50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்) காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவமும், மருத்துவர்களும் – பகுதி 1

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்)

காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும்

மருத்துவமும், மருத்துவர்களும்  – பகுதி 1

நாற்புறமும் கடலாற்சூழப்பட்டதும் வனப்புமிகு வயல்நிலங்களைத் தன்னகத்தே கொண்டதும் பக்தி மிகு வியாவில் ஐயனார் ஆலயத்தைமுதன்மையாகக் கொண்டு 39க்கு மேற்பட்ட ஆலயங்களையும் உள்ளடக்கிய காரைநகர் ஆரம்பத்தில் காரைதீவு என அழைக்கப்பட்டாலும் காராளர், கல்வியாளர்கள், கச்சிதமானவர்த்தகர்கள்,கடல் தொழிலாளர்கள்,  அரசியல் வாதிகளின் கடும் உழைப்பினால், பெருமுயற்சிகளினாலும் 12.09.1923ஆம் ஆண்டிலிருந்து காரைநகர் எனப் பெயர் பெறலாயிற்று.

இப்படி அமைந்த காரைநகரில் மருத்துவ உதவிகள் பெறுவது கடினமாக அமைந்திருந்தாலும் அக்காலப் பகுதியில் ஆயுள்வேத மருத்துவமே முன்னிலை பெற்றிருந்தது என்று கூறினால் மிகையாகாது. ஆங்கில வைத்தியம் காரைநகரில் பெருமளவு பிரபலம் பெறவில்லை என்றுதான் கூறவேண்டும். மாறாக அல்லின்வீதியும், பிரதான வீதியும் சந்திக்கும் சந்தியில் உள்ள தனியார்வீடொன்றில் டிஸ்பென்சறி என அழைக்கப்படும் சிறு வைத்திய சாலை ஒன்று அமைந்திருந்திருந்தது. இங்கு அப்போதிக்கரி எனும் உதவிவைத்தியர் ஒருவரும், மருந்து கலக்கி வழங்கும் ஓடலி என அழைக்கப்படுபவருமே கடமையில் இருந்தனர். இங்கு காய்ச்சல், தடிமல் போன்ற சிறு சிறு வருத்தங்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டன. அவசர நோயாளர்கள், ஆப்பறேசன் போன்றவற்றிற்கு யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். வசதி படைத்தவர்கள் மூளாய் ஆஸ்பத்திரி போன்ற தனியார் வைத்திய சாலைகளை நாடினர். 1970க்குப்பின் மாற்றங்கள் பலநிகழத் தொடங்கின.

