காரைநகர் முன்னாள் பிரபல வர்த்தகர் அமரர் S.P சுப்பிரமணியம் அவர்களின் (1916-2016) நூறாவது பிறந்த தின நினைவாக யாழ்ற்ரன் கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

                         காரைநகர் முன்னாள் பிரபல வர்த்தகர்

              அமரர் S.P சுப்பிரமணியம் அவர்களின் (1916-2016) 

                               நூறாவது பிறந்த தின நினைவாக 

                                யாழ்ற்ரன் கல்லூரி  நூலகத்திற்கு

                                          நூல்கள் அன்பளிப்பு


கனடாவில் வசிக்கும் அவரது மகன் திரு. அரிகரன் சுப்பிரமணியம் அவர்களால் யாழ்ற்ரன் கல்லூரி நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் கொள்வனவு செய்வதற்கு நன்கொடையாக ரூபா 25000 கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களில் குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்விக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற முதுமொழிக்கிணங்க புத்தகங்கள் வாங்க முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு நூலகம் ஒரு துணை ஆசான் என்ற வகையில் கனடாவிலிருந்து அன்பர் திரு.அரிகரன் சுப்பிரமணியம் அவர்;கள் (வலந்தலை, காரைநகர்) செய்த இவ்வுதவிக்கு கல்லூரி  சார்பாகத் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் கல்லூரி அதிபர் தெரிவிக்கின்றார். 

                                           

        பிரபல வர்த்தகர் அமரர் S.P சுப்பிரமணியம் அவர்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு

sps

 
          1960 களிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலம் காரைநகர் வலந்தலை ஆஸ்பத்திரிக்கு முன்னால் புத்தகங்கள், காகிதாதிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிமேந்து, இரும்புப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபார நிலையமொன்றை திறம்பட நடாத்தி வந்த பெருந்தகை ஆவார். அந்தக் காலத்தில் மாணவர்கள் பாடசாலைப் புத்தகங்களினை பணம் கொடுத்து வாங்க வேண்டும். சகல பாடசாலைப் புத்தகங்களும் ஆரம்ப வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை அவர் விற்பனை செய்தார். அத்துடன் மாணவர்களுக்கு ஏனைய சகல பாடசாலை உபகரணப் பொருட்கள் கூட மலிவு விலையில் கிடைக்கும். பென்சில்கள் "S.P.Supramaniyam Karainagar" என்ற விலாசமிடப்பட்டு  நல்ல முதல்த்தரமான பென்சில்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு காலத்தில் "மணியம் கடை" என்று காரைநகர் மக்களால் அழைத்து வந்த வியாபார நிலையம் காரைநகரில்; ஒரு தனி சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொண்டது. அமரர் சுப்பிரமணியம் அவர்கள் எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகிய ஒரு சான்றாண்மை மிக்க பெரியவர் ஆவார். அவரது 100வது பிறந்த தினம் இன்றாகும்.  இவ்வாண்டு காரைநகர் பெரியவர் இருவரின் 100வது பிறந்த தின நினைவுகள் நினைவு கூறப்பட்டமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒருவர் அமரர் தத்துவ கலாநிதி ஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் ஆவார். மற்றையவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் ஆவார். இவர்கள் வரிசையில் 08/ 10/ 1916 இல் பிறந்த அமரர் S.P சுப்பிரமணியம் அவர்களது 100வது பிறந்தநாள் இன்று நினைவு கூறப்படுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.