அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டு மாமா) அவர்களின் நினைவலைகளும் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணமும்

PADU MAMAVerney07.2016

 

அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டு மாமா) அவர்களின் நினைவலைகளும் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணமும்
 

                                                                                                                                                                                                                                   

          –  திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் B.Sc. 

1970 களில் இருந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைநகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த வாரிவளவு நல்லியக்க சபையானது கல்வி, கலை, விளையாட்டு என பல்துறைகளிலும் காரைநகர் வாழ் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் வகையில்; காரைநகரிலும் 1991-1996 காலத்தில் ஏற்பட்ட இடம்பெயர்வின்போது காரைநகருக்கு வெளியேயும் தளராமல் சேவையாற்றி வந்த சபையாகத் திகழ்ந்தமையை காரைநகர் வாழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். 

இச்சபையின் அச்சாணியாக அதன் செயலாளராக அரும்பெரும் தொண்டாற்றி கலைஞர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் என அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்று அர்ப்பணிப்போடு சேவையாற்றியவர் 'பட்டுமாமா' என்று அன்பாக அழைக்கப்படும் அமரர்.சரவணமுத்து பத்மநாதன் என்றால் மிகையாது.

காரைநகர் மேற்கு, வாரிவளவு என்ற குறிச்சியில் 1932 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பிறந்த அமரர்.சரவணமுத்து பத்மநாதன் அவர்கள் தமது தொடக்கக் கல்வியை வியாவில் சைவ வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும்; முதுநிலைக் கல்வியை இவர் காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட யாழ்ற்றன் கல்லூரியிலும் பயின்று, பின்னர் இலங்கை எழுது வினைஞர்களுக்கான பொதுப் பரீட்சையில் சித்தியெய்தி கொழும்பில் இலங்கை போக்குவரத்துத் திணைக்களத்தில் எழுது வினைஞராகவும் பின்னர் யாழ் கல்வித் திணைக்களத்தில் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். 

பட்டு மாமா அவர்கள் வாரிவளவு நல்லியக்க சபையினூடாக காரைநகரில் கல்வி, கலை, விளையாட்டு எனப் பலதுறைகளில் இளம் தலைமுறையினரை ஊக்குவித்ததுடன் எமது பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களையும் பாதுகாத்தார். குறிப்பாக, காரைநகர் மாணவர்களுக்கிடையில் தமிழ் ஆங்கில பேச்சுப் போட்டிகள், பட்டி மன்றம், வாய்ப்பாட்டு இசைப் போட்டி, பரதநாட்டிய ஆற்றுகைப் போட்டிகள், கிராமிய நிகழ்ச்சிகளின் போட்டிகள் எனப் பல போட்டிகளை நடத்தி கலை ஆர்வமுள்ள வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு அரங்கம் அமைத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டி ஊக்குவித்தார். தனது பெயரையோ புகழையோ விரும்பாமல் 

"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்"
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க 

ஆசிரியர்கள், கலைஞர்கள், கொடை வள்ளல்கள், விளையாட்டுத்துறை வீரர்கள் எனப் பல்துறை சார்ந்த பெரியவர்களை அணுகி அவர்கள் துணையுடன அக்காலத்திலிருந்து இன்று வரை காரைநகரில் கலைப்பணியாற்றி வரும் 'களபூமி முத்தமிழ் பேரவை', மற்றும் விளையாட்டுக் கழகங்கள், பாலர் பாடசாலைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இந்த அளப்பெரும் பணிகளை அயராது பின்நின்று இயக்கியவர் பட்டுமாமா அவர்கள். 

இன்று இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் பிரபலமாக விளங்கும் காரைநகர் தந்த கலைஞர்களும், மேடைப் பேச்சாளர்களும், ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், ஏன் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற துறைசார் வல்லுநர்களும் அன்று வாரிவளவு நல்லியக்க சபை மேடையில் தமது கன்னி ஆற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வளர்ந்தவர்கள் என்று தயக்கமின்றிக் குறிப்பிடலாம்.    
 
