காரைநகர் களபூமி முத்தமிழ் பேரவை வளர்ச்சி நிதி சேகரிப்பு தொடர்பான அறிவித்தல்!

PHOTO

காரைநகர் களபூமி பகுதியில் 1978ம் ஆண்டளவில் அமரர் திரு. ஆறுமுகம் நடராசா(மைசூர் நடராசா) மற்றும் திருமதி இராசமலர் நடராசா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளையும் பயிற்றுவித்து அக்காலப் பகுதியில் சிறந்து விளங்கி களபூமி முத்தமிழ் பேரவை காலமாற்றத்தில் மாற்றம் பெற்று மீண்டும் திருமதி திருமதி இராசமலர் நடராசா அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டு வருகின்றது. 

களபூமி முத்தமிழ் பேரவையின் கடந்தகால கலைப்பணியினை கௌரவித்து மேற்கொண்டு இப்பேரவையின் கலைப்பணியினை ஊக்குவிக்கும் வகையிலும், கனடா காரை கலாசார மன்றத்திற்கு கடந்த சில வருடங்களாக தொடர்சியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை தற்போதைய நிர்வாக சபையினர் கருத்தில் கொண்டும், கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் காரைநகர் விஜயத்தின் போது நேரடியாக சென்று பார்வையிட்டு இப்பேரவையின் பணிகளை கேட்டறிந்து கொண்டதன் பயனாகவும் 15.02.2015 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் களபூமி முத்தமிழ் கலையத்திற்கு மன்றத்தின் தற்போதைய செயற்திட்டங்களை கருத்தில் கொண்டும் மன்றத்தின் நிதியில் இருந்து 25,000 ரூபாவினை ஒதுக்குவது எனவும் மேற்கொண்டு கலையார்வலர்களிடம் இருந்து இப்பணிக்கு நிதி சேகரிக்கப்பட்டு மார்ச் 15, 2015க்கு முன்னர் பேரவைக்கு அனுப்புவது என்றும் நிர்வாக சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கலையார்வலர்கள் இப்பணிக்கு மனமுவந்து உதவுமாறும் தங்களது உதவிகளை மார்ச் 15ம் திகதிக்கு முன்னர் கனடா காரை கலாசார மன்றத்திற்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றது கனடா காரை கலாசார மன்றம்.

காரைநகர் களபூமி முத்தமிழ் பேரவையின் வளர்ச்சி பற்றிய ‘காரை மதி” அவர்கள் எழுதிய வரலாற்று பார்வை இவ்வறிவித்தலுடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது

 

   NO       NAME   AMOUNT  COUNTRY
  1 CKCA RS 25,000.00
  2 T.PARAMANANTHARAJAH $  50.00
  3 T.THEESAN $  50.00
  4 THAMBIAH NADARASA $ 100.00
  5 SIVARUBI KANDIAH $ 100.00
  6 KETHEESWARAN PARAMU $  50.00
  7 SHANMUGARATNAM THILLAIAMPALAM $  50.00
  8 THANABALASINGAM RAMANATHAN $ 100.00
  9 RAVITHASAN  AMIRTHASINGAM $ 100.00  AUSTRALIA
 10 KALAPARAN  MANICKAVASAGAR $  50.00
 11 BALASUNDARAM  PRAGASH $  50.00
 12 SRIRANGANATHAN  ARUMUGAM $  50.00
 13 KUGATHASAN  SOMASUNDARAM $ 100.00
 14 SARVANANATHAN  SATHASIVAM $  50.00  SWITZERLAND
 15 MOHAN SANGARAPPILLAI $ 100.00
 16 GUNARATNAM  SOMASUNDARAM $  50.00
 17 KULARATNAM  SARVANANTHALINGAM $ 150.00  UK
 18 THAVAKUMAR  PONNAMPALAM $  50.00
 19 THAYAPARAN  MANICKAVASAGAR $ 100.00
 20 KAVITHA  SIVANATHAN $ 100.00
 21 KAAVIRI  SIVANATHAN $ 100.00
 22 RATHAKIRSHNAN THIRUNAVUKKARASU $  50.00
 23 BALASINGAM  RAVEENDRAN $  50.00  UK
 24 VIMALARUBAN  AMPIKAIPAKAN $  50.00
 25 KODESWARAN  ARUMUGAM $  75.00
 26 NANTHAKUMAR  NADARASA $ 100.00
 27 VIJITHA  SUTHAKARAN $   50.00
 28 SUTHARSAN  URUTHIRASINGM $ 100.00
 29 WELL WISHER $   50.00
 30 WELL WISHER $   50.00
 31 JEYAKUMAR  NADARASA $   50.00

