காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். பாடசாலையை சூழவுள்ள பொருத்தமான காணிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பாடசாலைச் சமூகம் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. மடத்துக்கரை அம்பாள் ஆலயத்திற்கு எதிர்ப்புறமாக பிரதான வீதியுடன் அமைந்துள்ள இரண்டு பரப்புக் காணியை சென்ற ஆண்டு கொள்வனவு செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியிருந்தது. இக்காணியுடன்; இணைந்த மூன்று பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை உதவியிருந்தது. பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் பிரதான வீதியுடன் அமைந்திருக்கும் ஐந்தரைப் பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பெரிய பிரித்தானியா-காரை நலன் புரிச் சங்கத்தினர் உதவியிருந்தனர். குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டம் எமது கல்லூரிக்குக் கிடைத்ததில் முன்னைநாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் பங்களிப்பு பாராட்டப்படக்கூடியது என்பதுடன் இத்திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது முதலாக அதற்குரிய காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு மேற்குறித்த காணிகள் பாடசாலைக்கு கிடைக்கச் செய்திருந்தார். காணிக் கொள்வனவு தொடர்பில் வாசுகி தவபாலன் விட்டுச் சென்ற பணியினை தற்போதய அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அக்கறையோடு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

தற்போது ஏழு பரப்பு பரப்பளவுடைய மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் சென்ற வாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காணிக்குரிய பெறுமதி பதினேழரை இலட்சம் ரூபாவும் முத்திரைச் செலவு அறுபத்தொன்பதாயிரம் ரூபாவும் ஆக மொத்தம் பதினெட்டு இலட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது. வலந்தலைச் சந்திக்கு அண்மையாக மேற்கு பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக இக்காணி; அமைந்துள்ளது.

பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயலாற்றி வருகின்ற பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவரும் பிரபல தொழிலதிபருமான திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரம் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அதிபருக்கும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்திற்கும் உறுதுணையாகவிருந்து செயற்பட்டு வருபவர். அத்துடன் கொள்முதல் செய்யப்பட்ட காணிகளை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் துப்புரவு செய்வதற்கு தனது பக்கோ இயந்திரத்தின் சேவையை இலவசமாக வழங்கி உதவி வருகின்றார். இவரது பெரு முயற்சியே குறிப்பிட்ட ஏழு பரப்புக் காணியையும் பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு உதவியுள்ளது.

இக்காணிக்குரிய சட்ட ஆவணத்தினை (உறுதி) பாடசாலையின் பெயரில் எழுதிய பணி கல்லூரியின் பழைய மாணவியும் சட்டத்தரணியுமாகிய திருமதி சாந்தி சிவபாதம் அவர்களின் யாழ்ப்பாணத்திலுள்ள பணிமனையில் இடம்பெற்றிருந்த சமயம் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், திரு.நேசேந்திரம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி, தாய்ச் சங்கத்தின் செயலாளர் திரு.நடராசா பாரதி, பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், உதவிச் செயலாளர் திரு.நாகராசா, நிர்வாக சபை உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அகிலன், பழைய மாணவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் ஆகியோருடன் காணி உரிமையாளர்களினால் சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டவரும் சமூகமளித்திருந்தனர். சட்டத்தரணி திருமதி சாந்தி சிவபாதம் காணிக்குரிய சட்ட ஆவணங்களை(உறுதி) எழுதும் பணியை இலவசமாகவே செய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணிக்குரிய பெறுமதியின் கொடுப்பனவிற்கான காசோலையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் திரு.கனகசபாபதி காணிக்குரிய சட்டரீதியான அதிகாரத்தினை கொண்டுள்ளவரிடம் வழங்குவதையும் சட்டத்தரணியின் காரியாலயத்தில் சமூகமளித்திருந்த அதிபரையும் ஏனையோரையும் கீழேயுள்ள படங்களில் பார்க்கலாம்.