ஈழத்துச் சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ மு.கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 ஆவது பிறந்த தினத்தையொட்டி இக்கட்டுரை இங்கே எடுத்து வரப்படுகின்றது. காரை வசந்தம் 2018 மலரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

ஈழத்துச் சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ மு.கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 ஆவது பிறந்த தினத்தையொட்டி இக்கட்டுரை இங்கே எடுத்து வரப்படுகின்றது. காரை வசந்தம் 2018 மலரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஈழத்துச் சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர்
(23.03.1819 – 22.09.1898)

காரைநகர் கார்த்திகேயப் புலவர் அவர்களின் 120 ஆவது நினைவு தினத்தையொட்டி (22.09.2018) இக்கட்டுரை இம்மலரில் பிரசுரிக்கப்படுகின்றது.

– திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் B.SC-

ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு சங்கத் தமிழ்ப் புலவரான ஈழத்து பூதந்தேவனார் காலந்தொட்டு ஏறத்தாழ 2000 ஆண்டு கால பழமை வாய்ந்தது. ‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில், 1835-1929க் காலகட்டமே சிக்கல் மையப்பட்ட காலமென்று கொள்ளப்படத்தக்கதாகும்’ என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுகின்றார். ஏனெனில் இக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியும், கிறித்தவ சமயமும் ஈழத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய கட்டமைப்புக்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன.

முத்துக்குமாரக் கவிராயர், ஆறுமுகநாவலர், சங்கர பண்டிதர் ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சியில் கத்தோலிக்க சமயத்தின் மாயப் பரப்புரைக்கு மக்கள் மயங்கி வருந்தாது தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனக் குரல்களால் கிறித்தவ மதக் கொள்கைகள் வலுவிழந்து தடுமாறியது என்றும் பின்வரும் செய்யுளில் மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார்.

முத்துக் குமார கவிராசா சேகரன் மொய்யமரிற்
றத்தித் தட்க்குண்டு நாவலர் தாவச் சவிமடித்து
சித்தங் கெடவுட றாமொத ரேந்தரன் சிதைந்தபைபிள்
செத்துக் கிடக்குது பார்சிவ சங்கரன் றெம்முனைக்கே

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ என்று இதனால்தான் பின்னாளில் பாடியிருக்கிறாரோ என்று தோன்றுகின்றது.

இந்த வகையில், 19ஆம் நூற்றாண்டானது ஈழத்து இலக்கிய மரபு வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக பிற்கால இலக்கியங்களுக்கு வழிகாட்டிய வகையிலும் அவற்றுக்கான அடித்தளமாக அமைந்த நிலையிலும் ஈழத்து இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்கின்றது.

இற்றைக்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன் காரைநகர் களபூமிப்பதியில் அவதரித்த வரகவி பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்கள் தாம் பிறந்து வாழ்ந்த பதியினையும் தாம் வழிபாடு செய்த குல தெய்வங்களின் தெய்வீகச் சிறப்புக்களைப் பாடியும், மக்களை மகிழ்வூட்டும் நாடகங்களை ஆக்கியும், சைவத் தமிழ் இலக்கிய உலகுக்கு அரிய பல படைப்பிலக்கியங்களை அளித்து ஈழத்து இலக்கிய வரலாற்றின் பொற்காலத்திற்கு வலுவூட்டிய பெருமையைப் பெறுகின்றார் என்றால் மிகையாகாது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் காலத்தில் வாழ்ந்த பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்கள் நாவலர் பெருமானின் குருவாகிய இருபாலை சேனாதிராய முதலியாரைத் தமக்கும் குருவாகப் பெற்றவர். அந்தணர் குலத்தில் உதித்த புலவர் அவர்களின் தந்தையாரான முருகேசையர், பூட்டனாராகிய சுப்பையர் ஆகியோரும் சிறந்த புலவர்களாக முத்தமிழ் வித்தகர்களாக விளங்கியவர்கள். இயற்றமிழ் நூல்களாகத் தன்னை யமக அந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குருசேத்திர நாடகம் ஆகிய நூல்கள் புலவர் அவர்களின் தந்தையாரான முருகேசையர் அவர்களாலும், நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி என்னும் இரண்டு பிரபந்தங்கள் பூட்டனாராகிய சுப்பையர் அவர்களாலும் இயற்றப்பட்டவையாகும்.

