கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை. (Sept 24, 2022 –  April 27, 2024)

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

செயற்பாட்டு அறிக்கை

Sept 24, 2022 –  April 27, 2024

  • கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 அன்று முற்பகல் 10.00 மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் மன்றத்தின் உப- தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
  • கனடா காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றது.
  • கனடா காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் 2022ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதியும் 2023ம் ஆண்டு செப்டெம்பர்  17ம் திகதியும் நடாத்தப்பட்டன.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டு தோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா 2022ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதியும் 2023ம் ஆண்டு டிசம்பர் 02ம் திகதியும் இரு கலை விழாக்களும் தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்றது. 2022ம் ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற கலை விழாவில் தமிழ்மொழித் திறன் போட்டியின் ஓர் அங்கமாக நடாத்தப்பட்டிருந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி முதலாவது இடத்தினைப் பெற்ற சிறியோர் மற்றும் இளையோரின் பேச்சுக்கள் நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெற்றிருந்தன, அதேவேளையில் தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆறுபிரிவுகளிலும் முதலாம் இடத்தினைப்பெற்ற வெற்றியாளர்களிற்கு தங்கப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் இரண்டாம் மூன்றாம் இடத்தினைப் பெற்ற வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் அரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.காரை மண்ணின் சிறார்களும் இளையோரும் மூத்த கலைஞர்களும் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

2023ம் ஆண்டு நடைபெற்ற கலை விழா காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழாவாக  நடைபெற்றதோடு காரைச் சிறார்களும் இளையோரும் தமது கலைப் படைப்புக்களினால் சபையோரை கட்டிப்போட்டிருந்த விழா அமையப்பெற்றதும். அத்தோடு காரை.மண்ணின் பெருமையினையும் மகிமையினையும் பிரபலிக்கின்ற இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆக்கங்கள், வரலாற்றுத் தகவல்கள், மண்ணின் நினைவுகளை சுமந்து வருகின்ற புகைப்படங்கள் உள்ளிட்ட மண் சார்ந்த பல்வேறு விடயங்களைத் தாங்கிய கனதியான சிறப்பு மலராக காரைவசந்தம் மலர் வெளியிடப்பெற்றிருந்தது. தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் அரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.

  • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 2023ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதியும் அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதியும் நடைபெற்றன. இரு திருவிழாக்களின் போது காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் பெருந்திரளான காரை உறவுகளின் பங்குபற்றுதலுடன் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 05ம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகமான இளையோரின் ஈடுபாடு இருந்ததை அவதானிக்கமுடிந்தது. இது பாராட்டக்கூடிய மகிழச்சியான மாற்றமாகும். சுவிற்சலாந்து, லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகை தந்தவர்கள் இந்நிகழ்வில் காரை. மண்ணின் உணர்வோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டு ஊரின் நினைவுகளை மீட்டி மகிழ்ந்தனர். சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் முதியோருக்கான மெதுநடைப் போட்டியும் இடம்பெற்றிருந்ததுடன் குழுநிலைப் போட்டிகளாக ஆண் பெண் அணிகளுக்கிடையேயான தாய்ச்சிப் போட்டியும் தாம்பிழுவைப் போரும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்திருந்தன. 18 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிக்கு எதிராக பெண்கள் அணிகள் தாம்பிழுவைப் போரில் பங்குகொண்டிருந்தன. இரு பிரிவுகளிலும் பெண்கள் அணி ஆண்கள் அணியை வெற்றி கொண்டு சாதனை படைத்திருந்தன. இவ்வணிகளுக்கு முறையே வாரிவளவு நல்லியக்கச் சபையின் முன்னாள் செயலாளர் அமரர் பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் காரை விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரர் அமரர் குலேந்திரன் ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டன. வெற்றிபெற்றவர்களிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துச் சிறார்களிற்கும் Tim Hortons Gift Card வழங்கப்பட்டு ஊக்குவிக்கிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • கனடா காரை கலாச்சார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி நடைபெற்றது. ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • இங்கு அமரத்துவமடைந்த காரைநகரைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளில் மன்றம் கண்ணீர் அஞ்சலி படம்  வைத்து அஞ்சலி செலுத்துவது வழமைபோல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட

திட்டங்களும் வழங்கப்பட்ட உதவிகளும்.  

(24.09.2022 தொடக்கம் 27.04.2024 வரை)

