சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரையிலான செயற்பாடுகளும், கணக்கு அறிக்கையும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரையிலான செயற்பாடுகளும், கணக்கு அறிக்கையும்.

 

அன்புடையீர் வணக்கம்!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தனது நான்காவது தடைவையாக சபையின் செயற்பாட்டு விளக்க உரையினையும், கணக்கு அறிகையினையும் வெளியிடுகின்றோம். கடந்த  காரைத்தென்றல் 15-06-2016இன் நிகழ்வில் சபையின் மூன்றாவது வெளியீடான சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தோற்றமும் 2004ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையிலான செயற்பாடும் 01.01.2013இல் இருந்து 31.12.2015 வரையிலான கணக்கு அறிக்கையும் சமர்பித்திருந்தோம். இன்று பதினெட்டு மாதங்களுக்கான சபையின் செயற்பாடுகளும், கணக்கு அறிக்கையினையும்  வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகின்றோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2016ஆம் ஆண்டிற்கான மூன்று செயற்பாடுகள் இதற்கு முன் சமர்பித்த அறிக்கையில் பதிவு செய்திருக்கின்றோம். அதனை மீண்டும் ஞாபகப்படுத்தி அறிக்கையினை சமர்பிக்கின்றோம். 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பதினொராவது அண்டுவிழா காரைத்தென்றல்-2015

சுவிஸ் வாழ் காரை மக்களின் உன்னதமான நாற்பத்தாறு குடும்பஅங்கத்தவரின் உன்னதமான நிதிப்பங்களிப்பினால் வெகு சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே!

காரைத்தென்றல்-2015 ஆண்டுவிழாவின் செலவுகள் தவிர்த்து மிகுதிப்பணம் எதற்கு பயன்பட்டது என்பதை அகமகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்.

  எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும்  காரைநகரைப் பிறப்பிடமாகவோ, பூர்விகமாகவோ கொண்ட மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி  (26.09.2015) பிற்பகல் 3.00மணி யிலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை காரைநகர் காலநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் பரீட்சை நடாத்தும் பொழுது மாணவர்களுக்கு ஏற்படும் அசொகரியங்கள் தொடர்பாக அவர்களின் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்த மண்டபத்திற்கான மின்சாரக் குறைபாட்டினை நிவர்த்தி செய்துதரும்படி காரை அபிவிருத்திச்சபை தலைவர் ஊடாக பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தனபாலன் அவர்களால் எமது சபையிடம் முன்வைக்கப்பட்டது. இதனை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து மண்டபத்திற்கு பதின்மூன்று ரியூப்லைற், ஏழு மின் விசிறிகள் மண்டபத்திற்கு தனியான மெயின்சுவிற் என்பன 90375.00ரூபா.செலவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. என்பதை அறியத்தருகின்றோம்.

  எமது சபையின் நாட்காட்டி 2016  காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் 24.12.2015 வியாழக்கிழமை அன்று 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்ட நாட்காட்டி 150 பிரதிகளில் 50பிரதிகள் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்திடம் கையளிகப்பட்டது. மிகுதி 100 பிரதிகள் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை St. Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich. மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. நாட்காட்டி அச்சுப்பிரதிக்கான செலவு 133750.00 ரூபாய்க்கள் என்பதனையும் காரைநகரில் வெளியிடப்பட்ட நாட்காட்டியின் வருமானங்கள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. என்பதை அறியத்தருகின்றோம்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் 2016ஆம் ஆண்டு நலிவுற்றோருக்கான கண்படர் அகற்றல் அறுவைச் சிகிச்சையினை உங்களின் உதவிக்கரத்தினால் நிறைவேற்றியுள்ளது.

எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாக வறிய மக்களுக்கான கண் அறுவைச்சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு 18.03.2016இல் காரை அபிவிருத்திச் சபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு 25.03.2016இல் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 31 பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப்பேருக்கு 31.03.2016இலும், இதுவரை மொத்தமாக 27 பேருக்கு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 4பேருக்கு மூக்குகண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. மிகுதிப்பேருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெறும் என்பதனையும், 31 பயனாளிகளுக்கான செலவுத்தொகை 567210.00 ரூபாய்கள் எமது தாய்சங்கத்திடம் 28.06.2016இல் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை  அறியத்தருகின்றோம்.

  காரைநகரின் கல்விப் புரட்;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இ.போ.சபையின் பொன்விழாவுக்கான நிதியுதவி.

இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையின் புனரமைப்புப் பணிகளுக்கு உதவுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபையிடம் காரைநகர் சாலை அபிவிருத்திக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்;பட்டுள்ளது.

