வரலாற்று நூல்களில் நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் காரைதீவு – காரைநகர்

 

வரலாற்று நூல்களில் நூறு ஆண்டுகளை

நிறைவு செய்யும் காரைதீவு – காரைநகர்

எஸ். கே. சதாசிவம்

யாழ்ப்பாண நகரில் இருந்து காரைநகர் இருபத்திரண்டு கிலோ மீற்றர் தொலைவில் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இத் தீவின் வடக்கு மேற்குத் திசைகளில் ஆழம் கூடிய பாக்கு நீரிணையும் தெற்குத் திசையில் சிறிய ஆழமான ஊர்காவற்றுறை கடலும், கிழக்குத் திசையில் பொன்னாலை பரவைக் கடலும் எல்லையாக அமைந்துள்ளது. காரைநகரையும் குடா நாட்டையும் காரைநகர் பொன்னாலை தாம்போதி இணைக்கின்றது. 1870 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாம்போதி கட்டப்பட்ட பொழுது ஒன்பது பாலங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. 2008-2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருவழிப்பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்ட பொழுது மேலும் ஒரு பாலம் அமைக்கப்பட்டு பத்துப் பாலங்களைக் கொண்டதாக வீதி அமைக்கப்பட்டது.

காரைநகர் 2295 ஹெக்ரெயர் பரப்பளவினைக் கொண்டது. இப்பிரதேசம் 7.5 கிலோ மீற்றர் நீளத்தையும் 4.5 கிலோ மீற்றர் அகலத்தையும் உடையது.

இலங்கைத் தீவில் காரைநகர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த (Strategically Important) இடத்தில் அமைந்துள்ளமையால் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

காரைநகர் வரலாற்று ரீதியாக மிகவும் தொன்மை மிக்க ஊராகத் திகழ்ந்ததற்கு வரலாற்று நூல்களில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

காரைதீவு குமரி கண்டத்தின் ஒரு பகுதி

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்துமாகடலின் பெரும் பகுதி நிலப்பரப்பாய் இருந்தது என்பர். பழந்தமிழ் நூல்கள் அதனைக் குமரி கண்டம் எனக் குறிப்பிட்டன. கடல் கோள்களாலும், இயற்கை நிகழ்வுகளினாலும் குமரி மலை உட்பட, குமரி கண்டத்தின் பெரும் பகுதி கடலில் அமிழ்ந்து போயிற்று. இந்தியாவும் இலங்கையும் மற்றும் தீவுகள் சிலவும் அழியாது எஞ்சி நின்றமையை சிலப்பதிகாரம் கலித்தொகை ஆகிய பழைய நூல்களில் இருந்து அறியலாம்.

மேலும், ஸ்கொற் எலியெற் (Scott Elliot) என்னும் மேலை நாட்டு அறிஞர் எழுதியுள்ள மறைந்த குமரி கண்டம் (Lost Lemuria) எனும் நூலில் இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தார்.

வுரலாற்று ஆராய்ச்சியாளர்கள் காரைதீவைக் குமரிகண்டத்தின் சிதைந்த பாகம் என்றும் கூறுவர் என ஈழத்துச் சிதம்பர புராண ஆசிரியர் புலவர்மணி சோ. இளமுருகனார் குறிப்பிடுகின்றார்.

மேலே கூறப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்புடையதான கருத்துக்களை திரு. செ. இராசநாயகம் யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத்தீவே காரைதீவு
சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடும் மணிபல்;லவத்தீவு காரைதீவு என பல சான்றுக்களுடன் நிறுவுகின்றார் காரைநகர் தொன்மையும் வன்மையும் நூலாசிரியர் திரு. ச. ஆ. பாலேந்திரன்.
காரைநகர் மான்மியம் எழுதிய மகாவித்துவான். எவ். எக்ஸ். சி. நடராசாவும் இக்கருத்தையே கொண்டுள்ளார்.

வித்துவான் மு. இராகவையங்கார் தனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் மணிமேகலை குறிப்பிடும் மணிபல்லவத்தீவு இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள காரைதீவையே மணிபல்லவத்தீவு என வரலாற்றுச் சான்று காட்டி நிறுவியுள்ளார்.

காரைநகர்
காரை என்று அழைக்கப்படும் முட்செடி வரண்ட பிரதேசத்திற்குரிய இயற்கைத் தாவரம். காரையில் பலவகை உண்டு. பெருங்காரை என்பதே காரைதீவு என்ற இடப்பெயருக்குக் காரணமான இயற்கைத் தாவரம்.