கார்த்திகேயப் புலவர் அவர்களுக்கு ஐந்து வயதில் ஏடுதொடக்கப்பட்டு ஊரில் வாழ்ந்த சுவாமி நாத தேசிகரிடம் சங்கத மொழியினையும் தந்தையாராகிய முருகேசையரிடம் நீதிநூல்களையும், புராணங்களையும் கற்று வந்தார். பன்னிரண்டாவது வயதில் தந்தையாரிடம் கந்தபுராணத்தின் தாரகன் வதைப்படலத்திலே வரும் பாடலை இசையோடு பாடுவதில் இடர்ப்படவே தந்தையார் தண்டித்தமையினால் ஒரு வருடகாலம் புலவரின் கல்வி தடைப்பட்டது.

புலவரின் பாட்டியாராகிய இலட்சுமி அம்பாளின் துணையுடனும் தங்கள் சொந்தமாகிய திக்கை நிலத்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தமையின் பயனாகவும் பரம்பரைச் சைவவேளாளரும் பெருங்கல்விமானுமாகிய சண்முக உபாத்தியாயரிடம் தமது கல்வியைத் தொடர்ந்த புலவர் தமது பதினைந்தாவது வயதில் ஏட்டில் அழகுற எழுதும் பயிற்சியுடையவரானர். 1886 ஆம் ஆண்டிலே இலண்டன் மாநகரத்தில் நடைபெற்ற சர்வதேச பொருட்காட்சிச்சாலைக்கு இவரால் ஏட்டில் எழுதப்பட்ட திருக்குறள், நாலடியார் என்பன ஊர்காவற்றுறை நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை அவர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் காரைநகர் களபூமி குறிச்சியில் திக்கை மற்றும் தன்னை திருப்பதிகள் அமைந்துள்ள தெய்வீகச் சூழலில் அந்தணர் குடியினர் வாழ்ந்து வந்தார்கள் என்று வாய்மொழிச் செய்திகளினூடாக அறியக் கிடைக்கின்றது.

புலவரின் தந்தையார் முருகேசையர் இயற்றத் தொடங்கிய தன்னை யமக அந்தாதியின் எழுபது செய்யுள்கள் எழுதியபின் தந்தையார் நோயுற்றமையினால் முற்றுப்பெறாமல் இருந்த அந்தாதியின் இறுதி முப்பது செய்யுள்களையும் கார்த்திகேயப் புலவர் தமது இளவயதிலேயே பாடி முடித்தமையினால் இவரை ஒரு வரகவியெனப் போற்றி அதிசயித்தனர். இவர் யாத்த முதலாவது செய்யுள் பின்வருமாறு:

மணிக்கோ கனகத் தருநிதி யாரும் வணங்கிடமா
மணிக்கோ கனகத் தருமாக வன்பர்க்கு வைப்பவனீ
மணிக்கோ கனகத் தருவகை யோடருண் மைந்தநன்கார்
மணிக்கோ கனகத் தரும்புகழ்த் தென்றன்னை மன்னவனே

புலவர் அவர்கள் ஒரு புராண பிரசங்க சபைக்குச் சென்றபோது பிரசித்திபெற்ற கங்காதர சாஸ்திரியார் அவர்கள் ‘புலவரே வருக’ என அழைத்து மரியாதை செய்தார். அன்றிலிருந்து இவர்களை புலவர் என அழைத்தனர். அக்காலத்தில் நெல் தானியங்களை மதிக்கவும், அரச அலுவலாகவும் காரைநகருக்கு வந்து முருகேசையர் வீட்டில் தங்கும் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் புலவர் அவர்கள் இராமாயணம், பாரதம், காரிகை, நன்னூல் முதலாம் நூல்களை பாடங்கேட்டார். களபூமிக்
குறிச்சியிலேயிருந்த உடையார் பரமநாதர், மணியகாரன் காசிநாதர், இருமரபுயர்ந்த
மானாமுதலியாரின் வழித்தோன்றலாகிய பேரம்பலம் செட்டியார் கந்தர் ஆகிய மதிப்புமிகு செல்வந்தர்களின் விருப்பப்படி தமது தந்தையார் பாடிவைத்திருந்த குருசேத்திர நாடகத்தைத் திருத்தியும், புதுக்கியும் 1844 ஆம் ஆண்டில் அரங்கேற்றி மகிழ்வித்தார். ஊர்ப் பெரியவர்களின் விருப்பப்படி சூரபன்மன் நாடகம், சந்திரவண்ணன் நாடகம் என்பவனவற்றையும் எழுதிப் பாடி அரங்கேற்றினார்.

