முன்னாள் அதிபர் அமரர் கார்த்திகேசு நடராஜா அவர்களின் நினைவேந்தல்.

 

முன்னாள் அதிபர் அமரர் கார்த்திகேசு நடராஜா அவர்களின் நினைவேந்தல்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தமிழ் வாக்கு. நல்ல தாய், தந்தை, குருவைப் பெற்றவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளாவர். ஆசிரியராக, அதிபராக K.K நடராஜா அவர்களைப் பெற்றது எமது மாணவ மாணவியரதும், காரைநகரினதும் மகா பாக்கியமே. அமரரது ஆசிரியப்பணி அளப்பெரியது.

அமரர் K.K நடராஜா அவர்கள்  07.07.1929 ஆம் ஆண்டு காரைநகர் பயிரிக்கூடலில் பிறந்தார். இவர் கார்த்திகேசு, வள்ளியம்மையின் புதல்வர் ஆவார். அன்னார் வட்டுக்கோட்டைத் தொகுதியின் பல பாகங்களிலிருந்தும் தேர்ச்சி பெற்ற  மாணவர்களை உள்வாங்கி அவர்தம் உயர்கல்விக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததும், கல்லூரிகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ததும் அவரது பணிகளில் மிகவும் முக்கியமாக குறிப்பிடத்தக்கன.  தந்தையின்  அடியொற்றி அவரது பிள்ளைகள் சிவகுமார், அம்பிகா இருவரும் பட்டதாரிகளாகி ஆசிரியப் பணி  புரிந்து வருகின்றார்கள்.  அவரது இளைய மகன் மருத்துவ கலாநிதி ஜெயக்குமார் அவர்கள் உலகத்தர புற்று நோய் மருத்துவ நிபுணராக இலங்கையில் கடமையாற்றி வருகின்றார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா காலத்தில் 1967ஆம் ஆண்டு இணைந்து 1988 ஆம் ஆண்டு வரை இரசாயனவியல், கணித பாடங்களைக் கற்பித்து பல நன்மாணக்கர்களை உருவாக்கியதுடன் அவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரிய அமரர் திருமதி கமலாம்பிகை நடராஜா அவர்கள் அமரர் K.K நடராஜா அவர்களின் அன்புத்துணைவியாவார்.

28.06.1952 இல் ஆசிரியராக இவரது  கல்விச் சேவை ஆரம்பித்தது. அதிபராக யாழ்ற்ரன் கல்லூரி, காரை இந்துக் கல்லூரி, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, பதுளை இந்துக் கல்லூரி, கண்டி கின்ஸ்வாட் கல்லூரி  ஆகியவற்றில் கடமையாற்றினார்.  08.07.1989 இல் ஒய்வு பெற்றார். 37 வருடங்களாக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள  பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

காரைநகர் சைவமகாசபை, மணற்காட்டு அம்மன் திருப்பணிச்சபை, இணக்கசபை, ஈழத்துச் சிதம்பர திருப்பணிச்சபை, மாணிக்கவாசகர் அன்னதானசபை, காரைநகர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம்,  மூளாய் மருத்துவமனை ஆகியவற்றில் தலைவராக   பல  வருடங்கள் செயலாற்றியவர், காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணிய சுவாமி கோவில்   முன்னாள் பொருளாளராகவும்  சிறப்புற பணிபுரிந்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அதிபர் கலாநிதி தியாகராசா M.A. M.Litt  அவர்களுக்குப் பின் வந்த அதிபர்களில் அமரர் அமரர் K.K நடராசா B.Sc.Dip.in.Ed   அவர்களின் சேவையும்  மிகச் சிறப்பானது. கணித பாடம் கற்பித்தலில் நல்லாசானாக விளங்கிய இவர் 1974 – 1977 வரை காரைநகர் இந்துக் கல்லூரியிலும், 1983 -1987 வரை யாழ்ற்ரன் கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கணிதம், விஞ்ஞானம் ஆகிய உயர்தர வகுப்புக்களில் அதிக கவனம் செலுத்தினார். புதிய பட்டதாரி ஆசிரியர்களை கல்லூரிகளில், சேவையில்  ஈடுபடுத்தவும்,  தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்த புகழ் நாட்டிய ஆசிரியர்கள் கல்லூரிகளில் நியமனம் பெறவும் அரும்பாடுபட்டார். இதனால் எண்ணுக்காணக்கான மாணவர்கள் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கற்று உயர் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரது சேவைக்காலத்தில் அயல் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் இக்கல்லூரிகளை நாடி வந்தனர்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 03 – 12 – 2017 அன்று யாழ்ற்ரன் கல்லூரியில் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்   (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின்  தலைமையில் நடாத்திய “முத்தமிழ் விழா – 2017” இல் முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர்   மதிப்பிற்குரிய  கார்த்திகேசு நடராசா அவர்களுக்கு “பொதுப் பணிச் செம்மல்|| விருதளித்து மதிப்பளித்தது.

K.K நடராசா என உலகில் பரந்து வாழும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களால் அன்பாக அழைக்கப்பட்ட  அமரர் K.K நடராஜா அவர்கள் உடநலக்குறைவு காரணமாக இந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பாக மூத்த மகனான ஆசிரியர் திரு நடராஜா சிவகுமாரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

சிவயோகச் செல்வன் ஆக்கிய வாழ்த்துப் பாவை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர்  பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்  அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  பேராசிரியர் வேலுப்பிள்ளை தருமரத்தினம் வாழ்நாள் பேராசிரியர், முன்னாள் விஞ்ஞானபீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பாவினை வழங்கியிருந்தார்கள்.

                             பிறப்பது உண்மை. இறப்பது பேருண்மை.

          ஓம் சாந்தி!  ஓம் சாந்தி!!  ஓம் சாந்தி!!!

வாழ்த்துப்பாவும்,  நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

        இங்ஙனம்

                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

    மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

26.12.2020

 

 

 

 

1 comments

    • sivasamboo kalaichandran on January 3, 2021 at 2:07 am

    Heartfelt condolences.
    Kalaichandran.S.Dr.Toronto

Comments have been disabled.