கனடா-காரை கலாசார மன்றம் மண்ணிற்காக மேலும் நிதியுதவி!

கனடா-காரை கலாசார மன்றத்தின் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபையினரின் நிர்வாக கால எல்லை 10.05.2015 உடன் முடிவடைந்து புதிய நிர்வாக சபை தெரிவும் பொதுக்கூட்டமும் அன்று நடைபெறவுள்ளதை மன்றத்தின் அங்கத்தவர்கள் மற்றும் அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் அறிவார்கள்.

காரைநகர் பிரதேச செயலகத்தில் 400 மில்லியன் ரூபா செலவில் காரைநகருக்கான விளையாட்டு மைதானம் அமையவுள்ளதும் 100 நாள் திட்டத்தின் கீழ் இப்பணி அரசினால் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதும் அதற்கென 200 பரப்பிற்கும் மேற்பட்ட காணி வளவு ஒன்றினை காரைநகர் பிரதேச செயலகத்திற்கு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அரசின் இத்திட்டத்தினை காரைநகர் மக்கள் பெற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகும்.

கடந்த வருட இறுதியில் இதுபற்றிய செய்தியினை அறிந்து கொண்ட கனடா-காரை கலாசார மன்றமும், பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கமும், சுவிஸ் காரை அபிவிருத்தி சங்கமும், பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கமும் ஒன்றிணைந்து முதற்கட்டமாக விற்பனைக்கு வந்த 30 பரப்பு காணியினை கொள்வனவு செய்து காரைநகர் பிரதேச செயலகத்திற்க வழங்குவது என தீர்மானித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் காரைநகர் ஆலங்கன்றடியில் சோலையான் விளையாட்டு திடலாக கடந்த காலங்களில் இருந்து வந்த பகுதியானது காணி உரிமையாளர் விற்பதற்காக முன்வந்ததையிட்டு 30 பரப்பு காணியினை 3 இலட்சம் ரூபாவிற்கு காரைநகர் அபிவிருத்தி சபையினர் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு காரைநகர் பிரதேச செயலரிடம் காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.சிவா மகேசன், செயலாளர் திரு. இ.திருப்புகழூர்சிங்கம் ஆகியோர் காரைநகர் பிரதேச செயலர் திருமதி தே.பாபு அவர்களிடம்; கடந்த மாதம் கையளிக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றம் இத்திட்டத்திற்கென காரைநகர் அபிவிருத்தி சபையினருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய்களை வழங்கியுள்ளது. பிரித்தானியா காரை நலன்புரிச் சங்மும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய்களை வழங்கியுள்ளது. மேற்கொண்டு சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய்களும், பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் 50,000 ரூபாய்களும் இத்திட்டத்திற்காக வழங்கவுள்ளது.

அத்துடன் கடந்த வாரம் கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் கோட்ட கல்வி அதிகாரி பணிமனைக்கு தளபாடம் வளங்கியுள்ளது. கோட்ட கல்வி அதிகாரி அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய 60,000 ரூபா பெறுமதியான கூட்டத்திற்கான மேசை தளபாடம் கடந்த வாரம் காரைநகர் அபிவிருத்தி சபை மூலம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வியாவில் சைவ வித்தியாலய அதிபர் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய பாடசாலையின் கிணற்றில் இருந்து நீர் தொட்டிக்கு நீர் இறைக்கும் மோட்டர் நீண்ட காலமாக பழுதான நிலையில் இருந்து வந்துள்ள காரணத்தினாலும் மலசல கூடத்திற்கு நீர் வசதி செய்து கொடுக்கும் பொருட்டு உடனடியாக 25,000 ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக எடுத்துவரும் முயற்சிகளை காரைநகர் பாடசாலை அதிபர்கள் வெகுவாக பாராட்டி வருவதுடன் கடந்த வருடமும் இவ்வருடமும் தொடர்ந்து அளித்து வரும் நிதியுதவிகள் மூலம் தமது பாடசாலைகள் பெற்று வரும் முன்னேற்றங்களையும் கனடா காரை கலாசார மன்றத்திற்கு பாராட்டுக்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 10.05.2015 அன்று நடைபெறவுள்ளதும் மன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நிதி செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் மன்ற அங்கத்தவர்களிற்கு கிடைக்கும் வகையில் அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

1 2 3 4