காரைநகர் போக்குவரத்துச் சாலையின் பொன்விழாச்சபையினரால் காரைநகர் அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் எமது காரைநகர் சாலை 1976ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.  1991 இல் இடம்பெற்ற யுத்தத்தினால்   இச் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை மீளவும் திருத்துவதற்கு இ.போ.சபையின் மான்புமிகு அமைச்சரிடம் நிதியுதவி கேட்டபோது திருத்துவதற்கான நிதி தங்களிடம் இல்லையென்று கூறிவிட்டார்கள். தற்போதும் எமது காரைநகர் சாலை தொடர்ந்தும் மிகமோசமாகப் பழுதடைந்தே காணப்படுகின்றது. எமது சாலையை அழியவிடாது மீளவும் புனரமைத்துத் தருவதற்கு காரைநகருக்கு வெளியேயும்  வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த காரைநகர் மக்கள் நிதியுதவி செய்து தருமாறு  சாலையின்   பொன்விழாவுக்கும், அபிவிருத்திக்குமான குழு சார்பில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கீழ்கானும் வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டி உள்ளன. காரைநகர் சாலையினுள் பஸ் வண்டிகள் செல்லும் பாதை புனரமைப்பு, பஸ் பழுதுபார்க்கும் ராம்ப், சுற்றுவேலி, வயறிங்வேலை, கட்டிடத்திருத்தம், என அண்ணளவாக முப்பது இலட்சம் ரூபாய்கள் திருத்தவேலைகளுக்கு தேவைப்படுவதாலும், பொன்விழா மார்கழி மாதம் நடுப்பகுதியில் நடைபெற இருப்பதாலும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேற்படி கோரிக்கைக்கு அமைவாக 30.12.2016இல் நடைபெற்ற சாலையின் பொன்விழாவின் செயற்பாட்டிற்கு உந்து சக்தியாக 100000.00 (ஓரு லட்சம் ரூபாய்) எமது சபையால் வழங்கப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பிரான்ஸ் நோக்கிய கலைப் பயணம் – 2016

 ''பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்க்கிணங்க எமது சகோதர அமைப்பான பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் அன்பான அழைப்பைஏற்று 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை 14.00மணிக்கு நடாத்தும் பத்தாவது ஆண்டுவிழாவான ''காரை ஸ்வரங்கள்|| நிகழ்விற்கு  23குடும்பங்களைச் சேர்ந்த 50 சுவிஸ் வாழ் காரை உறுப்பினர்கள் பேருந்தில் ஓரு கலைப்பயணத்தை ஏற்படுத்தி விழாவினை சிறப்பித்திருந்தார்கள்

  காரைநகர் மண்ணின் கல்விக்கு சுடர்ஒளி ஏற்றிய அமரர்கள் கலாநிதி ஆ.தியாகராசா, பண்டிதமணி கலாநிதி சிவஸ்ரீ.க.வைத்திஸ்வர குருக்கள் ஆகியோரின் நூறாவதுஅகவையை நினைவு சுமந்த காரைத்தென்றல் – 2016

காரைநகர் மருதடி விநாயகர் கருணையினாலும், தில்லைக்கூத்தனின் திருவருளினாலும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வருடம்தோறும் பெருமையுடன் வழங்கும் காரைத்தென்றல் விழா துர்முகி வருடம் வைகாசித்திங்கள் 15.05.2016ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமான நிகழ்வு சிறுவர்களின் இயல், இசை, நாடகம் கலந்த விழாவாக இரவு22.00மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக காரை இந்துக்கல்லூரியின் ஒய்வு நிலை அதிபர் திருமதி பாலசிங்கம் தவநாயகி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக  திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர்) பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.சண்முகநாதன் தவபாலன் அவர்களும்  பிரான்ஸ் காரை மன்ற உறுப்பினர்கள் திரு.தேவராஜா தேவஞானம், திரு.அருள்நேயன் தம்பையா, திரு.இராசையா சண்முகலிங்கம் (சந்திரி) செல்வன் தினேஷ் சண்முகலிங்கம், திரு. சிவகுருநாதன் கணேசன், திரு. சண்முகநாதன் ஜெயசிங்கம் (ஜேர்மன்)  ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் காரைத்தென்றல்- 2016 மிகச் சிறப்பாக நிறைவுற்றமை மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாகும.; இவ்விழா சிறப்பாக நடைபெற சுவிஸ் வாழ் காரை மக்களும் பங்கெடுத்துக் கொண்டதோடு தங்களால் செய்யப்பட்ட பேருதவியும், பேருழைப்பும் உண்மையில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மேன் மேலும் வளரும் என்ற இமாலய வெற்றி எமக்கு கிடைத்துள்ளது. இதேபோன்று இனிவரும் காலங்களிலும் காரைத்தென்றலை வெகுசிறப்பாக நடாத்துவதற்கு தங்களின் மேலான உழைப்பும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.  எல்லாவழிகளிலும் உதவிபுரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களும்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர்  கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிறன்று சூரிக் நகரில் சிறப்புற நடைபெற்றன 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஒருங்கிணைப்பில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டு விழாவும் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.30 மணிக்கு St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றன.

மங்கலச் சுடறேற்றலும், அகவணக்கமும், கடவுள் வணக்கமும், மன்றக் கீதமும்

சிவஸ்ரீ.த.சரஹணபவானந்தகுருக்கள், திரு, திருமதி. சுப்பிரமணியம் கதிர்காமநாதன், திரு, திருமதி  பூபாலபிள்ளை விவேகானந்தா ஆகியோர் ஒளிச் சுடர் ஏற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின் நிகழ்ச்சி அறிவித்தலுக்கு அமைய கடவுள் வணக்கத்தினை செல்வி பாரதி லோகதாஸன் அவர்கள் இனிமையான குரலில் பாடினார்.

அமரத்துவமான கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களுக்கும் ஏனைய உறவுகளுக்கும் எல்லோரும் எழுந்து நின்று நீத்தார் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மன்றக் கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்பு நடனத்தினை செல்வி பைரவி லோகதாஸன் சிறப்புற நிகழ்த்தினார்.