காரைநகரில் ஆங்கில வைத்தியம் பெரிதளவு சோபிக்கா விட்டாலும் இம்மண்ணின் மைந்தர்கள் பலர் அப்போதிகரிகளாகவும் (உதவிவைத்தியர்களாகவும்) வைத்திய கலாநிதிகளாகளாகவும் தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் பல பாகங்களிலும் சேவையாற்றியதுடன் இன்னும் பலர் சிங்கப்பூர் மலேசியா மற்றும் ஆபிரிக்கநாடுகளிலும் சேவையாற்றி இளைப்பாறியுமுள்ளனர். அப்போதிகரியானவர் குறிப்பிட்ட சில வருடங்கள் சேவையின் பின் (ஆர் எம் பி) உதவி வைத்தியர் என அழைக்கப்பட்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் (RMP) கருங்காலி
  2. கந்தையா தில்லையம்பலம் (RMP) வாரிவளவு
  3. சுப்பிரமணியம் இளையதம்பி (RMP) வாரிவளவு
  4. கந்தையா சதாசிவம் (RMP) செம்பாடு
  5. அம்பலவாணர் கணபதிப்பிள்ளை (RMP) செம்பாடு
  6. கணபதிப்பிள்ளை பரஞ்சோதி (RMP) செம்பாடு
  7. முருகேசு குணரத்தினம் (RMP) செம்பாடு
  8. அம்பலவாணர் பரஞ்சோதி (RMP) வாரிவளவு
  9. வேலுப்பிள்ளை பொன்னையா (RMP) தங்கோடை
  10. ஆறுமுகம் சங்கரப்பிள்ளை (RMP) கள்ளித்தெரு
  11. சண்முகம் நடராசா (RMP) வேம்படி
  12. சுப்பிரமணியம் காசிநாதன் (RMP) வேம்படி
  13. முருகேசு மகேந்திரம் (RMP) வேம்படி
  14. இராமலிங்கம் சுப்பிரமணியம் (RMP) ஆயிலி
  15. விநாசித்தம்பி சிவப்பிரகாசம் (RMP) ஆயிலி
  16. விநாசித்தம்பி கனகசுந்தரம் (RMP) ஆயிலி
  17. சின்னத்தம்பி தர்மலிங்கம் (RMP) மணற்பிட்டி
  18. ஆறுமுகம் குமாரசாமி (RMP) பழைய கண்டி
  19. சுப்பிரமணியம் நடராசா (RMP) வலந்தலை
  20. சுப்பிரமணியம் சுவாமிநாதன் (RMP) வலந்தலை
  21. ஆறுமுகம் சண்முகம் (RMP) வலந்தலை
  22. இராசையா செல்வத்துரை (RMP) வலந்தலை
  23. தெண்டாயுதபிள்ளை ஜெகநாதபிள்ளை (RMP) வலந்தலை
  24. சின்னையா நாகேந்திரம் (RMP) வலந்தலை
  25. செல்லப்பா இராசரத்தினம் (RMP) மருதடி
  26. கனகசபை சுந்தரலிங்கம் (RMP) அறுகம்புலம்
  27. சிவப்பிரகாசம் சிவனந்தராசா (RMP) மணற்பிட்டி
  28. கந்தையா கனகேந்திரம் (RMP) சயம்புவீதி
  29. சுப்பையா (RMP) மாப்பாணவூரி
  30. சோமசுந்தரம் அருளையாபிள்ளை (RMP) மாப்பாணவூரி
  31. V. கனகசுந்தரம் (RMP) மாப்பாணவூரி
  32. வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம் (RMP) வேதர்அடைப்பு
  33. சின்னப்பு சின்னையா (RMP) சத்திரந்தை
  34. கே. எஸ் செல்வத்துரை (RMP) சத்திரந்தை
  35. கந்தையா நடராசா (RMP) சத்திரந்தை
  36. இராமநாதன் அம்பலவாணர் (RMP) பொன்னாவளை
  37. ஆறுமுகம் நகுலேஸ்வரி (RMP) பொன்னாவளை
  38. கார்த்திகேசு செந்தில்நாதன் (RMP) பொன்னாவளை
  39. கதிரவேலு சோமசுந்தரம் (RMP) கிளுவனை
  40. சங்கரப்பிள்ளை நாகம்மா (RMP) நந்தாவில்
  41. கனகசபை திருநாவுக்கரசு (RMP) விளானை
  42. ஆறுமுகம் சோமசுந்தரம் (RMP) விளானை
  43. ஆ. வே. மயில்வாகனம் (RMP) பாலாவோடை
  44. சுப்பிரமணியம் பற்குணராசா (RMP) பாலாவோடை
  45. சுப்பிரமணியம் மகேந்திரராசா (RMP) பாலாவோடை
  46. சண்முகம் கந்தையா (RMP) பலகாடு/பாலாவோடை
  47. சிற்றம்பலம் சுப்பிரமணியம் (RMP) களபூமி
  48. வேலுப்பிள்ளை அரியரத்தினம் (RMP) பலகாடு
  49. சின்னத்துரை தர்மலிங்கம் (RMP) வேம்படி
  50. முத்தையா தெய்வேந்திரராசா (RMP) மணற்காடு
  51. முருகேசு தம்பையா (RMP) பயிரிக்கூடல்
  52. கந்தையா ஏரம்பு (RMP) அறுகம்புலம்
  53. வேலுப்பிள்ளை ஏகாம்பரம் (RMP) புளியங்குளம்
  54. கந்தையா (RMP) செம்பாடு
  55. செல்லத்துரை தர்மலிங்கம் (RMP) வேதரடைப்பு

 

அடுத்து கலாநிதி (Doctor) பட்டம் பெற்றுக் காரைநகருக்கு வெளியே இலங்கையின் பல பாகங்களிலும் சேவையாற்றியவர்கள், சிங்கப்பூர் மலேசியா மற்றும் தென்னாபிரிக்க காடுகளிலும் சேவையாற்றியோர் விபரங்கள் கீழ தரப்பட்டுள்ளன.

1. டாக்டர் இலகநாதர் கனகசுந்தரம்  

இவர் காரைநகர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த இலகநாதர் ஆசிரியர் தம்பதிகளின் ஏக புத்திரனாவர். மேலும் காரைநகரில் புகழ்பூத்த பொன்னுடையார் பரம்பரையின் வழித்தோன்றலுமாவார். மேலும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் புகழ்பூத்த மாணவர்களில் ஒருவருமாவார்.

அடுத்து மருத்துவக் கல்லூரியில் பயின்று எம்.பீ.பீ.எஸ் (MBBS) தேர்வில் முதலாம் பிரிவில் கற்றுத்தேறியபின் லண்டன் கேம்பிறிஜ் பல்கலைக்கழகம் சென்று கற்று அங்கு கலாநிதிப்பட்டமும் பெற்றார். அதன் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உடற்கூற்றியல் துணைப் பேராசிரியராகக் கடமைாற்றிய வேளை இவரைச் சூடான் பல்கலைக்கழகம் அழைத்துப் பேராசிரியர் பதவியை வழங்கியது. அதன் பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மருத்து பீடத் தலைவரானார். மேலும் இவர் உடற்கூற்றியல் பற்றிப் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒருமுருகபக்தனாவார். தான் பிறந்த கிராமமான கருங்காலியில் அமைந்திருக்கும் போசுட்டி முருகன் பால் கொண்ட அளவுகடந்த பக்தியினால் ஆண்டு தோறும் நடைபெறும் மஹோற்சவத்தின் 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழாவை இவரது குடும்பம் நடாத்திவருவது யாவரும் அறிந்ததே. மேலும் இவர் களபூமியை சேர்ந்த ரைம்ஸ் சங்கரப்பிள்ளை அவர்களின் மகளைத் திருமணம் செய்தார்.