யாழ்ப்பாண வைபவமாலையில் அக்காலத்தில் காரைக்கால் முதலான பல இடங்களில் இருந்து பல குடிகள் வந்து வட்டுக்கோட்டையிலும், காரைதீவு முதலிய தீவுகளிலும் குடியேறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட கருத்துக்களின்படி காரைதீவில் வாழ்ந்த முதற் குடிமக்கள் காரைக்காலில் இருந்து வந்து குடியேறினவர்கள் என்றும், ஆதலினால் தான் காரைதீவு ஆயிற்று என்றும் கூறுபவர்கள் உளர் எனக் குறிப்பிடுகின்றார் மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா.

மேலும் வேளாளர்கள் அன்றி பிராமணர்களும் காரைதீவில் வந்து இறங்கி குடியேறினார்கள் என்றும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது என்கிறார் மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா.

கார்த்திகேயப் புலவர் (1819–1898) இயற்றிய திண்ணபுரத் திரிபந்தாதியின் காப்பிலும் காரைநகர் என்ற பெயர் உண்டு. கார்த்திகேயப் புலவர் இயற்றிய திருப்போசை வெண்பா வாழ்த்துரையில் தமிழ்ப்பண்டிதர் அரு. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் காரைநகர் வேதியனாங் காரத்திகேயப்புலவர் எனக்குறிப்பிடுகின்றார். 1887ல் தட்சிண கைலாச புராணம் பதிப்பித்த சிவசிதம்பர ஐயரால் காரைநகர் எனும் பெயர் உபயோகிக்கப்பட்டிருக்கின்றது.

வாணவாஸ் செல்லையா என்பவர் பாடிய பாடலிலும் காரைநகர் என்ற பெயர் காணப்படுகின்றது.

ஊராற் பெருத்தது ஊர்காவல் யாழ்ப்பாணம் ஊர்பருத்தி
சீராற் பெருத்தது சீதாரி மானிப்பாய் சேர் நவாலி
போரரற்பெரிய பெருத்ததும் கல்விப் பேருடனே
கராற் பெருத்தது காரைநகரெனக் கண்டிடுமே

எனக் காரைநகர் மான்மியத்தில் மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா குறிப்பிடுகின்றார்.

புத்த ஜாதகக் கதையில் அபித்த ஜாதகம் என்பதில் காரைதீபம் என்ற ஒரு தீவு குறிப்பிடப்பட்டுள்ளது. அசித்தன்எனும் பார்ப்பன முனிவன் வாரணாசியினின்று காவிரிப்பூம் பட்டணம் வந்து அங்கிருந்து வான் வழியாக காரைதீவிற்கு வந்தான். அங்கு குடிலமைத்துத் தவம் செய்து, காரை இலைகளை உறைப்பும், உப்பும் இன்றி அவித்து உண்டு வாழ்ந்தான் எனவும் அவன் அவ்வாறு காரை இலைகளைப் புசித்து உயிர் வாழ்ந்ததினால் அவ்வூர் காரைதீவு எனப் பெயர் பெற்றது என அந்த ஜாதகக் கதை குறிப்பிடுகின்றது என இடப்பெயர்கள் ஓர் ஆய்வு தீவகம் என்னும் நூலில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிடுகின்றார்

தீவகத்தில் பௌத்தத்தின் செல்வாக்கு நிலைத்திருந்ததற்கான இலக்கிய தொல்லியல் சான்றுகள் உள. மகாவம்சத்தில் மட்டுமன்றி மத்திய காலத்தில் எழுந்த பௌத்த மத வழிபாட்டு இடங்களின் தொகுப்பாகிய நம்பொத்தவில் காரைதீவை (காறதிவயின) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கந்தபுராணத்திலே (அண்டகோசப்படலம் 19 – 27) சப்த தீவுகள், சப்த கடல்கள் என்பன குறிப்பிடப்படுகின்றன. கந்தபுராணத்திற் காணப்படும் தீவுப் பெயர்கள் இந்த ஏழு தீவுப் பெயர்களுடன் வருமாறு இனங்காணப்பட்டுள்ளன. (டானியல் ஜோன் 1875 – 34 – 35).
சாகம் – காரைதீவு

