50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்) காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும் மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம்.

 

50 வருடங்களுக்கு முன்னர் (1970க்கு முன்)

காரைநகர் மக்களின் வாழ்வும் வளமும்

மருத்துவம் பகுதி 02 – ஆயுள்வேத வைத்தியம்.

பகுதி 01ல் ஆங்கில மருத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இக் கட்டுரையில் ஆயள்வேத மருத்துவம் பற்றியும், ஆயுள்வேத மருத்துவர்கள் பற்றியும் கூறலாமென நினைக்கின்றேன். 1970க்கு முன்னர் காரைநகரில் ஆயுள்வேத மருத்துவமே முன்னிலை பெற்றிருந்தது எனக் கூறினால் மிகையாகாது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பரம்பரை வைத்தியர்களும் அவர்களிடம் இம் மருத்துவத்தைப் பற்றி நன்கு கற்று சேவை செய்தவர்களும், பிற்காலத்தில் சேவையாற்றியவர்களுமேயாகும். பிற்காலத்தில் சேவையாற்றியவர்கள் தம் மருத்துவ பரம்பரையினரை வளர்த்தெடுக்காததன் விளைவே இன்று மருத்துவ பரம்பரையினர் காரைநகரில் அருகி வருவதற்கு காரணமாயிற்று. இருப்பினும் 1970க்கு முன்னர் காலத்திற்குக் காலம் பல மருத்துவர்கள் தோன்றிச் சிறந்த சேவையாற்றி மறைந்துள்ளனர். அவர்களைப் பற்றியும் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இக் கட்டுரை வரையப்படுகின்றது. அவர்கள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றேன்.

01. கே. வி.ஸ்வநாதன் – ஆயுள்வேத மருத்துவர்
இவர் கிறீன் மருத்துக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். யாழ்குடாநாட்டில் பிரசித்தி பெற்ற மருத்துவராக இருந்த காரணத்தினால் பலரும் இவரது மருத்துவ சேவையைப் பெற்றதாக அறியப்படுகின்றது. வசதி குறைந்தவர்களுக்கு இவர் இலவச மருத்துவ சேவையை வழங்கினார். காரைநகர் தபாற்கந்தோருக்கு அருகாமையில் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார். இக் காலப்பகுதியில் பிறப்பு, இறப்புப் பதிவாளராகவும் பணிபுரிந்தார். மேலும் இவர் 1905 ம் ஆண்டு கல்லினால் ஆன முதலாவது கட்டிடத்தை காரைநகர் திருஞானசம்பந்தர் ஆங்கில வித்தியாலயத்துக்கு (தற்போதைய இந்துக்கல்லூரி) கட்டிக் கொடுத்தார் என முன்னாள் அதிபரும் ஆசிரியருமான ளு.மு. சதாசிவம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய விபரங்களை வைத்துப் பார்க்கும் போது இவர் 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆயள்வேத மருத்துவ சேவையை ஆரம்பி;த்துவிட்டார் என எண்ணத் தோன்றுகின்றது.

