கனடா காரை கலாசார மன்றம் “காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாசார மன்றம் “காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வானது 13.10.2019 அன்று ஸ்காபுரோவில் அமைந்துள்ள தமிழ் இசை கலாமன்ற அரங்கத்தில் நடைபெற்றது. கனடா காரை கலாசார மன்றத்தின் கனடா வாழ் காரைநகர் மக்களின் கலாசார பின்னணிகளை கருத்தில் கொண்டு நடாத்தப்படும் இக்கலை விழாவானது வருடந்தோறும் இலையுதிர் காலத்தில் கனடா வாழ் காரை சிறார்களின் கலைப்படைப்புக்களோடு மேடையேற்றப்படும் விழாவாகும்.

இவ்வருடம் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் தலைமையிலான நிர்வாக சபையினரால் இவ்விழாவிற்கான திட்டமிடலின் போது இந்நிகழ்வு மூலம் பெறப்படும் நிதியானது காரைநகரில் கல்வி பயிலும் மாணவர்களது கற்றல் கற்பித்தலை தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் கற்றல் கற்பித்தலுடன் தொடர்புடைய 5 திட்டங்கள் முன்வைக்கப்பட்டு கனடா வாழ் காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்கள், அனுசரணையாளர்கள், நலன்விரும்பிகளிற்கு மன்றத்தின் இணையத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இலையுதிர் காலத்தின் இளவேனிலாக 13.10.2019 அன்று கனடா ஸ்காபுரோவில் காரை வசந்தம் வீசியது. மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொள்ள அனுசரணையாளர்கள், அங்கத்தவர்களது ஏகோபித்த வரவேற்புடன் நடைபெற்ற “காரை வசந்தம் 2019” நிகழ்விற்கு தாயகத்திலிருந்து காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச சபை உபதவிசாளரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்தி சபை பொருளாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் மற்றும் கண் வைத்திய நிபுணர் திரு.கணேசன் சாயுட்சியதேவன் அவர்களும் கலந்து கொண்டனர்.

மாலை 5.30 மணியளவில் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் ஆதரவாளர்களது மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் செல்விகள் ஆரணி சந்திரேஸ்வரன்,ஜனனி ராஜகோபாலன் மற்றும் கோகுலன் திருஞானசம்பந்தர் ஆகியோரது நிகழ்ச்சி தொகுப்புடன் விழா இனிதே ஆரம்பமானது.

கனடிய தேசிய கீதம் தமிழ் தாய் வாழ்த்து என்பன அபிஷன் நந்தகுமார்,அனக்ஷன் நந்தகுமார்,அஞ்சனன் சிவகுமார்,அர்வின் சிவகுமார்,ஆருஷன் சுதாகரன்,ஆரணி விஸ்வநாதன்,தீபிகா பிரமேந்திரதீசன்,கிருஜானி நடனசபேசன்,ஜதுக்சியா விமலரூபன்,ருக்சியா விமலரூபன்,துர்க்கா சிவகுமார்,பிரணவன் கீதபாஸ்கரன்

ஆகிய கனடா வாழ் காரை சிறார்கள் இசைத்தனர். அதனைத் தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் கீதத்தினை திருமதி ரஞ்சினி சுந்தராஜன் மாணவிகளான செல்விகள் மாதுரி மனோகாந்தன், மாதவி மனோகாந்தன் ஆகியோர் இசைத்தனர்.

தொடர்ந்து கனடாவிற்கு அண்மையில் வந்திருக்கும் காரையம்பதி புகழ் என்.கே.கணேசன் அவர்களின் புத்திரன் திரு.கணேசன் பவப்பிரியன் அவர்களது குழுவினர் வழங்கிய நாதஸ்வர தவில் மங்கள இசைக்கச்சேரி நடைபெற்றது. விழாவிற்கு வந்த பார்வையாளர்கள் விருந்தினர்களை உற்சாகமாக்கிய மங்கள இசையை வழங்கிய குழுவினருக்கு கௌரவம் வழங்கப்பட்டதோடு திரு.பவப்பிரியன் அவர்களிற்கு கனடா வாழ் காரை மக்கள் சார்பாக அமரர் சிவகுரு கந்தையா(மதவாச்சி) குடும்பத்தினர் விசேட கௌரவமும் பாராட்டும் வழங்கி கௌரவித்தனர்.

அடுத்து மன்றத்தின் உபதலைவர் திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்கள் வரவேற்பு உரையினை நிகழ்த்தினார். தொடர்ந்து திருமதி சியாமா தயாளன் அவர்களது மாணவி துர்க்கா சிவகுமார் அவர்களின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

வரவேற்பு நடனத்தை தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் தமிழ் திறன் போட்டிகளில் பங்கேற்றி பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களின் மழலை பேச்சுக்கள் அரங்கத்தினை அழகாக்கியது.

