மயானங்கள்

 

 

மயானங்கள்

எஸ். கே. சதாசிவம்

1. சாம்பலோடை மயானம்மயான மண்டபம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

காரைநகர் கிராமசபையின் முதலாவது தலைவர் திரு. சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களால் எண்கோண வடிவில் இம்மண்டபம் 1922இல் கட்டப்பட்டது. திரு. கணபதிப்பிள்ளை தனது பரம்பரையின் ஏழு முதற் குடிமக்களின் முதற் பெயரை மண்டபத்தின் மரச்சட்டத்தில் பொறித்து வைத்துள்ளார். இம்மடம் இயற்கை நிகழ்வுகளால் பழுதடையாது பாதுகாப்பாக இன்றுவரை உள்ளது. நமது கிராமத்தின் தொல்லியல் அடையாளத்தின் சின்னமாக விளங்கும் இம்மண்டபத்தை உள்ளவாறு புனரமைத்துப் பேணுதல் கிராமத்தின் வரலாற்றை உறுதி செய்ய உதவும். இம்மயானம் சாம்பலோடை மயானம் மொட்டையர் சுடலை என்று அழைக்கப்படுகின்றது இப்பகுதிக்கு அன்றைய காலகட்டத்தில் திருவாலங்காடு என்று அழைக்கப்பட்டதாக செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

1960 களில் இம்மண்டபத்தின் புனரமைப்புப் பணிகளும் இன்று மயான வளாகத்தில் காணப்படுகின்ற ஆல், அரசு, மருத மரங்கள் நாட்டப்பட்டமையும் சம்பந்தர் கண்டியைச் சேர்ந்த திரு. நல்லதம்பி கனகநாயகம் அவர்களால் மருதடி இடைப்பிட்டி ஆகிய குறிச்சிகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அண்மைக் காலங்களில் காரைநகர் பிரதேச சபை இம்மயானத்தைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

 

 

 

2. ஆலங்கன்றடி மயானம்

இம்மயானத்தில் அழிந்த நிலையில் காணப்படுகின்ற மண்டபம் மலாய் நாட்டில் அரச பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. அம்பலவாணர் கந்தையா (குயிலர்) அவர்களால் கட்டப்பட்டது. இவர் வாழ்ந்த காலம் 1901 – 1968. தற்போது பாவனையில் உள்ள மடம் தங்கொட்டுவ பிரபல வர்த்தகர் திரு. இராமலிங்கம் மார்க்கண்டு அவர்களால் 1980 களில் கட்டப்பட்டது. இம்மயானத்தில் அமைந்துள்ள எரிகொட்டகை திரு. கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் ஞாபகார்த்தமாக 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

 

 

3. நீலகிரி மயானம்

காரைநகர் கடற்படை தளத்தின் பாதுகாப்பிற்காகக் காணிகள் சுவீகரிக்கப்பட்ட பொழுது நீலகிரி மயானமும் உள்ளடக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் நீலகிரி மயானம் மீண்டும் புதிய இடத்தில் செயற்பட ஆரம்பித்தது. இம்மயானத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் வியாவில் ஐயனார் தேவஸ்தான அறங்காவலர் முன்னின்று செயற்பட்டார். இராமுப்பிள்ளை மண்டபம் அன்னாரின் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. காரை நலன்புரிச் சங்கம் – லண்டன் இம்மயான அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்கியது.

 

 

 

4. தில்லை மயானம்

1920 களின் பிற்பகுதியில் தில்லை மயானம் பாவனைக்கு வந்ததாக களபூமியில் வாழ்கின்ற சிரேஸ்ட பிரஜைகள் தெரிவிக்கின்றனர். தில்லை செடிகள் நிறைந்து காணப்பட்டமையால் தில்லை சுடலை என அழைக்கப்படுகின்றது. திரு. தி. மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் இளைப்பாறு மண்டபம், கிணறு, வரவேற்பு வளைவு என்பன 2003 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. காரை நலன்புரிச் சங்கம் – லண்டன் நிதி உதவியுடன் எரிகொட்டகை அமைத்து தகன மேடை, கிணறு என்பன அபிவிருத்தி செய்யப்பட்டது. மயானத்தின் எல்லைகள் எல்லைப்படுத்தப்பட்டு அத்திவாரம் இட்டு கட்டப்பட்டது.