02. சுப்பிரமணியம் இராசசேகரம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் வலந்தலை புதுவீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வராக 07-08-1928 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பித்து அங்கேயே 1943ம் ஆண்டு தமிழில் சிரேஷ்டபாடசாலைத் தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைந்து பின்னர் காரைநகர் இந்துக்கல்லூரில் சேர்ந்து ஆங்கிலத்தில் கற்று சிரேஷ்ட தராதரப்பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்தார். அதன்பின்னர் தந்தையின் பரம்பரைத் தொழிலான ஆயுள்வேதத்தை அவரிடமிருந்து கசடறக்கற்று தேர்ந்தார். அத்துடன் நின்றுவிடாது தந்தையின் வைத்தியத்துறைக்கு உதவியும் புரிந்தார். இத் தொழிலில் நாட்டம் கொண்ட இவர் வேறு ஏடுகளையும், நூல்களையும் கற்று வைத்திய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
இந் நிலையில் 1956ம் ஆண்டு தனது மைத்துனியான சிவபாக்கியம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர் எப்பொழுதும் மற்றவர்களை இன்முகத்துடன் வரவேற்கும் தன்மை கொண்டவர். தனது அரவணைப்பு முறையினாலும்; சிறந்த வைத்தியமுறையினாலும் வாடிக்கையாளர் பலரைத் தன்னகத்தே கவர்ந்து கொண்டார். இதன் காரணமாகத் தனது மருத்துவத் தொழிலைக் காலையில் தனது இல்லத்திலும், மாலையில் மேற்கு வீதியிலுள்ள ஆலடியிலும் நடாத்தித் தனது வைத்திய சேவையை விஸ்தரித்துக் கொண்டது மட்டுமல்லாது அவசர நோயாளர்களை இரவு பகல் எனப் பாராமல் அவர்களின் இல்லங்களுக்கு சென்றும் பார்வையிட்டுக் குணப்படுத்தினார். மேலும் பிறப்பு, இறப்பு பதிவுச்சேவையையும் செய்த இவர் பொதுமக்கள் நன்மை கருதி முற்றிலும் இலவசமாகவே செய்து கொடுத்தார். இதனால் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் இவரின் உதவி நாடி வந்தனர். 1966ம் ஆண்டு இவர் சமாதான நீதவான் பதவி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சித்தமருத்துவ சங்க செயற்குழு உறுப்பினாராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், இவர் பல்லாண்டு காலம் காரைநகர் கிராமசபை அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அச் சங்கத்தின் உபதலைவராகப் பலமுறை தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் நின்றுவி.டாது சைவமகாசபை, ஈழத்துச் சிதம்பரம் அன்னதான சபை போன்ற பல சபைகளிலும் அங்கத்தவராக இருந்துள்ளார்.
(நன்றி கலங்கரை சிறப்பு மலர்)

03. கந்தப்பர் ஞானப்பிரகாசம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் 1912ம் ஆண்டு சின்னத்தம்பி கந்தப்பருக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய வதிவிடம் பெரியமணல் பகுதியாகும். இவரை காரைநகர் மக்கள் பரியாரி கந்தப்பொடி என்றும் அழைப்பர். ஆரம்பத்தில் இவர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்குச் சென்று 2 வருடங்கள் கல்விபயின்று வந்து ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார். தனது தந்தை ஆயுள்வேத வைத்தியத்தில் ஈடுபட்டதன் காரணத்தால் தானும் அத்தொழிலையே செய்ய விரும்பி இத்தொழிலில் நன்கு பண்டித்தியம் பெற்றவரும், காரைநகர் களபூமியைச் சேர்ந்தவருமான ஆயுள்வேத வைத்தியர் சின்னப்பர் (செட்டி சின்னப்பர்) அவர்களி;டம் சென்று ஆயுள்வேத நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். 1932ம் ஆண்டிலிருந்து மேற்படி தொழிலை ஆரம்பித்து நடாத்தத் தொடங்கினார். முதலில் சிறிய கொட்டிலில் இத் தொழிலை நடாத்தி வந்தார் என அறியப்படுகின்றது. சிறுபிள்ளை வைத்தியத்தில் கைதேர்ந்தவர் என்பதுடன் வாதம், சலரோகம் என்பவற்றைக் குணமாக்கும் வல்லமையையும் கொண்டிருந்தார் எனவும் அறிய வந்துள்ளது. அவசர நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக இரவு, பகல் என்று பாராமல் பல குறிச்சிகளுக்கும் சென்று சேவையாற்றினார்.

04. கனகரத்தினம் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் யாழ்ப்பாணம் கைக்குளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காரைநகர் ஆயிலிப் பகுதியில் தங்கியிருந்து வைத்திய சேவையில் ஈடுபட்டார். இவரும் அனுபவம் மிக்க வைத்தியராக இருந்த காரணத்தினால் வேதர்அடைப்பு முதல் பலகாடு வரையில் வசித்த மக்கள் இவரின் மருத்துவசேவையைப் பெற்றனர்.

05. இராமுப்பிள்ளை வேலுப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். இவருடைய தகப்பனார் இராமுப்பிள்ளையும் ஆயுள்வேத மருத்துவராக இருந்த காரணத்தினால் இவ் வைத்திய நுணுக்கங்களை ஐயந்திரிபுறக் கற்றுக்கொள்ள வசதியாக இருந்தது. களபூமி பொன்னாவளைப் பகுதியில் இவ்வைத்தியத் துறை இருந்த காரணத்தினால் களபூமி மக்கள் இவரி;டம் சென்று தமக்கான சேவையைப் பெற்றனர் செங்கமாரி வைத்தியத்தைக் குணப்படுத்துவதில் இவர் வல்லவராகக் காணப்பட்டார் எனக் கேள்விப்பட்டேன்.