2. வைத்திய கலாநிதி செல்வி நவமலர் கனகரட்ணம்

வர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த கந்தையா கனகரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வியாவார். மேலும் இவர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து மருத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அதனால் கல்லூரி சமூகம் பெருமையுடன் பாராட்டியது. தனது மருத்துவப் படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கற்று 1966ஆம் ஆண்டு மருத்துவ மாணியும், அறுவைச்சிகிச்சைமாணியும் (MBBS) பட்டத்தைப் பெற்றார்.1968ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் முதல் நியமனத்தை பெற்றார். அதேநேரம் பொதுச் சுகாதாரப்பயிற்சி நெறியை நிறைவு செய்ததன் பின்னர் 1972ஆம் ஆண்டு முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் மாவட்ட அதிகாரியாகவும், அடுத்து 1986இல் மன்னார் மாவட்ட அதிகாரியாகவும் கடமையாற்றினார். பின்னர் சட்ட மருத்துவ ஆய்வுத்துறை பயிற்சி பெற்று யாழ்ப்பாண சட்டமருத்துவஅலுவராக (JMO) நியமனம் பெற்றுச் சேவையாற்றினார். மேலும் 1991ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றினார். மீண்டும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியாக நியமனம் பெற்றார். அங்கு சேவையாற்றியவேளை புற்று நோயாளர்களின் அவலத்தைப் போக்குமுகமாக அங்கு புற்று நோயாளர்கள் தங்கிய கட்டடங்களைத் திருத்தியும், புரைமைப்புச் செய்யவும் தன்னாலான முயற்சிகளை மேற் கொண்டது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்குப் புற்று நோய் வைத்தியரை நியமிக்கும் வரை மகரகம வைத்திய சாலையில் இருந்து 2 கிழமைக்குகொரு முறை வைத்தியர் ஒருவரை வரவழைத்துப் புற்று நோயாளர்களின் இன்னலைப் போக்கினார்.

3. டாக்டர் செல்லத்துரை ஆனைமுகன்

இவர் காரைநகர் செம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும் காரைநகர் ஆலடி பிரபலவர்த்தகர் செல்லத்துரை மற்றும் செல்லம்மா தம்பதிகளின் மகனாவார். தனது ஆரம்பகல்வியைத் தங்கோடை அமெரிக்க மிஷன் பாடசாலையில் கற்று பின்னர் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியிலும் கற்றுதேறினார். அதன் பின் மருத்துவக் கல்வியைக் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் பயின்றார். 1969இல் மருத்துவராக (MBBS)ப்பட்டம் பெற்று ராகம் வைத்தியசாலையில் சேவையாற்றினார். 1971ஆம் ஆண்டு நியூஸ்லாந்து சென்று அங்குள்ள மருத்துவக் கல்லுரியில் மகப்பேற்று மருத்துவம், பெண்கள் வைத்தியம் என்பவற்றில் சிறப்புச் சிகிச்சைப் பயிற்சி பெற்றார். பின்னர் நொட்டிங்காம் பெண்கள் மருத்துவ மனையிலும், நோத்காம்படன் மருத்துவ மனையிலும் பணிபுரிந்தார். 1976ஆம் ஆண்டு தை மாதம் எம். ஆர். சி. ஓ. ஜீ பரிட்சையில் சித்தியெய்தி அதற்கான பட்டத்தையும் பெற்றார். அதன்பின் 1977ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள சர்வகலாசாலையில் சேவையாற்றி அங்குள்ள பெண் வைத்திய, மகப் பேறு மருத்துவத்துள் காணப்படும் மாறுபாடுகளையும் கண்டறிந்த பின்னர் திரும்பவும் நியூஸ்லாந்து சென்று பாமஸ்ரன் வடக்கு வைத்திய சாலையில் சிறப்புச் சிகிச்சை மருத்துவராகவும் கடமையாற்றி உடல் நோய்காரமையாக 22 வருடங்களின் பின்னர் ஓய்வு பெற்றார்.

