“தியாகதீபம் தியாகராசா”

"தியாகதீபம் தியாகராசா"

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

ந.கணேசமூர்த்தி
ஆசிரியர், ஊடகவியலாளர்
கல்லூரி வீதி
காரைநகர்.

இலங்கைத் திருநாட்டின் வடபுலத்து தலைநகராம் யாழ்ப்பாணத்திற்கு மேற்கே அமைந்துள்ள தீவுக்கூட்டங்களில் தரைவழித் தொடர்பால் நகராகத் திகழ்வது சைவமும் தமிழும் தழைத்து கற்றிந்த சான்றோர் வாழும் புண்ணிய பூமியான காரைநகர் ஆகும். இங்கு வாழ்ந்து சாதனை புரிந்த விரல் விட்டு எண்ணக்கூடிய தேசம் போற்றும் கல்வியியலாளர் வரிசையில் முன்னணியில் திகழும் ஸ்ரீமான் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களை யாரும் மறந்துவிட முடியாது.


ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளின் முற்;பகுதியில் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியர் சேவையில் இணைந்த அமரர் தியாகராசா ஐந்து ஆண்டுகளில் அக் கல்லூரியின் அதிபரானார். கால் நூற்றாண்டுகாலம் அதிபராக சேவையாற்றி காரைநகரில் மிகப்பெரிய கல்லூரி ஒன்றை கட்டி வளர்த்து ஆளுமையும் ஆற்றலும் மிக்க மாணவர் பரம்பரை ஒன்றின் சொந்தக்காரனாகத் திகழ்ந்தவர் தியாகராசா.


இந்தியாவில் அடையாற்றில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்ற இவர் தனது கல்வி அறிவையும் ஆற்றலையும் கல்லூரி வளர்ச்சிக்காக உச்ச நிலையில் பயன்படுத்தியவர் என்பதை மறுதலிக்க முடியாது. தான் சொந்தமாக நல்ல வீடு கட்டி வசதியாக வாழவேண்டும் என்பதற்காகவே அதிபர் பதவிக்காக அங்கலாய்த்துக் கொண்டு திரியும் இன்றைய நம்மவர்கள் சிலரின் மத்தியில், பாடசாலையில் மழை ஒழுக்கினால் வகுப்பறை நனைகிறதே என்று தனது வீட்டில் இருந்த ஓடுகளைக் கழற்றி வந்து பாடசாலைக் கட்டடத்திற்குப் போட்டவர். தாய் தந்தையர் சூட்டிய பெயருக்கு ஏற்ப தியாகம் செய்து வாழ்;ந்தவர் தியாகர். 


    பிரித்தானியர் இலங்கையின் அரசியல் யாப்பை வகுத்தபோது காரைநகரில் இருந்து கொழும்பு சென்று ஆலோசனைகளை முன்வைத்தவர். இலங்கையின் பெரும்பான்மை இனத்தவரின் அடக்கு முறைகளில்  இருந்து மீள்வதற்கு "ஈழ சுயராஜ்சியமே" ஒரே வழி என்பதை 1956இல் முதன் முதலில் முன்மொழிந்த தீர்க்கதரிசனம் மிக்கவர். எப்போதும் தனது கிராமம் முன்னேற வேண்டும், மக்கள் கஷ்டமின்றி வாழவேண்டும் என்ற சமூக சிந்தனை நிறைந்தவராக விளங்கிய தியாகராசா வட்டுக்கோட்டைத் தொகுதி வாழ் மக்களின் மனம் கவர்ந்த தொண்டனாக  அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்று 1970இல் தமிழரசுக்கட்சியின் தானைத் தளபதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் தேர்தலில் போட்டியிட்டு எவரும் எதிர்பாரத வகையில் வெற்றி பெற்றார்.


    பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் தனது தொகுதியில் படித்த அனைவருக்கும் கட்சி பேதமின்றி வேலைவாய்ப்பு வழங்கினார். வீதி திருத்தினார், மின்சாரம் கொண்டு வந்தார், வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தார். அவர் செய்த பணிகள் ஏராளம். இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் சமர்ப்பணம்.


    1972இல் நடைமுறைக்கு வந்த இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் புதிய அரசியல் யாப்பை அங்கீகரித்த காரணத்தினால் தமிழ் இன உளவாளர்களால்  "துரோகி" என்று தூற்றப்பட்டார். இன்றைய வாய்ப்பேச்சு வல்லவர்களான அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் தன்னலமற்ற மக்கள் சேவகனாகத் திகழ்ந்த தியாகராசா 1980களின் முற்பகுதியில் இலங்கை அரசு அறிமுகஞ் செய்த மாவட்டசபை என்ற மாயமானின் வலையில் சிக்கி ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளனாக தேர்தல் களத்தில் நின்று பிரச்சார மேடை அருகே தமிழீழத் தீவிரவாதி ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு நெஞ்சிலே குண்டு தாங்கி மரணத்தைத் தழுவிக் கொண்டார்.


தமிழ்த்தேசியவாதிகளின் அணியில் நின்று தியாகராசாவின் துரோக அரசியலைக் கண்டித்து தூற்றித் திரிந்தவன் என்ற வகையில் அவரது அந்திம காலத்தில் "நடுநிலை ஊடகவியலாளனாக" இறுதி ஒரு சில நாட்கள் அவரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்து அவரது உயர்ந்த உள்ளத்தை உணர்ந்து கொண்டேன். இறுதியாக மாவடி கண்ணகி அம்மன் கோவிலடி தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக க.க. அவரது ஜீப் வண்டியில் சென்று மக்கள் எல்லோரும் "இம்முறை உங்களுக்குத் தான் ஐயா எங்கள் 'வோட்டு' " என்று ஒருமித்த குரலில் கூற துப்பாக்கிதாரி உங்களுக்குத் தான் எனது 'வேட்டு' என்று கூறி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். "ஐயோ அம்மா சுட்டு விட்டார்கள்" என்ற அவரது இறுதி வார்த்தையைத் தான் என்னால் கேட்க முடிந்தது. மறுநாள் யாழ் அரசினர் போதனா வைத்தியசாலையில் அவரது உயிர் பிரிந்தது.
    

அவரது இறுதிக்கிரியைகளில் இலங்கைப் பிரதம மந்திரி ஆர். பிரேமதாஸ உட்பட அமைச்சர்கள் சிலரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். காரைநகர் வரலாறு காணாத சனசமுத்திரத்தில் அவரது பூதவுடல் காரைநகரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வலந்தலை கடற்கரை வெளியில் விசேடமாக அமைக்கப்பட்ட சிதையில் தீயுடன் சங்கமமாகியது.


அமரர். ஆ. தியாகராசா மறைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் மறைந்தோடி விட்டபோதிலும் அவரது மாணவர்கள், ஆதரவாளர்கள் மனங்களில் அவர் என்றுமே மறையாமல் நிலைத்து நிற்கிறார். அவரைப் போன்ற தியாகி  காரைநகரில் இதுவரை தோன்றியதில்லை. இனியும் தோன்றப் போவதில்லை.

வாழ்க தியாகராசா நாமம்!
வளர்க அவர் தம்பணி!


நன்றி

"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                      இங்ஙனம்
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                      செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                           மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                     03 – 06 – 2017