06. பரியாரி செல்லர் (ஆயுள்வேத வைத்தியர்)
இவருடைய இயற்பெயர் செல்லர் என்பதாகும். இதனால் மக்கள் இவரைப் பரியாரி செல்லர் எனச் செல்லமாக அழைத்தனர். இவர் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவாளராகவும் கடமையாற்றினார். இருந்தாலும் இவரைப் பரியாரி என்றே எம்மக்கள் அழைத்தனர். இவரால் கட்டுகளுக்குப் போடப்படும் சேர்வை தனித்துவமானது. சிரங்கிற்குப் பூசப்படும் கெந்தக எண்ணெய் இவரின் பாரம்பரியச் சொத்து எனக்; கூறப்படுகின்றது. இவ் விபரங்கள் யாவும் காரைமான்மியம் என்னும் நூலில் வெளிவந்துள்ளது.
(நன்றி காரைமான்மியம்)

07. தியானேஸ்வரன் (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர். இளவயதினராகக் காணப்பட்டாலும் ஆயுள்;வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவர். வாதநோயைக் குணப்படுத்துபவர். இவர் தோப்புக்காடு உட்பட அண்டியுள்ள பிரதேச மக்களுக்கு வைத்திய சேவையை வழங்கியவர்.

08. சண்முகம் (முறிவு நெரிவு வைத்தியர்)
இவர் காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். காரைநகரில் 50 வருடங்களுக்கு முன்னர் இவரைத் தெரியாதவர்கள் மிகக்குறைவு என்றே கூற வேண்டும். நீண்ட தாடி வைத்திருந்தார். எல்லோருடனும் சுமூகமாகப் பழகும் தன்மை கொண்டவர.; கள்ளங்கபடமற்றவர். இவர் முறிவு, நெரிவு வைத்தியத்தில் கைதேர்ந்வராகக் காணப்பட்டார். ஆரம்பகாலங்களில் இவர் வீடுகளுக்குச் சென்றே முறிவு, நெரிவு வைத்தியத்தைச் செய்து வந்தார்.
காலம் செல்லச்செல்ல இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தமையினால் தனக்கென ஒர் நிரந்தர இடம்தேடி இறுதியில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கட்டிடத்தொகுதயில் ஒருபகுதியைப் பெற்று அங்கிருந்து தனது வைத்திய சேவையைத் தொடர்ந்தார். மூளாய், சுழிபுரம், சித்தங்கேணி, வட்டுக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்தும் காரைநகர், பொன்னாலை போன்ற இடங்களிலிருந்தும் பெரும்பாலோனோர் வந்து இவரிடம் சேவையைப் பெற்றனர்.

09. பேரம்பலம் (மாடுகளுக்கான வைத்தியர்)
இவர் காரைநகர் பாலாவோடையைச் சேர்ந்தவர். இவரை காரைநகர் மக்கள் மாட்டுப்பரிகாரியார் என்றே அழைப்பர். நோயுற்ற மாடுகளின் நோயை இனங்கண்டு அதற்கேற்றவாறு வைத்தியம் செய்யும் வல்லமை படைத்தவர். இதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

10. நாகலிங்கம் கந்தையா (பரிகாரி குஞ்சர); – (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களவிலிப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இயற்பெயரை விட பரிகாரி குஞ்சர் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டில் இருந்தே வைத்தியத்தொழிலை செய்து வந்தார். மருத்துக் குளிசைகளையும், சூரணங்களையும் நோயின் தன்மையறிந்து நோயாளர்களுக்கு கொடுத்து வந்தார். அத்துடன் நின்றுவி;டாது குழந்தைகளுக்கான மாதாளம்பழச்சாற்று எண்ணெய், கிரந்தி எண்ணெய் என்பனவற்றையும் வழங்கி வந்தார். இவருடைய சமூகத்தொண்டுகள் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். உதாரணமாக திருவிழாக்காலங்களில் செடில் காவடியாடுபவரை தனது திறமை மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், பொது இடங்களில் அமைதியை நிலைநாட்டல் போன்ற விடயங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தது.

