அமுதசுரபியாக விளங்கும் பனையின்பெருமையும் காரைநகர் மக்களும்

 

 

அமுதசுரபியாக விளங்கும் பனையின்பெருமையும்

காரைநகர் மக்களும்

இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த காலத்திலும், அதன் பின்னரும் இலங்கையில் இறக்குமதிகள் குறைந்து உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரிசி கோதுமைமா சீனி போன்றன பங்கீட்டு முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. உள்ளுரில் அரிசி, நெல் என்பன விலையேற்றம் கண்டன, பணப்புழக்கமும் குறைந்தே காணப்பட்டது. அதுமட்டுமன்றி மக்கள் வெளிநாட்டுப் பொருட்களில் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதனால் பல பெரியோர்களும் குழுக்களும் முனைந்து அதிக கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த பெருமுயற்சி எடுத்ததன் பயனாக மக்கள் பனம் பொருட்களுக்குப் புத்துயிர் கொடுக்க ஆரம்பித்தனர். இதற்குக் காரைநகர் மக்களும் இயைந்து செயற்படத் தொடங்கினர்.

இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினரால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறக்குறைய 42,000 ஏக்கர் நிலப்பரப்பில் 77,00,000 பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் வலிகாமம் மேற்குப் பகுதி 22,05,388 பனைகளுடன் 1ம் இடத்திலும், தீவுப்பகுதி 13,69,284 பனைகளுடன் 2ம் இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிடப்படுள்ளது. இவற்றை உற்றுநோக்கும் போது காரைநகரில் குறைந்தது 300,000 பனைகளாவது இருந்திருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகின்றது. அவற்றில் புதிய வீடுகளுக்கான கூரைகள் அமைப்பதற்கும், வீடுகள் கட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் இருந்த பனைகளும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைகள் காரணமாகப் பாதுகாப்புக் கருதி காரைநகர் துறைமுகப்பகுதி, இராசாவின் தோட்டம், தோப்புக்காடு, நீலங்காடு பகுதியில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை என்பன அண்ணளவாக 8 – 10 வீதமாகும், வேரப்பிட்டி, கல்லந்தாழ்வு, கொத்தாசி அடைப்பு, ஊரி பிட்டியோலை, கொட்டைப் புலம் போன்ற கரையோரப்பகுதிகளில் மிக நெருக்கமாகவும், ஏனைய சில இடங்களில் அடர்த்தியாகவும் வேறு சில இடங்களில் பரவலாகவும் காணப்படுகின்றன.

பனைகள் கூட்டமாகக் காணப்படும் பகுதியை பனங்கூடல் என அழைக்கின்றோம்.பனை மரத்தைக் கற்பகதரு எனவும் அழைக்கின்றோம். இதற்குப் புற்பதி, தாலம் பெண்ணை, பொந்தி, காகக்கருப்பை கருங்குந்தி, செங்குந்தி, கட்டைச்சி பூமணத்தி, கங்கிநுங்கி, கொட்டைச்சி எனப்படுகின்ற மறுபெயர்களும் உள்ளன. இது போரசஸ் என்னும் தாவர இனத்தைச் சேர்ந்தது.

பனைகளில் ஆண் பனை,பெண் பனை என இரு இனங்கள் பற்றியே நாம் இதுவரை படித்தோம்.ஆனால் தமிழகத்தில் இருந்து வெளி வந்த 28.08.2019 தினகரன் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரையில் 34 விதமான பனைகள் இருப்பதாகக் கூறுகின்றது.

1    ஆண் பனை

2    பெண் பனை

3    தாளிப்பனை

4    கூந்தப்பனை

5    சாற்றுப்பனை

6    ஈச்சம்பனை

7    குமுதிப்பனை

8     ஆதம்பனை

9     திப்பிலிப்பனை

10    ஈழப்பனை

11    சீமைப்பனை

12    உடலற்பனை

13    கிச்சிலிப்பனை

14    குடைப்பனை

15    இளம்பனை

16    கூரைப்பனை

17    இடுக்குப்பனை

18    தாதம்பனை

19    காந்தம்பனை

20    பாக்குப்பனை

21    ஈரம்பனை

22    சீனப்பனை

23    குண்டுப்பனை

24    அலாம்பனை

25    கொண்டைப்பனை

26    ஏரிலைப்பனை

27    ஏசறுப்பனை

28    காட்டுப்பனை

29    கதலிப்பனை

30    வலியப்பனை

31    வாதப்பனை

32    அலகுப்பனை

33    நிலப்பனை

34    சனம்பனை

இப்பனைமரம் மனிதன் நாற்றுநட்டோ, நீர் இறைத்தோ பசளையிட்டோ வளர்வதில்லை, மாறாகப் பனைமரத்தில் இருந்து விழுந்த பனம் பழத்தை மாடுகள் நன்றாகச் சூப்பிகளியை உண்டபின் எஞ்சியிருந்த பனம் விதை மழைநீர் ஈரத்தில் தானாக முளைத்து வடலியாக வளர்ந்து பின்னர் குறிப்பிட்ட காலம் கடந்த பின் பனையாக உருவெடுக்கின்றது. இதன் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்தைப் பற்றியும் அதற்கான காலங்கள் பற்றியும் பார்ப்போம்.

  1. விதைப் பருவம்         – 22 நாள்
  2. முறிகிழங்கு               – 22 நாள் முதல் 3 மாதம் வரை
  3. நார்க்கிழங்கு            – 3 மாதம் முதல் 4 மாதம் வரை
  4. பீலிப்பருவம்              – 4 மாதம் முதல் 2 வருடம் வரை
  5. வடலிப்பருவம்           – 2 வருடம் முத 10 வருடம் வரை
  6. பனைப் பருவம்        – 10 வருடம் முதல் 45 வருடம் வரை

இப்பனைப் பருவத்தில் ஆண்டொன்றுக்கு 12 அங்குல வளர்ச்சி காணும், இதன் பின் செழிப்புற்று வைரம் பெறுகின்ற தெனக்கூறப்படுகின்றது.

பனைபற்றி ஆய்வு செய்த ரென்னற் என்பவரும், பேர்குசன் என்பவரும் பனை 801 விதமான பயன்களைத் தருமென்று கூறியிருக்கிறார்கள், பனையில் இருந்து கிடைக்கும் பயன்கள் இருவகைப்படும் ஒன்று உணவு வகை மற்றறையது பாவனைப் பொருட்களாகும்

உணவுப் பொருட்களாவன      பாவனைப் பொருட்களாவன

பனம் பழம்                                                                       பாய்

பனங்கிழங்கு                                                                தடுக்கு

பனாட்டு                                                                        களப்பாய்

பனங்கட்டி                                                                        சுளகு

பனங்கற்கண்டு                                                              விசிறி

பனங்காயப் பணியாரம்                                              பட்டை

பனஞ் சீனி                                                     நீர் இறைக்கும்  பெரியபட்டை

பனங்களி                                                                          பெட்டி

ஒடியற்பிட்டு                                                                     கடகம்

ஒடியற் கூழ்                                                                 புத்தகப்பை

புழுக்கொடியல்                                                      கொட்டப் பெட்டி

கருப்பட்டி                                                                ஏடுகள் (சுவடிகள்)

நுங்கு                                                                      வள்ளத்தலைப்பாகை

கள்ளு                                                                                     பிளா

பதநீர்                                                                                      உமல்

பூரான்                                                                                     ஓலை

சாராயம்                                                                         பனங்குருத்து

ஓடியல்                                                                         ஓலைக் குட்டான்

குரும்பை                                                                         கங்குமட்டை

                     பன்னாடை

                  ஊமல்

                       நெல்லுக்கூடை

                     மீன் பறி

                       திருகாணி

                       நீத்துப்பெட்டி

                     உறி

 

வேறு பொருட்கள்

பனை மரத்தில் இருந்து துலா, வீட்டுக் கூரைக்கான மரங்கள் தீராந்தி, சிலாகை மற்றும் மாட்டுத் தொழுவம் வண்டிலுக்கான மரம் மற்றும் இன்னோரன்ன பொருட்களும் செய்யப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை காரைநகர் மக்களிடையே பாவனையில் உள்ளன.

