காரை மண்ணின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு “காரை வசந்தம் 2019”

 

காரை மண்ணின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு

“காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாச்சார மன்றத்தின் கலை கலாச்சார நிகழ்வாக கனடாவில் இலையுதிர் காலத்தில் நடைபெறும் “காரை வசந்தம்” நிகழ்வு 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை நீண்ட வார விடுமுறைக்காலத்தில் நடைபெறவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்களின் அண்மைய காரைநகர் விஜயத்தின் போது காரைநகர் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், சேவையாளர்கள் மற்றும் பயனாளிகளை சந்தித்து தேவைகளை அறிந்து கொண்டதுடன் மேற்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய செயற்பாடுகளிற்கான வேண்டுகோள்களினையும் பெற்றுக்கொண்டார்.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

13.10.2019 அன்று நடைபெறவுள்ள “காரை வசந்தம் 2019” நிகழ்வின் மூலம் மேற்படி கேட்டும் பார்த்தும் அறிந்து கொள்ளப்பட்ட காரை மாணவர்களின் கல்விக்கான திட்டங்களிற்கான உதவிகள் நிறைவேற்றப்படவுள்ளன.

திட்டம் 1.
காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர்கள் சாதாரண தர பொதுப்பரீட்சைக்கு தயாராகும் வகையில் கல்விக்கருத்தரங்கு நடாத்துவதற்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று அதனை இவ்வருடம் முதல் ஆரம்பித்து வைப்பது என நிர்வாக சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரை இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, வியாவில் சைவ வித்தியாலயம், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10இல் கல்வி கற்கும் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள்.

திட்டம் 2.
யாழ்ற்ரன் கல்லூரியில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு தகுதியான ஆசிரியர் ஒருவரை நியமிக்க அதற்கு தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 3.
களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க மற்றைய பாடசாலைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘smart class room’ திட்டத்தினை அமுல்படுத்த கோரப்பட்ட 3 இலட்சம் ரூபாய்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 4.
காரைநகர் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள நிழல் பிரதிகள் (photo copy) எடுப்பதற்கான தேவைகள் அதிகரித்துள்ள காரணத்தினாலும் ஒரு சில பாடசாலைகளில் உள்ள இயந்திரங்கள் கூடிய விரைவில் பழுதடைவதாலும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும் தமது கற்கை தேவைகளிற்காக பயன்படுத்தும் நோக்கில் நீண்டகால பாவனைக்குட்பட்ட நிழல் பிரதி இயந்திரத்தை பெற்று காரைநகர் அபிவிருத்தி சபை காரியாலயத்தில் வைப்பதன் மூலம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பயனடைவார்கள் என்னும் நோக்கில் 3 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி ஒதுக்கப்பட்டும் அதற்குரிய காகிதாதிகளை கிரமமாக காரைநகர் அபிவிருத்தி சபை வழங்க மேலும் வருடம் ஒன்றிற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 5.
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொள்ள அடுத்த வருட ஆரம்பத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள கல்வி திட்டத்தின் பிரகாரம் விற்பனைக்கு வரவுள்ள பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொள்ள ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“காரை வசந்தம் 2019” நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கி கனடா வாழ் காரை சிறார்களின் கலை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு வழங்குவதுடன் கனடா வாழ் காரை மக்களின் நல்லெண்ணம் ஒற்றுமையினை மேம்படுத்தி நடைபெறவுள்ள காரை வசந்தம் நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் மேற்படி திட்டங்கள் நிறைவேறவும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து கொள்ளவும் அனைத்து கனடா வாழ் காரை மக்களை வருக வருகவென காரை வசந்தம் நிகழ்வுகளிற்கு வரவேற்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்