11. சோமநாதர் முருகேசம்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் செம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர். ஆயுள்வேத வைத்தியம் பற்றிக் கற்பதற்காக இ;ந்தியா சென்று அங்குள்ள மற்றாஸ் பகுதியில் 3 வருடங்கள் கற்றுத்தேர்ந்தார். பின்னர் இலங்கை திரும்பி வந்து 1932 ல் குருநாகல் நகரப்பகுதியில் ஆரம்பித்து அங்;கு 25 வருடங்களுக்கும் மேலாக தனது சேவையைத் தொடர்ந்தார். பின்னர்1960ம் ஆண்டு அச்சேவையை முடிவுக்கு கொண்டுவந்து பரந்தன் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டார். அத்துடன் ஒறியன்ற் இன்சூரன்ஸ் முகவராகவும் செயற்பட்டார் என அறியப்படுகின்றது.

12. பரிகாரி சின்னப்பு (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் திக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். 1890-1944 காலப்பகுதியில் காரைநகர், வேலணை, ஊர்காவற்றுறை தீவுப்பகுதியில் பிரசித்திபெற்ற ஆயுள்வேத வைத்தியராகக் காணப்பட்டார். பத்திய முறைகளுடனும் பக்கவிளைவற்றதுமான வைத்திய முறையையே இவர் கையாண்டு வந்தார். பத்தியமுறையில் இருவகைகள் இருந்தது.
(அ) மருத்துடன் கூடிய பத்தியமுறை
(ஆ) மருந்து முடிந்தவுடன் வரும் விடுபத்திய முறை
இவர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் கோவிலுக்கு வடக்குப்புறமாகவுள்ள காணியில் சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்திருந்தார். மற்றையது அவரது திக்கரை வீட்டில் அமைந்திருந்தது. இரு இடங்களிலும் ஓலையால் வேயப்பட்ட கொட்டில்களிலேயை வைத்திய சேவையை நடாத்தி வந்தார். நடக்கமுடியாத நோயாளிகள் பல்லக்கிலேயே காவி வரப்பட்டனர். தூர இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் மாட்டுவண்டில்களிலேயே வருகை தந்தனர். காலை வேளைகளில் இவரது வீட்டுப்படலையில் மாட்டுவண்டில்கள் நிரையாக நிற்குமாம். பரியாரி சின்னப்பர் வெளியில் யாராவது நோயாளிகளைப் பார்க்க செல்வதானால் குதிரை வண்டியிலேயே செல்வாராம் இவர்.
1. பொதுப்பரியாரி
2. முறிவு, நெரிவு வைத்தியம்
3. சித்தப்பிரமை வைத்தியம் என்பனவற்றை குணப்படுத்துவதிலும் வல்லவராகக் காணப்பட்டார்.
இவரிடம் இவரது மகன் மயில்வாகனம் ஆயுள்வேத வைத்தியம் கற்றுக் கொண்டிருந்தவேளை துர்அதிஷ்டவசமாக மரணமடைந்தார் பின்னர்; தனது மருமகனான(மகளின் கணவர்) வேலாயுதர் காசிப்பிள்ளைக்கு ஆயுள்வேத நூணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். இன்னொருவரான கந்தப்பர் ஞானப்பிரகாசம் அவர்களும் இவரிடமே ஆயுள்வேத வைத்தியம் பற்றிக் கற்றறிந்தார் என வேறு தகவல்கள் மூலம் அறியப்படுகின்றது.
(நன்றி நினைவுமலர் காசிப்பிள்ளை அம்பிகைபாகன்)

13. வேலாயுதர் காசிப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர் – ஆசிரியர்)
இவர் காரைநகர் களபூமி பொன்னாவளை கிராமத்தைச் சேர்ந்தவர். வேலாயுதர் சின்னக்குட்டி தம்பதியினருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் இவர் நான்காவது மகனாவார். 1926ம் ஆண்டு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்ட பொழுது கோவளத்தைச் சேர்ந்த பேப்பர் முருகேசு சுவாமிகளால் ஆசிரயராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தவர் எனக் கூறப்படுகின்றது. மேலும் பரிகாரி சின்னப்பர் அவர்களின் மகளான அன்னம்மாவை திருமணம் செய்து இல்லறம் நடாத்தினார். புரிகாரி சின்னப்பர் தனது வாரிசை உருவாக்கும் வகையில் மகனான மயில்வாகனம் அவர்களுக்கு ஆயுள்வேத நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்த துர்அதி;ஸ்டமாக அவர் மரணமடைந்தார். அதனால் கவலையடைந்த பரிகாரி சின்னப்பர் தனது மருமகனான காசிப்பிள்ளை அவர்களுக்கு ஆயுள்வேத நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார் என அறியப்படுகின்றது. திரு.காசிப்பிள்ளை அவர்கள் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் ஆயுள்வேதத்தொழிலைச் செய்து வந்தவேளை 1946ம் ஆண்டு மரணமடைந்தார்.

