சிதம்பரத்தின் சிகரம் சாய்ந்தது. காரை மண்ணின் வசிட்ட மாமுனி சிவபதம்.

Vythees4

சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி, கலாநிதி சிவஷிறி கணபதீஸ்வரர் வைத்தீஸ்வரர் அவர்களின் சொரூபசமாதி அடைந்த செய்தி உலகம் வாழ் அனைத்துசைவ  தமிழ் நல்உள்ளங்களை ஒரு கணம் தவிக்க விட்டுள்ளது. சனி அதிகாலை ஐயாஅவர்களின் சமாதி அடைந்த செய்தி கேட்டதும் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவரின் ஆழ்மனம்  ஒரு கணம் ஈழத்து சிதம்பரத்தை வலமிட்டது.

               15ம்  நூற்றாண்டின் குளக்கோட்டு மன்னன் ஆட்சிக் காலப்பகுதியில் உத்தரகோசமங்கையில் இருந்து திண்ணைபுரத்தான் திருப்பாதம் வந்தவர்கள்தான் மேதகு ஐயா அவர்களின் முதற்பரம்பரையினர். இவரது தந்தையார் கணபதீஸ்வரகுருக்கள் 24வது பரம்பரை. 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும். 19ம் நூற்றாண்டின் முற்காலப் பகுதியில் வாழ்ந்தவர் தான் இவரது தந்தையார். ஆண்டி கேணி ஐயனார்
 எவ்வாறு அமர்ந்திருக்கின்ராரோ  அதேபோல் தான் இவரது தந்தையாரும் குந்தி இருப்பார், இவரது காலபகுதியில் எம் மண்ணில் வாழ்ந்த பெரியவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

                             உத்தரகோசமங்கையில் இருந்து வந்த இவர்கள் வழித்தோன்றலின் 25வதும் இறுதியானதுமான பரம்பரைதான்(ஈழத்து சிவனுக்கான சிவத்தொண்டு ) கலாநிதி சிவஷிறி க.வைத்தீஸ்வரர் குருக்கள். இவருக்கு தியாகராஜா, இரட்ணசபாபதி எனும் இரு சகோதரர்கள், நீலாம்பாள்(ஈஸ்வர குருக்கள் அவர்களின் தாயார் -தற்போதைய பிரதம குரு, ஈழத்து சிதம்பரம்), சௌந்தராம்பாள் எனும் இரு சகோதரிகள்.
                                                      திண்ணைபுரத்தான் தினசரி திருத்தொண்டை இவரது தமையனார் தியாகராஜா குருக்கள் அவர்கள் கவனிதுக்கொண்டபோதும் அவருக்கு சிவத்தொண்டில் உறுதுணை நிற்பார். இது தவிந்த நேரங்களில் சைவத்தை எப்படி பேணலாம், தமிழை எப்படி வளர்க்கலாம் என்ற முற்போக்கு சிந்தனை கொண்டவர்.இறுதி முச்சு வரையும் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற சிந்தனை கொண்டவர். எமது
 திண்ணைபுரத்தானுக்கு ''ஈழத்து சிதம்பரம்'' எனும் பெயர் பெற்றுத் தந்தவர், மணிவாசகர் சபை ஆரம்ப காரணகர்த்தா, சைவமகா சபையின் பொன்விழாமலர் நூலாசிரியர் , FXC நடராஜாஅவர்களின் காரை மான்மியம் வெளிவர காரணமாய் இருந்தவர் இப்படி பல நூல்கள் தோன்ற காரண கர்த்தாவாக இருந்தவர்.  இன்றுவரை (2015) எமது மண்ணில் வெளிவந்த அதிகூடிய நூல்களில் இவரது எழுத்து வன்மை மிளிர்கின்றது.

                                    தியாகராஜா குருக்கள் என்றால் ஒற்றைதிருக்கல் கூடார மாட்டு வண்டில் கண்முன் நிற்கின்றது. வைத்தீஸ்வர குருக்கள் என்றால் கரியர் பூட்டிய Raleigh சைக்கிளிலில் தோளில்உள்ள சால்வைத் துண்டும் பூனூலும் பறக்க , அவரும் ஊசிபோல் ஊடுருவிச் செல்வது எம்  கண்திரையில் விம்பமாகிவிட்டது.

                                                             இறைவன் படைப்பில் எல்லா ஆத்மாக்களும் அதனதன் கறும வினைகளுக்கேற்ப பூலோக வாழ்வினை தொடங்குகின்றன, ஒருசில புண்ணிய ஆத்மாக்களை மட்டுமே இறைவன் தன்னுடனேயே வைத்திருக்கின்றான். மாணிக்கவாசகர் கூறியதுபோல் ''சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாழ் வணங்கி '' என்ற சிவபுராணத்திற்கு இணங்க , சிவன் அருள் எங்கள் சிவஷிறி வைத்தீஸ்வர
 குருக்கள் அவர்களுக்கு பூரணமாக இருந்தபடியால் ஐயா அவர்கள் வயதில் மட்டுமல்ல, தன்    வாழ்க்கையிலும் 100 இக்கு 100 பெற்று சிவனிடம் சொரூபமாகிவிட்டார்.

                         யாழ் வலம்புரி பத்திரிகையில் ஆசிரியர் தலையங்க பகுதியில் (கடந்த ஞாயிற்றுக்கிழமை- 26/04/2015) ஐயா அவர்களின் மறைவையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரையில் '' காரைநகரின் வசிட்ட மாமுனிவர்'' என்று வருணித்திருக்கின்றார்கள்.

           எங்கள் மண்ணின் வைத்தீஸ்வரர் எனும் வசிட்டரின் மறைவு எமக்கு மட்டுமல்ல சைவத்துக்கும் எமது மொழி தமிழுக்கும் ஈடுபெறா இழப்பாகும். இருந்தும் நல்ல ஆத்மாக்கள் என்றென்றும் எங்களை வழிநடத்தும்.

           அன்னாரது ஆத்மா சாந்தியடைய, பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ''ஆத்மா சாந்தி பிரார்த்தனை கூட்டம்'' ஒன்றை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(03/05/2015) அன்று பிற்பகல் 05:00 மணியளவில் Hanuman Community Center , Marsh Drive , West Hendon , NW9 7QE , எனும் மண்டபத்தில் ஒழுங்கமைப்பு செய்துள்ளது. பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவைரையும் கலந்து கொண்டு , எமது வசிட்ட மாமுனியின் நல்லாத்மா சிவனடி சேர
 பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:-

நாதன்- 07944 232014

குமார்:- 07951 950843

நன்றி
 வணக்கம்.

நிர்வாகம்,
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் .