காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர்

காரைநகர் மகான் சிவத்திரு.சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள் பற்றிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூல் காரைநகர் சைவ மகா சபையினால் 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலின் இரண்டாம் பதிப்பினை கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிடுகின்றது. 
இவ்வேளையில் அருணாசால உபாத்தியாயர் அவர்களின் பேரனும் ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை முன்னாள் ஆசிரியர் அமரர்.சிவப்பிரகாசம் அவர்களின் மகனும் ஓய்வு பெற்ற ஆசிரியருமாகிய திரு.சி.சிவானந்தரத்தினம் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே எடுத்து வரப்படுகின்றது.

     Mr. S. Sivanantheratnam

    காரைநகரில் சைவப்பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு அவதரித்த
                     அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர்

                                 (திரு. சி. சிவானந்தரத்தினம் )

    இந்து சமுத்திரத்தில் முத்துப் போல் விளங்குவது இலங்கை.  இலங்கைத் திருநாட்டிற்குச் சிகரமாகத் திகழ்வது யாழ்ப்பாணத் தீபகற்பம்.  இத்தீபகற்பகத்துக்குத் திலகம் போல் திகழ்வது காரைநகர்.  சைவமும் செந்தமிழும் சைவ சமயப் பண்பாடும் தழைத்தோங்கும் இந்நகரில் காரைநகர் வடக்கில் மல்லிகை குறிச்சியைச் சேர்ந்த சைவ வேளாளர் மரபில் உதித்த திரு. சிற்றம்பலம் சங்கரப்பிள்ளைக்கும் அவரின் பண்புமிக்க பாரியார் பத்தினியம்மாவுக்கும் எதிர்காலத்தில் காரைநகரில் சைவப் பாடசாலைகள் தோன்றவும் பயிற்றப்பட்ட சைவத் தமிழாசிரியர்களைத் தோற்றுவிப்பதற்கும் 1864ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் தேதி புத்திரராகப் பிறந்தார் திரு. அருணாசலம் அவர்களுக்கு அன்புச் சகோதரியாக வள்ளியம்மை விளங்கினார்.

    திரு. அருணாசலம் அவர்கள் தாய் தந்தையரைப்போல் மாமிசம் சாப்பிடமாட்டார். மதுபானம் அருந்தமாட்டார்.  புகைத்தல் பழக்கத்தையும் அறவே வெறுத்தார்.  வாழ்நாள் முழுவதும் சைவப் பண்பாட்டையே கடைப்பிடித்து வாழ்ந்தார். இளம் பராயத்தில் இருந்தே இறைபக்தி உடையவராகக் காணப்பட்டார்.

    திரு. அருணாசலம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் களபூமி ஆலடியைச் சேர்ந்த அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலையிற் கற்றார்.  இப்பாடசாலையே காரைநகரில் அக்காலத்திற் தோன்றிய முதற் பாடசாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அன்னாரின் தந்தையார் தனது மகனை சிரேஸ்ட கல்வியைத் தொடர ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களால் தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிற் சேர்த்தார். இப்பாடசாலையில் சிரேஸ்ட கல்வியைத் தொடர்ந்து படித்து சிரேஸ்ட கல்வித் தராதரப் பரீட்சையிற் சித்தியடைந்தார்.  இப்பாடசாலையிற் கல்வி கற்கும்போது தினந்தோறும் வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்.  இங்கே சமயதீட்சையும் பெற்றார். ஆறுமுகநாவலர் அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்ததைக் கேள்வியுற்றார்.  இதனால் தானும் ஆசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் பதிந்தது.

   எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது ஆன்றோர் அருள்வாக்கு.  இதற்கு அமைய அருணாசலம் அவர்கள் தான் ஓருபயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வேர் ஊன்றியது.  இதனால் அன்னார் தெல்லிப்பழை அமெரிக்கன் மிசன் போதனா பாடசாலையில் (Training college) போய்ச் சேர்ந்தார்.  இப்பாடசாலையில் பயிற்சிக் கல்வியைத் தொடர்ந்தார்.  எனினும் மதம் மாறாது கல்வியைத் தொடர்ந்தார்.  இறுதி ஆண்டில் மதம் மாற மறுத்த படியால் போதனா பாடசாலை நிருவாகத்தினர் பயிற்சித் தராதரப் பத்திரம் வழங்கவும் கற்பிக்க பாடசாலைகளில் ஆசிரிய நியமனம் வழங்கவும் முற்று முழுதாக மறுத்துவிட்டனர்.  இவருடன் பயிற்சி பெற்ற ஏனைய மாணவர்கள் அனைவரும் மதம் மாறி ஞானஸ்தானம் பெற்றனர்.  இப்போதனா பாடசாலையே தற்போது தெல்லிப்பளை யூனியன் கல்லூரியாக திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    போதனா பாடசாலையை விட்டு வெளியேறியதும் கிராமங்கள் தோறும் சைவப்பாடசாலைகள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை தாபிக்க வேண்டும் என்றும் எண்ணங்கள் அவர் உள்ளத்தில் நன்றாக வேர் ஊன்றியது.  அன்று அன்னார் மதம் மாறி இருந்தால் ஆசிரிய பயிற்சித் தராதரப் பத்திரமும் ஆசிரியர் பதவியும் பதவி உயர்வும் பணமும் சம்பாதித்து பெரும் செல்வனாக வந்திருக்க முடியும்.  ஆனால் அந்த அற்ப ஆசையை விரும்பாது சைவசமய சீலராக விளங்கினார்.  பொதுப்பணியில் ஈடுபட்டு தனது சொத்துக்களையும் விற்றுச் செலவு செய்தார்.

    போதனா பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் தனது கிராமமான காரைநகரில் திண்ணைப்பள்ளிக் கூடத்தை ஆரம்பித்தார்.  கிட்டங்கிகார பொன்னம்பலம் அவர்களின் கட்டிடத்தின் ஒரு பகுதியில் திண்ணைப்பள்ளிக் கூடத்தை ஆரம்பித்து நடத்தினார்.  நாளுக்கு நாள் பிள்ளைகளின் தொகை கூடிக் கொண்டு வந்தது.  இந்நிலையில் சைவசீலர் திரு. கந்தப்பு சுப்பிரமணியம் அவர்களின் உதவியுடன் அயலில் உள்ள அவரின் காணியில் 1889 ஆம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.  இதுவே காரைநகரில் அன்னார் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சைவத் தமிழ்ப் பாடசாலையாகும். இதற்குச் சுப்பிரமணிய வித்தியாசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது.  திரு. க. சுப்பிரமணியம் அவர்கள் காணியை 1896 ஆம் ஆண்டு பாடசாலைக்குத் தருமசாதனம் செய்துவிட்டார்.  இப்பாடசாலையை நிருவகிப்பதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.  திரு. க. சுப்பிரமணியம், திரு. ச. அருணாசலம், பிரம்மஸ்ரீ கா. சிவசிதம்பரஐயர்.  திரு. க. சுப்பிரமணியம் அவர்களே பாடசாலை முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

   திரு. அருணாசலம் அவர்களின் தாய் மாமனார் திரு. சண்முகம் கணபதிப்பிள்ளைக்கு நாகமுத்தாள் என்ற மகளும் ஆறுமுகம் என்ற மகனும் இருந்தனர். எனவே நாகமுத்தாள் அன்னாருக்குச் சொந்த மைத்துனி ஆவார். அக்கால வழமைப்படி தாய் மாமன் மகளான நாகமுத்தாளை 1890 ஆம் ஆண்டளவில் திருமணஞ் செய்து கொண்டார். திருமணம் செய்த பின்னர் குட்டிப்புலத்தை (குமிழங்குளியை) வதிவிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.  சுப்பிரமணிய வித்தியாசாலையும் குட்டிப்புலத்தையே (சக்கலாவோடை) சேர்ந்ததாகும்.