வாழ்த்துரைகள்

எமது சபையின் போஷகரும் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய பிரதமகுருவுமான ஸ்ரீ சரஹணானந்தக் குரக்கள் ஆசியுரை வழங்கி  இருந்தார். அவர் தனது உரையில் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் அரசியல்பணி, கல்விப்பணி, சமூகப்பணி பற்றி விரிவாக கூறியிருந்தார்கள். விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் மகோற்சவம் தொடங்கியிருந்த பொழுதிலும் இன் நிகழ்வில் தனது வருகையை பதிவு செய்வதற்கு வந்திருப்பதாகவும் இது அன்னாருக்கு செலுத்தும் நன்றிக்கடனும் கடமையுமாகும் எனக் கூறியிருந்தார்கள். தொடர்ந்து சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்களது வாழ்த்துரை இடம் பெற்றது.

ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நீண்ட தலைமையுரையோடு விழா களை கட்டியது. 

நிகழ்வுகளின் வரிசையில் காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் வாழ்த்துச் செய்திகளை திரு அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்) அவர்கள் வாசித்திருந்தார்கள். முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.ப. விக்கினேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியனை திரு. கனகசபை சிவபாலன் அவர்கள் வழங்கியிருந்தார்கள். முன்னாள் அதிபர் ஓய்வுபெற்ற உதவிப் பரீட்சை ஆணையாளர் திருமதி பாலசிங்கம் தவநாயகி  அவர்களின் வாழ்த்துரையை திரு. முருகேசு பாலசுந்தரம் வழங்கியிருந்தார்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நினைவுத் தொகுப்பு மூன்று கிழமைகளில் ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டுத் துரித கதியில் வெளியிடப்பட்டது.  இதனால் காலம் தாழ்த்திக் கிடைக்கப்பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் திரு.வே.முருகமூர்த்தி காரைநகர் அவர்களின் நிறுவுநர் பக்தி மிக்க முதல்வர் என்ற ஆக்கம் உலக சைவப் பேரவைத் தலைவர் திரு.சதாசிவம்.பற்குணராஜா அவர்களால் வாசிக்கப்பட்டது. காரைநகர் அபிவிருத்திச் சபையின் வாழ்த்துச் செய்தி திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களால் வாசிக்கப்பட்டது. 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு சார்பாக  இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தியையும்   உலகில் பரந்து வாழும் காரைநகர் மாணவருக்கான வருடாந்தரப் போட்டிகளுக்கான தியாகத் திறன் வேள்வி 2016 புதிய திட்டம் பற்றிய செய்தியையும் திருவாளர். பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் வாசித்தார். 

இசை அஞ்சலி

காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி ஒரு மணிநேரம் இடம் பெற்றது. பார்வையாளர்கள் கானமழையில் நனையும் வண்ணம் மிக அற்புதமாக இசையமுது வழங்கியிருந்தார்கள்.

திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களின்  நிகழ்ச்சி அறிவிப்புக்கு அமைவாக தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு செய்வதற்கு ஆரம்ப ஏற்பாடுகள் நடந்த வேளை செல்வி பாரதி லோகதாஸனின் இனிமையான பாடல் எல்லோரையும் கவரும் வண்ணம் ஒலித்தது.

தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு

ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்த அவர்களின் தமையில் தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடு இடம்பெற்றது. சீவஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் நூலை வெளியிட்டு வைத்தார். முதல் பிரதிகளை திருவாளர்களான சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,  இரத்தினம் கண்ணதாசன், தர்மலிங்கம் லோகேஸ்வரன், பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர் பிரான்ஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம்

அதனைத் தொடர்ந்து அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் பற்றிய நினைவுக் கருத்தரங்கம் இடம்பெற்றது. நிகழ்வில் உலக சைவப் பேரவைத் தலைவர் திருவாளர்கள். சதாசிவம். பற்குணராஜா, (பிரான்ஸ்) பூபாலபிள்ளை விவேகானந்தா, அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேருமாஸ்டர்- பிரான்ஸ்), கணபதிப்பிள்ளை கணா மாஸ்டர், த. மாணிக்கவாசகர்; (பிரான்ஸ்) ஆகியோர்கள் நினைவுரைகள் ஆற்றியிருந்தார்கள். ஓவ்வொருவருடைய உரையில் இருந்தும் அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் கல்விப்பணி, அரசியல்பணி, சமூகப்பணி ஆகியனவும் அன்னாரின் பன்முக ஆளுமையும் வெளிப்பட்டிருந்தன.

அமரருக்கான நாட்டியாஞ்சலியும் கலைஞர்கள் கௌரவிப்பும்

அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்கள் ஒர் இசைப்பிரியர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சூரிக் திருக்கோணேஸ்வர நடனாலய மாணவிகள் முப்பது மணித்துளிகள் நாட்டியாஞ்சலி மிக அற்பதமாக நிகழ்த்தியிருந்தார்கள். இன் நிகழ்வு எல்லோரையும் கவர்ந்திருந்தது. இவர்களை கௌரவிக்கும் முகமாக நடனாலய அதிபர் திருமதி மதிவதனி சுதாகரன் அவர்களை திருமதி தனலட்சுமி கதிர்காமநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார்கள். சிறந்த முறையில் நடனம் ஆடிய மாணவிகளை திருமதி சியாமளா செல்வச்சந்திரன் (பிரான்ஸ்) அவர்கள் நினைவு மாலை அணிவித்து கௌரவித்திருந்தார்கள்.

அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும், தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீட்டின் இறுதி நிகழ்வாக  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளர் திரு முருகேசு பாலசுந்தரம் நிகழ்த்தியிருந்தார்கள். நிகழ்வுகள் அனைத்தும் இரவு 9.30 மணிக்கு இராப் போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

இன் நிகழ்வுகள் அனைத்திற்கும் நிதி ஆதரவு வழங்கியவர் S.K.T நாதன் கடை உரிமையாளர் திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். இப்படியான ஓர் வராலாற்று நாயகனுக்கான விழாவை தானே பிரேரித்து, விழா மற்றும் நூல் வெளியீடு இரண்டுக்குமான முழமையான நிதிப் பங்களிப்பைச் செய்தவர். எமது சபை அளித்த அறக்கொடை அரசு என்ற சிறப்புப் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது அறப் பணிகள் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம். அவருக்கும் எமது நன்றிகள்.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் 'தியாகத் திறன் வேள்வி 2016' 

 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகிற கட்டுரைப் போட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வேண்டுகோள்களுக்கு இணங்க இவ்வருடத்தில் இருந்து இப்போட்டிகள் பல்வேறு திறன்களை உள்ளடக்கியதாக விரிவாக்கம் பெற்றுள்ளன என்பதை மிகுந்த மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

 இந்த ஆண்டிலிருந்து வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக "தியாகத் திறன் வேள்வி" என்ற நிகழ்வாக "ஆளுயுர்வே ஊருயர்வு" என்ற மகுட வாசகத்துடன் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் நடாத்தப்படட்ன.

பிரிவுகள்:

அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்

ஆ. பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்

இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2016 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர்.   மாணவர்களக்கான போட்டிகள் பின்வரும் திகதிகளில் நடாத்தப்பட்டன.

 பேச்சுப் போட்டி 24 – 09 –2016 சனிக்கிழமை காலை 9 மணி காரை இந்துக் கல்லூரி

 கட்டுரைப் போட்டி 24 – 09 –2016 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி காரை இந்துக் கல்லூரி

 திருக்குறள் மனனப் போட்டி  01 – 10 – 2016 சனிக்கிழமை காலை  9 மணிக்கு காரை இந்துக் கல்லூரி. மூன்று பிரிவுகளுக்குமானது.

 இசைப் போட்டி எதிர்வரும்  02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணி முதல் இந்துக் கல்லூரியில் நடைபெறும். மூன்று பிரிவுகளுக்குமானது.

 பொதுஅறிவு வினாடி வினாப் போட்டி 25- 09 –2016 ஞாயிறு காலை 10 மணி காரை இந்துக் கல்லூரி. மூன்று பிரிவுகளுக்குமானது.

தியாகத்திறன் வேள்வி – 2016 மாணவர்களுக்கான போட்டிகளை சிறப்பாக நடாத்துவதற்கு காரைநகர் இந்துக் கல்லூரி சயம்பு ஞாபகார்த்த மண்டபத்தை தந்துதவிய அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினருக்கும், மாணக்கரை ஊக்கமளித்து போட்டியில் பங்குபற்றச் செய்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், இன்னும் பல வழிகளில் பிரதி பலன் எதிர்பாராது உதவிகள் செய்த அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக.

  09.01.2017 திங்கட்கிழமை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை,  காரை அபிவிருத்திச்       சபையுடன் இணைந்து  நடாத்திய முப்பெரும் விழா

09.01.2017 திங்கட்கிழமை எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு நினைவுத் தொகுப்பான "தியாகச் சுடர்" அறிமுகத் நூற் தொகுப்பு வெளியீட்டையும்,  சான்றோர்கள் மதிப்பளிப்பையும், தியாகத்திறன் வேள்வி-2016 மாணக்கர்; போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பையும்  இணைத்து முப்பெரும் விழாவாக யாழ்ற்றன் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் 31.12.2005இல் உருவாக்கப்பட்ட எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  இரண்டாவது வருடமாக முப்பெரும் விழாவினைக் காண்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

எமது அழைப்பினை ஏற்று விழாவிற்குத்  தலைமை தாங்குகிய திரு.வே.முருகமூர்த்தி (அதிபர் யாழ்ற்றன் கல்லாரி) அவர்களும், எமது சபையின் அழைப்பையேற்று 1919ஆம் ஆண்டு முதன்முதலாக  தோற்றம் பெற்ற புகலிடக் காரை ஒன்றியமாகிய மலாயா காரை ஒன்றியத்தின் தலைவர்  கலாநிதி டத்தோ சண்முகம் சிவானந்தனும் பாரியாரும் இவ்விழாற்கு பிரதமவிருந்தினராக வந்திருப்பது மேலும் இவ்விழாவிற்கு பெருமை சேர்க்கின்றது. 

