சிறப்பு மிகு சேவையாளன் திரு. உடையார் இராமலிங்கம் நாகலிங்கம் (கருங்காலி, காரைநகர்) – இக்கட்டுரை அன்னாரின் 54வது சிரார்த்ததினத்தை முன்னிட்டு வரையப்படுகின்றது.

 

சிறப்பு மிகு சேவையாளன் திரு. உடையார் இராமலிங்கம் நாகலிங்கம் (கருங்காலி, காரைநகர்) 

இக்கட்டுரை அன்னாரின் 54வது சிரார்த்ததினத்தை முன்னிட்டு வரையப்படுகின்றது.

பிறப்பு:  22.12.1893                                                                                    இறப்பு: 22.07.1965

 

முன்னாள் செயலாளர், தலைவர் சைவமகாசபை, காரைநகர்

                     முன்னாள் நிர்வாகி, கருங்காலி போசுட்டிமுருகன் ஆலயம்

முன்னாள் முகாமையாளர் வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலை

 

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

மேற்கூறிய வள்ளுவர் குறளுக்கு ஏற்றாற்போல் அதற்கு இலக்கணமாக வாழந்தவர் தான் இக்கட்டுரையின் கதாநாயகனாக விளங்கும் இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள். தன்னைப் போலவே மற்றவர்களும் முன்னேற வேண்டும் எனும் நோக்கில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உயிர் கொடுத்த பெருமகன் என்றால் மிகையாகாது.

இந்து மாகடலின் முத்தென விளங்கும் இலங்கைத்தீவின் சிரசாகிய யாழ்ப்பாணத்தின் கண்ணாக விளங்குவது காரைநகராகும். அந்நகரின் மேற்குத் திசையில் அமைந்துள்ள கருங்காலி எனும் சிறு குறிச்சியில் வாழ்ந்த உடையார் இராமலிங்கத்தின் இளைய புதல்வனாக 22.12.1893ல் வந்துதித்தவர் தான் திரு நாகலிங்கம். இவர் உடையார் நாகலிங்கம் எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு மூத்த சகோதரர் வேலுப்பிள்ளையாவர்.

திரு நாகலிங்கம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும், (Vaddukkoddai Jaffna Collage) உயர் கல்வியைச் சென்னை உயர்கல்லூரியிலும் பயின்று தேறினார். இந்தியாவில் கல்வி பயின்ற காலத்தில் அண்ணல் காந்தி, ஜவகர்லால் நேரு போன்றோரின் போதனையில் இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

படிப்பை முடித்துவிட்டு மீண்டும் காரைநகருக்குத் திரும்பிய திரு நாகலிங்கம் அவர்கள் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணியவர் களத்தில் இறங்க ஆரம்பித்தார் அதன் ஒரு அங்கமாக மு.திசைநாயகம், க.கதிரவேலு, இ.நாகலிங்கம், ஆ.முருகேசு, இ.கந்தையா,ஆ.கதிர்வேல், வே.தம்பிஐயா, அ.சின்னத்தம்பி, க.நவரத்தினம், கா.சி.மஹேசசர்மா ஆகியோர் ஒன்றினைந்து 15.03.1915ல் ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலையில் கருத்துக்களைப் பரிமாறியதன் பலனாக “காரை இளைஞர் தேர்ச்சிச் சங்கம்” என்ற பெயரில் சங்கம் ஒன்றை திரு திசை நாயகம் தலைமையில் உருவாக்கினார். இதன் மூலம் கிராம மாணவர்களை கல்வியில் முன்றேற்றும் வகையில் செயற்படத்தொடங்கினர்.

இவ்வாறு நடைபெற்றவேளையில் மூன்று வருங்களின் பின்னர் சங்கத்தின் பெயரை 21.12.1918ல் “காரை இந்து வாலிபர் சங்கம்” எனப்பெயர் மாற்றியதோடு பொ.வேலுப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும், திரு. இ. நாகலிங்கம் அவர்களைச் செயலாளராகவும் தெரிவு செய்தனர்.பிற்காலத்தில் இ.நாகலிங்கம் அவர்கள் சைவமகாசபையின் தலைவராகவும் செயற்பட்டார்.