 

மூன்று தசாப்தங்கள் கடந்து காரைநகரில் கலைப் பணியாற்றும் களபூமி முத்தமிழ் பேரவை

கலைமகள், திருமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அருள் பெற்று கல்வியோடு செல்வமும் நிறைந்து வளம் கொழிக்கும் களம் பல கண்ட பதி காரைநகரின் கிழக்குப் பகுதியான களபூமிப் பதியாகும். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த களபூமிப் பகுதியில் சாதனைகளையும் சோதனைகளையும் கடந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தளராது கலைப்பணி செய்து வருகின்றது களபூமி முத்தமிழ் பேரவை என்றால் அது மிகையாகாது.  

சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழக விவசாய விஞ்ஞானப் பட்டதாரியான அமரர்.ஆறுமுகம் நடராசா(மைசூர் நடராசா) அவர்கள் கலைகள் பிறந்த தமிழ்நாட்டில் கல்வி கற்றமையினாலோ என்னவோ கலைத்தாகம் கொண்டவராக இருந்தமை ஒன்றும் ஆச்சரியமில்லை. 

கொழும்பு இரஞ்சனா பதிப்பக உரிமையாளர் அமரர் ஆறுமுகம் நடராசா அவர்களுக்கு வித்துவான் F.X.C நடராசா அவர்களுடன் நட்பு ஏற்படவே அவரிடம் எமது ஊரான காரைநகர் பற்றிய ஒரு நூலை ஆக்க வேண்டும் என்ற தமது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது ‘காரைநகர் மான்மியம்’ என்ற நூலை வித்துவான் F.X.C நடராசா அவர்கள் எழுதினார். அந்நூலை அமரர்.ஆ.நடராசா அவர்களே தமது சொந்த செலவில் பதிப்பிட்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இது அமரர்.ஆ.நடராசா அவர்களின் ஊர்ப்பற்றையும் சமூக உணர்வையும் புலப்படுத்துகின்றது. 

செல்வந்தராhன அவரின் பாரியார் திருமதி.இராசமலர் நடராசா அவர்களும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வியோடு கலைகளையும் பயின்று சிறந்த மாணவியாக விளங்கியவர். 

கல்வியும், கலைத்தாகமும், சமூக உணர்வும் தாராள மனம் படைத்த தனவந்தருமாகிய திரு.திருமதி. நடராசா இராசமலர் தம்பதிகளினால் காரைநகரில் உள்ள இளம் தலைமுறையினருக்கு நுண்கலைகளைப் பயிற்றுவித்து ஊக்குவிப்பதற்காக 1978 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதே களபூமி முத்தமிழ் பேரவை ஆகும். இதுவே காரைநகரில் முதன் முதலாக நுண்கலைகளைப் போதித்து வந்த மன்றம் என்ற பெருமையுடன் விளங்குவதுடன் இன்றும் அதன் சேவையைத் தொடர்கின்றது.  

இளையவர்கள் இசை, நடனம் ஆகிய கலைகளைப் பயிலவும் அவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொண்டு வரவும் என அமைக்கப்பட்ட முத்தமிழ் பேரவையில் இத்தம்பதிகள் தமது உறவினர், அயலவர் பிள்ளைகளை இணைத்து இசை, நடன வகுப்புகளைத் தொடங்கினர்.  இணுவிலைச் சேர்ந்த பிரபல இசை ஆசிரியை  சங்கீத பூசணம் செல்வி.மதிவதனம் ஞானசம்பந்தர் இசை வகுப்புகளை நடத்தி வந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரிகளான நடனக்கலைமணி செல்வி.மீனா பரந்தில்ராஜா, நடனக்கலைமணி செல்வி.தமயந்தி பரந்தில்ராஜா ஆகியோர் பரதநாட்டியத்தையும் பயிற்றுவித்து வந்தனர்.