1988ஆம் ஆண்டு இங்கிலாந்தின் றோயல் கல்லூரி இவருக்கு எப். ஆர். சி. ஓ. ஜீ என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. 2003ஆம் ஆண்டில் இவர் மகப்பேறும் மகளிர் மருத்துவமும் என்னும் நூலை 637 பக்கத்தில் தமிழில் எழுதி வெளிட்டார். கனடாவிலும் இந்நூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது. கனடா போன்ற புலம் பெயர்து வாழும் தமிழ் மக்களுக்கு பயனனுள்ளதாகக் காணப்படுகின்றது.

4. டாக்டர் சம்பந்தன் என அழைக்கப்படும் நா. திருஞனசம்பந்தன்

இவரின் பூர்வீகம் காரைநகர் மாப்பாணவூரி ஆகும். இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலும் உயர்கல்வியைக் கல்கிசை சென். தோமஸ் கல்லுரியிலும் பயின்றார். அடுத்து பல்கலைக் கழகம் சென்று மருத்துவக்கல்வியைத் தொடர்ந்தார். 1943ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தினால் முதல் டாக்டர் பட்டம் சம்பந்தன் அவர்களுக்கே வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது. டாக்டராகப்பட்டம் பெற்று வெளியேறிய டாக்டர் சம்பந்தன் அவர்கள் மனித நேயஅடிப்படையில் ஏழைகளுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் சேவை புரிவதையே அடிபடை நோக்கமாகக் கொண்டிருந்தார். டாக்டர் பட்டம் பெற்ற பின் கொழும்பு போதான வைத்திய சாலையில் வைத்தியப் பணியில் இருந்து கடமையாற்றினார். அவ்வேளை விடுமுறையில் தனது சொந்த ஊரான காரைநகருக்கு சென்று கொண்டிருந்த போது மூளாயில் சிறிய கட்டிடங்களுடன் ஒரு ஆஸ்பத்திரி அமைந்திருப்பதை அவதானித்தார். தெருவோரமாக இரண்டு மூன்று மாட்டு வண்டில்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் கவனித்தார். கிராமச் சூழலில் வசதிகள் அற்ற நிலையில் இருந்த அவ் வைத்திய சாலையைப் பார்த்ததுமே இதுவே தனக்குச் சேவை யாற்ற உகந்த இடம் என எண்ணிக்கொண்டார்.

அதனால் அரசாங்க சேவையை உதறித் தள்ளிவிட்டு 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி மூளாய்கூட்டுறவு வைத்தியசாலையில் பணியை ஏற்றார். அப்பொழுது அவ் வைத்தியசாலையில் தலைமை டாக்டராக இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சாக்கோ அவர்கள் இருந்தார்கள். இவர் ஓர் சிறந்த நிர்வாகி. சுத்தம் பேணுபவர். ஆஸ்பத்திரியில் வெற்றிலை பாக்கு உண்பவர்களை கண்டால் இவருக்கு சிம்ம சொர்ப்பணம். ஆனால் வைத்தியத்தில் சிறந்தவர். அக்காலத்தில் ஆஸ்பத்திரியில் மின்சாரம் இருக்கவில்லை. ஆனால் டாக்டர் சம்பந்தரும் டாக்டர் சாக்கோவும் சேர்ந்து பாரிய சத்திரசிகிச்சைகளைக்கூட பெற்றோமக்ஸ் வெளிச்சத்துல் செய்து வெற்றியும்கண்டனர். சத்திரசிகிச்சைக் கருவிகள் கிருமி நீக்கம் செய்வதற்கு இட்டலிப் பானையே பாவித்தனர் என அறியப் படுகின்றது.

1947ஆம் ஆண்டு சத்திரசிகிச்சை சிறப்புப்பட்டம் பெறுவதற்காக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்தினரின் உதவியுடன் இங்கிலாந்து சென்றார். அங்குள்ள எடின்பறோ மற்றும் கிளாஸ்கோ பல்கலைக்கழகங்களில் சத்திரசிகிச்சை நிபுணத்துவப்பட்டம் பெற்றார். பின்னர் சுவீடன் மற்றும் சுவிற்சலாந்த நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் மகப் பேறு தொடர்பான பட்டங்களைப் பெற்று இலங்கைக்குத் திரும்பி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையிலேயே தொடர்ந்து பணியாற்றினார். இவரும் டாக்டர் சாக்கோவும் சேர்ந்து ஆற்றிய பணி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல் அயல் கிராமங்களில் உள்ள மக்களின் மனங்களில் இடம் பிடிக்க வழிவகுத்தது. டாக்டர் சம்பத்தனின் வைத்திய சேவை பலரையும் ஈர்த்தது என்றே கூற வேண்டும். 1975ஆம் ஆண்டு வரை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சேவையாற்றினார்.

பின்னர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் தனியாக ஓர் நிறுவனத்தை ஆரம்பித்து மக்களுக்கான சேவையைத் தொடர்ந்தார்.