பனையானது  உணவு மற்றும் வீட்டுத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது அல்ல. இதற்கு விசேட ஆற்றல் உண்டு இதற்கு நிலத்தடி நீரைச் சேமித்து வைக்கும் ஆற்றலும் உண்டு. கிணற்றினை சுற்றி பனைமரங்கள் இருந்தால் அக் கிணறு இலகுவில் வற்றாது. வரட்சிக் காலங்களிலும் கூட குறைந்தளவு நீரைக் கொண்டு தாக்குப் பிடிக்கும் தன்மை பனை மரங்களுக்குண்டு. குறிப்பிட்ட இடத்தில் உள்ள நீர் மட்டத்தை பனை மரங்களே பாதுகாப்பதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். பழங்காலத்தில் வயல்களில் எல்லைகளில் பனை மரத்தை நாட்டியுள்ளனர். காரணத்துடன்தான் அப்படி செய்திருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து விழக்கூடிய பனம் பழம் மற்றும் இதர பொருட்கள் வயல்களுக்கு சிறந்த இயற்கைப் பசளைகளாகப் பயன் பட்டு வந்துள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த பனை ஆர்வலர் கடும் புயல் வந்தாலும் இலகுவில் சாயந்து விழாத மரம் பனையே என உறுதியாகக் கூறுகிறார். அதற்குக் காரணம் 3 வகையான வேர்த்தன்மை கொண்டதேயாகும் என்கிறார். வெளிப்புறவேர் மழை நீரை வேகமாக உள்ளே கொண்டு செல்லும். உள்வேர் மழை நீரைச் சேமித்து வைக்கும். நடுப் பகுதியில் உள்ள வேர் கிடைக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக்கு அனுப்பிவைக்கின்றது. பனை முக்கிய வேர் மண்ணிற்குள் 100 முதல் 150 அடிவரை செல்லும் தன்மை கொண்டது. பனை தமிழர்களின் நல் வாழ்வின் அடையாளம்.

 

(அ) நுங்கு

வைகாசிமாதம் முதல் ஆடிமாதம் வரை நுங்குக் காலமாகும். பாளைகள் வெளிவந்து குரும்பைகள் தோன்றும், அவை முற்றி நுங்குகளாகப் பரிணமிக்கின்றன, இது இருவகைப்படும் ஒன்று இளம் நுங்கு, மற்றையது கல் நுங்கு, இளம் நுங்கு வெட்டியவுடன் நீர்த்தன்மை நிறைத்தாக இருக்கும் பருகுவதற்கு இலகுவாகவும் இனிப்புத் தன்மை நிறைந்தாகவும் இருக்கும், கல்நுங்கு என்பது சற்று முற்றிய தன்மை கொண்ட தாகவும் இறுக்கத்தன்மை கொண்டிருப்பதனாலும் அதனைக் கைவிரலால் தோண்டியுண்பர், இது சற்று இனிப்புத்தன்மை குறைத்து காணப்படும் , நுங்கில் அதிகளவு வைற்றமின் B,C என்பனவும், இரும்புச்சத்து, கல்சியம் போன்றனவும் இருப்பதாகக் கூறப்படுகின்றன, உஷ்ணத்தினால் ஏற்படும். வேர்க்குரு இல்லாமல் போய்விடுமெனக் கேள்விப்பட்டிருக்கின்றேன், காரைநகரில் சிறுவர் முதல் பெரியோர் வரை இதனை விரும்பியுண்பர். இதனால் தான் பனை யோலை வெட்டும் பொழுது நுங்கினையும் வெட்டுமாறு கோருகின்றனர், ஊரில் கோவில்களில் நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது தேருக்கு சுற்றிவர நுங்குக் குலைகளைக் கட்டி அலங்கரிக்கின்றனர். நுங்கு குடித்தபின் எஞ்சும் கோம்பைகளைச் (கோழை) சிறுசிறு துண்டுகளாக அரிந்து ஆட்டுக்கடாக்களுக்கும் இளம்மாட்டுக் காளைகளுக்கும் உணவாகக் கொடுக்கின்றனர். இது அவற்றிற்கு சக்தியையும் வளர்ச்சியையும் கொடுக்கின்றது.

(ஆ) பனம் பழம்

நுங்குமுற்றி சீக்காயாகவும், அச்சீக்காய் முற்றி பனம் பழமாகவும் பரிணமிக்கின்றது . ஆவணி மாதம் முதல் ஐப்பசிமாதம் வரையான காலப்பகுதி பனம்பழக்காலமாகும். பனம் பழங்கள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 6 – 8 அங்குள விட்டமுள்ளனவாகவும், குலைகளாகவும், காட்சியளிக்கின்றன. நார்த்தன்மை பொருந்திய இப்பழங்களின் மேற்தோல் கறுப்பு நிறம் கொண்டவையாகும் அவை ஒரு விதையுடையனவாகவும், இருவிதைகள் கொண்டவை இருக்காலி எனவும், மூன்று விதைகள் கொண்டவை முக்காலி எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றினுள்ளே சுற்றிவர உள்ள பகுதிகள் தும்புகள் நிறைந்தனவாகவும் அத்தும்புகளிடையே களித்தன்மை கொண்ட பனம்பழத்தில் செம்மஞ்சள் நிறமுடைய திரவப் பொருள் காணப்படுகின்றது. இது பனங்களி எனப்படும், இதனை மாடுகள் எடுத்தவுடனையே தோலை நீக்கிவிட்டு, விதையை உறந்து உறிஞ்சிச் சாப்பிடுகின்றன. ஆனால் மனிதரோ அவ்வாறில்லாமல் இனிப்புத் தன்மை கொண்ட பழங்களாக எடுத்து நெருப்பிலிட்டு சுட்டு அதன் பின் அதனை நன்றாகக் கழுவி மேலுள்ள தோலை நீக்கி அதனை நன்றாகப் பிசைந்து உண்கின்றனர், 1950க்கு முன்னர் பெரும்பாலான காரைநகர் மக்களின் வீடுகளில் மதிய உணவாகப் பனம் பழமே இருந்தது என்று சொன்னால் மிகையாகாது ஒரு  விதையினை உறிஞ்சியுண்டால் ஒருநேரப் பசிதீரும் சாத்தியம் இருந்தது.

“மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூறி

இரந்தழைப்பார் யாருமுண்டோ” என்பதற்கிணங்க காரைநகர் மக்கள் பனம் பழகாலத்தில் அதிகாலையில் எழுத்து கடகங்களுடன் தத்தம் தோட்டங்களுக்குச் சென்று பனம் பழங்கள் பொறுக்கி வருவதைக் காணக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்ல வேறெந்த இடத்திலும் பனம் பழத்தைக் கண்டாலும் பொறுக்கிவரத்தவறுவதில்லை, இது எம்மக்களின் வழமையாக இருந்தது . பனம் பழத்தில் இனிப்புத்தன்மை கொண்டவை காறல் தன்மை கொண்டவை என இருவகை உண்டு இதைவிட வேறு தன்மைகள் கொண்டவையும் இருப்பதாக அறியப்படுகின்றது.

