முத்தமிழ் விழாவில் கல்விச் சமூகத்தினருக்கு மதிப்பளிப்பு.

முத்தமிழ்  விழாவில்  கல்விச் சமூகத்தினருக்கு மதிப்பளிப்பு.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச் சேவையும், அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகமும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா கடந்த 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணியளவில் Markthalle,Sägegasse 19, 3400 Burgdorf, Bern  மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முத்தமிழ் விழாவுக்கு பிரதமவிருந்தினராக பேராசிரியர் இலக்கிய கலாநிதி அருணாசலம் சண்முகதாஸ் (தகைசார் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்மகதாஸ் (முன்னாள் ஆய்வுநிலைப் பேராசிரியர் கக்சுயின் பல்கலைக்கழகம், தோக்கியோ, யப்பான்) ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக  தாயகம், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து உள்ள ஆலய குருமார்களும், கல்விச் சமூகமும், மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் என கலந்து சிறப்பித்தனர்.

இயல்,இசை, நாடகம் கலந்த முத்தமிழ்விழாவில் மங்களவிளக்கேற்றல், தேவாரம், தமிழ்தாய் வாழ்த்து, அகவணக்கம், ஆசியுரைகள், சிறப்பு சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள் என பிரமாண்டமாக நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய ஐரோப்பா என வர்ணிக்கப்படும் சுவர்ணபூமியாம் சுவிற்சர்லாந்தில் நூற்றுக்கு மேற்பட்ட மொழி பேசுகின்ற வெளிநாட்டவர்கள்  வாழ்விட உரிமைபெற்று வாழ்ந்து வருகின்றனர். சுவிற்சர்லாந்தின் அரசகரும மொழிக்கு அடுத்ததாக அவரவர் தாய்மொழிக் கல்விக்கு உள் நாட்டு கல்விசார் அரச கட்டமைப்பு ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும் வழங்கிவருவது மிகையல்ல.

சுவிற்சர்லாந்தில் வாழ்கின்ற இளையோருக்கான தமிழ் எழுத்து, பேச்சாற்றலை வளர்பதில்  தமிழ்க் கல்விச் சேவை கடந்த 23ஆண்டுகளுக்கு மேலாக எமது தாயகத்து மாணவர்களுக்கு இணையான தமிழ் கற்கை நெறியை போதிப்பதில் அளப்பெரிய சேவையும், பணியாற்றிவருகின்றமை பாரட்டுதலுக்குரியது.

தமிழ்மொழிக் கல்வியில் 256பேர்கள் பத்தாம், 98பேர்கள் பன்னீரண்டாம் ஆண்டு நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு, பத்து, இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் பணி நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள்,

ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தில் கலைக்கற்கைகளில் ஆற்;றுகைத்தரம் நிறைவு செய்தா மாணவர்களுக்கான மதிப்பளிப்பு, பத்து, இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் பணி நிறைவுசெய்த தமிழ்க்கலை ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு, 12பேர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக கற்கைநெறிகளின் அறிமுகமும் தேர்வுச் சான்றிதழ்கள் வழங்கலும், விழாமலர் வெளியீடு, ஒவியப்போட்டி பரிசளிப்பு, கலை நிகழ்வுகள், ஒவியக் கண்காட்சி, தமிழ்நூல்கள் விற்பனை, சிறுவர்களுக்கான  இறுவெட்டு வெளியீடு,  தமிழர் பண்பாட்டு உணவுகள் என விழா மண்டபத்தை அலங்கரித்து நின்றன. முத்தமிழ் விழா இரவு 21.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச் சேவையும், அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகமும் இணைந்து நடாத்திய முத்தமிழ்விழாவினை சிறப்பாக ஒழுங்கமைத்த நிர்வாகத்தினருக்கும், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் அனைவருக்கும் நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்.

நிகழ்வுகளின் நிழற்படங்களை கீழே காணலாம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழிஇ கல்விஇ கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

03.10.2018