ஒரு மான் குட்டி துள்ளியது! ஒரு மயில் குஞ்சு ஆடியது! இல்லை! ஒரு பம்பரம் சுழன்றது! பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம் மின்னியது!

 

ஒரு மான் குட்டி துள்ளியது! ஒரு மயில் குஞ்சு ஆடியது! இல்லை! ஒரு பம்பரம் சுழன்றது! பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம் மின்னியது!

மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள் தான் நியூட்டனை எழுப்பியது. துர்க்கா அன்று ஆடிய ஆட்டம் தான் என்னை உசுப்பியது. வியாக்ரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவனின் நடனத்தைக் காண ஆசைப்பட்டனர். அவர்களுக்காக என் பெருமான் இல்லை எம் பெருமான் நிகழ்த்திக்காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனம். ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம். அங்கேயும் நீ ஆடினாய். திருஆலங்காட்டில் ரத்தினசபையில் ஊர்த்துவத் தாண்டவமாடினான். மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய். நெல்லையில் தாமிர சபை குற்றாலத்தில் சித்திர சபை. சிவன் ஆடிய இந்த ஜந்து சபைகளிலும் நீங்கள் ஆடி அவன் அருளைப்பெற அந்த ஆடவல்லானை இறைஞ்சுகிறேன். கழலோடு திருவிரலால் கரணம் செய்து கனவின் கண் திருவுருவம் தான் காட்டும்மே எழிலாரும் தோள் வீசித்தான் ஆடும்மே என்று அப்பர் சுவாமிகள் பாடுவதைப்போல அழகாக இருந்தது உங்கள் நடனம். தலையிலிருந்து பாதம் வரை அழகிய அசைவுகளையும் தாளத்தின் மிகநுணுக்கமான அளவைகளையும் கைகள் விரல்களின் அழகான முத்திரைகளையும் பாதஜால வித்தைகளையும் இசை அதன் தாள மெல்லின வல்லினங்களையும் நீங்கள் அபிநயம் செய்தது. ஆகா! சபாஸ்! எனக்கு எல்லாமே கேள்வி ஞானம் தான். கம்பராமாயணத்தில் மிதிலைக்காட்சிப் படலத்தில் கம்பரும் இதையே சொல்கிறார். கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமும் செல்ல மனம் வழி பாவமும் பாவ வழி ரசமும் சேர. கை முத்திரைகள் வழி கண் செல்லும் கண்கள் செல்லும் வழி மனம் செல்லும் மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். உள்மனத்தின் உந்துதல் தான் ஊக்கம்! ஆசைப்படுவது. அதை அடையமுடியுமென்று அழுத்தமாக நம்புவது. அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை மாறாத ஊக்கத்துடன் உழைப்பது. இதனால் வெற்றித் தேவதையின் மாலை உங்கள் கழுத்தை அலங்கரிக்க கண்டேன். அடிக்கற்கள் இல்லாமல் கோபுரங்கள் இல்லை. ஆணிவேர் இல்லாமல் மரங்கள் இல்லை. ஏற்றப்பட்ட விளக்கை விட ஏற்றிவைத்த தீக்குச்சியே உயர்வானது என அப்துல் ரகுமான் அழகாகச் சொல்வார். இந்த தருணத்தில் உங்கள் குருவை ஆராதிக்கின்றேன். ஒரு வைரத்தை செம்மையாக பட்டைதீட்டி இருக்கிறார். மனதை அமைதிப்படுத்தி மகிழ்வித்த ஒரு நடனம். சியாமா! கலையோடு கூடிய பெயர். சியாமா சாஸ்திரிகள்……..!!!

என் வாழ்வில் ஏதாவது அதிசயம் நிகழுமா? நீயே அதிசயமாக மாறிவிடு என்றான் நிக். துர்க்கா உங்கள் வாழ்வில் இது அதிசயம் அல்ல புது அத்தியாயம். தெய்வத்தை ஆனந்தப்படுத்தி அவரது பாதகமலங்களை அடைய எளிய வழி இசை நடனம் போன்ற வேறு சாதனமேதுமில்லை என்பது ஆன்மீக கணக்கீடு. யார் வேண்டுமானாலும் ஒரு காரியத்தை ஆரம்பித்து விடலாம் என்னைப் போல. ஆனால் தொடர்ந்து உழைப்பவனால் மட்டுமே அதை செம்மையாக செய்து முடிக்க முடியும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரி துர்க்கா. கனவு காண்பதற்கு தெரிந்த எந்த ஒரு இளைஞன் அல்லது யுவதிக்கும் செழிப்பு வந்தே தீரும். துர்க்கா நீயும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

புல்லாங்குழல் வயலின் மிருதங்கம் பிரத்தியேகமாக தைக்கப்பட்ட வண்ணப்பட்டு ஆடைகள். சிலை ஒன்று ஆடியதைப் பார்த்தேன். வண்ண வண்ண மேலாடை……ஆ ஆ ஆ ஆ ஆ . வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும் பைங்கிளி மான் கூட்டம் மயங்க தாவி தாவித்தான் வந்தாள். விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா. முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ. தலை சிறந்த கலை விளங்க நடை புரியும் பதுமையோ புதுமையோ. சதங்கைகள் தழுவிய பதங்களில் பலவித ஜதி ஸவரம் வருமோ. குரல் வழி வரும் அணிமொழியொரு சரச பாஷையோ. சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ. ஆடல் கலையே தேவன் வந்தது.

மெல்லிசையின் ஓசை போல் மெல்லச் சிரித்தாள். திரண்ட இருட்டை திரட்டியடிக்க தீக்குச்சி ஒன்று கிழித்தாள். நடந்து போகும் மேகம் பறித்து நட்சத்திரங்கள் துடைத்தாள் துர்க்கா. வுpண்ணும் மண்ணும் வெற்றியின் இலக்கு. எல்லாத் திசையும் திறந்து கிடக்கு. இனிவரும் காலம் உனக்கு.

கற்பூர வாசனையும் கமலப் பூ வாசனையும் அற்புதமாய் மணக்கின்ற அரும் தமிழால் வாழ்த்துகின்றேன். இன்னும் பல மேடைகளில் திங்களும் ஆட சூலமும் ஆட திரிசடை மேல் ஒரு கங்கையும் ஆட……..

அன்புடன்
கணபதிப்பிள்ளை ரஞ்சன்.