கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபைக் கூட்டம் போசகர் சபையினரின் பிரசன்னத்தில் நிறைவேறிய தீர்மானங்கள் யாழ்ற்றன் கல்லூரிக்கான நிதியுதவி ஐந்து லட்சம் ரூபாவாக அதிகரிப்பு மேலும் இரு பாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபைக் கூட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை(11.05.2014) அன்று மாலை 3:00 மணிக்கு ஸ்காபுரோ ஆதி அருள் நெறி மன்ற மண்டபத்தில் மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

உப-தலைவர், செயலாளர், பொருளாளர், உப-பொருளாளர் உட்பட்ட 13 நிர்வாக சபை உறுப்பினர்களும், போசகர் சபை உறுப்பினர்கள் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம், திரு.திருவாதர் தர்மராஜா, திரு.ரவி ரவீந்திரன், திரு.ஆறுமுகம் கோடீஸ்வரன் ஆகியோரும் கணக்காய்வாளர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதம்பிள்ளை ஆகியோருமாக 18 பேர் சமூகமளித்திருந்த இக்கூட்டத்தினை திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் கடவுள் வணக்கத்துடன் தொடக்கி வைத்தார்.
 
தலைவர் தனது உரையில் கடந்த ஏப்பிரல் 27.2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி மற்றும் ஒரு சில மன்ற உறுப்பினர்களும் தமக்குத் தொலைபேசி வாயிலாக தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்ததாகவும் நிர்வாக சபை உறுப்பினர் திரு.திருக்குமரன் கணேசன் தனது ஆட்சேபனையை எழுத்து மூலமாக போசகர் சபையினருக்கு அனுப்பியிருந்த காரணத்தினாலேயே இந்நிர்வாக சபைக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.

செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை சபையில் வாசிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தலைவர் ஏப்பிரல் 27 நிர்வாக சபைக் கூட்டம் தொடர்பான ஒவ்வொருவரினதும் கருத்தினையும் இது தொடர்பாக பொதுச்சபை கூட்டப்படவேண்டுமா இல்லையா என்பதனையும் ஒவ்வொரு நிர்வாக சபை உறுப்பினரையும் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

நிர்வாக சபை உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தமது கருத்தினைத் தெரிவிப்பதற்கு சமநேரம் வழங்கப்பட்டு செயலாளரினால் நேரக் கட்டுப்பாடு கண்காணிக்கப்பட்டது. அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் பொறுப்புடனும் சபையில் தெரிவித்திருந்தனர். இரு நிர்வாக சபை உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டப்பட வேண்டும் எனவும், ஒருவர் இன்றைய கூட்டத்தில் தீர்வு காணப்படமுடியாதவிடத்து பொதுச்சபையைக் கூட்டலாம் எனவும் ஏனைய அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களும் நிர்வாக சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து போசகர் சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது கருத்தினைத் தெரிவித்தனர். போசகர் திரு.ரவி ரவீந்திரன் கருத்துத் தெரிவிக்கும் போது ஏப்பிரல் 27 இல் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை தாம் வரவேற்பதாகவும் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தை தாம் ஒருபோதும் பாரபட்சமாக நோக்கியதில்லை எனவும் இதற்காக பொதுச் சபையைக் கூட்டுவதனால் மன்றத்தின் நற்பெயர் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

போசகர் திரு.ஆறுமுகம் கோடீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில் தாம் ஏப்பிரல் 27 இல் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன் எமது மாணவ சமூகமும் வளர வேண்டியுள்ளது எனவும் எனவே இத்திட்டம் இன்னமும் கிடைக்கப்பெறாத காரைநகரில் உள்ள உயர்நிலைப் பாடசாலைக்கு (High School) இதனைக் கிடைக்கச் செய்வது வரவேற்கத்தக்கது என்றும் தமது கருத்தினைத் தெரிவித்தார்.