   திரு. அருணாசலம் நாகமுத்தாள் தம்பதியர்களுக்கு சிவப்பிரகாசம், சிவஞானம், சிவபாதம் ஆகிய மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தனர்.

   களபூமி ஆலடியில் அமெரிக்கன் மிசன் எப்படி முதல் தமிழ் பாடசாலையை ஆரம்பித்தார்களோ அதே போல் அமெரிக்கன் மிசன் ஒரு ஆங்கிலப் பாடசாலையையும் தங்கோடையில் ஆரம்பித்தது.  இப்பாடசாலையை சாமி பள்ளிக்கூடம் என மக்கள் அழைத்தனர்.

    இதனையும் கண்ணுற்ற அருணாசலம் உபாத்தியார் சைவப்பிள்ளைகள் ஆங்கிலம் கற்க சைவ ஆங்கில வித்தியாசாலை ஒன்றையும் ஆரம்பிக்க எண்ணினார்.

   அன்னார் சமய குரவர்களில் மிகவும் நம்பிக்கையும் பற்றும் உடையவர். எனவே திருஞானசமபந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை என்ற பெயரில் 1888 ஆம் ஆண்டு காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த திரு. கோவிந்தர் அவர்களின் காணியில் ஆங்கில பாடசாலையை ஆரம்பித்தார். இதற்கு யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த திரு. முத்து சயம்பு ஆசிரியரை நியமித்து அவர் தலைமையில் மேற்படி ஆங்கில பாடசாலை சிறப்புடன் இயங்கியது. இப்பாடசாலை காலப்போக்கில் அமெரிக்கன் மிசன் ஆங்கில பாடசாலையிலும் பார்க்க மேன்மேலும் வளர்ச்சியுற்றது.  மக்களும் சயம்பு ஆசிரியரில் பற்று வைத்து சயம்பர் பள்ளிக்கூடம் என்றும் அழைக்கலாயினர். அருணாசல உபாத்தியார் அவர்களும் திரு. மு. சயம்பு ஆசிரியரில் மிகவும் நம்பிக்கையும் பற்றுதலும் வலது கரமாகவும் விளங்கினார். இந்த தாபனமே காலப் போக்கில் சைவ ஆங்கில வித்தியாசாலையாக பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியாக பிரகாசிக்கின்றது.  தற்பொழுது இந்தக் கல்வி தாபனத்தை கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகாவித்தியாலாயம் எனப் பெயரை மாற்றி அழைக்கின்றனர்.

    1890 ஆம் ஆண்டு காரைநகர் வியாவிலில் காரைநகர் கருங்காலி முருகமூர்த்தி கோயிலின் அர்ச்சகர் பிரம்மஸ்ரீ க. வேதகுட்டி ஐயர் அவர்களின் காணியில் சைவபரிபாலன வித்தியாசாலை என்ற பெயரில் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். பிரம்மஸ்ரீ க. வேதக்குட்டி ஐயர் அவர்களும் அக்காணியை பாடசாலைக்கே மனம் உவந்து தருமசாதனம் செய்துவிட்டார்.

    குறித்த க. வேதக்குட்டி ஐயர் அவர்கள் அருணாசல உபாத்தியாயர் அவர்களுக்கு வலது கரமாக இருந்து உதவியவர்.  1905 ஆம் ஆண்டு அருணாசல உபாத்தியாயர் இப்பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். இக்காலப் பகுதியியல் அருணாசல உபாத்தியாயர் அவர்களைக் காண வெளியூர் அன்பர்கள் வருவார்கள். அவர்களுக்கெல்லாம் திரு. வேதக்குட்டி ஐயர் அவர்கள் உபசரித்து உணவளித்து வழியனுப்புவார்.

     நீதி வெண்பா என்ற நூலில் 100 செய்யுட்கள் உண்டு.  இதற்கு பதவுரை பொழிப்புரை வெகு அழகாக எழுதி 1905 ஆம் ஆண்டு அருணாசல உபாத்தியாயர் வெளியிட்டார்.  இந்த நூல் கொக்குவில் சோதிட பிரகாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.  இன்னும் சைவப்பாடசாலைகள் பற்றிய பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.

