நூல் வெளியீட்டு விழா சிறப்புற யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களின் வாழ்த்துச் செய்தி

murugamoorthy

வாழ்த்துச் செய்தி

 

சைவர்களி னாதரவும் பெருநிதியு


மரசினர்தஞ் சார்புங் கொண்டு


மைவளருங் கண்டத்தான் சமயநெறி


வளர்ந்தோங்க மாசில் பள்ளி


மெய்வகையிற் பன்னூறு நிறுவினனால்


நாடெங்கு மெய்ம்மை யுள்ளச்


சைவனரு ணாசலற்குச் சிலையாகித்


     தமிழ்போலத் தழைத்து வாழி

ஈழத்துச் சிதம்பர புராணம்

இலங்கைத் திருநாட்டில் அந்நியராட்சி இடம்பெற்ற காலகட்டம் சைவமும் தமிழும் நமது சமூகத்திலிருந்து விலகிச் செல்லும் சூழ்நிலை. இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் அவதாரம் இருளை நீக்கி ஒளியைக் கொணரும் உதய சூரியன் போன்று அமைந்திருந்தது. நாவலர் பெருமானின் சைவப்பணி, தமிழ்ப்பணி, நூல் வெளியீட்டுப்பணி, கல்விப்பணி என்ற பன்முக ஆளுமைகள் சைவத்தையும் தமிழையும் நம்மவர்கள் பின்பற்றுவதற்கு கால்கோளாகியது. நாவலர் பெருமானிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் அவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி 1879 இல் நாவலர் பெருமான் மறைந்த பின்னரும் கூட சைவத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பணியாற்றினார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க பெரியாராக காரைநகர் அருணாசல உபாத்தியாயர் முக்கிய இடம் பெறுகிறார் என்பதை நாவலர் பெருமானின் குரு சீட பரம்பரையில் வந்த இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் “அவருக்குப்பின் அருணாசலம்” என்பதால் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.

பெரியார் அருணாசலத்தின் முக்கிய குறிக்கோளாக சைவப் பாரம்பரியமூடான மாணவர் கல்வியும், ஆசிரியர் கல்வியும் அமைய வேண்டும் என்பதாக இருந்தது. இக்கல்வி முறைமையை நமது பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள், கஸ்;டங்கள், துன்பங்கள் சொல்லொணாதவை. இவரின் முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக நமது ஊரில் தோற்றம் பெற்ற வியாவில் சைவ வித்தியாலயம், காரைநகர் இந்துக் கல்லூரி, சுப்பிரமணிய வித்தியாசாலை என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவரின் 30 வருட உழைப்பின் பயனாக 1915 இல் கோப்பாயில் ஓர் ஆசிரியர் கலாசாலையும் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலை, இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கழகம், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பனவும் தோற்றம் பெற்றன. பெரியார் அருணாசலத்தின் முயற்சியும் சேவையும் வித்தாகி மரமாகி நின்றதை விருட்சமாக்கியவர் திரு. சு. இராஜரட்ணம் அவர்களாவார். பெரியார் சைவப்பாரம்பரியமூடான தமிழ்மொழி மூலக்கல்வி மட்டுமன்றி, சைவப்பாரம்பரியமூடான ஆங்கில மொழி மூலக்கல்வி முறையையும் ஏற்படுத்தி கிராமங்கள் தோறும் இந்து ஆங்கில வித்தியாசாலைகளை நிறுவினார். இவைகளே பின்னர் இந்துக் கல்லூரிகளாக உருவாகின.

பெரியார் அருணாசலம் அவர்களுடைய அர்ப்பணமான, ஈடு இணையற்ற இச்சேவைகளை வெளிக்கொணருகின்ற நூலாக வல்வை சிவகுரு வித்தியாசாலை முன்னாள் தலைமை ஆசிரியர் திரு சி. கணபதிப்பிள்ளை ஐயர் அவர்களால் எழுதப்பட்ட “சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த  திரு. ச. அருணாசலம் அவர்கள்” என்ற நூலினை இரண்டாவது பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிடுவது ஒரு பாராட்டப்பட வேண்டிய, போற்றப்படவேண்டிய விடயமாகும். இந்நிகழ்வினை ஒழுங்கமைப்புச் செய்த கனடா சைவசித்தாந்த மன்றத்திற்கும் அதன் தலைவர் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு. தி. விசுவலிங்கம் அவர்களுக்கும், விழா இனிதே சிறப்புற நடைபெறுவதற்கும் யாழ்ற்ரன் கல்லூரி சமூகம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

வே. முருகமூர்த்தி 


அதிபர்


யாழ்ற்ரன் கல்லூரி


காரைநகர்

Greetings Yarlton College-page-001Greetings Yarlton College-page-002