போசகர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பொதுமக்கள் மன்றத்தின் மீது உள்ள நம்பிக்கையினாலேயே தமது நிதிப்பங்களிப்பினை வழங்கினார்கள் எனவும் எனவே அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மன்ற நிர்வாக சபைக்கே உண்டு எனவும் அந்த வகையில் மன்ற நிர்வாகம் ஏப்பிரல் 27 இல் எடுத்த தீர்மானத்தை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் காரைநகரில் உள்ள பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைக்கு என்ன தேவை என்று கோரிக்கை விடுக்கலாமே தவிர ஏனைய பாடசாலைகளுக்கு கிடைக்கும் வளங்களைத் தடை செய்யக் கூடாது எனவும் இப்பொழுதெல்லாம் எமது சுற்றாடல் மாசுபடுவதைவிட விரைவாக எமது மக்களின் மனங்கள் மாசு பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், அவர் தனது கருத்தில், இத்திட்டங்கள் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் அவ்வப்போது பாடசாலைகளில் இருந்து பெறப்பட வேண்டும் எனவும் இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பும் மன்ற நிர்வாகத்திற்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.

கணக்காய்வாளர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதம்பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், மன்ற நிர்வாக சபை ஏப்பிரல் 27இல் எடுத்த தீர்மானத்தைத் தாம் வரவேற்பதாகவும் இதற்காகப் பொதுச் சபையைக் கூட்டத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தலைவர் தனது பதிலுரையில் தேவைகள் இருக்கும்போது அவற்றை உரிய நேரத்தில் செய்யும்போதே அது அர்த்தமுள்ளதாக இருக்கும் எனவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவத்தை உணர்ச்சி பூர்வமாக எடுத்துக் காட்டியதுடன் ஏப்பிரல் 27 நிர்வாக சபையின் தீhமானத்தைப் பெரும்பாலானவர்கள் ஆதரிப்பதனால் பொதுச் சபையைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தமையைத் தொடர்ந்து உப-தலைவர் திரு.சங்கரப்பிள்ளை தவராஜா, நிர்வாக சபை உறுப்பினர் திரு.கணேசன் திருக்குமரன் ஆகியோர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஏப்.27 நிர்வாக சபைத் தீர்மானமானது மன்ற யாப்பின் விதிகளுக்கு அமைவாகவும் காரைநகரில் உள்ள பாடசாலைகளின் தேவைகளினைச் சீர்தூக்கிப் பார்த்துமே நிர்வாக சபை தீர்மானம் எடுத்திருப்பது துலாம்பரமாகத் தெரிகிறது. இதனை நிர்வாக சபையைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களும் போசகர் சபையைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதுடன் இந்த முடிவினை ஏற்காதவர்கள் யாப்பு ரீதியாக கணிப்பிடக் கூடியளவு விகிதாசாரத்தில் இல்லாதமையினால் ஏப்.27 நிர்வாக சபையின் தீர்மானமானது இன்றைய சபையின் முடிந்த முடிவாக அங்கீகரிக்கப்பட்டது.

தொடர்ந்து திட்டமிடல் போசகர் சபையின் இணைப்பாளராக திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்கள் சபையினால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர் திரு.கணேசன் திருக்குமரன் அவர்களின் கடிதத்தற்கு எழுத்து மூலமான பதில் போசகர் சபையினால் அனுப்பி வைக்கப்படும் என்று போசகர் சபை இணைப்பாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து பின்வரும் பாடசாலைகளுக்கான நிதி உதவிகளும் நிர்வாக சபையினால் தீர்மானிக்கப்பட்டன.

1) யாழ்ற்றன் கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடத்திற்கான கணனிகள் கொள்வனவுக்காக ரூ500,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2) வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை (அப்புத்துரை) ஆங்கில, கணனி கல்விக்கான தொண்டாசிரியரின் கொடுப்பனவு (ஜூன்2014 – டிச.2014) ரூ 36,000 வும் இணைப்பாடவிதான செயற்பாடு ரூ12,000வும் Printer Toner    ரூ13,500 வும், காகிதாதிகள் கொள்வனவு ரூ15,000 வும் மொத்தமாக ரூ 76,500 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

3) சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுக்காக ரூ156,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டம் மன்ற யாப்பு விதிகளுக்கு அமைய எப்பிரல் 27 நிர்வாக சபைத் தீர்மானத்திற்கு போசகர் சபையின் ஏகோபித்த ஆதரவுடன் மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்ததுடன் கனடா வாழ் காரை மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக மன்றம் முன்நோக்கி நகர்ந்து செல்வதனைக் கட்டியம் கூறுவதாக நிறைவடைந்தது.