்து பனை சார்ந்த உற்பத்தி பொருட்களான பனந்தும்பு, பனங்கட்டி என்பனவும் பனை மரங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. காரைநகரின் வடபால் அமைந்திருந்த துறைமுகத்திலிருந்து இந்தியாவின் கோடிக்கரைக்கு பனை மரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து  நெல் அரிசிப் பண்டங்களுடன் மீளும் பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றது. இந்தியாவில் யாழ்ப்பாண சுருட்டுக்கு மதிப்பு இருந்தமையால் சுருட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

1879ம் ஆண்டு காரைநகருக்கும் பொன்னாலைக்கும் இடைப்பட்ட தரைவழிப் பாதை திறந்து வைக்கப்பட்டமையானது காரைநகர் துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்தது. காரைநகர் துறைமுகத்தில்  இறக்கப்பட்ட பொருட்களை முள்ளியவளை, நெடுங்கேணி, கண்டி, அநுராதபுரம் போன்ற இடங்களுக்கு காரைநகர் வர்த்தகர்கள் கூடார வண்டில் தொடர் அணிகளில் ஏற்றிச் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

காரைநகர் துறைமுகப்பகுதியில் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் துறைமுகத்தை அண்மிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம். இதனால் பலுகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம் ஆகிய குறிச்சிகளில் வாழ்ந்த பலர் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வண்டி தொடர் அணிவர்த்தகமும் அக்காலத்தில் இம்மக்கள்  வர்த்தக துறையில் ஈடுபட ஊக்குவிப்பாக அமைந்திருக்கும்.

தங்கோடை, கோவளம் ஆகிய குறிச்சிகளில் வாழ்ந்த பெரும்பாலானோர் குறிப்பாக மலையகத்திலும் ஏனைய குறிச்சிகளில் வாழ்ந்தோர் நாட்டின் பல பாகங்களிலும் வர்த்தகம் செய்யலாயினர். தமது தந்தையரின் பெயரை முதற்பெயராக கொண்டு வர்த்தகம் செய்ய புறப்பட்ட பலர் கிராமத்திற்கு திரும்பி வருகின்ற போது தாங்கள் வர்த்தகம் செய்த ஊர்களின் பெயர்களை தங்கள் முதற்பெயராக கொண்டு ஊர் திரும்பினர். தாம் வர்த்தகம் செய்த ஊர்களில் வர்;த்தகத்தில் முதன்மை நிலை பெற்றிருந்தது மட்டுமல்லாது காலப்போக்கில் அவ் ஊர்களின் உள்ளுர் ஆட்சி மன்றங்களிலும் பதவி வகித்தனர்.

1780 ல் காரைக்காலில் இருந்து வந்த கனகசபைபிள்ளை காரைநகர் துறைமுகத்திற்கு அண்மிய பகுதியில் வர்;த்தகர்கள், யாத்திரிகள், தங்கி போக்குவரத்து செய்வதற்கு வசதியாகமடம் ஒன்றை அமைத்தார். கப்பல்களில் சரக்கு ஏற்றி வர்த்தகம் செய்து வந்தமையால் பெருஞ்செல்வந்தராய் இருந்தார். வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இப் பகுதியில் குடியேறி வாழ்ந்தார்கள். பிள்ளைமடம்  அன்றைய நாளில் வர்த்தகத்தின் சிறப்பின் அடையாளமாக அமைந்திருந்தது.

செல்வந்தர்கள் பல கப்பல்களை வர்த்தக சேவையில் ஈடுபடுத்தி  பெருஞ் செல்வந்தர்கள் ஆனார்கள். காரைநகர் துறைமுகப்பகுதியை மையப்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டனர். சி.க.ஆறுமுகம் வெள்ளையர் ஆறுமுகம் என்று மக்களால் அழைக்கப்படுபவர் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து துறைமுகத்தடியில் பிரபல்யமான வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி துறைமுகப்பகுதி வர்த்தகத்தில் தனக்கென ஒரு ஸ்தானத்தை வகித்த பெரும் செல்வந்தர் ஆவார். வைரமுத்து சபாபதிப்பிள்ளை, வைரமுத்து ஆறுமுகம் சைவாசாரப் பரம்பரையில் பிறந்த சகோதரர்கள் கப்பல்களை வைத்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்தவர்கள். துறைமுகப்பகுதியில் வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி வந்தனர். யாழ்ப்பாண நகரிலும் முன்னணி வர்த்தக ஸ்தாபனத்தின் உரிமையாளர்களாக இருந்தனர்.யாழ்ப்பாண ஜக்கிய பண்டகசாலையை ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் இவர்களும் அடங்குவர். எஸ்.வி.பொன்னம்பலம் காரைநகர் துறைமுகம் ஊடாக பீடியை இறக்குமதி செய்து வி;ற்பனை செய்யும் வர்த்தகத்தில் பிரபலம் பெற்றிருந்தார்.

 

இந்தியாவில் இருந்து காளை மாடுகள் இறக்குமதி செய்தல்

தமிழரின் பொருளாதார வளத்தில் விவசாயம் முக்கிய பங்கினை பெற்றிருந்தது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கருதி வாழ்ந்தவர்கள் தென் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நல்லின காளை மாடுகளை தங்கள் வேளாண்மை செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் உச்சப்பயனைப் பெறலாம் என கருதினர்.

அன்றைய கால கட்டத்தில் சாதாரண மக்கள் மாட்டு வண்டில்களிலும் வசதி மிக்கவர்கள் குதிரை வண்டில்களிலும் தங்கள் பயணங்களை மேற்கொண்டனர். நல்லின காளை மாடுகளை தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வண்டில்களில் பூட்டி பயணம் செய்வதால் தங்கள் பயணங்ளை விரைவாக மேற்கொண்டனர். மேலும் நல்லின காளைகளை  பயன்படுத்துவது அன்றைய கால கட்டத்தில் மேலான சமூக அந்தஸ்தாக கருதப்பட்டது.

நல்லின காளை மாடுகளை வளர்ப்பதில் நாட்டம் கொண்ட பலர் காரைநகரில் வாழ்ந்தனர். இந்தியாவில் இருந்து காளை மாடுகளை கொண்டு வருவதில் புதுறோட்டு, இடைப்பிட்டி குறிச்சிகளை சேர்ந்த மினாயர் தில்லைச்சி (தில்லையம்பலம்) தில்லையம்பலம் கந்தையா, தில்லையம்பலம் பொன்னம்பலம் ஆகியோரும் களபூமியில் வாழ்ந்த காசிநாதர் சிதம்பரப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை கனகசபை ஆகியோரும் ஈடுபட்டனர்.

காரைநகரில் இருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை விளக்கீட்டினைப் பார்ப்பதற்கு செல்வார்கள். கார்த்திகை தீப திருவிழா காலத்தில் மாடுகள் ஏலத்தில் விற்பதற்காக திருவண்ணாமலை மாட்டுச் சந்தைக்கு கொண்டு வரப்படும். விரும்பிய மாடுகளை கொள்வனவு செய்வார்கள். இந்தியாவில் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து மாடுகள் ஏற்றப்படும். தை மாதத்தில் ஊர்காவற்றுறையில் மாடுகள் இறக்கப்படும். பருத்தி அடைப்பில் மாடுகள் பேணகத்தில் இரண்டு வாரங்களிற்கு மாடுகள் பராமரிக்கப்படும். இரண்டு வாரங்களிற்கு பின்னர் மாடுகள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும். மாடுகளை கொள்வனவு செய்வதற்காக வெளியூர் மக்களும் கூடுவர். சிலர் தங்களிடம் இருக்கும் உள்ளுர் மாடுகளை கொடுத்து நல்லின காளைகளை எடுத்துச் செல்வர். திருநெல்வேலி மாவட்டம் காங்கேயன் மாட்டுச் சந்தையில் கொள்வனவு செய்யப்படும் மாடுகளும் காரைநகர் வழியாக யாழ்ப்பணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

காரைநகர் துறைமுகத்தில் இருந்து மாடுகளை நடத்திச் செல்வர். மாடுகளை நடத்திச் செல்பவர் கம்பீரமானவராக இருப்பார். வெள்ளை வேட்டி கட்டி தலைப்பாகை அணிவார். மாடுகளுக்கு கெச்சை, வெண்டயம், கொம்புக்குழாய், வெள்ளிச்சங்கிலி என்பவற்றுடன் நெத்திப்பவளம் கட்டப்படும். சிவப்பு பச்சை மணிகள் மணிமணியாக கோர்க்கப்பட்டு நடுவில் சங்கு வைத்து நெற்றியில் கட்டப்படும். காரைநகர் துறைமுகப்பகுதியில் இருந்து மாடுகள் வரிசையாக நடத்திச் செல்வது விழா போன்று அமையும்.

போக்குவரத்திற்கான பாதை

1869ம் ஆண்டு வடமாகாண அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் பணியாற்றிய W.C துவைனம் (William Crofton Twynam) பின்னாளில் அவரின் சேவையின் மேன்மை கருதி ‘Sir’ பட்டம் வழங்கப்பட்டது காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். காரைநகர் தொப்பிக்கட்டுக்கும் பொன்னாலைப் பகுதிக்கும் இடையே ஒன்பது பாலங்களை உள்ளடக்கிய கற்தெரு 1879ம் ஆண்டு W.C துவைனம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் காரைநகர் யாழ்ப்பாணக் குடா நிலத்துடன் ஒன்பது பாலங்களைக் கொண்ட வீதி நிலங்களால் இணைக்கப்பட்டது. தாம்போதி கட்டுமானம் தொடர்பாக W.C துவைனம் வருகை தந்தமையை குறிக்கும் நினைவுக்கல் காரைநகர் இந்துக்கல்லூரியின் வடக்கு புறத்தில் அமைந்திருந்த சயம்பு மண்டபத்தில் பதிக்கப்பட்டு இருந்தது. தாம்போதி அமைக்கப்பட்டதன் பயனாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தரைவழியாக பயணம் செய்யும் வாய்புக்கிட்டியது. தாம்போதி அமைக்கப்பட்டதன் மூலம் காரைநகர் ஏனைய தீவுகளுடன் ஒப்பிடும் போது சிறப்பு நிலை பெற்றது.

யாழ் குடாநாட்டிற்கு பொன்னாலை தாம்போதி ஊடாக பயணம் செய்யக்கூடிய(கரம்பன், ஊர்காவற்றுறை போன்று) வாய்ப்பான நிலையில் இருந்த ஏனைய தீவக மக்களும் காரைநகர் துறைமுகம் ஊடாக பயணங்களை மேற்கொண்டனர். காரைநகர் மக்கள் தமது பொருளாதார வளத்தை மேம்படுத்த, கல்வி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ள தாம்போதி அமைத்தமையின் மூலம் சந்தர்ப்பம் கிட்டியது.

எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கான படகுச் சேவை ஊர்காவற்றுறை துறைமுகத்தில் காலையில் ஆரம்பமாகும். யாழ் குடாநாட்டுப் பயணிகள் காரைநகர் துறைமுகத்துக்கு ஊடாக ஊர்காவற்றுறை துறைமுகத்திற்கு சென்று படகுகளில் தம் பயணங்களை தொடர்ந்தனர். மாலையில் மேற்படி தீவுகளில் இருந்து படகுகள் ஊர்காவற்றுறை துறைமுகத்துக்கு திரும்பும்.

நயினாதீவு உற்சவ காலத்தில் பெருமளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள்.காரைநகர் துறைமுகத்தில் இருந்து மோட்டார் படகுகளிலும்,மோட்டார்வள்ளங்களிலும் ஏறிக் கொள்வதற்காக ஒழுங்கு வரிசையாக அமைக்கப்பட்டவரிசைகளில் மக்கள் காத்திருப்பர். திரு. வீரப்பர் வேலுப்பிள்ளை சண்முகம்

(V.V.Shanmugam)  யாத்திரிகர்களுக்கான தாகசாந்தி ஏற்பாடுகளை செய்வதில்

முதன்மையானவர்.பக்தர்களின் போக்குவரத்துக்கு வசதியாக திருகோணமலை – மூதூருக்கு இடையிலான படகு சேவையை நடாத்திய திரு கே.கே. விசுவலிங்கம் அவர்களின் மோட்டார் படகுகள் சேவையில் ஈடுபடும்.

பௌத்த யாத்திரிகர்களின் புனித பூமியாக கருதும் நயினாதீவில் அமைந்துள்ள விகாரையை தரிசிப்பதற்கு பௌத்தர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர். கௌதமபுத்தர் நயினாதீவில் காலடி வைத்தமையால் நயினாதீவிற்கு யாத்திரை செய்வது தங்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்று எனக் கருதுகின்றனர்.நயினாதீவிற்குசெல்லும் பௌத்த யாத்திரிகள் தரித்து செல்வதற்கான யாத்திரிகர் மடம் (பன்சல) காரைநகர் துறைமுகம் பகுதியில் அமைந்திருந்தது. அழிவடையாமல் சேதமடைந்த நிலையில உள்ள இம்மடம் பின்நாளில்சீநோர்அபிவிருத்தித் திட்டத்தின்  உடமையாக்கப்பட்டது.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கிடையே பத்து பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வள்ளங்கள் (மச்சுவாய்) சேவையில் ஈடுபட்டன. காற்றின் விசைக்கும், திசைக்கும் அமைவாக ஒருவர் அல்லது இருவர் வள்ளத்தினை வலித்து (ஓட்டி) செல்வர் வள்ளம் சரியான திசையில் செல்வதை திசைப்படுத்தும் கருவியை (சுக்கான்) அனுபவம் மிக்க பயணி கையாள்வார். இரு துறைமுகங்களின் கரைகளிலும் வள்ளங்கள் தமது பயண நேரம் வரும் வரை தரித்திருக்கும்.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் இருகரைகளிலும் படகுகள், வள்ளங்கள் அணைப்பதற்கு (கரை சேர்ப்பதற்கு)பாதுகாப்பான வௌ;வேறு இறங்கு துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு அண்மிய பகுதியில் பயணிகள் தங்குவதற்கான இறங்குதுறை பயணிகள் தங்குமடம் அமைக்கப்பட்டு இருந்தது. காரைநகர் துறைமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இறங்குதுறை பயணிகள் மடம் அழிந்து விட்டது. ஊர்காவற்றுறை பகுதியில் இறங்குதுறை பயணிகள் மடம் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மழை வெய்யில் காலநிலைகளில் பாதுகாப்பாக இருந்து தங்கள் பயணங்கள் ஆரம்பிக்கும் வரை இயற்கையின் எழிலை இரசிப்பதற்கு இறங்கு துறை பயணிகள் மடங்கள்  வாய்ப்பாக அமைந்தது.

ஊர்காவற்துறையில் அழிந்த நிலையில் உள்ள இறங்கு துறை பயணிகள் மண்டபம்

ஆரம்ப காலத்தில் மனிதர்களால் உழக்கிச் செல்லும் பாதை காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டது. பின்னாளில் இயந்திர பாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. ‘மாருதப்புரவி’ எனும் வசதி மிக்க பெரிய இயந்திர பாதை சேவையில் ஈடுபட்டது. மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் வண்டிகள், மாட்டு வண்டிகள் என்பனவற்றை ஏற்றிச் செல்லவும் பாதையின் சேவை வழி செய்தது.

15th Januaray 1908 – The Karaitivu Ferry opened for traffic and the horse boat commenced to ply ( Notes on Jaffna John.H.Martyn)

காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களுக்கிடையிலாக சேவையில் ஈடுபடும் பாதை, மச்சுவாய்களும் காணப்படுகின்றன

காரைநகர் விவசாயிகள் தீவுப்பகுதியில் மாட்டெரு கொள்வனவு செய்து மாட்டுவண்டில்களில் ஏற்றி பாதையில் காரைநகருக்கு கொண்டு வருவர். காரைநகரில் பயிரிடப்படும் கத்தரிக்காய், அரிசி என்பன் திருக்கல் வண்டில்களில் ஊர்காவற்றுறை சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும். தீவகப்பகுதிகளில் வெட்டப்படும் பூவரசு  மர இலைகளை கட்டுக்கட்டாக்கி வண்டில்களில் ஏற்றி பாதை ஊடாக மருதனார்மடம் பகுதி தோட்டங்களின் பசளைத் தேவைக்காக எடுத்துச் செல்லப்படும்.

காரைநகர் துறைமுகம் ஊடாக பயணிக்கும் பயணிகள்  மாட்டு வண்டி தொடர் அணிகள் இளைப்பாறிச் செல்வதற்கான வசதியை காரைநகர் கிழக்கு வீதியில் விளானைப்பகுதியில் வாழ்ந்த திரு அம்பலவாணர் இராசரத்தினம் ஏற்பாடு செய்திருந்தார். இராசரத்தினம் அவர்களின் வீட்டிற்கு செல்லும் வாயிற் கதவுகள் கூரை இடப்பட்டு ஓலையினால் வேயப்பட்டு இருந்தது. வீதிப்பக்கமாக கதவுகளின் இரு பக்கமும் படுத்து உறங்கக்கூடிய,ஆறி அமர்ந்து இருக்கக்கூடிய சீமெந்திலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

திரு அ. இராசரத்தினம் அவர்களின் வீட்டின் படலையும் ஓய்வெடுப்பதற்கான படிக்கட்டுக்களும்

வீட்டு வளாகத்தில் நன்னீர் கிணறு அமைந்திருந்தது. தண்ணீர் அள்ளிக் கொள்வதற்காக துலாவும் மாட்டுத்தொட்டிகளுக்கு தண்ணீர் இறைப்பதற்கான கட்டுமானங்களும் அமைக்கப்பட்டிருந்தது மாடுகள் நீர் குடிப்பதற்கான நீர் தொட்டி ஆவுரோஞ்சி, சுமை தாங்கி என்பன இவ் இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

 

மாடுகள் நீர் குடிப்பதற்கான தண்ணீர்த்தொட்டி

1950களின் பிற்பகுதி வரை தீவகத்தின் போக்குவரத்தின் மையப்புள்ளிகளாக ஊர்காவற்றுறை காரைநகர் துறைமுகங்கள் திகழ்ந்தன. தீவுக்கு உள்ளும்,தீவுப்பகுதிகளுக்கும் குடாநாட்டிற்கும் இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தீவுப்பகுதி மக்கள் மேற்கொண்ட வினைத்திறன் மிக்க முயற்சிகளால்தங்கள் போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்தனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த ஒன்ற விட்ட சகோதரர்களான சண்முகம் அம்பலவாணரினதும், கந்தப்பு      அம்பலவாணரினதும் இடைவிடாத முயற்சியினால் 1954இல் புங்குடுதீவுக்கும் வேலணைத்தீவுக்கும் இடையிலான தாம்போதி பாவனைக்கு வந்தது. இவர்களின் நினைவாக இன்று வரை வாணர் தாம்போதி என்று இப்பாலம் அழைக்கப்பட்டு வருகின்றது. தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு அல்பிரட் தம்பிஐயா மூலம்  அரசின் ஆதரவைப் பெற்றனர்.

1950களில் மாருதப்புரவீகவல்லி எனும் இயந்திர பாதை பண்ணைக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டது. 1961 ஆம் ஆண்டு பண்ணைப்பாலம் மக்கள் பாவணைக்கு திறந்து விடப்பட்டது.

1958 ம்ஆண்டு புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை சேவைக்கு வந்தது. நெடுந்தீவு, நயினாதீவு மக்கள் தங்கள் பயணங்களை குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆரம்பித்தனர். நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், யாத்திரிகர்களும் தங்கள் பயணங்களை குறிகாட்டுவான் துறையில் இருந்து ஆரம்பித்தனர்.ஊர்காவற்றுறை  துறைமுகத்தில்  இருந்து நயினாதீவிற்கான கடல்ப்பயணம்  75மூ  ஆகவும் நெடுந்தீவிற்கான பயணம் 50மூ ஆகவும்; குறைந்தது.

