கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அண்மையில் காரைநகருக்குச் சென்ற அவர் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்வையிட்டார்

மன்றத்தினால் நீண்ட காலமாக உதவு தொகை வழங்கப்பட்டு வரும் தாய் தந்தையரை இழந்த சிறுவனான நகுல்ராஜ் நக்கீரனின் இல்லத்திற்குச் சென்ற அவர் அவருடைய கல்வி முன்னேற்றம் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன் அவருக்கான உதவு தொகையை அதிகரித்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவருடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளரும் தற்போதைய உப செயலாளருமான க.நாகராசா அவர்களும் சென்றிருந்தார்.

மன்றத்தினால் கடந்த வருடங்களில் வீடு கட்டி வழங்கப்பட்ட சசிகுமார் தவமணி,இராஜகோபால் லதாராணி பயனாளிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் காரைநகரைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு மன்றத்தினால் மாதாந்தம் உதவு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஆனந்தராசா காயத்திரி(ஊவாப் பல்கலைக்கழகம்) செந்தில்நாதன் கமலேஸ்வரி (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்) ஆகியோரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் கேட்டறிந்த கொண்டார்.

மேலும் க.பொ.த சா/ த வகுப்புகள் நடைபெறும் காரைநகர் பாடசாலைகளுக்கு நேரில் சென்ற அவர் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பாடசாலைகளின் பௌதீக வழங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். மன்றத்தினால் வழங்கப்படும் நிலையான வைப்பு ஊடான வட்டிப் பணத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் பாடசாலை நிர்வாகங்களினால் பல்வேறு உதவிக் கோரிக்கைகளும் அவரிடம் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பாக நிர்வாக சபையுடன் ஆராய்ந்து சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் காரைநகர் பாடசாலைகளின் தேவைகள் குறைபாடுகள், கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் மன்றத்தினால் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகளை நடாத்துவதற்குரிய ஒழுங்ககளையும் மேற்கொண்டு தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கும் சென்று நிர்வாக சபையினருடன் சபை ஊடாக மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மாதாந்தம் பெற்றுக் கொள்ளும் கொடுப்பனவுகள் அனைவருக்கும் ஒரே அளவில் கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் குறைந்த கொடுப்பனவைப் பெறும் ஆசிரியர்களுக்கும் உரிய கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு ஆவண செய்யவேண்டும் எனவும் தலைவரினால் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்ட போது இது தொடர்பாக பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்துடன் இது தொடர்பாகக் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டது.