பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இசைக் கச்சேரியுடன் கூடிய கலைஞர்கள் கௌரவிப்பு வைபவம் கடந்த சனிக்கிழமை 20/09/2014 பிற்பகல் 06:00 மணியளவில் KINGSBURY HIGH SCHOOL, PRINCES AVE , LONDON எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இனிதே நிறைவுற்றது.

         எமது ஊரில் இருந்து வருகை தந்திருந்த தவில் வித்துவான் NK வீராச்சாமி அவர்களின் மகன் தவில் வித்துவான் கண்ணன், மறைந்த நாதஸ்வர வித்துவான் NK கணேஷன் அவர்களின் மகன் தவில் வித்துவான் செந்தூரன், யாழ் மண்ணைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவான் கார்த்தீபன் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் மணிகண்டன் ஆகியோரின் தவில் நாதஸ்வர கச்சேரி இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் வருகை தந்திருந்த 200 இக்கும் மேற்பட்ட லண்டன் வாழ் காரை இசைப் பிரியர்களை லயிக்க வைத்திருந்தது. 
திருமதி அமுதா கருணாகரன், திருமதி வசந்தி யோகநாதன் ஆகியோர்களின் மங்கள விளக்கேற்றலுடனும், திருமதி லோகேஸ்வரி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் தேவாரத்துடனும் நிகழ்வு இனிதே ஆரம்பித்தது.
தலைவர் ப.தவராஜா கலைஞர்களை அறிமுகப்படுத்தி வைத்து இசைக் கச்சேரியை ஆரம்பித்து வைத்தார். கச்சேரி இடைவேளையின்போது கலைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு தங்கப் பதக்கங்களுடன் பொன்னாடை போர்த்தி, அவர்களுக்கான ரொக்கத் தொகையுடன் கௌரவிக்கப்பட்டனர். ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்தா அவர்கள் கலைஞர்களை பாராட்டியதுடன், காரை மண்ணுக்கும் இந்த தவில் நாதஸ்வர இசைக்குமான தொன்றுதொட்ட உறவைபற்றி  சிறிது நேரம் உரையாற்றினார். 
கச்சேரி இறுதியில் மண்டப நேரம் காலவதியைருந்த போதிலும் வருகை தந்திருந்த நாதஸ்வர இசைப்பிரியர்கள் தங்கள் விருப்பப் பாடல்களை ஒருவர் மாறி ஒருவராக ஆர்வத்துடன் சிட்டைகளை எழுதி மேடைக்கு அனுப்பிகொண்டிருந்தமை கலைஞர்களையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. இறுதியில் தலைவர் கலைஞர்களுக்கும்,நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைத்து மக்களுக்கும், நிகழ்ச்சியை ஒருங்கமைத்து தந்த ''ஆனந்தம் CREATIONS '' பிரேம் அவர்களுக்கும், நிகழ்வை திறம்பட நடாத்தி முடிப்பதற்கு அனுசரணை வழங்கியிருந்த அனைத்து பெருந்தகைகளுக்கும் நன்றியை தெரிவித்திருந்தார் .