இந்து வாலிபர் சங்கத்திற்கென ஓர் கட்டடம் அமைக்கவேண்டுமென எண்ணிய வேளையில் அப்பொழுது செயலாளராவிருந்த திரு.இ. நாகலிங்கம் அவர்கள் பெரு முயற்சியினால் பூதனடைப்பு எனும் பெயர் கொண்ட காணி திருமதி வே.வள்ளியம்மை என்பவரிடம் இருந்து சங்கத்திற்கென நன்கொடையாகப் பெறப்பட்டது. அதில் சிறிய கட்டடமும் அமைக்கப்பட்டது. மீண்டும் ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தா அவர்களின் அறிவுரையின் பலனாக இந்து வாலிபர்சங்கம் என்ற பெயரை மாற்றி “சைவ மகாசபை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு 12.12.1924ல் சபைக்கெனப் பெரிய மண்டபம் ஒன்றும் கட்டிமுடிக்கப்பட்டது. திரு நாகலிங்கம் அவர்கள் காரை இந்து வாலிபர் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து இறக்கும்வரை இச்சபையின் அங்கத்தவராக இருந்துள்ளார் என அறியப்படுகின்றது.

இவரின் இன்னொரு முயற்சியினால் வியாவில் கடற்கரையில் மடாலயம் ஒன்று அமைக்கும் பணி சைவ மகா சபையினால் முன்னெடுக்கப்பட்டு கருங்காலி, பலகாடு மக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான காணி அ.இராமநாதன் என்பவரால் 06.05.1923ல் நொத்தரிசு திரு அ.கனகசபை முன்னிலை 237ம் இலக்க உறுதியின் மூலம் சபைக்குத் தர்மசாதனம் செய்யப்பட்டது.

இவைமட்டுமன்றி தான் இறக்கும் வரை சைவமகாசபையின் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமென்பதில் அதீத அக்கறை கொண்டிருந்தார். இவருக்குப் பக்கபலமாகப் பலர் இருந்துள்ளனர். இவர்களுள் ஒருவர் தங்கோடையைச் சேர்ந்த திரு.ச.வைத்தியலிங்கம் என்பவராகும். இருவரும் உற்ற நண்பர்களாவர்.

திருநாகலிங்கமும் நிர்வாகத்தினரும் எடுத்த பெருமுயற்சியினால்

  1. ஸ்ரீமத்சுவாமி விபுலானந்தா
  2. ஸ்ரீமத் சுவாமி சர்வானந்தா
  3. மகாத்மா காந்தியடிகள்
  4. ஸ்ரீஇராஜ கோபாலாச்சாரியார்
  5. பண்டித ஜவகர்லால் நேரு
  6. ஸ்ரீமதி கமலாநேரு
  7. சுவாமி சச்சிதானந்த ராஜயோகிகள் (சங்கரசுப்பையர்)
  8. டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளை
  9. ஸ்ரீமதி இந்திராகாந்தி
  10. திரு.அ.ச. ஞானசம்பந்தன்
  11. சைவப்பெரியார். சு. சிவபாதசுந்தரம்பிள்ளை
  12. கௌரவ வீ.வீ.கிரி
  13. வித்துவான் கி.வா ஜகந்நாதன்
  14. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
  15. பண்டிதமணி சு.நவநீத கிருஷண பாரதியார்

உள்ளிட்ட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட சமய, சமூகப் பெரியார்கள் சைவ மகாசபைக்கு வந்து சொற்பொழிவாற்றியது காரைநகர் பெற்ற தவப்பயன் என்றே கூறவேண்டும்.

திரு. நாகலிங்கம் அவர்களின் திருமணத்தின் பேறாக மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் முறையே திருநாவுக்கரசு, தியாகராசா, அருள்நந்திசிவம் ஆகியோராவர். பள்ளிப்பருவடைந்த அவர்களுக்குச் சிறந்த கல்வியூட்டி, சிறந்த உத்தியோககளையும் அமைத்துக்கொடுத்தார். மூத்த மகன் திருநாவுக்கரசு அவர்களுக்குக் காரைநகர் மேற்கு விதானையாராகப் பதவி கிடைத்தது. சிறிது காலத்தில் விதானையார் முறை அரசாங்கத்தினால் ஒழிக்கப்பட்டு கிராம சேவகர் பதவி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. கிராம சேவகர் பரீட்சையில் சித்தியெய்திய திருநாவுக்கரசு அவர்கள் கிராம சேவராகப் பதவியைத் தொடர்ந்தார். இரண்டாவது மகன் தியாகராசா அவர்கள் வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலையில் ஆசிரியராக் கடமையாற்றினார். அவ்வேளை அவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாகக் காலமானார். மூன்றாவது மகனான அருள்நந்திசிவம் அவர்கள் புகையிரதத் திணைக்களத்தில் புகையிரத நிலைய அதிபராக நீண்டகாலம் சேவையாற்றி இறைப்பாறியுள்ளார். தனது மூத்த மகன் திருநாவுக்கரசு அவர்களுக்கும், இளையமகன் அருள்நந்திசிவம் அவர்களுக்கும் நற்குணங்கள் நிநைற்த மணப்பெண்களைத் தேர்ந்தெடுத்து திருமணங்களை செய்துவைத்ததன் மூலம் தந்தைக்குரிய கடமைகளை நிறைவு செய்தார் என்றே கருதவேண்டும்.