இவ்வாறு பயின்று வந்த சிறார்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும் அதனை எமது ஊரவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் திருமதி.ந.இராசமலர் அவாகளின் தந்தையார் பிரபல வர்த்தகர் திரு.ஏ.எஸ்.ஆறுமுகம் அவர்கள் வீட்டுமுன்றலிலும் பாலாவோடை அம்மன், திக்கரை முருகன் கோயில்களின் மண்டபங்களிலும்; பின்னர் பாடசாலை மேடைகளிலுமென முத்தமிழ் பேரவையில் பயின்று வந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அக்காலங்களில்(1980களில்) தொடர்ச்சியாக அரங்கேறி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வந்தன.

முத்தமிழ் பேரவையில் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின், நடன வகுப்புகளில் மாணவர்கள் உற்சாகமாக இணைந்து கொண்டு பயின்று வந்தனர். இக்காலப் பகுதியில் இசை வகுப்புகளை சங்கீத வித்துவான் ஸ்ரீரங்கநாதன் அவர்களும் வயலின் வகுப்புகளை இசைக்கலைமணி செல்வி.ஜெகதாம்பிகை முருகையா அவர்களும் நடன வகுப்புகளை நடனக்கலைமணி சாராதா முருகையா அவர்களும் தொடர்ந்து நடனக்கலைமணி செல்வி.அன்னபூரணி முத்துக்குமாரு(திருமதி.அ.சத்தியமூர்த்தி) அவர்களும் பயிற்றுவித்து வந்தனர். 

மாணவர்கள் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளையும், மிருதங்க இசை நிகழ்ச்சிகளையும் சின்னஞ் சிறார்கள் காவடி, கோலாட்டம், கும்மி போன்ற கிராமிய நடனங்களையும், பரத நாட்டிய நடனங்களையும் பல அரங்குகளில் உற்சாகமாக வழங்கி வந்தனர்.

நுண்கலை வகுப்புகளை தமது சொந்த இடத்திலேயே நடத்தி வந்ததுடன் பயிற்றுவிக்கும் நுண்கலைத்துறை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை தமது சொந்தப் பணத்திலேயே திரு.நடராசா தம்பதியினர் வழங்கி வந்தனர். முத்தமிழ் பேரவையில் கலை பயில வரும் மாணவர்களுக்கு பொருளாhதரம் ஒரு தடையாக அமையவில்லை. ஏனெனில் மாணவர்கள் கலை வகுப்புகளுக்கான கட்டணங்களை தம்மாலியன்றவாறு வழங்குவதேயன்றி எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. அத்துடன் நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான நடன உடைகளை தையற்கலை பயின்றவரான திருமதி.ந.இராசமலர் அவர்கள் தாமே செலவுகளைப் பொருட்படுத்தாமல் தயாரித்து வழங்குவது வழமையாகும். 

முத்தமிழ் பேரவை தனது மற்றொரு பணியாக பாலர் பாடசாலை ஒன்றையும் நடாத்தி வந்தது. இப்பாலர் பாடசாலைக்குப் பொறுப்பாசிரியராக செல்வி.சாந்தினி சோமசுந்தரம் அவர்கள் பணியாற்றினார். 

இக்காலப்பகுதியில் காரைநகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த வாரிவளவு நல்லியக்க சபையானது கல்வி, கலை, விளையாட்டு என பல்துறைகளிலும் காரைநகர் வாழ் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் வகையில் சேவையாற்றி வந்த சபையாகத் திகழ்ந்தமையை காரைநகர் வாழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். இச்சபையின் தொண்டராக அரும்பெரும் தொண்டாற்றி கலைஞர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், என அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்று அர்ப்பணிப்போடு சேவையாற்றியவர் ‘பட்டுமாமா’ என்று அன்பாக அழைக்கப்படும் அமரர்.பத்மநாதன் என்றால் மிகையாது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைநகர் வாரிவளவு நல்லியக்க சபை தனது பணிகளின் ஒர்; அங்கமாக வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து கலைப்பணி ஆற்றியமையை காரை மைந்தர் எவராலும் இலகுவில் மறந்துவிட முடியாது. 