5. டாக்டர் ஆறுமுகம் செல்வரட்ணம் மனநலத்துறை வைத்தியர்

இவர் காரைநகர் மருதடியைச்சேர்ந்த வேலுப்பிள்ளை ஆறுமுகம் மற்றும் காமாட்சி தம்பதிகளின் புதல்வராவர். தனது ஆரம்பக்கல்வியை மருதடி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியிலும், தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார். கல்வியை பொறுத்தளவில் இவருக்குத் தாய்மாமன் வழிகாட்டல் கூடவே இருந்தது. உயர்கல்வியை நிறைவு செய்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு மருத்துவக்கல்வியைத் தொடர்ந்தார். அங்கு அக்கல்வியை நிறைவு செய்து (MBBS) எம் பீ பீ எஸ் பட்டமும் பெற்றார். இரத்தினபுரி வைத்தியசாலையில் முன்னிலை பயிற்சியை முடித்து அம்பாறை அரசினர் வைத்திய சாலையில் டாக்டராகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கிருந்து இடமாற்றம் பெற்று அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் பணியாற்றினார்.

அவ்வேளை காரைநகர் மருதடியைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் பிரபல வர்த்தகருமான சங்கரப்பிள்ளை இரத்தினம் மற்றும் நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியான சரோஜினிதேவியைத் திருமணம் செய்தார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளை மேற்படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்து சென்றார். லண்டன் மாநகரில் உள்ள NHS Trust – Runwell Hospital மற்றும் Basildon and Thurrock University Hospital ஆகிய இடங்களில் தனது மேற் படிப்பை முடித்து M.R.C Psych (England) பட்டமும், மனநலத்துறை ஆலோசகருக்கான (Consultant Psychiatrist). தகமையும் பெற்று நாடு திரும்பினார். அதன் பின்பு மாத்துறை அரசினர் வைத்தியசாலை, மட்டக்களப்பு அரசினர் வைத்தியசாலை ஆகிய இடங்களில் மனநலத் துறை வைத்தியத்துறை நிபுணராகக் கடமையாற்றினார். அதன் பின் தெல்லிப்பழை அரசினர் வைத்திய சாலைக்கு இடமாற்றம் பெற்றார். அங்கிருந்து யாழ்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை அரசினர் வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் மனநல மருத்துவராகக் கடமையாற்றியதுடன் யாழ் மருத்துவபீட மனநலத்துறை விரிவுரையாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

யாழ்மாவட்டத்தில் ஏற்பட்ட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக மீண்டும் சேவைக்கு அமர்த்தப்பட்டு 2003ஆம் ஆண்டு மீண்டும் ஓய்வு பெற்றார்.

6. டாக்டர் திருநாவுக்கரசு தவமணி

இவர் காரைநகர் களபூமி விளானையைச் சேர்ந்த அப்போதிக்கரி கனகசபை திருநாவுக்கரசு மற்றும் செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாவர். தனது ஆரம்பக் கல்வியைக் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியசாலையிலும், உயர்கல்வியை இராமநாதன் கல்லூரி மற்றும் யாழ்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றார். இவர் இந்துமகளிர் கல்லூரியில் இருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வியை கற்பதற்குத் தெரிவானார். அங்கு மருத்துவக்கல்வியை நிறைவுசெய்து எம். பீ. பீ. எஸ் பட்டமும் பெற்றார். இவருக்கு அராலிதெற்கைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை (எஞ்சினியர்) அவர்களைப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். டாக்டரான இவர் களுத்துறை, ஏறாவூர், யாழ்ப்பாணம், காலி ஆகிய இடங்களில் இலங்கையில் சேவையாற்றினார். பின்னர் லண்டன், நைஜீரியா ஆகிய இடங்களில் பணியாற்றி பின்னர் அவுஸ்திரேலியா சென்று சிறிது காலம் பணியாற்றி இப்பொழுது அங்கேயே வசித்துவருகின்றார்.

7. டாக்டர் கந்தையா கனகரட்ணம்

இவர் காரைநகர் களபூமியைச் சேர்ந்தவரும் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலையின் முன்னாள் அதிபருமான வெற்றிவேலு கந்தையா அவர்களின் மகனுமாவாவர். இவர் பல்கலைக் கழகம் சென்று மருத்துவத்துறையில் கற்று எம். பீ .பீ. எஸ் (MBBS) பட்டமும் பெற்றார். இலங்கையில் பல இடங்களில் சேவையாற்றினார் என அறிய வந்தாலும் இவரைப் பற்றிய முழுவிபரமும் கிடைக்கவில்லை. இவர் களபூமியை சேர்ந்த ரைம்ஸ் சங்கரப்பிள்ளை தம்பதிகளின் மகளைத் திருமணம் செய்தார்.

8. டாக்டர் பரமநாதர் சிவசோதி

இவர் தோல்வைத்திய நிபுணர் எனக் கேள்விப் பட்டாலும் இவர் பற்றிய முழுவிபரமும் கிடைக்கவில்லை.