(இ) பனாட்டு

பனாட்டு தயாரிப்பதென்பது இலகுவான காரியமன்று. மேலும் எல்லோராலும் பொறுமையுடன் செய்யமுடியாது என்பதே உண்மை, பனாட்டுத் தயாரிப்பவர்கள் இனிப்புத்தன்மை கொண்ட பனம் பழங்களை மரத்தில் இருந்து விழுந்தவுடனேயே எடுத்துச் சேகரித்துவிடுவார்கள், பின்னர் , அப்பனம் பழங்களின் மேற்பகுதி முழுவதையும் நன்றாகக் கழுவிசுத்தம் செய்து கொள்வர்.

அடுத்து அதன் மேலுள்ள கறுப்புத்தோலை நீக்கிவிட்டுப் பழத்தை நன்றாகப் பிசைந்து களியை உறந்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் இடுவார்கள் பாத்திரத்தில் நிரம்பிய களியை பனங்களித் துண்டு எனக்கூறப்படும் துண்டின் உதவியுடன் வடித்தெடுப்பார்கள். வீட்டு முற்றத்தின் ஒருபகுதியில் நான்கு கம்பங்களை நாட்டிப்பந்தலிட்டு அதன் மேல் பாயைவிரித்து அப்பாயின்மேல் வடித்தெடுத்த களியை ஊற்றி நன்றாகப் பரவி அதில் உள்ள நீர்த்தன்மை நீங்கும் வரை ஏழெட்டு முறை பரவிக் காயவிடுவர் இரவில் குளிர்த்தன்மை ஏற்படுமெனக்கருதி பாயுடன் சுற்றி வீட்டுக்குள் வைப்பர். பனாட்டுக் காய்வதற்கு வெய்யில் படக்கூடிய பகுதியையே தேர்ந்தெடுப்பர். பனாட்டு நன்றாக காய்ந்து நீர்த் தன்மை முற்றாக நீங்கியதும். உழவாரை கொண்டு செதுக்கி எடுத்து அளவாக மடித்து இதற்கென இழைக்கப்பட்ட (பனாட்டுக் கூடை) கூடைகளில் அடுக்கிக் குசினியில் உள்ள பறனில் வைத்து விடுவர். மேற்கூறியவைகளைக் காரைநகர் சல்லை எனும் பகுதியில் வாழ்ந்த எனது பேத்தியார் பொன்னாத்தை என்பவர் வருடந்தோறும் செய்து வந்ததை நான் சிறுவனாக இருந்த பொழுது அவதானித்து வந்தேன். இவர் மட்டுமல்ல மேலும் பலர் பனாட்டுத்தயாரிப்பில் ஈடுபட்டார்கள் என அறிய முடித்தாலும் விபரங்களைத் திரட்ட முடியவில்லை.

பனாட்டு பெரும்பாலும் காலை உணவாகக் கொள்ளப்பட்டது. எனது பேத்தியோர் ஒரு துண்டுபனாட்டும் தேங்காய்ப்பூவும் தந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக்காலத்தில் ஒரு கூடை பனாட்டுக்கு ஒரு பரப்புக் காணி எழுதிக் கொடுத்தார்கள் எனக்கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதன் உண்மை தன்மையை ஸ்திரப்படுத்த முடியவில்லை. இருந்தும் அத்தகவல் உண்மையானால் அக்காலத்தவர் பனாட்டுக்கும், பனம் பொருட்களுக்கும் எவ்வளவு மதிப்புக்கொடுத்தார் என்பது புலனாகின்றது. அதியமான் என்னும் அரசன் கொடுத்த நெல்லிக்கனியை உண்ட ஒளவைப்பிராட்டி நீண்ட காலம் வாழ்ந்தது போல பனாட்டு மற்றும் பனம் பண்டங்களை உண்டவர்களும் நீண்ட காலம் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள் என்பதைச்  சரித்திரம் பறை சாற்றிவருவதை நீங்கள் அறிவீர்கள். இது காரைநகரைச் சார்ந்த முதியோர்களுக்கும் சாலப் பொருந்தும்.

 

(ஈ) கள்ளு , பதநீர்

தை மாதம் ஆனி மாதம் வரை கள்ளு மற்றும் பதனீர் இறக்கும் காலமாகும். கள் இறக்குபவர்கள் பனையில் இருந்து வெளிவரும் பாளைகளைத் தட்டிப்பதப்படுத்தி அவற்றைக் கயிற்றினால் வரிந்து கட்டி அவற்றில் மண்முட்டிகளை கட்டிவிடுவார்கள். அப்பாளையில் இருந்து ஒழுகும் கள்ளு கட்டப்பட்டமுட்டியில் ஒருங்கு சேரும் மரமேறுபவர்கள் அப்படிச் சேரும் கள்ளினை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சேர்த்து வருவார்கள். அப்படி பல பனைகளிலும் சேர்ந்து வந்த கள்ளினை மரத்தின் கீழேயே வைத்து விற்பனை செய்து வந்தனர். உடலுழைப்பின் பின் களைப்புற்று வருபவர்களும், நிரந்தரக்குடிகாரர்களும், மற்றும் இரகசியக் குடிகாரர்களும் அங்கேயே கள்ளினை அருந்திவந்தார்கள். மரத்தில் இருந்து இறக்கியவுடன் அக்கள்ளினைக் குடித்தால் இனிக்கும். நேரம் செல்லச் செல்ல அக்கள்ளின் தன்மை மாற்றம் அடையும். அது புளிக்கும். வெறித்தன்மையை ஏற்படுத்தும். கணைச்சூடு உள்ள சிறுவர்களுக்கும் அம்மை, சின்னமுத்து போன்ற வெப்பத்தினால் ஏற்படும் நோய்களுக்குமாக பெற்றோரும் மற்றோரும் உடன் கள்ளினை அதாவது மரத்தில் இருந்து இறக்கியவுடன் கள்ளினை வாங்கிச் சென்று அருந்தக் கொடுப்பார்கள். இதனால் சூடு தணிந்து நோய் நீங்கவழி பிறந்தது இரகசியக் குடிகாரர்களுக்கும், புதிதாகக் குடிப்பவர்களுக்கும் இது தேனாமிர்தமாய் இருந்தது. உழைத்துக்களைத்து வருபவர்கள் சற்று வித்தியாசமாகப் பழங்கள்ளையே விருப்புடன் பருகினர். இது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

நேரம் செல்லச் செல்ல அவர்கள் தன்னிலை மறந்து நடக்க முடியாதவர்களாய் மற்றவர்களின் உதவியுடனேயே வீடு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஒருவர் வெறியேறியவுடன் பாட்டிசைக்க ஆரம்பிப்பார். இன்னொருவர் அதற்கு எதிர்பாட்டிசைப்பார் இவர்களின் பாடல்களில் அதிகமாக நடராஜப்பத்து, பட்டினத்தார் பாடல்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. சிறுவர்களாக இருந்த எமக்கு அப்பொழுது அப்பாடல்களின் பொருள் விளங்கவில்லை காலங்கடந்து அவற்றை நினை விற் கொண்டு வரும்போது அவற்றின் பொருளைத் துல்லியமாக விளங்கிக்கொள்ள முடிந்தது. அவற்றில் ஒருபாடலை மட்டும் நடராஜப் பத்து என்னும் பகுதியில் இருந்து தருகின்றேன்.