கார்த்திகேயப் புலவர் 1847 ஆம் ஆண்டில் தமது இருபத்தெட்டாவது வயதில் காரைநகரில் பிரசித்தி பெற்ற மகா வைத்தியரும் புராணப் பிரசாரகரும் கனகசபாபதிக் குருக்கள் மரபைச் சேர்ந்தவருமாகிய அரங்கநாத பண்டிதரின் செல்வமகள் கமலாம்பாளை விதிப்படி திருமணம் முடித்தார்.

கார்த்திகேயப் புலவர் வாழ்ந்து வந்தகாலத்திலே காரைநகரிலே கிறித்தவப் பாதிரிமார் வீடு வீடாகச் சென்று தமது கிறித்தவ மதத்தை பரப்புரை செய்து வந்தனர். அந்தணர்களைப் பரிகசித்து பாடல்களும் பாடிப் போதனை செய்தனர். அப்பாடல்களில் ஒன்று வருமாறு:

பிறந்தபோது பூணுநூல் குடுமியும் பிறந்ததோ
பிறந்துடன் பிறந்ததோ பிறங்கு நூற்களங்கெலாம்
மறைந்த நாலுவேதமும் மனத்து ளேயுதித்ததோ
நிலம் பிளந்து வானிழிந்து நின்ற தென்ன வல்லிரே

இப்பாடலைக் கேள்வியுற்ற கார்த்திகேயப் புலவர் எதிர்பாடலாக,

உதித்தபோது சட்டைதொப்பி தானுங் கூடவுற்றவோ
மதித்த ஞானஸ்தானமும் வலிய வந்து நேர்ந்ததோ
விதித்த பைபிளிவானதுங் கண்மெய்யுளத் துதித்தவோ
கதித்த பேச்சைவிட்டனாதி கடவுளைக் கருதுமே.

என்று பாடி நகைத்தார்.

இத்துடன் நின்றுவிடாது, சைவசமயத்தவர் சிலர் கிறித்தவராக மதம் மாறுவதைக் கண்டு சீறியெழுந்த புலவர் மூன்று சூத்திரங்களையும் 150 விருத்தங்களையுமுடைய ‘கிறித்தவமத குடாரம்’ என்னும் நூலை வெளியிட்டு கிறித்தவ மிசனரிமாரின் கொட்டத்தை ஓரளவு அடக்கி சைவசமயத்தைக் காத்து நின்றார்.

அந்நாளிலே சைவத்தமிழ்க் கல்வி முறை நலிவுற்று வருவதனைக் கண்ட அந்தணர்களும், ஊரவர்களும் ஒரு பாடசாலையை அமைத்து பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று புலவரிடம் வேண்டிக்கொண்டனர். அதற்கு இசைந்து 1852 ஆம் ஆண்டு தை மாதம் ஒரு வித்தியாசாலையை அமைத்து சைவ சமயத்தையும், தமிழையும் பிள்ளைகளிடம் வேதனம் பெற்று கற்பித்து வந்தார். வித்தியாசாலையை அமைப்பதற்கு புலவருக்கு பலவழிகளிலும் உதவியவர் புலவரின் பெரியதந்தையின் மகனாகிய கார்த்திகேய சாத்திரியாராவார். மு.குமாரசுவாமி ஐயர், மு.சீனிஐயர், கா.வேதக்குட்டி ஐயர், இராமசுவாமி ஐயர், கா.மார்க்கண்டேய ஐயர். சி.கந்தப்பபிள்ளை, அ.கணபதிப்பிள்ளை, அ.சோமநாதர், இ.சண்முகம், பொ.நாரணபிள்ளை, வே.அம்பலவாணன் முதலானோரும் புலவரின் புதல்வர்களாகிய நாகநாதையர், நடராசக் குருக்கள், சிவசிதம்பர ஐயர் ஆகியோரும் புலவரிடம் கல்வி கற்ற மூத்த மாணவர்களாவர்.