9. டாக்டர் பொன்னம்பலம் பரமசாமி

இவர் காரைநகர் ஆலடியைச் சேர்ந்த பொன்னம்பலம் தம்பதிகளின் மகனாவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை ஆரம்பித்து மகப்பேற்று மருத்துவரானார். இவர் கொழும்பில் கடமையாற்றி இளைப்பாறிய பின்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையிலும் சேவையாற்றினார். முழுவிபரம் கிடைக்கவில்லை. மேலும் இவர் களபூமியை சேர்ந்த ரைம்ஸ் சங்கரப்பிள்ளை அவர்களின் மகளைத் திருமணம் செய்தார்.

10. டாக்டர் அம்பலவாணர் தாமோதரம்பிள்ளை

இவர் குருநாகல் பிரபல வர்த்தகர் அம்பலவாணர் தம்பதிகளின் மகனாவார். தனது உயர்கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், மருத்துவக் கல்வியை கொழும்பு பல்கலைக் கழகத்திலும் கற்று எம். பீ. பீ. எஸ் (MBBS) பட்டமும் பெற்றார். மாவத்தகமவில் DMO ஆகவும், கண்டியில் JMO வாகவும் சேவையாற்றியதுடன் மாத்தளை கொழும்பு ஆகிய இடங்களிலும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் பாணந்துறை பிறபலவர்த்தகர் முருகேசு தம்பதிகளின் மகளை திருமணம் செய்தார்.

11. டாக்டர் காசிப்பிள்ளை நடேசன்

இவர் காரைநகர் வேம்படியைச் சேர்ந்த அப்போதிக்கரி (RMP) சுப்பிரமணியம் காசிப்பிள்ளை தம்பதிகளின் மகனாவார். இவர் பற்றிய முழுவிபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

12. டாக்டர் கந்தையா சற்குரு

இவர் மருந்துக் கடை (யாழ்ப்பாணம்) உரிமையாளரான கந்தையா அவர்களின் மகனாவார்.

13. டாக்டர் சிந்தம்பரப்பிள்ளை கருணானந்தம்

இவர் கண்டி ராஜவீதி பிரபலவர்த்தகரும் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவருமான சிதம்பரப்பிள்ளை அவர்களின் சிரேஷ்ட புதல்வராவார். உயர்கல்வியை யாழ்ப்பாணம்  சென் ஜோன்ஸ் கல்லூரியிலும், மருத்துவக் கல்வியைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் கற்றுத் தேறினார். மேலும் ஏறாவூர், சாவகச்சேரி போன்ற இடங்களில் சேவையாற்றினார்.

14. டாக்டர் பொன்னுத்துரை விக்கினேஸ்வரி 

இவர் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவரும், பதுளை முன்னாள் பிரபல வர்த்தகருமான கதிரவேலு பொன்னுத்துரை அவர்களின் மகளாவார். இவர் பல்கலைக்கழகம் சென்று மருத்துவக் கல்வியே பயின்று டாக்டரானார். மேலும் இவர் திருகோணமலை, கல்முனை வவுனியா போன்ற இடங்களில் சேவையாற்றியுள்ளார்.

15. டாக்டர் கனகரட்ணம் விஜயரட்ணம்

இவர் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவராவார். ஆரம்பக் கல்வியை வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையிலும் உயர்கல்வியைக் காரைநகர் யாழ்ரன் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு அக்கியூனஸ் கல்லூரியில் கற்றார். அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கு 1967ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு தெரிவானார். அங்கு மருத்துவக் கல்வியைக் கற்று எம். பீ. பீ. எஸ் பட்டமும் பெற்றார். தொடர்ந்து இலங்கையில் மாத்தறை, அடம்பன், பதுளை, பளை ஆகிய இடங்களில் சேவையாற்றிய பின் இலங்கைக்கு வெளியே நைஜீரியா, சிம்பாபே ஆகிய இடங்களில் பணியாற்றினார். பின்னர் 1986ஆம் ஆண்டு கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் வலந்தலை பெரிய மணலைச் சேர்ந்த பிரபல ஆயுள்வேத வைத்தியர் கந்தப்பொடி ஞாணப்பிரகாசம் அவர்களின் மகளான விமலநாயகியைத் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

16. டாக்டர் விநாசித்தம்பி சாரதாதேவி

இவர் வாரிவளவை வசிப்பிடமாகக் கொண்டவரும் முன்னாள் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை ஆசிரியருமான விநாசித்தம்பி ஆசிரியரின் மகளாவார். மேலதிக விபரம் கிடைக்கவில்லை.

17. டாக்டர் ஆறுமுகம் கணேசலிங்கம்

இவர் காரைநகர் வாரியந்தனையைச் சேர்ந்த மு. ஆறுமுகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். இவர் ஆரம்பக் கல்வியை வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலையில் பயின்றார். மேலும் இவர் பல்கலைக் கழகம் சென்று மருத்துவத்துறையில் பயின்று டாக்டராகி இலங்கையில் சிலகாலம் பணியாற்றிய பின்னர் நியூஸ்லாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் பணிபுரிந்தார்.