1972ம் ஆண்டு தீவகம் தீவுப்பகுதி வடக்கு, தீவுப்பகுதி தெற்கு என இரண்டு

காரியாதிகாரிகள் பிரிவாக (D.R.O.Office) பிரிக்கப்பட்டன. தீவுப்பகுதி தெற்கு    காரியாதிகாரி அலுவலகம் வேலணை வங்களாவடிச்சந்தியில் இயங்க ஆரம்பித்தது போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்  காரணமாக தீவகமக்கள்இலகுவில் பயணம் செய்யக்கூடிய வேலணை வங்களாவடி சந்தியில் ஏனைய அரச காரியாலயங்களும் நிறுவப்பட்டன. எனினும் நீதிமன்றம் காவல்துறை பணிமனை ஊர்காவற்றுறையில் இயங்கின. தீவகப்பகுதிவடக்குபிரதேச செயலகம் வங்கிகள் ஏனைய அரச காரியாலயங்கள் ஊர்காவற் துறையில்

இயங்கின. மேற்சொல்லப்பட்ட மாற்றங்களினால் ஊர்காவற்றுறை வரலாற்று காலங்களில் துறைமுக நகரம், தீவகத்தின் தலைமையகம் என பெற்றிருந்த  சிறப்பு அந்தஸ்தை இழந்தது.

சீநோர் அபிவிருத்தித் திட்டம் – Cey- Nor Development Project

வர்த்தக செயற்பாடுகளினால் துறைமுக பட்டினம் ஒன்றினை காரைநகர் தன்னகத்தே வைத்திருந்து பெற்றிருந்த சிறப்பு நிலை மெதுவாக மறைந்து செல்ல சீநோர் அபிவிருத்தித் திட்டத்தின் வருகையினால் மீண்டும் காரைநகர் பொருளாதார வலுவுள்ள முயற்சியாண்மை மிக்க துறைமுக பட்டினம் ஒன்றினை தன்னகத்தே வைத்துள்ளது எனும் அந்தஸ்து பேணப்பட்டது.

உணவுத் திணைக்களத்தின் உணவுக்களஞ்சியங்கள், சுங்க திணைக்கள அலுவலகங்கள், பௌத்த யாத்திரிகள் தங்கும் விடுதி ஆகிய இடங்கள் சீநோர் அபிவிருத்தித் திட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

1967 ம் ஆண்டின் ஆரம்பத்தில் சீநோர் மாலுமீன் நிறுவனம்; (MALLU MEEN ENTERPRISES) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு; இயங்கியது.1970ம் ஆண்;டு நோர்வே நல்லொழுக்க இளைஞர் இயக்க (NORWAY GOOD TEMPLER ORGANISATION) தலைவரின் வருகையின் பின்னர் சீநோர் அபிவிருத்தி திட்டம்  (CEY NOR DEVELOPMENT PROJECT) எனும் பெயர் மாற்றம் பெற்றது.

மதுஒழிப்பு, சகோதரத்துவம், கிராமங்கள் அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என்பனவற்றை அடைவதற்கான இலக்குகளுடன் நல்லொழுக்க இளைஞர் இயக்கம்  (GOOD TEMPLER ORGANISATION) பணி ஆற்றியது. காரைநகரின் அயல் ஊர்களில் அமைந்திருந்த சிறிய பின் தங்கிய கிராமங்களும் மேற்சொல்லப்பட்ட இலக்குகளை எய்துவதற்கான பணிப்பிரதேசமாக உள்வாங்கப்பட்டது.

1968ம் ஆண்டு கப்பல் கட்டும் தளம் (BOAT YARD) அமைக்கப்பட்டது. கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் இழை நாரிலான படகுகள் (FIBRE GLASS BOAT) மயிலிட்டி, வல்வெட்டித்துறை சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து படகுகளை கொள்வனவு செய்ய வருபவர்களுக்கு ஜயாயிரம் ரூபா பெறுமதியான படகுகள் மூவாயிரம் ரூபாவிற்கு மானிய விலையில் விற்கப்பட்டது.

1975ம் ஆண்டளவில் கடல் உணவு பதனிடல் (நண்டு,இறால்) பகுதி ஆரம்பிக்கப்பட்டது. காரைநகரிலும் அயல் ஊர்களிலும் இருந்து வருகை தரும் பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இங்கு பதனிடப்பட்ட நண்டுகள் பொதி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஏற்றுமதி செய்யப்பட்டது. சீநோரின் தேவைக்காக ஜஸ் உற்பத்தி (ICE PLANT) ஆரம்பிக்கப்பட்டது. தனியாருக்கும் ஜஸ் விற்கப்பட்டது. இக்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட (Paro Cement) படகு கட்டும் திட்டம் வெற்றி அளிக்கவில்லை. இரண்டு முதல் ஜந்து தினங்கள் கடலில் தரித்து நின்று மீன் பிடிக்கும் இழுவைப் படகுகள் (Trawler) ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடுத்தப்பட்டன. இழுவைப்  படகுகளை கரை சேர்ப்பதற்கான இறங்கு துறை காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டது. ஆழ் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கொழும்பிற்கு பார ஊர்திகளில் அனுப்பி வைக்கப்பட்டது. உள்ளுர் நுகர்வோருக்கான மீன் விற்பனை நிலையம் சீநோர் வளாகத்தில் செயற்பட்டது. தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின்; குடும்பத்தின் நாளாந்த தேவைகளுக்கான மீன் பொதி இடப்பட்டு பணி முடிந்து வீடு செல்லும் போது எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக காவலர் அறையில் (guard room) வைக்கப்படும்.

சிறுவர் பாதுகாப்பு நிதியம் நோர்வே, சுவீடன் (Save the children, Norway,Sweden) ஆகியன இணைந்து RED BANA 1975ல் சுகாதார நிலையம் (Health Centre) ஆரம்பிக்கப்பட்டது. கிரமமாக clinic நடாத்தி கர்ப்பிணி பெண்களை பரிசோதித்து ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. இரண்டு நோயாளர் காவு

வண்டி (Ambulance) வழங்கப்பட்டது. நல்லொழுக்க இளைஞர் இயக்க (Good Templer Organisation) குளோப் நூலகம் சீநோர் தொழிற்சாலைக்கு அண்மிய பகுதியில் இயங்கியது.

தோப்புக்காடு, ஊரி,காரைநகரின் ஏனைய பகுதி மக்கள்,ஊர்காவற்றுறை,குடா நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியாற்றினார். 6.00-2.00,2.00-6.00,6.00-10.00 என்கின்ற மூன்று சுற்றில் தொழிற்சாலை இயங்கியது.

1981 ல் சீநோர் மீன் பிடி கூட்டுத்தாபனத்துடன்  (Fisherien Co-operation) இணைக்கப்பட்டது. கடல் உணவு(நண்டு,இறால்)பதனிடும் பகுதி தனியாருக்கு வழங்கப்பட்டது. வென்னப்புவையிலும்,மாத்தறை பொல்காகமுல்லை எனும் இடங்களிலும் வலைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.கொழும்பு முகத்துவாரப்பகுதிக்கு கப்பல் கட்டும் தளம் மாற்றப்பட்டது.மேற்சொல்லப்பட்ட செயற்பாடுகள் காரணமாக சீநோர் ஸ்தாபனத்திற்கு இறங்கு நிலை ஏற்பட்டது.

சமூக சேவை பகுதியும் ஏனைய செயற்பாடுகளும் தொடர்;ந்து இயங்கியது.1981ல் ஊழியர்களுக்கு கட்டாய வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டது. 600 பேர் சுயமாக வேலையை விட்டு விலகிச் சென்றனர்.

1985ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படை முகாம் மீது தாக்குதலை தொடர்ந்து தோப்புக்காடு கிராம மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர். துறைமுகப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியது. தொடர்ந்து வந்த சீரற்ற நிலைமைகளால் சீநோர் அபிவிருத்தித் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது கட்டப்பட்டு வரும் சினோ கப்பல் கட்டும் தளம்

 

காரைநகர் துறைமுகப் பகுதியில் இயங்கிய நிறுவனங்கள்

  1. 1780ம் ஆண்டு கட்டப்பட்ட கனகசபைபிள்ளை மடத்தில் 1928 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காரைநகரின் முதலாவது கிராம சபை இயங்கியது.சிறிது காலம் செல்ல கிராம சபை மடத்து வளத்தில் தனது சொந்த கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்தது.
  2. துறைமுகம் உப தபாற் கந்தோர் கனகசபைப்பிள்ளை மடத்தில் இயங்கியது.
  3. காரைநகருக்கும் ஏனைய தீவுகளுக்கும் பங்கீட்டு அடிப்படையில் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகிக்கும் அரிசி மூட்டைகள் சேமித்து வைக்கப்படும் அரசாங்க உணவுத்திணைக்கள பண்டகசாலை இயங்கியது.
  4. காரைநகர் மக்களுக்கு பதினாறு கிளைகளுடன் இலாபத்துடன் இயங்கி சிறந்த பணியாற்றிய காரைநகர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பணிமனையும் பண்டகசாலையும் இயங்கியது.
  5. சுங்கத்திணைக்கள பண்டகசாலை
  6. சீநோர் அபிவிருத்தித் திட்டம்
  7. பௌத்த யாத்திரிகள் தங்கும் இடம்.
  8. குளோப் நூலகம் (Good Templer Organisation)

9.1966 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை சாலை

10.இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து பேருந்துகளின் சேவைகள் ஆரம்பிக்கும் நிறைவு செய்யும் இடம் (Bus Terminal)

 

காரைநகர் துறைமுகத்தில் இயங்கிய கடைத்தொகுதிகள்

சுறு சுறுப்பாக இயங்கிய காரைநகர் துறைமுகம், சீநோர் அபிவிருத்தித் திட்டத்தின்; வருகையினால் அதிகரித்த தொழிலாளர்களின் பிரசன்னம், போக்குவரத்து பகுதியாக இருந்தமையால் பயணிகளின் வருகை, நயினாதீவு திருவிழா காலங்களில் பக்தர்களின் வருகை, தென் இலங்கை பௌத்த யாத்திரிகளின் வருகை எனப் பல வித செயற்பாடுகளின் நிமித்தம்  வருகை தரும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கடைத்தொகுதிகள் காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைந்திருந்தன.

உணவகங்களும் தேநீர் சாலைகளும்

1.அப்பாத்துரை சைவக் கடை

2.சிறி தேவி கபே

3.மல்லிகா கபே

4.முருகன் கபே

5.உதய கிரி கபே

6.இராமையா தேநீர் சாலை

7.செல்லம்மா கந்தையா உணவகம்

8.பண்டா பேக்கரி

காரைநகர் துறைமுகத்தில் அமைந்திருந்த உணவகங்கள் தரம் வாய்ந்தவையாக இருந்தமையால் இவ் உணவகங்களிற்கு காரைநகரின் ஏனைய பகுதி மக்களும் உணவு பண்டங்களை கொள்வனவு செய்ய வருகை தருவார்கள்.

உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள்

  1. திரு. வெள்ளையர் ஆறுமுகம் கதிரவேலு
  2. திரு.வீ.வே.சண்முகம்
  3. திரு.தி. சிவலிங்கம்
  4. திரு..சு. இராசலிங்கம் உத்தரவு பெற்ற வியாபாரி
  5. ஊறைச்சார் ஆறுமுகம்
  6. புட்டுக்கட்டி கடை

 

 

1972ம் ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத் திணைக்களத்தின் வரைபடத்தின் படி துறைமுக பகுதி கடைத்தொகுதிகள்

 

வாரிவளவு நல்லியக்கச்சபை நீச்சல்போட்டிகள்

25 ஆண்டுகாலம் புதுவருட தினத்தை முன்னிட்டு வாரிவளவு நல்லியக்க சபையினரால் நடாத்தப்படும் போட்டிகளில் ஒன்றான நீச்சல் போட்டி நிகழ்ச்சியில் ஆண்களுக்கான போட்டிகள் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஊர்காவற்துறை துறைமுகம் வரையும் பெண்களுக்காக போட்டிகள் காரைநகர் துறைமுகத்திலிருந்து 100M வரையும் நடைபெறும் இப்போட்டிகளுக்கான பாதுகாப்பினை காரைநகர் கடற்படையினர் வழங்குவர்.

கடற்படை தளபதி நீச்சற்போட்டையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்றார்

 

ஹமன் ஹீல் கோட்டை

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே காணப்படுகின்ற நீரேரிப்பகுதி பாக்குநீரிணையோடு சந்திக்கும் மேற்குப் புற மேட்டு நிலத்தில் ஹமன் ஹீல் கோட்டை அமைந்துள்ளது. பெருங்கடலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான  கடல்வழி போக்குவரத்திற்கான இணைப்புப் பகுதியாக இருப்பதால் இப்பகுதி முக்கியத்துவம் பெறுகின்றது. போர்த்துக்கேயர் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த மணற்திட்டில் கோட்டை ஒன்றை கட்டினர்.

போர்த்துக்கேயர்ரும் ஒல்லாந்தரும் தமது மொழிப் பெயர்களை தாம் ஆட்சி செய்த பிரதேசங்களில் அமைந்துள்ள இடங்களுக்கு சூட்டினார். ஊர்காவற்துறையை ‘காயஸ்’ (Cays)  என்று அழைத்தனர். போர்த்துக்கேயர் இக்கோட்டையை ‘காயஸ்’  (Cays) என்றும் அரச கோட்டை (Fortaleza Real)என்றும் Fortalez do Rio  ஆற்றின் கோட்டை என்றும் அழைத்தனர்.

1658இல் டச்சுகாரர் யாழ்ப்பாண கோட்டையை கைப்பற்ற முன்னர் காரைநகர் கோட்டையை கைப்பற்றினர். ஒல்லாந்து போர்வீரர் காரை தீவுக்கரையில் இருந்து குண்டுகளை வீசியமையால் கோட்டைக்குள் இருந்த மரத்திலான தண்ணீர் தாங்கி உடைந்தமையால் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறை காரணமாக இருவார கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயர் சரணடைந்தனர்.

ஒல்லாந்தர் இலங்கையை பன்றியின் (Ham) வடிவில் இருப்பதாக கருதினார்கள் Ham இன் குதிக்கால் (காற்குழம்பு) பகுதியில் கடற்கோட்டை அமைந்திருப்பதாக எண்ணி Hammenhiel (Heel of the Ham) என அழைத்தனர்.

1795 ல் இக் கோட்டை எதிரி எதிர்ப்பு எதுவுமின்றி பிரித்தானியரின் வசமானது.

இக்கோட்டையை பூதத் தம்பி கட்டிய கோட்டை என்றும் கதையுண்டு

1930 களில் பொதுச்சுகாதாரம் கருதி தொழு நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையமாக இக்கோட்டை பயன்படுத்தப் பட்டது.1971 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்த ஜே.வி.பி இன் முக்கிய தலைவர்கள் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.தற்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையை பொது மக்கள் கடற்படையின் ஏற்பாட்டில் பார்வையிடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

1672 இல் பிலிப்ஸ் பால் டேய்ஸ் (Philip Baldaeus) என்பவரால் வரையப்பட்ட

காரைநகர் கடற்கோட்டையின் (Fort Hammenhiel) பறவைப்பார்வையில் வலது புறம் இருக்கும் காரைநகர் துறைமுகத்தில் பெரிய கப்பல் நிற்பதைக்காணலாம்.

 

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்குள் நீர் ஏரி ஊடாக வரும் கப்பல்கள் கடற்கோட்டையில் (Hammenhiel) முன் அனுமதி (பாஸ்) பெறல் வேண்டும் Jacob அவர்கள் தமது கப்பல் மதியம் இரண்டு மணிக்கு காரைதீவு வந்ததாகவும் அங்கிருந்து பாஸ் பெறுவதற்கு கடற்கோட்டையை மாலை 4 மணிக்கு அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் Jacob Haafner இன் நூலான Reize te voet door het eiland Ceilon எனும் நூலின் முதற்பக்கத்தில் உள்ள Hammenhiel கோட்டையின் படம்.

 

காரைநகர் துறைமுகமும் தோப்புக்காடு மக்களும்

காரைநகர் துறைமுகத்தின் வர்த்தக நடைவடிக்கைகளில்  தோப்புக்காட்டில் வாழ்ந்த மக்கள் பெரும் பங்கு வகித்தனர். தோணிகளில் ஆழ்கடல் தோறும் பல்வாணிபம் செய்யும் கடலோடிகளான தோப்புக்காட்டு மக்களின் வாழ்வாதாரம் கடலோடு சம்பந்தப்பட்டது. பல வகையான பொருட்களை ஏற்றிச் சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெரும் வர்த்தகர்களால் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட டிங்கி அல்லது சலங்கை (600 – 1000 தொன் சரக்கினை ஏற்றக்கூடியவை) எனும் கடற்கலங்கள் கடற்கோட்டைக்கு அண்மிய ஆழ்கடல் பகுதியில் நங்கூரமிட்டு தரித்து நிற்கும். டிங்கிகளில் எடுத்துவரப்பட்ட சரக்குகளை இறக்கி வத்தைகளில் ஏற்றி காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகப்பகுதியில் அமைந்திருந்த சுங்க திணைக்கள அலுவலங்களுக்கு எடுத்துச் சென்று பி;ன்னர் பண்டகசாலையில் ஒப்படைப்பர். சில சந்தர்ப்பங்களில் டிங்கிகளில் இருந்து

இறக்கப்படும் பொருட்களை யாழ்ப்பாண அலுப்பாந்தி துறைமுகத்திற்கும் ஏனைய தீவுகளுக்கும் எடுத்துச் செல்வர். தோப்புக்காட்டு மக்கள்  40 வத்தைகளை(20-40 தொன் ஏற்றக்கூடியது)சேவையில் ஈடுபடுத்தினர். தோப்புக்காடு வத்தை உரிமையாளர்கள் யாழ்ப்பாண பண்டக சாலையில் தீவகப் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக  மக்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்படும் பங்கீட்டு அரிசி மூட்டைகளை தமது வத்தைகளில் ஏற்றி அனைத்து தீவுகளுக்கும் விநியோகிப்பர். காங்கேசன்;துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்கும் பணிகளுக்கு வத்தைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் காங்கேசன்துறைக்கும் தோப்புக்காடு முருகன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் தமது  வத்தைகளை எடுத்துச் செல்வர்.

யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் வத்தைகளின் தேவைகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் தமது வத்தைகளை எடுத்துச் செல்வர். நீர்கொழும்பு சிலாபம் ஆகிய இடங்களுக்கு சென்று தேங்காய் ஏற்றி வருவார்கள். காரைநகர் துறைமுகத்திற்கும் தோப்புக்காட்டுமுனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 40 வத்தைகளும் நங்கூரமிடப்படும். தோப்புக்காடு பிரதேசத்தில் நாற்பது வத்தைகளும் சேவையில் ஈடுபடும் போது பணியாற்றக்கூடிய வலுவுள்ள ஆளணியினர் தோப்புக் காட்டில் வாழ்ந்தனர்.

‘ஏண் உற வாழ்பதி ஏற்றத் தோப்பகம்’ பெருமை பொருந்திய புகழ்மிக்க மக்கள் தோப்புக்காட்டின் கரையோரமாக வாழும் நெய்தல் நில மக்கள் என தோப்புகாட்டு மக்களின் சிறப்பினை ஈழத்துச்சிதம்பர புராணம் கூறுகிறது.