அவரின் பொது சேவைகளில் ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். காரைநகர் மக்கள் காரைநகரை விட்டு 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து யாழ் குடநாட்டின் கிராமங்கள் எங்கும் பரந்து வாழ்ந்த சமயம், இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற காரைநகரைச் சேர்ந்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஒரு பாராட்டு விழாவை நடத்தி ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஆயிரம் ரூபா(ரூ1000.00) ஊக்குவிப்புப் பரிசாக அன்று வழங்கியிருந்தார். சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்த இக்கட்டான காலகட்டதில் எங்கள் கிராம மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் பட்டுமாமா அவர்கள் அன்று சேவையாற்றியமை 

                      "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
                        ஆலயம் பதினாயிரம் நாட்டல்
                        அன்ன வாயினும் புண்ணியங்கோடி
                        ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"  

என்ற புரட்சிக் கவிஞர் பாரதியாரின் வரிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தமையை நினைவூட்டுகின்றது.

சமூக சேவையாளர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக வாழ்ந்து காரைநகரின் வரலாற்றில் மறக்க முடியாத இடம் பிடித்துக் கொண்ட பட்டுமாமா அவர்கள் 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தபோது கனடா ரொரன்ரோவில் அன்னாருக்கான இரங்கல் கூட்டம் ஒன்றினை திரு.சண்முகம் கந்தசாமி அவர்கள் தலைமையில் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களின் ஒருங்கமைப்பில் கனடா-காரை கலாச்சார மன்றம் நடத்தி கனடா வாழ் காரை மக்கள் அன்னாரை நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வெளியிடப்படும் "காரைவசந்தம்-2008" சிறப்பு மலரில் அன்னாரின் பணிகள் பற்றி ஒய்வுநிலை அதிபர் திரு.க.தில்லையம்பலம் அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

காரைநகர் வாரிவளவு நல்லியக்க சபை தனது பணிகளின் ஒர் அங்கமாக காரைநகரில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசில்கள் வழங்கி வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து சேவையாற்றியது. அத்துடன் காரைநகரில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளையும், காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடற்பரப்பில் நீச்சல் போட்டி, காரைநகர் சுற்று வீதியில் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், மற்றும் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், சதுரங்கம் போன்ற பெருவிளையாட்டுகளையும் நடத்தி சித்திரைப் புத்தாண்டு தினத்தில் பரிசளிப்பு விழாவில் பரிசுகளை வழங்கி விளையாட்டுத்துறையை ஊக்குவித்து வளர்த்தமை பட்டுமாமாவின் அளப்பரிய சேவைகளில் இன்னொன்றாகும். 

                       "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
                        செயற்கரிய செய்கலா தார்"

என்ற வள்ளுவன் குறளுக்கமைய செயற்கரிய செயல்களைச் செய்த சேவையாளராக பட்டு மாமா விளங்குகின்றார். 

அந்தவகையில், கனடா-காரை கலாச்சார மன்றம் ஆண்டு தோறும் நடத்தும் கோடை கால ஒன்று கூடல் விளையாட்டுப் போட்டிகளில் அவரின் சேவையை மதித்து ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமரர்.அருணாசலம் கருணாகரன் தலைமையிலான நிர்வாக சபை 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றியிருந்தும் அதனை அமுல்படுத்துவதில் தவிர்க்கமுடியாத சிக்கல் ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும். 

இருந்தபோதும் இவ்வாண்டு கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் வருடாந்த கோடை கால ஒன்று கூடல் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு (தாய்ச்சி) போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு "அமரர் சரவணமுத்து பத்மநாதன்(பட்டுமாமா) ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம"வழங்கப்பட இருக்கின்றமை "பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டகல்லும்…" என்று பதினோராம் திருமுறையில் சேரமான் பெருமாள் நாயனார் குறிப்பிடுவது போல சாலப் பொருத்தமானது.