சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் 1952ஆம் ஆண்டு காரைநகர் கருங்காலியென்னும் குறிச்சியிற் பிறந்தவர். தற்போது காரைநகரின் சமூகசேவை வரலாற்றில் இவரது பங்கு கணிப்பிற்குரியது. ஆரம்பக் கல்வியை வியாவில் சைவ வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ற்ரன் காரை கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றார். அறிவியலின் மெய்யத்தகு பட்டத்தையும் பெற்றக் கொண்டவர்.

10.05.1974 இல் காரை இந்துக் கல்லூரியில் இவரது கல்விச் சேவை ஆரம்பித்தது. அதிபராக ஸ்கந்தா கல்லூரி , கோட்டக்கல்வி அதிகாரி சங்கானை, வலயக்கல்விப் பணிப்பாளர் தீவகம், யாழ்ப்பாணம், வலிகாமம், மாகணக்கல்விப் பணிப்பாளர் வடமாகாணம், ஆகியவற்றில் கடமையாற்றினார். பிரதிச் செயலாளராக வடமாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றி 07.06.2012 இல் ஒய்வு பெற்றார். 38 வருடங்களாக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பாடசாலைகளிலும், கல்வி திணைக்களங்களிலும் கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

வடமாகாண பொதுச் சேவைகள் அணைக்குழு உறுப்பினர் (2014-2017), சிரேஷ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றியம் வடமாகாணம், வடமாகாணக் கல்வி அமைச்சின் மீளாய்வுக்கான நடைமுறைப்படுத்தும் ஆயம், ஆகியவற்றில் தலைவராக பல வருடங்கள் செயலாற்றியவர் காரைநகர் கருங்காலி போசுட்டி முருகன் திருப்பணிச் சபை, காரைநகர் அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவராகவும், தற்போதைய காரை அபிவிருத்திச் சபைத் தலைவராகவும் சிறப்புற பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் இளையோருக்கு விடுக்கும் செய்தியாக குடும்பப்பற்று, கிராமப்பற்று, நாட்டுப்பற்றுள்ள ஒழுக்க சீலர்களாக வளர்ந்து வர வேண்டும், கல்வியில் உயர்நிலை பெற அயராது முயற்சித்தல் வேண்டும், எமது இனத்தின் அடையாளமாக இருக்கும் கலை, இலக்கிய, கலாச்சார நிகழ்வுகளில் பங்காளராவதற்கு முயற்சித்தல் வேண்டும், தங்களது நேரத்திலும், உழைப்பிலும் ஒரு பகுதியை சமூதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணித்தல் வேண்டும் எனக் கூறி இருக்கின்றார்.

ஊருக்கு உழைத்த பெரியோரை “வாழும்போது வாழ்த்துவோம்” என்பது எமது சபையின் நோக்கங்களில் ஒன்று. காரைநகரின் கல்விக்கும் பொது ஊர் மேம்பாட்டுக்கும் காத்திரமான பங்காற்றியவரும் சுறுசுறுப்பாகப் பொதுப்பணி ஆற்றிவருபவருமாகிய முன்னாள் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு “கல்வி நிர்வாகக் கடல்” விருதளிப்பதில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் பெருமிதமடைகிறோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 03 – 12 – 2017 அன்று யாழ்ரன் கல்லூரியில் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடாத்திய “முத்தமிழ் விழா – 2017” இல் முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு “கல்வி நிர்வாகக் கடல்” விருதளித்து மதிப்பளித்தது.

சிவயோகச் செல்வன் ஆக்கிய வாழ்த்துப் பாவை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு திரு.ஆறுமுகம் சிவசோதி (முன்னாள் உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்) அவர்களால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பாவையும் விருதையும் வழங்கி மதிப்பளித்தார்.

குருவே சரணம்!

எங்களது அன்புக்குரிய இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்கள் 10.01.2018 புதன்கிழமையன்று இயற்கையெய்தினார். அவர் நினைவாக சில சிந்தனைகள்.