 

துறைமுகப்பகுதியும் வீட்டுத்திட்டங்களும்

மடத்துவளவு  வீட்டுத்திட்டம் :- 1982ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 40 வீடுகள் கட்டப்பட்டு மடத்துவளவில் வாழ்ந்ந மக்களுக்கு கையளிக்கப்பட்டது 1985ம் ஆண்டு துறைமுகப்பகுதியின் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இவ் வீடுகளில் வாழ்ந்ந மக்கள் வெளியேறினர்.

தோப்புக்காடு வீட்டுத்திட்டம் :- சீநோர் அபிவிருத்தித் திட்டத்தினால் 110 பரப்ப காணி கொள்வனவு செய்யப்பட்டு காணி வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது சுய உதவி வீட்டுத்திட்ட அடிப்படையில் கட்டிடப் பொருட்களை வீடமைப்பு அதிகார சபை வழங்க பயனாளிகள் வீடுகளைக் கட்டினர் 1978ம் ஆண்டு ஜீலை மாதம் சீநோர் அபிவிருத்தித் திட்ட நிதிக்குழு தலைவரால் வீடுகளுக்கான அத்திவாரம் இடப்பட்டது 1981ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதம மந்திரியும் வீடமைப்பு அமைச்சருமான கௌரவ ஆர். பிரேமதாசா அவர்களினால் பயனாளிகளுக்குக் வீடுகள் கையளிக்கப்பட்டது.

 

 

தோப்புக்காட்டு பகுதி மக்களுக்கு இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தின் கீழ் 2012 இல் 22 வீடுகளும், 2014 இல் 36 வீடுகளும் வழங்கப்பட்டது. நெய்தல் கிராம மக்களுக்கு அவுஸ்ரேலிய செஞ்சிலுவை சங்க நிதி உதவியுடன் 38 வீடுகள் வழங்கப்பட்டது

சாந்திபுர வீட்டுத்திட்டம் :- மடத்துவளவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக சாந்தி புரத்தில் போரூட் நிறுவன உதவியுடன் 30 வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது இவ்வீடுகள் யாவும் தற்போது அழிவடைந்த நிலையில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் தற்போது சயம்பு வீதியில் அமைந்துள்ள சேயோன் குடியிருப்பில் அவுஸ்ரேலிய செஞ்சிலுவைச்சங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 32 வீடுகளில் வசிக்கின்றனர்.

 

 

தந்திமால்

தோப்புக்காட்டு கிழக்கு முனையில் இக்கட்டிடம் அமைந்துள்ளது இப்பகுதி ஆழங்குறைந்த ஒடுங்கிய பகுதியாக இருப்பதால் தொலைத்தொடர்பு சேவைக்கான Cable கடலூடாக இப்பகுதிக்கு நேராக உள்ள ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்த முற்ப்பட்ட காலத்தில் தொலைத்தொடர்பு அலுவலர்கள் இங்கு பணியாற்றினார்.

 

 

 

 

 

1972ம்ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத்திணைக்களத்தின் வரைபடத்தின் படி தோப்பு காட்டுப் பகுதி

 

 

கடற்படைமுகாம்மீதான தாக்குதலும்கடற்படைமுகாம்விஸ்தரிப்பும்

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காரைநகரில் கடற்படைத்தளம் காரைநகர் துறைமுகத்தை அண்டிய நீலன்காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய இடத்தில் அமைந்திருந்த கடற்படை முகாம் கடற்படை முகாம் மீதான தாக்குதலை அடுத்து விஸ்தரிக்கப்பட்டது.ஆரம்ப காலத்தில் இருந்து கடற்படை முகாம் மீதான தாக்குதல் வரை மக்களின் இருப்பிடங்கள் கடற்படை முகாமின் அண்மிய பகுதிவரை இருந்தது.

1985 ஆம் ஆண்டு மாசி, வைகாசி மாதங்களில் இலங்கைத் தீவில் தமிழர்

தாயகம் ஒன்றினை அமைப்பதற்காக போராடிய போராளிக்குழுக்கள் கடற்படை

முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். முதலாவது தாக்குதலுக்குப் பின்னர் கடற்படை முகாமுக்கு அண்மிய பகுதியில் வாழ்ந்த எட்டுக் குடும்பங்களையும், இரண்டாவது தாக்குதலுக்குப் பின்னர் நீலன் காட்டு வீதியின் கடற்கரையில் இருந்து தெற்குபுறமாகவும் மேற்கு வீதியின் தெற்குபுறமாகவும்  கிழுவனை வாய்க்காலிலிருந்து வரும் மழை நீர் கடலுக்கு செல்லும் வாய்க்காலின் மேற்குப்புறமாக (இராசாவின் தோட்டம் , நீலன்காடு, பலகாட்டின் ஒருபகுதி) வாழ்ந்த 125 குடும்பங்களையும் கடற்படையினர் கடற்படை முகாம் பாதுகாப்புக்கருதி வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதற்கமைவாக மக்கள் வெளியேறினர்.

கடற்படை முகாமுக்கு வடக்கே மேற்கு பிரதான வீதியின் வடக்குப்பக்கமாகவும்

நீலன்காட்டு வீதியின் வடக்குப்பக்கமாகவும், சிறிய தூரம் வரை வசித்த மக்கள்

மடத்துவளவு 40 வீட்டுத்திட்ட வீடுகளில் வசித்த மக்கள், தோப்புக்காடு பகுதியில் வாழ்ந்த மக்களும் பாதுகாப்பக் கருதி  சுயமாக வெளியேறினர். மடத்துவளவில் இயங்கிய காரைநகர் தெற்கு கிராம சபை,தபாற்கந்தோர்,ஆகியன விளானையில் செயற்பட ஆரம்பித்தன.இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் பேரூந்துகளின் துறைமுகம் வரையிலான பேரூந்துக்களின் சேவை நின்று போயின நலிவடைந்த நிலையில் இருந்த சிநோர்  அபிவிருத்தித்திட்டம் துறைமுகப் பகுதியில் இயங்கிய வர்த்தக ஸ்தாபனங்கள் உட்பட அனைத்தும் செயல் இழந்தன. 1991ம் ஆண்டு ஏப்பிரல் மாத தாக்குதலின் பின் காரைநகர் துறைமுகப்பகுதி முற்று முழுதாக கைவிடப்பட்ட நிலைக்கு உள்ளானது.

 

 

1972ம் ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத்திணைக்களத்தின் வரைபடத்தின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது கடற்படை  பகுதி

 

 

கடற்படை முகாம் விஸ்தரிப்பினால் நின்று போன செயற்பாடுகள்

  1. விஸ்தரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டனர்.
  2. அரசர்கள் வாழ்ந்த தொல்லியல் பெறுமானம் மிக்க இராசவின் தோட்டம கடற்படையின் கட்டுப்பாட்டின்      கீழ் வந்தது
  3. தங்கோடை, கருங்காலி பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அனலைதீவு,எழுவைதீவு ஆகிய தீவுகளில் பனம் தோட்டங்கள் இருந்தன. அங்கிருந்த பனை ஓலைகள் கட்டுக்கட்டாக ஏற்றி வரப்பட்டு இராசாவின் தோட்டத்திற்கு பின்புறமாக உள்ள கடற்கரை பகுதியில் ஏலத்தில் விற்கப்படும் இவ் ஓலைகளை வீடு வேய்வதற்காகவும், வயல்களில் பசளையாகவும் பயன்படுத்தினார்கள்.
  4. நீலன் காட்டின் மேற்கு கரையோரத்தில் மீன்வாடிகள் அமைந்திருந்தன. இப்பகுதியில் மீன்பிடிப்பதற்கு சாதகமான காலநிலை உள்ள காலத்தில் ஐம்பது வரையிலான மீன் வாடிகள் இருந்தன. ஏனைய காலங்களில் பத்து வரையிலான மீன் வாடிகள் இருந்தன காரைநகரைச் சேர்ந்த திரு.ஆ.மகாலிங்கம் மயிலீட்டியைச் சேர்ந்த திரு.கேவி துரைசாமி ஆகியோர் கடற்தொழிலில் பல படகுகளை ஈடுபடுத்தி பிரபல மீன் வியாபாரிகளாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தனர். மீன் பிடிக்க சாதகமான காலநிலை உள்ள காலங்களில் இரண்டு பாரவூர்தி மீன்கள் நீலன் காட்டில் இருந்து தினமும் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படும். மீனவர்கள் தங்கள் உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்தாலும் இவர்களுக்கு

தேவைப்படும் மேலதிக உணவு, நீர் என்பனவற்றை வழங்குவதில் ஈடுபட்ட மக்களுக்கு நாளாந்த வருமானம் கிடைக்கப்பெற்றது.

  1. நீலன் காட்டின் தென்மேற்கு பகுதியில் கடலுக்குள் கப்பல்கள் திருத்தும் இடம் (Dock Yard) இருந்தது இவ் வேலைத்தளம் பொது வேலைத்தள திணைக்களத்தால் (Public Works Department) பராமரிக்கப்பட்டது.
  2. மயிலிட்டி, வல்வெட்டி ஆகிய இடங்களில் இருந்து வருகைதரும் கடற்தொழிலாளர்களின் வழிபாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது. இத் தேவாலயத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தமையால் ஊர்காவற்றுறை, பருத்தி அடைப்பு ஆகிய இடங்களில் இருந்தும் மக்கள் வழிபாடு செய்வதற்கு வருகை தருவார்கள்.
  3. பலுகாடு, கருங்காலி, துறைமுகம் தோப்புக்காடு பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கான மயானம் நீலன் காட்டுக் கடற்கரைக்கு அருகே அமைந்திருந்தது

 

காரைநகர் துறைமுகப்பகுதி அபிவிருத்திக்கான முன்மொழிவுகள்

2009ம் ஆண்டு மே 19ம் திகதி போர்முடிவுக்கு வந்தபின் சுமுகமான நிலை தோன்றியுள்ளது. தற்போது காரைநகர் துறைமுகப் பகுதி மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது. தோப்புக்காடு மக்களில் ஒரு பகுதியினர் மீ;ளகுடியேறியுள்ளனர் துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கும் வீதிக்கு கிழக்குப்புறமாக உள்ள கடைத் தொகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. கடலில் தரித்து நின்று மீன்பிடிக்கக் கூடிய கப்பல்களை கட்டும் தளத்திற்கான (Boat Yard)  தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் துறைமுகம் வரையிலான சேவையில்  ஈடுபடுகின்றன. தோப்புகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு வீட்டுத்திட்ட வீடுகளை புனரமைப்பதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட வேண்டும். நெய்தல்,தோப்புக்காடு, சாந்திபுரம், வீட்டுத்திட்ட மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அரச நிதி ஒதுக்கப்படல் வேண்டும். கடலோடிகளாக வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த பட வேண்டும்.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும். காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையிலான தாம்போதி அமைக்கப்படல் வேண்டும். திட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு உள்ள போதிலும் தேவையான நிதி ஒதுககுவதில் காலதாமதம் இடம் பெறுகின்றது.

தாம்போதி அமைக்கப்படுவதன் மூலம் மக்களின் குறிப்பாக அரச பணியாளர்களின் போக்குவரவு இலகு படுத்தப்படும். அரச பணியாளர்கள் விருப்புடன் தீவுப்பகுதிக்கு பணிக்கு செல்வர். நயினாதீவிற்கு செல்லும் யாத்திரிகர்களும் ஏனைய சுற்றுலாப்பயணிகளும் ஒரே தினத்தில் காரைநகர் கசூரினா கடற்கரைக்கும் வருகை தரலாம். காரைநகர் ஊர்காற்றுறை பகுதி மீண்டும் மக்கள் பாவனைக்கு உள்ளாகும்.

கடற்படையின் பாதுகாப்புக் கருதி சுவீரிக்கப்பட்ட மடத்து வளவுப் பகுதியில்

பிரதான வீதியின் மேற்குப் புறமாக குறிப்பிட்ட தூரத்திற்கு பாதுகாப்பு வேலிகளை

பின்னகர்த்துவதன் மூலம் கடந்த காலத்தைப் போன்று இரு பக்கமும்

கடைத்தொகுதிகள் அமைந்து எடுப்பான தோற்றத்தை துறைமுகப்பகுதிக்கு வழங்கும்

கடந்த காலங்களில் வரலாற்று பெருமைக்குரிய இடங்களின் பெறுமானங்களை உணர்ந்து அபிவிருத்தி     செய்தல் அவசியம்.

தமிழினத்தின் வாழ்வியலை, நம் முன்னோரின் வாழ்வியல் சிறப்பினை நமது எதிர்கால சந்ததியின் அறிதலுக்கு அல்லது ஆவணப்படுத்தலுடன் நின்று விடாது அந்த யுகத்தை மீளுருவாக்கம் செய்வது இன்றைய வளர்ந்த தலைமுறையின் பணியாகும்.

பொருளாதாரத்தை வழங்க வல்ல கடல் வளம் நம் கைகளை நழுவிச் செல்கிறது. மரபு வழி கடற் தொழிலை நம்பி வாழ்பவருக்கு அறிவியல் பெற்றுஎடுத்த வாய்ப்புக்களை வழங்கி அவர் தம் வாழ்வை மேம்படுத்தவேண்டும்

ஒரு தலைமுறையின் காட்சியாக இருந்தவை இன்று கனவாகி கடந்து கானல் நீர் ஆக முன்னர் விரைந்து செயற்படல் காலத்தின் கட்டாயம்.

 

எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவினைக் காணும் களபூமி சனசமூக நிலையம்

 

எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவினைக் காணும்

களபூமி சனசமூக நிலையம்

எஸ்.கே.சதாசிவம்

ஒரு சமூகத்தின் அங்கத்தவர்கள் சமூகத்தின் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்காகவும் சமூகம் சார்ந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பொதுவான தகவல்களைப் அறிந்து கொள்வதற்காகவும் ஒன்று சேருமிடம் சனசமூக நிலையம் ஆகும். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பின்னர் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்க்கு சனசமூகநிலையங்கள் வகை செய்கின்றன.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் இயங்குகின்ற பதினாறு சனசமூக நிலையங்கள் காரைநகர் பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. களபூமி சனசமூக நிலையம் பதினாறு சனசமூக நிலையங்களில் பழமை வாய்ந்தது எனக் கருத இடமுண்டு.

களபூமி சனசமூக நிலையம் 1949ம் ஆண்டளவில் காரைநகர் இந்துக் கல்லுரியில் பௌதீக கணித ஆசிரியராக கடமையாற்றிய திரு.பொ.சங்கரப்பிள்ளை எழுதுவினைஞராக கடமையாற்றிய திரு.பொ.சோமசுந்தரம் ஆகியோருடன் இணைந்து செயலாற்றிய இளைஞர் குழாத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்துக்கு அருகாமையில் பலகையினால் அமைக்கப்பட்ட மேற்தளத்தை உடைய கட்டிட தொகுதியில் சன சமூக நிலையம் இயங்கியது. இக் கட்டிட தொகுதி அமைந்திருந்த சுற்றாடல் அன்றைய கால கட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது. இக் கட்டிட தொகுதியில் சோமு ஐயர் என்பவருடைய பிரபல்யமான ஆடை விற்பனை நிலையம் உபதபாற் கந்தோர், புத்தகக்கடை, பலசரக்குகடை, துவிச்சக்கரவண்டி திருத்தகம், சன சமூக நிலையம் என்பன இயங்கின.

அன்றைய காலகட்டத்தில் களபூமியின் ஏனைய குறிச்சிகளில் குறிப்பிட்டுக் சொல்லக் கூடிய பலசரக்கு கடைகள் இல்லாமையால் அனைத்து மக்களும் இக் கடைகளுக்கு வருவது வழமையாக இருந்தது. திரு.கார்த்திகேசு உபாத்தியார் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய காலப் பகுதி. க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தமிழ் மொழியில் தோற்றவிரும்புகின்ற காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் கல்வி கற்றனர். திரு.கார்த்திகேசு உபாத்தியார் காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் காத்திரமான கல்விப்பணி ஆற்றியது.

சன சமூக நிலையத்தில் பத்திரிகைகள் வாசிப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தன. ஆங்கிலப் பத்திரிகைகளும் வாசிப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நுககொடையில் வர்த்தக ஸ்தாபனம் நடாத்தி வந்த களபூமி கொம்பாவோடையை சேர்ந்த திரு.க.ஆறுமுகம் அவர்கள் கொழும்பில் வெளியாகும் தினசரிப்பத்திரிகைகளை வாசித்தபின் அன்றே தபாலில் சேர்ப்பதாகவும் மறுதினம் சனசமூக நிலையத்திற்க்கு வந்து சேர்வதாகவும் குறிப்பிட்டார்.

அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் தபால் அமைச்சராக பதவி வகித்த திரு.சிற்றம்பலம் சன சமூக நிலையத்திற்க்கு வானொலி ஒன்றை அன்பளிப்பு செய்தமையால் வானொலி கேட்பவர்களும் சனசமூக நிலையத்துக்கு வருகை தந்தனர்.

காரைநகர் இந்துக்கல்லுர்ரி பழைய மாணவர் சங்கத்தால்  சித்திரை விடுமுறை காலத்தில் காரைநகர் இந்துக் கல்லுரி மைதானத்தில் நடாத்தப்படும் அகில காரைநகர் மெய்வல்லுனர் போட்டிகளில் சனசமூக நிலைய இளைஞர்கள் பங்குபற்றினர்.கரப்பந்தாட்ட விளையாட்டுத்திடல் சனசமூக நிலையத்திற்குபின்புறம் அமைந்திருந்தது.வேதர்அடைப்பு இளைஞர்களுடன் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.தெருவடிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மிய பகுதியில்மாலை வேளைகளில் உதைபந்தாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுவர்.பொன்னாவளை,சத்திரந்தை என இரு அணிகளாக விளையாடியதாகவும் வலந்தலை அணியுடனான போட்டிகளில் களபூமி அணி என பங்குபற்றியதாக பொன்னாவளையை சேர்ந்த திரு.கந்தர் நடராசா குறிப்பிட்டார்.304எனஅழைக்கப்படும் விளையாட்டு விளையாடவும் சனசமூக நிலையத்தில் வசதி இருந்தது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வர்த்தகம் செய்யும் களபூமி வர்த்தகர்கள் அரச அலுவலர்கள் காரைநகருக்கு வருகை தரும் பொழுது சனசமூக நிலையம் அவர்களின் ஒன்று சேரும் இடமாகவும் பொழுது போக்கு இடமாகவும் அமைந்திருந்தது.சன சமூக நிலையம் வெளியூர் சென்றவர்களுக்கும் உள்ளுரில் வாழ்ந்தவர்களுக்கும் இடையே உறவுகள் மேம்பட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இக் காலப்பகுதியில் களபூமியில் நாடாளாவிய ரீதியில் வெற்றி பெற்ற வணிகர்களாகவும், தொழிற் பண்பாட்டாளர்களாகவும் பலர் காணப்பட்டனர்.சட்டத்துறை வல்லுனர்கள் புகழ் பெற்ற விவசாயிகள் என பல்வேறு முயற்சிகளிலும் முன்னிலையில் நின்றவர்கள் களபூமியில் வாழ்ந்தனர்.களபூமி எனும் ஊர் பெயர் அப்பகுதியின் உயர் அந்தஸ்தை குறித்து நிற்பதாக அம் மண்ணின் மைந்தர்கள் கருதுகின்றனர்.அன்றைய தலைமுறையின் ஞாபகங்கள் உயர் அந்தஸ்த்துக்கு உரித்துடையவர்கள் என்பதை கூறி நிற்கின்றது.

உலகத்தை பாதுகாக்கும் உணவு தரும் உழவுத் தொழில் செய்வோரும், அரச உத்தியோகங்கள் பெற்று வாழ்வோரும்,வியாபாரத்துடன் ஒப்பந்தத் தொழிலையும் செய்து, நல்ல பழக்கவழக்கங்களை கைவிடாது கடைப்பிடித்து வாழ்பவர் செல்வம் கொழிக்கும் களபூமியில் வாழ்பவர் என ஈழத்து சிதம்பர புராணத்தில் புலவர்மணி சோ.இளமுருகனார் குறிப்பிட்டுள்ளார்.