மலேசியா நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் மலேசியா வாழ் காரை உறவுகள், மற்றும் கௌரவ விருந்தினராக வருகை தந்திருக்கும் திருவாளர் அறக்கொடை அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள்;, யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்கள், யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்கள், கிழவன்காடு கலாமன்றத் தலைவர் திரு.நடராசா சோதிநாதன் அவர்கள,; சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ள காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன்  ஆகியோர்களும், மற்றும் எமது சகோதர காரையூச்சங்களைச் சேர்ந்த வி.நாகேந்திரம், ப.தவராஜா, திரு.இ.சுப்பிரமணியம், திரு.செ.மனோ திரு.க.பாலையா (பிரித்தானியா), அருளானந்தம் செல்வச்சந்திரன் (பிரான்ஸ்), தீசன் திரவியநாதன் (கனடா), திரு.இளையதம்பி சச்சிதானந்தன் (அவுஸ்திரேலிய) காரை இந்து பழையமாணவர் சங்கம் கனடாக் கிளை செயலாளர் திரு கனகசுந்தரம் சிவகுமாரன், கொழும்பு பிரபல குஇன்சி நிர்வன உரிமையாளர் திரு. கணநாதன் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை கடந்த பன்னீரண்டு வருடங்காளக சுவிற்சர்லாந்தில் நமது இளம் சமூதாயத்தினரின் கலைத்திறன்களை வளர்க்கும் முகமாக காரைத்தென்றலில் சான்றோர்கள், மாணவர்கள் மதிப்பளிப்பினை வெகு சிறப்பாக நடாத்தி வருகின்றது. இன் நிகழ்வின் வெளிப்பாடே இன்று தாய் மண்ணிலும் முப்பெரும்விழாவாக விரிவாக்கம் பெற்றுள்ளது. 

இவ் முப்பெரும் விழாவில் எமது சபையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட  மன்றத்திற்கான கீதத்தை இயற்றிய தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு "கலைமாமணி" விருது வழங்கியும் எமது சபையின் கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு உறுப்பினர், மாணிவாசகர் சபைக் காப்பாளர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கு "தமிழ்த் தொண்டன்" விருது வழங்கியும்  ஓய்வுநிலை அதிபர், சமூக சேவையாளர் திரு.கதிரவேலு தில்லையம்பலம் அவர்களுக்கு "கல்விக் காவலர்" விருது வழங்கியும்  சித்தாந்த வித்தகர் கலாபூசணம் வே.நடராஜா அவர்களுக்கு "சேவைநல வாழ்த்துரையும்" பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களுக்கு "கல்விச் சாதனையாளர்"  வாழ்த்துரை வழங்கியும்  கௌரவிப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். 

"தியாகத்திறன்வேள்வி-2016" மாணவருக்கான மொத்தம் ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளுக்கான பரிசுத்தொகையினை கோவளத்தைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் அமரர் திரு.  சுப்பிரமணியம் அவர்களின் ஆகியோரின் ஞாபகார்த்தமாக வழங்கிய அவரது மகன் S.K.T நாதன் கடை உரிமையாளர் தெய்வீகத்திருப்பணி¸ அறக்கொடை அரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் சுவிஸ்) அவர்களும் பொது அறிவு வினாடி வினாப் போட்டிக்கான பரிசுத்தொகையினை நீலிப்பந்தனையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ஆங்கில  ஆசிரியர்களான திரு திருமதி விஜயரட்ணம் சிவயோகம் ஆகியோரின்; ஞாபகார்த்தமாக வழங்கிய அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் திரு. கென்னடி விஜயரட்ணம்  (Kennedy Vijaratnam. Associate Professor, Madawalaba University, Ethiopia.) அவர்களும் வழங்கி சிறப்பித்திருந்தார்கள். 

ஈழத்து சிதம்பர தில்லைக்கூத்தனின் திருவாருளால் இவ் முப்பெரும்விழாவை ஒருகிணைத்து நடாத்த உதவிய காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், நிர்வாக சபை உறுப்பினர்கள், கலாபூஷணம் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை, கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம், கலாநிதி. கென்னடி விஜயரத்தினம், யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி, வீரமங்கை யோகரட்ணம், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி, வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் திரு திருமதி வரதராஜன் பராசக்தி ஆகியோருக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இவ் விழாவின் நிகழ்ச்சிகளை தமிழில் தொகுத்து வழங்கிய திருமதி தர்சினி சண்முகநாதன் அவர்களுக்கும், ஆங்கில மொழியாக்கம் செய்த யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களுக்கும், விழாவிற்கான இணைய விளம்பரத்தையும் பிரசுரத்தையும் வடிவமைத்த திருமதி மலர் குழந்தைவேலு  (கனடா) அவர்களுக்கும்.  சான்றோருக்கான வாழ்த்துப்பாக்களை இயற்றிய சிவயோகச் செல்வன் அவர்களுக்கும், கலாபூஷணம் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கும் மாணவர்களுக்கான சான்றிதழ்களையும், விழாவிற்கான பிரசுரத்தையும்   அச்சிட்டுத் தந்த யாழ்ப்பாணம்  Andra printers நிறுவனத்தாருக்கும் இந்நிகழ்வின் ஒலி, ஒளிப்பதிவனை செய்து தரும் சிந்துஜா நிர்வனத்தாருக்கும், வரவேற்புநடனம், கோலாட்டம் வழங்கிய மாணவ, மாணவிகளுக்கும் எமது சபை சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களும். 

தமது கல்லூரி மண்டபத்தில் முப்பெரும்விழாவினை நடாத்த இடமளித்த யாழ்ற்றன் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகத்தினருக்கும், இவ் விழாவிற்கு ஆதரவு நல்கிய திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் அவர்களுக்கும், மற்றும் விழாவில் கலந்து சிறப்பித்த, அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் ஆகியோருக்கு எமது நன்றிகள் பல கோடி. 

 விழாவுக்கான விளம்பரங்களை தமது இணையத்தளங்களில் விளம்பரப்படுத்திய காரைநகர்.கோ, காரைநகர்.கொம், வெப் காரைஇந்துகனடா.கொம்  மற்றும் லங்காஸ்ரீ இணையதள நிர்வாகிகளுக்கும்; மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இளையோர் அமைப்பு உதயம். 