1864 ஆம் ஆண்டு தைமாதம் கார்த்திகேயப் புலவர் தமது மாணக்கர் சிலருடன் இராமேஸ்வரம், திருப்பெருந்துறை, உத்தர கோசமங்கை, மதுரை, திருப்பரங்குன்றம் முதலிய புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்து வழிபட்டுத் திரும்பினார். இந்நாளில் புலவர் அவர்கள் தாம் சிலகாலம் அர்ச்சகராக இருந்து வழிபட்டு வந்த களபூமி திக்கை முருகக் கடவுள் மீது ‘திக்கைத் திரிபந்தாதி’ என்ற அந்தாதி பாடினார். இதே காலத்தில் சண்டிலிப்பாயிலிருந்த தமது மைத்துனராகிய கார்த்திகேயக் குருக்களிடம் சுத்தவாதுளம்இ மிருகேந்திரம்இ பௌஷ்கரம் முதலிய நூல்களுக்குப் பாடங்கேட்டனர். புலவரின் மைத்துனர் ஸ்ரீமத் கார்த்திகேயக் குருக்கள் அவர்கள் வேதாரணியத்திலே பன்னிரண்டு ஆண்டு காலம் தர்க்கம்இ மீமாம்சைஇ வியாகரணம் இ ஆகமம் முதலியவற்றிற்குப் பாடங்கேட்டு மிக்க பாண்டித்தியம் பெற்றவர். தம்முடைய இறுதிக்காலத்திலே தமது ஆகமங்கள் சிலவற்றைப் கார்த்திகேயப் புலவருக்கு உபதேசித்தார்.

கார்த்திகேயப் புலவர் அவர்கள் சிதம்பரம் முதலான தலங்களை வழிபட விரும்பி அங்கே சென்று தங்கியிருந்தபோது(1877) தாம் எந்நாளும் மறவாது துதித்து வணங்கும் சிதம்பர நடராசர் மீது காதல் கொண்டு ‘திருத்தில்லைப்பல் சந்தமாலை’ என்னும் பிரபந்தத்தைப் பாடினார்.

யாழ்ப்பாணத்திலே தோன்றி வெளிவரத் தொடங்கிய (1875) ‘இலங்கை நேசன்’ என்ற செய்தி நாளிதழுக்கு பலரும் சிறப்புக் கவி எழுதினர். புலவரையும் சிறப்புக் கவி எழுதும்படி பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, புலவர் யாத்த ‘நூற்றெட்டுச் சீர்கழிநெடிலாசிரிய விருத்தம்’ என்ற கவிதை இலங்கை நேசனின் சித்திரை 1877 இதழில் வெளியாகியிருந்தது. அக்கவியின் ஆழமான கருத்து அனைவரையும் வியப்பிலாழ்த்தி புலவரின் மதிநுட்பத்தை அனைவரும் அறிய வைத்தது.

அக்காலங்களிலே மிஷனரிமார் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் காரைநகரில் பல பாடசாலைகளை அமைத்து வேதனமின்றி கற்பிக்கத் தொடங்கியமையினால் புலவரிடம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாயிற்று. இருந்தாலும் பாரதம், கந்தபுராணம் போன்ற நூல்களுக்கு பொருள் கேட்டுப் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து புலவரிடம் கற்றுவந்தனர்.

புலவர் அவர்கள் மருத்துவம், சோதிடம் ஆகிய தொழில்களிலும் தலைசிறந்து விளங்கினார்.

1880 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ‘உதயபானு’ என்னும் இதழைத் தொடங்கினார்கள். அதற்கு புலவர் எழுதிய கவிகள் மிகச் சிறப்புடையவை. சிலேடை, மடக்கு, இஷ்டவுத்தரம், யமகம் போன்ற பாக்களை எடுத்த எடுப்பில் இயற்றும் திறனுடையவராயிருந்தார். பத்திரிகைக்கும் பானுவுக்கும் புலவர் செய்த சிலேடையை பின்வரும் செய்யுளில் காணலாம்.

தாரகை கண்மறையத் துன்மதிசாய்ந்தோடத்
தடுத்தெதிர்வஞ்சரை யழித்துத் தங்குமந்த
காரவிருளினையோட்டி வெளியதாக்கிச்
சந்தேகமன்றி யுறுபொருளையாரு
மோரவே தெரிந்துண்மையினை யுணர்த்தி
யுலக மெங்குஞ் சென்றெவரு முவந்து போற்றச்
சேருதயபானு வினையவனிமீதிற்
றிகழு முதயபானுவெனச் செப்பலாமே

கார்த்திகேயப் புலவர் ‘விதானமாலை’ என்னும் சோதிட நூலைத் திருத்தி உரையில்லாத பாட்டுகளுக்கு உரை எழுதி 1881 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வெளியிட்டார். விதானமாலைக்கு சி.வை.தாமோதரம்பிள்ளை, சதாவதானம் சுப்பிரமணிஐயர் ஆகியோர் சிறப்புக்கவி செய்திருக்கின்றார்கள்.

