கனடா  காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் குளங்கள் புனரமைப்பு பணி

 

கனடா  காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் குளங்கள் புனரமைப்பு பணி

நிலம்,  நீர் ,  நெருப்பு,  ஆகாயம்,  காற்று என்கின்ற ஐம்பூதங்களை   கொண்டியங்கும் பூமிப்பந்தில்  பெருமளவிலான பகுதியை நீர்ப்பரப்பு  கொண்டுள்ளது யாவரும் அறிந்ததாகும்.   மனித சமூக வளர்ச்சியில் நீரின்  வளத்தைக்  கொண்டு   விவசாயத்தை பெருக்ககூடியதாக அமைந்தது.  தொடக்ககால விவசாயம்  மழையை நம்பியதாகவும்,   உரியபருவத்தில் மழை பெய்யாவிடில் விவசாயம்  அழிவுக்குள்ளானதும் கருத்திற் கொள்ளப்பட்டது. அத்துடன் கால்நடைகளுக்கு நீர் பருகவும் முறையான நீர்நிலைகள் தேவைப்பட்டன.  இதனால் மழைபெய்யும் காலங்களில் மழை நீரைச் சேமிக்கும் எண்ணம் தோன்றியது.  இச்சிந்தனையில் இருந்தே குளங்கள் உருவாக்கம்  பெற்றன.  குளங்களின்  பயன்பாடாக  தண்ணீரைப் பாதுகாத்தல்,  வறட்சித் தடுப்பு, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல்,  சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் இருந்தது.

குளங்கள் மூலமாக  நீரைச் சேகரித்தல்,   தேக்கிவைத்தல்,  உபரிநீரை வெளியேற்றுதல்,   நீரை வழங்குதல் என்ற செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. மழைநீரைப் பெற்று நிரம்பும் இந்த   மானாவாரிக் குளங்கள்  நேரடியாகக் குளத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழையினால் மட்டுமின்றி,  குளத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிக்குத் தொலைவில் பெய்யும் மழையின் துணையாலும் இக்குளங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும்  நிலமை இருந்தது.

இத்தகைய குளங்கள் முன்னர்  மன்னர்களாலும்,  பின்னராக  அரசாங்கம்களினாலும் , செல்வந்தர்களாலும்,  சமூக  நிறுவனங்களாலும், அக்கறையுள்ள   ஊர்  மக்களாலும் மிகவும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டும்,   பராமரிக்கப்பட்டும்  வந்தன.  இதன்   காரணமாக  சூழலுக்கு  பாதிப்பு ஏற்படாமல்  இயற்கை சமநிலை பேணப்பட்டு  வந்தது.

கடந்த தசாப்த  காலங்களாக  நடைபெற்ற யுத்தத்தாலும்,  மக்களின்  இடப்பெயர்வுகளாலும் முறையாக குளங்கள் பராமரிப்பு மட்டுமின்றி    புனரமைப்பும்  செய்யமுடியாத  நிலையேற்பட்டது.   இதனால்   பிரதேசங்களின்   நுண்  காலநிலை  ( Micro  Climate ) பாதிக்கப்பட்டிருக்கின்றது.    சுற்றுப்புற காற்று  வெப்பநிலை  குறைவடையாமல் போயிருக்கின்றது.  அத்துடன் வறட்சியும், நன்னீர்  வளம் குன்றிப்போய்க்கொண்டிருக்கின்றதையும் காணக்கூடியதாக   இருக்கின்றது.

இத்தகைய  நிலையில்  குளங்களின் அடிப்பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மழைக்காலத்துக்கு  ஏற்ற வகையில் தயார்ப்படுத்தப்படல் வேண்டும்.   இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கை சமநிலையை  ஓரளவேனும் பேணக்கூடிய  நிலை ஏற்படும்.

கனடா  காரை கலாச்சார மன்றத்தின் கல்விப்பணி,   வாழ்வாதார மேம்படுத்தல் உதவி ,   மனிதாபிமான உதவி,   பொருளாதார மேம்பாடு,  சமயப்  பணி   என்கின்ற பல்வேறு இலக்குகளுடன் சுற்றுசூழல்  பாதுகாப்பையும் பேண வேண்டிய தேவையுள்ளது.  ஆகையால் காரைநகரில்  உள்ள குளங்கள் ஆழமாக்கப்பட்டு  புனரமைக்கப்படுகின்ற பணிக்கு அனுசரணை வழங் குகின்றது.  இங்கே காணப்படும் புகைப்படங்கள்   தற்போது  காரைநகரில்  உள்ள  பதின்நான்கு குளங்களில் ஒன்றாகிய  விக்காவில் குளம் தூர்வாரப்படும் போது எடுக்கப்படடவையாகும்.