கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும் பெரு விழா! 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பம்! (Morningside Park, Area 3,4)

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும்

பெரு விழா! 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பம்!

(Morningside Park, Area 3,4)

காரை மக்களை திரண்டு வருமாறு அன்புரிமையோடு அழைக்கின்றது கனடா-காரை கலாச்சார மன்றம்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஆவலோடு நோக்கப்பட்டு வந்த கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மனதிற்கு இதமளிக்கும் அமைதியான சூழலில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய Morningside பூங்காவில் காரையின் உறவுகள் உறவு கொண்டாடி மகிழவுள்ளனர்.

எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு ஏற்படுத்த வழியேற்படுத்தும் நிகழ்வு

நாம் காரை மண்ணின் மைந்தர்கள் என்கின்ற உறவுத் தொடர்பினைப் பேணவும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளித்து எம் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வு

ஊர் சார்ந்த மனப் பதிவுகளைத் தாங்கிய வண்ணம் உரிமையோடு கலந்துகொள்ளும் காரை மக்களின் உன்னதமான நிகழ்வு

தாயக பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் BBQ

பாலப்பம், பழஞ்சோற்றுத் தண்ணீர், ஒடியல் கூழ், கொத்து றொட்டி, உள்ளிட்ட பெரியோர், சிறியோர் விரும்பும் பலதரப்பட்ட சுவையான உணவுகளை அனுபவம் மிக்க எமது தொண்டர்களின் உடனடித் தயாரிப்பில் சுடச் சுட பெற்று சுவைத்து மகிழலாம்

தாயக பாரம்பரிய விளையாட்டுக்கள்

தாய்ச்சி, தாம்பிழுவைப் போர் போன்ற விறு விறுப்பான குழு நிலை விளையாட்டுக்கள்

சிறியோர், இளையோர், பெரியோர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கவர்ச்சி மிகு விளையாட்டுக்கள்

அனைவரையும் வியப்படைய வைக்கும் வினோத உடைப் போட்டி

போட்டியாளர்களின் வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கிடையிலான போட்டி

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு

ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழவும், உணவு வகைகளை உண்டு சுவைக்கவும், போட்டிகளில் பங்கேற்கவும் அவற்றைக் கண்டு களிக்கவும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் Morningside பூங்காவில் ஒன்று கூடத் தவறாதீர்கள்.

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் நடைபெறவும் நிகழ்வை வெற்றிகரமானதாக அமைத்து வரலாற்றில் இடம் பிடித்துக்கொள்ளவும் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன்கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும், தொண்டர்களும், இளம் சந்ததியினரும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் உழைத்து வருகின்றனர்.

காரை மாதாவின் புதல்வர்கள் தத்தமது குடும்பங்களுடன் திரளாகக் கலந்துகொண்டு மகிழ்வது மட்டுமல்லாது காரை மண்ணை பெருமைப்படுத்துமாறும் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றது உங்களுக்கான சேவையிலுள்ள உங்கள் கனடா-காரை கலாச்சார மன்றம்.

நன்றி

நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்