திருகோணமலையில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கோணேசர் பெருமானையும் மாதுமையம்மாளையும் பற்றிக் கூறும் தலபுராணம் தட்சிண கைலாச புராணம் ஆகும். ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்துவான் சிங்கைச் செகராசசேகரன் அவர்களால் எழுதப்பட்டது. கார்த்திகேயப்புலவர் அவர்கள் தமது அறுபத்தொன்பதாவது வயதில் 1887 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அவரது மகன் கா.சிவசிதம்பர ஐயரினால் பதிப்பிக்கப்பட்ட தட்சிண கைலாசபுராணத்தின் ஏட்டுப்பிரதியை வேறு பிரதிகளுடன் ஒப்பிட்டு பரிசோதிப்பதற்கு உதவினார். இந்நூலின் முன்பக்கத்தில் பின்வருமாறு குறிப்படப்படுகின்றது. ‘யாழ்ப்பாணத்து காரைநகர் இயற்றமிழ் போதனாசிரியர் கார்த்திகேய ஐயர் அவர்களினால் பலபிரதிகள் கொண்டு பரிசோதிக்கப்பட்டு அவரின் புத்திரர் கா.சிவசிதம்பரஐயரினால் கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. (1887)’

‘காரைநகர்’ என்ற இடப்பெயர் 12.9.1923 தொடக்கம் ஆட்சியாளர்களின் அங்கீகாரத்துடன் வழங்கி வருகின்றபோதிலும், முதன்முறையாக 1887 இல் தட்சிண கைலாச புராணம் பதித்த கா.சிவசிதம்பர ஐயரினால் மேற்படி பக்கத்தில் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

கார்த்திகேயப் புலவரினால் இயற்றப்பட்ட திண்ணபுரத் திரிபநதாதியின் கீழ்வரும் காப்பு பாடலிலும் ‘காரைநகர்’ என்ற பெயர் இடம்பெறுவதைக் காணலாம்.

திருவேளை யட்டவன் காரைநகருறுந் திண்ணபுரத்
தொருவேழை பங்கினன் மேலொரந் தாதியையோதுதற்குப்
பெருவேளை பூண்டு பிரார்த்திக்கு மன்பர் பிறவியெனுங்
கருவேழையுந்துடைத்தாளுங் கணபதி காப்பதுவே

அக்காலத்தில் தொடங்கப்பட்ட அறிவியல் இதழாகிய ‘விஞ்ஞான வர்த்தனி’ என்ற இதழுக்கும் கார்த்திகேயப் புலவர் பல சிறப்புப் பாக்களை இயற்றியிருந்ததோடு ஞானிக்கும் விஞ்ஞானிக்கும் சிலேடையாகவும் ‘மயக்கந் தீராகம நூல் யாவும் பார்த்து.. ‘ என்று தொடங்கும் செய்யுளில் பாடியிருந்தார்.

புலவர் தனிப்பாக்கள் யாப்பதிலும், சோதிட, மருத்துவ விடயங்களிலும், சிந்தாந்த ஆராய்ச்சியிலும் இல்லாத ஏடுகள் வாங்கி எழுதுவதிலும் தமது வயோதிப காலத்தைக் கழித்து வந்தார். இக்காலத்தில் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியும், இதழாசிரியரும், ஈழத்தமிழானாக இருந்தும் தமிழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு புதுக்கோட்டையில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவரும், இராவ்பகதூர் விருதுபெற்றவரும், பாண்டிய மன்னனின் கைகளுக்கே அகப்படாமல் இழக்கப்பட்டதாகக் கருதப்பட்ட தொல்காப்பியத்தை அர்ப்பணிப்புடன் தேடிக்கண்டுபிடித்து பதிப்பித்தவருமாகிய சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் சென்னையிலிருந்து யாழ் கொழும்புத்துறையில் வந்து தங்கிருந்தபோது புலவர் அவர்களைச் சந்தித்து நட்புடன் அளவளாவிக்கொண்டிருந்தபோது ‘கற்றைச் சடையுடைத் தேவே கயிலைக்கறைக் கண்டனே’ என்னும் ஈற்றடியைக் கொடுத்து முதல் மூன்று அடிகளையும் பாடி கலித்துறைச் செய்யுளை முடிக்குமாறு புலவரை வேண்டவே

எற்றைக்கு முன்னடிபேணுவரமே யெனக் கருள்வை
பற்றைக் களைந்திடு ஞானியர் போற்றும் பழம் பொருளே
பெற்ற முகைத்திடு மங்கையொர் பங்கபிறையுலவு
கற்றைச் சடையுடைத் தேவேயிலைக் கறைக்கண்டனே

என்று பாடி முடித்தார். இதனைக் கேட்ட பிள்ளையவர்கள் வியப்படைந்து முன்னரிலும் அதிகநேசம் பாராட்டி மகிழ்ந்தனர்.