அந்த வகையில் வாரிவளவு நல்லியக்கச் சபையினால் நடத்தப்பட்டு வந்த கலைவிழாக்களில் முத்தமிழ் பேரவை மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேறி பலரது பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்ளத் தவறுவதில்லை.  காரைநகரில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வரும் நிகழ்வுகளில் முத்தமிழ் பேரவை மாணவர்களின் நிகழ்வுகள் முதன்மை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காலப்போக்கில் முத்தமிழ் பேரவை நிர்வாகி அமரர்.நடராசா அவர்களின் மறைவானது மன்றத்திற்கு இழப்பை ஏற்படுத்தியது. இருந்தும் துணைவியார் திருமதி.இராசமலர் நடராசா அவர்கள் மன்றத்தை நடராசா முத்தமிழ் பேரவை எனும் பெயரில் நடாத்தி வந்தார். 

மாணவர்களின் நிகழ்வுகளை அரங்கேற்ற ஓர் அரங்கு தேவையென தமது சொந்தப்பணத்தில் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் ‘நடராசா மன்று’ எனும் அரங்கு அமைத்து தந்தையார் அமரர்.ஏ.எஸ். ஆறுமுகம் அவர்கள் தலைமையில் பல அறிஞர்கள், கலைஞர்கள் முன்னிலையில் பேரவை மாணவர்களின் கலைநிகழ்வுகளை அரங்கேற்றி திறப்புவிழாவினை 02.06.1989அன்று நடாத்தியிருந்தார். 

முத்தமிழ் பேரவையில் கலை பயிலும் மாணவர்கள் கோயில் திருவிழாக்களின்போது கலைநிகழ்வுகளை வழங்கிவருவது மக்களுக்கு கலைகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் மக்கள் நல்ல அறநெறிக் கருத்துகளை அறிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. 

யாழ் பல்கலைக் கழகத்தின் இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் இராகசுரபி.பரமேஸ்வரி கணேசக்கம்பர் மற்றும் பிரித்தானியாவில் இசைஆசிரியையாகப் பணியாற்றும் இசைக்கலைமணி கமலாசோதி கோபாலபிள்ளை ஆகியோரும் களபூமி முத்தமிழ் பேரவையில் இசை பயின்று இன்று இசைத்துறையில் பிரபல்யம் மிக்க கலைஞர்களாக பிரகாசிக்கும் மாணவிகளாவர். 

காரைநகர் மக்கள் இடம்பெயர நேரிட்டபோது பேரவையின் பணிகள் தடைப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் மன்றத்தின் நிர்வாகி திருமதி.இராசமலர் நடராசா அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த அகில இலங்கை கம்பன் கழகத்தாருடன் இணைந்து நான்கு ஆண்டு காலமாக தமிழ் இலக்கியப் பணிகளையும் கலைநிகழ்ச்சிகளையும் உற்சாகமாக ஒருங்கிணைத்து நடத்தி முத்தமிழுக்கான தனது சேவையைத் தொடர்நதார். 

அக்காலப்பகுதியில் உள்நாட்டு அரசியல் நிலை காரணமாக பொருளாதாரத் தடை ஏற்பட்டது. மக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியிருந்த காலத்தில் (1992-1995) எரிபொருள் செலவின்றி செலுத்தக் கூடிய ஒரு முச்சக்கர மிதிவண்டியை தயாரித்து தானே செலுத்தியவாறு யாழ்நகரில் வலம் வந்து சமூக சேவைகளைச் செய்து தமீழீழப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான பெண்மணியாக காரைநகர் களபூமி திருமதி.ந.இராசமலர் அவர்கள் திகழ்ந்தார்.  

நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இயங்காமல் இருந்த காரைநகர் முத்தமிழ் பேரவை சுமூக நிலை தோன்றி காரைநகரில் மக்கள் மீண்டும் குடியேறத் தொடங்க (1996) ஓரிருவரின் ஆதரவுடன் தனது பணியைத் தொடர்ந்தது. பேரவையின் தலைவராக திருமதி.நடராசா இராசமலர் அவர்களும் செயலாளராக திருமதி.பரமேஸ்வரி பொன்னம்பலம் அவர்களும் பொருளாளராக பாலாவோடை தமிழ்கலவன் பாடசாலை அதிபர் திருமதி.சர்வாம்பிகை உலககுருநாதன் அவர்களும் பேரவையின் நிர்வாகசபையில் சேவையாற்றி வருகின்றனர். 