1960 களில் களபூமி சனசமூக நிலையத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. திரு. க.அமிர்தசிங்கம் அவர்கள் தலைமையில் திரு.க.சபாரத்தினம்(V.C) ஆகியோரை உள்ளடக்கிய இளைஞர் குழாம்  சனசமூகநிலைய நிர்வாகத்தை பொறுப்பேற்றுக் கொண்டது. சனசமூகநிலையம் தொடர்ந்தும் அக்கட்டிடத்திலேயே இயங்கியது.உபதபாலகம் விளானையில் இயங்க ஆரம்பித்தது.களபூமியின் ஏனைய குறிச்சிகளில் கடைகள் ஆரம்பிக்கப்பட்டமையால் சனசமூகநிலைய கட்டடத்தில் இயங்கிய கடைத் தொகுதிகள் முக்கியத்துவத்தை இழந்தன.கரப்பந்தாட்டம் தொடர்ந்தும் சனசமூக நிலையத்தின் பின் பகுதியில் விளையாடப்பட்டு வந்தது.

சனசமூக நிலைய நிர்வாகிகள் கல்வி சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்தினர்.சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வளர்ச்சியில் பங்குபற்றினர்.மக்களின் அறிவையும்,அறிவுத் தேடலையும் வலுவூட்டுவதற்காக கலைநிகழ்வுகள் பட்டிமன்றங்களை சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் நடத்தினர்.திக்கரை,நந்தாவில் பாலர் பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு உழைத்தனர்.

1970 களில் காரைநகரும் காரைநகரின் மக்களின் வாழ்வும் முன்னோக்கி நகர்ந்த காலமாகும். 1970 களில் சனசமூகநிலையங்கள் விளையாட்டுக் கழகங்கள் மீள் எழுச்சி பெற்றதுடன் புதிய அமைப்புக்களும் உருவாகின.1970 களின் ஆரம்பகாலப் பகுதியில் சனசமூக நிலையத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.சனசமூகநிலையத்தை தெருவடிபிள்ளையார் கோவில் பகுதியில் இயங்க வைப்பது பொருத்தமானது எனக் கருதிய சனசமூகநிலைய நிர்வாகிகள் தெருவடிபிள்ளையார் கோவிலில் அமைந்திருந்த கொட்டாஞ்சேனை வர்த்தகர் திரு.வேலுப்பிள்ளையின் கட்டிடத்தில் இயக்க ஆரம்பித்தனர்.

தெருவடிப்பிள்ளையார் கோவில் பகுதியில் காரைநகர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக கட்டிட தொகுதி ஒன்று அமைக்கபட்டது.சனசமூகநிலைய நிர்வாகிகள் கட்டிட தொகுதியில் ஒரு பகுதியை சனசமூகநிலைய பயன்பாட்டிற்க்கு தந்து உதவுமாறு வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும்,காரைநகர் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான திரு.ஆ.தியாகராசாவிடம் வேண்டுகோள் ஒன்றை சமர்பித்தமையை  ஏற்று கட்டிடத்தின் கிழக்குப் பகுதியை பயன்படுத்த அனுமதி வழங்கினார் இன்று வரை இக் கட்டிடத்தில் சனசமூக நிலையம் இயங்கி வருகின்றது.

இக் காலப்பகுதியில் களபூமியின் அனைத்து குறிச்சிகளிலும் இருந்து சனசமூக நிலையத்துக்கு வருகை தரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. கரம்,சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்கள் கரபந்து,உதைபந்து, துடுப்பாட்டம்,சைக்கிள் ஓட்டம், மெய்வல்லுனர் நிகழ்வுகள் போன்று அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றும் திறன் வாய்ந்த இளைஞர்கள் சனசமூக நிலையத்தில் இணைந்து இருந்தனர். இளைஞர்களின் எதிர்பார்புக்களை நிறைவு செய்யக்கூடிய பொழுது போக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவை சனசமூகநிலைய நிருவாகிகளுக்கு ஏற்பட்டது.

சனசமூக நிலையத்தினை இயக்குவதற்க்கு தேவையான நிதியை தேடிக் கொள்வதற்காக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடாத்தினார்.திக்கரை முருகமூர்த்தி ஆலய உற்சவ காலங்களில் ஆலய வளாகத்தில் தேநீர் சாலையை நடாத்தினர் சனமூக நிலையத்திற்கான நிதியினை கையாள்வதற்க்கு வங்கிக் கணக்கு ஒன்றினை ஆரம்பித்தனர்.

தினசரிப் பத்திரிகைகள் சனசமூகநிலையத்தில் கிடைக்கப்பெற்றது.தினசரிப்பத்திரிகைகள் இடுவதற்க்கும் ஏனைய தேவைகளுக்குமான தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.உள்ளக விளையாட்டிற்கும் ஏனைய விளையாட்டுகளுக்குமான உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டன.

சனசமூகநிலையத்திற்க்கு சொந்தமாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்க்கு களபூமி ஆலடிப் பகுதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டது.அக் காணியின் அயலவர்கள் அக் காணியை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியமையால் அக்காணி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இளைஞர்கள் ஓவ்வொரு காலங்களுக்கும் ஏற்ப விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினர்.பாலாவோடை அம்மன் ஆலயத்துக்கு செல்லும் வீதியில் கிழக்கு வீதிக்கு அண்மிய தரவை பகுதியிலும,திக்கரை முருகன் ஆலயத்துக்கு செல்லும் வீதியில் கிழக்கு வீதிக்கு அண்மிய தரவை பகுதியிலும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுப்பிரமணியம் வீதி வயல் பகுதிக்கு அண்மிய சத்திரந்தை பகுதியில் காணப்பட்ட காணியில் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டனர்.சுந்தரமூர்த்தி நாயனார்ஆரம்ப பாடசாலையின்(ஆலடி) முன் பகுதியில் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டனர்.பத்திரிகை வாசித்து முடிந்த பின்னர் இளைஞர்கள் தமக்கு பிடித்தமான விளையாட்டு திடலுக்கு செல்வர்.

சனசமூகநிலையத்துடன் தொடர்புடைய இளைஞர் குழாம் ஒன்று எந்தவொரு விளையாட்டிலும் ஈடுபடாது  தெருவடிப் பிள்ளையார் ஆல மர சுற்றாடலில் அமர்ந்து இருப்பர்.அங்கு அனைத்து விடயங்களும் கலந்துரையாடப்படும்.சனசமூகநிலையத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பக்கபலமாக இருப்பர்.

1982 ஆம் ஆண்டு களபூமி சனசமூகநிலையம் தனது 33வது ஆண்டு விழாவை கலை நிகழ்வுகள,விளையாட்டு நிகழ்வுகளுடன்  சிறப்பாக கொண்டாடியது. காரை விளையாட்டுக் கழகம,கோவளம் விளையாட்டுக் கழகம்,சோலையான் விளையாட்டுக் கழகம்,வியாவில் விளையாட்டுக்கழகம்,நீலிப்பந்தனை அம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகிய ஐந்து விளையாட்டுக் கழகங்களின் சார்பில் பங்கு பற்றிய பத்து உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே இரண்டு வாரங்களாக காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில்உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது.சைக்கிள் ஓட்டப் போட்டி,வீதி ஓட்டப்போட்டி என்பனவும் நடைபெற்றன.

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் நடைபெற்ற 33 வது ஆண்டு விழாவின் பரிசளிப்பு,கலை நிகழ்வுகளிற்கு ஊர்காவற்றுறை மக்கள் வங்கி முகாமையாளர் திரு.கதிர்வேலாயுதபிள்ளை பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

வாரிவளவு நல்லியக சபையின் புதுவருட விளையாட்டு நிகழ்வுகளிலும், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவில் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளிலும்  களபூமி சனசமூக நிலையம்  தனி அணியாக பங்குபற்றும் வீரர்களை தன்னகத்தே கொண்டுயிருந்தும் காரை விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து பங்குபற்றினர்.களபூமி சனசமூக நிலைய இளைஞர்கள் சைக்கிள் ஓட்டம்,உதைபந்தாட்டம,துடுப்பாட்டம் மெய்வல்லுனர் நிகழ்வுகளிலும் பங்குபற்றி காரை விளையாட்டுக் கழகத்திற்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்தனர்.

இக்காலப் பகுதியில் காரைநகரின் சமூக வலுவில் களபூமி காத்திரமான வகிபாகத்தை கொண்டிருந்தமைக்கு களபூமி சனசமூகநிலையத்தில் இணைந்திருந்த கட்டுப்பாடான,விசுமார்த்தமான இளைஞர் குழாம் அடித்தளமாக அமைந்திருந்தது.காரைநகரின் சமூக நிறுவனங்கள் வினைத்திறன் மிக்கதாக, சமூகம் எதிர்பார்த்த சேவைகளை வழங்க,வலுவுள்ள இயங்கு நிலையில் அமைவதற்கு களபூமி சனசமூக நிலையத்தின் முதல் நிலை உறுப்பினர்களின் செயற்றிறன் பாராட்டுக்குரியது.

1991 ம் ஆண்டு இடப்பெயர்வு வரை களபூமி சனசமூக நிலையத்தின் மூன்றாவது நிருவாகத்தினர் களபூமி சனசமூகநிலையத்தினை சிறப்பாக இயக்கிவந்தனர்.களபூமி சனசமூக நிலையம் சமூகத்துக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஆற்றிய பணிகளையும்,சனசமூக நிலையத்தின் அவசியத்தையும் உணர்ந்த இன்றைய இளைஞர்கள் 28 ஆண்டுகளுக்கு பின்னர் களபூமி சனசமூக நிலையத்தை மீள இயக்குவதற்க்கு எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது.நாடு கடந்து வாழும் களபூமி வாழ் இளைஞர்களும் சமூக நலன்களில் அக்கறை உடையோரும் களபூமி சனசமூக நிலையத்தை மீள இயக்குவதற்க்கும், சன சமூக நிலையம் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்தி பணிகளுக்கும் கரம் கொடுக்க முன் வந்தமை பாராட்டுக்கு உரியது.

தலைமுறை ஞாபகங்களை மீட்டுப் பார்த்தல் பழம் பெருமை பேசுவதற்காக அன்றி வரலாறு எமக்கு வழிகாட்டியாக அமையும் என்பதற்கே ஆகும்.

ஒரு இனம் தனது மூதாதையர்களின் வாழ்வியலின் அம்சங்களை அறியாமல் உணராமல் இருக்குமாயின் அந்த இனம் பற்றற்ற நாடோடித்தன்மையுடைய இனமாக மட்டுமே இருக்கும்.அது மட்டுமின்றி அத்தகைய இனங்கள் இனத்துவ அம்சங்களில் இருந்து விலகிச் சென்று விடும் என்பது வரலாற்று உண்மை.

 “ A generation which ignores history has no past and no future”

                                                                                  Lazarus Long

“வரலாற்றைப் பதிவில் வைக்கத் தவறிய சமூகத்துக்கு இறந்த காலமும் இல்லை எதிர் காலமும் இல்லை”

 

 

Collection of 1982 News Paper Cutting

 

 

 

 

 

சிறப்பு மிகு சேவையாளன் திரு. உடையார் இராமலிங்கம் நாகலிங்கம் (கருங்காலி, காரைநகர்) – இக்கட்டுரை அன்னாரின் 54வது சிரார்த்ததினத்தை முன்னிட்டு வரையப்படுகின்றது.

 

சிறப்பு மிகு சேவையாளன் திரு. உடையார் இராமலிங்கம் நாகலிங்கம் (கருங்காலி, காரைநகர்) 

இக்கட்டுரை அன்னாரின் 54வது சிரார்த்ததினத்தை முன்னிட்டு வரையப்படுகின்றது.

பிறப்பு:  22.12.1893                                                                                    இறப்பு: 22.07.1965

 

முன்னாள் செயலாளர், தலைவர் சைவமகாசபை, காரைநகர்

                     முன்னாள் நிர்வாகி, கருங்காலி போசுட்டிமுருகன் ஆலயம்

முன்னாள் முகாமையாளர் வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலை

 

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

மேற்கூறிய வள்ளுவர் குறளுக்கு ஏற்றாற்போல் அதற்கு இலக்கணமாக வாழந்தவர் தான் இக்கட்டுரையின் கதாநாயகனாக விளங்கும் இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள். தன்னைப் போலவே மற்றவர்களும் முன்னேற வேண்டும் எனும் நோக்கில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உயிர் கொடுத்த பெருமகன் என்றால் மிகையாகாது.

இந்து மாகடலின் முத்தென விளங்கும் இலங்கைத்தீவின் சிரசாகிய யாழ்ப்பாணத்தின் கண்ணாக விளங்குவது காரைநகராகும். அந்நகரின் மேற்குத் திசையில் அமைந்துள்ள கருங்காலி எனும் சிறு குறிச்சியில் வாழ்ந்த உடையார் இராமலிங்கத்தின் இளைய புதல்வனாக 22.12.1893ல் வந்துதித்தவர் தான் திரு நாகலிங்கம். இவர் உடையார் நாகலிங்கம் எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு மூத்த சகோதரர் வேலுப்பிள்ளையாவர்.

திரு நாகலிங்கம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும், (Vaddukkoddai Jaffna Collage) உயர் கல்வியைச் சென்னை உயர்கல்லூரியிலும் பயின்று தேறினார். இந்தியாவில் கல்வி பயின்ற காலத்தில் அண்ணல் காந்தி, ஜவகர்லால் நேரு போன்றோரின் போதனையில் இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

படிப்பை முடித்துவிட்டு மீண்டும் காரைநகருக்குத் திரும்பிய திரு நாகலிங்கம் அவர்கள் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணியவர் களத்தில் இறங்க ஆரம்பித்தார் அதன் ஒரு அங்கமாக மு.திசைநாயகம், க.கதிரவேலு, இ.நாகலிங்கம், ஆ.முருகேசு, இ.கந்தையா,ஆ.கதிர்வேல், வே.தம்பிஐயா, அ.சின்னத்தம்பி, க.நவரத்தினம், கா.சி.மஹேசசர்மா ஆகியோர் ஒன்றினைந்து 15.03.1915ல் ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலையில் கருத்துக்களைப் பரிமாறியதன் பலனாக “காரை இளைஞர் தேர்ச்சிச் சங்கம்” என்ற பெயரில் சங்கம் ஒன்றை திரு திசை நாயகம் தலைமையில் உருவாக்கினார். இதன் மூலம் கிராம மாணவர்களை கல்வியில் முன்றேற்றும் வகையில் செயற்படத்தொடங்கினர்.

இவ்வாறு நடைபெற்றவேளையில் மூன்று வருங்களின் பின்னர் சங்கத்தின் பெயரை 21.12.1918ல் “காரை இந்து வாலிபர் சங்கம்” எனப்பெயர் மாற்றியதோடு பொ.வேலுப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும், திரு. இ. நாகலிங்கம் அவர்களைச் செயலாளராகவும் தெரிவு செய்தனர்.பிற்காலத்தில் இ.நாகலிங்கம் அவர்கள் சைவமகாசபையின் தலைவராகவும் செயற்பட்டார்.

இந்து வாலிபர் சங்கத்திற்கென ஓர் கட்டடம் அமைக்கவேண்டுமென எண்ணிய வேளையில் அப்பொழுது செயலாளராவிருந்த திரு.இ. நாகலிங்கம் அவர்கள் பெரு முயற்சியினால் பூதனடைப்பு எனும் பெயர் கொண்ட காணி திருமதி வே.வள்ளியம்மை என்பவரிடம் இருந்து சங்கத்திற்கென நன்கொடையாகப் பெறப்பட்டது. அதில் சிறிய கட்டடமும் அமைக்கப்பட்டது. மீண்டும் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தா அவர்களின் அறிவுரையின் பலனாக இந்து வாலிபர்சங்கம் என்ற பெயரை மாற்றி “சைவ மகாசபை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு 12.12.1924ல் சபைக்கெனப் பெரிய மண்டபம் ஒன்றும் கட்டிமுடிக்கப்பட்டது. திரு நாகலிங்கம் அவர்கள் காரை இந்து வாலிபர் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து இறக்கும்வரை இச்சபையின் அங்கத்தவராக இருந்துள்ளார் என அறியப்படுகின்றது.

இவரின் இன்னொரு முயற்சியினால் வியாவில் கடற்கரையில் மடாலயம் ஒன்று அமைக்கும் பணி சைவ மகா சபையினால் முன்னெடுக்கப்பட்டு கருங்காலி, பலகாடு மக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான காணி அ.இராமநாதன் என்பவரால் 06.05.1923ல் நொத்தரிசு திரு அ.கனகசபை முன்னிலை 237ம் இலக்க உறுதியின் மூலம் சபைக்குத் தர்மசாதனம் செய்யப்பட்டது.

இவைமட்டுமன்றி தான் இறக்கும் வரை சைவமகாசபையின் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமென்பதில் அதீத அக்கறை கொண்டிருந்தார். இவருக்குப் பக்கபலமாகப் பலர் இருந்துள்ளனர். இவர்களுள் ஒருவர் தங்கோடையைச் சேர்ந்த திரு.ச.வைத்தியலிங்கம் என்பவராகும். இருவரும் உற்ற நண்பர்களாவர்.

திருநாகலிங்கமும் நிர்வாகத்தினரும் எடுத்த பெருமுயற்சியினால்

  1. ஸ்ரீமத்சுவாமி விபுலானந்தா
  2. ஸ்ரீமத் சுவாமி சர்வானந்தா
  3. மகாத்மா காந்தியடிகள்
  4. ஸ்ரீஇராஜ கோபாலாச்சாரியார்
  5. பண்டித ஜவகர்லால் நேரு
  6. ஸ்ரீமதி கமலாநேரு
  7. சுவாமி சச்சிதானந்த ராஜயோகிகள் (சங்கரசுப்பையர்)
  8. டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளை
  9. ஸ்ரீமதி இந்திராகாந்தி
  10. திரு.அ.ச. ஞானசம்பந்தன்
  11. சைவப்பெரியார். சு. சிவபாதசுந்தரம்பிள்ளை
  12. கௌரவ வீ.வீ.கிரி
  13. வித்துவான் கி.வா ஜகந்நாதன்
  14. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
  15. பண்டிதமணி சு.நவநீத கிருஷண பாரதியார்

உள்ளிட்ட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட சமய, சமூகப் பெரியார்கள் சைவ மகாசபைக்கு வந்து சொற்பொழிவாற்றியது காரைநகர் பெற்ற தவப்பயன் என்றே கூறவேண்டும்.

திரு. நாகலிங்கம் அவர்களின் திருமணத்தின் பேறாக மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் முறையே திருநாவுக்கரசு, தியாகராசா, அருள்நந்திசிவம் ஆகியோராவர். பள்ளிப்பருவடைந்த அவர்களுக்குச் சிறந்த கல்வியூட்டி, சிறந்த உத்தியோககளையும் அமைத்துக்கொடுத்தார். மூத்த மகன் திருநாவுக்கரசு அவர்களுக்குக் காரைநகர் மேற்கு விதானையாராகப் பதவி கிடைத்தது. சிறிது காலத்தில் விதானையார் முறை அரசாங்கத்தினால் ஒழிக்கப்பட்டு கிராம சேவகர் பதவி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. கிராம சேவகர் பரீட்சையில் சித்தியெய்திய திருநாவுக்கரசு அவர்கள் கிராம சேவராகப் பதவியைத் தொடர்ந்தார். இரண்டாவது மகன் தியாகராசா அவர்கள் வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலையில் ஆசிரியராக் கடமையாற்றினார். அவ்வேளை அவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாகக் காலமானார். மூன்றாவது மகனான அருள்நந்திசிவம் அவர்கள் புகையிரதத் திணைக்களத்தில் புகையிரத நிலைய அதிபராக நீண்டகாலம் சேவையாற்றி இறைப்பாறியுள்ளார். தனது மூத்த மகன் திருநாவுக்கரசு அவர்களுக்கும், இளையமகன் அருள்நந்திசிவம் அவர்களுக்கும் நற்குணங்கள் நிநைற்த மணப்பெண்களைத் தேர்ந்தெடுத்து திருமணங்களை செய்துவைத்ததன் மூலம் தந்தைக்குரிய கடமைகளை நிறைவு செய்தார் என்றே கருதவேண்டும்.

