மறைந்தும் மறையாத மாமனிதர் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

மறைந்தும் மறையாத மாமனிதர்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

yogo

 

 

 

 

 

 

 

கலாபூஷணம் பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்

 

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாய்  சிறந்த அறிவுப் புலமை மிக்க பண்பாட்டாளராய், ஊருக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய மனப்பான்மை உடையவராய் பொருளாதாரம் பற்றிய தெளிந்த சிநதனையாளராய் கல்வியின் மூலம் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத இலட்சிய நோக்கம் கொண்டவராய் வாழ்ந்தவரே அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள்.

ஆன்மீகப்பணி கல்விப் பணி, சமூகப் பணி, பொருளாதாரப் பணி, அரசியற் பணி என்ற வகையில் பன்முகப்பட்ட சிந்தனையாளராய் விரிந்து பரந்த தமது செயற்பாடுகளைத் தூர நோக்கில் அமைத்துக்கொண்டமையால் இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.

                            "நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
                              பண்பு பாராட்டும் உலகு"   – (994)

1916ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த இவரது நூற்றாண்டு விழா இவ்வாண்டு அதே தினத்தில் அவர் 28 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்த காரைநகர் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் கொண்டாடப்பட்டது.

பின்னர் அவரது அன்பர்கள் ஆதரவாளர்கள் ஒனறிணைந்து வெற்றிநாதன் அரங்கில் இவ்விழாவைக் கொண்டாடினர். இம்மாதம் கனடா வாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் கனடாவிலும், இன்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் சுவிஸிலும் கொண்டாடுகின்றனர். இதற்கு அவரது முழுமையான செயற்பாடுகளே காரணம்.


                            "பிறப்பொக்கும் எல்லா உயிர்;க்கும் சிறப்பொவ்வா
                             செய்தொழில் வேற்றுமை யான்" – (972)

அவரது செயற்பாடுகள் யாவும் நம் கண்முன் விரிந்து பரந்து கிடக்கின்றன. எனவே அவர் காரைநகர் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்து வருகிறார்.

காலத்தால் அழியாத தன்னலமற்ற சேவைகளைச் செய்த ஒரு பெரும் சாதனையாளர். சமூக சிந்தனையாளர், நாட்டுப்பற்றாளர்.

நாட்டு முன்னேற்றங்கருதி அவர் செய்த செயற்பாடுகள் ஒன்றா? இரண்டா?

1.    காரைநகர் – சிவன்கோயில் வீதி (புதுறோட்)

2. காரைநகர் – கோவளம் வீதி( வெளிச்சவீடு) முதலான வீதிகளையும்

3.    காரைநகர் மக்களுக்கான மின்சார வசதிகளையும்

4.    குழாய்நீர் – குடிநீர் வசதிகளையும் அரச உதவிகளைப் பெற்று ஏற்படுத்திக் கொடுத்தார்

5.    தபாற் கந்தோருக்கான புதிய கட்டடம்

6.    வியாவில் – உபதபால் நிலையம்

7.    கிராமிய வங்கி

8.    இலங்கை வங்கிக்கான கட்டட நிர்மாண உத்தேசம்

9.    காரைநகர் – துறைமுகத்திற்கு அண்மையில் இ.போச பேருந்துச் சாலை

10.    கோவளம், கசூரினா – பீச், கல்லுண்டாய் வீதி இ.போச.ச சேவை.

ஆகியன ஆக்க பூர்வமான சிந்தனையின் வெளிப்பாடுகள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக
இவரால் வடிவமைக்கப்பட்ட

11. வேணன் அணைக்கட்டு

                                "கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
                                 பெருமையின் பீடுடையத இல்" – (1021)

  சமூகச் செயற்பாடுகள் மட்டுமன்றி சிறந்த அறிவாற்றலும் ஆளுமையும் மிக்க இவரது கல்விச் செயற்பாடுகள் சில வரையறுக்கப்பட முடியாதவை. பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக வளங் களைக் கூட வசதிகளை ஏற்படுத்தல், தரமான ஆசிரியர்களை இணைத்துச் செயற்படுத்தல், மாணவர் ஒழுக்க நலன்களில் அக்கறை, விளையாட்டுத்துறை, இசைத்துறை, போன்று பிறசெயற்பாடுகளையும் ஊக்குவித்தல் என்பன. சிறந்த ஹொக்கி அணி வீரர். உதைபந்தாட்டத்திலும் அதிக ஈடுபாடு சங்கீதக் கலையில் ஆர்வம் எனவே சமய சமூக நிகழ்வுகளில் இசைக் கலையை ஊக்குவித்தார்

வெள்ளிவிழாக் கண்ட வரலாற்று அதிபர், வைரவிழா, பவளவிழா, முத்துவிழா, என்ற முப்பெரும் விழாக்களையும் நடத்தி முடித்த ஒரே அதிபர் என்ற பெருமைக்குரியவர்.

                                   "பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
                                    அருமை உடைய செயல்" (975)

பொருளாதாரத் துறையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். நாட்டு மக்கள் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். மாணவர் ஒழுக்க சீலராய் வாழ வேண்டும் என நாட்டு முன்னேற்றம் கருதி இரவும் பகலும் அயராது உழைத்தார். அதுவே அவரது இலட்சியமாகும்.

  இவரது சிந்தனையில் மலர்ந்த பொருளாதாரம் பற்றிய எண்ணக்கருவே இவரது கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரை.

"இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பும்"

என்ற ஆய்வு நூல் இந்நூலைப் பாராட்டி புதுடெல்கி பல்கலைக்கழகம் "கலாநிதிப் பட்டம்" வழங்கி இவரைக் கௌரவித்தது.

  கல்வி கலையில – அஃது கால இட எல்லைக்கு அப்பாற்பட்டது. இவர் கலாநிதிபபட்டம் பெற்ற போது வயது 63 அவரது எண்ணம், சிநதனை, செயல் எல்லாம் நாட்டின் முன்னேற்றம் ஒன்றை நோக்கியே செயற்பட்டன. எனவே அவர் எக்காலத்திலும் ஓய்ந்திருக்கவில்லை.

அவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் காரை மண்ணிறகுப் பெருமை தேடித்தந்துள்ளன. இதனால் அவர் மறைந்தாலும் மறையாத மாமனிதராய் மக்கள் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

           "கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
            சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு" (981)

                                                                            நன்றி

                                                           "ஆளுயர்வே ஊருயர்வு"
                                  "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                          இங்ஙனம்
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                             சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          14 – 05 – 2017

cover-01 (1)