தனது மூத்த சகோதரரான வேலுப்பிள்ளைக்குப் பின் திரு.நாகலிங்கம் அவர்கள் 1948ம் ஆண்டு கருங்காலி போசுட்டி முருகன் ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து அவருடைய மரணம் சம்பவிக்கும்வரை ஆலய நிர்வாகத்தைத் திறம்பட நடாத்தி முடித்தார் என்றே கூறவேண்டும். ஆலய அறங்காவலர் என்ற வகையில் ஆலயத்தில் நேரந்தவறாத பூஜை, வழிபாடு, அவை சைவ ஆகமமுறைப்படி நடைபெற வேண்டுமென எண்ணி அவ்வாறே நடைபெற ஆவன செய்தார். ஆலயத்தில் மதத்தின் பெயரால் களியாட்டங்கள் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. அத்துடன் ஆலயத்தில் இசைக்கப்படும் பாடல்களோ அல்லது நாதஸ்வர இசையோ பக்தி கீதங்களை மட்டுமே தாங்கியதாக இருக்க வேண்டுமெனவும் விரும்பியதுடன் அடியார்கள் ஆலயத்திற்கு வரும்பொழுது ஆசார சீலர்களாக வரவேண்டுமென்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

ஆலயத்தில் கந்த ஷஷ்டி காலங்களில் கந்தபுராணம் படித்து பொருள் விளக்கம் கூறுவது வழமை. திரு நாச்சி பொன்னம்பலம் அவர்கள் அவர் இறக்கும்வரை பொருள் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திருநாகலிங்கம் அவர்கள் நடைமுறைப்படுத்தினர்.

இதே வேளை வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையின் முகாமையாளராகவும் கடமையாற்றினார். இப்பாடசாலை 1889ம் ஆண்டளவில் சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த மகான் சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகவும் இதற்கான நிலத்தை கா.வேதக்குட்டி ஐயரவர்கள் வழங்கியதாகவும் அறியப்படுகின்றது.

திருநாகலிங்கம் அவர்கள் முகாமையாளராகப் பதவியேற்ற திகதி சரியாகத் தெரியவில்லை. இருந்தும் நான் பாலர் வகுப்பில் சேரந்த 1947ம் ஆண்டு இவரே முகாமையாளராக இருந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும். இவர் நிர்வாகத்தில் சற்று இறுக்கமான நிலையைக் கடைப்பிடித்தார் என்றே கூறவேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் நேரந்தவறாது பாடசாலைக்கு வரவேண்டும் என அறிவுரை வழங்கிய அவர் நேரந்தவறி வந்தவர்களுக்கான தண்டனையையும் தானே நேரில் வழங்கினார்.

இவர்காலத்தில் பாடசாலையின் தலைமை ஆசிரியராக இடைக்காடு பண்டிதர் சு.இராமசாமி அவர்கள் கடமையாற்றினார். அத்துடன் ஒவ்வொரு பாடங்களிலும் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர்களையும் நியமித்திருந்தார்.

நாச்சி பொன்னம்பலம் ஆசிரியர் அவர்களைப் பாலர் வகுப்பிற்கு நியமித்திருந்தார். இவரிடம் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியது. அப்பொழுது பாலர் வகுப்பு மாணவர் நிலத்தில் இருந்தே கற்றனர். அவர்கள் முன் மணல் பரவப்படடிருக்கும். மாணவர்கள் வலது கைச்சுட்டுவிரலால் உயிரெழுத்துக்கள் முதல் உயிர்மெய் எழுத்துக்கள் வரை எழுதவேண்டும். நாச்சி பொன்னம்பலம் அவர்கள் எமது விரலைப் பிடித்து மண்ணில் ஊன்றி எழுதுவார். எமக்கு விரல் வலிக்கும். பலர் அழுவதுமுண்டு.