 

காயா மரங்களிற பூ பிஞ்சறுத்தேனோ

கன்னியர்கள் பழிகொண்டெனோ

கடனென்று பொருள் பறித்தே வயிறெரித்தெனோ

கடுவழியில் முள்ளிட்டனோ

தாயாருடற்குள் வரவென்ன வினை செய்தனோ

தந்தபொருளிலை யென நான்

தானென்ற கோபமொடு கொலை களவு செய்தனோ

தபசிகளை யேசினேனோ

வாயார நின்று பலபொய் சொன்னனோ

ஈயாத லோபியேயானலுமென் பிழைகள்

எல்லாம் பொறுத்தருள்வாய்

ஈசனே சிவகாமிநேசனே எனையின்ற

தில்லைவாழ் நடராஜனே

இப்படியாகப் பல பாடல்களை அவர்கள் பாடுவார்கள்

கள்ளுக்கொட்டில்களில் சாத்தாவயல் பகுதியில் அமைந்திருந்த கள்ளுக்கொட்டில் பிரபல்யம் பெற்றதாக அமைந்திருந்தது. இது கருங்காலி கிராமத்தில் உள்ள கேசடைப் பகுதியூடாக வயல்களை ஊடறுத்துக் களபூமி சத்திரத்தைப் பகுதியின் ஊடாகக் காரைநகர் கிழக்கு வீதியைச் சென்றடையும் வீதியின் அருகே வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. வயல்களில் வேலை செய்துவிட்டு வருபவர்களும், வேறு இடங்களில் கூலிவேலை செய்துவிட்டு வருபவர்களும் இங்கு வந்து சுதந்திரமாகவும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமலும் கள்ளினை அருந்தவசதியாக இருந்தது இது போன்று வேறு பகுதிகளில் கள்ளுக் கொட்டில்கள் அமைந்திருந்தாலும் சாத்தாவயல் கள்ளுக்கொட்டில் முதன்மை பெற்றிருந்தாக அறியப்படுகின்றது. அங்கு பலர் கள் அருந்திய பின் சுவைக்காகப் பனங்கிழங்கு, கருவாடு போன்றனவற்றைக் கொண்டுவந்து காவோலையைக் கொழுத்தி அதில் வைத்துச் சுட்டுச் சுவைத்தனர்.

1970களில் இருந்து இந்நிலமையில் மாற்றம் ஏற்பட்டது – பனை அபிவிருத்திச் சபை  ஏற்படுத்தப்பட்டு கள்ளுக் கொட்டில்களுக்கு மூடுவிழா ஏற்படுத்தப்பட்டது, மாறாகக் கள்ளுத் தவறணை ஆரம்பிக்கப்பட்டது. கள் இறக்குபவர்கள் அனைவரும் தாம் இறக்கும் கள்ளினைக் கள்ளுத் தவறணைக்கே விற்கவேண்டு மென்ற கட்டாய நிலை ஏற்பட்டது. மாறாக வெளியில் விற்பது தடை செய்யப்பட்டது, கள்ளுக்குடிப்பவர்களும் தவறணைக்கே வந்து பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் உடன் கள்ளினைப் பெற விரும்புபவர்களுக்கும், இரகசியக் குடிகாரர்களுக்கும் திண்டாட்டம் ஏற்பட்டது.

அடுத்து பதநீர் பற்றிச் சிறிது ஆராய்வோம். காரைநகரில் பதநீர் இறக்குவது மிக மிகக்குறைவென்றே கூறலாம். கள்ளுவிற்பனையில் நாட்டம் கூடுதாக இருந்தமையினாலும் அதில் அதிக விற்பனையும், அதிக லாபம் கிடைத்தமையுமே காரணம் எனக் கூறலாம். இதுவும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலப்பகுதியியே இறக்கப்படுகின்றது. வடமகாணத்தில் வடமராட்சி, தென்மராட்சி, கீரிமலை, காங்கேசன்துறை, பொலிகண்டி, சண்டிலிப்பாய் சங்கானை போன்ற பிரதேசங்களில் பதநீர் கூடுதலாகச் சேகரிக்கப்படுகின்றது.

கள்ளு சேகரிப்பது போன்ற நடை இருந்தாலும் பதநீர் சேகரிப்பதில் சிறுவித்தியாசம் உண்டு, பதநீர் இறக்கும் முட்டியில் அளவாகச் சுண்ணாம்பு இட்டுவிட்டால் அது பதநீராக மாறுகின்றது. இது குடிப்பதற்கு இனிப்பாக இருக்கும்.

காரைநகரில் உள்ள வாரியந்தனைப் பகுதியில் சின்னமுருகர் கேணிக்கு தெற்குப் பக்கமாக வீதியோரத்தில் நிற்கும் ஒற்றைப் பனையிலும், மாவடியார் என அழைக்கப்படும். வாரியந்தனையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அவர்களின் வீட்டிலும் உள்ள பனனகளில் பதநீர் சேகரிப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சிறுபையனாக இருந்தபோது அங்கு அதனைச் சுவைத்தும் உள்ளேன். அதன் சுவையை இன்று நினைக்கும் போது நாவூறுகின்றது ஆண் பனைப் பதநீரைச் சோமபானம் என்றும், பெண்பனைப் பதநீரைச் சுரபானம் எனவும் அழைப்பதாக அறியப்படுகின்றது. பதநீரைக்காய்ச்சி பனங்கட்டி, கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு என்பவற்றைக் காரைநகர் தவிர்ந்த மேற்கூறிய இடங்களில் குடிசைக் கைத்தொழிலாகச் செய்து வருகின்றனர். இவற்றிற்கு உள்நாடு, வெளிநாடுகளில் நல்ல கிராக்கியுள்ளது. இதனால் கனடா, பிரித்தானியா, அவுஸ்திலேயா, சுவிஸ், ஜேர்மணி, பிரான்ஸ் போன்ற தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த வாழும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனார்.

1950 க்கு முற்பட்ட காலத்தில் பனங்கட்டியைச் சிறுதுண்டுகளாக வெட்டிச் சீனிக்குப் பதிலாகத் தேனீருடன் கடித்துக் குடித்தார்கள். இதனைவிட ஆடிக்கூழ், கொழுக்கட்டை போன்றனவற்றிகும் பனங்கட்டியைப்பாவித்தார்கள் காரைநகரில் ஆடிப்பிறப்பு நாளில் பச்சைஅரிசி, பாசிப்பருப்பு, பனங்கட்டி, தேங்காய்ப்பால், அளவான உப்புச் சேர்த்துப் பாற்கஞ்சி செய்வதையே

வழமையாகக் கொண்டுள்ளனர். பனங்கற்கண்டு ஒரு மருத்துவப் பொருளாகும். நாட்பட்ட இருமலாயினும் சரி ஆரம்பகால இருமலாக இருந்தாலும் சரி பனங்கற்கண்டு மூலம் நிவாரணம் கிடைக்கின்றது.

பதநீர் இறக்குபவர்களும், உற்பத்தியாளர்களும் அரசாங்கமும் ஒருங்கிணைந்து செயற் படுவார்களாயின் நாடு தன்னிறைவு பெறும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் அந்நியச் செலவாணியை மிச்சம்பிடிக்கலாம். வேலையில்லாத் திண்டாட்டம் குறைவடையும். பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் இறக்குமதித்தடை விதிக்கப்பட்டதனால் நாட்டில் உற்பத்தி பெருகியது  காரைநகர் மக்கள் உட்பட யாழ்ப்பாணத்தவர்கள் பலர் ஒட்டுசுட்டான், முத்தையன் கட்டுபோன்ற வன்னிப்பகுதிகளுக்கு சென்று காடுகளைக் களனியாக்கியது மட்டுமன்றி அங்கு நெல், மிளகாய், வெங்காயம் போன்றவற்றைப் பயிரிட்டு நாட்டு. உற்பத்தியைப் பெருக்கினார்கள். அதனால் பலர் செல்வந்தர்கள் ஆனார்கள். அதே போலப் பனம் பொருள் உற்பத்திகளைப் பெருக்குவார்களானால் யாழ்ப்பாண மக்கள் செல்வமும் பெருகும். உற்பத்திகளில் மிகக் குறைந்த செலவுடன் முன்னெடுக்கப்படும் உற்பத்தி பனம் பொருள் உற்பத்தி மட்டுமே.

