அமரர் மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி. கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் (25.04.2018) இன்றாகும். அவரின் நினைவுதினத்தையொட்டிய கட்டுரை எடுத்துவரப்படுகின்றது.

 

அமரர் மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி. கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் (25.04.2018) இன்றாகும்.

அவரின் நினைவுதினத்தையொட்டிய கட்டுரை எடுத்துவரப்படுகின்றது.

 

சைவத்துக்கும் செந்தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய
சான்றோராகிய பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள்
அவர்கள்

 

 

 

 

 

 

 

(சிவநெறிச்செல்வர் திரு. தி. விசுவலிங்கம்,
தலைவர், கனடா சைவசித்தாந்த மன்றம்)

 

சிவனடி மறவாத சிந்தையாளராக விளங்கி வந்தவரும் சைவத்துக்கும் செந்தமிழுக்கும் அரும்பணிகள் ஆற்றி வந்தவருமான சான்றோராகிய சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், தத்துவக்கலாநிதி, பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் தமது 98 ஆவது அகவை நிறைவுபெற்று 99 ஆவது அகவை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் 25-04-2015 சனிக்கிழமை அதிகாலை 3:00 மணி போல் சிவபதம் – திருவடிக்கலப்பு எய்தினார் என்ற செய்தி அறிந்து, அவர் இறைவன் திருவடியில் பேரின்பம் துய்க்க, சிவபெருமான் திருவருளை வேண்டி வணங்கி வருகிறோம். குருக்கள் ஐயாவின் பிரிவு அவரின் மக்களுக்கும், குடும்பத்தவர்க்கும், சைவத்தமிழ் அன்பர்களுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். பிரிவுத்துயர் நீங்கவும் அமைதி பெறவும் சிவபெருமான் திருவருளைப் பற்றிக் கொள்வோம்.

குருக்கள் ஐயா கனடா சைவசித்தாந்த மன்றத்தின் காப்பாளர்களில் ஒருவராகவும், “அன்புநெறி” சிறப்பாசிரியர்களில் ஒருவராகவும் விளங்கி மன்றத்தின் பணிகள் சிறப்புற நடை பெற்றுவர, ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், சைவசமயகுரவர் பாடசாலை மாணவரின் வளர்ச்சியில் பாராட்டுகளும், ஊக்குவிப்புகளும் அளித்தவர், “அன்புநெறி” யின், திருவருட்செல்வர் விழா, திருவாதிரை – திருவாசக விழா மலர்கள் என்பவற்றுக்கெல்லாம் அவ்வப்போது அருளாசி உரைகளும் கட்டுரைகள் எழுதியும், அருமையான கட்டுரைகளைத் தேடி அளித்தும், மற்றும் அருமையான சிறந்த நூல்களையும் அளித்து மன்றத்திற்கு பெருமையும் உயர்வும் அளித்த பெருமகனாவார்.

குருக்கள் ஐயா அவர்கள் நல்லாசிரியராக, ஆளுமை மிக்க அதிபராக, பத்திரிகையாளராக, சமூகத்தொண்டராக, எழுத்தாளராக, பதிப்பாசிரியராக விளங்கியவர். அவர் ஆன்மீகவாதியாக, சிவனடிமறவாத சிந்தையாளராக, திருமுறைகளை தினமும் ஓதுபவராக தமது திருவடிக்கலப்பு நிகழும்வரை வாழ்ந்து திருவாசகப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே சிவபதம் எய்தியவர்.

குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுநிலைமை அழுக்காறின்மை, அவாவின்மை ஆகிய குணங்கள் விளங்கும் மனிதநேய மிக்க அந்தணச் செம்மல் குருக்கள் ஐயா ஆவார்.

சைவப் பாரம்பரியத்திற்கும் சிவாச்சாரிய பாரம்பரியத்திற்கும் நல்லதோர் இலக்கண புருடராகத் திகழ்ந்தவர். எளிமையான வாழ்வையே தனது வாழ்வாகக் கொண்டு விளங்கிய பண்புடையவர். பிறர் நலம் பேணும் பண்பும் பிறர்க்கு உதவும் பண்பும் மிக்கவராய் இருந்தார். அவர் கடமை உணர்வும், செயற் திறன் மிக்க ஆற்றலும் கொண்ட கர்ம வீரன் ஆவார்.

1916 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி ஈழத்துச் சிதம்பரத்தில் அரும்பணியாற்றிய சிவத்திரு கணபதீசுவரக் குருக்கள் அவர்களுக்கும் சிவயோக சுந்தராம்பாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் உத்தரகோசமங்கை என்னும் சிவாலயத்தில் பரம்பரையாக பூசை செய்த அந்தணர் மரபில் உதித்தவர்.