1922 ஆம் ஆண்டு காரைநகருக்கு வருகை தந்த சேர். பொன். இராமநாதன் ஊர் மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்பில் மகிழ்ந்து இது தீவு அல்ல காரைநகர் என்ற பெயர் வழங்கப்படல் வேண்டும்; எனக் கூறிச் சென்றார்.
மகாவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா எழுதிய காரைநகர் மான்மியம் என்னும் நூலில் 12.09.1923 தொட்டு ஆட்சியாளரின் அங்கீகாரத்துடன் காரைநகர் என்ற நாமம் வழங்கப்பட்டு வருகின்றது என்று குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைதீவும், மட்டக்களப்பில் ஒரு காரைதீவும், யாழ்ப்பாணத்தில் ஒரு காரைதீவுமாக மூன்று காரைதீவுகள் இருந்தமை அரச பரிபாலன பணிகளில் இடர்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் மேற்குறித்த மூன்று காரைதீவுகளின் சமூக, பொருளாதார மற்றும் குடிப் புள்ளியியற் பண்புகளைக் கருத்திற்கு எடுத்த போது நகரத்திற்குரிய பண்புகள் அதிகம் காணப்படும் தீவகத்திலுள்ள காரைதீவு கொண்டிருந்தமையால் 12.09.1923 ஆம் ஆண்டு காரைநகர் என்ற பெயரினை வர்த்தமானியில் பிரசுரித்ததன் மூலம் இப்பெயர் வழக்கில் வரலாயிற்று என தீவகம் தொன்மையும் மேன்மையும் என்னும் நூலில் பேராசிரியர் கா. குகபாலன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

காரைநகரின் தொன்மை மிகு இடங்கள்

1. சத்திரந்தை:- சத்திரந்தையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைக்கப் பெற்ற சான்றுக்கள் பெருங்கற் காலத்திற்குரியன என்பதைக் காட்டுகின்றது. இச்சான்றுக்கள் மூலம் மக்கள் ஆரம்ப காலத்தில் இவ்விடத்தில் குடியேறியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

2. வேரப்பிட்டி, வேரைக்குளம், களபூமி ஆகிய இடங்கள் தொல்பொருள் பெறுமானம் மிக்க இடங்களாகவும் வரலாற்றினைக் கூறும் இடங்களாகவும் காணப்படுகின்றது.

3. ஐயனார் கோவில்:- காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தை அரசாண்ட குளக்கோட்டு மகாராசா காரை நாட்டில் வியாவிலில் எழுநிலைக் கோபுரங்களைக் கொண்ட பெரிய கோயிலைக் கட்டினார். ஐயனார் கோவிலை இடிக்க வந்த போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் ஐயனாரினால் தண்டிக்கப்பட்டனர். ஒல்லாந்தர் வியாவில் ஐயனார் கோவிலை இடித்து அந்தக் கல்லினால் கடற்கோட்டையை கட்டினர் என ஈழத்துச் சிதம்பர புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாவில் ஐயனார் கோவில் பற்றி மேற்சொல்லப்பட்ட கருத்துக்கள் காரைநகர் மான்மியத்திலும் காணப்படுகின்றது.

4. இராசாவின் தோட்டம்:- அரசர்கள் வாழ்ந்த இடம். வெடியரசன் யாழ்ப்பாணத்துக் கரையோரங்களிலும் விசேடமாகத் தீவுப்பற்றுக்களிலும் அரசாட்சி செலுத்தி வந்தவன். காரைதீவில் இவன் இராசதானி இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக அங்கு தென்மேல் மூலையில் உள்ள இராசாவின் தோட்டம் என்ற பெயர் அமைந்து கிடக்கின்றது

ஓப்பற்ற நீதித்தன்மை வாய்ந்த அரசினை நிறுத்தி வட இலங்கையிற் சில ஊர்களை ஆட்சி செய்த சேது மகாராசாவின் மகன் குளக்கோட்டு மகாராசாவினது சிறப்புடைய இலக்குமி நிலைத்திருந்த இராச மாளிகை இப்போது சிதைவடைந்து காணப்படுகின்றது. அந்த அரண்மனை அமைந்த பெரிய மாளிகை கட்டப்பட்ட நிலப்பகுதியை சிறப்பமைந்த இராசாவின் தோட்டம் என்று அவ்விடத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த பெரியோர்கள் வரலாற்றைச் சொல்வார்கள்’என்று ஈழத்துச் சிதம்பர புராணம் கூறுகின்றது.

வரலாற்றில் காலத்துக்குக் காலம் பல்வேறு அரசுகளின் இராசதானியாக இராசாவின் தோட்டம் அமைந்திருந்தது என்பதை அறிய முடிகின்றது. இராசாவின் தோட்டப்பகுதி தற்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பிரதேசமாக உள்ளது.