   1910 ஆம் ஆண்டு ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலைக்கு காணியை தருமசாதனம் செய்தவர் முன்னாள் யாழ்ரன் கல்லூரி அதிபர் திரு. மா. வைத்தியநாதன் B.Sc  அவர்களின் பேரனார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்பாடசாலைக்கு முகாமையாளராக காரைநகர் மேற்கு விதானையார் திரு. சண்முகம் அவர்கள் செயற்பட்டார். இவரே புளியங்குளம் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

    காரைநகர் களபூமியில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது.  இதற்கு சைவசீலர் திரு. வள்ளி சுப்பிரமணியம் என்ற அன்பர் காணியை தருமசாதனம் செய்து கட்டிடத்தை நன்கு அமைத்து பாடசாலையை நல்ல முறையில் நிருவாகஞ் செய்தார். பாடசாலையும் சிறப்புற விளங்கியது.  மக்கள் இப்பாடசாலையை வள்ளி சுப்பர் பள்ளிக்கூடம் என அழைத்தனர்.

    காரைநகர் இந்துக் கல்லூரியின் கிளையாக இலகடி தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.  இப்படியே சைவப் பாடசாலைகள் பல அருணாசல உபாத்தியாயர் இட்ட வித்தினால் ஆரம்பமாகின என்று சொல்லலாம்.

    1925 ஆம் ஆண்டு காரைநகர் குமிழங்குளியைச் சேர்ந்த திரு. க. உமாபதி உபாத்தியாரால் காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்கு அண்மையில் மெய்கண்டான் தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

    1947ஆம் ஆண்டு மாசி மாதம் யாழ்ரன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.  கல்லூரிக்கு உரிய காணியை தங்கோடை யைச் சேர்ந்த மலாயன் பென்சனர் திரு. ஆ. கணபதிப்பிள்ளை அவர்கள் விலையாக வாங்கி பின்னர் அக்காணியை கல்லூரிக்கு தருமசாதனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இக்கல்லூரியானது வளர்ச்சி அடைய அமெரிக்கன் மிசன் ஆங்கில பாடசாலை 1948 ஆம் ஆண்டில் முற்றாக அழிந்துவிட்டது.

   அமரர் அருணாசலம் அவர்கள் வெளியூர்களில் உள்ள சைவப்பெரியார்களையும் ஊக்குவித்து சைவப்பாடசாலைகளைத் தோற்றுவித்தார். அன்னாரின் சைவ நண்பர்களில் ஒருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். திரு. மு. சிவசிதம்பரம் அவர்களின் பேரனார் சைவசீலர் சிவபூசகர் மணியகாரன் (D.R.O) திரு. சிற்றம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.  திரு. சிற்றம்பலம் அவர்கள் கரவெட்டியில் நான்கு பாடசாலைகளை ஆரம்பித்து நிருவகித்து வந்தார்.  அத்துடன் கரவெட்டி கிராப்பிள்ளையார் கோயிலின் தர்மகர்த்தாவும் ஆவார். இவ்வாலயத்தில் சைவர்களே பூசகர்களாகவும், மகோற்சவம் முதலிய கிரியைகளும் சைவக் குருமார்களே சிறப்பாக பணிபுரிவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தகவல்களை அருணாசல உபாத்தியாயர் அவர்களின் கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலை மாணவன் கெருடாவிலை வதிவிடமாகக் கொண்ட திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மூலம் அறிந்தேன் என்பதை குறிப்பிடுகிறேன்.