ஆ.விநாயகசிவம் பிள்ளை (தமிழ்), மு.நல்லதம்பி (தமிழ், கணிதம்), அ.தேவராசா (தமிழ்,பொது அறிவு, பொது விவேகம்), ந.தெய்வானைப்பிள்ளை (தையல்) கொட்டைக்காடு சு.பாக்கியம் (ஆங்கிலம்), காங்கேசன்துறை மு. மாணிக்கம் (ஆங்கிலம்), இணுவில் நடராசா ஆசிரியர் (நெசவு) கோப்பாய் சின்னம்மா ஆசிரியை (பன்னவேலை) போன்ற பல திறமைமிக்க ஆசிரியர்களை நியமித்து மாணவர் கல்வியை ஊக்குவித்தார்.

மேற்படி ஆசிரியர்கள் துணையுடனும், திரு நாகலிங்கம் அவர்களின் ஊக்குவிப்பினாலும் கருங்காலியைச் சேர்ந்த மூன்று மாணவர்களும், பலகாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி அரசாங்க செலவில் வேலணை அரசினர் மத்தியகல்லூரியில் அக்கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்கும் வாய்ப்பைப்பெற்றனர். இதன் மூலம் வியாவில் சைவபரிபாலன வித்தியாலயம் காரைநகர் பாடசாலைகளிலேயே இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது. முதலாம் இடத்தை தலைமை ஆசிரியர் கார்த்திகேசு உபாத்தியாயர் அவர்களால் நிர்வகிக்கப்பட்ட களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை பெற்றுக்கொண்டது. இப்பாடசாலையில் இருந்து இவருடைய சேவைக்காலத்தில் எட்டுமாணவர்கள் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்தினர்.

மாணவர் ஒருவர் பாடசாலைக்கு வரவில்லையென்றால் திரு நாகலிங்கம் அவர்கள் அந்த வீட்டுக்கு மாணவர் ஒருவரை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்தார். சிலவேளைகளில் தானே மாணவன் வீட்டுக்குச் சென்று பெற்றோருக்கு அறிவுரை கூறி அம்மாணவனை அழைத்துவந்தார். இதற்கும் மேலாப் பகல் 1.00 மணிக்கு பாடசாலை வகுப்புக்கள் முடிவுற்றாலும், ஆசிரியர்கள் துணை கொண்டு மாலையிலும் பிரத்தயேக வகுப்புக்களை நடாத்தினார்.

வெள்ளிக்கிழமைகளில் காலையில் மாணவர்கள் எல்லோரும் கட்டாயமாக ஆலயம் சென்று வழிபாடுகளில் ஈடுபடவேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அப்படி ஆலயம் செல்லாது இருப்பவர்களை உரிய காரணம் கேட்டுவிசாரிபார். தகுந்த காரணம் கூறாதவிடத்து தண்டனையும் வழங்கினார். வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகம், கொப்பி, பேனா, பென்சில் என்பவனவற்றை இலவசமாக வழங்கி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தார்.

பாடசாலை மாணவர்கள் பசியுடன் இருக்கக் கூடாதென்பதற்காக மதிய உணவாக பாண்பருப்புகறி, கடலை, அவல், தோசை, பயறு என்பவனவற்றைத் தவறாது வழங்க ஆவனசெய்தார். இவற்றைத் தயார் செய்து வழங்குவதற்காக ஆரம்பகாலத்தில் திருமதி சிதம்பரப்பிள்ளை அவர்களையும், அவரது மறைவுக்கு பின் பாறாத்தை என எல்லோராலும் அழைக்கப்படும் பார்வதி அவர்களையும் நியமித்து ஆவனசெய்தார்.