18. டாக்டர் சண்முகம் ஜெகதீஸ்வரி

இவர் டாக்டராகத் திருகோணமலையிலும் இலங்கையின் வேறு சில இடங்களிலும் கடமையாற்றியுள்ளார் என அறியப்படுகின்றது. இவர் காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

19. டாக்டர் முத்தையா கனகராசா

இவர் காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்தவராவர். மேலும் யாழ்ப்பாணம் உட்பட இலங்கை வேறு சில இடங்களிலும் சேவையாற்றியுள்ளார்.

20. டாக்டர் கணபதிப்பிள்ளை சிவபாக்கியம்

இவர் காரைநகர் பழையகண்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் கற்றுத் தேறினார் காரைநகர் வைத்திய சாலையில் பணியாற்றினார். இவரைப் பற்றிய ஏனைய விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

21. டாக்டர் அம்பலவாணர் வைத்திலிங்கம்

இவர் களபூமி பாலாவோடையைச் சேர்ந்த அம்பலவாணர் தம்பதிகளின் மகனும் களபூமி பாலாவோடையைச் சேர்ந்தவரும், இலங்கையில் பல பாகங்களிலும் வியாபார ஸ்தாபனங்களை நிறுவிய பிரபல வர்த்தகருமான ஏ. எஸ் சங்கரப்பிள்ளை அவர்களின் மருமகனுமாவார். யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஜே. எம். ஓ வாகவும் (JMO) கண்டி பெரியாஸ்பத்திரியில் (DMO) டி. எம். ஓ வாகவும் சேவையாற்றி இளைப்பாறியதாகவும் அறியப்படுகிறது.

22. டாக்டர் கணபதிப்பிள்ளை அம்பிகைபாகன்

இவர் மணற்பிட்டியைச் சேர்ந்தவரும், கண்டி தர்மராஜக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய வரும் மாணவர் தமிழ்வாசகம் என்னும் நூலை ஒரு சில வகுப்புக்களுக்காக எழுதி அரச அங்கீகாரம் பெற்று வெளியிட்டவருமான . திரு வே. கணபதிப்பிள்ளை அவர்களின் மகனாவார். இவர் மருத்துவக் கல்வியை கற்று டாக்டரானார். இவர் பணியாற்றிய இடங்கள், பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இருந்தும் இளைப்பாறிய பின் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சில காலம் பணியாற்றியுள்ளார். காரைநகர் களபூமி நந்தாவிலைச் சேர்ந்த அப்புக்காத்து சுப்பிரமணியம் தம்பதிகளின் மருமகனுமாவார்.

23. டாக்டர் சபாரத்தினம் சிவகுமாரன்

இவர் காரைநகர் வலந்தலையைச் சேர்ந்தவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆசிரியப் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதிபராகச் சேவையாற்றியவரும், எழுத்தாளருமான நமசிவாயம் சபாரத்தினம் மற்றும் லீலாவதி தம்பதியினருக்கு மகனாக 17-01-1946ஆம் திகதி பிறந்தார்.

மேலும் தனது உயர்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கற்று அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காகக் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். அங்கு பிரசித்தி பெற்ற பேராசிரியர் குமாரதாஸ் இராஜசூரிய மற்றும் டாக்டர் ஆர்.பி.ஐயவர்த்தனா போன்றோரிடம் திறம்படக் கற்றுத் தேறினார். பல்கலைக் கழகப் படிப்பை முடித்துக் கொண்ட சிவகுமாரன் அவர்கள் இங்கிலாந்து சென்று இக்கல்வியின் மூலம் மேலதிக தகமையைப் பெற்று இலங்கை திரும்பினார் வந்ததும் மன்னார் சென்று தனது பதவியை ஏற்றார். அங்கிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலையில் மருத்துவ ஆலோசராக (Consultant Physician) பதவியேற்றார். இவர் பதவி வகித்த காலத்தில் யாழ்பாணத்தில் கடுமையாகப் போர் நடந்து கொண்டிருந்தது. குண்டுகள் விழுந்து சிதறிய உடலங்களோடு உயிருள்ள மனிதர்களை ரக்ரர் வண்டிகளில் கொண்டுவந்து குவிக்க அத்தனை பேருக்கும் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர் கணேசரத்தினம், டாக்டர் ரவிராஜ், டாக்டர் சிவசூரியா, டாக்டர் கணேசமூர்த்தி தம்பதியர், டாக்டர் ஆனந்தராஜா ஆகியோருடன் டாக்டர் சபாரட்ணம் சிவகுமாரன் போன்றோர் மருந்து வசதிகள் இல்லா அக்காலத்தில் தத்தம் துறை சார்ந்து மக்களின் உயிர்க்காக்கப்பாடுபட்ட இவர்களின் சேவையையும் யாழ்வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கும் என்பது நிட்சயம்.