14. மகப்பேற்று மருத்துவிச்சி சின்னம்மா
இவர் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகக் கொண்டவர். காரைநகரில் ஆங்கில வைத்தியம் விருத்தியடையாத காலத்தில மகப்பேற்று வைத்தியரும் இல்லாத நிலையில் அவ்வூர் மக்கள் அல்லற்ப்பட்ட வேளையில் மருத்துவிச்சி சின்னம்மா அவர்களே அம்மக்களுக்குக் கைகொடுத்து உதவினார் என்றால் மிகையாகாது. இப்பொழுது உள்ளவர்களைப் போல குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சென்று இவ் வேலைக்காகப் படித்து பட்டம் பெற்றவரல்லர். மாறாகத் தனது சொந்த அனுபவத்தைக் கொண்டே மருத்துவிச்சி வேலையைச் செய்து வந்தார். தூய தமிழில் கூறுவதாக இருந்தால் இவர் ஒரு படிக்காத மேதை என்;றே கூற வேண்டும். 1940 களின் முற்பகுதியிலேயே இத் தொழிலை ஆரம்பித்திருப்பார் போல் தெரிகிறது. 1960 நடுப்பகுதி வரை இவரது சேவை நீண்டு சென்றது. வேதரடைப்பு மற்றும் கோவளம் முதல் பலகாடு வரை இவரின் சேவை வியாபித்திருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ வேதனை ஆரம்பித்ததுமே எம்மவர்கள் மருத்துவிச்சி சின்னம்மாவுக்கே முதலில் ஆள் அனுப்புவார்கள் அங்கு சென்றவர்கள் சின்னம்மாவுக்கு தகவல் கொடுத்ததும் உடனேயே அவர்கள் சென்ற சைக்கிளிலோ அல்லது மாட்டுவண்டியிலோ ஏறி வந்துவிடுவார். அக் காலத்தில் வேறு போக்குவரத்துச்சேவை எதுவும் இருக்கவில்லை.
குறித்த வீட்டுக்கு வந்ததும் பிரசவ வேதனையால் அவதியுறும் பெண்ணின் சுகப் பிசவத்திற்கான வழிமுறைகளைக் கையாள்வார். இவரின் கனிவான பேச்சால் அனைவரையும் கவரும் தன்மை கொண்டவர். இவர் முன்னெடுத்த பிரசவங்களில் பெரும்பாலானவை சுகப்பிரசவங்களாகவே காணப்பட்டன. வசதிபடைத்தவர்களில் சிலர் கரைநகருக்கு வெளியேயுள்ள மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை போன்ற தனியார் வைத்தியசாலைகளை நாடினர்.
குழந்தை பிறந்ததும் மருத்துவிச்சி பின்வருமாறு பாடிக் குழந்தையை வாழ்த்துவார் இதனை மருத்துவிச்சி வாழ்த்து என்பர்.