   கடந்த 12.02.2017இல் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகார பூர்வமாக அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது. 

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏழுபேர் கொண்ட செயற்குழுவில் இரண்டுபேரகள் இளையோர்கள் இணைக்கப்படுவர் என்பது யாப்பின் விதிகளில் ஒன்றாகும். அதற்கிணங்க 2011இல் இருந்து சுவிஸ் வாழ் இளையோர்கள் எமது சபைக்கு தங்களாலான ஓத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இலை மறைகாயான செயற்பாடுகளின் வடிவமாக புதிதாக எமது சபைக்கு இளையோர் அமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  19.05.2013இல் இடம்பெற்ற காரைத்தென்றல் நிகழ்வுவை இளையோரகள் ஒழுங்கமைத்து சிறப்புற நடாத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு சிறப்புவிருந்தினராக வருகைதந்திருந்த ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் இளையோர் அமைப்பின் உருவாக்கத்தின் தேவை பற்றி அறிவுரை வழங்கியிருந்தார். அவருடைய சிந்தனையையொட்டிய இவ் இளையோர் அமைப்புகள் பிரித்தானியாவிலும், சுவிற்சர்லாந்திலும் தோற்றம் பெற்றன. 

   15.05.2016இல் காரைத்தென்றல் நிகழ்விற்கு தாயகத்திலிருந்து பிரதம விருந்தினராக வருகை தந்த காரை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி. தவநாயகி பாலசிங்கம் (B.Sc (Special), PGDE, PGDEM, MA in Teacher Education) அவர்களும்  தனது உரையில் சபையின் எதிர்கால திட்டங்கள், செயற்பாடுகள், பெண் விடுதலை, சபையில் இளையோரின் அளுமையின் வகிபாகம் என்பன பற்றி விரிவாக உரையாற்றியிருந்தார்கள். இளம் சமுதாயத்தினர் இவ்விழாக்களை பொறுப்பேற்று ஒழுங்கமைத்து செய்யும் பொழுது தேர்ச்சியையும், சபையைத் தொடர்ந்து செயற்படுத்தும் தலைமைத்துவத்தையும்   அவர்கள் பெற்றக் கொள்வார்கள்.  எனக் கூறியிருந்தார்.   அதற்கு உதாரணமாக 15.06.2016இல் நடைபெற்ற காரைத்தென்றல் நிகழ்வில் செல்வி பானுஜா பாலசுந்தரம், செல்வன்.  விஜயனந்தன் விதுர்சன். ஆகியோர்கள் தாமாகவந்து முன்வந்து  விருப்பம் தெரிவித்தமையை அடுத்து சபையின் செயற்குழுவில் இணைந்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு எமது சபையின் நன்றிகளும் பாராட்டுதல்களும்.

   சுவிஸ் வாழ் இளையோர்களின் கோரிக்கைக்கு அமைவாக 12.02.2017இல் பிரத்தியேகமாக நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் இளையோர் அமைப்பு  உத்தியோகபூர்வாமாக அங்கிகாரம் செய்யப்பட்டது. அதற்கான நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டு அதன் எதிர் கால செயற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது மேல் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சித்திரை மாதத்திற்கு பின்னர் கற்கை செயற்பாட்டிற்கு நேரம் தேவைப்படுவதனால் அதற்கு முன்னதாக காரைத் தென்றலை நடாத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.    103 சுவிஸ் வாழ் காரை   குடும்பங்களைச் சேர்ந்த 200கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். எல்லா மாணவச் செல்வங்களின் கலைத் திறனைகளையும் உள்ளடக்கியதான காரைத்தென்றல் நிகழ்வு  அமைய வேண்டும். என்பதாலும,; நீண்ட தயார்படுத்துலுக்கான காலம்   தேவைப்படும் என்பதாலும், அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வருடா வருடம் நடாத்தும் காரைத் தென்றல் நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் புதுவருடத்தினத்தன்று 14.04.2017 வெள்ளிக்கிழமை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இளையோர்  அமைப்பின் ஓன்றுகூடலும் கலை மாலையும் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் "தியாகத் திறன் வேள்வி 2017" தொடர்பான

   முன்னோடிக் கலந்துரையாடல். 

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத்திறன் வேள்வி" மாணர்களுக்கான ஆளுமைத்திறன் போட்டிகள் இம்முறை 2017 இல் இரண்டாம் தவணை விடுமுறைக்கு முன்பதாக இடம்பெறவுள்ளது. இந் நிலையில் எமது சபையின் தயார்நிலை உறுப்பினர் திரு. அருணாசலம் லிங்கேஸ்வரன் அவர்கள் சமீபத்தில் காரைநகர் சென்றிருந்தார் தியாகத்திறன் வேள்வி 2017 க்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அவர் முன்னிலையில் நடாத்துவதென மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு திர்மானித்திருந்துது. இதற்கமைய இவ் ஆலோசனைக் கூட்டம்  07.04.2017 வெள்ளக்கிழமை  அன்று பிற்பகல் 14.00 மணிக்கு காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவாமகேசன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பெருமையுடன் வழங்கிய 

     இளையோர் ஒன்றுகூடலும் கலை மாலையும்.