தமது ஆரம்பக் கல்வியை, தந்தையார் சிவத்திரு ச. கணபதீசுவரக் குருக்களிடத்திலும் பண்டிதர் ச. பஞ்சாட்சரக் குருக்கள் மற்றும் பண்டிதர் சி. சுப்பிமணிய தேசிகர் ஆகியோரிடத்திலும் பெற்றவர். ஒருவன் தான் சார்ந்துள்ள சமயத்தின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு கற்க வேண்டிய நூல்களை ஐயந் திரிபறக் கற்றுத் தெளிய வேண்டும் என்று நாவலர் காட்டிய நல்வழிக்கேற்ப சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் சமயம், தமிழ், மற்றும் சமஸ்கிருதம் சார்ந்த கல்வி அறிவை விருத்தி செய்தார். தாம் கற்க வேண்டிய நூல்களையும் கல்வியையும் மகாவித்துவான் கணேசையா போன்ற தக்கவர்களிடம் பாடங் கேட்டுக் கற்றறிந்தார்.

குருக்கள் தமது புலமைத்துவத்தை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் பின்னர் பரமேசுவர பண்டித ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் கற்றுப் பண்டித பரீட்சையிலும், பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சையிலும் சித்தியடைந்ததன் மூலம் செந்தமிழ்ப் புலமை மிக்க நல்லறிஞராகத் திகழும் வாய்ப்பினைப் பெற்றார்.

இவ்வாறு தமது கல்வியறிவில் சிறந்து விளங்கிய சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் 1940 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பணியாற்றிய காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையால் நடத்தப்பட்டு வருகின்ற அகில இலங்கைச் சைவசமய பாடப்பரீட்சைக் குழுவில் அங்கம் வகித்துப் பெருஞ் சேவை செய்து வந்தார். அன்றியும் மாலை நேரத்தில், தினகரன் பத்திரிகையில் செய்திப் பிரிவில் பணியாற்றினார். ஞாயிற்றுக் கிழமைகளில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார். பின்னர் அவரது ஆசிரியப்பணி பல்வேறு பாடசாலைகளிலும் தொடர்ந்ததன் மூலம் இப்பணியில் தமது அனுபவத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தினார். சிவத்திரு குருக்கள் அவர்கள் தலைமை ஆசிரியராகவும் பணி புரிந்து 1970 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் மாணவர்களது அறிவை விருத்தி செய்யும் நோக்கில் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிடுவதன் மூலம் தமது கல்விப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார். தமது பெற்றோர் வழியிலும் பேராசான்கள் மூலமும் தாம் பெற்ற தமிழ்ப் புலமையை மற்றவர்களுக்கு ஒழிவு மறைவின்றி வாரி வழங்க சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் என்றும் பின்னின்றதில்லை. அவர் ஆக்கிய நூல்களும் பதிப்பித்து வெளியிட்ட நூல்களும் அவரது அயராத முயற்சிக்குரிய சான்றுகளாக அமைகின்றன.

சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களின் நிறுவன ரீதியான பணிகள் அடுத்துச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர் மணிவாசகர் சபை ஆகியவற்றின் தாபகராக விளங்கியவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள். இவ்விரு நிறுவனங்கள் ஊடாக தமது நீண்டகால அனுபவத்தினைச் சமகால இளந் தலைமுறையினரின் நன்மைக்காகப் பகிர்ந்து கொள்வதில் இவர் மிக்க ஆர்வமுடன் விளங்கியவர். கடமையில் அவர் கடைப்பிடித்து வரும் ஒழுங்கு இவ்விரு நிறுவனங்களும் சிறந்து வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது.

தமது தமிழ்ப் புலமையை மற்றவர்களின் அறிவு விருத்திக்காகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்ற பல நூல்களை சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் ஆக்கியவர். இவரது நூலாகிய “காரைநகரில் சைவசமய வளர்ச்சி” (1982) தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடாக அமைந்தது.

சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் பதிப்பித்த நூல்களின் வரிசையில் கந்தர் மட சுவாமிநாத பண்டிதரின் “திருமுறைப் பெருமை”, பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவரின் “திண்ணபுர அந்தாதி”, “தன்னை அந்தாதி”, “திருப்போசை வெண்பா”, “திக்கை அந்தாதி”, மகாவித்துவான் F.X.C நடராசாவின் “நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்”, “வினைத் தொகை”, “தெரிநிலை வினையெச்சம்”, பண்டிதர் மு. கந்தையாவின் “நாவலர் பிள்ளைத் தமிழ்”, “ஷேத்திரத் திருவெண்பா”, திரு. ச. சபாபதி அவர்களின் “அருள் நெறித் திரட்டு” ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் சிறப்பு மலர்களுக்குரிய ஆசிரியராக இருந்து வெளியிட்டவற்றுள் “காரைநகர் சைவ மகாசபைப் பொன்விழா மலர்”, “காரைநகர் மணிவாசகர் சபைப் பொன் விழா மலர்” (1993), “காரைநகர் – வியாவில் ஐயனார் கோயில் கும்பாபிஷேக மலர்” ஆகியவற்றுடன் திருவாதிரை மலர்கள் 5 ஐயும் குறிப்பிடலாம்.