மருத்துவிச்சி வாழ்த்து
அரிசிப் பொரியோடும் வந்தீரோ தம்பி
அரிசிமலை நாடுங் கண்டீரோ தம்பி
நெல்லுப்பொதியோடும் வந்தீரோ தம்பி
நெல்லுமலை நாடுங் கண்டீரோ தம்பி
மிளகுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
மிளகு மலைநாடுங் கண்டீரோ தங்கம்
இஞ்சிப்பொதியோடும் வந்தீரோ தங்கம்
இஞ்சிமலை நாடுங் கண்டீரோ தங்கம்
உள்ளிப்பொதியோடும் வந்தீரோ தம்பி
உள்ளி மலைநாடுங் கண்டீரோ தம்பி
மஞ்சள் பொதியோடும் வந்தீரோ தம்பி
மஞ்சள் மலைநாடுங் கண்டீரோ தம்பி
உப்புப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
உப்பு மலை நாடுங் கண்டீரோ தங்கம்
காசுப் பொதியோடும் வந்தீரோ தங்கம்
காசுமலை நாடுங் கண்டீரோ தங்கம்
கோச்சிவாழ கொப்பர் வாழ
பேத்தி வாழ பேரன்வாழ
பூட்டி வாழ பூட்டன் வாழ
கொம்மான் வாழ மாமி வாழ
குஞ்சியாச்சி வாழ குஞ்சியப்பு வாழ
பெரியாச்சி வாழ பெரியப்பு வாழ
ஊர் வாழ தேசம் வாழ
குருவுக்கும் சிவனுக்கும் நல்ல பிள்ளையாயிரு அயலும் புடையும் வாழவேண்டும். அன்னமும் சுற்றமும் வாழ வேண்டும் ஆய்ச்சியும் அப்புவும் வாழ வேண்டும். அம்மானும் மாமியும் வாழவேண்டும்
இப்படிப் பாடி முடிந்ததும் பிறந்தது ஆண்குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட வெளியில் நிற்கும் ஒருவர் காத்திரமான தடி ஒன்றை எடுத்து சத்தம் எழுமாறு வீட்டுக்கூரையில் தட்டுவார். இது அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது என்பதை அறிவிப்பதாகும். இதனையே அக் காலத்தில் அவன் கூரைதட்டிப் பிறந்தவன் எனக் கூறுவர் பெண் பிள்ளை பிறந்தால் அப்படித் தட்டுவதில்லை.

கொத்திப்பேய் கலைத்தல் நிகழ்வு
குழந்தை பிறந்து 5ம் நாள் மாலைப் பொழுதில் கொத்திப்பேய் கலைத்தல் நிகழ்வு நடைபெறும். அன்று சோறும் கறிகளும் சமைத்து குழந்தை பிரசவித்த பெண்ணின் அறையில் படைப்பர். அதைத் தொடர்ந்து மருத்துவிச்சி சூள் ஒன்றைக் கொளுத்தி தாய் மற்றும் குழந்தையைச் சுற்றி தாயும் பிள்ளையும் சுகம் சுகம் என்னும் பாடலைப் பாடி அவர்களை வாழ்த்தி விட்டு அறையின் மூலைமுடுக்கெல்லாம் சூளுடன் சுற்றி செத்தைக்க பத்தைக்க நில்லாதை கொத்தியாத்தை என்னும் பாடலைப் பாடிக் கொண்டு மருத்துவிச்சி வெளியேறுவார். பிரசவம் நடந்த அறையில் இருந்து பாய் தலையணை முதலியவற்றை சுருட்டிக்கொண்டு அத்துடன் கொத்தி படையல்களையும் மருத்துவிச்சி வெளியேறுவார். போகும் வழியில் கொத்திக்கு விருப்பமான பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று பாய், தலையணை முதலியவற்றை ஒரு பாழடைந்த தனியான இடத்தில் எறிந்துவிட்டுச் செல்வார். கொத்திக்குப் படைத்த உணவுகளையும் அவ்விடத்திலேயே விட்டுவிடடுச் செல்வார். கொத்திப்பேய் வந்து குழந்தையை தூக்கிச் சென்றுவிடுமென அக்காலமக்கள் நம்பியதனாலேயே இக்கொத்திப்பேய் அகற்றல் நிகழ்வு நடைபெறக் காரணமாயிற்று.
மேற்கூறிய இக் கஷ்டமான சேவையை புரிந்த மருத்துவிச்சி சின்னம்மாவை எம் சமூகம் மறப்பதற்கில்லை.
மேலும் களபூமி மதவடியில் முத்தி என்ற ஒருவரும் பழைய கண்டிப்பகுதியில் வேறொருவரும் இச் சேவையில் ஈடுபட்டார்கள் என அறியமுடிந்தாலும் அவர்கள் பற்றிய முழு விபரமும் கிடைக்கவில்லை.

15. குமாரவேலு கந்தையா (ஆயுள்வேத வைத்தியர்)
இவர் காரைநகர் களபூமி வழுப்போடையைச் சேர்ந்தவர். மேலதிக விபரம் கிடைக்கவில்லை.

