கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஈழத்து சிதம்பர நித்திய பூஜைக்குரிய நிதி கையளிக்கப்பட்டது

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால்

ஈழத்து சிதம்பர நித்திய பூஜைக்குரிய நிதி கையளிக்கப்பட்டது

ஒரு பிரதேசம் செழிப்புற விளங்குவதற்கு  அங்குள்ள ஆலயங்களில் நித்திய, நைமித்திய பூஜைகள் எவ்வித தடையுமின்றி ஒழுங்காக நடைபெறவேண்டும் என்பது  நியதியாகும். ஆரம்ப காலங்களில் காரைநகரின் தொன்மையும், அற்புதங்கள் நிறைந்ததுமான ஈழத்து சிதம்பரத்தில்  நித்திய பூஜைகள் செய்வதற்குரிய நிதிக் குறைபாடு காணப்பட்டது. அதன்  அடிப்படையில் மன்றத்தின் 1995 மற்றும் 1999 ஆண்டு காலப்பகுதிகளில், மன்றத்தின் பெயரில் ரூபா 1,50,000 மற்றும் ரூபா 1,00,000  நிதி வைப்பிலிடப்பட்டு நித்திய பூஜைக்குரிய நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர் 29.11.2016 மன்றத்தின் நித்திய பூசை நிரந்தர வைப்பு தொகை ரூபா ஐந்து இலட்சமாக அதிகரிக்கப்பட்ட விடயம் அனைவரும் அறிந்ததாகும். இந்த  நிரந்தர வைப்பு மூலம் கிடைக்கப்பெற்ற  முதலாவது வங்கி வட்டி 28.11.2017 அன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் கணக்கிற்கு நேரடியாக  வைப்பில் இடப்பட்டது. இதுவொரு மன்றத்தின் வழமையான செயற்பாடுகளில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையாலும், வெளியூர் மற்றும் உள்ளூர் அடியவர்களின் பங்களிப்பாலும் நித்திய பூசைக்கு ஓரளவு  போதுமான நிதி காணப்பட்ட நிலை தென்பட்டது . இதனை கருத்திற்கொண்டு மன்றத்தின் பெயரால் திருவிழாவொன்று வருடம்தோறும் செய்யவேண்டும் என்கின்ற பெருவிருப்பினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வருடாந்த பங்குனி உற்சவம் மற்றும் ஆடி மாத அம்மன் உற்சவம் என்பவற்றில் ஏதேனும் ஒன்றில் இடம்கிடைக்காத காரணத்தால் மீண்டும் நித்திய பூஜைக்கு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அண்மையில் ஊருக்குச்  சென்ற மன்றத் தலைவர் காரை அபிவிருத்தி சபையின் கணக்கில் இடப்பட்ட ரூபா 49,500 காசோலையுடன் ரூபா 500 சேர்த்து மொத்தமாக 50,000ரூபாவை ஈழத்து சிதம்பர ஆதீனகர்த்தாக்களிடம் கொடுத்து தொடர்ச்சியான நித்திய பூஜைக்கான வழிவகைகளைச் செய்தார்.

கனடா காரை கலாச்சார மன்றமானது  ஆரம்ப காலங்களில் ஈழத்து சிதம்பர திருத்தொண்டர் சபையாக இருந்து பின்னர் சமயத்தோடு மொழி, கலை, கலாச்சாரங்களை வளர்த்துக்கொண்டு கனடா மண்ணில் மிளிர்ந்து வருகின்றது என்றால் மிகையாகாது. இத்தகைய மன்றத்தின் ஆணி வேராக விளங்கும் கனடா வாழ் காரை மக்களுக்கு ஈழத்து சிதம்பராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானின் திருவருள் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

 

கனடா காரை கலாச்சார மன்றம்