சங்கடப் படலை

சங்கடப் படலை

எஸ்.கே. சதாசிவம்

 

சுப்பிரமணிய வித்தியாசாலை, சங்கடப்படலை

தமிழ் மக்களின் பண்பாட்டு வரலாற்றுத் தடயங்கள் பேணிப் பாதுகாக்கப்படாமையால் அழிந்து போகும் நிலைமை காணப்படுகின்றது. நமது பண்பாட்டு வரலாற்றுத் தடயங்களையும் அரும்பொருட்களையும் பாதுகாப்பதன் மூலம் நமது இனம் நீண்ட வரலாற்றுப் பெருமை மிக்க இனம் என்பதற்கு உரிமை கோருவதற்குச் சாட்சியங்களாக அமையும்.

யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளில் காணப்படும் சங்கடப் படலை வாயிற் கட்டட அமைப்பாகும். சங்கடப்படலை என்பது கூரையுடன் கூடிய படலை அமைப்பாகும். படலையின் உட்புறமும் வெளிப்புறமும் திண்ணை அமைப்புடன் காணப்படும். சில சந்தர்ப்பங்களில் படலையின் வெளிப்புறத்தில் மாத்திரம் திண்ணை காணப்படும். வீதி வழியே நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இளைப்பாறி ஓய்வு எடுத்து தாகம் தீர்த்துச் செல்வதற்காக அமைக்கப்படுவது. முகம் தெரியாதவர்களையும் வரவேற்று உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பின் அடையாளங்கள் சங்கடப்படலைகள். சில சந்தர்ப்பங்களில் இவற்றோடு இணைந்து கால்நடைகள் நீர் அருந்துவதற்கும் தொட்டிகள் அமைக்கப்படும்.

பழைய காலத்தில் சாதி முறைமை குடி கொண்டிருந்த காலப்பகுதியில் வீட்டிற்கு உள் நுழைபவர்களை வரையறுக்கும் இடமாகவும் இருந்தமை அறியக் கூடியதாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் செல்வந்தர்களின் செல்வச் செழிப்பை வெளிக்காட்டுவதாகவும் அமைகின்றது.

மேலே காணப்படும் சங்கடப் படலை சுப்பிரமணிய வித்தியாசாலையின் ஸ்தாபகர் ஸ்ரீமான் சி. சுப்பிரமணியபிள்ளையின் மகன் திரு. சி. சு. கந்தப்பு அவர்களால் 1935 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இடப்பெயர்வு வரை காரைநகரின் பல குறிச்சிகளில் கூரை அமைப்புடன் பெறுமதி மிக்க வேலைப்பாடுகள் நிறைந்த இரும்பினாலான படலைகள் காணப்பட்டன. பேணிப் பாதுகாக்கப்படாமையினால் அழிவடைந்து செல்லும் நிலைமையில் உள்ளது. களபூமியில் இன்றும் இரண்டு வீடுகளில் கூரை அமைப்புடனான படலைகள் காணப்படுகின்றன.

காரைநகர் துறைமுகம் ஊடாக பயணிக்கும் பயணிகள் மாட்டு வண்டி தொடர் அணிகள் இளைப்பாறிச் செல்வதற்கான வசதியை காரைநகர் கிழக்கு வீதியில் விளானைப்பகுதியில் வாழ்ந்த திரு அம்பலவாணர் இராசரத்தினம் ஏற்பாடு செய்திருந்தார். இப்படலை அமைப்பு முழுமையான சங்கடப்படலை அமைப்பாகும்.

 

 

கால்நடைகள் நீர் அருந்துவதற்கான தண்ணீர் தொட்டி

 

 

 

ஆலடிக்கும் வேம்படிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள திரு. சு. பொன்னம்பலம் அவர்களின் வீட்டின் வாயிற்கதவு 1928 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.