அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

IMG_0174

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளி விழா அதிபரும் மக்கள் நலன்பேண அர்ப்பணிப்போடு அல்லும் பகலும் ஓயாது செலாற்றிய காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமாகிய அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை(11.06.2016) மாலை செல்வச் சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்த இவ்விழாவில் அமரர் தியாகராசா அவர்களின் நிர்வாகத்திறமையும் அர்ப்பணிப்பும்மிக்க சேவையினால் உன்னதமான நிலையைப் பெற்று விளங்கிய கல்லூரியினால் உருவாக்கப்பட்டிருந்த கல்வியாளர்களஇ; பல்துறை சார்ந்த அறிஞர்களஇ; சாதனையாளர்கள்இ காரை மண்ணின் அபிமானிகள் எனக் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் கலந்து கொண்டு காரை மண்ணிற்கு ஒளியேற்றியதுடன் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த ஈடு இணையற்ற சேவையாளரை நினைவு கூர்ந்து மதிப்பளித்தனர்.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவரும் ஓய்வு நிலை ஆசிரியருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை கல்லூரி உதை பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் நில அளவைத் திணைக்கள ஓய்வு நிலை அலுவலருமாகிய திரு.பொன்னையா தியாகராசாவும் பாரியாரும்  S.P.S. நினைவு உதவித் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.சுப்பிரமணியம் அரிகரனும் பாரியாரும் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து பிற்பகல்3.00 மணிக்கு விழா ஆரம்பமாகியது. 

சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் திருமுறை ஓதி கடவுள் வணக்கம் செய்யப்பட்டதுடன் அக வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து  கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடி பதிவுசெய்யப்பட்டிருந்த 'தாய் மலரடி பணிவோம்'; என ஆரம்பிக்கும் கல்லூரிப் பண் ஒலி பரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று தாம் கற்று வளம்பெற்ற கல்லூரிக்கு மதிப்பளித்தனர்.

அமரரின் திருவுருவப் படத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் கணக்காய்வாளரும் துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை அதிகாரியுமாகிய திரு.கந்தப்பு அம்பலவாணர் மலர் மாலை அணிவித்தார்.  

பழைய மாணவர் சங்கத்தின் உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் விருந்தினர்களையும் சபையோரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து தலைவரது உரை இடம்பெற்றது. 

இதனையடுத்து அமரரின் வாழ்க்கை வரலாறுஇ கல்லூரியின் அதிபராக 25ஆண்டுகள் ஆற்றிய பணிகள்இ பொதுப்பணிஇ ஊருக்கான பணி என்பனவற்றை உள்ளடக்கி அவ்வப்போது வெளிவந்திருந்த ஆக்கங்களைத் தாங்கிய ஆவணப்படுத்தும் வகையிலான விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மலரின் வெளியீட்டுரையினை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் மலரின் தொகுப்பாளருள் ஒருவருமாகிய திரு.கனக சிவகுமாரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளரும் மலரின் மற்றைய தொகுப்பாளருமாகிய திரு.மாணிக்கம் கனகசபாபதி முதற் பிரதியை  Double Seal Insulating அதிபரும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாடசாலை வளர்ச்சிக்கு உதவி வருபவருமாகிய தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் கௌரவ பிரதியை அமரரின் உறவினரும் பழைய மாணவருமாகிய திரு.கந்தசாமி தேவகுமார் அவர்களுக்கும் வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.. அமரர் பல துறை சார்ந்து பரந்து பட்ட சேவையினை சமூகத்திற்காக வழங்கியிருந்தார் எனவும் இவை குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டு ஆவணப்படுத்தும்வகையிலான ஓரு முழுமையான நூல் எதிர்காலத்தில் வெளிவருவதற்கான முதற்படியாக இம்மலரின் வெளியீடு; அமையும் என்ற நம்பிக்கையை திரு கனக சிவகுமாரன் தனது வெளியீட்டுரையின்போது வெளிப்படுத்தியிருந்தார்.

தமது மருத்துவ சேவையினாலும் சமூக உணர்வினாலும் காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது கனடா வாழ் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பையும் பெற்று கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற கனடாவின் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அதே போன்று கல்லூரியின் மற்றுமொரு மகிமை மிக்க பழைய  மாணவரும் சிறந்த கல்வியாளருமாகிய பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தார். கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற பழைய மாணவரும் கனடாவின் பிரபல பல் மருத்துவ நிபணரும் சமய உணர்வாளருமாகிய பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை மேலும் மேன்மையுறச் செய்தார்.