திருவாசக பாராயண சூழலில் வளர்ந்ததனாலும், தாயார் திருவாசகத்தில் ஏற்படுத்திய பற்றுணர்வினாலும் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களுக்கு திருவாசகத்தில் தீராத பற்று ஏற்பட்டது. அதுவே மணிவாசகர் சபையை ஆரம்பிக்க ஏதுவாயிற்று.

சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்களால் யோகர் சுவாமிகளுடைய ஆசியுடன் காரைநகர் மணிவாசகர் சபை 01. 01. 1940 ஆரம்பிக்கப் பெற்றது. இச்சபையின் வளர்ச்சிக்குப் பல சைவச் சான்றோர் உதவியதையும் குருக்கள் ஐயா நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார். காரைநகர் வாழ் சைவப் பெருமக்களது அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய உன்னதமான அன்பராகவே குருக்கள் ஐயா திகழ்ந்துள்ளார் அவரது சமயப் பணியில் காரைநகர் மணிவாசகர் சபையின் தாபிதமும் தொடர்ந்து அச்சபை மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுமே முக்கியத்துவம் பெற்றன. இச்சபையின் மூலம் காரைநகரில் மக்களிடையேயும் இளந்தலை முறையினர் இடையேயும் திருவாசகக் கலாச்சாரத்தினைத் தோற்று வித்தவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள். இச் சபைக்கும் தமிழகத்துக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் பெரும்பாலான ஆதீனங்களுடன் நெருக்கமான உறவை வளர்த்தவர் குருக்கள் அவர்கள். 1955 ஆம் ஆண்டு முதல் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவெம்பாவைக் காலத்தில் மணிவாசகர் விழா நடைபெறத் தொடங்கியது. அந்த ஆண்டு தொடக்கம் விழாக்கள் தொடர்ந்து நடைபெறச் செய்வதிலும் தமிழகத்திலுள்ள அறிஞர்களுடனும் எம் நாட்டு அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களை மணிவாசகர் விழாக்களில் சொற்பொழிவாற்றச் செய்வதிலும் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் பெரும்பணி ஆற்றி வந்தவர்.

குருக்கள் ஐயா தனது தந்தையார் அருமையாகச் சேர்த்த பழைய கிடைத்தற்கரிய ஆகமங்கள், பத்ததிகள், சமய நூல்கள் இலக்கிய நூல்கள் உள்ளிட்ட சிறந்த ஒரு நூலகத்தைப் பேணி வந்தவர். அவற்றைப் பாதுகாத்து தாம் நிறுவிய மணிவாசகர் சபைக்கு 6000 நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார். ஆய்வுகளின் போது அறிஞர்களுக்குத் தேவைப்படும் முக்கியமானவற்றையும் மற்றும் மிக அருமையானவையுமான நூல்களை மனமுவந்து உபகரித்து உதவி வந்தவர் சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்கள்.

குருக்கள் அவர்கள் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தவர் பெருமை, பாராட்டு, கௌரவம் எதனையும் எதிர் பார்க்காமல் கடமை ஆற்றும் கர்ம வீரன்.  “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற திருநாவுக்கரசு நாயனாரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து வந்தவர். அனைத்து அன்பு நெஞ்சங்களோடும் சளைக்காமல் கடிதத் தொடர்பு கொண்டு தமது அன்புப் பிணைப்பையும் உறவையும் வளர்த்துக் கொள்வதோடு காரைநகரில் தாம் தாபித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அனைவரையும் அரவணைத்துச் செயலாற்றுவதில் வல்லவராக விளங்கி வந்தவர்.

குருக்கள் ஐயா அவர்கள் எழுதிய, பதிப்பித்த நூல்கள் பல. ஏட்டுப்பிரதிகளில் இருந்த பலவற்றை அச்சமைத்துப் பதிப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்தது போல், ஈழத்தில் பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களும் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவர் பதிப்பித்த நூல்களுள் தலை சிறந்து விளங்குவது நவாலியூர் புலவர்மணி சோ. இளமுருகனார் ஆக்கிய “திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம்” ஆகும். இந்நூலின் உரையாசிரியர் நூலாசிரியரின் வாழ்க்கைத் துணைவியாராகிய பண்டிதைமணி இ. பரமேசுவரியார் ஆவார். இந்நூலில்,

“அந்தணர்க்குண் மணியனையான் அருங்கலைகள்
மிகப் பயின்றான் அருமை ஆசான்
சந்தமுஞ் சிவனன்பு தழைக்கின்ற
உள்ளத்தான் தகைசால் நண்பன்
கந்தமலி பூம்பொழில் சூழ் திண்ணபுரங்
கவினோங்குங் கருத்து மிக்கான்
வந்தவருக்கு அமுதளிப்பான் வண்பெயர்கொள்
வைத்தீசுவரக் குருக்கள்!”

