மக்களின் நலன்களுக்காக உழைத்து வருகின்ற சேவையாளர்களை பாதுகாக்க உதவுவது சமூகத்தின் தார்மீகக் கடமை என்ற கருத்து மேலோங்கிக் காணப்பட்ட வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும்:

மக்களின் நலன்களுக்காக உழைத்து வருகின்ற சேவையாளர்களை பாதுகாக்க உதவுவது சமூகத்தின் தார்மீகக் கடமை என்ற கருத்து மேலோங்கிக் காணப்பட்ட வழக்குத் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும்:

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கும் அவற்றின் செயற்பாட்டாளர்கள் ஏழு பேருக்கும் எதிராக நஸ்ட்ட ஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள  வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை Scarboorough Civic Centre  மண்டபத்தில் (Chamber)  கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டு திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் தொடரப்பட்ட இவ்வழக்கினை சேவை அமைப்புக்களும், அதன் செயற்பாட்டாளர்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் சட்டரீதியாக எதிர்கொண்டதில் இன்று வரைக்கும் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் விபரமாகவும் விளக்கமாகவும் தவைரினால் சபைக்கு எடுத்துக் கூறப்பட்டிருந்த அதேவேளை இவ்வழக்கினை சமாதானமான முறையில் முடிவுறுத்துவதற்கு  முன்னெடுக்கப்பட்டிருந்த  முயற்சிகள் குறித்தும்  விளக்கமளித்தார்.

வழக்காளியான திரு.முத்து பொன்னம்பலம் அவர்களுக்கு இவ்வழக்கினை   நடாத்துவதற்கு நிதிரீதியாக தகமை (Security for Costs) உள்ளதா என்பது குறித்து பிரதிவாதிகள் தரப்பில் நகர்த்தல் பத்திரம் (Motion) தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விசாரணைக்கு எதிர்வரும் யூன் மாதம் 28ம்  திகதியிடப்பட்டுள்ளதாகவும் சபைக்கு தலைவரினால் தெரிவிக்கப்பட்டது.

வழக்கிற்கு ஏற்பட்டுள்ள செலவினை எவ்விதம் ஈடுசெய்வது, சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்பன தொடர்பில் பலரும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். சேவை அமைப்புக்களுக்கும் அவ் அமைப்புக்கள் ஊடாக மக்களின் நலன்களுக்காக தொண்டு அடிப்படையில் உழைத்து வருகின்ற சேவையாளர்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறித்திய பலரும் இவர்களுக்கு பொருளாதாரச் சுமையோ அன்றி மனச் சுமையோ ஏற்படுத்தப்படுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

சமாதானமான முறையில் இவ்வழக்கு முடிவுறுத்தப்படுமானால் அதனை ஏகோபித்த ரீதியில் சபை வரவேற்றிருந்தது. முன்னர் எடுக்கப்பட்டிருந்த சமாதான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் சமாதானத்துக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளதாக தலைவர் சிவநாதன் அவர்கள் தெரிவித்தார். சமாதான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லையானால் வழக்கினை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாததாகும் என்ற வகையில் இவ்வழக்கிற்கு ஏற்படக்கூடிய சட்டச் செலவுளை காரைநகர் சமூகமாக ஒன்றிணைந்து உதவவேண்டும் என்ற பகிரங்க விண்ணப்பத்தை முன்வைக்கவேண்டும் என்ற ஆலோசனை அனைவராலும் எற்றுக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் காரணமாக ஏற்பட்டுள்ள கால, நேர, பண விரயமும் மக்கள் மன்றப் பணிகளில் ஈடுபடக் காட்டி வருகின்ற தயக்கமும் நலிவுற்ற மக்களுக்கு உதவும் நலன்புரிப் பணிகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன் தடையின்றி மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கும் மக்கள் தயக்கமின்றி பணிகளில் ஈடுபடுவதற்கும் ஏற்ற சூழ்நிலையினை ஏற்படுத்த முடிந்தவரை சமாதானமான முறையிலோ சாத்தியப்படாதவிடத்து சட்டரீதியாக எதிர்கொண்டோ விரைவில் வழக்கினை முடிவுறுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

2024, மார்ச் மாதம் வரைக்கும் வழக்கிற்கு ஏற்பட்ட சட்டச் செலவான 57,728.00 டொலரில் பிரதிவாதிகளும், காரை.மக்களும் வழங்கிய தொகையான 25,822.00 டொலர்கள் சட்டவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 31,906.00 டொலர்கள் சட்டவாளர்களுக்கு வழங்கப்படவேண்டியுள்ளது. பிரதிவாதிகளிடமிருந்து அவர்களால் வழங்கப்படக்கூடிய இயன்றளவு தொகையினைப் பெறுவதுடன் மக்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெற்று கொடுக்குமதியாகவுள்ள  31,906.00 டொலர்களையும் ஈடுசெய்ய வேண்டும் என்ற ஆலோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைபெறவுள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டத்தில் இவ் ஆலோசனையை பிரேரணையாகச் சமர்ப்பிப்பதென முடிவுசெய்யப்பட்டது.

இவ்வழக்குத் தொடர்பிலும் இவ்வழக்கு குறித்து கனடா-காரை கலாசார மன்றத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு மன்றத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக தீவிர பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்தும் சுட்டிக்காட்டிய சில உறுப்பினர்கள் இவர்களது நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் மன்றம் உண்மைநிலையை தெளிவுபடுத்தவும் மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும் மக்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு விளக்கவேண்டும் என்ற கோரிக்கையும் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்தப் பதிலளித்த தலைவர் சிவநாதன் அவர்கள், இது குறித்து கனடா-காரை கலாசார மன்றமும் கரிசனை கொண்டுள்ளதுடன் சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்டு அவ்வப்போது இவ்வழக்குத் தொடர்பிலான விபரத்தினையும் உண்மைநிலையினையும் உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய karainagar.com  ஊடாக வெளிப்படுத்தியும் வந்துள்ளது. இன்று கூட்டப்பட்டுள்ள கூட்டம்கூட மக்களுக்கு தெளிவுபடுத்தலுக்கான ஓர் நடவடிக்கையேயாகும். கரிசனை உள்ளவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்து சமூகப் பொறுப்பற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றமை கவலையளிப்பதாகும். இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளமுடியாதவர்கள் மன்றத்தின் மின்னஞ்சல் முகவரியாகிய karainagar@gmail.com உடனோ அன்றி தொலைபேசி இலக்கம் 416 418 5697 உடனோ தொடர்புகொண்டால் விளக்கமளித்து அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்கு எமது நிர்வாகம் எப்போதும் தயாராகவே உள்ளது. தொடர்ந்து இவ்வழக்கு குறித்த விபரங்கள் karainagar.com  இணையத்தளம் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு வரும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வழக்குத் தொடர்பிலான முழுமையான விபரத்தையும் முன்னெடுக்கப்பட்டிருந்த சமாதான முயற்சிகளையும் உள்ளடக்கிய கனடா-காரை கலாசார மன்றத்தின் விரிவான அறிக்கை விரைவில் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்து வரப்படவுள்ளது.