காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு

 

காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து கடற்படையினரின் முகாமை அகற்ற மன்றமும் ஈடுபாடு

காரைநகர் மக்களின் ஒப்பற்ற  உயர் நிலைக்கு  இந்துக்  கல்லூரியின் பணி  அருணாச்சல உபாத்தியாயர்  காலத்திலிருந்து இன்றுவரை அளப்பரியது. பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மடத்துக்கரை அம்மன் அருளாட்சியும், கல்லூரி மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தாயின் அருட்கடாட்ச்சமும் மாணவர்களை தொடர்ந்து  அதிஉன்னத நிலைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு  தீவக வலயத்தில் சிறந்த பாடசாலையாக சகல துறைகளில் திகழ்வதும்  மற்றும்  மாணவர்களின்  சிறந்த  பெறுபேறுகளும் சான்று பகர்கின்றன. இக்கல்லூரிக்கு ஊரவர்கள் மட்டுமல்லாது  மூளாய், அராலி, சுழிபுரம், வட்டுக்கோட்டை  போன்ற அயற்பிரசேதங்களில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் படித்தும், படிப்பித்தும்  பயன்பெறுகின்ற சிறப்பும் அனைவரும் அறிந்ததே.

மண்ணின் மகத்தான பாடசாலை அண்மித்த பாடசாலை திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, அபிவிருத்தி பணிகள் தொடங்ககூடிய  நிலையில்இருந்தன.  இத்தகைய சூழ் நிலையில் பாடசாலை வளாகத்தில் கடற்படையினர்  அத்துமீறி  முகாமிட்டுருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  முகாமை  அகற்றி கல்விசார் சமூகத்தினதும்,  ஊரவர்கள் அனைவரதும் பீதியற்ற  நிலைமையை  உருவாக்க பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தவிர்க்கமுடியாததொன்றாகும்.  மன்றத்தின்  தலைவரும் கடற்படையினரின் முகாமை அகற்றுவதற்காக   தொடர்ச்சியாக பிரதேச  செயலாளர்,  பாடசாலை நிர்வாகம் மற்றும் உரிய அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்புகளை பேணி வருகின்றார்.  மேற்கொண்டு விரைவில் அரச அதிபர், மாவட்ட  கட்டளை அதிகாரி, பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கும் மகஜர் அனுப்பப்படவுள்ளது.