தனது மூத்த சகோதரரான வேலுப்பிள்ளைக்குப் பின் திரு.நாகலிங்கம் அவர்கள் 1948ம் ஆண்டு கருங்காலி போசுட்டி முருகன் ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து அவருடைய மரணம் சம்பவிக்கும்வரை ஆலய நிர்வாகத்தைத் திறம்பட நடாத்தி முடித்தார் என்றே கூறவேண்டும். ஆலய அறங்காவலர் என்ற வகையில் ஆலயத்தில் நேரந்தவறாத பூஜை, வழிபாடு, அவை சைவ ஆகமமுறைப்படி நடைபெற வேண்டுமென எண்ணி அவ்வாறே நடைபெற ஆவன செய்தார். ஆலயத்தில் மதத்தின் பெயரால் களியாட்டங்கள் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. அத்துடன் ஆலயத்தில் இசைக்கப்படும் பாடல்களோ அல்லது நாதஸ்வர இசையோ பக்தி கீதங்களை மட்டுமே தாங்கியதாக இருக்க வேண்டுமெனவும் விரும்பியதுடன் அடியார்கள் ஆலயத்திற்கு வரும்பொழுது ஆசார சீலர்களாக வரவேண்டுமென்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

ஆலயத்தில் கந்த ஷஷ்டி காலங்களில் கந்தபுராணம் படித்து பொருள் விளக்கம் கூறுவது வழமை. திரு நாச்சி பொன்னம்பலம் அவர்கள் அவர் இறக்கும்வரை பொருள் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திருநாகலிங்கம் அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.

இதே வேளை வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையின் முகாமையாளராகவும் கடமையாற்றினார். இப்பாடசாலை 1889ம் ஆண்டளவில் சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த மகான் சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகவும் இதற்கான நிலத்தை கா.வேதக்குட்டி ஐயரவர்கள் வழங்கியதாகவும் அறியப்படுகின்றது.

திருநாகலிங்கம் அவர்கள் முகாமையாளராகப் பதவியேற்ற திகதி சரியாகத் தெரியவில்லை. இருந்தும் நான் பாலர் வகுப்பில் சேரந்த 1947ம் ஆண்டு இவரே முகாமையாளராக இருந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். இவர் நிர்வாகத்தில் சற்று இறுக்கமான நிலையைக் கடைப்பிடித்தார் என்றே கூறவேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் நேரந்தவறாது பாடசாலைக்கு வரவேண்டும் என அறிவுரை வழங்கிய அவர் நேரந்தவறி வந்தவர்களுக்கான தண்டனையையும் தானே நேரில் வழங்கினார்.

இவர்காலத்தில் பாடசாலையின் தலைமை ஆசிரியராக இடைக்காடு பண்டிதர் சு.இராமசாமி அவர்கள் கடமையாற்றினார். அத்துடன் ஒவ்வொரு பாடங்களிலும் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர்களையும் நியமித்திருந்தார்.

நாச்சி பொன்னம்பலம் ஆசிரியர் அவர்களைப் பாலர் வகுப்பிற்கு நியமித்திருந்தார். இவரிடம் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியது. அப்பொழுது பாலர் வகுப்பு மாணவர் நிலத்தில் இருந்தே கற்றனர். அவர்கள் முன் மணல் பரவப்படடிருக்கும். மாணவர்கள் வலது கைச்சுட்டுவிரலால் உயிரெழுத்துக்கள் முதல் உயிர்மெய் எழுத்துக்கள் வரை எழுதவேண்டும். நாச்சி பொன்னம்பலம் அவர்கள் எமது விரலைப் பிடித்து மண்ணில் ஊன்றி எழுதுவார். எமக்கு விரல் வலிக்கும். பலர் அழுவதுமுண்டு.

ஆ.விநாயகசிவம் பிள்ளை (தமிழ்), மு.நல்லதம்பி (தமிழ், கணிதம்), அ.தேவராசா (தமிழ்,பொது அறிவு, பொது விவேகம்), ந.தெய்வானைப்பிள்ளை (தையல்) கொட்டைக்காடு சு.பாக்கியம் (ஆங்கிலம்), காங்கேசன்துறை மு. மாணிக்கம் (ஆங்கிலம்), இணுவில் நடராசா ஆசிரியர் (நெசவு) கோப்பாய் சின்னம்மா ஆசிரியை (பன்னவேலை) போன்ற பல திறமைமிக்க ஆசிரியர்களை நியமித்து மாணவர் கல்வியை ஊக்குவித்தார்.

மேற்படி ஆசிரியர்கள் துணையுடனும், திரு நாகலிங்கம் அவர்களின் ஊக்குவிப்பினாலும் கருங்காலியைச் சேர்ந்த மூன்று மாணவர்களும், பலகாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி அரசாங்க செலவில் வேலணை அரசினர் மத்தியகல்லூரியில் அக்கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்கும் வாய்ப்பைப்பெற்றனர். இதன் மூலம் வியாவில் சைவபரிபாலன வித்தியாலயம் காரைநகர் பாடசாலைகளிலேயே இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது. முதலாம் இடத்தை தலைமை ஆசிரியர் கார்த்திகேசு உபாத்தியாயர் அவர்களால் நிர்வகிக்கப்பட்ட களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை பெற்றுக்கொண்டது. இப்பாடசாலையில் இருந்து இவருடைய சேவைக்காலத்தில் எட்டுமாணவர்கள் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்தினர்.

மாணவர் ஒருவர் பாடசாலைக்கு வரவில்லையென்றால் திரு நாகலிங்கம் அவர்கள் அந்த வீட்டுக்கு மாணவர் ஒருவரை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்தார். சிலவேளைகளில் தானே மாணவன் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு அறிவுரை கூறி அம்மாணவனை அழைத்துவந்தார். இதற்கும் மேலாப் பகல் 1.00 மணிக்கு பாடசாலை வகுப்புக்கள் முடிவுற்றாலும், ஆசிரியர்கள் துணை கொண்டு மாலையிலும் பிரத்தயேக வகுப்புக்களை நடாத்தினார்.

வெள்ளிக்கிழமைகளில் காலையில் மாணவர்கள் எல்லோரும் கட்டாயமாக ஆலயம் சென்று வழிபாடுகளில் ஈடுபடவேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அப்படி ஆலயம் செல்லாது இருப்பவர்களை உரிய காரணம் கேட்டுவிசாரிபார். தகுந்த காரணம் கூறாதவிடத்து தண்டனையும் வழங்கினார். வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகம், கொப்பி, பேனா, பென்சில் என்பவனவற்றை இலவசமாக வழங்கி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தார்.

பாடசாலை மாணவர்கள் பசியுடன் இருக்கக் கூடாதென்பதற்காக மதிய உணவாக பாண்பருப்புகறி, கடலை, அவல், தோசை, பயறு என்பவனவற்றைத் தவறாது வழங்க ஆவனசெய்தார். இவற்றைத் தயார் செய்து வழங்குவதற்காக ஆரம்பகாலத்தில் திருமதி சிதம்பரப்பிள்ளை அவர்களையும், அவரது மறைவுக்கு பின் பாறாத்தை என எல்லோராலும் அழைக்கப்படும் பார்வதி அவர்களையும் நியமித்து ஆவனசெய்தார்.

பாடசாலையில் நாயன்மார்கள் குருபூஜைகள், நவராத்திரி என்பவற்றைக் கொண்டாட ஆவன செய்தார். நவராத்திரி காலங்களில் மாலைவேளைகளில் மாணவர்களை வீடுவீடாக அழைத்துச்சென்று

“கன்னித்திங்கள் வருகிறதம்மா

கருத்துடன் நவராத்திரி பூஜை”

எனும் பாடலை மாணவர்கள் மூலமாகப் பாடவைத்து கோலாட்டம் அடித்து மக்கள் மத்தியில் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்களும் பதிலுக்கு மாணவர்களுக்கு கடலை, அவல், கற்கண்டு என்பவற்றை வழங்கி மகிழ்வுற்றனர். இதன் மூலம் மாணவர், ஆசிரியர், பெற்றோர் அன்னியோன்யம் சிறப்புற்று விளங்கியது.

ஆசிரியர் ஒருவர் வரவில்லையென்று தெரிந்து கொண்டால் தானே அவ்வகுப்பிற்கு நேரில் சென்று அவரது பாடங்களைக் கற்பித்தார். இவர் ஒரு கந்தியவாதியும் கூட. எந்த ஒரு கூட்டத்திற்கு செல்வதாக இருந்தாலும் கதர்வேட்டி கதர்சட்டை கதர் சால்வை, தொப்பி என்பனவற்றை அணிந்து செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். சுருக்கமாகக் கூறினால் இவர் சைவத்திற்கும், தமிழுக்கும், அரும்பணி ஆற்றிய பெரியார் என்றால் மிகையாகாது.

வித்துவான் F.X.C  நடராசா அவர்கள் உடையார் நாகலிங்கம் அவர்கள் பற்றித் தாம் எழுதிய காரைநகர் மான்மியம் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார். அந்தக்காலத்து முகாமையாளர்களுக்குள் இவர் தனித்தன்மை வாய்ந்தவர். பாடசாலைக்கு நாள் தவறாது செல்லும் பான்மையுடையவர். காலையிலும் போவார் மாலையிலும் போவார். மாலையில் போகும் போது மல்லித்தண்ணீர் கொண்டு செல்வார். பாடசாலையை நாள் தோறும் தொடக்கி வைப்பவரும் இவர். முடித்துவைப்பவரும் இவரே. அடியேனும் அங்கு ஆசிரியாராகப் பணிபுரிந்தவன். இந்த முகாமையாளர் எனக்கு வாய்க்காது போயிருந்தால் நான் ஆசிரியராகப் பயிற்சி பெற்றிருக்கமாட்டேன். என்னை நிலைபேறான ஆசிரியராக ஆக்கியபெருமை இவருக்கே உரியது.

அத்துடன் என்னைப் போல வேறு சிலரையும் ஊக்குவித்து உயர்த்தியுள்ளார். அத்துடன் நின்றுவிடாது சைவ மகாசபையிலும், பாடசாலையிலும் நெசவு நிலையங்களை உண்டாக்கி காரைநகரில் முதன் முதலாக நெசவுத் தொழிலைப் பரப்ப உதவியவரும் இவரே என்பதுடன், பேசு இனியர், கள்ளங்கபடமற்றவர். பொதுத்தொண்டே இவரது ஆசையும், பாசமும் எனக் கூறி முடிக்கின்றார். இவர் எப்பொழுதும் இந்து சாதனம் பத்திரிகையை விரும்பி வாசிப்பார். அதனால் சனிக்கிழமைகளில் எம்போன்ற மாணவர்கள் அப்பத்திரிகையை வாசிக்க அவர் கேட்டுகொண்டிருப்பார்.

இவரது சேவையால் நன்மை பெற்றவர்களில் யானும் ஒருவன் என நினைக்கும் போது என் மனம் புளகாங்கிதம் அடைகின்றது.

இப்படிப்பட்ட பெருமகன் 22.07.1965ல் இறைவணடிசேரந்தார்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதும் நன்றே யவரோ

டிணங்கி யிருப்பதுவும் நன்று.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அடைய அவரின் உறவுகளுடன் நாமும் சேர்ந்து எல்லாம் வல்ல கருங்காலி போசுட்டி முருகனை வேண்டிப் பிரார்த்திப்போமாக.

சாந்தி! சாந்தி! சாந்தி!

 

தம்பையா நடராசா

கருங்காலி

காரைநகர்

 

இக்கட்டுரைக்கு ஆதாரமாக அமைந்தவை

  1. காரைநகர் சைவ மகாசபை பொன்விழா மலர் 1967
  2. காரைநகர் மான்மியம்
  3. காரை ஆதித்தியன் சுவிஸ்
  4. நேரில் பெற்ற அனுபவங்கள்

தியாகராஜா மாஸ்டர்.

தியாகராஜா மாஸ்டர்.

ஏதென்ஸில் பிளேட்டோவிடம் 20 ஆண்டுகள் தத்துவம் பயின்றவர் அரிஸ்டாடில். யாழ்ற்றன் கல்லூரியில் 5 வருடங்கள் தியாகராஜா மாஸ்டரிடம் நான் படித்திருக்கின்றேன். நான் அவரிடம் மாணவனாக போவதற்கு முன்பே அவரை அறிந்திருக்கின்றேன். ஏனெனில் எங்கள் வீட்டிற்கும் மாஸ்டர் வீட்டிற்குமான தூரம் ஒரு நேர் கோடு தான். டடி அம்மா தியாகராஜா மாஸ்டர் எல்லோரும் கரம் போட் விளையாடுவார்கள். அது ஒரு காலம். விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்ல எங்கள் வீட்டில் பாடசாலையில் ஏன் ஊரில் நடந்த பல சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் செய்வதால் ஊர் மக்கள் இதயங்களில் ஏற்றிப் போற்றும் தூதராக விளங்கியவர். சர்வ அதிகாரங்களும் கொண்ட மனிதராக உயர்ந்து நின்றவர். எளிமையே வடிவெடுத்து மண்ணில் வந்ததுபோல் வாழ்ந்தவர்.

கர்ம யோகிகளைப் போல ஊரின் நலனுக்காக கற்பூரமாகக் கரையும் மெழுகுவர்த்தியாக உருகும் மனிதர்கள் இருந்தார்கள் என நினைக்கும் பொழுது. ஊருக்கு உழைத்திடல் யோகம் பிறர் நலம் ஓங்கிடுமாறு தன்னை வருத்துதல் யாகம் என்று வாழ்ந்து காட்டிய அந்த நாள் மனிதர்களின் நேர்மை இன்று நம் கண்முன்னே பொய்யாய் பழங்கதையாய் கனவாய்ப் போய்க்கொண்டு இருப்பதில் நல்லவர்கள் யாருக்குத்தான் வருத்தமில்லை.

அடிக்கற்கள் இல்லாமல் கோபுரங்கள் இல்லை. ஆணிவேர் இல்லாமல் மரங்கள் இல்லை. தியாகராஜா மாஸ்டர் இன்றைய மரங்களின் ஆணிவேர். கோபுரங்களின் அடிக்கல். அப்துல் ரகுமான் அழகாகச் சொன்னார். ஏற்றப்பட்ட விளக்கை விட ஏற்றி வைத்த தீக்குச்சியே உயர்வானது என. சென்ற காலத்தை சிந்திக்காதவர்கள் நிகழ்காலத்தில் வாழத்தகுதியற்றவர்கள். நம் மூதாதையர்களின் வாழ்க்கைப் பாதையைப் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது தான் அவர்கள் வருங்காலத் தலைமுறைக்குத் தந்து விட்டுப் போன பண்பாட்டுச் செல்வங்களைத் தரிசிக்க முடியும்.

ஒவ்வொரு மூலத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்கமுடியாதது. மனித வாழ்க்கையில் மரணமும் அப்படித்தான்! உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. ஒவ்வொரு பிறப்புக்குப் பின்னாலும் ஓர் அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொரு யீவனும் தன் கடமையை முடித்துவிடும் பொழுது அதற்குரிய அர்த்தம் பூரணமடைகிறது. பூரணத்துவத்திற்குப் பின்பு அந்த யீவனுக்கு இந்தப் பூமியில் வேலை இல்லை. அந்த நேரத்தில் தான் மரணம் அதைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறது. நீண்ட காலம் வாழ்வது தான் நிறைவான வாழ்க்கை என்று நினைப்பதும் அறியாமையே. பாரதியும் இயேசு கிறிஸ்துவும் விவேகானந்தரும் ஆதிசங்கரரும் வந்த வேலையை விரைந்து முடித்தார்கள். வாழ்க்கையின் பெருமை வாழும் நாட்களில் இல்லை செய்து முடிக்கும் செயலில் இருக்கிறது.

தியாகராஜா மாஸ்டரும் ஒரு காலகட்டத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் எந்தப் பள்ளிக்கூடத்தில் நடக்கின்ற விளையாட்டுப் போட்டியாகட்டும் நிச்சயமாக நடுவராக இருந்திருக்கிறார். விளையாட நேரம் ஒதுக்குங்கள் அது இளமைக்கான ரகசியம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே செயல் திறனில் காட்டியவர். சாதாரண மனிதர்களையும் சாதனை மனிதர்களாக்கி சரித்திர ஏடுகளில் இடம் பிடிக்க வைத்தவர். மேன்மையான எண்ணங்களால் தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சகமனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும் பொழுது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

மரணம் சிலரைக் கடவுளாக்குகிறது. சிலரை மனிதகுலம் உள்ளவரை மறக்க முடியாத மகாத்மாக்களாக மாற்றிவிடுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!

உன் தகுதியை நீயே உரக்கச் சொல் பிறருக்காக காத்திருக்காதே! என்ற ஜூலியஸ் சீஸிரின் மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரர் மாஸ்ரர். இதனால் தான்; காரைநகரில் உள்ள மாணவ சமுதாயத்தின் மனதில் இன்றளவும் இருக்கிறார்.

நன்றியுடன்
கணபதிப்பிள்ளை ரஞ்சன்
647.406.6352
ஆயிலி காரைநகர்.

 

 

 

அன்பு நெறி மலர் 23 இதழ்8 – ஈழத்துச் சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ மு.கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 ஆவது பிறந்த தினத்தையொட்டிய சிறப்பிதழ்!

Anpuneri- March – 2019 book

ஈழத்துச் சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ மு.கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 ஆவது பிறந்த தினத்தையொட்டி இக்கட்டுரை இங்கே எடுத்து வரப்படுகின்றது. காரை வசந்தம் 2018 மலரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

ஈழத்துச் சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ மு.கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 ஆவது பிறந்த தினத்தையொட்டி இக்கட்டுரை இங்கே எடுத்து வரப்படுகின்றது. காரை வசந்தம் 2018 மலரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஈழத்துச் சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர்
(23.03.1819 – 22.09.1898)

காரைநகர் கார்த்திகேயப் புலவர் அவர்களின் 120 ஆவது நினைவு தினத்தையொட்டி (22.09.2018) இக்கட்டுரை இம்மலரில் பிரசுரிக்கப்படுகின்றது.

– திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் B.SC-

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு சங்கத் தமிழ்ப் புலவரான ஈழத்து பூதந்தேவனார் காலந்தொட்டு ஏறத்தாழ 2000 ஆண்டு கால பழமை வாய்ந்தது. ‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில், 1835-1929க் காலகட்டமே சிக்கல் மையப்பட்ட காலமென்று கொள்ளப்படத்தக்கதாகும்’ என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகின்றார். ஏனெனில் இக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியும், கிறித்தவ சமயமும் ஈழத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய கட்டமைப்புக்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன.

முத்துக்குமாரக் கவிராயர், ஆறுமுகநாவலர், சங்கர பண்டிதர் ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சியில் கத்தோலிக்க சமயத்தின் மாயப் பரப்புரைக்கு மக்கள் மயங்கி வருந்தாது தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனக் குரல்களால் கிறித்தவ மதக் கொள்கைகள் வலுவிழந்து தடுமாறியது என்றும் பின்வரும் செய்யுளில் மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார்.