  இளையோர் ஒன்றுகூடலும் கலை மாலையும் Zürcher Gemeinschaftszentren, GZ Seebach, Hertensteinstrasse-20, 8052 Zürich இல் நம் தமிழர் சித்திரை புதுவருடப் பிறப்பான  14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நாள் இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான கலாநிதி. பீமா ராவ் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வரவேற்பு மண்டபத்தில் உள்ள மங்கள விளக்கினை திருமதி சந்திரகுமாரி நந்தகுமார், திருமதி சத்தியரூபி நகுலேஸ்வரனும் ஏற்றிவைத்தார்கள். மண்டபமேடையில் உள்ள விளக்கினை திருமதி  கமலா சிவநேயன், திருமதி  சிவசோதி சண்முகலிங்கம் (ஜேர்மன்), திருமதி ரஞ்சிதமலர் சற்குணராஜா, திருமதி கனகரூபா தயாபரன், திருமதி தனலட்சுமி விஜயானந்தா ஆகியோர்கள் ஏற்றிவைத்தார்கள்.

இறை வணக்கத்தினை செல்விகள் தர்ஷிகா பரமசிவம், சாம்பவி பூபாலபிள்ளை ஆகிய இருவரும் இசைத்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து நாட்டில் மடிந்த உள்ளங்களுக்கு இருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. நான்காவது நிகழ்வாக மன்றகீதம் அரங்கில் இசைக்கப்பட்டபோது இசையால் வசமாக இதயமெது என்பதற்கிணங்க எல்லோரும் தம்மை மறந்து எழுந்து நின்று அகமுருகி நின்றனர். இது மட்டும்மன்றி அன்றைய நிகழ்வுக்கு இன்னும் மகுடம் சூட்டுவதாய் பல நிகழ்வுகள் அரங்கேறின. 

விழாவின் நிகழ்ச்சி தொகுப்பினை செல்விகள் தர்ஷிகா பரமசிவம், விஐயத்தனா விஜயானந்தா, சாம்பவி பூபாலபிள்ளை, செல்வன் விதுர்சன் தயானந்தன் ஆகியோர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

வந்தோரை வரவேற்பது நம் தமிழர் பண்பாடு அதற்கமைய வரவேற்புரையினை செல்வி சுபாஐpனி சற்குணராஐh நிகழ்த்தியிருந்தார். நிறத்தால், பல்வேறு பட்ட மொழியால், இனத்தால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகத்துக்கள் வாழ்ந்து கொண்டு, எங்கள் பாரம்பரியத்தையும் கலை கலாச்சாரங்களையும் மறந்து விடாமல் தமிழர் என்ற அடையாளத்தையும், பண்பாடுகளையும் கட்டிக்காத்து வாழத் துடிக்கும் அடுத்த தலைமுறையின் அவாவையும், தனித்துவத்தையும்; எங்கள் குழந்தைகளின் நிகழ்வுகள் வெளிப்படுத்தின.

நன்றி மறக்காத தமிழர் தம் பாரம்பரியத்தை எடுத்தியம்புவதாய் நன்றியுரையினை செல்வி பானுஜா பாலசுந்தரம் வழங்கியிருந்தார். இளையோர் அமைப்பினர் அதன் இலட்சனை பொறிக்கப்பட்ட தேனிர் குவளைகள் நிகழ்ச்சியில் பங்கபற்றியோருக்கும், பெரியோர்களுக்கும் வழங்கி கௌரவித்திருந்தார்கள். நிகழ்வுகள் அனைத்தும் இரவு 10.30மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்  "தியாகத் திறன் வேள்வி 2017" இல் 

  நாடகப் போட்டியும் சேர்க்கப்படுகிறது.

சுவிஸ் நாதன் அவர்களது முழுமையான அனுசரணையில் காரை மண்ணில் மீண்டும் முத்தமிழாம் இயல் இசை நாடகத்தின் மறுமலர்ச்சி. முதற் பரிசு ரூபாய்  ஆறுபதாயிரம்  இரண்டாம் பரிசு ரூபாய் நாற்பதாயிரம். மூன்றாம் பரிசு ரூபாய் பத்தாயிரம். அத்துடன் அறக்கொடை அரசு சுவிஸ் கதிர்காமநாதன் அவர்களது தந்தையார் அமரர்  கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரைநகரின் அபிவிருத்திப் பணிகளுள் நேரடியாகவே ஆளுமை விருத்திப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக நம்மூரின் கலை மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக நாடகப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்துள்ளது. சித்தர்கள் வாக்கான உள்ளப் பெருங்கோயிலையும் ஊனுடம்பு ஆலயத்தையும் ஓம்புகின்ற பணியாகவே நாம் இதைக் கருதுகிறோம். 

  "தியாகத் திறன் வேள்வி 2017" மாணவர்களுக்கான போட்டிகள் சென்ற 15,16ஆம் திகதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றன.

   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற   "தியாகத் திறன் வேள்வி-2017" மாணவர்களுக்கான போட்டி பரீட்சைகள் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து காரைநகர் பாடசாலைகள் அதிபர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றன.

கீழ் காணும் மூன்று பிரிவுகளில் போட்டி பரீட்சைகள் நடாத்தப்பட்டன.

பிரிவுகள்: 

அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்

ஆ.  பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்

இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2017 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர். 

காரை இந்துக் கல்லூரி, சயம்பு, நடராசா ஞாபகார்த்த மண்டபங்களில் 15ஆம் திகதி சனிக்கிழமை  போட்டி எண்: நான்கு இசைப் போட்டிகள்;, போட்டி எண்: ஐந்து  பொது அறிவுப் போட்டிகள், 16ஆம் திகதி போட்டி எண்: ஒன்று கட்டுரைப் போட்டிகள்;, போட்டி எண்: இரண்டு பேச்சுப் போட்டிகள், வெகு சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன.