(உ) பனங்கிழங்கு

பனங்கிழங்கு என்றதும் எமக்கெல்லாம் சத்திமுத்தப்புலவரே ஞாபகத்திற்கு வருகிறார் , இவரால் பாடப்பெற்ற ஒருபாடலில் பனங்கிழங்கினை உவமானமாகக் காட்டுகின்றார் .அப்பாடலின் ஒரு பகுதி வருமாறு

“நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படுபனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

இப்படியாக அவரது பாடல் தொடர்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் புலவர் நாராயின் சொண்டினை பனங்கிழங்கு பிளந்த மாதிரி என வர்ணிக்கின்றார். இப்பாடலை 6ம் வகுப்பில் படித்திருக்கிறேன் காரைநகர் மக்கள் தமது தோட்டங்களிலிருந்தும் வெளியில் இருந்தும் பொறுக்கிவந்த பனம் பழங்களில் தமக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மீதியை ஓரிடத்தில் குவியலாகப் போட்டுவைப்பார்கள். தமது தேவைகள் முடிந்ததும் மீதமாகவுள்ள பனம் விதைகளையும் இக்குவியலுடன் சேர்த்து விடுவர். பின்னர் அங்கு குவியலாக்கப்பட்டிருக்கும் பனம் பழங்களில் உள்ள மேல் கறுப்பு தோலை நீக்கி விட்டு விதைகளை கொத்திப்பதப்படுத்தப்பட்ட மணற் பாங்கான நிலத்தில் உரிய முறை அடுக்கி அதன்மேல் மண் போட்டுப் பரவிப் பாத்திகட்டி மண்வெட்டியின் பின் பகுதியால் அணை போட்டு விடுவார்கள் ஐப்பசிமாத முற்பகுதியில் இதனைச் செய்வர்.

இதனைப் பனம்பாத்தி என அழைப்பர் அங்குவிதைகள் முளைவிடும்போது நிலத்தினுள்ளே செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டு கிழங்காக உருவாக்கின்றன. இவை பனங்கிழங்கு எனப்படும். இதன் நுனிப்பகுதி கூராகவும் அடிப்பகுதி கிட்டத்தட்ட ஒரு அங்குல விட்டமுடையதாகவும், ஒரு அடிவரை நீளமுடையதாகவும் காணப்படும். இக்கிழங்கின் வளர்ச்சி உரிய பருவம் அடைந்ததும் மார்கழி மாதத்தில் கிளறி எடுக்கப்பட்டு கிழங்கு வேறு ஊமல் வேறாகப் பிரத்தெடுப்பர். தமக்குத் தேவையான கிழங்குகளை எடுத்துவிட்டு மீதியைத் தமது பிள்ளைகளுக்கோ, சகோதரர்களுக்கோ பகிர்ந்தளிப்பர் காரணம் அன்று குடும்ப அன்னியோன்யம் சிறந்து விளங்கியது பிடுங்கி எடுக்கப்பட்டகிழங்குகளை இருவேறு பிரிவுகளாகப் பதப்படுத்துவர் ஒன்று புழுக்கொடியல், மற்றையது ஒடியல் ஆகும்.

1.புழுக் கொடியல்

பனம் பாத்தியில் இருந்து கிளறி எடுக்கப்பட்ட கிழங்கின் மேற்தோலை நீக்கிவிட்டு அக்கிழங்கின் நுனிப்பகுதியையும், தலைப்பகுதியையும் சிறிதளவு வெட்டி எறிந்துவிட்டு அதனைச்சுத்தம் செய்துவிட்டு நீர் நிரப்பிய கடாரம் போன்ற பாத்திரத்தில் கிழங்கின் அடிப்பாகம் கீழாகவும், நுனிப்பாகம் மேலாகவும் வரக் கூடியதாக இட்டு நன்றாக அவித்தெடுப்பர். அவிந்த கிழங்குகளை இரண்டாகப் பிளந்த பாய்களில் பரவிக் காயவிடுவர். இன்னும் சிலர் பிரித்தெடுத்த கிழங்குகளைப் பனை நாரில்குத்தி உயரமான மரங்களில் வெய்யிலில் படும்படியாக கட்டித்தொங்கவிடுவர். மேலும் சிலர் பனங்கிழங்குகளை விலைக்குவாங்கி மேற்கூறியவாறு பதப்படுத்துகின்றனர். அது நன்றாகக் காய்ந்த பின் புழுக்கொடியல் எனப்படுகின்றது. இவற்றை நீண்ட காலம் வைத்திருந்து உண்ணலாம். சிலர் இவற்றை உரலில் இட்டு இடித்து மாவாக்கி தேங்காய்ப்பூ, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கும், முதியோருக்கும்

உண்ணக் கொடுக்கின்றனர். இது சுவைமிக்க பண்டம் மாத்திரமல்ல சத்துக்களும் நிறைந்ததாகும்.

பலர் அவித்த கிழங்குகளைச்சிறு, சிறு துண்டுகளாக வெட்டிப்பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து உரலில் இட்டு இடித்துத் துவையலாக்கி உண்கின்றனர். மது அருந்து பவர்கள் சுவைக்காகப் பனங்கிளற்குகளையோ அல்லது புழுக்கொடியலைத்தான் விரும்புகிறார்கள்.

2.ஒடியல்

இதுவரை அவித்த கிழங்குகளின் பயன்கள் பற்றி ஆராய்ந்தோம். இனி அவிக்காத (ஒடியல்) கிழங்குகள் பற்றிச் சிறிது கவனிப்போம். பச்சைக் கிழங்குகளின் மேற்தோல்களை நீக்கிவிட்டு அவற்றை இரு கூறுகளாகப் பிரித்து அதன் இருமுனைகளையும் சிறிதளவு வெட்டிச் சுத்தம் செய்து பாய்களில் பரவிவிட்டு நன்றாகக் காயவிடுவர். அப்படி நன்றாகக் காயந்தவை ஒடியல்கள் எனப்படும். நன்றாகக் காய்ந்தபின் பைகளில் போட்டுக் கட்டி வைப்பார்கள். காரைநகர் மக்கள் அவ்வொடியல்களை எடுத்து உரலில் போட்டு இடித்து மாவாக்கி அதிலிருந்து பிட்டு, கூழ் என்பன தயாரிப்பார்கள. பிட்டு அவிக்க நினைப்பவரகள்; முதலில் ஒடியல்மாவை அளவாக எடுத்து தண்ணீர் விட்டுப் பிசைந்து ஊற வைப்பார்கள். சிறிது நேரம் செல்ல தெளிந்து வரும் நீரை வெளியேற்றுவார். இப்படியாக மூன்று அல்லது நான்குமுறை மாவைப் பிசைந்து நீரை வெளியேற்றிய பின் பனங்களித் துண்டில் போட்டு பிழிந்து எடுத்த மாவைச் சுளகில் போட்டு சாதாரணமாகப் பிட்டுக் குழைப்பதைப் போல் குழைத்தெடுத்து அதற்கு எள்ளு, தேங்காய்ப்பூ என்பன கலந்து அவித்தெடுப்பர். வேறு சிலர் கீரை, பயற்றங்காய் போன்றனவற்றைச் சேர்த்தும் அவிப்பர்.