முத்துக் குமார கவிராசா சேகரன் மொய்யமரிற்
றத்தித் தட்க்குண்டு நாவலர் தாவச் சவிமடித்து
சித்தங் கெடவுட றாமொத ரேந்தரன் சிதைந்தபைபிள்
செத்துக் கிடக்குது பார்சிவ சங்கரன் றெம்முனைக்கே

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ என்று இதனால்தான் பின்னாளில் பாடியிருக்கிறாரோ என்று தோன்றுகின்றது.

இந்த வகையில், 19ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கிய மரபு வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக பிற்கால இலக்கியங்களுக்கு வழிகாட்டிய வகையிலும் அவற்றுக்கான அடித்தளமாக அமைந்த நிலையிலும் ஈழத்து இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்கின்றது.

இற்றைக்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன் காரைநகர் களபூமிப்பதியில் அவதரித்த வரகவி பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்கள் தாம் பிறந்து வாழ்ந்த பதியினையும் தாம் வழிபாடு செய்த குல தெய்வங்களின் தெய்வீகச் சிறப்புக்களைப் பாடியும், மக்களை மகிழ்வூட்டும் நாடகங்களை ஆக்கியும், சைவத் தமிழ் இலக்கிய உலகுக்கு அரிய பல படைப்பிலக்கியங்களை அளித்து ஈழத்து இலக்கிய வரலாற்றின் பொற்காலத்திற்கு வலுவூட்டிய பெருமையைப் பெறுகின்றார் என்றால் மிகையாகாது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் காலத்தில் வாழ்ந்த பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்கள் நாவலர் பெருமானின் குருவாகிய இருபாலை சேனாதிராய முதலியாரைத் தமக்கும் குருவாகப் பெற்றவர். அந்தணர் குலத்தில் உதித்த புலவர் அவர்களின் தந்தையாரான முருகேசையர், பூட்டனாராகிய சுப்பையர் ஆகியோரும் சிறந்த புலவர்களாக முத்தமிழ் வித்தகர்களாக விளங்கியவர்கள். இயற்றமிழ் நூல்களாகத் தன்னை யமக அந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குருசேத்திர நாடகம் ஆகிய நூல்கள் புலவர் அவர்களின் தந்தையாரான முருகேசையர் அவர்களாலும், நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி என்னும் இரண்டு பிரபந்தங்கள் பூட்டனாராகிய சுப்பையர் அவர்களாலும் இயற்றப்பட்டவையாகும்.

கார்த்திகேயப் புலவர் அவர்களுக்கு ஐந்து வயதில் ஏடுதொடக்கப்பட்டு ஊரில் வாழ்ந்த சுவாமி நாத தேசிகரிடம் சங்கத மொழியினையும் தந்தையாராகிய முருகேசையரிடம் நீதிநூல்களையும், புராணங்களையும் கற்று வந்தார். பன்னிரண்டாவது வயதில் தந்தையாரிடம் கந்தபுராணத்தின் தாரகன் வதைப்படலத்திலே வரும் பாடலை இசையோடு பாடுவதில் இடர்ப்படவே தந்தையார் தண்டித்தமையினால் ஒரு வருடகாலம் புலவரின் கல்வி தடைப்பட்டது.

புலவரின் பாட்டியாராகிய இலட்சுமி அம்பாளின் துணையுடனும் தங்கள் சொந்தமாகிய திக்கை நிலத்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தமையின் பயனாகவும் பரம்பரைச் சைவவேளாளரும் பெருங்கல்விமானுமாகிய சண்முக உபாத்தியாயரிடம் தமது கல்வியைத் தொடர்ந்த புலவர் தமது பதினைந்தாவது வயதில் ஏட்டில் அழகுற எழுதும் பயிற்சியுடையவரானர். 1886 ஆம் ஆண்டிலே இலண்டன் மாநகரத்தில் நடைபெற்ற சர்வதேச பொருட்காட்சிச்சாலைக்கு இவரால் ஏட்டில் எழுதப்பட்ட திருக்குறள், நாலடியார் என்பன ஊர்காவற்றுறை நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை அவர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் காரைநகர் களபூமி குறிச்சியில் திக்கை மற்றும் தன்னை திருப்பதிகள் அமைந்துள்ள தெய்வீகச் சூழலில் அந்தணர் குடியினர் வாழ்ந்து வந்தார்கள் என்று வாய்மொழிச் செய்திகளினூடாக அறியக் கிடைக்கின்றது.

புலவரின் தந்தையார் முருகேசையர் இயற்றத் தொடங்கிய தன்னை யமக அந்தாதியின் எழுபது செய்யுள்கள் எழுதியபின் தந்தையார் நோயுற்றமையினால் முற்றுப்பெறாமல் இருந்த அந்தாதியின் இறுதி முப்பது செய்யுள்களையும் கார்த்திகேயப் புலவர் தமது இளவயதிலேயே பாடி முடித்தமையினால் இவரை ஒரு வரகவியெனப் போற்றி அதிசயித்தனர். இவர் யாத்த முதலாவது செய்யுள் பின்வருமாறு:

மணிக்கோ கனகத் தருநிதி யாரும் வணங்கிடமா
மணிக்கோ கனகத் தருமாக வன்பர்க்கு வைப்பவனீ
மணிக்கோ கனகத் தருவகை யோடருண் மைந்தநன்கார்
மணிக்கோ கனகத் தரும்புகழ்த் தென்றன்னை மன்னவனே

புலவர் அவர்கள் ஒரு புராண பிரசங்க சபைக்குச் சென்றபோது பிரசித்திபெற்ற கங்காதர சாஸ்திரியார் அவர்கள் ‘புலவரே வருக’ என அழைத்து மரியாதை செய்தார். அன்றிலிருந்து இவர்களை புலவர் என அழைத்தனர். அக்காலத்தில் நெல் தானியங்களை மதிக்கவும், அரச அலுவலாகவும் காரைநகருக்கு வந்து முருகேசையர் வீட்டில் தங்கும் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் புலவர் அவர்கள் இராமாயணம், பாரதம், காரிகை, நன்னூல் முதலாம் நூல்களை பாடங்கேட்டார். களபூமிக்
குறிச்சியிலேயிருந்த உடையார் பரமநாதர், மணியகாரன் காசிநாதர், இருமரபுயர்ந்த
மானாமுதலியாரின் வழித்தோன்றலாகிய பேரம்பலம் செட்டியார் கந்தர் ஆகிய மதிப்புமிகு செல்வந்தர்களின் விருப்பப்படி தமது தந்தையார் பாடிவைத்திருந்த குருசேத்திர நாடகத்தைத் திருத்தியும், புதுக்கியும் 1844 ஆம் ஆண்டில் அரங்கேற்றி மகிழ்வித்தார். ஊர்ப் பெரியவர்களின் விருப்பப்படி சூரபன்மன் நாடகம், சந்திரவண்ணன் நாடகம் என்பவனவற்றையும் எழுதிப் பாடி அரங்கேற்றினார்.

கார்த்திகேயப் புலவர் 1847 ஆம் ஆண்டில் தமது இருபத்தெட்டாவது வயதில் காரைநகரில் பிரசித்தி பெற்ற மகா வைத்தியரும் புராணப் பிரசாரகரும் கனகசபாபதிக் குருக்கள் மரபைச் சேர்ந்தவருமாகிய அரங்கநாத பண்டிதரின் செல்வமகள் கமலாம்பாளை விதிப்படி திருமணம் முடித்தார்.

கார்த்திகேயப் புலவர் வாழ்ந்து வந்தகாலத்திலே காரைநகரிலே கிறித்தவப் பாதிரிமார் வீடு வீடாகச் சென்று தமது கிறித்தவ மதத்தை பரப்புரை செய்து வந்தனர். அந்தணர்களைப் பரிகசித்து பாடல்களும் பாடிப் போதனை செய்தனர். அப்பாடல்களில் ஒன்று வருமாறு:

பிறந்தபோது பூணுநூல் குடுமியும் பிறந்ததோ
பிறந்துடன் பிறந்ததோ பிறங்கு நூற்களங்கெலாம்
மறைந்த நாலுவேதமும் மனத்து ளேயுதித்ததோ
நிலம் பிளந்து வானிழிந்து நின்ற தென்ன வல்லிரே

இப்பாடலைக் கேள்வியுற்ற கார்த்திகேயப் புலவர் எதிர்பாடலாக,

உதித்தபோது சட்டைதொப்பி தானுங் கூடவுற்றவோ
மதித்த ஞானஸ்தானமும் வலிய வந்து நேர்ந்ததோ
விதித்த பைபிளிவானதுங் கண்மெய்யுளத் துதித்தவோ
கதித்த பேச்சைவிட்டனாதி கடவுளைக் கருதுமே.

என்று பாடி நகைத்தார்.

இத்துடன் நின்றுவிடாது, சைவசமயத்தவர் சிலர் கிறித்தவராக மதம் மாறுவதைக் கண்டு சீறியெழுந்த புலவர் மூன்று சூத்திரங்களையும் 150 விருத்தங்களையுமுடைய ‘கிறித்தவமத குடாரம்’ என்னும் நூலை வெளியிட்டு கிறித்தவ மிசனரிமாரின் கொட்டத்தை ஓரளவு அடக்கி சைவசமயத்தைக் காத்து நின்றார்.

அந்நாளிலே சைவத்தமிழ்க் கல்வி முறை நலிவுற்று வருவதனைக் கண்ட அந்தணர்களும், ஊரவர்களும் ஒரு பாடசாலையை அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று புலவரிடம் வேண்டிக்கொண்டனர். அதற்கு இசைந்து 1852 ஆம் ஆண்டு தை மாதம் ஒரு வித்தியாசாலையை அமைத்து சைவ சமயத்தையும், தமிழையும் பிள்ளைகளிடம் வேதனம் பெற்று கற்பித்து வந்தார். வித்தியாசாலையை அமைப்பதற்கு புலவருக்கு பலவழிகளிலும் உதவியவர் புலவரின் பெரியதந்தையின் மகனாகிய கார்த்திகேய சாத்திரியாராவார். மு.குமாரசுவாமி ஐயர், மு.சீனிஐயர், கா.வேதக்குட்டி ஐயர், இராமசுவாமி ஐயர், கா.மார்க்கண்டேய ஐயர். சி.கந்தப்பபிள்ளை, அ.கணபதிப்பிள்ளை, அ.சோமநாதர், இ.சண்முகம், பொ.நாரணபிள்ளை, வே.அம்பலவாணன் முதலானோரும் புலவரின் புதல்வர்களாகிய நாகநாதையர், நடராசக் குருக்கள், சிவசிதம்பர ஐயர் ஆகியோரும் புலவரிடம் கல்வி கற்ற மூத்த மாணவர்களாவர்.

1864 ஆம் ஆண்டு தைமாதம் கார்த்திகேயப் புலவர் தமது மாணக்கர் சிலருடன் இராமேஸ்வரம், திருப்பெருந்துறை, உத்தர கோசமங்கை, மதுரை, திருப்பரங்குன்றம் முதலிய புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்து வழிபட்டுத் திரும்பினார். இந்நாளில் புலவர் அவர்கள் தாம் சிலகாலம் அர்ச்சகராக இருந்து வழிபட்டு வந்த களபூமி திக்கை முருகக் கடவுள் மீது ‘திக்கைத் திரிபந்தாதி’ என்ற அந்தாதி பாடினார். இதே காலத்தில் சண்டிலிப்பாயிலிருந்த தமது மைத்துனராகிய கார்த்திகேயக் குருக்களிடம் சுத்தவாதுளம்இ மிருகேந்திரம்இ பௌஷ்கரம் முதலிய நூல்களுக்குப் பாடங்கேட்டனர். புலவரின் மைத்துனர் ஸ்ரீமத் கார்த்திகேயக் குருக்கள் அவர்கள் வேதாரணியத்திலே பன்னிரண்டு ஆண்டு காலம் தர்க்கம்இ மீமாம்சைஇ வியாகரணம் இ ஆகமம் முதலியவற்றிற்குப் பாடங்கேட்டு மிக்க பாண்டித்தியம் பெற்றவர். தம்முடைய இறுதிக்காலத்திலே தமது ஆகமங்கள் சிலவற்றைப் கார்த்திகேயப் புலவருக்கு உபதேசித்தார்.

கார்த்திகேயப் புலவர் அவர்கள் சிதம்பரம் முதலான தலங்களை வழிபட விரும்பி அங்கே சென்று தங்கியிருந்தபோது(1877) தாம் எந்நாளும் மறவாது துதித்து வணங்கும் சிதம்பர நடராசர் மீது காதல் கொண்டு ‘திருத்தில்லைப்பல் சந்தமாலை’ என்னும் பிரபந்தத்தைப் பாடினார்.

யாழ்ப்பாணத்திலே தோன்றி வெளிவரத் தொடங்கிய (1875) ‘இலங்கை நேசன்’ என்ற செய்தி நாளிதழுக்கு பலரும் சிறப்புக் கவி எழுதினர். புலவரையும் சிறப்புக் கவி எழுதும்படி பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, புலவர் யாத்த ‘நூற்றெட்டுச் சீர்கழிநெடிலாசிரிய விருத்தம்’ என்ற கவிதை இலங்கை நேசனின் சித்திரை 1877 இதழில் வெளியாகியிருந்தது. அக்கவியின் ஆழமான கருத்து அனைவரையும் வியப்பிலாழ்த்தி புலவரின் மதிநுட்பத்தை அனைவரும் அறிய வைத்தது.

அக்காலங்களிலே மிஷனரிமார் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் காரைநகரில் பல பாடசாலைகளை அமைத்து வேதனமின்றி கற்பிக்கத் தொடங்கியமையினால் புலவரிடம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாயிற்று. இருந்தாலும் பாரதம், கந்தபுராணம் போன்ற நூல்களுக்கு பொருள் கேட்டுப் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து புலவரிடம் கற்றுவந்தனர்.

புலவர் அவர்கள் மருத்துவம், சோதிடம் ஆகிய தொழில்களிலும் தலைசிறந்து விளங்கினார்.

1880 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ‘உதயபானு’ என்னும் இதழைத் தொடங்கினார்கள். அதற்கு புலவர் எழுதிய கவிகள் மிகச் சிறப்புடையவை. சிலேடை, மடக்கு, இஷ்டவுத்தரம், யமகம் போன்ற பாக்களை எடுத்த எடுப்பில் இயற்றும் திறனுடையவராயிருந்தார். பத்திரிகைக்கும் பானுவுக்கும் புலவர் செய்த சிலேடையை பின்வரும் செய்யுளில் காணலாம்.

தாரகை கண்மறையத் துன்மதிசாய்ந்தோடத்
தடுத்தெதிர்வஞ்சரை யழித்துத் தங்குமந்த
காரவிருளினையோட்டி வெளியதாக்கிச்
சந்தேகமன்றி யுறுபொருளையாரு
மோரவே தெரிந்துண்மையினை யுணர்த்தி
யுலக மெங்குஞ் சென்றெவரு முவந்து போற்றச்
சேருதயபானு வினையவனிமீதிற்
றிகழு முதயபானுவெனச் செப்பலாமே

கார்த்திகேயப் புலவர் ‘விதானமாலை’ என்னும் சோதிட நூலைத் திருத்தி உரையில்லாத பாட்டுகளுக்கு உரை எழுதி 1881 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வெளியிட்டார். விதானமாலைக்கு சி.வை.தாமோதரம்பிள்ளை, சதாவதானம் சுப்பிரமணிஐயர் ஆகியோர் சிறப்புக்கவி செய்திருக்கின்றார்கள்.

திருகோணமலையில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கோணேசர் பெருமானையும் மாதுமையம்மாளையும் பற்றிக் கூறும் தலபுராணம் தட்சிண கைலாச புராணம் ஆகும். ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்துவான் சிங்கைச் செகராசசேகரன் அவர்களால் எழுதப்பட்டது. கார்த்திகேயப்புலவர் அவர்கள் தமது அறுபத்தொன்பதாவது வயதில் 1887 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அவரது மகன் கா.சிவசிதம்பர ஐயரினால் பதிப்பிக்கப்பட்ட தட்சிண கைலாசபுராணத்தின் ஏட்டுப்பிரதியை வேறு பிரதிகளுடன் ஒப்பிட்டு பரிசோதிப்பதற்கு உதவினார். இந்நூலின் முன்பக்கத்தில் பின்வருமாறு குறிப்படப்படுகின்றது. ‘யாழ்ப்பாணத்து காரைநகர் இயற்றமிழ் போதனாசிரியர் கார்த்திகேய ஐயர் அவர்களினால் பலபிரதிகள் கொண்டு பரிசோதிக்கப்பட்டு அவரின் புத்திரர் கா.சிவசிதம்பரஐயரினால் கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. (1887)’

‘காரைநகர்’ என்ற இடப்பெயர் 12.9.1923 தொடக்கம் ஆட்சியாளர்களின் அங்கீகாரத்துடன் வழங்கி வருகின்றபோதிலும், முதன்முறையாக 1887 இல் தட்சிண கைலாச புராணம் பதித்த கா.சிவசிதம்பர ஐயரினால் மேற்படி பக்கத்தில் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

கார்த்திகேயப் புலவரினால் இயற்றப்பட்ட திண்ணபுரத் திரிபநதாதியின் கீழ்வரும் காப்பு பாடலிலும் ‘காரைநகர்’ என்ற பெயர் இடம்பெறுவதைக் காணலாம்.

திருவேளை யட்டவன் காரைநகருறுந் திண்ணபுரத்
தொருவேழை பங்கினன் மேலொரந் தாதியையோதுதற்குப்
பெருவேளை பூண்டு பிரார்த்திக்கு மன்பர் பிறவியெனுங்
கருவேழையுந்துடைத்தாளுங் கணபதி காப்பதுவே

அக்காலத்தில் தொடங்கப்பட்ட அறிவியல் இதழாகிய ‘விஞ்ஞான வர்த்தனி’ என்ற இதழுக்கும் கார்த்திகேயப் புலவர் பல சிறப்புப் பாக்களை இயற்றியிருந்ததோடு ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் சிலேடையாகவும் ‘மயக்கந் தீராகம நூல் யாவும் பார்த்து.. ‘ என்று தொடங்கும் செய்யுளில் பாடியிருந்தார்.

புலவர் தனிப்பாக்கள் யாப்பதிலும், சோதிட, மருத்துவ விடயங்களிலும், சிந்தாந்த ஆராய்ச்சியிலும் இல்லாத ஏடுகள் வாங்கி எழுதுவதிலும் தமது வயோதிப காலத்தைக் கழித்து வந்தார். இக்காலத்தில் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியும், இதழாசிரியரும், ஈழத்தமிழானாக இருந்தும் தமிழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு புதுக்கோட்டையில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவரும், இராவ்பகதூர் விருதுபெற்றவரும், பாண்டிய மன்னனின் கைகளுக்கே அகப்படாமல் இழக்கப்பட்டதாகக் கருதப்பட்ட தொல்காப்பியத்தை அர்ப்பணிப்புடன் தேடிக்கண்டுபிடித்து பதிப்பித்தவருமாகிய சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சென்னையிலிருந்து யாழ் கொழும்புத்துறையில் வந்து தங்கிருந்தபோது புலவர் அவர்களைச் சந்தித்து நட்புடன் அளவளாவிக்கொண்டிருந்தபோது ‘கற்றைச் சடையுடைத் தேவே கயிலைக்கறைக் கண்டனே’ என்னும் ஈற்றடியைக் கொடுத்து முதல் மூன்று அடிகளையும் பாடி கலித்துறைச் செய்யுளை முடிக்குமாறு புலவரை வேண்டவே

எற்றைக்கு முன்னடிபேணுவரமே யெனக் கருள்வை
பற்றைக் களைந்திடு ஞானியர் போற்றும் பழம் பொருளே
பெற்ற முகைத்திடு மங்கையொர் பங்கபிறையுலவு
கற்றைச் சடையுடைத் தேவேயிலைக் கறைக்கண்டனே

என்று பாடி முடித்தார். இதனைக் கேட்ட பிள்ளையவர்கள் வியப்படைந்து முன்னரிலும் அதிகநேசம் பாராட்டி மகிழ்ந்தனர்.