புலவர் தமது வாழ்நாளின் இறுதிக்காலத்தை வீணடிக்காது இறைவனைப் பாடித்துதிப்பதிலும், பிரபந்தங்கள் இயற்றுவதிலும் காலத்தைக் கழித்தார். திருப்போசை வெண்பா (கருங்காலி முருகப்பெருமான் மீது பாடப்பட்டது), நகுலேசரியமக அந்தாதி, வண்ணைத் திரிபந்தாதி, திண்ணைபுரத் திரிபந்தாதி, முதலிய பிரபந்தங்களைப் பாடினார்.

புலவர் அவர்கள் தமது எண்பதாவது வயதிலே விளம்பி வருடம் புரட்டாதி மாதம் எட்டாம் திகதி (22.09.1898) அன்று நெற்றியில் நீறணிந்து சிவபெருமானை எண்ணியவாறு ‘எண்ணுகேனென் சொல்லியெண்ணுகேனோ’ என்னும் பதிகத்தையே யோதும்படிசொல்லி நடராசப் பெருமானின் திருவடி நிழலையடைந்தார். சி.வை.தாமோதரம்பிள்ளை, அ.வேன்மயில்வாகனச் செட்டியர், திருமயிலை வித்துவான் சண்முகம்பிள்ளை ஆகியோர் மற்றும் புலவரின் புதல்வர்கள் மூவரும் புலவரின் மறைவுக்கு சரமகவிகள் பாடியள்ளனர்.

நற்றமிழ் அன்னைக்கு நாளெல்லாம் நல்லணி புனைந்து அழகு செய்த நறுந்தமிழ் புலவர்கள் வரிசையிலும், ஆங்கிலேயர் ஆட்சியில் சைவசமய பாரம்பரியத்தைக் காத்துநின்ற ஈழத்து வீரசைவர்கள் வரிசையிலும் காரைமாகரக் களபூமிப் பதியில் அவதரித்து வாழ்ந்து தேன் இனிய தமிழில் மேன்மை கொள் சைவசமயத்தைப் போற்றிப் பாவாயிரம் பாடிய கார்த்திகேயப்புலவர் அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. அந்தவகையில் கார்த்திகேயப் புலவர்கள் திருநாமத்தையும், அவர் யாத்த அரிய சைவத்தமிழ் இலக்கியங்களையும் பேணிப் போற்றி வாழ்த்தி வணங்குவது நம் கடனாகும்.

காரை அன்னை பரவுங் கவிமணி
ஏரை யுற்றநல் ஏந்தல் வேதியன்
சீரை யுற்றுயர் கார்த்தி கேயன்றன்
பேரை நித்தலும் பேணி வழுத்துவோம்

அண்மைக்காலத்தில் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் பணி செய்து மறைந்த சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி, கலாநிதி.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் தாய்வழிப்பூட்டனே கார்த்திகேசுப் புலவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இக்கட்டுரையில் கார்த்திகேயப் புலவர் அவர்களின் வரலாறு தொடர்பான தகவல்களுக்கு ஆதாரங்களாக அமைந்த நூல்கள்:
1. புலவரின் இளைய மகனும் மதுரை தமிழ்ச் சங்க வித்துவானும் சைவசமயச் சொற்பொழிவாளருமாகிய கா.சிவசிதம்பர ஐயர் எழுதிய பிரம்மஸ்ரீ மு.கார்த்திகேயப் புலவர் சரித்திரம் (1908)
2. புன்னாலைக் கட்டுவன் வித்துவான் பிரம்மஸ்ரீ சி.கணேச ஐயர் எழுதிய ஈழநாட்டு தமிழ் புலவர் சரிதம் (1939)
3. கலாநிதி ஆ.சதாசிவம் அவர்கள் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (1966)
4. தென்புலோலியோர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் (1967)
5. வித்துவான் கு.ஓ.ஊ நடராசா அவர்கள் எழுதிய காரைநகர் மான்மியம் (1971)
6. சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் எழுதிய காரைநகரில் சைவசமய வளர்ச்சி (1982)
7. காரைநகர் தமிழ் வளர்ச்சி கழகம் வெளியிட்ட திக்கைத் திரிபந்தாதி (1991)
8. கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிட்ட திண்ணபுர அந்தாதி மூலமும் உரையும்; (2011)