ஈழத் தமிழ் மண்ணின் வசிட்ட மாமுனிவரை இழந்தோம்

Vythees4

சிவபூமி என்று போற்றப்படும் ஈழத் தமிழ் மண்ணில் வசிட்ட மாமுனிவராக நடமாடிய காரைநகர் தந்த மூதறிஞர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் தேகவியோகம் அடைந்தமை சைவத் தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகும்.
நூறு ஆண்டுகள் எங்கள் மண்ணில் வாழ்ந்த வைத்தீஸ்வரக் குருக்கள், எங்களின் விலை மதிப்பிட முடியாத அரும்பெரும் சொத்து.

காஞ்சிப் பெரியவர் இன்றில்லை என்ற குறையை எங்கள் வைத்தீஸ்வரக் குருக்களே நிவர்த்தி செய்தார் என்று கூறுமளவிற்கு அவரின் அறிவு ஞானமும் மெய்ஞ்ஞானமும் எங்களை ஆற்றுப்படுத்தின.

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் தன்னை அர்ப்பணித்த வைத்தீஸ் வரக் குருக்கள்  காரைநகர் மணிவாசகர் சபையை ஸ்தாபிதம் செய்து, திருவாசகம் எனும் தேனின் சுவையை ஆன்மாக்கள் நுகரும் வண்ணம் அரும் பணியாற்றினார்.

 ஈழத்துச் சிதம்பர புராணம் , ஆண்டிக்கேணி ஐயனார் புராணம் ஆகிய தல புராணங்களின் பதிப் பாசிரியராக இருந்ததோடு தமிழுக்குப் பெருமை தரக்கூடிய அரிய பல நூல்களை எழுதியும் பதிப் பித்தும் அவற்றைப் பாதுகாத்தும் தந்த பெருமை வைத்தீஸ்வரக் குருக்களையே சாரும்.

எங்கள் மண்ணில் வாழ்ந்த அந்தணச் சிரேஷ்ட ரான வைத்தீஸ்வரக் குருக்கள் சமஸ்கிருதத்திற்கு அப்பால், தமிழ் வேதம் என்று போற்றப்படும் தேவா ரத் திருமுறைகளுக்கு கொடுத்த முன்னுரிமை தமிழ் மீது அவர் கொண்ட பற்றுதலின் வெளிப்பாடாகும்.

தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகள் எங்கள் ஆத்மஞானத்திற்கு உகந்த நல்மருந்து என் பதை வெளிப்படுத்தியது மட்டுமன்றி தமிழ் வேத த்தை தன் வாழ்நாள் முழுவதிலும் ஓதி மகிழ்ந்து சைவ உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
எங்கள் மண்ணில் நடமாடிய ஞானகுரு தவத்திரு யோகர் சுவாமிகளின்  ஆசியை,  தரி சனத்தை பெற்ற வைத்தீஸ்வரக் குருக்கள் யோகர் சுவாமிகளை காணத் தவறியவர்களுக்கு இவரே தவயோகர் சுவாமிகளின் சாயலாக எங்கள் மண்ணில் வலம் வந்தார்.

சைவத்தையும் தமிழையும் தன் கண்ணெனப் போற்றிய வைத்தீஸ்வரக் குருக்கள், எளிமையான வர், உயர்ந்த பண்பாளர், அறிவு ஞானத்தை மற்றை யவர்களுக்கு வாரிவழங்கிய வள்ளல் என்பவற் றுக்கு அப்பால் எல்லோரையும் மதிக்கின்ற மிக உன்னதமான மனித நேயம் மிக்க மகான்.

எங்கள் மண்ணில் வாழ்ந்து மக்கள் சேவை க்கும் ஆன்மிகப் பணிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு சிவத்தமிழ்ச் செல்வி என்று பட்டம் சூட்டி அவரை சிவத்தமிழ்ச் செல்வி என அடையாளப்படுத்திய பெருமை வைத்தீஸ்வரக் குருக்களையே சாரும்.
மற்றவர்களையும் பெருமைப்படுத்துவதன் மூலம் மனித இனம் மண்ணில் நல்லவண்ணம் வாழ முடியும் என்பதை தன் வாழ்வியல் ஊடாக எமக்கெல்லாம் காட்டிச்சென்ற வைத்தீஸ்வரக் குருக்கள் ஆயிரம் பிறை கண்ட ஆத்ம குருவாக; தத்துவஞானியாக; மூதறிஞராக; எங்கள் மண் ணின் வசிட்டமா முனிவராக  வாழ்ந்தார்.
அவரின் மறைவு எம்மண்ணிற்கு பேரிழப் பாயினும் அந்தப் புண்ணிய ஆத்மா என்றும் எங்களை ஆசீர்வதிக்கும் என்பது திண்ணம்.
 
(யாழ்ப்பாணத்தில் வெளிவரும் வலம்புரி நாளிதழின்  நேற்றைய ஆசிரிய தலையங்கம்)