புலவர் தமது வாழ்நாளின் இறுதிக்காலத்தை வீணடிக்காது இறைவனைப் பாடித்துதிப்பதிலும், பிரபந்தங்கள் இயற்றுவதிலும் காலத்தைக் கழித்தார். திருப்போசை வெண்பா (கருங்காலி முருகப்பெருமான் மீது பாடப்பட்டது), நகுலேசரியமக அந்தாதி, வண்ணைத் திரிபந்தாதி, திண்ணைபுரத் திரிபந்தாதி, முதலிய பிரபந்தங்களைப் பாடினார்.

புலவர் அவர்கள் தமது எண்பதாவது வயதிலே விளம்பி வருடம் புரட்டாதி மாதம் எட்டாம் திகதி (22.09.1898) அன்று நெற்றியில் நீறணிந்து சிவபெருமானை எண்ணியவாறு ‘எண்ணுகேனென் சொல்லியெண்ணுகேனோ’ என்னும் பதிகத்தையே யோதும்படிசொல்லி நடராசப் பெருமானின் திருவடி நிழலையடைந்தார். சி.வை.தாமோதரம்பிள்ளை, அ.வேன்மயில்வாகனச் செட்டியர், திருமயிலை வித்துவான் சண்முகம்பிள்ளை ஆகியோர் மற்றும் புலவரின் புதல்வர்கள் மூவரும் புலவரின் மறைவுக்கு சரமகவிகள் பாடியள்ளனர்.

நற்றமிழ் அன்னைக்கு நாளெல்லாம் நல்லணி புனைந்து அழகு செய்த நறுந்தமிழ் புலவர்கள் வரிசையிலும், ஆங்கிலேயர் ஆட்சியில் சைவசமய பாரம்பரியத்தைக் காத்துநின்ற ஈழத்து வீரசைவர்கள் வரிசையிலும் காரைமாகரக் களபூமிப் பதியில் அவதரித்து வாழ்ந்து தேன் இனிய தமிழில் மேன்மை கொள் சைவசமயத்தைப் போற்றிப் பாவாயிரம் பாடிய கார்த்திகேயப்புலவர் அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. அந்தவகையில் கார்த்திகேயப் புலவர்கள் திருநாமத்தையும், அவர் யாத்த அரிய சைவத்தமிழ் இலக்கியங்களையும் பேணிப் போற்றி வாழ்த்தி வணங்குவது நம் கடனாகும்.

காரை அன்னை பரவுங் கவிமணி
ஏரை யுற்றநல் ஏந்தல் வேதியன்
சீரை யுற்றுயர் கார்த்தி கேயன்றன்
பேரை நித்தலும் பேணி வழுத்துவோம்

அண்மைக்காலத்தில் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் பணி செய்து மறைந்த சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி, கலாநிதி.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் தாய்வழிப்பூட்டனே கார்த்திகேசுப் புலவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இக்கட்டுரையில் கார்த்திகேயப் புலவர் அவர்களின் வரலாறு தொடர்பான தகவல்களுக்கு ஆதாரங்களாக அமைந்த நூல்கள்:
1. புலவரின் இளைய மகனும் மதுரை தமிழ்ச் சங்க வித்துவானும் சைவசமயச் சொற்பொழிவாளருமாகிய கா.சிவசிதம்பர ஐயர் எழுதிய பிரம்மஸ்ரீ மு.கார்த்திகேயப் புலவர் சரித்திரம் (1908)
2. புன்னாலைக் கட்டுவன் வித்துவான் பிரம்மஸ்ரீ சி.கணேச ஐயர் எழுதிய ஈழநாட்டு தமிழ் புலவர் சரிதம் (1939)
3. கலாநிதி ஆ.சதாசிவம் அவர்கள் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (1966)
4. தென்புலோலியோர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் (1967)
5. வித்துவான் கு.ஓ.ஊ நடராசா அவர்கள் எழுதிய காரைநகர் மான்மியம் (1971)
6. சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் எழுதிய காரைநகரில் சைவசமய வளர்ச்சி (1982)
7. காரைநகர் தமிழ் வளர்ச்சி கழகம் வெளியிட்ட திக்கைத் திரிபந்தாதி (1991)
8. கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிட்ட திண்ணபுர அந்தாதி மூலமும் உரையும்; (2011)

 

மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர் பொன்னாவளை, களபூமி, காரைநகர் (முதலாவது ஆண்டு நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வரையப்படுகின்றது)

 

மக்கள் மனம் கவர்ந்த பாக்கியம் ரீச்சர்
பொன்னாவளை, களபூமி, காரைநகர்
(முதலாவது ஆண்டு நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வரையப்படுகின்றது)

                                        “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும்

                                          தெய்வத்துள் வைக்கப்படும்”

இது வள்ளுவர் தந்த திருக்குறளாகும். எவரொவர் இப்பூவுலகில் பிறந்து மற்றவர்கள் வாழ வேண்டுமென்பதற்காகத் தன்னையே அர்ப்பணித்துச் சேவை புரிகிறாரோ அவரை இறைவனாகவோ அல்லது இறைதூதராகவோ கருதும் நிலை தோன்றுகின்றது.

இந்த வகையில் உற்று நோக்கும் போது களபூமி எனும் கிராமத்தின் கல்வி மற்றும் புகழ் மேன்மையடைய வேண்டும் எனும் நோக்கில் திக்கரை மற்றும் நந்தாவில் பகுதிகளில் பாலர் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்திய பாக்கியம் ரீச்சரின் தன்னலமற்ற சேவையையும் கருத இடமுண்டு. துள்ளித்திரிந்த அப்பகுதிச் சிறார்களின் துடுக்கடக்கி அவர்கள் எல்லோரையும் ஒரு நிலைப்படுத்தி கற்க வைத்த பெருமை இவரையே சாரும். இதனை செய்வது மிகமிகக் கஷ்டம் என்பதை எல்லோரும் அறிவர். இருந்தும் அதனையும் தாங்கிக் கொண்டு சேவையாகச் செய்த பாக்கியம் ரீச்சரைப் போற்றாமல் இருக்க முடியாது.

ஈழவள நாட்டின் வடபால் இலங்கிடும் யாழ் நகரின் அருகே ஈடிணையில்லாது துலங்கிடும் நன்நகராம் காரைநகர் எனும் பதிதனிலே காராளர், கல்வியாளர்கள், கச்சிதமான வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் போன்ற பல்துறை பரிணம வளர்ச்சியுடன் பலரும் மெச்சிட வாழ்ந்து வரும் எமமூரில் ஈழத்துச் சிதம்பரனார் சிவநடனம் புரிய, திக்கரை முருகன், தெருவடிப் பிள்ளையார் அருளாட்சி புரிய ஆலயங்களின் மணியோசையின் நாதம் இதமாக ஒலிக்கும் களபூமி, பொன்னாவளைக் குறிச்சியில் வாழ்ந்த கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளாகப் பாக்கியம் ரீச்சர் 11.04.1957ல் பிறந்தார்.

இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்த காரணத்தினால் தாயாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு அக்காவும் உடன் பிறந்தவராவர். கணவனை இழந்த கைம்பெண்ணான் இவரின் தாயார் இரு பெண் குழந்தைகளையும் பாசத்தோடு வளர்க்கலானார்.

பள்ளிப்பருவம் எய்திய பாக்கியம் ரீச்சர் தனது ஆரம்பக்கல்வியைக் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திலும், மேற்படிப்பை வலந்தலையில் உள்ள காரைநகர் இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தார். அங்கு க.பொ.த (சாதாரண) பரீட்சையில் சித்தியடைந்ததும் (Nursary Training) பாலர் பாடசாலை நடாத்துவதற்கான பயிற்சி வகுப்புக்களில் படித்து சித்தியும் பெற்றார்.

இதனை தொடர்ந்து 1970 களின் ஆரம்பத்தில் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தின் வடகிழக்குப் பக்கமாக அமைந்த கட்டடத்தில் சிறுவர் பாடசாலையை ஆரம்பித்தார். இப்பாடசாலை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தது. இவரின் கற்பித்தல் முறையையும், திறமையையும் கண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து இவரது பாடசாலையில் சேர்த்தனர். மாணவர் தொகை அதிகரித்த போதிலும் இவரது கற்பித்தல் முறையில் எவ்வித மாற்றமுமின்றி திறமையாகக் கற்பித்து வந்தார்.

இவ்வாறு வகுப்புக்களை நடாத்திவரும் வேளையில் களபூமியில் உள்ள விளானை, நந்தாவில் குறிச்சிகளில் வாழ்ந்த பெற்றோரின் வேண்டுகோளின் பேரில் இன்னொரு சிறுவர் பாடசாலையை அப்பகுதியில் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் பாக்கியம் ரீச்சருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகப் பாக்கியம் ரீச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க 1978ம் ஆண்டு களபூமி நந்தாவிலைச் சேர்ந்த பொன்னம்பலம் சதாசிவம் (VPS) அவர்களின் இரண்டாவது மகனான தேவராசா வீட்டில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பத்துப்பிள்ளைகளுடன் ஆரம்பமான இப்பாடசாலையில் நாளடைவில் 25க்கும் மேற்பட்ட சிறார்கள் கல்விகற்றனர். இதனால் திக்கரைப் பாடசாலையைக் காலையிலும், நந்தாவில் பாடசாலையை மாலையிலும் நடாத்தி வந்தார்.

இப்பாடசாலையில் கல்வி கற்ற சிறார்களில் பலர் வீட்டில் இருந்து வரும் பொழுது முரண்டு பிடித்துக் கொண்ட வந்தாலும் பாக்கியம் ரீச்சரைக் கண்டதும் மகுடி வாசிப்புக்கு அடங்கிய பாம்பைப் போல அடங்கி விடுவார்கள். இது ஆசிரியரின் சாமர்த்தியத்தை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் எல்லோரையும் நல்வழிப்படுத்தி கல்வியிலும், விளையாட்டுகளிலும் திறமை பெற்றவர்களாக துலங்க வைத்த பெருமையெல்லாம் பாக்கியம் ரீச்சரைச் சாரும். ஒரு இல்லம் சிறந்த முறையில் பலம்மிக்கதாக அமைய வேண்டுமானால் அதன் அத்திவாரம் பலம் மிக்கதாக இருத்தல் அவசியமாகின்றது. அதே போலத்தான் கல்வியில் ஒரு மாணவன் சிறந்து விளங்க வேண்டுமானால் அவனுக்கு பாலர் பாடசாலைக் கல்வி சிறப்புமிக்கதாக அமைய வேண்டியது கட்டாயமாகும். அப்படிப்பட்ட சிறந்த கல்வியை ஊட்டியவர் இவரே.

காரைநகர் வாரிவளவு நல்லியக்கச் சபை மூலம் எல்லோராலும் பட்டுமாமா என அழைக்கப்படும் சரவணமுத்து பத்மநாதன் அவர்களால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் தவறாது ஒவ்வொரு ஆண்டும் தனது சிறார்களை பங்குகொள்ள வைத்தது மட்டுமன்றி ஏனைய சிறுவர் பாடசாலைகளுடன் போட்டியிடவைத்து ஆகக் கூடிய பரிசில்களைச் சிறார்களுக்குப் பெற்றுக் கொடுத்த பெருமையும் இவரையே சாரும்.

இஃது இவ்வாறிக்கத் திருமணப் பருவம் எய்திய தனது இராண்டாவது மகளான பாக்கியம் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய தாயார் காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மகனான நடராஜா அவர்களைத் திருமணம் செய்துவைத்தனர்.

பாக்கியம் நடராசா ஆகியோரின் இல்லறம் நல்லறமாக நடைபெற்றதன் பயனாக குகராஜ், ஆனந்தராஜ், கோகுலராஜ், சண்முகராஜ் ஆகிய நான்கு மழலைச் செல்வங்களைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைகளுக்குப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து பள்ளிக்கும் அனுப்பிக் கல்வியில் சிறக்கவைத்தார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இவர் குடும்பத்துடன் காரைநகரை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் குருநாதர் ஒழுங்கையில் வசிக்கலானார். எவரையும் இன்முகம் காட்டி வரவேற்கும் பாங்குடையவர் பாக்கியம் ரீச்சர். அதே நேரம் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்கள் இடத்திலும் சரி பெற்ற பிள்ளைகளிடத்திலும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் இவர் இரக்க சிந்தையும் படைத்தவர். இவரிடம் கல்வி கற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றே கூறவேண்டும். இவர்களில் பலர் வெளிநாடுகளில் சீரும் சிறப்புமாக வாழ்க்கை நடாத்தி வருவதுடன் இன்னும் பலர் உயர் பதவிகளிலும் காணப்படுகின்றனர்.

அத்துடன் அவரின் மாணவர் திருமணம் முடித்து மனைவி பிள்ளைகளுடன் செல்லும் பொழுது கூட குருபக்தியை மறவாது அவருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துவதையும், ஆசிரியர் சில மாணவர்களின் திருமணங்களில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்த மாணவரும் வாழ்வில் உயர் நிலையில் இருப்பதைப் பார்த்து பெற்றோர்களுடன் சேர்ந்து ஆசிரியரும் ஆனந்தப் பரவசம் அடைகின்றனர். இது பாக்கியம் ரீச்சருக்கும் சாலப் பொருந்தும். இங்கே மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன் பொருள் தெளிவாக உணர்த்தப்படுகின்றது. பாக்கியம் ரீச்சர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பெற்றோர் பூரண ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருந்த அதே வேளை ஆசிரியர் பெற்றோர் உறவும்; வலுப் பெற்றிருந்தது.

இவ்வாறு நன்றாக வாழ்ந்து வந்த பாக்கியம் ரீச்சர் குடும்பத்தில் சூறாவளி வீச ஆரம்பித்தது. நோய் வாய்ப்பட்டிருந்த பாக்கியம் ரீச்சர் கடந்த 28.03.2018ல் இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவையிட்டு துயருறும் உள்ளங்களுடன் இணைந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திக்கரை முருகன் அருள் வேண்டிப் பிரார்த்திப்போமாக!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

தம்பையா நடராசா
நந்தாவில், களபூமி
காரைநகர்

 

“காரைதீபம் தந்த ஞானதீபம்” சுவாமி முருகேசுப் பெருமான் (பேப்பர் சுவாமி) பற்றிய கட்டுரை.

KARAITHEEPAM

அமரர் மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி. கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் (25.04.2018) இன்றாகும். அவரின் நினைவுதினத்தையொட்டிய கட்டுரை எடுத்துவரப்படுகின்றது.

 

அமரர் மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி. கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் (25.04.2018) இன்றாகும்.

அவரின் நினைவுதினத்தையொட்டிய கட்டுரை எடுத்துவரப்படுகின்றது.

 

சைவத்துக்கும் செந்தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய
சான்றோராகிய பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள்
அவர்கள்

 

 

 

 

 

 

 

(சிவநெறிச்செல்வர் திரு. தி. விசுவலிங்கம்,
தலைவர், கனடா சைவசித்தாந்த மன்றம்)

 

சிவனடி மறவாத சிந்தையாளராக விளங்கி வந்தவரும் சைவத்துக்கும் செந்தமிழுக்கும் அரும்பணிகள் ஆற்றி வந்தவருமான சான்றோராகிய சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், தத்துவக்கலாநிதி, பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் தமது 98 ஆவது அகவை நிறைவுபெற்று 99 ஆவது அகவை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் 25-04-2015 சனிக்கிழமை அதிகாலை 3:00 மணி போல் சிவபதம் – திருவடிக்கலப்பு எய்தினார் என்ற செய்தி அறிந்து, அவர் இறைவன் திருவடியில் பேரின்பம் துய்க்க, சிவபெருமான் திருவருளை வேண்டி வணங்கி வருகிறோம். குருக்கள் ஐயாவின் பிரிவு அவரின் மக்களுக்கும், குடும்பத்தவர்க்கும், சைவத்தமிழ் அன்பர்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். பிரிவுத்துயர் நீங்கவும் அமைதி பெறவும் சிவபெருமான் திருவருளைப் பற்றிக் கொள்வோம்.

குருக்கள் ஐயா கனடா சைவசித்தாந்த மன்றத்தின் காப்பாளர்களில் ஒருவராகவும், “அன்புநெறி” சிறப்பாசிரியர்களில் ஒருவராகவும் விளங்கி மன்றத்தின் பணிகள் சிறப்புற நடை பெற்றுவர, ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், சைவசமயகுரவர் பாடசாலை மாணவரின் வளர்ச்சியில் பாராட்டுகளும், ஊக்குவிப்புகளும் அளித்தவர், “அன்புநெறி” யின், திருவருட்செல்வர் விழா, திருவாதிரை – திருவாசக விழா மலர்கள் என்பவற்றுக்கெல்லாம் அவ்வப்போது அருளாசி உரைகளும் கட்டுரைகள் எழுதியும், அருமையான கட்டுரைகளைத் தேடி அளித்தும், மற்றும் அருமையான சிறந்த நூல்களையும் அளித்து மன்றத்திற்கு பெருமையும் உயர்வும் அளித்த பெருமகனாவார்.

குருக்கள் ஐயா அவர்கள் நல்லாசிரியராக, ஆளுமை மிக்க அதிபராக, பத்திரிகையாளராக, சமூகத்தொண்டராக, எழுத்தாளராக, பதிப்பாசிரியராக விளங்கியவர். அவர் ஆன்மீகவாதியாக, சிவனடிமறவாத சிந்தையாளராக, திருமுறைகளை தினமும் ஓதுபவராக தமது திருவடிக்கலப்பு நிகழும்வரை வாழ்ந்து திருவாசகப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே சிவபதம் எய்தியவர்.

குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலைமை அழுக்காறின்மை, அவாவின்மை ஆகிய குணங்கள் விளங்கும் மனிதநேய மிக்க அந்தணச் செம்மல் குருக்கள் ஐயா ஆவார்.

சைவப் பாரம்பரியத்திற்கும் சிவாச்சாரிய பாரம்பரியத்திற்கும் நல்லதோர் இலக்கண புருடராகத் திகழ்ந்தவர். எளிமையான வாழ்வையே தனது வாழ்வாகக் கொண்டு விளங்கிய பண்புடையவர். பிறர் நலம் பேணும் பண்பும் பிறர்க்கு உதவும் பண்பும் மிக்கவராய் இருந்தார். அவர் கடமை உணர்வும், செயற் திறன் மிக்க ஆற்றலும் கொண்ட கர்ம வீரன் ஆவார்.

1916 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி ஈழத்துச் சிதம்பரத்தில் அரும்பணியாற்றிய சிவத்திரு கணபதீசுவரக் குருக்கள் அவர்களுக்கும் சிவயோக சுந்தராம்பாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் உத்தரகோசமங்கை என்னும் சிவாலயத்தில் பரம்பரையாக பூசை செய்த அந்தணர் மரபில் உதித்தவர்.

