குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வரலாற்றுப் பதிவான தீர்மானங்கள் குறித்து தனது மகிழ்ச்சியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.காரைநகர் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 3,000.00 டொலர்கள் நிதி அநுசரணை

Dr.Vijay

 

 கனடா-காரை கலாச்சார மன்றத்தின் முதன்மை அநுசரணையாளரும் ரொரன்ரோவில் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணராகச் சேவையாற்றி வருபவருமாகிய டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்கள் அண்மையில் கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை நிறைவேற்றியிருந்த காரைநகரில் கல்வி வளர்ச்சி, மற்றும் மனித நேய உதவிகள் குறித்த தீர்மானங்களை வரவேற்று தனது மகிழ்ச்சியினை நிர்வாக சபையினரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப். 27, 2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் மன்ற வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையாக அமைந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இத்தீர்மானங்களில் காரைநகரில் உள்ள எட்டு பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்காகவும் காரைநகர் பிரதேச அரசினர் மருத்துவ மனைக்கான படுக்கைகள் கொள்வனவுக்காகவும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றினை நிறைவேற்றுவதற்கு கடந்த ஆண்டு மன்றத்தினால் நடத்தப்பட்ட காரைவசந்தம் கலை விழாவின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம் அவர்களின் ஆதரவினையும் மன்ற நிர்வாக சபை அணுகியிருந்த போதே அவர் தனது மகிழ்ச்சியினையும் பாராட்டினையும் தெரிவித்ததுடன் தனது நிதி அன்பளிப்பாக 3,000.00 டொலர்களையும் வழங்கி உதவியிருந்தார்.

                                                          காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

                                                           ஞாலத்தின் மாணப் பெரிது

என்ற வள்ளுவர் வாக்கிற்கமைய பெருமனதோடு தேவையறிந்து உதவிய கொடையாளர் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்களின் ஊர்ப்பற்றையும் மனிதநேயத்தையும் பாராட்டி அவருக்கு எமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிர்வாக சபை

கனடா-காரை கலாச்சார மன்றம்