இசைக்கலைமணி திருமதி.அனிதா திருஞானசம்பந்தர் இசையைப் பயிற்றுவித்து வருகின்றார். பிரபல நடன ஆசிரியர் நடனக்கலைமணி திருமதி.பிரியதர்சினி வாகீசன் அவர்கள் பேரவையின் ஆலோசகராகவும் இருந்து வருகின்றனர். 

பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் கோயிலிலும், திக்கரை முருகன் கோயிலிலும் திருவிழாக் காலத்தில் கலைநிகழ்வுகளை வழங்கியும் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் பேரவையின் விழாவை நடத்தியும் சிறார்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வட-இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்குத் தயார்படுத்தி பேரவை தனது கலைப் பணிகளை தளராது தொடர்கின்றது. 

கலைப்பணியோடு நின்றுவிடாது சமூகப்பணியையும் முத்தமிழ் பேரவை நடத்தி வருகின்றது. எமது ஊரில் நீண்டகாலம் அர்ப்பணிப்போடு ஆசிரியப்பணியாற்றிய திரு.திருமதி. விநாசித்தம்பி தம்பதிகளின் சேவைநலன் பாராட்டு விழாவை பேரவை நடத்தியிருந்தது. 

இன்னல்கள் என்ன வந்தாலும் இன்றும் சொந்த மண்ணில் வாழ்ந்து சேவையாற்றிவரும் மருத்துவர் செல்வி.நகுலேஸ்வரி ஆறுமுகம் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைக் கௌரவித்து அண்மையில் முத்தமிழ் பேரவை விழா எடுத்திருந்தது. 

நாட்டின் நற்குடிமக்களை ஒர் அரசு எவ்வாறு கௌரவித்துப் பாராட்டுகின்றதோ அவ்வாறே களபூமி முத்தமிழ் பேரவையும் எமது ஊரில் வாழ்ந்து சேவையாற்றும் சேவையாளார்களையும், கலைஞர்களையும் பாராட்டி மதிப்பளிக்கின்றது.

காரைநகர் களபூமிப் பகுதியில் இயங்கிவரும் பாடசாலைகளான சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம், பாலாவோடை தமிழ்க்கலவன் பாடசாலை ஆகியனவற்றில் மாணவர் எண்ணிக்கை குறையாமல் ஊர்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல் தொடர்பான கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் சேவையாற்றுகின்றது முத்தமிழ் பேரவை என்பதனையும் குறிப்பிடவேண்டும்.  

பேரவையின் இன்னுமோர் சேவையாக இலவச ஆங்கிலக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரும் அவருக்கு வேதனம் வழங்க நிதியும் கிடைக்கப் பெற்றால் அச்சேவையைத் தொடங்கலாம் என்று சிறிதும் தயக்கமின்றித் தெரிவித்தார்; பேரவையின் தலைவர் திருமதி.ந.இராசமலர் அவர்கள். 

இவ்வாறு கலைப்பணியோடு, சமயப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி என தனது பன்முகப் பணிகளையும் மிகுந்த சமூகப் பொறுப்புடனும் ஒர் அசாத்தியத் துணிச்சலுடனும் கடந்த 36 ஆண்டு காலமாக ஆற்றி வரும் களபூமி முத்தமிழ் பேரவையை வாழ்த்திப் பாராட்டாமல் இருக்கமுடியாது. 

எமது சமூகத்துப் பெண்களுக்கு ஒர்; எடுத்துக்காட்டாகத் தள்ளாத வயதிலும் தளராது; பணிசெய்து வரும் ‘மலர் அக்கா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பேரவையின் தலைவர் திருமதி.ந.இராசமலர் அவர்களின் அர்ப்பணிப்பையும் ஆளுமையையும், தாராள மனதையும இன்னமும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டியது எமது ஊரான காரைநகர் மக்களின் தார்மீகக் கடமையாகும்.  

                                                                                                                                                                                                             காரை மதி