சிந்தனையுடன் நின்றுவிடாது அமைதியாக பொதுப்பணி ஆற்றிய அமரர்.சுப்பிரமணியம் துரைசாமி(ஆசிரியர்)

திரு.சுப்பிரமணியம் துரைச்சாமி தனது ஆரம்பக் கல்வியை களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலத்தில் கற்று உயர்கல்வியை வேலணை மத்திய கல்லூரியில்  கற்றார். திரு துரைச்சாமி அவர்கள் தமிழ் கணிதம் ஆகிய இருபாடநெறிகளிலும் சிறப்புப் பயிற்சியைப் பெற்றவராவர் தனது கல்விப் பணியை கிளிநொச்சி மாவட்டத்தில் அரம்பித்து 1981ல் காரைநகருக்கு இடமாற்றம் பெற்று வந்தார். 

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியத்தில் 1981–1995 வரை ஆசிரியராக கடமை ஆற்றினார். தன் சேவைக் காலத்தில் கற்பித்தல், கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகள், நூலகம் போன்ற துறைகள் உயர் நிலை அடைய முன்னின்று பணியாற்றினார். கணித பாடத்தில் அனைத்து மாணவர்களினதும் அடைவு மட்டம் உயரவேண்டும் எனும் நோக்குடன் கற்பித்தல் நுணுக்கங்களைக் கையாண்டார்.
 
நூலக வளர்ச்சிக்காக நூலக பொறுப்பாளராகவும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது காலத்தை பொருட்படுத்தாது துறை சார்ந்த ஆசிரியர்களுடன் சேர்ந்து உழைத்தார். பாரதி நூற்றாண்டு விழா சிறப்புற நடைபெறப் பணியாற்றினார். அன்னாரின் சேவை மனப்பான்மையை உணர்ந்த நிருவாகத்தினர் பாடசாலை நிர்வாக கட்டமைப்பில் பொறுப்பான பதவிகளை வழங்கினார்.

1991ம் ஆண்டு  காரைநகர் பாடசாலைகள் காரைநகருக்கு வெளியே இயங்கிய காலப்பகுதியில் மாணவர்கள் அதிகமாக கற்ற சுழிபுரம் பகுதியில் இயங்கிய பாடசாலைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் துவிச்சக்கர வண்டியில் வருகை தருவார். தனது உடல்நிலை, வயது என்பனவற்றை கருத்தில் கொள்ளாது நிருவாகத்துடன் ஓத்துழைத்தும், மாணவர் நலன் கருதியும் செயற்பட்டவர். கடமைக்காக பயணம் செய்த ஒரு தினம் ஆனைக்கோட்டைப் பகுதியில் மயக்கமுற்று துவிச்சக்கர வண்டியால் விழுந்த சம்பவத்தின் பின்னரே யாழ்ப்பாணத்துக்கு இட மாற்றம் பெற்றார்.
 
ஆசிரியர் துரைசாமி அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் பாடசாலையின் நலன் கருதி நூலகத்தின் வளர்ச்சிக்காக நூல்களையும் தன் குடும்ப உறுப்பினர் மூலமாக நன்கொடை வழங்கியும்  பாடசாலையின் அபிவிருத்தியில் பங்காற்றினார்.

;
ஒரு சமுகம் உயர்நிலை அடைய வேண்டுமாயின் மனிதனின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்துப் புலங்களும் முரண்பாடற்ற நிலையில் அபிவிருத்தி காண வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனை கொண்ட அமரர் துரைசுவாமி சிந்தனையுடன் நின்றுவிடாது தன்வாழ்க்கையில் சிந்தனைக்கு  செயல் வடிவம் கொடுத்தவர். 

வேதரடைப்பு குறிச்சிக்கு புதியவராக இருந்த பொழுதும் அன்னாரை புரிந்து கொண்ட அக் குறிச்சி மக்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வேதரடைப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவராக தெரிவு செய்தனர். சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வேதரடைப்பு குறிச்சிக்கு மின்சாரம் கிடைக்க ஆவன செய்தார்.

மக்கள் மத்தியில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த அமரர் பேராசிரியர் இராமகிருஸ்னன் அவர்களுடன் இணைந்து வேதரடைப்பு கிராம அபிவிருத்தி சங்க அனுசரணையுடன் அமெரிக்க நாட்டு துறவி சுப்பிரமணிய சுவாமியையும் அவருடைய 50 பேர் அடங்கிய குழுவினரையும் அழைத்து வந்து ஆலங்கன்று வைரவர் கோயிலில் கூட்டுவழிபாட்டினையும் சமய சொற்பொழிவையையும், காஞ்சி காமகோடி சங்கராச்சாரியாரின் சீடர்களை அழைத்து வந்து புதுவீதி கதிர்காம சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேதரடைப்பு, விக்காவில் குறிச்சிகளுக்கு ஊடாக அழைத்து சென்று மணற்காடு அம்மன் கோவிலில் சமய சொற்பொழிவுகளை நடத்தினார்.

இப் பகுதி வாழ் இளைஞர்களின் மாலை நேரப் பொழுது பயனுறு செயற்பாடுகளில் கழிய வேண்டும் என்பதற்காக சோலையான் விளையாட்டு கழக ஆரம்பகர்த்தாக்களில்  ஓருவராக பணியாற்றினார். சோலையான் விளையாட்டு கழகம் 1980 களில் ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மை நிலை பெற்று விளங்கியது.
 
தன் மனத்துக்கு சரி எனத் தோன்றியதை தயக்கமின்றி முன் வைக்கும் பண்பு உடையவர். ஆடம்பரமின்றி அமைதியாக பொதுப்பணி ஆற்றியவர். அமரர் துரைசாமி அவர்கள். 
 
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதாங்களில் சென்றடைந்து சாந்தி பெற பிரார்த்திப்போமாக!

திரு.எஸ்.கே.சதாசிவம்
ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்யாளர், 
முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர், கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம், காரைநகர்