  சுவிஸ் காரைஅபிவிருத்தி சபை நடாத்தும் தியாகத் திறன் வேள்வி- 2017

   திருக்குறள் மனனப்போட்டி

இப்போட்டி சம்பந்தமாக தரம் 05 மாணவர்களும் இப் போட்டியில் பங்கு கொள்ளவைப்பதற்காக விண்ணப்ப திகதியை 08.09.2017 வெள்ளிக்கிழமைக் மாற்றியுள்ளோம். அத் திகதிக்கு விண்ணப்பத்தை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முதல் சுற்றுதிருக்குறள் போட்டி 10.09.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு இருபிரிவினருக்கும் நடைபெறும். இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

திருக்குறள்- நீதிநூல், அறநூல், தலைசிறந்தநூல், பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல், உலகப் பொதுநூல். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் நம் தமிழ் மாணவர்களும் படித்துசுவைத்து மனனம் செய்து குறள் தந்தநெறியில் வாழ, நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்ப உதவும் வகையில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் மனனம் செய்விக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாடகப் போட்டிகள் ஆங்கில புரட்டாதி மாதம் இடம்பெறும். சரியான திகதிகள்   07-07-2017 க்கு முன்பதாக அறிவிக்கப்படும். அறிவிக்கப்படும். வார இறுதிநாட்களில் காரைநகரில் இடம் பெறும் போட்டிகளுக்கு பல்கலைக் கழக நாடக மற்றும் அரங்கவியல் ஆய்வாளர்களும் விற்பன்னர்களும் நடுவர்களாக விளங்குவர்.

  காரைநகர் மாணிவாசகர் சபைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் (50000.00) அன்பளிப்பு

     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைக்கு காரைநகர் மாணிவாசகர் சபைத் தலைவர் திரு.வே.மூருகமூர்த்தி அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சபை நடாத்தும் மாணவர்களின் சமய பாட போட்டிக்கான பரிசில்கள் வழங்குவதற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளது. 

     சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  கடந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு காசுத் தொகை காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பணத் தொகை சென்றடைந்ததும் பணத் தொகை மாணிவாசகர் சபையிடம் கையளிக்கப்படும் 

"பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்கு இணங்க தங்களின் பங்களிப்பின் மூலம் 2004ஆம் ஆண்டில் இருந்து நாம்  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து பல பணிகளும், சேவைகளும் ஆற்றிவருகின்றமை யாவரும் அறிந்ததே!

சுவிற்சர்லாந்து வாழ் அன்பான காரைநகரின் உறவுகளின் உதவிக்கரத்தால் நாம் எமது கிராமத்துச் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்கான உதவிகள், மருத்துவ உதவிகள், தொழில்சார் ஊக்கிவிப்புக்கள், சான்றோர்கள், பெரியோர்கள், கலைஞர்கள் மதிப்பளிப்புக்கள், மன்றத்திற்கான கீத இறுவெட்டு, புத்தகங்கள், நாட்காட்டிகள், வெளியீடுகள், காரைத்தென்றல், காரைநிலா அறிமுகவிழா, முப்பெரும்விழாக்கள், மக்கள் சந்திப்புக்கள். காரை மண்ணின் மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக நடாத்தப்படும் போட்டிகள், எமது சகோதர அமைப்புக்களான லண்டன், பிரான்ஸ் நலன்புரிச்சங்களின் ஆண்டு விழாக்களில் கலந்து சுவிஸ் வாழ் காரை இளையோரின் கலைத் திறன்களை வெளிப்படுத்தி ஊக்குவித்தல் என எமது சேவைகளும் பணிகளும் விரிவடைந்து செல்கின்றன. இச் செயற்திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணiயாகவும் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை சபையின் வளர்ச்சிக்கும் சந்தாப் பணமாகவும், அன்பளிப்பாகவும் பேருதவிகள் வழங்கிய அனைத்து சுவிஸ் வாழ் காரைநகர் மக்களுக்கும், முதற்கண் சபையின் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றிகள் பல கோடி.

அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்பாட்டு அறிக்கையுடன் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரைக்குமான கணக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கின்றோம். இக் கணக்கு அறிக்கையில் தங்களது அன்பளிப்புக்கள்  பதிவு செய்யப்படாவிட்டால் எமது நிர்வாககத்துடன் தொடர்பு கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

30.12.2014 அன்று Zürich இல் Gemeinschaft Brombeeriweg மடண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நான்காவது பொதுக்கூட்டம் இடம்பெற்றது. சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பொதுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற யாப்பிற்கு இணங்க இவ் வருடம் மார்கழிமாதம் ஐந்தாவது பொதுக் கூட்டம் கூட்டப்படும் என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

28.06.2017 தொடக்கம் 31.12.2017 வரைக்குமான கணக்கு அறிக்கையும் இளையோர் ஒன்று கூடல் செலவு அறிக்கையும் ஐந்தாவது பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

 

                                                                             நன்றி

 

                                                        "ஆளுயர்வே ஊருயர்வு"

                                    "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".

 

 

                                                                                                            இங்ஙனம்.

                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                                                                                         செயற்குழு உறுப்பினர்கள்

                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

                                                                                         சுவிஸ் வாழ் காரை மக்கள்

                                                                                                                 14.08.2017

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 01.01.2016இல் இருந்து 28.06.2017 வரையிலான கணக்கு அறிக்கை

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/08/swisskaraiaccount-2016-01.pdf