கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவி காரைநகர் பாடசாலைகளிற்கு சென்றடைந்தது!

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் பாடசாலைகளிற்கு உடனடி கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதற்கட்டமாக நிதியுதவி அளிக்க முன்வந்ததையிட்டு காரைநகர் பாடசாலைகளிற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
 யாழ்ற்ரன் கல்லூரி  தகவல்  தொழில்  நுட்ப  ஆய்வு கூடத்திற்கு  கணனிகள் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட 5  இலட்சம் ரூபா நிதி காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் மேலதிகமாக  10  கணணிகள் பெறப்பட்டுள்ளதாகவும்,  இதன் மூலம் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இலகுவாக கணணி கற்கை நெறிகளை கற்பிக்க முடியும் என்றும் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் அறியத்தந்துள்ளார்.
. ஊரி அ.மி.த.க பாடசாலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கற்றலில் இடர்படும் மாணவர்களிற்கு பரிகார கற்றல் செயற்பாட்டிற்காகவும், கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காகவும் ஒரு வருட செலவாக  2 இலட்சத்து பதின்னான்காயிரம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது, முதற்கட்டமாக அந்நிதியில் இருந்து ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையினர் பாடசாலைக்கு நேரடியாக சென்று அதிபர் திரு.இ.சிறிகரன் அவர்களிடம் காசோலையை கையளித்தனர்.
 சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் உதவி ஆசிரியர்கள் மற்றும் மேலதிக ஆங்கில கல்வி ஆசிரியருக்காகவும் வருடம் ஒன்றுக்கு தேவையான 156,000 ரூபாய்கள் வழங்குவதாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்நிதியில் இருந்து 75,000 ரூபாய்கள் அதிபர் திரு.அ.சாந்தகுமார் அவர்களிடம் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
 வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி) மாணவர்களின் மேலதிக கணணி கல்வி, மற்றும் ஆங்கில கல்விக்காக 98,000 ரூபாய்கள் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அந்நிதியில் இருந்து 50,000 ரூபாய்கள் பாடசாலை அதிபர் செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்களிடம் காரைநகர் அபிவிருத்தி சபையினர் வழங்கியுள்ளனர்.
 வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை(அப்புத்துரை) மாணவர்களின் மேலதிக கணணி கல்வி, மற்றும் ஆங்கில கல்வி தொண்டாசிரியர் சம்பள கொடுப்பனவுகளிற்காகவும், கற்றல் உபகரண கொள்வனவிற்காகவும் 76,000 ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிதியில் இருந்து 50,000 ரூபாய்கள் அதிபர் திரு.க.நேத்திரானந்தனிடம் காரைநகர் அபிவிருத்தி சபையினர் வழங்கியுள்ளனர்.
மேற்கொண்டு மற்றைய பாடசாலைகளிற்கும் ஒதுக்கப்பட்ட நிதியுதவிகள் காலக்கிரமத்தில் கொடுத்து கற்றல் தேவைகளை ஆரம்பித்து வைப்பதற்கு காரைநகர் அபிவிருத்தி சபையினர் மேற்கொண்டு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
 கனடா காரை கலாச்சார மன்றத்தின் பாடசாலைகளிற்கான நிதியுதவிகளை பாடசாலை அதிபர்களிடம் காரைநகர் அபிவிருத்தி சபையினரால் காசோலைகள் மூலம் கையளிக்கப்படுவதனை கீழ் வரும் படங்களில் காணலாம்.
 1 2 3 4 5