காரைநகர் இந்துக் கல்லூரிக்கு விரைவில் தொழில்நுட்ப பீடம்

 

காரைநகர் இந்துக் கல்லூரிக்கு விரைவில் தொழில்நுட்ப பீடம்

காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் ஒன்றினை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்  ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.

சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியம் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்குரிய பணிகள் முன்னெடுப்பது தாமதமாகி வருகின்றது.

இதனால் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் பெருமளவு மாணவர்கள் தொழில்நுட்பக் கற்கைக்காக யாழ் நகரப் பாடசாலைகளுக்கே செல்லவேண்டி உள்ளது.எனவே காரைநகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விரைவில் தொழில் நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இந்த மாணவர்களை இணைத்து கற்பிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

எனினும் இப் பாடசாலைக்கு மாணவர்கள் இரு பஸ்களில் சென்றே கற்கமுடியும் இது மாணவர்களுக்குக் கடினமானதாக அமையும் எனச் சுட்டிக்காட்டியதை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

அத்துடன் காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.

வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்றி இருப்பதுடன் வீதிகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பில் மேலிடத்தில் ஆராயப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.