ஒடியற்பிட்டை அன்றே உலர்த்தி வைப்பது நன்று. இல்லையேல் வைரம் ஏறி உலர்த்துவது கடினமாக இருக்கும். காரைநகரில் நீண்ட காலத்திற்கு முன்னர் இது பகலுணவாகவே கொள்ளப்பட்டது. பழைய பிட்டுக்கு மோர், மரவள்ளிக் கிழங்குக்கறி சேர்த்து உண்டால் ருசி மிகுந்ததாக இருக்கும். நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் இவை நாம் அடிக்கடி உண்ணும் உணவாக இருந்தது. சிலர் பிட்டு சூடாக இருக்கும் பொழுது நல்லெண்ணெயும் சேர்த்துச் சாப்பிட்டனர். உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒடியற்பிட்டை விரும்பி உண்டனர். இது அவர்களுக்குச் சக்தியையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

 

 

 

 

 

 

அடுத்து ஒடியற்கூழ் தயாரிக்கும் முறை பற்றிச் சிறிது ஆராய்வோம். ஒடியல்மா கூழ் தயாரிப்பதற்கும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இவை இரண்டு வகைப்படும். ஒன்று சைவக்கூழ். மற்றையது அசைவக்கூழ். கூழ் தயாரிக்கும் முறை பற்றி அக்காலப் பெண்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். இதனை அவர்கள் தத்தம் கணவன்மாரைக் கவர்ந்திழுப்பதற்கான வசியப் பொருளாகப் பாவித்தனர் என அறியக் கிடக்கின்றது. ஆனால் இக்காலப் பெண்கள் பலருக்குக் கூழ் தயாரிக்கும் முறை என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் காரைநகரில் தாய்மார் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு இவற்றை கற்பிப்பது மட்டுமன்றி நேரடியாக களத்தில் நின்று பரீட்சித்தும் வருகின்றனர். புலம்பெயர்ந்து சென்றாலும் இதுதொடர்வதனைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியைத் தருகின்றது.

எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் கூழ் தயாரிக்கும் முறை பற்றி அறிந்து கொள்வோம்.

அசைவக் கூழ் தயாரிப்பதற்குத்  தேவையான பொருட்களும் செய்முறையும்

ஒடியல் மா                                                                                              500 கிறாம்

மீன் பெரியது

இறால்                                                                                                       1 கிலோ

நண்டு                                                                                                     4 அல்லது 5

மரவள்ளிக்கிழங்கு                                                                               பெரியது

பயற்றங்காய்                                                                                        300 கிறாம்

பலாக் கொட்டை                                                                                  200 கிறாம்

காய்ந்த (வற்றல்) மிளகாய்                                                            15 அல்லது 20

புளி                                                                                                            75 கிறாம்

உப்பு தேவையான அளவு

 

செய்முறை:

ஒடியல் மாவை அரித்து தண்ணீரில் கரைத்து ஊறவிடவும் அதில் தெளிந்த நீரை வெளியேற்றவும், இப்படியாக மூன்று அல்லது நான்கு முறை நீரை வெளியேற்றவும். மாவில் உள்ள காறல் தன்மையை நீக்குவதற்காகவே இப்படிச் செய்யப்படுகின்றது. மீன் நண்டு, இறால், என்பவற்றைச் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோலை நீக்கிச் சிறு சிறு சீவல்களாக வெட்டி எடுக்கவும். பயற்றங்காய்களைக் கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பலாக்கொட்டைகளை தோலை நீக்கி நான்காகப் பிளந்து நீரில் போட்டு கழுவி வைக்கவும். மீனை ஒரு பாத்திரத்தில் இட்டு வேகவைத்து முள்ளை அகற்றிவிடவும். புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும். மிளகாயை அம்மியில் அரைத்து எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரை லீட்டர் தண்ணீர் விட்டு நண்டு, இறால், பயற்றங்காய், பலாக் கொட்டை ஆகியவற்றைப் போட்டு அது அவித்து அரைப்பதம் வெந்துவந்ததும் சீவல்களாக வெட்டப்பட்ட மரவள்ளிக்கிழங்கைப் அதில் போட்டு அவியவிடவும். கிழங்கு அவிந்ததும் கரைத்த புளி அரைத்த மிளகாய் என்பவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அவித்த மீனையும் அதனைத் தொடர்ந்து ஓடியல் மாவையும், அளவான உப்பையும் போட்டுக் கரைத்து விடவும். மாவெந்து தடிப்பான நிலைக்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். இதுவே கூழ் தயாரிப்பு முறையாகும்.

சைவக் கூழ் தயாரிக்க விரும்புபவர்கள் மேற்கூறிய தயாரிப்பு முறையில் மாமிசங்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாகப் பாசிப்பயறு, குத்துப்பயறு, கொடிப்பயறு ஆகியவற்றைச் சேர்த்துக் கூழ் தயாரிக்கலாம். கூழ் இறக்குவதற்குமுன் தேங்காய்ச் சொட்டுக்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டால் கூழ் சுவையாக இருக்கும். கூழ் குடிப்பதற்கு வடலி ஓலையில் பிளா செய்து கூழை அதில் ஊற்றிக் குடிப்பர். அன்று பிளாவில் குடித்த சுவையையும், ரசனையையும் இன்று நினைவில் கொண்டு வரும்போது, ஊரினைத் தங்கள் மனக்கண்முன் கொண்டு வந்து ஊர் நினைவில் புலம்பெயர் மக்கள் புலம்புவதையும் காணக்கூடியதாக உள்ளது. அந்நினைவை மறவாது புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் ஊர் ஒன்று கூடல்களில் கூழ் தயாரித்துக் குடித்து மகிழ்கின்றனர்.

(ஊ) பூரான்

பனம் பழங்களில் உள்ள ஒவ்வொரு விதைகளிலும் இருந்து பனங்களியை உறந்து எடுத்தபின் அதனைப் பனங்கொட்டை என்கிறார்கள். அப்பனம் விதைகள் புறச்சூழல் காரணிகளினால் முளை விடுவதற்கு தயாராகும் பொழுது அதன் முதற் கட்டத்தில் அவ்விதையினுள் இருக்கும் சத்துப் பொருள் திடமான ஒரு பதார்த்தமாக மாறுகின்றது. இதனையே பூரான் என்கிறார்கள். இதனை எம் சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை கத்தி கொண்டு இரண்டாகப் பிளந்து அதற்குள் இருக்கும் பூரானை விரும்பி உண்கின்றனர்.

(எ) பனங்குருத்து

பனையின் வட்டில் உள்ளிருந்து வெளிப்படும் குருத்து விரியாத நிலையில் இருக்கும் பொழுது அதன் அடிப்பாகம் உண்பதற்கு சுவை மிகுந்ததாக இருக்கும். சற்று முற்றி விரிவடையக்கூடிய நிலையில் காணப்பட்டால் அவற்றில் இருந்து பெட்டி, கடகம், தண்ணீர் அள்ளும் பட்டை, நீற்றுப்பெட்டி, பாய், களப்பாய், தடுக்கு, நீர் இறைக்கும் பெரியபட்டை போன்ற மற்றும் இன்னோரன்ன கைப்பணிப் பொருட்களும் செய்யப்படுகின்றன. 1960ம் ஆண்டுக்கு முன்னர் பாடசாலைகளில் பன்னவேலை ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இதற்கெனப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுப் பன்ன வேலை கற்பித்தார்கள். வேறு சில இடங்களில் குடிசைக் கைத்தொழிலாக நடத்தப்பட்டு வந்தது. அக்காலத்தில் பிளாஸ்ரிக் பைகளோ வேறெந்தக் கொல்கலன்களோ இருக்கவில்லை. மாறாகப்பெட்டி கடகம், உமல்  போன்றனவே பாவனையில் இருந்தன. குழந்தைகளைப் படுக்க வைப்பதற்கான தடுக்கு, படுப்பதற்கான பாய்கள், சூட்டு மிதிக்கு பயன்படுத்தப்படும் களப்பாய் போன்றனவைகளும் இக்குருத்தோலைகளில் இருந்தே செய்யப்படுகின்றன. அதன் ஈர்க்குகளில் இருந்து சுளகு பின்னப்படுகிறது. நாக்குகளைச் சுத்தம் செய்வதற்கும் இந்த ஈர்க்கு பயன்பத்தப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

