இனிதே நடைபெற்ற காரைக் கதம்பம் 2013 மேலும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

இனிதே நடைபெற்ற  காரைக் கதம்பம் 2013

பிருத்தானியா நலன் புரிச் சங்கத்தின் 16வது பொங்கல் விழாவான ”காரைக் கதம்பம் 2013” கடந்த சனிக்கிழமை (02/02/2013) மாலை 550க்கும் மேற்பட்ட மக்களுடன் இனிதே நிறைவு பெற்றது.
                        கதம்பம் 2013 ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததுபோல் மாலை 05:00க்கு திருமதி ஞானமலர் சுந்தரேஸ்வரன் , திருமதி மஞ்சுளா நடராஜா ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து 1நிமிட மௌன அஞ்சலியும், காரை பிரதேச கீதமும் ஒலிக்கப்பட்டது. பிரதேச கீதம் ஒலித்துக்கொண்டிருந்த வேளை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த அனைத்து  பிள்ளைகளும் தங்கள் கைகளில் ஒளி விளக்குகளுடன் மேடையில் காட்சி கொடுத்த நிகழ்வு பார்வையாளர்களின்
மனதை கொள்ளையிட்டு சென்றது.
                      நிர்வாகசபை உறுப்பினர் திரு.K .விக்னேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடனும்மாதுரி பாஸ்கரன் பைரவி பாஸ்கரன் ஆகிய சி றுமிகளின் தேவாரத்துடனும் நிகழ்வுகள் ஆரம்பம் ஆகின. திரு.K .விக்னேஸ்வரன் தனது வரவேற்புரையில் இவ் விழவிற்கு பிரதம அதிதியாக ஊரில் இருந்து வருகைதர இருந்த
Dr .வீரமங்கை யோகரட்ணம்(யாழ்பல்கலைக்கழக சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர்) அவர்களது பிரயாணம் தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாததையிட்டு நிர்வாகசபை சார்பில் மன வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க தலைவர் திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன்(நேரு மாஸ்டர் )அவர்களையும், புங்குடுதீவு நலன் புரிச் சங்க தலைவர் திரு .கருணைலிங்கம் அவர்களயும்,வேலணை மதிய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு,கே.என். சிவராஜா , திருமதி சிவராஜா அவர்களையும் , எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.இளயதம்பி தயானந்தா , அவைக்காற்றுக் கழக இஷ்தாபகரும் இலங்கை வானொலி நாடக புகழ் திரு.கே.பாலேந்திரா , திருமதி.ஆனந்தராணி பாலேந்திரா, மற்றும் திரு.யேசுரட்ணம், திரு. ரகுநாதி (D .E .E .P தொண்டு அமைப்பு ) ஆகியோரையும் மற்றும் சபையோர்களையும் வரவேற்றுக்கொண்டார்.
                  இந்த வருட நிகழ்வுகள் கடந்த வருடங்களை விட எண்ணிக்கையிலும் (49 நிகழ்வுகள்) , தரத்திலும் அதிகமாக இருந்தது.சிறப்பு விருந்தினர் நேரு மாஸ்டர் சிறப்புரை ஆற்றுகையில் , அவரது சுவாரசியமா பாணியில் தனது சிற்றுரையை ஆற்றியிருந்தார். எமது பிரதான நோக்கம் இளம் சமுதாயத்தை ஒன்றிணைப்பது பற்றியும், ஊரில் கல்வி, மருத்துவம் பற்றிய தனது கருத்தினையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
தலைவர் திரு. பரமநாதர் தவராஜா தமது உரையில், காரைநகர் கல்லூரிகளின் கற்றல், கற்பித்தல் தரங்கள் உயர்ந்து வருவதையும் , மருத்துவ வசதிகள் உயர்வதையும் ,அடுத்து எமது சமையம் சார்ந்து நாம் அங்கு தற்போதைய நிலைமையில் எப்படியான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் , காரைநகர் சார்ந்த அனைத்து மன்றங்களும் ஒரே பெயரின் கீழ் , ஒரே முத்திரையின் கீழ், ஒரே யாப்பின் கீழ் , ஒன்றாக ஒரே குடையின் கீழ் இயங்க முன் வர வேண்டும் என்றும், பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இன்றைய, எதிர்கால திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். அன்றைய காரை இந்துக் கல்லூரியும், தற்போதைய Dr .ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தின் 125 வது வருட நிறைவை ஒட்டி வருகின்ற மே மாத இறுதியில் ஒரு சிறு நிகழ்வை நடாத்த இருப்பதாகவும், அதனை அடுத்து ஜூலை மாதம் 28ம் திகதி ”காரை சங்கமம் 2013” மூன்றாவது நிகழ்வை நடாத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும் ”முதுசங்களைதேடி 2013” இற்கான மலராக 1967இல் வெளிவந்த காரைநகர் சைவ மகா சபையின் பொன் விழா மலர் மீள் பதிப்பு செய்யப்பட்டு வருகின்றது என்றும் இம் மலருக்கான விளம்பரங்கள் சேகரிக்கப்பட்டுவருது பற்றியும் விளக்கியிருந்தார்.
கனடா காரை கலாச்சார மன்றம், சுவிஸ் காரை அபிவிருத்தி சபை , காரைநகர் காரை அபிவிருத்தி சபை, பிரதம விருந்தினராக வருகை தர இருந்த Dr .வீரமங்கை யோகரடணம் ஆகியோர்களது வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் கூறப்பட்டிருந்தது.
காரை மாணவர் நூல் நிலையத்துக்கான பெருவாரியான நூல்களை மக்கள் விழாவில் எடுத்துவந்து நிர்வாகத்தினரிடம் வழங்கியிருந்தார்கள். மேலும் பலர் தங்கள் அன்பளிப்பு நூல்களை அடுத்தடுத்த ஒன்றுகூடல்களில் நிர்வாகத்திடம் வழங்குவதாக கூறியிருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் பங்கு பற்றிய அனைத்து குழந்தைகளுக்கும் விழாவிற்க்கு வருகைதந்திருந்த சிறப்பு விருந்தினர்களான பிரான்ஸ் காரை நலன் புரிச்சங்க தலைவர் திரு. நேரு மாஸ்டர், புங்குடுதீவு நலன்புரிச் சங்க தலைவர், திரு. கருணைலிங்கம், வேலணை மதிய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு. கே.என்.சிவராஜா, திருமதி சிவராஜா ,அவைக்காற்றுக் கழக இஷ்தாபகர் திரு.கே. பாலேந்திரா & திருமதி ஆனந்தராணி பாலேந்திரா, ஊடகவியலாளர் திரு இளயதம்பி தயானந்தா ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்திருந்தார்கள்.உப செயலாளர் திரு. செல்வநாயகம்பிள்ளை மனோகரன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற, கலந்துகொண்ட மக்கள் இராப் போசனத்தில் கலந்து கொண்டனர்.
இவ் விழாவிற்கு அனுசரணை வழங்கி இருந்த அனைத்து நிறுவனங்களுக்கும் , தனி நபர்களுக்கும் பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம் தமது சிரம் தாழ்த்திய நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றது.
”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”
நன்றி
வணக்கம்
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்


book collection photos