16. இராமநாதர் முத்துகுமாரு (ஆயுள்வேத வைத்தியர்)

இவர் விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாக கொண்ட இராமநாதர் பொன்னுப்பிள்ளை தம்பதியினரின்மூத்த புதல்வர் ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் திகதி பிறந்தார். இவர் பாடசாலை கல்வியினை முடித்து விட்டு ஆயுள் வேத மருத்துவ கல்வியை , மருத்துவ துறையில் இருந்த பருத்தித்துறை பொன்னுச்சாமி செட்டியாரிடமும் பின் கந்தர்மடத்திலும் , காரைநகர் களபூமி சின்னப்பு பரியாரியிடமும் திறம்படக் கற்றார். அகில இலங்கை சித்த மருத்துவ சங்கத்தில் சித்த வைத்தியராக 1941ல்அங்கீகரிக்கப்பட்டார். மேலும் சித்த வைத்திய மருந்து தயாரிப்பதற்க்கான அனுமதிப் பத்திரமும் பெற்றிருந்தார்.

இவர் பொது வைத்தியம், விஷகட்டு வைத்தியம், குழந்தை வைத்தியம் மற்றும் வாத நோயை குணப்படுத்துவதில் மிகவும் கைதேர்ந்த சித்த மருத்துவராகவிளங்கினார்.

கைநாடி பிடித்து பார்த்தும் கண்ணை பார்த்தும் நோயினை இனங்கண்டு அதற்கேற்ற வைத்தியம் செய்வதில் வல்லுனர். அத்துடன் ஒருவர் நோய் வந்து படுக்கையில் இருக்கும் போது அவர்களின் கைநாடி பிடித்து பார்த்துஆயுளை மிக துல்லியமாக கணித்து சொல்லுவதிலும் திறமையானவராக இருந்தார்.

இவர் பேதி மருந்து தயாரித்தல் , கிரந்தி எண்ணெய், மாதளம்பழ சாறு எண்ணெய் , தாளங்காய் போன்ற பலஎண்ணெய்களை தனது வீட்டிலேயே தாயாரிப்பார்.

இவரது வீட்டில் மருத்துவ ஓலைச்சுவடிகள், அகத்தியர் சித்த வைத்திய மாத இதழ்கள், வைத்திய அகராதி, மற்றம்ஆயுள் வேத சித்த மருந்துகள் தாயாரிக்கும் உபகரணங்களும் சில மூலிகைகளும் நாட்டின் அசாதாரண சூழல்இடப்பெயர்வு வரை காணப்பட்டது. இவர் 1970 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 19ஆம் திகதி இறைவனடிசேர்ந்தார்.

17. வேலாயுதப்பிள்ளை சபாபதிப்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்)

இவர் காரைநகர் செம்பாடு பகுதியைச் சேர்ந்தவர். 1950 முற்பகுதிக்கு முன்னர் அப்பகுதி மக்களுக்கும் அயல் கிராம மக்களுக்கும் ஆயுள்வேத வைத்தியம் செய்து பிரபல்யம் பெற்றிருந்தார். கைநாடி பிடித்து பார்த்து ஏற்பட்ட நோய் இதுதான் என்பதை கூறுவதில் வல்லவராகக் காணப்பட்டதுடன், அதற்கேற்ற மருந்துகளையும் கொடுத்து சுகப்படுத்தினார் எனச் சொல்லப்படுகின்றது. மருந்துகளை வீட்டிலேயே தயாரித்ததாகவும் அதற்கான உரல் போன்ற தளபாடங்கள் அவரது வீட்டில் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் மூலம் அறிய வந்துள்ளது.

18. அண்ணவி கணபதி (பாம்புக்கடி வைத்தியர்)
இவர் காரைநகர் விக்காவிலைச் சேர்ந்தவர். மேலும் 1950 களில் இருந்து பலருக்குப் பாம்புக்கடி வைத்தியம் செய்திருக்கிறார். இவரைப் பற்றிய மேலதிக விபரம் எடுக்க முடியவில்லை.

 

மக்களினதும் ஆயுள்வேத மருத்துவர்களின் தேவைக்காகப் பாவிக்கப்பட்டதும், காரைநகரில் காணப்பட்டவையுமான மருத்துவக் குணங்கள் அடங்கிய மூலிகைகள், மரங்கள் பற்றிய விபரம்:

