ஜனாதிபதி நடமாடும் மக்கள் சேவையில் 500 பயனாளிகளுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மரக்கன்றுகள் அன்பளிப்பு

 

ஜனாதிபதி நடமாடும் மக்கள் சேவையில் 500 பயனாளிகளுக்கு

கனடா காரை கலாச்சார மன்றம் மரக்கன்றுகள் அன்பளிப்பு

காரைநகரில் ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை நடமாடும் சேவை 01.10.2018 திங்கட்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்பணி மாலை 4.30 மணிவரை இடம்பெற்றது. இதில் 1650 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதில் நாட்டில் உள்ள பெரும்பாலான அரச திணைக்களங்கள்,மற்றும் அமைச்சுக்களின் சேவைகள் காரைநகர் மக்களுக்கு வழங்கப்பட்டது.

அன்றைய தினம் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெறல், பிறப்ப அத்தாட்சிப் பத்திரப் பெயர் மாற்றம் சம்பந்தமான விடயங்கள், காணி உறுதி சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் காணி உறுதி பெற்றுக்கொள்ளல், மரண சாண்றிதழ் பெறல், காலந் தாழ்த்திய பிறப்பு, விவாக, இறப்புப் பதிவுகள்

மற்றும் வீட்டுக் கடன் வசதிகள், முதியோர் அடையாள அட்டை வழங்கல், சமுர்த்திக் கொடுப்பனவு, மதத் தலங்களைப் புத்துயிரூட்டல், காணி உரிமை சம்பந்தமான பிரச்சினைகள்,

கல்விக் கருத்தரங்குகள், மற்றும் கல்விப் புலமைப்பரிசில்கள் வழங்கல், தென்னங் கன்றுகள் மற்றும் வேறு மரக் கன்றுகள் வழங்கல், இலவச மருத்துவ சேவை, மூக்குக் கண்ணாடி வழங்கல் கிராமப்புறப் பாதைகள் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களுக்குத் தீர்வு காணல் உள்ளிட்ட ஏராளமான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

இதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் கடந்த ஒருவாரமாக அனைத்துக் கிராமசேவையாளர் பிரிவுகளிலும் முழுவீச்சில் இடம்பெற்றது.

இந்த சேவைகளை காரைநகர் பிரதேச செயலகத்துடன் இணைந்து அனுசரணை வழங்கிச் செயற்படுத்த காரைநகர் அபிவிருத்திச் சபை, காரைகர் யாழ் வர்த்தகர்கள், புலம்பெயர் உறவுகள் மற்றும் மன்றங்கள் அனுசரனை வழங்கினர்.

குறிப்பாக கனடா காரை கலாசார மன்ற நிதி உதவியுடன் 500 பயனாளிகளுக்குப் பயன்தரு பழமரக் கன்றுகள் மற்றும் தென்னம்பிள்ளை என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.