    அருணாசல உபாத்தியார் அவர்கள் ஆலோசனைகளுக்காக அடிக்கடி நல்லூர் கையிலாச பிள்ளையார் கோவிலடியில் வசித்த சைவசீலர் திரு. த. கையிலாயப்பிள்ளை அவர்கள் இடம் செல்வார். திரு. த. கயிலாபிள்ளை அவர்கள் ஆறுமுகநாவலர் அவர்களின் தமையனாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரே வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் முகாமையாளர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

    திரு. கைலாயபிள்ளை அவர்கள் அருணாசல உபாத்தியாயர் அவர்களை தனது பாடசாலையில் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிய அனுமதி அளித்தவர். சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை ஒன்றைத் தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் நெடுநாட்களாக அவர் உள்ளத்தில் நன்கு பதிந்து இருந்தது. அடிக்கடி கீரிமலைக்குச் செல்வார்.  சட்டக் கல்லூரி மாணவனாக இருந்த திரு. சு. இராசரத்தினம் கீரிமலைக்கு நீராட வருவார். உபாத்தியாயர் கல்விப் பகுதியினருக்கு சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை சம்பந்தமாக கடிதங்களை தமிழில் எழுதிக் கொண்டு போவார்.  அக்கடிதங்களை திரு. இராசரத்தினம் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து உதவி செய்வார். அன்னார் தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றித் திரு. சு. இராசரத்தினம் அவர்களிடம் கூறுவார். இதுவே பிற்காலத்தில் திரு. சு. இராசரத்தினம் அவர்களுக்கு 100 க்கு மேற்பட்ட சைவப்பாடசாலைகளை ஆரம்பித்து நிருவகிக்க முடிந்தது என்பது வெள்ளிடைமலை.  சைவவித்தியா விருத்திச் சங்கம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் ஒரு அலுவலகம் இருந்தது. 

    1913 ஆம் ஆண்டு வைகாசி மாதம் உபாத்தியாயர் அவர்களின் அமைதி அடக்கம் பண்பும் மிக்க பாரியார் நாகமுத்தாள் சிவபதம் அடைந்தார்.  இதனால் அன்னாருக்கு கவலையும் சற்று மனச் சோர்வும் ஏற்பட்டது. இருந்தும் தனது இலட்சியத்தைக் கைவிடவில்லை.

    கீரிமலையில் கிருஷ்ணபிள்ளை மடத்தில் சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையை ஆரம்பித்து வைத்து அதனை அங்கீகரிக்கும்படி அரசினரை வேண்டினார். அரசினர் அதனை அங்கீகரிக்க மறுத்து விட்டனர்.

    பின்னர் வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலையில் ஆரம்பித்து அதனை அங்கீகரிக்கும்படி வேண்டினார்.  அதனையும் அரசினர் அங்கீகரிக்க மறுத்து விட்டனர்.

    கிறீஸ்தவர்களுடன் சேர்ந்து ஐக்கிய போதனா பாடசாலை நடத்தினால் அங்கீகரிக்கலாம் என அரசினர் கூறினர்.  கத்தோலிக்கர் சேர மறுத்து விட்டனர். ஏனைய கிறிஸ்தவர்களுடன் இணைந்து கோப்பாயில் ஐக்கிய போதனா பாடசாலை கிட்டத்தட்ட 1916 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போதனா பாடசாலை 1923 ஆம் ஆண்டு வரை நீடித்தது. சைவ மாணவர்களின் விடுதி கோப்பாய் திரு. மயில்வாகனம் அவர்களின் நாற்சார் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு அருணாசல உபாத்தியாயர் அவர்களே பொறுப்பாக இருந்து செவ்வனே நடத்தினார். இவ்விடுதிக்கு வேண்டிய அரிசி, காய்கறிகள் அதற்குத் தேவையான ஏனைய பொருட்களையும் மாணவர்களுக்குத் தேவையான உடுப்புக்கள், புத்தகங்கள் யாவற்றையும் காரைநகர் துறைமுகம் சித்திவிநாயகர் ஆலயத்துக்குத் தெற்கு எல்லை பிரதான றோட்டு, இதற்குத் தெற்குப் பக்கத்தில் வசித்த கொடைவள்ளல் சைவசீலர் பிரபல வர்த்தகர் திரு. iவிரமுத்து ஆறுமுகம் அவர்கள் பொறுப்பேற்று உதவி செய்தார்.  சகலவிதத்திலும் திரு. வை. ஆறுமுகம் உபாத்தியாயர் அவர்களுக்கு உற்சாகம் அளித்து உதவி செய்தார். 
 
       ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பின் கிராமங்கள் தோறும் சைவப் பாடசாலைகள் தோன்றுவதற்கும் பயிற்சி பெற்ற சைவத் தமிழ் ஆசிரியர்கள் தோன்றுவதற்கும் அயராது உழைத்த உத்தமர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்கள் 1920ஆம் ஆண்டு தை மாதம் 17 ஆம் தேதி (17-01-1920) இரவு அன்னாரது காரைநகர் குமிழங்குளி இல்லத்தில் உயிர் பிரிந்து இறைவனடி சேர்ந்தார். சிவபதம் அடையும் போது அன்னாருக்கு வயது 55 மாதம் 2 நாட்கள் 15

    ஐக்கிய போதனா பாடசாலை தற்போது கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியாகத் திகழ்கின்றது. அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இலட்சியமான சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையை திரு. சு. இராசரத்தினம் (இந்துபோட்) அவர்களின் ஆமை வேகத்தில் 1928 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ஆரம்பித்தார். இதில் முதல் மாணவனாக அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இளைய மகன் சிவபாதம் சேர்க்கப்பட்டார்.  இவரே 1930 ஆம் ஆண்டு முதற் பயிற்சி பெற்ற சைவாசிரியனாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் இருந்து ஆண்டு தோறும் பலர் பயிற்சி பெற்று சைவாசிரியர்களாக வெளியேறினார்கள்.  இவ்வாசிரிய பயிற்சிக் கலாசாலையில் காலஞ்சென்ற பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியராகக் கடமையாற்றினார். இவரே 1950 ஆம் ஆண்டளவில் 'அவர்களுக்குப் பின் அருணாசலம் தான்' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தார். அவர்கள் என்பது ஆறுமுகநாவலரையே குறிப்பிட்டார். இக்கட்டுரையை அப்போது காரைநகர் இநதுக் கல்லூரியின் சயம்பு சஞ்சிகையில் வெளியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலையில் படித்து வெளியேறிய மாணவர்களில் ஒருவர் தொண்டமானாறு கெருடாவில் கந்தசுவாமி கோயில் முன்பாக வசித்த சைவசீலர் சிவபூசகர் திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள்.  'சைவாசிரியர் களைத் தோற்றுவித்த திரு. சி. அருணாசல உபாத்தியாயர்' என்ற தலைப்பில் நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.  அன்னார் எனக்குச் சொல்லிய தகவல்களை வைத்தும் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

   அன்னார் 1920 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தொடர்ந்து சில காலம் வாழ்ந்து இருப்பாராகில் மிசனரிமார் எப்படி சமய போதகர்களைப் பயிற்றுவித்து கிராமங்கள் தோறும் சமயத்தைப் பரப்ப நியமித்தார்களோ அதே மாதிரி உபாத்தியாயர் அவர்களும் சைவப் பிரசாரகர்களையும் பயிற்றுவித்து சைவ சமயத்தைப் பரப்ப முயற்சி செய்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

   அன்னாரின் இலட்சியங்கள் மூன்று.  முதலாவது சைவப் பாடசாலைகளை ஆரம்பித்தல்.  இரண்டாவது பயிற்சி பெற்ற சைவாசிரியர்களை தோற்றுவித்தல்.  மூன்றாவது சைவப் பிரசாரகர்களைப் பயிற்றுவித்து சமயத்தைப் பரப்புதல்.  இதனையே செயற்படுத்தத் திட்டமிட்டிருந்தார் என அன்னாரின் மாணவரான திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் என்னிடம் தெரிவித்தார் என இக்கட்டுரையிற் குறிப்பிடுகிறேன்.

       காரைநகரின் தவப்புதல்வன் அமரர் திரு. ச. அருணாசல உபாத்தியாயர் அவர்களின் இலட்சியங்கள் நிறைவேற நடராசப் பெருமான் அருள் புரிவாராக.

நன்றி: அன்புநெறி, ஒக்ரோபர் 2014