                                மூலிகைகள்:
1. அறுகம்புல்                                    2. துளசி
3. தூதுவளை                                     4. ஆவாரம் பூ
5. நெருஞ்சில்                                    6. முடக்கொத்தான்
7. சாறணை                                      8. குப்பைக்கீரை
9. திருநீற்றுப் பச்சிலை                10. கரு ஊமத்தை
11. மூக்கிரட்டை                              12. எருக்கு
13. காரை                                          14. கற்றாழை
15. கொவ்வை                                  16. சீந்தில்கொடி
17. கற்பூரவல்லி                               18. நாயுருவி
19. சிறுகீரை                                     20. சிறுகுறிஞ்சான
21. குப்பைமேனி                             22. வட்டத்துருத்திக்கீரை
23. கீழ்க்காய் நெல்லி                    24. பிரண்டை
25. கையான் தகரை                      26. மொசுமொசுக்கை
27. இக்கீரி                                         28. கஞ்சாங்கோரை
29. காஞ்சோன்றி                             30. தொட்டாற்சுருங்கி
31. தேங்காய்ப்பூக்கீரை                32. நீர்முள்ளி
33. முசுட்டை                                     34. வாதமடக்கி
35. விடத்தல் இலை                         36. பச்சைப்பயறு
37. பருத்தி                                          38. வெள்ளரி
39. கத்தரிக்காய                              40. பூசணி
41. பாவல்                                           42. கொத்தவரை
43. கண்டங்கத்தரிக்காய்              44. சுண்டைக்காய்
45. வெங்காயப்பூ                             46. நந்தியாவட்டை
47. புதினா கீரை                              48. தயிர்வளை
49. வெண்டி                                       50. கோரைக்கிழங்கு
51. காட்டாமணக்கு                         52. குரக்கன்
53. நாகதாளி
இன்னும் சில இருக்கலாம்.

 

                மருத்துவகுணமுள்ள மரங்கள்:
1. ஆடாதோடை                                          2. பனை
3. எலுமிச்சை                                              4. நாவல்
5. கடம்பரம்                                                 6. மாதுளை
7. கருங்காலி                                               8. முள்முருக்கு
9. மரவள்ளி                                                 10. ஆலமரம்
11. நெல்லி                                                   12. முருங்கை
13. அகத்தி மரம்                                        14. வேம்பு
15. கருவேப்பிலை மரம்                          16. வாழை
17. அத்தி                                                      18. புளியமரம்
19. மாமரம்                                                  20. பப்பாளி மரம்
21. விளாமரம்                                             22. வில்வமரம்
23. கொய்யா மரம்                                    24. இலுப்பை மரம்
25. ஓதியமரம்                                             26. தென்னை
27. அரச மரம்                                              28. பூவரசு
29. இலந்தை மரம்                                      30. சண்டி
31. நொச்சி                                                   32. மாவிலங்கம் மரம்
33. கறிமுல்லை                                           34. குமிழ மரம்
35. செம்பரத்தை                                         36. ஆமணக்கு
37. சீதா பழம்
இன்னும் சில இருக்கலாம்.

 

மேற்குறிப்பிட்ட சில மரங்களின் பெயரடங்கிய இடங்கள் காரைநகரில் உள்ளன. அவையாவன:

1. இலுப்பையடி                       2. ஆலடி                 3. வேம்படி                      4. அரசடி
5. நாவலடிக்கேணி                6. கருங்காலி         7. ஆலங்கன்றடி            8. கள்ளித் தெரு
9. நாவற்கண்டி                       10. புளியடி            11. புளியங்குளம்           12. சந்தம்புளியடி
13. இலந்தைச்சாலை போன்றவையாகும்.

ஆரம்பகால ஆயுள்வேத வைத்தியர்கள் தத்தம் வாரிசுகளை உருவாக்கி மேற்படி வைத்தியத்தை வளர்த்தெடுத்தனர். பிற்காலத்தில் வந்தவர்கள் அவ்வாறு உருவாக்கத் தவறிவிட்டனர். அதன் விளைவாக இன்று காரைநகரில் ஆயுள்வேத மருத்துவம் நலிவடைந்து விட்டதென்றே கூற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மூலிகைகளும் மருத்துவ குணமுள்ள மரங்களும் அருகி வருகின்றன. இதற்குக் காரணம் புதுப்புது கட்டடங்கள் கட்டுபவர்களும் மூலிகைகள் பற்றி பட்டறிவு அற்றவர்களுமேயாகும்.

ஆயுள்வேத மருத்துவத்தை மேலோங்கச் செய்வது எம் ஒவ்வொருவரினதும் கடமை என்பதே எனது கருத்தாகும்.

தொகுத்தவர்:
தம்பையா நடராசா
கருங்காலி
காரைநகர்.