தமது ஆரம்பக் கல்வியை, தந்தையார் சிவத்திரு ச. கணபதீசுவரக் குருக்களிடத்திலும் பண்டிதர் ச. பஞ்சாட்சரக் குருக்கள் மற்றும் பண்டிதர் சி. சுப்பிமணிய தேசிகர் ஆகியோரிடத்திலும் பெற்றவர். ஒருவன் தான் சார்ந்துள்ள சமயத்தின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு கற்க வேண்டிய நூல்களை ஐயந் திரிபறக் கற்றுத் தெளிய வேண்டும் என்று நாவலர் காட்டிய நல்வழிக்கேற்ப சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் சமயம், தமிழ், மற்றும் சமஸ்கிருதம் சார்ந்த கல்வி அறிவை விருத்தி செய்தார். தாம் கற்க வேண்டிய நூல்களையும் கல்வியையும் மகாவித்துவான் கணேசையா போன்ற தக்கவர்களிடம் பாடங் கேட்டுக் கற்றறிந்தார்.

குருக்கள் தமது புலமைத்துவத்தை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் பின்னர் பரமேசுவர பண்டித ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் கற்றுப் பண்டித பரீட்சையிலும், பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சையிலும் சித்தியடைந்ததன் மூலம் செந்தமிழ்ப் புலமை மிக்க நல்லறிஞராகத் திகழும் வாய்ப்பினைப் பெற்றார்.

இவ்வாறு தமது கல்வியறிவில் சிறந்து விளங்கிய சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் 1940 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பணியாற்றிய காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையால் நடத்தப்பட்டு வருகின்ற அகில இலங்கைச் சைவசமய பாடப்பரீட்சைக் குழுவில் அங்கம் வகித்துப் பெருஞ் சேவை செய்து வந்தார். அன்றியும் மாலை நேரத்தில், தினகரன் பத்திரிகையில் செய்திப் பிரிவில் பணியாற்றினார். ஞாயிற்றுக் கிழமைகளில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார். பின்னர் அவரது ஆசிரியப்பணி பல்வேறு பாடசாலைகளிலும் தொடர்ந்ததன் மூலம் இப்பணியில் தமது அனுபவத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தினார். சிவத்திரு குருக்கள் அவர்கள் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்து 1970 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் மாணவர்களது அறிவை விருத்தி செய்யும் நோக்கில் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிடுவதன் மூலம் தமது கல்விப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார். தமது பெற்றோர் வழியிலும் பேராசான்கள் மூலமும் தாம் பெற்ற தமிழ்ப் புலமையை மற்றவர்களுக்கு ஒழிவு மறைவின்றி வாரி வழங்க சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் என்றும் பின்னின்றதில்லை. அவர் ஆக்கிய நூல்களும் பதிப்பித்து வெளியிட்ட நூல்களும் அவரது அயராத முயற்சிக்குரிய சான்றுகளாக அமைகின்றன.

சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களின் நிறுவன ரீதியான பணிகள் அடுத்துச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர் மணிவாசகர் சபை ஆகியவற்றின் தாபகராக விளங்கியவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள். இவ்விரு நிறுவனங்கள் ஊடாக தமது நீண்டகால அனுபவத்தினைச் சமகால இளந் தலைமுறையினரின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்வதில் இவர் மிக்க ஆர்வமுடன் விளங்கியவர். கடமையில் அவர் கடைப்பிடித்து வரும் ஒழுங்கு இவ்விரு நிறுவனங்களும் சிறந்து வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது.

தமது தமிழ்ப் புலமையை மற்றவர்களின் அறிவு விருத்திக்காகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்ற பல நூல்களை சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் ஆக்கியவர். இவரது நூலாகிய “காரைநகரில் சைவசமய வளர்ச்சி” (1982) தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடாக அமைந்தது.

சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் பதிப்பித்த நூல்களின் வரிசையில் கந்தர் மட சுவாமிநாத பண்டிதரின் “திருமுறைப் பெருமை”, பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவரின் “திண்ணபுர அந்தாதி”, “தன்னை அந்தாதி”, “திருப்போசை வெண்பா”, “திக்கை அந்தாதி”, மகாவித்துவான் F.X.C நடராசாவின் “நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்”, “வினைத் தொகை”, “தெரிநிலை வினையெச்சம்”, பண்டிதர் மு. கந்தையாவின் “நாவலர் பிள்ளைத் தமிழ்”, “ஷேத்திரத் திருவெண்பா”, திரு. ச. சபாபதி அவர்களின் “அருள் நெறித் திரட்டு” ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் சிறப்பு மலர்களுக்குரிய ஆசிரியராக இருந்து வெளியிட்டவற்றுள் “காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”, “காரைநகர் மணிவாசகர் சபைப் பொன் விழா மலர்” (1993), “காரைநகர் – வியாவில் ஐயனார் கோயில் கும்பாபிஷேக மலர்” ஆகியவற்றுடன் திருவாதிரை மலர்கள் 5 ஐயும் குறிப்பிடலாம்.

திருவாசக பாராயண சூழலில் வளர்ந்ததனாலும், தாயார் திருவாசகத்தில் ஏற்படுத்திய பற்றுணர்வினாலும் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களுக்கு திருவாசகத்தில் தீராத பற்று ஏற்பட்டது. அதுவே மணிவாசகர் சபையை ஆரம்பிக்க ஏதுவாயிற்று.

சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களால் யோகர் சுவாமிகளுடைய ஆசியுடன் காரைநகர் மணிவாசகர் சபை 01. 01. 1940 ஆரம்பிக்கப் பெற்றது. இச்சபையின் வளர்ச்சிக்குப் பல சைவச் சான்றோர் உதவியதையும் குருக்கள் ஐயா நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். காரைநகர் வாழ் சைவப் பெருமக்களது அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய உன்னதமான அன்பராகவே குருக்கள் ஐயா திகழ்ந்துள்ளார் அவரது சமயப் பணியில் காரைநகர் மணிவாசகர் சபையின் தாபிதமும் தொடர்ந்து அச்சபை மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுமே முக்கியத்துவம் பெற்றன. இச்சபையின் மூலம் காரைநகரில் மக்களிடையேயும் இளந்தலை முறையினர் இடையேயும் திருவாசகக் கலாச்சாரத்தினைத் தோற்று வித்தவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள். இச் சபைக்கும் தமிழகத்துக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் பெரும்பாலான ஆதீனங்களுடன் நெருக்கமான உறவை வளர்த்தவர் குருக்கள் அவர்கள். 1955 ஆம் ஆண்டு முதல் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவெம்பாவைக் காலத்தில் மணிவாசகர் விழா நடைபெறத் தொடங்கியது. அந்த ஆண்டு தொடக்கம் விழாக்கள் தொடர்ந்து நடைபெறச் செய்வதிலும் தமிழகத்திலுள்ள அறிஞர்களுடனும் எம் நாட்டு அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களை மணிவாசகர் விழாக்களில் சொற்பொழிவாற்றச் செய்வதிலும் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் பெரும்பணி ஆற்றி வந்தவர்.

குருக்கள் ஐயா தனது தந்தையார் அருமையாகச் சேர்த்த பழைய கிடைத்தற்கரிய ஆகமங்கள், பத்ததிகள், சமய நூல்கள் இலக்கிய நூல்கள் உள்ளிட்ட சிறந்த ஒரு நூலகத்தைப் பேணி வந்தவர். அவற்றைப் பாதுகாத்து தாம் நிறுவிய மணிவாசகர் சபைக்கு 6000 நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார். ஆய்வுகளின் போது அறிஞர்களுக்குத் தேவைப்படும் முக்கியமானவற்றையும் மற்றும் மிக அருமையானவையுமான நூல்களை மனமுவந்து உபகரித்து உதவி வந்தவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள்.

குருக்கள் அவர்கள் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தவர் பெருமை, பாராட்டு, கௌரவம் எதனையும் எதிர் பார்க்காமல் கடமை ஆற்றும் கர்ம வீரன்.  “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற திருநாவுக்கரசு நாயனாரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து வந்தவர். அனைத்து அன்பு நெஞ்சங்களோடும் சளைக்காமல் கடிதத் தொடர்பு கொண்டு தமது அன்புப் பிணைப்பையும் உறவையும் வளர்த்துக் கொள்வதோடு காரைநகரில் தாம் தாபித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அனைவரையும் அரவணைத்துச் செயலாற்றுவதில் வல்லவராக விளங்கி வந்தவர்.

குருக்கள் ஐயா அவர்கள் எழுதிய, பதிப்பித்த நூல்கள் பல. ஏட்டுப்பிரதிகளில் இருந்த பலவற்றை அச்சமைத்துப் பதிப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்தது போல், ஈழத்தில் பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களும் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவர் பதிப்பித்த நூல்களுள் தலை சிறந்து விளங்குவது நவாலியூர் புலவர்மணி சோ. இளமுருகனார் ஆக்கிய “திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம்” ஆகும். இந்நூலின் உரையாசிரியர் நூலாசிரியரின் வாழ்க்கைத் துணைவியாராகிய பண்டிதைமணி இ. பரமேசுவரியார் ஆவார். இந்நூலில்,

“அந்தணர்க்குண் மணியனையான் அருங்கலைகள்
மிகப் பயின்றான் அருமை ஆசான்
சந்தமுஞ் சிவனன்பு தழைக்கின்ற
உள்ளத்தான் தகைசால் நண்பன்
கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணபுரங்
கவினோங்குங் கருத்து மிக்கான்
வந்தவருக்கு அமுதளிப்பான் வண்பெயர்கொள்
வைத்தீசுவரக் குருக்கள்!”

எனப் புலவர்மணி சோ. இளமுருகனார் பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவைப் போற்றிப் பாடியுள்ளார்.

தமிழுக்கும் சைவத்திற்கும் கடந்த பல தசாப்தங்களாக அரிய பணியாற்றி வந்த சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு அகவை 79 ஆகும் போது அகில இலங்கை கம்பன் கழகம் 1995 ஆம் ஆண்டு “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கிப் பொன்னாடை போர்த்திக் பொற்கிழி வழங்கிக் கௌரவித்தது.

கனடா சைவ சித்தாந்த மன்றம், செப்ரெம்பர் 22, 2001 இல் குருக்கள் ஐயா அவர்களின் 85 ஆவது அகவை நிறைவின் போது “சிவத்தமிழ் வித்தகர்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்ததோடு அவர் ஆற்றிய சைவத்தமிழ்ப் பணிகளை ஆவணப்படுத்தி “வைத்தீசுவரர் மலர்” என்பதனையும் வெளியிட்டுப் போற்றிப் பெருமை பெற்றது.

குருக்கள் ஐயாவின் 86 ஆவது அகவை நிறைவின்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவரின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான சைவத் தமிழ்த் தொண்டுகளை மதிப்பீடு செய்து அவருக்கு “தத்துவக் கலாநிதி” என்ற பட்டத்தை 12-10-2002 இல் நடைபெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்நிகழ்வு குருக்கள் ஐயாவிற்கும் பல்கலைக் கழகத்திற்கும் பெருமை கொடுப்பது மட்டுமல்ல சைவத்தமிழ்ப் பெருமக்களுக்கும் பெரும் மகிழ்வையும் நிறைவையும் கொடுத்தது.

தத்துவக் கலாநிதி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 91 ஆவது அகவையில், புலவர்மணி, பண்டிதர் க. மயில்வாகனனார் அவர்களால் இயற்றிய ஆண்டிகேணி ஐயனார் புராணம் டிசம்பர் 2007 இல் உரையுடன் காரைநகர் மணிவாசகர் சபை மூலம் வெளியீடு செய்வித்தார்.

பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 95 ஆவது அகவையில் தாம் முன்னர் பதிப்பித்த திண்ணபுர அந்தாதி (மூலமும் உரையும்) என்ற நூலின் மூன்றாம் பதிப்பினை, கனடா சைவசித்தாந்த மன்றம் மூலம் யூன் 2011 இல் வெளியீடு செய்வித்தார்.

சிவத்தமிழ் வித்தகர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 97 ஆவது அகவையில் தாம் பலகாலமாகத் தொகுத்துக் கொண்டிருந்த சைவக்களஞ்சியம் என்ற நூலை தொகுப்பாசிரியராக இருந்து, வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மூலம் டிசம்பர் 2013 இல் வெளியீடு செய்வித்தார்.

சான்றோராகிய குருக்கள் ஐயா அவர்கள் தமது 98 ஆவது அகவையில் தாம் தாபித்த காரைநகர் மணிவாசகர் சபை, 75 ஆண்டுகள் நிறைவுகண்டு பவளவிழாவின் தொடக்கமாக டிசம்பர் 2014 இல் நடைபெற்ற மணிவாசகர் சபையின் பவள விழா (1940 – 2015) மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மகிழ்வோடும் மனநிறைவுடனும் எல்லோரையும் ஆசீர்வதித்தார்.

சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் சிவானந்த ஞான வடிவேயாகி சிவபெருமான் திருவடி நீழலில் பேரின்பம் பெறுவார். அவர் அன்பர்கள் உள்ளங்களில் என்றும் கலங்கரை விளக்காக நின்று ஒளி ஏற்றுவார்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

 

குறிப்பு: மகாவித்துவான் F. X. C. நடராசா அவர்கள், பண்டிதமணி தத்துவ கலாநிதி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களுக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குருக்கள் ஐயா அவர்கள் எழுதிய “காரைநகரில் சைவசமய வளர்ச்சி” என்ற நூலும் இணைக்கப்பட்டுள்ளது.

1

 

2

 

3

 

4

 

5

 

6

 

7

 

 

Vytheeswara Kurukkal Book 1982

மறைந்தும் மறையாத மாமனிதர் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

மறைந்தும் மறையாத மாமனிதர்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

yogo

 

 

 

 

 

 

 

கலாபூஷணம் பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்

 

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாய்  சிறந்த அறிவுப் புலமை மிக்க பண்பாட்டாளராய், ஊருக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய மனப்பான்மை உடையவராய் பொருளாதாரம் பற்றிய தெளிந்த சிநதனையாளராய் கல்வியின் மூலம் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத இலட்சிய நோக்கம் கொண்டவராய் வாழ்ந்தவரே அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள்.

ஆன்மீகப்பணி கல்விப் பணி, சமூகப் பணி, பொருளாதாரப் பணி, அரசியற் பணி என்ற வகையில் பன்முகப்பட்ட சிந்தனையாளராய் விரிந்து பரந்த தமது செயற்பாடுகளைத் தூர நோக்கில் அமைத்துக்கொண்டமையால் இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.

                            "நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
                              பண்பு பாராட்டும் உலகு"   – (994)

1916ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த இவரது நூற்றாண்டு விழா இவ்வாண்டு அதே தினத்தில் அவர் 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த காரைநகர் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் கொண்டாடப்பட்டது.

பின்னர் அவரது அன்பர்கள் ஆதரவாளர்கள் ஒனறிணைந்து வெற்றிநாதன் அரங்கில் இவ்விழாவைக் கொண்டாடினர். இம்மாதம் கனடா வாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் கனடாவிலும், இன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் சுவிஸிலும் கொண்டாடுகின்றனர். இதற்கு அவரது முழுமையான செயற்பாடுகளே காரணம்.


                            "பிறப்பொக்கும் எல்லா உயிர்;க்கும் சிறப்பொவ்வா
                             செய்தொழில் வேற்றுமை யான்" – (972)

அவரது செயற்பாடுகள் யாவும் நம் கண்முன் விரிந்து பரந்து கிடக்கின்றன. எனவே அவர் காரைநகர் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்து வருகிறார்.

காலத்தால் அழியாத தன்னலமற்ற சேவைகளைச் செய்த ஒரு பெரும் சாதனையாளர். சமூக சிந்தனையாளர், நாட்டுப்பற்றாளர்.

நாட்டு முன்னேற்றங்கருதி அவர் செய்த செயற்பாடுகள் ஒன்றா? இரண்டா?

1.    காரைநகர் – சிவன்கோயில் வீதி (புதுறோட்)

2. காரைநகர் – கோவளம் வீதி( வெளிச்சவீடு) முதலான வீதிகளையும்

3.    காரைநகர் மக்களுக்கான மின்சார வசதிகளையும்

4.    குழாய்நீர் – குடிநீர் வசதிகளையும் அரச உதவிகளைப் பெற்று ஏற்படுத்திக் கொடுத்தார்

5.    தபாற் கந்தோருக்கான புதிய கட்டடம்

6.    வியாவில் – உபதபால் நிலையம்

7.    கிராமிய வங்கி

8.    இலங்கை வங்கிக்கான கட்டட நிர்மாண உத்தேசம்

9.    காரைநகர் – துறைமுகத்திற்கு அண்மையில் இ.போச பேருந்துச் சாலை

10.    கோவளம், கசூரினா – பீச், கல்லுண்டாய் வீதி இ.போச.ச சேவை.

ஆகியன ஆக்க பூர்வமான சிந்தனையின் வெளிப்பாடுகள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக
இவரால் வடிவமைக்கப்பட்ட

11. வேணன் அணைக்கட்டு

                                "கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
                                 பெருமையின் பீடுடையத இல்" – (1021)

  சமூகச் செயற்பாடுகள் மட்டுமன்றி சிறந்த அறிவாற்றலும் ஆளுமையும் மிக்க இவரது கல்விச் செயற்பாடுகள் சில வரையறுக்கப்பட முடியாதவை. பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக வளங் களைக் கூட வசதிகளை ஏற்படுத்தல், தரமான ஆசிரியர்களை இணைத்துச் செயற்படுத்தல், மாணவர் ஒழுக்க நலன்களில் அக்கறை, விளையாட்டுத்துறை, இசைத்துறை, போன்று பிறசெயற்பாடுகளையும் ஊக்குவித்தல் என்பன. சிறந்த ஹொக்கி அணி வீரர். உதைபந்தாட்டத்திலும் அதிக ஈடுபாடு சங்கீதக் கலையில் ஆர்வம் எனவே சமய சமூக நிகழ்வுகளில் இசைக் கலையை ஊக்குவித்தார்

வெள்ளிவிழாக் கண்ட வரலாற்று அதிபர், வைரவிழா, பவளவிழா, முத்துவிழா, என்ற முப்பெரும் விழாக்களையும் நடத்தி முடித்த ஒரே அதிபர் என்ற பெருமைக்குரியவர்.

                                   "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
                                    அருமை உடைய செயல்" (975)

பொருளாதாரத் துறையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். நாட்டு மக்கள் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். மாணவர் ஒழுக்க சீலராய் வாழ வேண்டும் என நாட்டு முன்னேற்றம் கருதி இரவும் பகலும் அயராது உழைத்தார். அதுவே அவரது இலட்சியமாகும்.

  இவரது சிந்தனையில் மலர்ந்த பொருளாதாரம் பற்றிய எண்ணக்கருவே இவரது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரை.

"இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பும்"

என்ற ஆய்வு நூல் இந்நூலைப் பாராட்டி புதுடெல்கி பல்கலைக்கழகம் "கலாநிதிப் பட்டம்" வழங்கி இவரைக் கௌரவித்தது.

  கல்வி கலையில – அஃது கால இட எல்லைக்கு அப்பாற்பட்டது. இவர் கலாநிதிபபட்டம் பெற்ற போது வயது 63 அவரது எண்ணம், சிநதனை, செயல் எல்லாம் நாட்டின் முன்னேற்றம் ஒன்றை நோக்கியே செயற்பட்டன. எனவே அவர் எக்காலத்திலும் ஓய்ந்திருக்கவில்லை.

அவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் காரை மண்ணிறகுப் பெருமை தேடித்தந்துள்ளன. இதனால் அவர் மறைந்தாலும் மறையாத மாமனிதராய் மக்கள் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

           "கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
            சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு" (981)

                                                                            நன்றி

                                                           "ஆளுயர்வே ஊருயர்வு"
                                  "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                          இங்ஙனம்
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          14 – 05 – 2017

cover-01 (1)