5. திண்ணபுரம்:- ‘இற்றைக்கு இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் துளுவ நாட்டில் வசித்த தினகரன் எனும் பெயருடைய ஆரியப் பிராமணர் இலங்கையில் பல தலங்களையும் தரிசித்து துர்வாச முனிவர் வாசம் செய்த துர்வாசகிரிக்குச் (தூம்பில்) சமீபமாக இருந்த போது வீட்டுத் திண்ணைகளில் போயிருந்து பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தார். அன்றியும் கவி பாடியும் வந்தார். அதனால் தினகரன் எனும் அப்பிராமணருக்கு திண்ணைக்கவ எனும் பெயர் வழங்குவதாயிற்று. இப்பொழுதும் அவர் வசித்து வந்த இடத்திற்குத் தினகரன்பிட்டி திண்ணைக்களி (திண்ணைக்கவி என்பது மருவி) என்னும் பெயர்கள் வழங்குகின்றன. இவ்விடத்தில் வைரவர் கோவிலும், ஒரு பழைய ஆலமரமும் இருக்கின்றது. இந்த ஆலமரம் தினகரன் எனும் பிராமணரால் உண்டாக்கப் பெற்றது என ஈழத்துச் சிதம்பரம் என்னும் நூலில் சிவசிறி க. கணபதீஸ்வரக் குருக்கள் குறிப்பிடுகின்றார்.

6. கோவளம்:- கி.பி. 1348 இல் உரோமாபுரிக் கத்தோலிக்க சபைத் தலைவராகிய போப் அவர்கள் சீனதேயச் சக்கரவர்த்தியிடம் அனுப்பிய தானாபத்தியத் தலைவனாகிய யோன் டி மேரினொல்லி (John De Marignolli) என்பவன் போகும் வழியிற் கோவளத்தில் இறங்கி அவனாற் சப’ என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாண நாட்டரசியைக் காணச்சென்றதாக’ யாழ்ப்பாணச் சரித்திரத்திற் திரு. செ. இராசநாயகம் குறிப்பிடுகின்றார்.

7. யானைப்பாலம் – களபூமித் துறைமுகம்: – காரைநகர் துறைமுகம்
ஹமன் ஹில் கோட்டை HAMMENHIEL FORT
காரைநகர் துறைமுகம் இலங்கைத் தீவின் வர்த்தக நடவடிக்கைகளில் மேலாண்மை பெற்றிருந்தது.
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே காணப்படுகின்ற நீரேரிப்பகுதி பாக்கு நீரிணையோடு சந்திக்கும் மேற்குப் புற மேட்டு நிலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஹமன் ஹில் கோட்டை அமைந்துள்ளமையால் போரியல் வரலாற்றில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தது.

உலகு காவல முதலி:- உலகு காவல முதலி சோழ நாட்டில் இராச துரோகக் குற்றத்துக்குத் தப்பியோடி யாழ்ப்பாணம் வந்து காரைதீவிலே தன் குடும்பத்தோடு வாழ்ந்தவன். யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் எளிதில் பிடித்தமைக்கு அனுகூலியாக இருந்தவன்.

கனகசபைப் பிள்ளை:- 1780 ஆம் ஆண்டு காரைக்காலில் இருந்து கனகசபைப் பிள்ளை எனும் வேளாண் பிரபு காரைதீவிலே குடியேறினார். நிலம் வாங்கிச் சத்திரம்; கட்டி பிள்ளை மடம் எனப் பெயரிட்டார். ஒல்லாந்தர் அவரைத் தமது மந்திரிகளுள் ஒருவராக்கி வண்ணார்பண்ணையில் ஒரு மாளிகையும் நிலமும் கொடுத்தார்கள். கனகசபைப் பிள்ளையின் விவேகம், நேர்மை, பரோபகாரம், நற்குணம் என்பனவற்றைக் கண்டு ஒல்லாந்தர் மிக்க மதிப்பு வழங்கினர். அதனைக் கண்டு சகியாத மற்றத் தமிழ் மந்திரிகள் அவருக்கும் ஒல்லாந்தருக்கும் பேதமுண்டாக்கி காரைக்காலுக்கு மீளும்படி செய்தார்கள். ‘எம்மீது குற்றம் சிறிதும் இல்லாது இருக்கவும் ஆராயாது ஊரை விட்டு நீங்கும்படி தீர்த்த ஒல்லாந்தரும் என்னைப் போல் மனம் வருந்தி அரசைப் பறி கொடுத்து நீங்கும் காலம் சமீபித்தது. அதற்கு அறிகுறியாக இன்று செல்கின்றேன் என்று கூறி தோணியேறிய எட்டாம் நாள் ஒல்லாந்தர் அரசு இழந்தனர்’. யாழ்பாணச் சரித்திரம் என்னும் நூலில் திரு.அ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.