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம்  ரூபா 7,000 அதிகரிக்கப்பட்டு கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. சிவன்கோயில் நித்திய பூசைக்காக கனடா காரை கலாச்சார மன்றத்தின் பெயரில் ஹட்டன் நஷனல் வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ள 5 இலட்சம் ரூபாய்களில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி காரைநகர் அபிவிருத்தி சபையின் நடைமுறைக் கணக்கிற்கு வருடந்தோறும் நவம்பர் 28ம் திகதி வைப்பில் இடப்படுகின்றது. இத்தொகை கனடா காரை கலாச்சார மன்றத்தினரின் அறிவித்தலின் பிரகாரம நித்திய பூசைச் செலவிற்காக ஆலய நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  4. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  5. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர் (2022) நவம்பர் (2022), ஜனவரி (2024) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது. ஆகஸ்ட் (2023) மாதம் சிறிய மற்றும் பெரிய போட்டோப் பிரதி இயந்திரங்கள் திருத்தம் செய்ய மன்றத்தால் நிதி வழங்கப்பட்டது. அத்துடன் ஆகஸ்ட்,செப்டெம்பர், அக்டோபர்,நவம்பர், டிசம்பர் (2023), பெப்ரவரி (2024), மார்ச் (2024), ஏப்ரல் (2024) மாதங்கள் மாணவர்கள் போட்டோப் பிரதிகள் எடுப்பதற்கான பேப்பர் வாங்கி கொடுக்கப்பட்டது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்றும் 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமையும் இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் இயந்திரம் வாங்கிக் கொடுக்கப்பட்டதுடன் மோட்டார் அறையும் (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் கணித,விஞ்ஞான பாடத்திலான முன்னோடிப் பரீட்சை 2024ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி 2 படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன. 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1ம், 2ம் கட்டமாக ரூபா 415,600 பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த பத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. ஐந்து மாணவர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் ஐந்து மாணவர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பத்து மாணவர்களில் மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பு நிறைவுபெற்றுள்ளபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளனர். ஆகவே தற்போது ஏழு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் இரண்டு மாணவர்களிற்கு மன்ற உறுப்பினரின்  நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக க.பொ.த உயர்தர பரீட்சை முடியும் வரை ரூபா 5000, 2023ம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  13. காரைநகர் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட “காரைநகர் “ நூற்றாண்டு விழாவிற்கு அனுசரணையாக கனடா காரை கலாச்சார மன்றம் ரூபா 200,000 வழங்கியது.
  14. வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை முடியும் வரை தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 5000 நவம்பர் (2023) மாதம் தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எடுத்துள்ளபடியால் மற்றவருக்கு தற்போது ரூபா 2500 படி மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
  15. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மூன்று க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் பரீட்சை முடியும் வரை தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 3100, ரூபா 2500, ரூபா 2500 வீதப்படி மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
  16. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக ரூபா 3000 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  17. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளுக்கான நிதியுதவியாக 2024ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தொடக்கம் மாதாந்தம் ஒவ்வொரு மாணவருக்கு ரூபா 2000 வழங்கப்பட்டு வருகின்றது. (2024/மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ் உதவி ஒரு வருடத்திற்கு மட்டும் மன்றத்தால் வழங்கப்படும்)
  18. 2024/பெப்பவரி மாதம் வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரம் ரூபா (551000.00 ரூபா) செலவில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.
  19. 2024/மார்ச் மாதம் சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபா (427950.00 ரூபா) செலவில் பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.
  • கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2022 / 2023 ஆண்டு காலப்பகுதி நிர்வாகத்தினால் நக்கீரன், பல்கலைக் கழக மாணவர்கள், க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கல்விக் கருத்தரங்கு, முன்னோடிப் பரீட்சை மற்றும் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் ஆகியனவற்றுக்கு நேரடியாக அவர்களிடம் மன்றம் தொடர்புகொண்டு ஏப்ரல்,மே,ஜூன் (2023) மாதங்களில் ரூபா 979,600 (ஒன்பது லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து அறுநூறு) வழங்கப்பட்டன. அத்துடன்  ஆகஸ்ட்/2023, ரூபா 500,000 (ஐந்து லட்சம்), நவம்பர்/2023 ரூபா ஒரு மில்லியன்  (பத்து லட்சம்), மார்ச்/2024 ரூபா ஒரு மில்லியன்   (பத்து லட்சம்) என  மூன்று  தடவைகள் காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு காரைநகரில் மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  • நக்கீரன் (மாணவன்), காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் மாணவர்கள் போட்டோப் பிரதிகள் எடுப்பதற்கான பேப்பர் வாங்குவதற்கு, காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி சம்பளம், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கொடுப்பனவுகளுக்காக ரூபா 400,000 (நான்கு  லட்சம்),  நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மீன்பிடி கட்டுமரம் வாங்க நிதியுதவியாக ரூபா 500,000 (ஐந்து லட்சம்),  கலாநிதி விளையாட்டுக் கழகத்திற்கு நிதியுதவியாக ரூபா 100,000  (ஒரு லட்சம்) ஆகிய உதவித் திட்டங்களுக்கு  ரூபா ஒரு மில்லியன் (பத்து லட்சம்) காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு (26.04.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகளுக்கு 24.09.2022 தொடக்கம் 27.04.2024 வரை 4.4796 மில்லியன் (4,479,600) ரூபா அனுப்பி வைக்கப்பட்டன.
  • எமது நிர்வாகத்தின் பதவிக்காலமான இரண்டு ஆண்டுகளிலும் காரைநகரின் பல்வேறு வேலைத் திட்டங்களுக்கும் உதவப்பட்டிருந்த 4.4796 மில்லியன் ரூபாவும் காரை வசந்தம் இரு கலை விழாக்களினூடாகப் பெற்ற நிகர இலாபம், உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள் ஆகியோரின் நன்கொடைகள், ஒருத்தி திரையிட்டதன் ஊடாகப் பெற்ற வருமானம் என்பவற்றிலிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒன்றுகூடல்,தமிழ் திறன் பண்ணிசைப் போட்டிகள்,காரை வசந்தம், ஆருத்திரா தரிசனம் ஆகிய நிகழ்வுகளுக்கு நிதியுதவி மற்றும் பொருள் உதவி செய்தவர்களுக்கும், பல வழிகளிலும் உதவி செய்த அனுசரணையாளர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், வர்த்தகபெருமக்களுக்கும், மன்றத்தால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகளை செய்து உதவிய காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும்,தொண்டர்கள், ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்கள், இளையோர் ஒருங்கிணைப்பாளருக்கும்,போசகர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் பழைய நிர்வாக சபையினர்களுக்கும், அனைத்துக் கனடா வாழ் காரை மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

“Working together is success”

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்
27.04.2024