அமரர். பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் நினைவுப் பேருரை.

அமரர். பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் நினைவுப் பேருரை.

 

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான ‘‘காரை ஸ்வரங்கள் – 2018 ”இன் நிகழ்விற்காக இலங்கை  கிழக்கு பல்கலைக்கழக முன்னாள்  விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில் இணைப் பேராசிரியரும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும்   ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்  (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. குறித்த நினைவுப் பேருரை.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 11-08-2013இல் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் அறிமுகமான அமரர். பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் எமது சபையின் செயற்குழு உறப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் ஏற்படுத்தி  “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி அதன் இணைப்பாளராக பணியாற்றி புதிய செல் நெறிகளை அறிமுகப்படுத்தி, அறிவு சார்ந்ததும் இளந் தலைமுறையினரின் ஆளுமை விருத்தி போட்டிகளை நடாத்தினார்.

 

எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான  இலத்திரனியல் மூலமான கட்டுரைப்போட்டிகளை 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டு போட்டிப் பிரிவுகளை விரிவு படுத்தி இயற்திறன் முறையில் பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்பட்டன

 

(அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.

(ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம்,  கல்வியாண்டு மாணவர்கள்

(இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், இவ்வாண்டு    பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்கள்.

 

2016ஆம் ஆண்டு “ தியாகத் திறன் வேள்வி ” யாக கருக்கொண்டு உருப்பெற்று எழுந்த கனல் அமரர். பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் அவர் தம் உழைப்பு, ஆற்றல், ஆளுமை, விடாமுயற்சி, சலியாத ஆர்வம், தணியாத மண்பற்று, என்பன அவ்வேள்வியில் சொரிந்த ஆகுதிகள்.

“ எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும் ”

-என்றார் பாரதியார்

அவர் தம் எண்ணத்தின் வடிவமாக விளங்கியவர் தன்னலமற்ற ஒப்பற்ற ஓர் அரிய உழைப்பாளர் அமரர் கென்னடி அவர் ஒரு கர்மவீரர்.

“ மெய்வருத்தம் பாரார்;; பசி நோக்கார்.

கண் துஞ்சார், கருமமே கண்ணாயினர் ”

என்ற கூற்றுக்கும் சற்றும் முரண்பட்டவர் அல்லர். அமரர் கென்னடி.

 

“யானை வரும் பின்னே மணிஒசை வரும் முன்னே”

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வுகள் தொடங்கப் போகிறது என்றால் முன்னே கென்னடியின் வருகை மணிஒசை ஒலிக்கும். செயல் தொடங்கும். ஓவ்வொரு வருடமும் போட்டிகள் விரிவு படுத்தப்படும் அந்தவகையில் 2017ஆம் ஆண்டு நாடகப்போட்டியும் இணைக்கப்பட்டது.

நடாத்தப்படும் போட்டிகள், போட்டி விதிகள் பற்றிய சுற்று நிருபங்கள் இணையத்தளத்தில் வெளிவரும்.

ஒன்றுகட்டுரைப் போட்டி

இரண்டுபேச்சுப் போட்டி

மூன்று: திருக்குறள் மனனப் போட்டி

நான்கு: இசைப் போட்டி

ஐந்து: பொது அறிவு வினாடி வினாப் போட்டி

ஆறு: நாடகப் போட்டி

 

என முத்தமிழ்ப் போட்டிகளுக்கான செயற்பாடுகள் தொடங்கும். பாடசாலைகளுக்கான சுற்றுநிருபங்கள் அனுப்புதல், போட்டி மண்டபங்களை, நடுவர்களாக பணியாற்றும் ஆசிரியர்களை தெரிவு செய்தல், நாடகப்போட்டி, மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகள் எல்லாம் தனிமனித ஆற்றல். எல்லாப் பொறுப்புக்களையும் தலைமேல் சுமந்தார். பெருமைக்காகவோ, புகழுக்காகவோ இதனைக் கூறவில்லை எல்லாம் சத்தியம். காரை மண் அறியும்.

போட்டிகள் முடிவுற்றதும் அவற்றையெல்லாம் சரி பார்த்து உடனுக்குடன் முடிவுகளை இணையத் தளத்திலும் தொலைபேசி முலமும்   உள்ளுரிலும் இருப்பவர்கள் அறியும்படி அறிவிப்பார்.

