பல்கலைக்கழக மாணவர்களின் மேற்படிப்பிற்கு கனடா காரை கலாச்சார மன்றம் அனுசரணை

பல்கலைக்கழக மாணவர்களின் மேற்படிப்பிற்கு கனடா காரை கலாச்சார மன்றம் அனுசரணை

2017 ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது தராதரப் பத்திர உயர்தர பரீட்சையில் காரைநகரைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் சிறப்பு சித்தியடைந்தனர். இவர்கள் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பதுளை மாவட்ட வெல்லச பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் , அம்பாறை மாவட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பட்டமேற்படிப்பை நான்கு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளவுள்ளனர். காரை அபிவிருத்தி சபையினரின் பரிந்துரையின் பிரகாரம் 2019 ம் ஆண்டு தொடக்கம் 2022 ம் ஆண்டு வரையான பட்டப்படிப்புக்கு கனடா காரை கலாச்சார மன்றம் உதவி வழங்கவுள்ளது. தெரிவான மாணவர்களில் மூவருக்கு மாதம் ரூபா 10,000.00 உதவி தொகையும் மற்றும் நான்காவது மாணவருக்கு ரூபா 15,000.00 வீதம் தொடர்ச்சியான கொடுப்பனவுகளை காரை அபிவிருத்தி சபையூடாக வழங்கி மன்றம் அனுசரணை செய்யவுள்ளது.

இவர்களுக்கான நிதி அனுசரணையை கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த நால்வர் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு வழங்க முன்வந்துள்ளனர். அவர்களுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது. இவர்களின் முன்மாதிரியான செயற்பாடு, தாராள மனப்பாங்கு மற்றும் மாணவர்களின் நிலையான கல்வி மீதானஅதீத அக்கறை என்பன ஏனையவர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. ஆகையால் இவர்களைப் பின்பற்றி ஏனைய காரை மக்களும் கல்வியில் சிறந்து விளங்கியும், பொருளாதார நலிவடைந்தும் காணப்படுகின்ற குடும்பங்களின் மாணவ செல்வங்களுக்கு உதவவேண்டும் என்பதே எல்லோர் விருப்பம் ஆகும். காரை அபிவிருத்திச் சபையினால் 10.01.2019 அன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கான முதலாவது மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இம் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை கணணி விஞ்ஞான துறை, உயிர் முறைமைகள் தொழில் நுட்பம், முகாமைத்துவமும் தகவல் தொடர்பாடல் மற்றும் கலைமாணி துறை ஆகியவற்றில் மேற்கொள்ளவுள்ளனர் . பட்டப் படிப்பின் பின்னர் பெற்றுக் கொள்கின்ற தொழில் வாய்ப்பின் ஊடாக உதவிய நிதியை( மாணவர் கடனுதவி திட்டம் போன்று) மீளளிப்பு செய்வதாக காரை அபிவிருத்தி சபையினருடன் உடன்படிக்கை செய்துள்ளனர். இத்தகைய செயற்பாடு மூலமாக உதவி தேவைப்படும் மற்றைய மாணவர்களுக்கும் இனிவருகின்ற காலத்தில் அனுசரணை வழங்க முடியும் .

கடந்த காலங்களைப் போன்று மாணவர்களின் கல்வி சார் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு மன்றம் தொடர் ஆதரவு அளித்து செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.