எமது சபையால் நடாத்தப்படும் காரைத்தென்றல், முப்பெரும்விழா, முத்தமிழ்விழா ஆகிய விழாக்களில் மதிப்பளிக்கப்படும் சான்றோர்கள், கலைஞர்களின் வாழ்த்துப்பாவின் கவிதைகளை எங்கள் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மிகத் திறமையாக எழுதி வந்தார்கள் தனது தாயரிடத்து உள்ள அளவற்ற அன்பால் சிவயோகச் செல்வன் என்னும் புனைபெயரில் கடந்த மூன்று வருடங்களாக இதுவரை பதினாறு வாழ்த்துப்பாக்களை எழுதி வந்துள்ளார். அதில் முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திருவாளர் கார்த்திகேசு நடராசா அவர்களினதும், காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்களினதும் வாழ்த்துப்பாக்கள் இன்னும் இணையத்தளத்தில் வெளிவரவிலலை அடுத்த சில வாரங்களில் வெளிவர முயற்சிக்கின்றோம்.

எமது சபையின் மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்கள் கடந்த தைப்பொங்கள் தினத்தன்று ஒரு வாழ்த்துப்பாவினை இணையத்தளத்தில் வெளிவர தொகுப்பினை எழுதி அனுப்புவதாக எம் முடன் தொடர்பு கொண்டு கூறியிருந்தார்கள். ஆனால் காலன் அவர்களை தொடர்ந்து எம்முடன் சேர்ந்து செயற்பட அனுமதிக்கவில்லை. உனது வெற்றிடத்தை இனி நிரப்புவது யார்? உனது உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் ஈடினை யாரோ? என்ற கேள்வி எம்மிடையே எழுந்திருக்கின்றது.

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு 2014ஆம் ஆண்டில் இருந்து எம்மோடு தோளோடு தோள் நின்று மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை விருத்திக்கு அயராது உழைத்த வருமாகிய கலாநிதி; ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய அவரது பணியை தொடந்து செயற்படுத்துவதே நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் காணிக்கையாகும்.

வாழ்த்துப்பாவும் நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

‘ஆளுயர்வே ஊருயர்வு’
‘நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்’

 

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
11.02.2018

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்
திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு
“கல்வி நிர்வாகக் கடல்” விருது வழங்கி வாழ்த்திய
வாழ்த்துப்பா

ஆடல் அம்பலவாணன் பெயரன்! பரமநாதன் பெற்ற செல்வமே!
பாடல் சால் மங்கை பரிமளத் தாயார் ஏகமாய் ஈந்த நற்பேறே!
ஈடில் நல் நங்கை தவமணி இனிதுவக்கும் தவக் கொடையே!
கேடில் நற்புகழ் வடக்கின் கல்விப் பணிப்பாளரே! வாழி! வாழி!

சைவத் தரமுயர்ந்த வியாவில்! யாழ்ற்றன்! பின் பருத்தியூர்
உய்யத் தருவந்த ஹாட்லியெனப் பயின்று பின் அறிவியலின்
மெய்யத் தருவந்த பட்டம் பெற்றாய்! கையத் தொருமுகத்தான்
தெய்வப் பெயர்பூண்டாய்! காரையூரை வையத் தரமுயர்த்த வந்தாய்!

தொல்லு புகழ்ச் சயம்புபள்ளி நல்லாசிரியனாய்! கந்தரோடை
நல்ல புகழ் ஸ்கந்தாவின் அதிபராய்! கோட்டம் வலயமெனவுயர்ந்து
வெல்லு புகழ் வடமாகாணப் பணிப்பராய்! வியந்து பல்லோருமேற்ற
தௌ;ளு தமிழ்க் கல்வியமைச்சின் பிரதிச் செயலரானாய்! வாழி! வாழி!

திடமுடன் காரைச் சபையின் தலைவராய்! கருங்காலிப் போசுட்டியான்
வடமுடன் ஊரப் பணிச் சபையின் தலைவராய்! காரையூர் பெருந்-
தடமுடன் வாழ வந்தாய்! “கல்வி நிர்வாகக் கடல்” என விருதீந்தோம்
மனமுடன் சுவிஸ் காரையூரார்! கல்விச் சேவையாளனே வாழி! வாழி!

ஆக்கியோன்: சிவயோகச் செல்வன்

முத்தமிழ் விழா                                                 வாழ்த்தி வழங்கியோர்கள்
யாழ்ற்றன் கல்லூரி                                 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
காரைநகர்                                                         செயற்குழு உறுப்பினர்கள்
03.12.2017                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.