ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

 

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம்

காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை

கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் 2வது வரலாற்றுப் படைப்பான ஒருத்தி 2 என்ற திரைப்படம் சென்ற மாதம் திரையிடப்பட்டு அதன் ஊடாக ஒரு தொகைப் பணம் திரட்டப்பட்டிருந்தது. காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் இல்லாது வறிய நோயாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொள்வதாக நோயாளர் நலன்புரிச் சங்கம் கனடா காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் திரைப்படக் காட்சி மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை இம் மன்றம் உதவியுள்ளது.

குறிப்பிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 13.06.2023 செவ்வாய்க்கிழமை பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் உப தலைவர் இக்கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றுகையில் இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கனடா-காரை கலாசார மன்றம் பல சந்தர்ப்பங்களிலும் உதவி செய்து வந்துள்ளதாகவும் சிறப்பாக 2006 ஆம் ஆண்டு ஆண், பெண் நோயாளர்கள் விடுதிகளிற்குத் தேவையான கட்டில்கள் ,மெத்தைகள் மற்றும் சக்கர நாற்காலிகளை உதவியதுடன் இரு ஆண்டுகளிற்கு முன்னர் P.S.சுதாகரனின் ஒருத்தி 1 திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்கி உதவப்பட்டதாகத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டது முதலாவது தொகுதி மருந்துகள் எனவும் அடுத்த தொகுதி மருந்துகள் தேவைப்படும்போது வழங்கி வைக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன் சிறந்தமுறையில் சேவையாற்றி வருகின்ற வைத்திய அதிகாரி Dr.செந்தூரனதும் ஏனைய மருத்துவர்கள்,அனைத்து வைத்தியசாலை அலுவலர்களதும் சேவையினையும், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினது சிறப்பான பணிகளையும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் பாராட்டி நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.நா.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன் கலைஞர் P.S.சுதாகரனும் உரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் மற்றும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தைச் சேர்ந்த திரு,வி.நாகேந்திரம், திரு. K.K.நாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.