பாடசாலையில் நாயன்மார்கள் குருபூஜைகள், நவராத்திரி என்பவற்றைக் கொண்டாட ஆவன செய்தார். நவராத்திரி காலங்களில் மாலைவேளைகளில் மாணவர்களை வீடுவீடாக அழைத்துச்சென்று

“கன்னித்திங்கள் வருகிறதம்மா

கருத்துடன் நவராத்திரி பூஜை”

எனும் பாடலை மாணவர்கள் மூலமாகப் பாடவைத்து கோலாட்டம் அடித்து மக்கள் மத்தியில் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்களும் பதிலுக்கு மாணவர்களுக்கு கடலை, அவல், கற்கண்டு என்பவற்றை வழங்கி மகிழ்வுற்றனர். இதன் மூலம் மாணவர், ஆசிரியர், பெற்றோர் அன்னியோன்யம் சிறப்புற்று விளங்கியது.

ஆசிரியர் ஒருவர் வரவில்லையென்று தெரிந்து கொண்டால் தானே அவ்வகுப்பிற்கு நேரில் சென்று அவரது பாடங்களைக் கற்பித்தார். இவர் ஒரு கந்தியவாதியும் கூட. எந்த ஒரு கூட்டத்திற்கு செல்வதாக இருந்தாலும் கதர்வேட்டி கதர்சட்டை கதர் சால்வை, தொப்பி என்பனவற்றை அணிந்து செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். சுருக்கமாகக் கூறினால் இவர் சைவத்திற்கும், தமிழுக்கும், அரும்பணி ஆற்றிய பெரியார் என்றால் மிகையாகாது.

வித்துவான் F.X.C  நடராசா அவர்கள் உடையார் நாகலிங்கம் அவர்கள் பற்றித் தாம் எழுதிய காரைநகர் மான்மியம் என்னும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார். அந்தக்காலத்து முகாமையாளர்களுக்குள் இவர் தனித்தன்மை வாய்ந்தவர். பாடசாலைக்கு நாள் தவறாது செல்லும் பான்மையுடையவர். காலையிலும் போவார் மாலையிலும் போவார். மாலையில் போகும் போது மல்லித்தண்ணீர் கொண்டு செல்வார். பாடசாலையை நாள் தோறும் தொடக்கி வைப்பவரும் இவர். முடித்துவைப்பவரும் இவரே. அடியேனும் அங்கு ஆசிரியாராகப் பணிபுரிந்தவன். இந்த முகாமையாளர் எனக்கு வாய்க்காது போயிருந்தால் நான் ஆசிரியராகப் பயிற்சி பெற்றிருக்கமாட்டேன். என்னை நிலைபேறான ஆசிரியராக ஆக்கியபெருமை இவருக்கே உரியது.

அத்துடன் என்னைப் போல வேறு சிலரையும் ஊக்குவித்து உயர்த்தியுள்ளார். அத்துடன் நின்றுவிடாது சைவ மகாசபையிலும், பாடசாலையிலும் நெசவு நிலையங்களை உண்டாக்கி காரைநகரில் முதன் முதலாக நெசவுத் தொழிலைப் பரப்ப உதவியவரும் இவரே என்பதுடன், பேசு இனியர், கள்ளங்கபடமற்றவர். பொதுத்தொண்டே இவரது ஆசையும், பாசமும் எனக் கூறி முடிக்கின்றார். இவர் எப்பொழுதும் இந்து சாதனம் பத்திரிகையை விரும்பி வாசிப்பார். அதனால் சனிக்கிழமைகளில் எம்போன்ற மாணவர்கள் அப்பத்திரிகையை வாசிக்க அவர் கேட்டுகொண்டிருப்பார்.

இவரது சேவையால் நன்மை பெற்றவர்களில் யானும் ஒருவன் என நினைக்கும் போது என் மனம் புளகாங்கிதம் அடைகின்றது.

இப்படிப்பட்ட பெருமகன் 22.07.1965ல் இறைவணடிசேரந்தார்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதும் நன்றே யவரோ

டிணங்கி யிருப்பதுவும் நன்று.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அடைய அவரின் உறவுகளுடன் நாமும் சேர்ந்து எல்லாம் வல்ல கருங்காலி போசுட்டி முருகனை வேண்டிப் பிரார்த்திப்போமாக.

சாந்தி! சாந்தி! சாந்தி!

 

தம்பையா நடராசா

கருங்காலி

காரைநகர்

 

இக்கட்டுரைக்கு ஆதாரமாக அமைந்தவை

  1. காரைநகர் சைவ மகாசபை பொன்விழா மலர் 1967
  2. காரைநகர் மான்மியம்
  3. காரை ஆதித்தியன் சுவிஸ்
  4. நேரில் பெற்ற அனுபவங்கள்