நூல் வெளியிட்டு விழா சிறப்புற பண்டிதை செல்வி.யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

167

காரைநகர் சைவ மகா சபை 'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூலை முதலாவது பதிப்பாக 1971 இல் வெளியிட்டபோது நூலின் எழுத்தாக்கங்களை அச்சு வாகனம் ஏற்றுவதற்கு உதவியாக, அழகிய எழுத்தில் எழுதி உதவியிருந்தவரும் முதுதமிழ் ஆசிரியையும், சிவநெறிப்பிரசாரகருமாகிய கலாபூசணம், பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் B.A (Dip.in.Ed.) அவர்கள் நூல் வெளியீட்டு விழா சிறப்புற வழங்கிய வாழ்த்துச் செய்தியை இங்கே காணலாம்.  
 
                                                          வாழ்த்துச் செய்தி


தனித்துவமான சிந்தனையும் இன்றைய சமூக ஆர்வலர்களுக்கு ஒரு வழிகாட்டியுமாகி தமது, உடல், பொருள் அனைத்தையும் சைவத் தமிழ்க்கல்விப் பணிக்காக  அர்ப்பணித்த ஒரு சீரிய சிந்தனையாளர் திரு. ச.அருணாசலம் அவர்கள்
காரைநகரின் கலங்கரை விளக்கம், பெயர், புகழ் விரும்பாது தன்னந்தனியாக நின்று பூர்வீகச் சொத்தை விற்றும் உண்டியும், உறையுளும் கொடுத்தும் சைவ ஆசிரியர்களையும், சைவப் பாடசாலைகளையும் உருவாக்கியும், வேதனமின்றி கல்வி கற்பித்தும் வண்ணை நாவலர் பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பதவி ஏற்றும், (1914–1915) திண்ணைப் பள்ளியை (1885ல்) உருவாக்கியும், நினைவு, எண்ணம், சிந்தனை, செயல் எல்லாமே ஒருமுகப்பட்டு கல்விப்பணி வளர்ச்சிக்கான வித்துக்களை ஊன்றியவர் திரு. ச.அருணாசலம் அவர்கள்
    வெற்றுடம்பும், வெறும் காலும், வெண்ணீறனிந்த  நெற்றியும், மெலிந்து நலிந்த உடம்பும், திரை செறிந்த தேகமும், உள் வாங்கிப்போன வயிறும் தான் அவரிடம் இருந்த சொத்துக்கள் 
எண்ணத்தில் தெளிவும், உறுதியும் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்று சாதித்துக் காட்டியவர்.
1.    சுப்பிரமணிய வித்தியாசாலை (1889)
2.    சுயம்புச் சட்டம்பியாரின் ஆங்கிலப் பாடசாலை 
3.    வியாவில் சைவ பரிபாலன பாடசாலை 
ஆகியன இவரது எண்ணத்தில் மலர்ந்தவை 'ஐக்கிய போதனா ஆசிரியர் கலாசாலையின் உருவாக்கம், 'சைவ வித்தியா விருத்திச் சங்கம்' என்பன இவரது அயராத உழைப்பின் பதிவுகள். பெயர், புகழ் வேண்டாது தீர்க்கமான சிந்தனையுடன் சலியாது செயற்பட்ட அவர்தம் பணியை அற்பமாக மதித்து விட முடியாது.
    அன்னார் காட்டிய வழியில் செயற்பட்டு தன்னலமற்ற கல்விப் பணியின் மகத்துவத்தை எல்லோரும் உணரும்படி செய்தலே எம்மவரின் கடப்பாடு. 
அன்னாரின் புகழ் பூத்த பணி என்றென்றும் எல்லோருக்கும் முன்னுதாரணமாக அமையட்டும்


                                                                        சுபம்


கலாபூசணம், பண்டிதை. செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம் B.A (Dip. in. Ed)