மேற்கூறிய பொருட்கள் காரைநகரில் சில இடங்களில் செய்யப்பட்டாலும் அவை தன்னிறைவைக் காணவில்லை. அனலைதீவு, எழுவதீவு என்பன நார்க்கடகத்திற்குப் பிரசித்திபெற்றிருந்தன. அவை ஊர்காவற்றுறை யாழ்ப்பாணச்சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டன. காரைநகர் கருங்காலியில் நன்னி ஆறுமுகம் என்பவர் நடமாட முடியாத நிலையில் இருந்தும் கூட பாய்கள், கடகங்கள், களப்பாய் போன்றன இழைப்பதில் வல்லவராகக் காணப்பட்டார். அவரின் மனைவி அப்பொருட்களைச் சந்தைப்படுத்தினார். மேலும் காரைநகர் இலங்கைப் போக்குவரத்துச்சாலை முகாமையாளராகக் கடமையாற்றி இளைபாறியவரானவரும், காரைநகர் இலந்தைச்சாலைப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவருமான செல்லையா கந்தசாமி அவர்களை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பனம் பொருட்களான பாய், கடகம், பெட்டி, ஓலைப்பைகள், இடியபத்தட்டு, நீற்றுப்பெட்டி, சுளகு, தேங்காய் துருவுவதற்கும், பிட்டு குழைப்பதற்குமான தட்டைப்பெட்டி என்பனவற்றை உற்பத்தி செய்வதாகவும், சில குறிச்சிகளில் பயிற்சி பெற்றவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் விலைக்கு வாங்கி எல்லாவற்றையும் கனடா, பிரிதானியா, மற்றும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும்; நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் கூறினார். இவர்களைப் போல இன்னும் பலர் இப்பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவார்களாயின் எமது காரைநகர்ப் பிரதேசம் செழிப்புறும் என்பதில் ஐயமில்லை. இவர்களை விட மேலும் பாலர் தத்தமது அன்றாடத்தேவை கருதிப் பாய், கடகம், பெட்டி, களப்பாய் போன்றனவற்றை இழைத்துப் பயன்படுத்துகின்றனர்.

குருத்தோலைகள் கொண்டு பழைய காலங்களில் (பேப்பர் கிடைக்காத காரணத்தினால்) ஒலைச் சுவடிகளை எழுதி வைத்தனர் என நூல்கள் வாயிலாகப் படித்திருக்கிறோம்.

அவற்றில் சிலவற்றைக் கறையான்கள் அரித்தாலும் பலவற்றை நூல்களாகப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் ஒருவிடயம் அன்றிலிருந்து இன்று வரை எம்முடன் தொடர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதுதான் அரிவரி படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கான அ,ஆ என்கின்ற உயிரெழுத்துக்களையும், க்,ங் என்கின்ற மெய் எழுத்துக்களையும் தாங்கி வருகின்ற ஏடாகும்.

 

(ஏ) ஓலை

 

குருத்து விரிந்து முற்றினால் ஓலை எனப்படுகின்றது. அவ்வோலைகளை வீடு வேய்வதற்கும்  வேலிகள் அடைப்பதற்கும் பாவிக்கப்படுகின்றன. காரைநகரில் இரண்டு வருடத்திற்கொருமுறை  ஓலை வெட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் காரைநகரில் கல்வீடுகள் மிக அரிதாகவே காணப்பட்டன. அந்நாட்களில் காரைநகர் மக்களிடையே பணப்புழக்கம் அரிதாகக் காணப்பட்டமையே இதற்குக் காரணமாக அமைந்தது. ஒருசில வீடுகள் சுண்ணாம்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு அதன் கூரைகள் ஓலைகளினால் வேயப்பெற்றிருந்தன. பல வீடுகள் மண்சுவர்கள் எழுப்பப்பட்டு கூரைகள், ஓலைகளினால் வேயப்பெற்றிருந்தன. அதனால் புதிய ஓலைகள் கொண்டு இரண்டு வருடத்திற்கொருமுறை வீடுகளை வேய்ந்தனர். வீடுகள் வேயமுன் பழைய ஓலைகளைக் கழற்றி எடுப்பர். வேலிகளையும் இரண்டு வருடத்திற்கொருமுறை அடைப்பதையும் வழக்கமகக் கொண்டிருந்தனர். வேலியில் இருக்கும் பழைய ஓலைகளையும் கழற்றி எடுப்பர். வேலி ஓலைகளுடன் இருக்கும் பனை மட்டைகளை வேட்டி எடுத்து விறகாகப் பாவித்தனர்.

பனையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதும் வேலி அடைக்க ஒதுக்கப்பட்டதுமான ஓலைகளை அன்றே மட்டையுடன் கவிழ்த்து மிதித்து விடுவர். வீடு வேய ஒதுக்கப்பட்ட ஓலைகளை நிமிர்த்தி மிதித்து விடுவர்.  மூன்று நாட்கள் சென்றதும் வேலி அடைக்க ஒதுக்கப்பட்ட ஓலைகள் கொண்டு வேலிகளை அடைத்து முடிப்பர். வீடுவேயும் ஓலைகளின் மட்டைகளைத் தனியாக எடுத்துவிட்டு வட்டமாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிக் கரம் போடுவார்கள். அதன் மேல் பச்சை மட்டைகளைக் கட்டாகக் கட்டிப் போடுவதுடன் வேறு பாரமான பொருட்களையும் போட்டு ஓலையைப் படியவிடுவர். ஒரு கிழமைக்குப் பின் அவ்வோலைகளினால் வீடுகளை வேய்வர். இதற்கெனச் சிறப்புப் பயிற்சி பெற்றவரினாலேயே வீடுகள் வேயப்படும். வீடுவேய்வதற்கும் வேலிகள் அடைப்பதற்கும் பனைமட்டையில் இருந்து உரித்தெடுக்கப்படும் நார்களே பாவிக்கப்படுகின்றன. இவை வைரம் மிக்கவையாகும். ஓலை வெட்டும் நாளிலும், வீடுவேயும் பொழுதும், வேலி அடைக்கின்ற நேரங்களிலும் மிக நெருங்கிய உறவினர்களே பெரும்பாலும் உதவிகள் செய்தனர். அக்காலத்தில் குடும்பங்களின் அந்நியோன்யம் பிரதிபலித்தது.

வீடுகளில் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஓலைகளையும், வேலிகளில் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஓலைகளையும் தத்தம் வயல்களுக்குப் பசளையாக்கினர். இந்த இயற்கைப் பசளை மூலம் நல்ல விளைச்சளையும் பெற்றனர்.