காரைநகரில் நூற்றாண்டுகளைக் கடந்த சமூக ஸ்தாபனங்கள்
1. 1855 ஆம் ஆண்டு காரைநகருக்கு வருகை தந்த அமெரிக்கன் இலங்கை மிஷனரிமார் ஆரம்பித்த ஏழு பாடசாலைகளில் 5 பாடசாலைகள் இன்றும் கல்விப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன.

2. 1869 ஆம் ஆண்டு காரைநகர் பொன்னாலை தாம்போதி அமைக்கப்பட்டதன் மூலம் காரைநகர் மக்கள் பொருளாதார, சமூக பண்பாட்டு ரீதியில் மேல்நிலை அடைய சந்தர்ப்பம் கிட்டியது.

3. 1888 ஆம் ஆண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட காரை இந்து ஆங்கில வித்தியாசாலை கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.

4. 1889 ஆம் ஆண்டு ஸ்ரீமான் சி. சுப்பிரமணியபிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுப்பிரமணிய வித்தியாசாலை கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.

5. 1908 ஆம் ஆண்டு காரைதீவிற்கும், ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பாதை சேவை (Ferry Service) ஆரம்பிக்கப்பட்டது.

6. 1915 ஆம் ஆண்டு சைவ மகா சபை ஆரம்பிக்கப்பட்டது. பாரத தேசத்தின் தேசபிதா மகாத்மாகாந்தி உட்பட பல பெரியார்கள் சைவமகா சபைக்கு வருகை தந்தார்கள்.

7. 1916 ஆம் ஆண்டு கோவளம் வெளிச்சவீடு கட்டப்பட்டது.

8. 1923 ஆம் ஆண்டு ஆலங்கன்றடி சுடலையில் அமைந்துள்ள எண்கோண மண்டபம் கட்டப்பட்டது. நூறு ஆண்டு காலமாக பல சுழல் காற்றுக்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

9. 1924ஆம் ஆண்டு முதன்முதலில் காரைநகரில் இருந்துகலிகால தீபம் என்னும் பத்திரிகையை வித்துவான் மு. சபாரத்தின ஐயர் மணற்காட்டு அம்மன் கோவில் சூழலில் அமைந்திருந்த தனது மணிவாசக அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டார்

யாழ் குடாநாட்டு கிராமங்களில் காரைநகர் நீண்டதோர் வரலாற்று பெருமை மிக்க கிராமம் கிராம மக்கள் சைவ சமயத்துக்கும் தமிழிக்கும் முக்கியத்துவம் வழங்கி வருவதால் சிவபூமி என்று அழைக்கப்படுகின்றது. கிராம மக்கள் தம் வாழ்வின் ஒவ்வொர் அசைவிலும் பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிப்பதோடு தமக்கென தனியானதொரு சம்பிரதாய பழக்க வழக்கங்களுடன் வாழப்பழக்கப்பட்டவர்கள்.

தாம், தமது உறவு, தமது ஊர் எனும் மாறாப்பற்று உறுதியுடன் தம் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்களை 1980களில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை ஆட்கொள்ள ஆரம்பித்தது. 1980களின் நடுப்பகுதியில் கிராமத்தின் தெற்கு தென் மேற்கு பகுதிகளில் ஆரம்பித்த இடப்பெயர்வு 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கிராமத்து மக்களில் 99மூ இடப்பெயர்வுக்கு உள்ளாக்கியது

1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி மக்கள் மீள குடியமர ஆரம்பித்த போதும் வெளியேற்றமும் உள் வருகையும் இன்று வரை தொடர்கின்றது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை போர் என்பனவற்றின் விளைவாக ஏற்பட்ட மக்களின் இடப்பெயர்வு கிராமத்தின் வாழ்வின் அனைத்து படி நிலைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி சென்றுள்ளது.

1991ம் ஆண்டுக்கு முன்னரான குடித்தொகையை ஏற்படுத்தல் மக்கள் மத்தியில் பண்புசார் வாழ்க்கை பண்புகளை வளர்த்தல் என்பனவற்றை இன்று நம் கிராமம் வேண்டி நிற்கின்றது. இவ் உன்னத பயணத்தில் அனைவரும் பரிசுத்தமான பங்களிப்பை வழங்கல் காலத்தின் கட்டாயம்.