எனப் புலவர்மணி சோ. இளமுருகனார் பண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் ஐயாவைப் போற்றிப் பாடியுள்ளார்.

தமிழுக்கும் சைவத்திற்கும் கடந்த பல தசாப்தங்களாக அரிய பணியாற்றி வந்த சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு அகவை 79 ஆகும் போது அகில இலங்கை கம்பன் கழகம் 1995 ஆம் ஆண்டு “மூதறிஞர்” என்னும் பட்டத்தை வழங்கிப் பொன்னாடை போர்த்திக் பொற்கிழி வழங்கிக் கௌரவித்தது.

கனடா சைவ சித்தாந்த மன்றம், செப்ரெம்பர் 22, 2001 இல் குருக்கள் ஐயா அவர்களின் 85 ஆவது அகவை நிறைவின் போது “சிவத்தமிழ் வித்தகர்” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்ததோடு அவர் ஆற்றிய சைவத்தமிழ்ப் பணிகளை ஆவணப்படுத்தி “வைத்தீசுவரர் மலர்” என்பதனையும் வெளியிட்டுப் போற்றிப் பெருமை பெற்றது.

குருக்கள் ஐயாவின் 86 ஆவது அகவை நிறைவின்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவரின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான சைவத் தமிழ்த் தொண்டுகளை மதிப்பீடு செய்து அவருக்கு “தத்துவக் கலாநிதி” என்ற பட்டத்தை 12-10-2002 இல் நடைபெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்நிகழ்வு குருக்கள் ஐயாவிற்கும் பல்கலைக் கழகத்திற்கும் பெருமை கொடுப்பது மட்டுமல்ல சைவத்தமிழ்ப் பெருமக்களுக்கும் பெரும் மகிழ்வையும் நிறைவையும் கொடுத்தது.

தத்துவக் கலாநிதி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 91 ஆவது அகவையில், புலவர்மணி, பண்டிதர் க. மயில்வாகனனார் அவர்களால் இயற்றிய ஆண்டிகேணி ஐயனார் புராணம் டிசம்பர் 2007 இல் உரையுடன் காரைநகர் மணிவாசகர் சபை மூலம் வெளியீடு செய்வித்தார்.

பண்டிதமணி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 95 ஆவது அகவையில் தாம் முன்னர் பதிப்பித்த திண்ணபுர அந்தாதி (மூலமும் உரையும்) என்ற நூலின் மூன்றாம் பதிப்பினை, கனடா சைவசித்தாந்த மன்றம் மூலம் யூன் 2011 இல் வெளியீடு செய்வித்தார்.

சிவத்தமிழ் வித்தகர் சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தமது 97 ஆவது அகவையில் தாம் பலகாலமாகத் தொகுத்துக் கொண்டிருந்த சைவக்களஞ்சியம் என்ற நூலை தொகுப்பாசிரியராக இருந்து, வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மூலம் டிசம்பர் 2013 இல் வெளியீடு செய்வித்தார்.

சான்றோராகிய குருக்கள் ஐயா அவர்கள் தமது 98 ஆவது அகவையில் தாம் தாபித்த காரைநகர் மணிவாசகர் சபை, 75 ஆண்டுகள் நிறைவுகண்டு பவளவிழாவின் தொடக்கமாக டிசம்பர் 2014 இல் நடைபெற்ற மணிவாசகர் சபையின் பவள விழா (1940 – 2015) மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மகிழ்வோடும் மனநிறைவுடனும் எல்லோரையும் ஆசீர்வதித்தார்.

சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் சிவானந்த ஞான வடிவேயாகி சிவபெருமான் திருவடி நீழலில் பேரின்பம் பெறுவார். அவர் அன்பர்கள் உள்ளங்களில் என்றும் கலங்கரை விளக்காக நின்று ஒளி ஏற்றுவார்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

 

குறிப்பு: மகாவித்துவான் F. X. C. நடராசா அவர்கள், பண்டிதமணி தத்துவ கலாநிதி சிவத்திரு க. வைத்தீசுவரக் குருக்களுக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குருக்கள் ஐயா அவர்கள் எழுதிய “காரைநகரில் சைவசமய வளர்ச்சி” என்ற நூலும் இணைக்கப்பட்டுள்ளது.

1

 

2

 

3

 

4

 

5

 

6

 

7

 

 

Vytheeswara Kurukkal Book 1982