டாக்டர் சிவகுமாரன் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவர். தமிழ் நோயாளிகளும் சரி, சிங்கள நோயாளிகளும் சரி இவரைக் கடவுளாகவே மதித்தனர். இதற்குக் காரணங்கள் பலவுண்டு. இவர் தனது நெருங்கிய உறவினர்களாயினும் சரி, பாமர மக்களாயினும் சரி எல்லோரையும் சமமாகவே மதித்து இயன்றவரை அவர்களைத் திருபதிப்படுத்தும் வகையில் சேவையாற்றினார். வாரத்தில் எழுநாட்களும் வாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளைக் காலை மாலை சென்று பார்வையிடுவாராம். சில வேளைகளில் மூன்றாம் தரமும் சென்று பார்வையிடுவாராம்.

கம்பவாருதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் கம்பன் கழகத்தினர் டாக்டர் சபாரத்தினம் சிவகுமாரன் அவர்களுக்கு கழகம் சார்பில் மகர யாழ் விருதினை வழங்க முன்வந்த போது அவர் தான் ஓர் அரசாங்க ஊழியன் ஆகையால் விருது தேவையில்லையென முதலில் மறுத்துவிட்டாராம். பின்னர் எத்தனையோ நியாயங்களைக் கூறி ஒருவாறு சம்மதிக்க வைத்தார்களாம். விருதுவாங்கச் செல்லும் பொழுது அப் பொழுது வைத்தியசாலைப் பணிப்பாளராக இருந்த செல்வி நவமலர் கனரத்தினம் அவர்களையும் அழைத்துச் சென்று தனக்கு கிடைத்த மகரயாழ் விருதினையும் பணத்தையும் அம் மேடையில் வைத்தே பணிப்பாளரிடம் கையளித்தாராம். பின் கொழும்புக்கு மாற்றலாகிச் சென்று சிறந்த சேவையாற்றிப் பலரின் பாராட்டுக்களை ப் பெற்றதுடன் அங்கிருந்தே சேவையில் இருந்து இளைப்பாறினார்.

24.  டாக்டர் இந்திராணி கண்ணுத்துரை

இவர் வலந்தலையைச் சேர்ந்த இராசையா தம்பதிகளின் மகளாவார். இவர் 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி வேலணை அரசினர் மத்திய கல்லூரியிலும் பின்னர் நெல்லியடி அரசினர் மத்திய கல்லூரியிலும் கற்று தேறி அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான தகைமையைப் பெற்றுப் பல்கலைக்கழகம் சென்று கற்று கண் டாக்டரானார். அதன் பின் லண்டன் சென்று சில காலத்தின் பின் தாய்நாடு திரும்பியவர் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் சேவையாற்றினார். பின்னர் தனியார் வைத்தியசாலையிலும் சேவைபுரிந்தார் எனவும் அறியப்படுகின்றது.

25. டாக்டர் தியாகராசா சோமசுந்தரம்

இவர் வேம்படியைச் சேர்ந்த சிறாப்பர் முருகேசு தியாகராசா அவர்களின் மகனாவார். மேலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பின்னர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியிலும் கற்றார். அங்கிருந்து மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காகக் கொழும்பு பல்கலைக் கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு கற்றதன் பயனாக டாக்டரானார். அதைத் தொடர்ந்து இலங்கையில் குருநாகல், கொழும்பு, சாவகச்சேரி போன்ற பல இடங்களில் சேவையாற்றினார். பின்னர புருணை நியூஸ்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சேவையாற்றிய பின் அவுஸ்திரேலியாவிலேயே வசித்துவருகிறார்.

 

இக்கட்டுரையின் நோக்கம் பழையனவற்றைப் புதுப்பித்து இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தி வைப்பதாகும். அதனாலேயே காரைநகரில் 1970ஆம் ஆண்டுக்கு முன்னுள்ள மருத்துவமும் மருத்துவர்களும் என்ற தலைப்பில் 2 பகுதிகளாகப் பிரித்து பகுதி 1இல் ஆங்கில மருத்துவம் பற்றியும், பகுதி 2 ஆயுள் வேத மருத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன். முதலில் ஆங்கில மருத்துவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பு எவ்வளவோ முயன்றும் பலர் பற்றிய முழுத்தகவலும் கிடைக்கவில்லை. அவற்றைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளேன. இவர்கள் பற்றிய முழுவிபரங்கள் அறிந்தவர்கள் சரியான விபரங்களைத் தந்துதவினால் உதவியாக இருக்கும் என்பதுடன் கட்டுரையும் மறுசிரமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   தொகுத்தவர்
தம்பையா நடராசா
கருங்காலி
காரைநகர்.

பகுதி 2 – ஆயுள் வேத மருத்துவம் பற்றிய கட்டுரை விரைவில் வெளிவரும்.