தொடர்ந்து நாத சங்கமம் இசைக் கச்சேரி நடைபெற்றது. செல்விகள் கவிதா சிவநாதன், காவேரி சிவநாதன் ஆகியோரது வாய்ப்பாட்டு இன்னிசை நாத சங்கமத்திற்கு மிருதங்க ஞானவாருதி திரு.வாசுதேவன் ராஜலிங்கம் அவர்களது மாணவர்கள் சேயோன் ஜெயகுமார், மலரோன் ஜெயகுமார், சாகித்தியன் ஜெயகுமார், வின்ஸ் ரவீந்திரன், திவியன் உதயகுமார், கவின் உதயகுமார், மிதுரன் மனோகரன், பிருந்தா ஜெயானந்தன் ஆகியோர் பக்க வாத்திய கலைஞர்களாக அணி சேர்த்தனர். நாத சங்கமம் அனைத்து பார்வையாளர்களையும் கட்டிப்போட்ட சிறந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்து கொண்டதையும் அனைவராலும் பராட்டப்பட்டதையும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.

கனடா காரை கலாசார மன்றத்தின் கலை நிகழ்வுகளிற்கு மத்தியில் மன்றத்தின் நிகழ்ச்சிகளிற்கு அனுசரணை வழங்கி சிறப்பித்த விளம்பரதாரர்கள், அனுசரணையாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றிருந்தன.

தொடர்ந்து Folk Dance நிகழ்வு நடைபெற்றது. திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களது மாணவி செல்வி மீரா செந்தில்நாதன் அவர்களினால் தமிழர் தம் கலைகளான கரகாட்டம், குச்சுப்புடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் கலந்த ஒரு சிறந்த படைப்பாக வழங்கப்பட்ட தனிநடனம் சிறந்த பாடல்கள் தெரிவு செய்யப்பட்டு அபினயங்களோடு அரங்கத்தை அசத்தியிருந்தது.

அடுத்து திருமதி சிறிமதி கீதா ராஜ்குமார் அவர்களின் மாணவிகளும் அண்மையில் கர்நாடக வாய்ப்பாட்டில் அரங்கேற்றம் கண்ட செல்விகள் பிரம்மி சிவராஜன், சுருதி சிவராஜன் ஆகியோரது கர்நாடக இசை காற்றினில் தவழ்ந்தது. இவர்களிற்கு அணி சேர்த்த கலைஞர்களாக மிதுரன் மனோகரன் மற்றும் சிறிசயன் சந்திரகுமார் ஆகியோர் விளங்கினர்.

அடுத்து பாலவிமலா நர்த்தனாலயா அதிபர் திருமதி சித்ரா தர்மலிங்கம் அவர்களது மாணவிகள் வழங்கிய Fusion நடனம் பல மாணவிகள் கலந்து சிறப்பித்த அழகிய நடன கோர்வையாக விளங்கியது. பல மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்த சிறந்த நடன நிகழ்வாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் கணேசன் சாயுச்சியதேவன் அவர்களின் உரையும் மற்றும் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உரையும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து Keyboard மூலமாக இளம் சிறுவர் கலைஞர்களின் மெல்லிசை கச்சேரியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மலரவன் விஜயகுமார், திவ்யா ஜெயபாலன், ஜனகன் செந்தூரன், ஆனந் சற்குணராசா, சுருதி பிரசன்னா, பிரணவன் கீதாபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுவர்கள் தமது கைவண்ணத்தினை கீபோர்ட் ஊடாக காண்பித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

அடுத்து கனடாவில் ஊடக துறையில் 20 ஆண்டுகளை கடந்து பயனித்துக்கொண்டிருப்பவரும் அண்மையில் ‘ஒருத்தி’ திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்று காரை மண்ணிற்கு பெருமை சேர்த்தவரான திரு.சுதாகர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து திருமதி திலகா சின்னப்பு அவர்களின் நெறியாள்கையில் காரை இளம் கலைஞர்கள் பங்குபற்றிய நாடகம் “நீர்க்கோலங்கள்” நடைபெற்றது. பங்குபற்றிய மாணவர்களின் பொருத்தமான ஆடை அலங்காரங்கள், வசனநடை, கதை, மற்றும் மேடையேற்றிய முறை என்பன பலரையும் கவர்ந்ததுடன் பங்குபற்றிய சிறுவர்களின் உள்ளார்ந்த பங்களிப்பானது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அது மட்டுமன்றி அனைத்து பார்வையாளர்களும் ஆர்வத்துடன் நாடகத்தினை செவிமடுத்ததும் அதற்கான பாராட்டுக்களை வழங்கியதும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதில் பங்குபற்றிய மாணவர்கள் அஸ்வினி சண்முகரத்தினம், பிரியங்கா கேதீஸ்வரன், அஜந்தன் கேதீஸ்வரன், ஜெயந்தன் கேதீஸ்வரன், ஜெரூசன் யோகேஸ்வரன், துளசி யோகேஸ்வரன், சயந்தன் கணேசலிங்கம், சங்கர் ஜெயச்சந்திரன், கார்த்திக் சிவகுமார், துர்க்கா சிவகுமார் ஆகியோராவர்.

தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்களின் மன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய சிறப்பு உரை இடம்பெற்றது.

அடுத்து கரியோக்கி முறையிலான திரையிசைப்பாடல்கள் காரை இளம் சிறார்களினால் பாடப்பட்டன. எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கரியோக்கி முறையிலான திரையிசைப்பாடல்களை கனடாவில் பிறந்த காரை இளம் சிறார் கலைஞர்கள் தங்கள் குரலில் திறம்பட இசைத்தமையானது அவர்களது உச்சரிப்பு மற்றும் பாடல் தெரிவு என்பன அனைவரையும் பிரமிக்க வைத்ததுடன் பலத்த வரவேற்பினை பெற்ற ஒரு நிகழ்வாகவும் அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று பிரதம விருந்தினராக கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களிற்கான கௌரவமும் அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றது. பிரதம விருந்தினர் உரையின் போது கனடா காரை கலாசாரமன்றத்தினாரால் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட அனைத்து ஆரம்ப பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் சிறந்த முறையில் செயற்பட்டு வருவதாகவும் மிகமிக பத்திரமாக காரைநகர் அபிவிருத்தி சபையின் பாதுகாப்பில் பாடசாலைகளின் பெயரில் இருப்பதாகவும் அதனைப்பற்றி எவ்வித பயமோ அன்றி கவலையோ கொள்ள தேவையில்லையெனவும் தெரிவித்ததுடன் காரைநகர் அபிவிருத்தி சபைக்கு இதுவரை சொந்தமாக அலுவலகம் இல்லாத குறையினை போக்கிக் கொள்ள நிரந்தர கட்டிடம் ஒன்று அமைக்கும் பணிக்காக கனடா வாழ் காரைநகர் மக்களை கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக உதவ முன்வருமாறும், காரைநகர் அபிவிருத்தி சபையினரின் நீர் வளங்கலுக்காக பாவனையில் உள்ள பழைய பௌசர்களிற்கு பதிலாக மேலும் இரண்டு புதிய பௌசர்களை பெற்றுக்கொள்ள காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் நீர் வழங்கல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு நிரந்தர வைப்பில் இருந்த 58 இலட்சம் ரூபாய்கள் மூலம் முற்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அதற்குரிய நிதி தேவைப்படுவதாகவும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் மூலம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் ஆனாலும் கனடா காரை கலாசார மன்றமும் அது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனவும் மேலும்கேட்டுக்கொண்டார்.

அடுத்து கனடா காரை கலாசார மன்றம் நடாத்திய தமிழ் திறன், இன்னிசை போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இறுதியாக கனடா காரை கலாசார மன்றத்தின் செயலாளர் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவு பெற்றது “காரை வசந்தம் 2019”.

கனடா காரை கலாசார மன்றம் நடாத்திய காரை வசந்தம் நிகழ்வுகளின் போது சிற்றுண்டி மற்றும் இரவு உணவு என்பனவும் இலவசமாக வழங்கப்பட்டதும், நிகழ்ச்சிகள் தரமானதாக பார்வையாளர்களை வெளியில் எழுந்து சென்றுவிடாத வண்ணம் கட்டிப்போட்டிருந்ததும், நிகழ்ச்சி வடிவமைப்பு ஒருங்கமைப்பு என்பன எவ்வித பிசகுகளும் இன்றி தொடர்ச்சியாக நடைபெறும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிய கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் இந்நிகழ்விற்கு ஆதரவாக விளம்பர அனுசரணைகளை பெற்றுக்கொள்ளவும், ரிக்கெட் விற்பனை மூலமும், மற்றும் அனைத்து வழிகளிலும் உதவியாக செயற்பட்ட கனடா காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்கள் நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்; இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைக் கூற கடமைப்பட்டுள்ளோம்.

கனடா காரை கலாசார மன்றத்தின் ‘காரை வசந்தம் 2019’ மூலம் பெறப்பட்ட நிதி உதவிகள் மூலம் காரைநகர் மண்ணில் செயற்படுத்த திட்டமிடப்பட்ட கற்றல் கற்பித்தலுக்கான 5 செயற்திட்டங்களும் கூடிய விரைவில் செயற்படுத்தப்படும் என்பதனையும் மேலும் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக இணைந்து கொள்வதன் மூலம் எம்மன்றத்திற்கும் எம்மண்ணிற்கும் பெருமை சேர்ப்போமாக.

நன்றி!

கனடா காரை கலாசார மன்றம்