பிரதம விருந்தினர் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா உயர்ந்த கல்வித் தகைமைகளைக் கொண்டு சிறந்த கல்வியாளராக விளங்கி காரைநகருக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் காரைநகர் இந்துக் கல்லூரியில் 25ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தும் பின்னர் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்தும் ஆற்றிய அளப்பரிய பணிகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விளங்குகின்றார் எனக் குறிப்பிட்டார.; அதிபராக இருந்த காலத்தில் கல்வித்தர விருத்தியில் எவ்வளவு கவனம் செலுத்திச் செயற்பட்டாரோ அதேயளவு கவனத்தினை மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் வழங்கி செயலாற்றியிருந்ததுடன் இதனை ஊக்குவிக்கும் வகையில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை தெரிவு செய்து பரிசில்கள் வழங்கி வந்துள்ளார். கர்நாடக சங்கீதத்தை முறையாகப் பயின்ற இவர் ;தாம் ;கல்வி பயின்ற காலத்தில் பாடசாலையில்  கச்சேரி செய்து மற்றையவர்களை மகிழ்வித்தவர் எனவும் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

விழா சிறப்புற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர் திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார் விழா அரங்கில் வாசித்தார்.

கௌரவ விருந்தினர் பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா அதிபராக சேவையாற்றிய காலத்தில் பாடசாலையின் உயர்வுக்காக இவர் ஆற்றிய சாதனைப் பணிகள் இவரது சேவைக் காலத்தை பொற்காலமாக அடையாளப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டதுடன் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் கல்வியைத் தொடர்ந்து கற்று பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் கல்வியானது ஒருவரது வாழ்நாள் முழுவதற்குமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுடன் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் பாராது அனைவரையும் சமமாக மதித்து செயலாற்றியவர் எனவும் குறிப்பிட்ட சிவகுமாரன,; தமது உரையின் இறுதியில் அமரரின் பெருமைகளை கவிதை வடிவில் சபையில் சமர்ப்பித்தமை உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

காரை அபிவிருத்தி சபை வழங்கிய வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக  உறுப்பினர் திருமதி.பிரபா ரவிச்சந்திரன் விழா மேடையில் வாசித்தார். 

சிறப்பு விருந்தினர் பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் தமது உரையில் அமரர் தியாகராசா காரை மண்ணுக்கு ஒளியேற்றி வைத்து தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றிய கர்மவீரர் என்பதுடன் காரை மண்ணில் தோன்றிய சேவையாளர்களுள் முதன்மையானவராக விளங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டதுடன்  அமரரால் தரமான கல்வியை வழங்கும் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்ட இந்துக் கல்லூரியிலிருந்து தாம் பல்மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டதுடன் அக்காலகட்டத்தில் அதிக அளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தார். அமரர் தியாகராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை அட்டவணைப்படுத்தி உணர்வுபூர்வமாக ஆற்றிய மருத்துவகலாநிதி ஆதிகணபதியின் விரிவான உரையானது தாம் நேசித்த மக்களுக்காக இத்துணைப் பணிகளை வெற்றிகரமாக சாதித்தாரே என சபையோரை ஒரு கணம் வியக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது எனலாம்.

பழைய மாணவர் சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை பிரபல ஆசிரியருமாகிய சிவநெறிச்செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம், கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவரும் கணக்காளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.தம்பிஐயா பரமானந்தராசாஇ  பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுநிலை உதவி நிலஅளவையாளர் நாயகமுமான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளைஇ கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் துறைமுக அதிகார சபையின் பிரதம காசாளருமாகிய திரு.முருகேசு சின்னத்துரைஇ வாட்டலூ பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் சமூக ஆர்வலருமாகிய கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் ஆகியோர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா மக்களுக்காக விட்டுச்சென்ற வரலாற்றுப் பணிகளை பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்கி உரையாற்றியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பலரும் அமரர் தியாகராசாவின் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினைப் பாராட்டி நன்றி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வுரைகளின் இடையே கல்லூரியில் நடைபெற்ற அமரரின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வரும் அறிவிப்பாளருக்கான தேசிய நிலை போட்டியாளருமாகிய செல்வன் விநோதன் கனகலிங்கம் ஆற்றிய உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டிருந்தது.

சிறந்த பேச்சாளராக மிளிர்ந்து வருகின்ற செல்வன் விநோதன் அமரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அன்னாரது வரலாற்றுப் பணிகளை தனது பேச்சாற்றல் ஊடாக வெளிப்படுத்தியிருந்த பாணி சபையோரை வெகுவாக கவர்ந்திருந்தது. 


பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் இலங்கை வங்கி அதிகாரியுமான திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் சிறப்புற்று விளங்கிய அமரர் கலாநிதி தியாகராசாவின் நூற்றாண்டு விழா நிறைவுற்றது.

படங்கள்: திரு.திருவேங்கடம் சந்திரசோதி

செய்தி பிரதியாக்கம்: திரு.கனக.சிவகுமாரன்

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.