எமது சபையால்  நடாத்தப்படும் காரைத்தென்றல், முப்பெரும்விழா, முத்தமிழ்விழா ஆகிய விழாக்களில் மதிப்பளிக்கப்படும் சான்றோர்கள், கலைஞர்களின் வாழ்த்துப்பாவின் கவிதைகளை மிகத் திறமையாக எழுதி வருகிறார். தனது தாயரிடத்து உள்ள அளவற்ற அன்பின் நிமித்தம் சிவயோகச் செல்வன் என்னும் புனைபெயரில் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூர்த்த மதிநுட்பம், தீட்சண்யமான பார்வை, எதையும் அணுகும் ஆற்றல், தமிழ்,ஆங்கில மொழிப்புலமை, புராண, இதிகாச, வரலாற்று நிகழ்வுகள் பற்றிய அழமான அறிவு, நாடகங்களை வடிவமைக்கும் ஆற்றல், பேச்சுப் போட்டி, வினாடி-வினாப் போட்டிகளையும் நடாத்தும்  ஆற்றல் எல்லாம் தனிமனிதன் ஒருவரிடம் ஒன்றிணைந்த ஆளுமை. சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

“தேடிச் சோறு நிதந்தின்று பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பம்மிக உழன்று – பிறர்

வாடப்பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ? ”

 

என்று பாரதியின் கனவை நனவாக்கி  ஆண்டு ஐம்பதில் சாசுவதான அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி எம் மண்ணில் மலர்ந்தும் மணம் வீசும் மறைந்த மாமனிதர்களுள் ஒருவரே.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற ஆசிரிய சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து பாராட்டி எமது சபையினரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமரரது நூற்றாண்டு விழாவும், “தியாகச்சுடர்” நினைவுத் தொகுப்பு வெளியீடும் கடந்த 17.07.2016இல் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்கள் “தியாகச்சுடர்” நினைவுத் தொகுப்பு நூலின் ஆசிரியராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் அயராத ஆற்றலும் ஆளுமையும், துடிப்பும் செயலாற்றும் ஆர்வமும், அஞ்சா நெஞ்சமும் தம் மண்ணின் மீதும், மக்கள் மீதும் கொண்ட தணியாத தாகமும், இரவு பகல் பாராது உழைத்த உழைப்பும் அமரர் கென்னடி அவர்களின் நெஞ்சத்தில் நீறு பூத்த நெருப்பாக உறைந்து கிடந்தன.

சந்தர்ப்பம் வந்த போது “தியாகத் திறன் வேள்வி”  கருக்கொண்டது, உருப்பெற்றது, வலுப் பெற்றது. வளம் சேர்ந்தது. எல்லாம் இருந்தும் இடையிலே——– “ விதியை வெல்பவர் யார்?

இத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதை விட இப்படி வாழ்ந்தோம் என்று எண்ணுவதில் உள்ள பெருமை எதிலும் இல்லை.

காரை மண் எல்லாத் துறையிலும் சிறக்க வேண்டும், பண்பாடு, கலாச்சார விழுமியங்கள் என்ற அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். “ பட்டு மாமா வாரிவளவு நல்லியக்கச் சபை மூலம் நடாத்திய மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிள் ஒட்டப் போட்டி, நீச்சல் போட்டி ஆகிய எல்லாப் போட்டிகளையும் தியாகத்திறன் வேள்வியில் அர்பணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரின் சிந்தனைக்கு அமைவாக இவ்வாண்டில் சைக்கிள் ஒட்டப் போட்டி நடாத்துவதென எமது சபையால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மெழுகுவர்த்தி தனக்காக எரிவதில்லை

எரிந்து உருகி விட்டது.

அமரர் கென்னடியின் நினைவு காரை மண்ணில் மட்டுமல்ல, சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்து என்றும் நிலைத்து நெகிழ்ந்து ஒலிக்கும்.

“ கருவிலே கலைஞானம், பருவத்தில் பண்பாளன்

உருவிலே மொழி அறிஞன், அரும்பும் சிந்தைகள்

வரும்போது போய்விட்டாய் ”

 

எனினும் உனது கருவிலே உருக்கொண்ட “ தியாகத் திறன் வேள்விக் கனல் காக்க புனலாக எழுந்தோடி வருவாய், மனமெல்லாம் மயங்கித் தியங்கி மருகுகிறது. தணல்  குளிர்ந்திட தென்றலாக நீ வருவாய்.

“ நினைவுப் பேருரை என்பது உனது அர்ப்பணிப்புக்கு ஈடாகுமோ? மன ஆறுதலுக்காக அமைதிக்காக, உன்மீது கொண்ட அளவில்லாத அன்புக்காக, ஆற்றாமையால், உனது ஆற்றலின் திறம் கண்டு போற்றுகின்ற உருக்கமான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வே.

 

பூமிபந்தில் பரந்து வாழும் அன்புக்குரிய காரை வாழ் உறவுகளே!

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம்  Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.அவர்களின்   ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நினைவு மலர் வெளிவர இருக்கின்றது. அமரர் கென்னடி குறித்த தங்கள் ஆக்கங்களை தரவிரும்பின் பின்வரும் மின்னஞ்சல்களுக்கு 31.05.2018  முன்பதாக அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

  1. swisskarai2004@gmail.com
  2. yoharatnam7@gmail.com

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

06.05.2018