சோதி அங்கிள் சொல் அல்ல செயல்.

சோதி அங்கிள் சொல் அல்ல செயல்.

நான் என்னை உன்னிடம் கொடுத்தேன். உன்னை அடைந்து கொண்டேன். சங்கரா! நம்மில் யார் கெட்டிக்காரர் என்று கேட்கிறார் மாணிக்கவாசகர். அசைகின்ற எல்லாமும் சக்தி. அசையாதது சிவன். இறந்து போதல் என்றால் என்ன? நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா? ஏன் வலிக்காமல் போயிற்று? எது இருந்தால் வலி? எதை இழந்தால் மரணம்? எது இருந்து என்னை இயக்கியது? அது இப்பொழுது எங்கே? அது போனதால் தானே இறப்பு. இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புப் பட்டு சாம்பலாகி விடும். ஓன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய் விடும். என்னை நீ எடுத்துக் கொள். இது உனக்குச் சொந்தம். நான் என்பது இங்கு இல்லை. என்று சகலமும் விட்டு விட்டு வெறும் குச்சியாக தண்டமாக மாறிவிடும். கடவுளிடம் தன்னை ஒப்படைத்தவருக்கு எந்தக் கவலையும் இல்லை. கடவுள் அவரை நிச்சயம் காப்பாற்றுவார். எப்படி காப்பாற்றுவார்? அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.!

மனிதர்கள் மறைந்து விட்டாலும் அவர்களைப் பற்றிய நினைவுகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவர்களுடைய சாதனைகள் எப்போதும் நம் மனத்திரையில் நிழலாடிக் கொண்டிருக்கும். அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்த என் தாய் மாமனைப் பற்றி பல வருடங்கள் பின்நோக்கிப் பார்க்கின்றேன். அவருடைய கடமை உணர்வும் கண்ணியமும் கட்டுப்பாடும் என் வரலாற்று ஏட்டில் மறக்க முடியாத பக்கங்கள். ஒரு தனி மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் தகுதிகள் உணர்வுகள் யாவும் ஒருங்கே காணப்பட்டவர். புகழ் பதவி ஆசை ஆடம்பரத்தை வெறுத்து எளிமை நேர்மை உழைப்பு தகுதி ஆற்றல் தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டவர். எங்கள் குடும்பத்தின் பிதாமகன் என்றால் கூட மிகையாகாது. ஏனெனில் இவர் தான் மூத்தவர். தலை இல்லாமல் வால் ஆடுவது இந்தக்காலம். அப்பொழுதெல்லாம் தலை இருக்க வால் ஆடியது இல்லை. சோதி அங்கிளை விட்டு விட்டு எங்கள் குடும்பத்தின் வரலாற்றை ஆராய முடியாது. நா.முத்துக்குமார் எழுதிய வேடிக்கை பார்ப்பவன் நாவல் போல தான் நான் இருந்திருக்கின்றேன். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை! விடியும் பொழுது யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை என்பதை உணர்ந்து தன் ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்த்தவர். வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் இன்னல்கள் வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து விடியும் பொழுதை தனக்குரியதாக்கியவர். வாழ்க்கை முன்னேற்றுத்துக்குத் தேவையான வசதிகள் இல்லாத காலத்திலேயே மனக்குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் தாண்டி தன்னை முன்நிறுத்தியவர். வசதியாக வாழ்வதல்ல மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம் என்பவர்.

ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு மந்திரச்சொல் இருக்கிறது. அடிபட்டவர்களுக்கு ஆறுதல் உரம் ஊட்டுவது தான் இந்த மந்திரச்சொல். ஸ்டீபன் ஷாகின்ஸ் சொன்னது போல எதை இழந்தீர்கள் என்பதல்ல எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை வழியும் எப்போதோ முடிந்த காரியம்! இதை மனதில் இருத்திக்கொண்டால் எந்தவித கர்வமும் எழாது. செய்யும் காரியத்தில் விருப்பு வெறுப்பு இருக்காது. பலன் எதிர்பார்க்காது. அப்போது அந்தக் காரியம் மிகச் சிறப்பாக செயல்படும். கர்வமற்ற சீரான செயல்கள் உடைய வாழ்க்கை உன்னதமாக இருக்கும். அதுவே வாழ்க்கை. மற்றதெல்லாம் குழப்பங்கள்.

ஆன்மா உடலைப் பிரிந்த பொழுது இன்னும் ஜொலிப்பாகி சுடராகி மேலெழுந்து வெளி முழுவதும் கலந்து இது இன்னொரு விஸ்வரூபம். நான் சாதாரணன் இல்லையென்று சொன்ன சாட்சி.

நீங்கள் வாழ்வதற்கு புறப்படுங்கள் நான் விடைபெறுகின்றேன் என்ற சாக்ரடீஸ் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. பிறவியின் உயர்ந்த இலட்சியம் முக்தி. அதை அந்த ஆண்டவன் ஆடவல்லான் அவருக்கு நல்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன் மருமகன்
கணபதிப்பிள்ளை ரஞ்சன்.

 

1 comments

    • sivasamboo kalaichandran on January 9, 2021 at 6:27 pm

    Condolences to family.

Comments have been disabled.