கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய தலைவராக சபாரத்தினம் பாலச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

CKCA logo

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய தலைவராக சபாரத்தினம் பாலச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டம் நேற்றுக் காலை 9.00மணிக்கு Scarborough Civic Centreஇல் மன்றத்தின் தலைவர் திரு.த.பரமானந்தராசா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

 போசகர் திரு.க.கனகராசாவின் தலைமையில் நிர்வாக சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது மன்றத்தின் புதிய தலைவராக திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களும் உப-தலைவராக திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். கனேடிய அரசாங்க நிறுவனமொன்றில் கணக்காய்வாளர் பதவியிலிருக்கும் திரு.பாலச்சந்திரன் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் உதவிப் பொருளாளராகவும் பின்னர் திட்டமிடல் போசகர் சபை உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். செயலாளர் பதவிக்கான தெரிவு நடைபெற்றபோது எவரும் அதனை ஏற்க முன்வராத நிலையில் முழுமையான ஒரு நிர்வாகத்தினை அமைக்க முடியாத சூழ்நிலை நிலவியது. இந்நிலையில்  புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் உப-தலைவர் ஆகிய இருவரும் முன்னைய நிர்வாகத்தில் இவ்விரு பதவிகள் தவிர்ந்த ஏனைய பதவிகளில் அங்கம் பெற்றிருந்தவர்களும் இணைந்து  ஒரு மாத காலத்திற்கு தற்காலிக நிர்வாகமாக செயற்படுமாறு பொதுச் சபை கேட்டுக்கொண்டதை சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த ஒரு மாத காலத்தினுள் சங்கத்தில் நிலவுகின்ற ஆரோக்கியமற்ற நிலையினை நீக்கிவைத்து சுமுகமான ஒரு நிலையை உருவாக்கி வைக்கும் நோக்குடன் ஐந்து பேர் கொண்ட சமாதானக் குழு ஒன்று பொதுச் சபையினால் நியமிக்கப்பட்டது. முழுமையான நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்காக ஒரு மாத காலத்துள் பொதுச் சபை கூட்டப்படவேண்டும் என்பதுடன் முரண்பாடுகளைக் களைந்து காரை மாதாவின் புதல்வர்கள் என்ற உணர்வுடன்  இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு மிகுதியாகவுள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை  ஜனநாயகரீதியில் நிரப்பக் கூடிய ஓர் சூழ்நிலையை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட சமாதானக் குழு உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என பொதுச் சபை கேட்டுக்கொண்டது. 

சமாதனக் குழுவின்  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் விபரம்:

திரு.சிவசம்பு சிவநாதன் – குழுவின் இணைப்பாளர்(முன்னைநாள் நிர்வாக உறுப்பினர்)
திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் (மன்றத்தின் தலைவர்) 
திரு.கனக சிவகுமாரன் (முன்னைநாள் செயலாளர்)
திரு.தம்பையா அம்பிகைபாகன்(முன்னைநாள் நிர்வாக உறுப்பினர்)
திரு.கந்தையா பஞ்சலிங்கம் (முன்னைநாள் செயலாளர்)

பொதுக் கூட்டத்தின் நிறைவில் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைவராக பதவி வகித்து ஆற்றிய அளப்பரிய சேவையை பாராட்டிய பொதுச் சபை உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டது.