வடலியோலைகளை வெட்டி ஆடு, மாடுகளுக்கு உணவாக்கினர். மீனவர்களும் ஆடு வெட்டுபவர்களும் வடலியோலையிலேயே மீனகளையும், இறைச்சிகளையும் பொதியாகக் கட்டிக்கொடுத்தனர். இதனை ஒலைகுடலை என அழைப்பர். இதனாற் போலும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் தான் எழுதிய சிறுவர் செந்தமிழ் என்னும் நூலில் “ஆடு கதறியது” என்னும் தலைப்பில் எழுதப்பட்ட பாடற்பகுதியில் (36ம் பக்கம்) ஓலைக்குடலை பற்றி பின்வருமாறு பாடுகின்றார். (ஒருபகுதி மட்டும்)

“உன்றன் றசைஅரிந்தே ஓலைக்குடலை கட்டிச்

சென்று சென்று விற்றனரோ தின்று பசியாறினரோ” எனப் பாடியுள்ளார்.

                                 

(ஐ) பனை மட்டை

முன்னைய தலைமுறைகளில் எம்மூரில் வாழ்ந்த மக்கள் பனைமட்டை கொண்டு வீட்டுக் குசினிகளுக்கும், வீட்டு வேலிகளுக்கும் கோழிக் கூடுகளுக்கும் வரிச்சுக் கட்டினர். அதுமட்டுமன்றி கத்தரிப்படப்புகளுக்கும் பனை மட்டை கொண்டு வரிச்சுக் கட்டினர். படலைகளுக்குக் கூட பனை மட்டைகளைப் பாவித்தனர். பாவனைக்குதவாத பனை மட்டைகளை விறகாகவும் பாவித்தனர்.

                                                                        (ஒ) கங்குமட்டை

பனையில் ஓலையுடன் இணைந்து இருக்கும் போதே நன்கு முற்றி அதன் பச்சைத்தன்மை நீங்கி கலகலக்க ஆரம்பிக்கும் போது காவோலை எனப்படுகின்றது, பலத்த காற்றடிக்குபொழுது இது பனையில் இருந்து தானாகக் கழன்று விழுகின்றது. அப்பொழுது இதற்குப் பதிலாக இன்னோரு குருத்தோலை விரிந்து கொண்டிருக்கும். இதனால் போலும் எம்மவர்கள்.

“காவோலை விழக்குருத்தோலை சிரிக்கின்றது” எனும் வசனத்தைப் பாவிக்கத் தொடங்கினார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. இளைஞர்கள் முதியோரை எள்ளி நகையாடும் பொழுது முதியோர்கள் மேற்கூறிய வசனத்தைப் பாவிப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. காவோலைகளை ஓலை வேறு மட்டை வேறாக வெட்டியெடுத்து விறகாகப் பாவிக்கின்றனர்.

இப்பொழுது பாவனையில் இருக்கும் செருப்புக்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. இதற்குப் பதிலாக அக்காலக் காரைநகர் மக்கள் காவோலையுடன் இணைந்த கங்குகளை அளவாக வெட்டி நார்கொண்டு செருப்புச்செய்து பாவித்தனர். இதனால் இக்கீரி, நாகதாளி போன்ற முட்கள் அடங்கிய தாவரங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது.

பனையின் சிறப்புக்கூறும் குறள்கள், பாடல்கள் சில வருமாறு

திருவள்ளுவர் தான் இயற்றிய திருக்குறளின் அறத்துப்பாலில் 104வது குறளிலும், பொருட்பாலில் 433வது குறளிலும், இன்பத்துப்பாலில் 1282வது குறளிலும் பனைபற்றிச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.  பூவை அமுதன் என்பவரால் எளிய தெளிவு விளக்கத்துடன் தரப்பட்ட நீதிநூற்களஞ்சியம் என்னும் நூலில் அடங்கிய 100 செய்யுள்களில் 91வது செய்யுளில்

 

“உத்தமர் ஈயும் இடத்து ஓங்குபனை போல்வரே

மத்திமர் தாம் தெங்குதனை – முத்து அலரும்

ஆம். கமுகு போல்வர் அதமர் – அவர்களே

தேம் கதலியும் போல்வர் தேர்ந்து” எனக்கூறிப் பனை மரத்தின் அதி உச்சப்பெருமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இதுவரை அமுதசுரபியாகிய பனையின் பிரயோசனங்கள் பற்றி ஓரளவு கவனித்தீர்கள். இவற்றை எம் முன்னைய சந்ததியினர் முழுமையாக அனுபவித்து உடல் நலத்துடனும், சந்தோஷசத்துடனும் வாழ்ந்தார்கள். பனங்கிழங்கு, புழுக்கொடியல் என்பன நார்ச்சத்து நிறைந்தவையாகும். பனாட்டு, ஒடியற்பிட்டு என்பவற்றில் பல்வகைச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கூழ் மலச்சிக்கல், வாய்வு என்பனவற்றை நீக்குவதுடன் உடலுக்கு சக்தியையும் அளிக்க வல்லது. அத்துடன் உடலில் உள்ள கழிவுப் பொருட்களையும் நீக்க வல்லது. கள்ளு, பதநீர் போன்றவை கணைசூட்டையும் உஷணத்தினால் ஏற்படும் நோய்களையும் தணிக்கவல்லது. மேற்கூறிய பனம் பண்டங்களை உண்ட நம்முன்னோர் நீண்டகாலம் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள் என்பதைச் சரித்திரம் பறைசாற்றி வருகிறதென்பதை எல்லோரும் அறிவர்.

ஆனால் இன்றைய தமிழர் சமூகம் நாகரீகத்தின் வளர்ச்சியோ அன்றி இரசாயனப் பொருட்கள் கலந்த உணவுப் பண்டங்களின் கவர்ச்சி காரணமாகவோ பனம் பண்டங்களை ஏறெடுத்தும் பார்ப்பதாகத் தெரியவில்லை. எனவே இவ்விடயத்தை அலசி ஆராய்ந்து பார்த்து உண்மைத் தன்மையை உணருங்கள். பனம் பண்டங்களுக்கு முக்கியத்தவம் கொடுத்து அவற்றை சேமித்து வீடுகளில் களஞ்சியப்படுத்தி வைப்போமேயானல் எக்காலத்தும், எந்த இடர்வரினும் அவற்றைச்சமாளித்து கொள்ளவும், பஞ்சம் என்ற நிலையை இல்லாதொழிக்கவும், அதனால் எம்மைத் தற்காத்துக் கொள்ளவும் முடியும் அது மட்டுமல்ல அழிவுக்குட்பட்ட பனைகளை ஈடுசெய்யுமுகமாக உங்களாலியன்ற பனம் விதைகளை நாட்டி பனை உற்பத்தியைப் பெருக்குங்கள்.

காரைநகரை வளம் படுத்துவோம். நாமும் நலம்பெறுவோம். அதனால் நாடும் வாழும் தேசமும் வாழும் என்பதை மறவாதீர்கள்.

தமிழர் நம் வாழ்வுடனும் பண்பாட்டுடனும் பனை ஒன்றியுள்ளது என்பதே உண்மை.

 

தொகுத்தவர்

தம்பையா நடராசா

கருங்காலி

காரைநகர்.

 

கட்டுரைக்கு ஆதாரமாக அமைந்தவை

1.பனைவளம் – எழுதியவர் க.சி.குலரத்தினம்

மில்க்வைற் பொன்விழா வெளியீடு.

 

2.பனைச்செல்வம் – சு.மோகனதாஸ்

    வி.ஜீ. தங்கவேல் வெளியீடு:-

    வடக்கு கிழக்கு தால மூலவள அபிவிருத்தி  நிறுவனம்

 

3.நீதிநூற் களஞ்சியம் – பூவை அமுதன் தெளிவுரை

 

4.காணாமல் போகும் கற்பகதருக்கள் – உமை பற்குணரஞ்சன்

தாய்வீடு பத்திரிகை (கட்டுரை)

 

5.விக்கிபீடியா தகவல்

 

6.நேரில் கண்டதும் சுவைத்ததும்